சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?
நக்கீரன்
‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல் கருத்தரங்கு கடந்த சனவரி 12, 2019 இல் (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் சுமந்திரனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார். அதில் தமிழ் அரசுக் கட்சி தனது வரவு செலவுகளை ஏன் காட்டுவதில்லை என்பது ஒன்றாகும். அன்றைய கூட்டத்தின் தொனிப் பொருளுக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கணக்குக் காட்டுவது அல்லது காட்டாமல் விடுவது அந்தக் கட்சியைப் பொறுத்த விடயம். கணக்கு வழக்குகளை கட்சியின் செயல்குழு, பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் காட்டினால் போதுமானது. பின்னர் ஏன் வித்தியாதரன் இந்தக் கேள்வியை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமற்ற முறையில் கேட்க வேண்டும்?
எந்த வழியிலும் எந்த முறையிலும் எப்பாடு பட்டும் தமிழ் அரசுக் கட்சி மீது சேறு பூச வேண்டும் என்பதே அவரது பேராசையாகும்.
இவ்வளவிற்கும் வித்தியாதரனே கொழும்பு தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது அவர் எனக்குச் சொல்லி நான் தெரிந்து கொண்ட செய்தி.
காலைக்கதிர் நாளேட்டில் இனி இது இரகசியம் இல்லை என்ற ஒரு கிசு சிசு பந்தியை வித்தியாதரன் ஒவ்வொரு நாளும் எழுதிவருகிறார். “நான் பத்திரிகை ஆசிரியன். எதை விரும்பினாலும் எழுதுவேன் எப்படியும் எழுதுவேன், என்னைக் கேட்க யாரும் இல்லை” என்ற தோரணையில் எழுதுகிறார். பெரும்பாலும் தமிழ் அரசுக் கட்சிக்குள் சிண்டு முடியும் திருப்பணியில் வித்தியாதரன் ஈடுபட்டு வருகிறார்.
“சென்ற வாரம் கொழும்பில் நடந்த தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் இந்த “டீல்‘ பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. சயந்தனின் “டீல்‘ பேச்சால் கடுப்பாகிப் போன வன்னி மாவட்ட எம்.பியான சாள்ஸ் நிமலநாதனும், யாழ்.மாவட்ட எம்.பியான ஸ்ரீதரனும் அது பற்றிக் காட்டமாக விமர்சித்தனர்.
“ஏன் இந்த “டீல்‘ பேச்சு? எதற்காக சும்மா விடுதலைப் புலிகளின் பெயரோடு சொறிவான்? இந்தப் பேச்சால் எங்களுக்குத்தான் சிக்கல். போகின்ற இடம் எல்லாம் எங்கள் ஆதரவாளர்கள் இதனைக் குறிப்பிட்டு எங்களை நோண்டி நுங்கு எடுக்கின்றனர். இப்படி எல்லாம் பேசுவதற்கு கட்சி இடமளித்துப் பார்த்திருக்கப் போகின்றதா?” – என்ற சாரப்பட சீறினர் இருவரும் உடனே சுமந்திரன் குறுக்கிட்டார்.
“சயந்தன் கூறியதில் என்ன தவறு? புலிகள் எங்கள் அரசியல் வாதிகளைக் கொல்லவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
“அதனால் விடயம் விவகார மாகியது. சூடு பறந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
“இடையில் குறுக்கிட்டராம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா “ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களைப் புலிகள் கொன்றார்கள்தானே. புலிகள் தமது இயக்கத்திலேயே மாத்தையா உட்பட இருநூறு பேரைக் கொல்லவில்லையா?” என்று கேள்வி கேட்டார் அவர்.
“அப்படி என்றால் ஒன்றாகப் போய்த் தலைவர் பிரபரகரனுடன் அமர்ந்து சாப்பிட்ட போது இந்தக் கொலைகளைப் பற்றி நீங்கள் அவரிடமே கேட்டறிந்திருக்கலாமே? அவர் உங்களிடம் சொன்னாரா இவற்றை எல்லாம் தாங்கள்தான் செய்தார்கள் என்று?” என உணர்ச்சியுடன் பதில் வினாத் தொடுத்தார் ஸ்ரீதரன் எம்.பி.
