அரசியல் களம்

அரசியல் களம்
நக்கீரன் பார்வையில்  

அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது! 

அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும் என்று வீரம் பேசிய சனாதிபதிசந்திரிகா இப்போது நாடகம் நடைபெறாது, இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

நாடகம் ஒத்திப்போடப்பட்டுள்ளதா அல்லது முற்றாகக் கைவிடப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. எது எப்படியிருப்பினும் இந்த நாடகம் இனி மேடையேற மாட்டாது என்பது தெளிவாகிவிட்டது. 

ஐந்தாண்டுகள் அவ்வப்போது விட்டு விட்டு நடாத்தப்பட்ட ஒத்திகையோடு ஒரு நாடகத்தை திடும் எனமேடையேற்றுவது என்பது முடியாத காரியம். அதற்குப் பலநாள் ஒத்திகை தேவை. 

அரசியல் யாப்புப் திருத்தம் இப்போது கைவிடப்பட்டதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். 

ஒன்று இந்த அரசியல் யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் ஆளும் மக்கள் ஐக்கிய முன்னணிக்குக் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. 

இரண்டு இந்த அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு பவுத்த-சிங்கள தீவிரவாதிகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலையை சனாதிபதி சந்திரிகாவினால் சமாளிக்க முடியவில்லை.  

மூன்று மக்கள் ஐக்கிய முன்னணிக்குள்ளேயே இந்த அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புக் கிளம்பும் என்பதை சனாதிபதி சந்திரிகா எதிர்பார்க்கவில்லை. 

அரசியல் யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு வேண்டிய பெரும்பான்மை வாக்குப்பலம் இல்லை என்பது சந்திரிகாவிற்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது என்பது உண்மைதான்.  நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி பதவி 2005ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டதை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது என்பதும் சந்திரிகாவிற்குத் தெரியும். அப்படியிருந்தும் அரசியல் யாப்புத் திருத்தத்தை, குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி பதவியை 2005ம் ஆண்டுவரை நீடிப்பதையிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசி இணக்கம் காணத நிலையில், நாடாளுமன்றத்தில் சனாதிபதி சந்திரிகா எதற்காகக் கொண்டுவந்தார்?  

நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குப்பலத்தைப் பொறுத்தளவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக 10 வாக்குகளே தேவையாக இருந்தது. அதாவது 150 என்ற மந்திர எண்ணை எட்டிப்பிடிக்க இன்னும் 10 வாக்குகளே தேவையாக இருந்தது. இந்தப் 10வாக்கையும் எதிர்க்கட்சி வரிசைகளில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு தூண்டில் போட்டுப் பிடிப்பதன் மூலம் நிரப்பலாம் என்பதே சந்திரிகாவின் கணிப்பாக இருந்தது. இதற்காக தூண்டலில் அவர் இரண்டுவிதமான இரையை கொழுவினார். 

ஒன்று கட்சி தாவிகளுக்கு 60 மில்லியன் ரூபா கொடுக்கப்படும். அதாவது 6 கோடி ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்.  

இரண்டு  நடக்க இருக்கும் நாடாளுமன்றத்துக்கான  தேர்தலில்; அவர்களது வெற்றியை  உறுதி செய்யும் வண்ணம் அதன்  உறுப்பினர் தொகையை 225ல் இருந்து 298 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் கட்சி தாவிகள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று  நாடாளுமன்றத்துக்கு இலகுவாக வந்துவிடலாம்.  

ஆனால் சகாதிபதி சந்திரிகா போட்ட இந்தக் (தப்புக்) கணக்குகள் எல்லாம் பிழைத்து விட்டது. எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு மீன்கள் மட்டுமே தூண்டலில் அகப்பட்டது. மற்றவை தூண்டலில் உள்ள இரையைக் கவ்வ மறுத்துவிட்டன. 

அது மட்டும் அல்லாது முதலுக்கே மோசம் என்ற வகையில் ஆளும்கட்சி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிக்சன் பெரேரா  எதிர்கட்சிக்குத் தாவினார். ஜயசேன ழராஜகருண என்ற இன்னொரு உறுப்பினர் தனது  பதவியை உதறித்தள்ளினார். எனவே இப்படி பணத்தை இறைத்தும், பதவியைக் காட்டியும்  10 உறுப்பினர்களை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஆளும்கட்சிப் பக்கம் இழுக்கும் சனாதிபதி சந்திரிகாவின்  முயற்சி படுதோல்வி கண்டது. 

சனாதிபதி சந்திரிகா தனது தீர்வுத் திட்டத்திற்கு பவுத்த-சிங்கள தீவிரவாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இவ்வளவு வலுவான எதிர்ப்பு எழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 

அரசியல் யாப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய சனாதிபதி சந்திரிகா தனது சனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பெரும்பான்மை பவுத்த-சிங்களவர்களது ஆதரவு  வாக்குகளே காரணம் என்று கூறினார். 

தான் சிறுவயது முதலே பவுத்த மதத்தைச் சரியாகப் படித்து, ஒழுங்காக பவுத்தகோவிலுக்குச் சென்று வழிபடும் சமயவாதி,  பவுத்த மதத்தை திரிகரண சுத்தியோடு பின்பற்றும் பவுத்த-சிங்களவாதி இப்படி பெருமையாகக் கூறிக்கொண்டார்.  

சனாதிபதி சந்திரிகாவா? இரணில் விக்கிரமசிங்காவா? இதில் யார் அசல் பவுத்த-சிங்களவாதி என்ற போட்டி எழுந்தால் பவுத்த-சிங்களவர்கள் தன்னைத்தான் தேர்வு செய்வார்கள், தன் பக்கந்தான் நிற்பார்கள் என்று சனாதிபதி சந்திரிகா நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை பிழைத்து விட்டது. 

பவுத்த-சிங்கள சமூகத்தில் பவுத்த தேரர்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் செல்வாக்குக்கு சமமாக அல்லது அதையும்விடக் கூடிய செல்வாக்கு இந்த பவுத்த தேரர்களுக்கு உண்டு. பொது வைபவங்களில் அமைச்சர் தொடக்கம் அதிகாரிகள் வரை ஒரு குட்டித் தேரர் காலில் விழுந்து வணக்கம் தெரிவிப்பது சாதாரண காட்சியாகும். அதிலும் கிராமப் புறங்களில்  வாழும் மக்கள் மீது பவுத்த தேரர்கள் செலுத்தும் செல்வாக்கு அதிகம்.  

ஏனைய மதகுருமார்கள் போலல்லாது சிங்கள மக்களின் வாழ்வு-தாழ்வு, சுக-துக்கம், கல்யாணம் கருமாதி எதுவானாலும் அதில் பவுத்த தேரர்கள் பங்கு கொள்கிறார்கள்.
கிராமப் புறங்களில் எழும்  சச்சரவுகளை, பிணக்குகளை அவர்களே நீதிபதிகளாக இருந்து தீர்த்து வைக்கிறார்கள். பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது, தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் தேடிக் கொடுப்பது இப்படி எல்லா மட்டங்களிலும் அவர்கள் மக்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். 

வட-கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திட்டங்களில் தென்னிலங்கயில் இருந்து சிங்களக் குடும்பங்களை ஆயிரக் கணக்கில்  கொண்டுவந்து குடியேற்றியவர்கள் இந்த பவுத்த தேரர்களே. 

எழுபதுகளில் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருந்த மணியன்தோட்டத்தில் (பூம்புகார்) அன்றைய யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த சிங்களவர்  சிங்களவர்களைக் குடியேற்றினார். ஆனால் அவருக்கு முன்னரே ஒரு பவுத்த தேரர் அங்கு சிங்களவர்களோடு குடியேறி ஒரு பவுத்த விகாரையையும் அமைத்துவிட்டார்!   

எனவே பவுத்த தேரர்களது ஆதரவைப் பெறாத எந்தத் தீர்வுத் திட்டமும் வெற்றிபெறாது. அப்படியான  தீர்வுத் திட்டம் எதையும் சிங்கள-பவுத்தர்கள் ஆதரிக்கமாட்டார்கள். 

சனாதிபதி சந்திரிகா தனது கட்சிக்குள்ளேயே, அதிலும் அமைச்சர்கள் மட்டத்தில் எதிர்ப்பு வரும் என்று  எதிர்பார்க்கவில்லை. 

அமைச்சர் மகிந்தா ராஜபக்சை பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்ற ஆண்டு மல்வத்தை, அஸ்கிரிய மதபீடாதிபதிகள் அவருக்கு “பவுத்தமத காவலன்”” என்ற பட்டத்தை  அளித்து கவுரவித்தார்கள்.  அவர்தான் இப்போது இந்தத் தீர்வுத் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே உண்ணாவிரதம் இருந்த புத்த தேரர்களிடம் சொல்லி இருக்கிறார். 

எனவே சனாதிபதி சந்திரிகா தனது அரசியல் யாப்புத் திருத்தத்தை பவுத்த-சிங்கள தீவிரவாதிகளது எதிர்ப்புக் காரணமாகக் கைவிட்டுவிட்டார். 

முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரிகாவின் தந்தையார் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா புத்ததேரர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பணிந்து பண்டா-செல்வநாயகம் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே இப்போது சந்திரிகா செய்திருக்கிறார். வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. 

இனி இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு அடுத்த நாடாளுமன்றத்தில் மீண்டும் உயிர் கொடுக்கப்படுமா என்பது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் முடிவைப் பொறுத்திருக்கிறது. 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தன்னிடம் இரண்டு திட்டங்கள்  இருப்பதாக வெளிநாடுகளுக்கு இதுகாலவரை சந்திரிகா சொல்லி வந்தார்.  ஒன்று அரசியல் தீர்வுத் திட்டம். மற்றது சமாதானத்துக்கான போர். இப்போது அரசியல் தீர்வுத் திட்டம் கல்லறைக்கு அனுப்பப்பட்டுவிட்டதால் அவரிடம் எஞ்சியிருப்பது சமாதானத்துக்கான போர்தான்.  

“சிங்கள தேசியம் தமிழர்களது உரிமைகளை சமாதான வழிகளில் தாங்களாகவே முன்வந்து தருவார்கள் என்ற மாயையில் வி.புலிகள் இயக்கம் இல்லை” என்ற தேசியத் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள் இப்போதும் சத்திய வார்த்தைகளாகவே ஒலிக்கிறது.

(தமிழ்ச் சோலை வானொலியில் 2001 ஆவணி 9ம் நாள் ஒலிபரப்பப்பட்டது) 



About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply