வளைந்த  செங்கோலை  நிமிர்த்தப் பாடுபடுவதே அறம் சார்ந்த அரசியலாகும்

வளைந்த  செங்கோலை  நிமிர்த்தப் பாடுபடுவதே அறம் சார்ந்த அரசியலாகும்

நக்கீரன்

ப்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நாட்டின் யாப்புப் பற்றியது. சனாதிபதிக்கு பதவியில் இருக்கும் பிரதமரைப்  பதவி நீக்கம் செய்ய முடியுமா? செய்ய முடியாது என்பதுதான் ததேகூ இன் நிலைப்பாடு.  இதில் அரசியல் யாப்பின் உறுப்புரை 42(4) தெளிவானது.  ஒரு பொதுத் தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடும் போது எந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூடுதலான உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறாரோ அவரையே சனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.  அதே போல் நாடாளுமன்றத்தை சனாதிபதி கலைக்கலாம். ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன.
    (1) நாடாளுமன்றத்தின் ஆயுள் காலத்தில்  நான்கு ஆண்டுகள் 6 மாதம் கழிந்திருக்க வேண்டும், அல்லது   
    (2) நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ததேகூ, குறிப்பாக தமிழ் அரசுக் கட்சி சனநாயக விழுமியங்களில், சட்டத்தின் மாட்சியில், அடிப்படை மனித உரிமைகளில் அக்கறையுடைய ஒரு கட்சி. அநீதி எங்கே நடந்தாலும், அது யாருக்கு எதிராக நடந்தாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கிற கட்சி.
1977 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமரும் ஆன   ஜேஆர் ஜெயவர்த்தனா முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளைப் பறிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அதனை எதிர்த்துத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைரும் எதிர்க்க் கட்சித் தலைவரும் ஆன அமிர்தலிங்கம் ஆளும் கட்சியின் சனநாயக விரோதப் போக்கைக் காரசாரமாகக் கண்டித்து நீண்ட நேரம் உரையாற்றினார்.
அப்படிப் பேசியது சிறிமா பண்டாரநாயக்கா மீதான அன்பினால் அல்ல. அவர் காலத்தில்தான் சிறிமா – சாஸ்திரி உடன்பாடு கையெழுத்தானது.
1964 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 25 ஆம் திகதி அளவில் மலையக வம்சாவழியினர் 9,75,000 பேர் இலங்கையில் வாழ்ந்திருந்தனர். இவர்களில் 5,25,000 பேருக்கு குடியுரிமை வழங்க இந்தியா சம்மதித்தது. இலங்கை 3,00,000 பேருக்கு குடியுரிமை வழங்கச் சம்மதித்தது. மீதி 1,50,000 பேரின் பிரஜாவுரிமை பற்றி கைச்சாத்திடப்பட்ட சிறீமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் ஆளுக்குப் பாதியாக பங்கிட்டுக் கொள்வதென தீர்மானித்துக் கொண்டன. . இதன் படி 75,000 பேர் வீதம் இரு நாடுகளும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன. இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகப்  பிரித்தது.  தமிழ் நாட்டின்  கரையையே பார்த்திராத இந்த மக்கள் 1966 முற்பகுதி தொடக்கம் தமிழ்நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
 சிறிமாவோ  காலத்தில்தான் சோல்பெரி அரசியல் யாப்பு ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. அதன் மூலம் சிறுபான்மை இனங்களது அரசியல், சமய உரிமைகளுக்கு அரணாக இருந்த உறுப்புரை 29 தும்  புதைக்கப்பட்டது.
சிறிமாவோ காலத்தில்தான் இலங்கை ஒரு ஒற்றையாட்சி முறைமை கொண்ட நாடு, சிங்களமே ஆட்சி மொழி, பவுத்தத்துக்கு அரபாதுகாப்பும் முன்னுரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்ற  யாப்பு சட்டமானது. அவர் காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் நடந்த (1974) தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கலைக்க மக்கள் மீது ஆயுதம் தாங்கிய காவல்துறையின் தாக்குதலில்  ஒன்பது பேர் அநியாயமாக உயிர் இழந்தார்கள்.
அப்படியிருந்தும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிவில் உரிமைகளைப் பறிக்கும் சட்டம் வந்த போது தமிழ் அரசுக் கட்சி அதனை முழு மூச்சாக  எதிர்த்தது.
இன்றும் அதே நிலைமைதான். சனாதிபதி சிறிசேனாவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சிங்கள மக்களது உரிமையை மட்டுமல்ல தமிழர்களுடைய உரிமையையும் பறித்தது.