“புலிகள் அமைப்பு இருந்த காலம்வரை அவர்களுக்குச் சற்றேனும் அதிருப்தி வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பேசி – நடந்து கொண்ட மாவையர் – அவரது தானைத் தலைவர் அமிர்தலிங்கம் தமது கண் முன் சுட்டுக் கொல்லப்பட்டமையை அவதானித்த பின்னர், புலிகளை எந்தச் சமயத்திலும் பகிரங்கமாக வையாமல் சகிப்புடன் தந்திரோபாயப் பொறுமையை வெளிப் படுத்திய மாவையர் – தேர்தல் மேடைகளில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டிய மாவையர் – இப்போது அப்படி புலிகளைக் காட்டமாக விமர்சித்திருப்பாராயின் – அது பச்சை சந்தர்ப்பவாதக் கருத்துரைப்பே தவிர வேறில்லை” என வித்தியாதரன் எழுதுகிறார்.
சந்தர்ப்பவாதம் பற்றி, அதிலும் பச்சை சந்தர்ப்பவாதம் பற்றி மற்றவர்கள் சொல்லலாம், எழுதலாம், ஆனால் வித்தியாதரனுக்கு அந்தத் தகைமை அறவே கிடையாது! பஞ்ச பாண்டவர்கள் ஐந்து நாடு கேட்டு அது மறுக்கப்பட்ட போது ஐந்து ஊர்கள் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட போது ஐந்து வீடுகள் கேட்டார்கள். அதுவும் மறுக்கப்பட்ட து போல வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியிடம் முதலமைச்சர் பதவியை முதலில் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டார். அது மறுக்கப்பட்ட போது 2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் போராளிகள் சார்பில் 9 இடங்களைக் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது சனநாயகப் போராளிகள் என்ற அமைப்பைப் தோற்றுவித்து தானே அதன் முதன்மை வேட்பாளராக வித்தியாதரன் களம் இறங்கினார்.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகக் களம் இறங்கிய சனநாயகப் போராளிகள் மொத்தம் 1979 வாக்குகளை மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்தனர். (http://www.newsuthanthiran.com/2018/03/30/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/)
சென்ற ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நடந்த போது யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவி கேட்டார். அதுவும் மறுக்கப்பட்டது.
“தேர்தல் மேடைகளில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டிய மாவையர்” என்கிறார் வித்தியாதரன். எப்போது, எந்த மேடையில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டினார்? 2010 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.புலிகளுக்கு மிக நெருக்கமாக இருந்த கஜேந்திரகுமாரின் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் போட்டியிட்டு கட்டுக்காசையே இழந்தது. பின்னர் 2015 ஆம் நடந்த நடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட ஐந்து தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு நான்கு தேர்தல் மாவட்டங்களில் கட்டுக்காசை இழந்தது. யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 15,022 (5 விழுக்காடு) பெற்று சொற்ப வாக்குகளால் கட்டுக்காசைக் காப்பாற்றியது.
2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரன் 112,077 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தார். அடுத்து பத்மினி சிதம்பரநாதன் 68,240 வாக்குகளையும் கஜேந்திரகுமார் 60,770 பெற்றிருந்தார்கள். ஆனால் 2010 இல் நடந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு 6,362 வாக்குகளே கிடைத்தன. விருப்பு வாக்குள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும். அப்படியென்றால் மிச்ச வாக்குகளுக்கு என்ன நடந்தது?திருநீலகண்ட நாயனாரின் திருவோடு மறைந்தது போல் 177,725 வாக்குகள் மறைந்துவிட்டன!
விடுதலைப் புலிகள் வீரத்தோடும் தீரத்தோடும் மிகுந்த அர்ப்பணிப்போடும் 30 ஆண்டுகாலம் விடுதலைக்குப் போராடினார்கள் என்பது உண்மையே. தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவு அவர்களுக்கு இருந்ததும் உண்மையே.இல்லையேல் அந்தப் போரை அத்தனை ஆண்டுகள் நடத்தியிருக்க முடியாது.
அதே நேரம் புலிகளிடம் ஜனநாயக விழுமியங்களைப் பேண வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அவர்களது ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாடு சனநாயகக் கோட்பாட்டுக்கு மாறானது. விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இருக்கவில்லை. புலிகள் அடிப்படை தனிமனித உரிமை பேணப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்படவில்லை. புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரங்களுக்கு உறுதி தரவில்லை.
திருவாளர்கள் தங்கத்துரை, சிவபாலன், சரோசினி யோகேஸ்வரன், அ. அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றோர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். நீலன் திருச்செல்வம் 29 யூலை, 1999 இல் படு கொலை செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் பிராந்தியங்களின் கூட்டரசு என்ற அரசியல் யாப்பை ஜிஎல் பீரீஸ் அவர்களோடு சேர்ந்து 1995 இல் எழுதியதுதான். ஆனால் பிற்காலத்தில் வி.புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் என்ன சொன்னார்? எல்லாத் தீர்வுத் திட்டங்களிலும் பார்க்க அந்தத் திட்டந்தான் அதிக பட்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்டதாக இருந்தது!
நீலன் திருச்செல்வத்தின் கொலைக்குப் பின்னரே அனைத்துலக மட்டத்தில் வி.புலிகளப்பற்றிய பார்வை இறுக்கம் அடைந்தது. அமெரிக்கா 1957 இல் வி.புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் போட்டு விட்டது. 9/11 அன்று 110அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 2997 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பத்து பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து இழப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகள் என்ற பாகுபாடு இல்லாமல் போய்விட்டது.
இராசீவ் காந்தி படுகொலைக்குப் (மே 1991) பின்னரே இந்தியா வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் போட்டது. மொத்தம் 32 நாடுகள் வி.புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்துவிட்டன. இதனை வி.புலிகள் கவனத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆளால் எடுக்கவில்லை. அதற்கான விலையைப் பின்னர் கொடுக்க வேண்டியதாயிற்று.
களத்தில் வி.புலிகள் வெற்றிமேல் வெற்றியீட்டினார்கள். அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்ற எண்ணம் தமிழ்மக்களிடம் மட்டுமல்ல தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும் இருந்தது. குறிப்பாக இரணில் விக்கிரமசிங்க,சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல் தலைவர்களிடம் இருந்தது.
இவை காரணமாக வி.புலிகளின் சனநாயக மீறல்களை விமர்ச்சிக்கக் கூடாது என்ற எண்ணம் தமிழ்மக்களிடம் இருந்தது. மாவை சேனாதிராசா, இரா சம்பந்தன் போன்ற தலைவர்களிடமும் இருந்தது.
2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் வி.புலிகள் இரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று இரா சம்பந்தன் வன்னி சென்று வாதாடிப் பார்த்தார். வி.புலிகள் சம்பந்தனின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டார்கள். புறக்கணித்தது மட்டுமல்ல சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்ததால் மகிந்த இராசபக்சா 180,786 வாக்குகளால் வென்றிருந்தார். வி.புலிகள் தேர்தலைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இரணில் விக்கிரமசிங்க வென்றிருப்பார். இலங்கையின் வரலாறு வேது விதமாக இருந்திருக்கும்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 701,938 இலட்சம் வாக்காளர்களில் 7,868 பேரே வாக்களித்திருந்தார்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருந்தார்!
கிளிநொச்சி நிருவாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 89,454!
ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்பிடம் சனநாயக விழுமியங்களை எதிர்பார்ப்பதும் நியாயமில்லை. சுமந்திரன் சொல்வது போல வரலாற்றை அந்தந்தக் காலப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே சேனாதிராசா போன்றோர் இடம் பொருள், காலம் கருதி நடந்து கொண்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னரே அரசியல் படுகொலைகளை வி.புலிகள் தவிர்த்துக் கொண்டார்கள். இதனையே சயந்தன் தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.
எனவே சேனாதிராசா பச்சை சந்தர்ப்பவாதி என்பது பொருந்தாது. அப்படி எழுதிய வித்தியாதரனுக்குத்தான் அது கச்சிதமாகப் பொருந்தும்!
அது சரி. கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சயந்தனின் பேச்சைப் வித்தியாதரன் படித்தாரா? அல்லது கேட்டாரா? அப்படித் தெரியவில்லை. படித்திருந்தால் அல்லது கேட்டிருந்தால் இந்தத் தோரணையில் அவர் எழுதியிருக்க மாட்டார். அங்கு சயந்தன் பின்வருமாறு பேசியிருந்தார்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை பார்த்தால், ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவதை பார்க்கின்றீர்கள். அந்த வகையில் கடைசியாக தனது உயிரை இழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள். அதற்கு முன்னர் திருகோணமலையில் பா.உ தங்கத்துரை அவர்கள். எமது பிரதேசத்தை சேர்ந்த ரவிராஜ் அவர்கள் குறிவைக்கப்பட்டிருந்தார். மேயர்களான சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்சியாக மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு டீலுக்கு போகவேண்டியிருந்தது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனச் சொல்லிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஏனைய அமைப்புக்களை பிடித்து இணைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே எனப்புகுத்தி தம்மை உலக நாடுகளில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.
அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பூடாக புலிகள் தங்களுக்கான உலக அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்கள் எமது தலைவர்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள். இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான டீல். (http://www.ilankainet.com/2018/12/blog-post_157.html).
.இதில் என்ன தவறு இருக்கிறது? சயந்தன் வரலாற்றைத் திரித்தாரா? இல்லையே! வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அவ்வளவுதான். அதற்காக வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?
சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?
Leave a Reply
You must be logged in to post a comment.