தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது!

தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது!

நேசன்

தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலே வடக்கிற்கான துரோகத்தின் அத்தியாயங்களும் எழுத ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதமுனை போராட்டத்திற்கு கருணா, பிள்ளையான் கிழக்கிலிருந்து தோன்றிய துரோகிகளாக பார்க்கப்பட்டனர்.

தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, தமிழர்களின் உரிமைகளுக்கான இறுதி அஸ்திரமான கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கி ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசின் சதிவலைக்குள் தமிழ் சமூகத்தை தள்ளிவிட முனையும் முன்னாள் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி எதிர்காலத்தில் எதனை சாதிக்க முனைகின்றது.

பிராந்திய வல்லரசாகிய இந்தியா, இலங்கை தீவின் வடக்கு, கிழக்கு கொதி நிலையை சாதகமாக பயன்படுத்திய “றோ” இந்திய உளவு அமைப்புக்கு ஊதுகுழலாக இருந்த சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றோரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்த தலைவருக்கு செய்யும் கைங்கரியத்தை உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது

விக்கினேஸ்வரன் வன்னி பெரு நிலப்பரப்பில் சலுகைகள் அற்ற தீர்வை பெறப்போவதாக கூறியிருந்ததை அவதானிப்போமானால் புலிகளை விட வலிமையான படைதிரட்டியா தீர்வினை பெறப் போகிறார்.

புலிகள் காட்டிய பாதையில் சென்றால் கூட முடியாத காரியம். சர்வதேச அரசியல் காய் நகர்த்தல்கள் போராட்டக் குழுவிற்கு எதிராகவே அமையும் என்பதை தனது தீர்க்கதரிசனத்தால் உணர்ந்த தலைவர் ஏற்படுத்திய அரசியல்வழியே கூட்டமைப்பு.

காலங்காலமாக சிங்கள பேரினவாதத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் பெறமுடியாது என்பதே உண்மையாகும்.

ஒரு நாடு இரு தேசம் என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக விக்கினேஸ்வரனின் கட்சி ஆரம்ப நிகழ்வுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி உட்பட பல தமிழ்த்தேசிய கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் இந்த கட்சி அறிவிப்பின் போது பிரசன்னமாகாமை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணிக்கு கிடைத்த முதலடியாகவே பார்க்கின்றனர். ஒருவரின் பாட்டுக்கு மற்றவர் பக்கப்பாட்டு பாடியவர்கள் புதிய கட்சியின் தொடக்க விழாவிற்கு வருகை தராதது அவர்களது தமிழ்த் தேசிய கொள்கையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்த சம்பவம் முன்னாள் முதல்வருக்கு ஏற்பட்ட முதலாவது பெரும் தலையிடிசி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகித் தனியாகப் பயணித்தால் அவரது தலைமையில் இணைந்து பயணிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். பங்குபற்றியிருந்த போதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொள்ளவில்லைஇதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உடன்பாடற்ற தன்மை காணப்பட்டது. அதனை அந்தக் கட்சி பகிரங்கமாகவே கூறியிருந்த நிலையில், விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிக்கும் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளாமை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தனது புதிய கட்சியை ஆரம்பித்து கன்னி உரையினை ஆற்றுகின்றபோது பழைய விடையங்கள் பலவற்றை கூறியிருந்தார். குறிப்பாக 1919 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் போராட்டம் பற்றியும் 1970 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் போராட்ட குழுக்கள் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் இன்று எமது தமிழ் தேசிய போராட்டம் மூலம் சர்வதேச அங்கீகாரத்தினை பெறுவதற்காக களமாடிய தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வரியில் தானும் கூற விரும்பவில்லை.

தமிழீழ விடுதலை புலிகளின் காலகட்டத்தில் தமிழர்களது பலம் ஓங்கியிருந்தது. அந்த காலகட்டத்தில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை நாடாளுமன்ற அரசியலுக்கு அழைத்த போது அவர் கூறிய விடயம் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும், மாறாக மத அனுட்டானங்களிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்தப்போவதாகவும் கூறியிருந்தது யாவரும் அறிந்த விடயம்.

இவ்வாறான கைங்கரியத்தினை கடைப்பிடித்த முன்னாள் நீதியரசர் தற்போது ஏன் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்த முனைகின்றார்இன்று பெரும்பாலானோரால் சாணக்கியம் மிக்கவராக போற்றப்படும் தமிழ் தேசியத் தலைவர் அன்று ஏன் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை பற்றி சிந்திக்கவில்லை என்பது இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும்படி தமிழ்த்தேசிய தலைமை மாற்றுக்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருமித்த குடைக்குள் கொண்டு வந்ததன் பெருமையை அனைவரும் போற்றி புகழ்ந்தார்கள். ஆனால் இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் திரும்பிப்பார்க்காத ஒருவரைப்பற்றி சிலர் பெரிது படுத்துவதன் காரணந்தான் என்ன?

அன்று ஆயுத போராட்டத்தின் போது மிகப்பலமாக இருந்து செயற்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை பலமிழக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக கருணாவை பயன்படுத்திய பேரினவாதம் அதனை நுட்பமாக செய்து வெற்றியும் கண்டதுஅதன்போது கிழக்கான் துரோகிகள் என பெரிதாக அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் காரணமாக சர்வதேச ரீதியாக தமிழரது பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தறுவாயில் தமிழ் தேசியத்துக்கு எதிராக மாபெரும் துரோகம் வடக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதன் மர்மம்தான் என்ன?

வடக்கிலும் கிழக்கிலும் இருந்து உருவாகும் இவ்வாறான துரோகங்கள் மூலம் யார் பயனடையப் போகின்றார்கள் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம். அதனை மனதில் நிறுத்தியாவது செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்இங்கு ஒரு விடயத்தினை அவதானிக்க வேண்டி இருக்கின்றது. கிழக்கில் சிறு தவறு நடைபெற்றால் கூட அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளும் சிலர் ஏன் வடக்கில் நடைபெறும் பெரிதான தவறுகளைக்கூட கண்டுகொள்ள முனைவதில்லை. (கருணா பிரிவை குறிப்பிடவில்லை) முதல்வரின் புதிய கட்சி தொடக்கத்தின் பின் தமிழரசு கட்சியின் தலைவர் ஊடகங்களுக்கு நீண்ட பெரும் புன்முறுவலான செய்திகளை கடந்த தினங்களாக வெளியிட்டுவருவது. வடக்கு முதல்வர் போட்டியில் முன்னிருந்த முள்வேலி அகன்றுள்ளது போலும் வடக்கின் பல களமுனை போர்களை எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் நிகழும் என்பதில் ஐயமில்லை. இதன் தாக்கமும் உட்கட்சிபூசல்களும் எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் மாற்று வடிவத்தில் வெளிவரக்கூடும்.

இது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது கிழக்கில் ஆதரவு அலைகள் கிளம்பியிருக்கின்றதை கடந்த உள்ளூராட்ச்சித் தேர்தல் முடிவுகள் கூறியிருந்தது. தேர்தலுக்கு முன் பிள்ளையானின் விடுதலையை பேரினவாதம் செய்யுமேயானால் கிழக்கிலும் தளம்பல்களை எதிர்வு கூறலாம்.

பாராளுமன்ற பாதை மூலம் சம்பந்தர் பெற முடியாத தீர்வை தன்னால் எப்படி பெற முடியும் என்பதை முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதுவரை மக்களுக்கு விளக்கவில்லை.

30 வருட தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் துரோகங்களின் பக்கங்களும் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. அதன் நீட்சிகள் 2001ஆம் ஆண்டு கிழக்கின் பக்கமாய் கருணா என்கின்ற துரோகத்தின் பேனாவால் எழுதப்பட்டதோ அதே போன்றுதான் ஆயுத போராட்டம் மௌனித்த பின்பு தமிழர்களின் இருப்பு, உரிமைகள் குறித்து பேசும் ஒரு கூட்டுக்கட்சியாக இருந்த ஒரு கூட்டமைப்பின் பலமும் வடக்கின் துரோகிகளாலும் கிழக்கின் ஒரு சில துரோகிகளாலும் அசைத்துப் பார்க்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் வீரம் விளை நிலம் என புனைபெயர்கொண்டு கிழக்கு மண்போற்றப்பட்டதும். கருணா என்ற தனி மனிதனின் துரோகத்தால் கிழக்கு என்பது துரோகம் என்ற கண்ணாடியணிந்தே பார்க்கப்பட்டதை யாரும் மறுக்கவும் முடியாது. மறுதலிக்கவும் முடியாது.

தேசிய தலைவரின் அரசியல் நகர்வின் அங்கமாக சிதைந்து கிடந்த போராட்ட இயக்கங்களை ஒன்றிணைந்த தமிழர்களின் அரசியல் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் இறுக பின்னப்பட்ட கயிற்றின் புரிகள் வடக்கிலிருந்து ஒவ்வொன்றாக கழன்று செல்வதன் அர்த்தம் தேசிய தலைவருக்கு செய்யும் துரோகம்தானே. இதில் கிழக்கில் கருணா, பிள்ளையானும் வடக்கிலிருந்து விக்கினேஸ்வரன், அனந்தி என்ற பெயர்களுடன் துரோகத்தின் நாடி பிடிக்கப்படுகின்றது.

வடக்கில் ஏற்பட்டிருக்கும் பதவி மோகம் ஆடம்பர வாழ்கை ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழர்களின் இருப்பு,உரிமைகள்,அதிகாரப்பகிர்வு இவை அனைத்தையும் மறந்து உட்கட்சி பூசல் ஊடகங்கள் வாயிலாக ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமுள்ளது.

தமிழர்களின் ஏக்கங்கள்,போராட்டத்தின் தார்ப்பரியம் அறியாதவர்களை அரசியலுக்கு இழுத்து வந்த தமிழ் தேசிய தலைமைகள் அதன் பிரதிபலன்களை அனுபவிக்கின்றனர். மக்களுக்கு அபிவிருத்தியைவிட உரிமைதான் முக்கியம் என்று கூறிய இந்தத் தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனம், சொகுசு பங்களா போன்ற சலுகைகளை பெறுவதற்கு தயங்கவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர்கூட மக்களுக்கு உரிமை கிடைக்கும்வரை தனக்கு சலுகை எதுவும் தேவையில்லை என்று கூற முன்வரவில்லை. இப்போது இவர்கள் என்னத்தை சாதித்துவிட்டதாக அல்லது என்னத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவிட்டதாக எண்ணி; மாலையும் களுத்துமாக மக்கள் முன் வருகிறார்கள்?

யாரும் தொட முடியாத சிகரமாக காலாற்படை, கடற்படை ,விமானப்படை, என அன்னோரன்ன பல படைப்பிரிவுகளைக்கொண்டு மாபெரும் போரியல் வரலாற்றையும் வைத்து சாதிக்க முடியாததையா நீதியரசர்விக்கினேஸ்வரன் சாதிக்கபோகிறார்விடுதலைப்புலிகளின் அங்கிகாரத்தையும் செல்வாக்கினையும் பெற்ற பின்னர் அவர்களின் மௌனத்தை பயன்படுத்தி பல குள்ளநரிகள் புலிகள் போன்று வேடமிட்டு நடமாடமுனைகின்றனர்.

 வடக்கு மாகாணத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஓர் உயரிய பதவி முதல்வர் பதவி. ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஆணை வழங்கி, அவர்களின் ஓங்கிய குரலாக சர்வதேசத்துக்குப் பறைசாற்றுவதற்காக மக்கள் அளித்த ஆணையை சரியான முறையில் சாதுர்யமாக நிர்வாகத் திறன், ஆளுமைகளோடு கையாளத் தெரியாதவர் முதல்வர் விக்கி வடக்கு மாகாண அமைச்சரவையை நிறுவும்போது சுகாதாரத்துக்கும் மீன்பிடி போக்குவரத்துக்கும் ஆளுமை, தலைமைத்துவம் மிக்க – அந்தத் துறைகளின் பாண்டித்தியம் பெற்ற அமைச்சர்களை நியமித்தார்.

பின்னர் தனக்கு நெருக்கமான ஓர் அமைச்சர் பாதிக்கபபடப்போகின்றார் என்ற ஒரே காரணத்துக்காக குற்றமெதுவும் புரியாத மூன்று அமைச்சர்களுக்கும் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு விசாரிக்கவென – தனக்கு நம்பிக்கையானவர்கள் என்று தான் கருதும் – ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, இரு நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்தார்.

அந்தக் குழு அமைச்சர்களான சத்தியலிங்கம், குருகுலராஜா டெனீஸ்வரன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் அவர்கள், அவர்களது கடமைகளை ஆற்றுவதற்கு எந்த இடைஞ்சலும் வழங்கக்கூடாது என்று பரிந்துரைத்தும், அவர் தானே நியமித்த குழுவை உதாசீனம் செய்து, அந்த அறிக்கையைக் கடாதாசி குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு வலிந்து இந்த அமைச்சர்களை பதவி விலகும்படி உத்தரவிட்டார்.

சத்தியலிங்கம். குருகுலராஜா ஆகியோர் தாம் கொண்டுவந்த முதல்வரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு தான் குற்றமற்றவன் என்று தெரிந்தும் பதவி விலகினார்கள். ஆனால், டெனீஸ்வரன் ”நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!” அது முதல்வர் – நீதியரசர் என்றாலும் சரி என்று வழக்குத் தாக்கல் செய்து, அந்த வழக்கில் முதல்வர் செயற்பட்ட விதத்தை மக்கள் மத்தியில் கோடிட்டு காட்டி இவர் எவ்வாறு நீதி அரசராக இருந்தார்? என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்கு அவரது போலி முகத்திரையைக் கிழித்தார் முதல்வர் தனக்கேற்ற அல்லக்கைகளை அமைச்சராக்கி வடக்கு மாகாண சபையை நாசமாக்கினார். இதனால் விரக்தியுற்ற பதவி, அதிகார வெறி பிடித்த முதல்வர் விக்ககனேஸ்வரன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி தான்சார்ந்த கட்சித் தலைமைகளின் எந்தவித ஆலோசனைகளும் இன்றி எந்தப் பயனுமற்ற – உப்புச் சப்பற்ற – தமிழ்மக்கள் பேரவையை ஆரம்பித்தார்.

தமிழரசிக் கட்சிப் பற்றற்று பதவிக்காகத் தம்மை இணைத்து அதுகிடைக்காமல் போன சில உறுப்பினர்களும் தமக்கான பதவியை நாடி தமிழ்மக்கள் பேரவைக்குச் சென்றார்கள். பேரவையின் முதலாவது கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள்  ”தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல மக்கள் அமைப்பே” என்றார்.

ஆனால், இன்று மூன்று வருடங்கள் நிறைவடையும் தறுவாயிலில் அவரது அரசியல் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் மாகாண சபை கலைக்கப்பட்டு, தான் வெறும் தனிமனிதனாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொழும்பு செல்லவிருப்பதன் காரணமாக அதிகார வெறியில் தனது அரசியல் நிலைப்பாட்டை தனக்கே உரித்தான கட்சி மூலம் அறிவித்திருக்கிறார்.

இதற்கு அவர் சார்ந்த பேரவை பாவிக்கின்ற ஆயுதம் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம், தியாகம் என்பவற்றுக்கு நிகர் எவரும் அல்லர். அதுவும் முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு துப்பாக்கிச் சத்தத்தைக் கூட கேட்டிராதவர்தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இரு தசாப்தங்கள் இந்த மண்ணில் பட்ட அவலங்கள் எதுவும் அறியாதவர். முள்ளிவாய்க்காலில் தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி சேய் உறங்கிய சோகம் – அந்த வலி – புரியாதவர்.

அடைந்தால் ஈழம், இல்லையேல் மரணம் என ஒவ்வொரு போராளிகளும் தமது மார்பிலே நஞ்சைச் சுமந்து தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டும் என்ற தீராத தாகத்துடன் மாண்ட வரலாறு புரியாதவர்.

ஆயுத முனைப்போராட்டத்தின் போது கருணா எனும் துரோகியினால் எவ்வாறு பல தமிழ் இளைஞர்களின் உயிர்கள் கிழக்கிலும் வடக்கிலும் அழிக்கப்பட்டதோ அதை ஒத்த செயற்பாடே வடக்கில் விக்கியின் புதிய பிளவு. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.

இதுதான் இன்றைய தமிழர் நிலை இதனையல்லாம் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் த. தே. கூட்டமைப்பினர் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து எவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Nesan அவர்களால் வழங்கப்பட்டு 07 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Nesan என்பவருக்கு அனுப்ப இங்கே

https://www.tamilwin.com/articles/01/200808?ref=archive-feed

 


About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. திரு விக்னேஸ்வரன் அவர்களது பலவீனம் தன்முனைப்பு. தன்னைவிட புத்திசாலி யாரும் இல்லை என்பது அவரது அடிப்படைச் சிந்தனை. அவருக்கு பதவி வழி கிடைத்த செல்வாக்கை வைத்துத் தான் விரும்பியவற்றை தமிழ் அரசுக் கட்சிக்குள் விவாதித்து தன் பக்கம் கட்சியை இழுத்திருக்காலம். ஆனால் மனிதர் கட்சிக் கூட்டங்களைத் தவிர்த்துக் கொண்டார். ஏறிய ஏணைியை உதைத்துத் தள்ளினார். தனது வெற்றிக்குக் காரணம் மக்களிடம் தனக்கு இருக்கிற செல்வாக்குக்கு என நினைத்துக் கொண்டார். அதைச் சொல்லியும் காட்டினார்.
    தமிழ் மக்கள் பேரவையைத் தொடக்கக் காரணம் தமிழ் அரசுக் கட்சி வேட்பு மனு கொடுக்காத பட்சத்தில் அந்த அமைப்பு கைகொடுக்கும் என்ற கணக்குத்தார்.
    உண்ட வீட்டுக்குத் இரண்டகம் செய்து விட்டு தமிழ் அரசுக் கட்சி தனக்கு மீண்டும் நியமனம் கொடுக்கும் என கடைசி வரை நினைத்தார்.
    தொடர்ந்து எழுதவும’

Leave a Reply