பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும்
சென்னை, செப்.10- பெரியார் ஏற்படுத்திய உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் என்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.
சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:
வீரமணி அவர்களுக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கக் கூடிய பெருமை எனக்கு வழங்கப் பட்டிருப்பதாக என்னுடைய அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய, வீரமணி அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது ஒரு பெரிய வாய்ப்பு ஒரு சிறப்பு- ஒரு பெருமை என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலே நான் குறிப்பிடுவதாக இருந்தால் ஒரு முக்கியமான நாள் என்று நான் கருதுகின்றேன் (கைதட்டல்).
நிலைகுலைந்த திராவிடத்தை…
நிலைகுலைந்து போயிருந்த திராவிடத்தை தாழ்ந்த தமிழகத்தை, வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சிபெறச் செய்வதற்காக நடைபெற்ற வரலாற்றின் தொடர்ச்சியாக; மேலும் அதை வலுப்படுத்துவதற்காக, விரிவு படுத்துவதற்காக வளர்ச்சியுறச் செய்வதற்காக, இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், அவரைப் புரவலராகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
வீரமணி அவர்கள் ஆற்றுகின்ற பணி ஒருவகையிலே சொல்லப்போனால் வீரமணி அவர்கள் ஆற்றுகிற பணி மிக ஆழமான பணி. அழுத்தமான கொள்கையில் ஊன்றியிருக்கின்ற அத்தகைய பணி அனைவருடைய உள்ளத்திலேயும் கட்டாயம் இடம் பெற வேண்டிய பணி.
அப்படிப்பட்ட பணியை இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் மூலமாக பல பேராசிரியர்களின் மூலமாக நிச்சயமாக பெரிய அளவிலே வரும். அது வளரும். ஒளிபெறக்கூடிய அளவிலே வருவோம்.
எந்தெந்த வகையிலே நாம் மறைக்கப் பட்டோமோ அந்த வகைகளில் எல்லாம் ஒளி பெறக்கூடிய அளவிலே நாம் வருவோம் என்ற நம்பிக்கையை நாம் பெறுவோம்.
இங்கே தலைமையுரையாற்றியிருக்கின்ற பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் ஒரு நூலைப் படித்து, அந்தக் கருத்துகளிலே உள்ள குறை பாடுகளை குறித்து ஆதங்கத்தோடு கருத்துகளை வெளியிட்டார். இதுதான்-தமிழன் வரலாறே. இப்படி எழுதப்பட்ட நூல்களும், இயற்றப்பட்ட காவியங்களும், மக்களுக்குத் தரப்பட்ட செய்தி களும் நம்மை வீழ்த்துவதாக இருக்கின்றன என்று ஆராய்வதுதான் தமிழனுடைய வரலாறாக நீண்ட நெடுங்காலமாக ஆகியிருக்கிறது.
ஆய்வு மய்யத் தலைவராக ராமசாமி
அந்த முறையிலே ராமசாமி அவர்கள் ஏற்கெனவே திராவிடர் இயக்க வரலாற்றை, தி.மு.க வரலாற்றை, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதியவர் என்ற முறையில் அதுவும் ஆங்கிலத்தில் திறம்பட எழுதியவர் என்ற முறையில் அவர் இந்தத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு தலைவராக இருப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. நான் பாராட்டுகிறேன் (கைதட்டல்).
உண்மையாகவே நாம் தமிழர் என்று சொல்லும் பொழுது கிடைக்காத உரிமையும், பெருமையும்- திராவிடர் என்ற சொல்லுகிறபொழுது கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (கைதட்டல்).
ஒரு காலத்திலே தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தபொழுது, பெரியாரும் அறிஞர் அண்ணா அவர்களுமாக சேர்ந்து அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் எல்லாம் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.
எதற்காக தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்ற பெயர் இருந்தால் போதாதா? அப்படியும் சில நண்பர்கள் சொல்லுகிறார்களே என்று கேட் பார்கள்.
நான் சொன்ன விளக்கம்
நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன ஒரு விளக்கம்-பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன்; பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடன் (கைதட்டல்).
பார்ப்பனரை விலக்குவதற்காகவே தொடங்கப் பட்ட இயக்கம்தான் நீதிக்கட்சி, பார்ப்பனர் களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆக இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம் அதை அரசியல் துறையிலே நிலைநாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே அந்த அடிப்படையிலே தமிழர் என்பதால் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் உரிமை பெறுகிறேன் என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன். ( கைதட்டல்). இன்னும் சிலர் சைவ சார்புள்ளவர்களிடமெல்லாம் நான் அன்போடு பழகக்கூடிய வாய்ப்பு பெற்றிருக் கின்ற காரணத்தால், எதற்கு இந்த திராவிடர்? ஆதிதிராவிடரோடு உங்களை சேர்த்துவைத்துக் கொள்வதிலே என்ன பெருமை உங்களுக்கு? என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு மேடையிலே சொன்ன பதில்: ஆதிதிராவிடன்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவனோடு சேர்ந்தால்தான் எங்களுடைய உரிமையும் பாதுகாக்கப்படும் என்று சொன்னேன். மனிதத் தன்மையைக் காப்பாற்ற அதுதான் வழி; தீண்டாமையை ஒழிக்க அதுதான் வழி; வரலாற்று மறுமலர்ச்சிக்கு அதுதான் வழி என்று அன்றைக்குச் சொன்னேன்.
பெரியார் ஏற்படுத்திய உணர்வு
உள்ளபடியே இந்த மய்யம் இன்றைக்குத் தொடங்கப்படுகிறது என்று சொன்னால்-தந்தை பெரியார் ஏற்படுத்திய உணர்வு நீண்ட நெடுங் காலம் நிலைப்பதற்கு வாய்ப்பாக இந்த மய்யம் உருவாகியிருக்கிறது.
குறிப்பாக திராவிடம் என்பது மறைக்கப் பட்டது மட்டுமல்ல; ஏறத்தாழ அழிக்கப்பட்டது. அந்த அழிக்கப்பட்ட திராவிடத்திற்கு உயிர் கொடுக்கக் கூடிய நிலைமை சூழ்நிலையின் அடிப்படையிலே நமக்கு ஏற்பட்டது. வரலாற்றில் எப்படி அமைந்தது என்று கேட்டால், வெள்ளையர்கள் வருவதற்கு முன்னாலே, ஆங்கில ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னாலே இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்தது படித்த கூட்டத்தினரின் செல்வாக்கு என்ற பெயரால், வடமொழி அறிந்தவர்களின் செல்வாக்கு அதன் மூலமாக பார்ப்பனியத்திற்கு வந்தது.
வடமொழி அறிந்தவர்கள் பார்ப்பனரல்லாத வர்களாக இருந்தாலும் பார்ப்பனியத்தின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். அதிலிருந்து விடுபட முடியாது.
வெளிநாட்டுக்காரன் பார்த்தது – வடமொழி
எனவே அந்த முறையிலே வடமொழிக்கு அகிலஇந்திய அளவிலே ஒரு செல்வாக்கு இன்னும் சொல்லப்போனால் இந்தியாவைப் பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் முதன்முதலாக ஜெர்மன் நாட்டு அறிஞனோ அல்லது இங்கிலாந்து நாட்டு அறிஞனோ இந்தியாவுக்கு வந்து பார்த்தபொழுது அவர்களுக்குக் கிடைத்த ஏடுகள் எல்லாம் வடமொழி ஏடுகள். வடமொழி தமிழைப் பார்த்து எழுத்துகளை உருவாக்கிக்கொண்டது. வட மொழி கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் தான் நூல் வடிவிலே வந்தது, எழுத்து வடிவிலே வந்தது என்று அறிஞர்கள் தெரிவிப்பார்கள்.
அந்த வடமொழி பிராமணர்களுக்கு உரிய மொழியாக இருக்கின்ற காரணத்தால் பிராம ணர்கள் செல்வாக்குள்ள ஜாதியினராக தங்களை உயர்த்திக்கொண்ட காரணத்தால், பிராமணன் கையிலே இருந்த மொழி-அது உயர்ந்த மொழி; பிராமணன் பயன்படுத்திய மொழி-தேவமொழி; பிராமணன் அர்ச்சனைக்குப் பயன்படுத்திய மொழி-அது உயர்ந்த ஆற்றல் வாய்ந்த மொழி.
ஜெர்மன் நாட்டு அறிஞர் குறிப்பாக மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் பார்த்தார்கள். இந்தியா என்றால் வடமொழி. வடமொழி என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் ஜெர்மானியர்களுக்கும் ஆரியத்துடன் தொடர்புண்டு. ஆக இந்த மொழியின் பெருமையை நிலைநாட்ட, நிலைநாட்ட, அந்த மொழியை உலகத்திலே கொண்டுபோய் பரப்புவதன் மூலமாக ஆரியம் செல்வாக்கு பெறும் என்ற உணர்வோடு மாக்ஸ் முல்லரும் அவரோடு சேர்ந்த சில அறிஞர்களும் இருந்தனர்.
அதனால் வடமொழி நூல்களைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அக்காலத்திலே தென்னாட்டிலே இருந்த தலைமை பீடம் சென்னையிலே இருந்த ஆங்கில அரசுகூட கல்கத்தாவிலே தலைமை பீடம் மாறிய காரணத்தால் தொடர்ந்து கல்கத்தாவிலே உள்ள தலைமை வெள்ளைக்காரர்களுடைய பிரதி நிதியாக இருந்த கவர்னர் ஜெனரல் போன்றவர்களிடத்திலே தொடர்பு கொள்ளக் கூடிய வர்கள் எல்லாம் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.
நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்
தென்னாட்டிலே பாதிரிமார்களிடத்திலே சில தமிழ்ப் புலவர்களும் தொடர்பு கொண்டி ருந்தார்கள். அது தென்னாட்டில். இது தமிழக அளவிலே முடிந்துவிட்டது. அகில இந்திய அளவிலே நீதிமன்றங்களிலே பார்சிய மொழி, சமஸ்கிருத மொழி. பார்சிய மொழி இஸ்லாமியர் களுக்காக; சமஸ்கிருதம் இந்தியர்களுக்காக-இந்துக்களுக்காக. ஆகவே அவர்களுடைய கலாச்சாரத்தைத்தான் நீதிமன்றங்களிலே எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது.
சமஸ்கிருதம்தான் உயர்ந்தமொழியாக, செல்வாக்குள்ள மொழியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், எல்லா மொழியும் சமஸ் கிருதத்திலே இருந்து பிறந்தது; தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் சமஸ்கிருதத்திலே தோன்றியது என்ற கருத்து. எந்த மொழியும் சமஸ்கிருதத்திற்கு அப்பால் வளர்ந்த மொழி அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர்
இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர் என்று கருதப்படக் கூடிய அளவுக்கு ஒரு கருத்து இந்த நாட்டில் சமஸ்கிருதத்தின் மூலமாக ஊன்றப் பட்டது.
பிரம்மாவின் முகத்திலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன், பாதத்திலே பிறந்தவன் சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?
முகத்தைத்தானே மதிக்க வேண்டும். தொடையை அவன் மதிப்பானா? அது வேற காரியத்திற்கு ஆக. அதனுடைய விளைவு என்ன? மற்றவன் எல்லாம் மனிதனல்ல. பார்ப்பனியத்தின் செல்வாக்கிற்காகவே சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.
தமிழ் சொற்கள் கூட ரிக்வேதத்திலே இருக்கிறது என்று எடுத்துச்சொன்ன சான்றுகள் உண்டு என்றாலும் கூட, இந்த சொற்கள் எல்லாம் நம்மிடமிருந்து குடியேறி அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள். அந்தப் பெருமையை நாம் பேச நமக்கு வாய்ப்பில்லை.
தமிழ் தாழ்ந்த மொழியா?
வடமொழிச் சொற்கள் தமிழிலே வந்து இடம் பெறுமானால் உலகத்திலே சமஸ்கிருதத்தினுடைய உதவி இன்றி தமிழ் இயங்காது ஆக, தமிழ் தாழ்ந்த மொழி; வடமொழி உயர்ந்த மொழி என்ற அடிப்படையிலே பார்ப்பனிய செல்வாக்கு வளர்ந்து அதனுடைய விளைவாக இந்தியா என்றால் ஆரியம் என்ற கருத்துதான் 200 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தது.
அதற்கு அடுத்து சர்ஜான் ஹார்ட்ஸ் போன்ற வர்கள் ஒரு 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பின்னால் வடமொழி ஆய்விலே, அதே போல மொகஞ்சதாரோ சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்ட வர்கள்தான். அவர்களுடைய கருத்துகளில் சொன்னார்கள். வடமொழியிலே ஏராளமான கருத்திருக்கிறது உண்மை. அவைகளை எல்லாம் ஆய்வோம். இனியும் ஆய்வு செய்ய வேண்டுமானால் தமிழ் போன்ற மொழிகள் இருக்கின்றன. அந்த மொழியின் கருத்துகளை, ஏடுகளை ஆய்வு செய்யலாம் என்று ஆய்வு அறிஞர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலே இன்னும் பல மொழிகள் இருக்கின்றன என்று சொல்லக்கூடிய நிலை மேல்நாட்டவர்களிடம் உருவானது. கால்டுவெல் இல்லையென்றால்….
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேல் நாட்டார்தான் தமிழுக்கு ஏற்றம் தந்தனர். நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். டாக்டர் கால்டுவெல் மட்டும் இல்லை என்று சொன்னால் திராவிட நாட்டில் அந்தப் பெயரை நாம் காப்பாற்றியிருக்க முடியாது(கைதட்டல்). தந்தை பெரியார், அண்ணா அதற்காகப் போராடினார்கள். ஒரு வேளை அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அது மறைந்துபோகிற சூழ்நிலை உருவாகியிருக்கும்.
கால்டுவெல்தான் தமிழ்மொழி ஒரு தனிமொழி, தென்னாட்டு மொழிகள் ஒரு தனி குடும்பம், அந்தக் குடும்பம் ஆரியக் குடும்பம் அல்ல; அந்தக் குடும்பம் திராவிட குடும்பம் இதை எடுத்து நிலைநாட்டியவர் 1858 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்திலே டாக்டர் கால்டுவெல் அவர்களின் ஒப்பியன்மொழி நூல் வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான் நிலைநாட்டப்பட்டது.
மனோன்மணீயம் சுந்தரனார்
அதனுடைய தாக்கம்தான் மனோன்மணீயம் சுந்தரனார் நீராரும் கடலுடுத்த என்ற பாடலை பாடினார்.
ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்திடா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று
மனோன்மணீயம் சுந்தரனார் பாடினார். தமிழன் என்ற மானஉணர்வோடு பாடினார். அவர் ஓர் இறைப் பற்றாளர். இறைப் பற்றாளருடைய மனதிலே இந்த வேதனை எப்படிப் புகுந்தது என்று கேட்டால் இறைவனைப் பாடுவதற்கு நம்முடைய தமிழிலே இடம் இல்லை. வடமொழிக்குத்தான் அந்தச் சிறப்பு உண்டு என்று சொல்லுகின்றார்களே, அந்த மொழி செத்துப் போய்விட்டது என்று சொல்லுகின்றார். அதே உணர்வு மறைமலை அடிகளுக்கு இருந்தது; ஏறத்தாழ அதே உணர்வு கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு இருந்தது.
நாவலர் சோமசுந்தர பாரதியார்
அதே நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கு இருந்தது. அந்த உணர்வைக் கொண்டு சென்ற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசிக்கொண்டே வந்தார். அப்படி பேசிக்கொண்டு வரும்பொழுது சமஸ் கிருதம் என்று சொல்லமாட்டார். ஜம்சு கிருதம்
ஜம்சுகிருதம் என்று வேண்டுமென்ற அந்தச் சொல்லை விரும்பாமல் சொல்லுவார். ஜம்சு கிருதம் படித்தவன் எல்லாம் பெரிய பண்டிதர் என்று சொல்லுகின்றான். வடமொழியில் என்ன இருக்கிறது.? தமிழில் என்ன இல்லை? என்று கேட்டுவிட்டு அந்த ஜம்சு கிருதம் செத்துப்போய் நீண்ட காலம் ஆகிவிட்டது என்று சொன்னார்.
நாவலர் சோமசுந்தரபாரதியார் பேசுகிற பொழுது தமிழறிஞர்கள் கூட குறுக்கிட மாட்டார்கள். ஒருவர் திடீரென்று எழுந்து கேட்டார். அய்யா, நாவலர் அவர்களே! ஜம்சுகிருதம் செத்துப்போய்விட்டது என்று சொல்லு கின்றீர்களே! என்று சொன்னார். ஏன்? என்று நாவலர் கேட்டார். அது பிறக்கவே இல்லையே! என்று கேள்வி கேட்டவர் பதில் சொன்னார் (கைதட்டல்).
தமிழ்மொழி போல பிறந்தமொழி என்னும் சிறப்பு வட மொழிக்குக் கிடையாது. வடமொழி செய்யப் பட்டது. பல மொழிகளிலே இருந்து கடன் வாங்கி செய்யப்பட்ட மொழி.
கடன் வாங்கப்பட்ட மொழி. வெளிநாட்டிலேயிருந்து நூல்வாங்கி, இங்கு நெசவு செய்யப்படுவது போல் கடன் வாங்கப்பட்ட மொழி அது. அது பிச்சைக்காரன் பாத்திரம்.
பேராசிரியர் அவர்கள் தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும்
அறிஞர் அண்ணாவுக்கும் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்குமான நெருக்கம் என்பது தலைமுறைகளைக் கடந்த ஒன்று. பேராசிரியர் அன்பழகனின் தந்தையார் கலியாணசுந்தரம் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவர். சிதம்பரம் பகுதியில் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கியக் காரணகர்த்தா. அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் வளர்ச்சிக்காக சிதம்பரம் பகுதியில் “சந்திரோதயம்’ நாடகத்தை நடத்தி நிதி சேகரித்துக் கொடுத்தவர்.
1940களிலிருந்தே அண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடைய பேராசிரியர் அன்பழகன், தனக்கும் தனது தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சந்திப்புகளை, அனுபவங்களை, நிகழ்வுகளைப் பல்வேறு கட்டுரைகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் என்று பேராசிரியர் அன்பழகனின் பதிவுகளைத் தொகுத்து “மாமனிதர் அண்ணா’ என்ற பெயரில் புத்தக வடிவமாக்கி இருக்கிறார்கள்.1937-ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகரப் பூங்காவில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அண்ணாவின் பேச்சை 9-ஆம் வகுப்பு மாணவனாக அன்பழகன் கேட்டது -1942-ஆம் ஆண்டு சிதம்பரத்துக்கு அருகிலுள்ள வெள்ளியக்குடியில் நடந்த இயக்கத் தோழர் முருகேசன் என்பவரின் திருமணத்துக்கு ரயிலில் வந்த அண்ணா, பயணக் களைப்பில் தூங்கி மயிலாடுதுறையில்போய் இறங்கி, தாமதமாகத் திருமணத்துக்கு வந்ததும், அண்ணாவுக்காக மணமகன் இரண்டாவது முறை தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டது பற்றிய பதிவு -1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு முன்பு, தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம், “அண்ணா, தங்களை அல்லவா இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இலட்சக்கணக்கான இளைஞர்கள் தந்தை பெரியார் அவர்களை மதித்துப் போற்றினாலும், வாழ்த்தி முழங்கினாலும், அவர்கள் எல்லோரும் இயக்கத்தின் இலட்சிய வெற்றிக்கு வழிகாட்டத் தங்களையல்லவா நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த இளைஞர்கள் செயல்படுவதற்கு, வழிகாட்ட ஓர் அமைப்பு, அரசியல் இயக்கம் தேவையில்லையா?” என்று அண்ணாவின் அன்புத் தம்பி அன்பழகன் எழுப்பிய வினாவும், அதற்கு அண்ணா அளித்த பதிலும் – இப்படி வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம், கட்டுரைக்குக் கட்டுரை சுவாரஸ்யமாகவும் பல புதிய செய்திகளைத் தாங்கியதாகவும் அமைந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.
பேராசிரியர் அன்பழகன் தனது சுயசரிதையையோ அல்லது தனது நினைவுக் குறிப்பையோ ஒரு தொடராக எழுதாமல் இருப்பது என்ன நியாயம்? சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த இயக்கங்களின் முன்னோடிகள், சுதந்திர இந்தியாவின் தலைவர்கள், நிகழ்வுகள் என்று கடந்த முக்கால் நூற்றாண்டு கால இந்திய சரித்திரத்துக்கே நேர்சாட்சியாக, ஆட்சி மையத்தின் பார்வையாளராக இருந்தவர் என்கிற முறையில், தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை நிதியமைச்சர் அன்பழகனுக்கு உண்டுதானே? அவர் ஏன் அந்தக் கடமையைத் தவிர்க்கிறார் என்கிற தார்மிகக் கோபம் இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் அவர்மீது எழுகிறது.சட்டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்த அனுபவமும், பல ஆண்டுகள் அமைச்சராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த அனுபவமும், எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன? “மாமனிதர் அண்ணா’வைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் தனது அனுபவங்களை ஓர் ஆவணப் பதிவு செய்தே தீர வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் சார்பில் அடியேன் முன்வைக்கும் வேண்டுகோள் இது!
நன்றி-கலாரசிகன் இதழ்
(பேராசிரியர் அன்பழகனார் தமிழ் உணர்வு மிக்கக் கவிஞரும் நாவன்மை மிக்கப் பொழிவாளரும் ஆவார். வாழ்க்கை வரலாற்றை மனச் சான்றின்படி எழுதினால் சில குழப்பங்கள் நேரலாம் அல்லது மறைத்து எழுத விரும்பாமை போன்றவற்றால் எழுதாமல் இருக்கலாம். ஆனால். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் கொண்ட பேராசிரியர் அவர்கள் பின்னர் வெளியிடும் நோகிகலாவது தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும். கலாரசிகன் வேண்டுகோளைத் தனிப்பட்ட வேண்டுகோளாக் கருதாமல் தமிழ் உலக வேண்டுகோளாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் )
தொல்காப்பிய உரை இடைச்செருகல்களைக் களைய வேண்டும்
சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்த 81 நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல்
சென்னை, ஜன.2:
தொல்காப்பிய உரைகளில் காணப்படும் இடைச்செருகல்களைக் களைந்து புதிய உரையை எழுத தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என நிதி அமைச்சர் க. அன்பழகன் வலியுறுத்தினார்.சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகத்தில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பித்த 81 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல் பிரதிகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.விழாவில் க. அன்பழகன் பேசியது:திருவனந்தபுரத்தில் ச.வே. சுப்பிரமணியன் ஆரம்பித்த திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், ஆந்திரத்தில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக அமைந்தது.இலக்கியங்கள் அதிகமாக உள்ள மொழிக்கு மட்டுமே இலக்கண நூல் எழுத முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியம் கி.மு. 500}ல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், அதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் செழுமையான இலக்கியங்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.
இத்தகைய செழுமையான இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அதிக மக்களால் பேசப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பேசப்பட்டிருக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழி உருவாகியிருக்க வேண்டும்.திருக்குறள் மட்டுமே உலக பொது நூலாக கருதப்படுகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடர்பான தனது நூல்களில் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியத்தை உலகப் பொது நூல் என குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியரின் நோக்கம் மொழிக்கு இலக்கணம் வகுப்பது. திருக்குறளின் நோக்கம் மனித வாழ்வுக்கு இலக்கணம் வகுப்பது. எனவே, தொல்காப்பியம் தமிழின் தனி சிறப்புக்குரிய நூல் என்றே கருதப்படுகிறது.தொல்காப்பியத்துக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி- கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வர்ணாஸ்ரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.
இந்த இடைச் செருகல்கள் களையப்பட்ட உரையை தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அன்பழகன்.
ச.வே. சுப்பிரமணியன் பேசியது:
நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் அந்த மொழியில் இலக்கண நூல் இல்லை. பெரும்பாலான மொழிகளுக்கு சம்ஸ்கிருதத்திலும், சில மொழிகளுக்கு ஆங்கிலத்திலும் இலக்கண நூல்கள் உள்ளன. சொந்த மொழியிலேயே இலக்கண நூல் பெற்ற சிறப்பு தமிழுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் செம்மொழியாக அறிவிக்க தொல்காப்பியமும் ஒரு சான்றாக உள்ளது.10 ஆயிரம் ஆண்டு இலக்கியங்கள் இருந்தால் மட்டுமே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் எழுத முடியும். ஏராளமான இலக்கியங்களை ஒலைச்சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாக பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் தொல்காப்பியத்தை மட்டும் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார் என்றார் சு.வே. சுப்பிரமணியன்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ, மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
http://perasiriyar.blogspot.com/2011/
திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி: அன்பழகன் விளக்கம்!
சென்னை, ஜன.3_ திராவிட பல்கலைக்கழக அனுமதி கேட்க சென்றவர்களிடம் திராவிட என்ற சொல்லை நீக்கு-மாறு அப்போதைய மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். ச.வே.சுப்பிரமணியன் எழுதிய 81 நூல்கள் வெளி-யீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் நூல்களை வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் அன்பழகன் பேசியதாவது:
திராவிட பல்கலைக்கழகம்:
தமிழறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசின் ஒப்புதல் கேட்டு அப்போதைய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தார். அனுமதி கொடுத்து விடுகிறேன். திராவிட என்ற பெயரை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று ஜோஷி கேட்டுள்ளார்.
அதற்கு சுப்பிரமணியம், தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் நீக்கிவிட்டால், இந்த பல்கலைக்கழகத்தில் வரும் திராவிட என்-பதையும் நீக்கி விடுகி-றோம் என்று பதில-ளித்தார். ஜோஷி வாய-டைத்து போனார். தமிழ் செம்மொழி ஆனதை கேட்டு நெஞ்சடைத்து போயிருக்கும்.
நான்கு வர்ணம் இல்லை:
உலக பொதுமறை தொல்காப்பியம் என்று ச.வே.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திருக்குறள்தான் உலக பொதுமறை. தொல்காப்பியம் தமிழர்களின் பெருமைக்குரியது. எழுத்து, சொல், ஆகியவற்றை வடமொழிக்கு தமிழே கடன் தந்தது.
வடமொழிக்கு எழுத்தே கிடையாது. அது இந்தோ _ அய்ரோப்பிய எழுத்து என்கிறார்கள். ஆனால் அந்த வகை எழுத்துகளுடன் வடமொழி எழுத்து ஒத்துவரவில்லை. தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்று தருவதில் முதலிடம் வகிப்பது தொல்காப்பியம். தமிழனின் மரபு என்று பிரித்துக் காட்டி மாற்றாக வருவதையெல்லாம் அன்னியம் என தவிர்த்து பாதுகாக்கவே தொல்காப்பியம் தோன்றியது.
தொன்மையான இந்த நூலும் இடைத் செருகலுக்கு ஆட்பட்டிருக்கிறது, அதை மறுக்க முடியாது. வேற்று கலாச்சார கருத்துகளும் அப்படி இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் மேல் மக்கள் உண்டு, மேல் ஜாதி இல்லை. நான்கு வர்ணம் இல்லை, மனு ஸ்மிருதி இல்லை. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு திருமண உரிமை இல்லை. அவர்கள் இணைந்து மட்டும் வாழலாம் என்ற வைதீக கலாச்சார கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம்-பெற்றுள்ளன. இடைச் செருகல்களை களைந்து தனித் தமிழ் படைப்பாக தொல்காப்பியத்தை ச.வே.சுப்பிரமணியன் ஆக்கித்தர வேண்டும். ஆந்திர, கர்நாடக பகுதிகளில் பழந்தமிழனின் தொடர்ச்சி இல்லாதலால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகிவிட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு அது வளர்ந்து விட்டது.
இவ்வாறு க. அன்பழகன் பேசினார். ச.வே.சுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம், சிலம்-பொலி செல்லப்பன், முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, அறவாணன் உள்பட பலர் பேசினர்.
thank: viduthalai.periyar.org.in
Leave a Reply
You must be logged in to post a comment.