தமிழர்களுடைய அரசியல் எப்போதும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
வள்ளுவர் காலம் முடி மன்னர் ஆண்ட காலம். குடிமக்கள் காலம் அல்ல.  அரசியல் பற்றிக் கூறவந்த வள்ளுவர் அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். காரணம் இறைவனின் தொழில் உயிர்களைக் காப்பது.
அரசியலில் பிழை செய்தவர்களை  அரசன் தண்டிக்கலாம். ஆனால் அரசனே பிழை செய்தால் அவனை யார் தண்டிப்பது? அரசன் தவறு செய்தால் அவனை அறம்  தண்டிக்கும்.  சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். ஆனால் அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.என்பது தமிழ்மக்களது ஆழமான நம்பிக்கை.
தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடிகள் தொடர்பில் கூட்டமைப்பு நீதிமன்றம் சென்ற விடயத்தை பல்வேறு விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய எதிரிகள் விமர்சித்து வருகின்றார்கள். அவர்கள் சனநாயக விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சென்றதை இரணில் விக்ரமசிங்காவைக் காப்பாற்றுவதற்காகவே என  பொய்ப் பரப்புரை செய்கின்றார்கள். இரணில் மகிந்தாவின் இடத்திலும் மகிந்தா இரணில் இடத்திலும் இருந்திருந்தாலும் இதைய ததேகூ செய்திருக்கும்!
தமிழர்களை காப்பாற்ற  சம்பந்தனையும் சுமந்திரனையும் அனுப்பினர்கள், ஆனால் இந்த இருவரும் ஐ.தே.கவை இப்போது பாதுகாக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க சுமந்திரன் மற்றும் சம்பந்தனும் விடாப்பிடியாக உள்ளார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். 
மெத்தச் சரி.  புலத்தில் இருக்கும் இந்த அரைவேக்காடுகள் சொல்லும் மாற்று வழி என்ன?
“எப்படி இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பாவிக்கலாம்?” என்று கேட்டு அதற்கான விடையையும் சொல்கிறார்கள். “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழர்கள் அரசு அமைப்பதற்கு ஒப்பந்தத்தை – வட கிழக்கு இணைந்த கூட்டாச்சியை உண்டு பண்ணும் போது, அமெரிக்காவின் முன்னிலையில் அமெரிக்காவிக்கு பொறுப்பு கொடுத்து ஒப்பந்தத்தை – வட கிழக்கு இணைந்த கூட்டாச்சியை நடை முறை படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதனால் அமெரிக்காவை எமது அரசியல் தீர்வில் ஈடு கொள்ள முடியும். இதுவே தீர்வுக்கான யதார்த்தமான பாதை.”
இது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க நினைத்த புத்திசாலியின் கதை போன்றது.
அமெரிக்கா இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க அணியமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா  கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 34/1 அதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆனால்  அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்ய முன்வராது. உத்தரவாதமும் அளிக்க முன்வராது.  இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா எதைச் செய்தாலும் அதனை ஐக்கிய நாடுகள் சபை மூலமே செய்ய முன்வரும். கொசவோ போன்ற நிலைமை இன்று இலங்கையில் இல்லை.
இன்று இலங்கை அரசியலில் ஐனாதிபதி சிறிசேனாவின் நடவடிக்கைகள் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல் ஆகும். இந்த நடிவடிக்கைகளுக்கு எதிராகவே ததேகூ காய் நகர்த்திக்  கொண்டிருக்கின்றது. மகிந்த இராசபக்சாவை கொல்லைப்புற வழியாகக் கொண்டுவந்து பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கிறார் சனாதிபதி சிறிசேனா. இது சனநாயகப் படுகொலை ஆகும்.
அறத்துக்கும் மறத்துக்கும் நடந்து கொண்டிருக்கிற சண்டையில் ததேகூ அறத்தின் பக்கம் நிற்கிறது. கொடுங்கோலுக்கு எதிராக செங்கோல் பக்கம் நிற்கிறது.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.  (குறள் எண்: 543)
அந்தணரது மறை நூல்களுக்கும் உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
இன்று இலங்கையில் செங்கோல் வளைக்கப் பட்டுவிட்டது. கொடுங்கோல் கோலோச்சுகிறது.  வளைந்த  செங்கோலை  நிமிர்த்தப் பாடுபடுவதே அறம் சார்ந்த அரசியலாகும். அதனையே ததேகூ செய்கின்றது.

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply