மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான்! நக்கீரன்

மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான்!

நக்கீரன்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.  மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான் (Those whom the god wish to destroy
first make mad”).

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது சனாதிபதி சிறிசேனாதான் நினைவுக்கு வருகிறார்!

கடந்த நான்கு வாரங்களாக சனாதிபதி சிறிசேனா அவர்களின் அதிரடி அரசியல் அறிவுப்புக்களையும் பயித்தியக்காரத்தனமான அவரது அதிரடி  அரசியல் முடிவுகளையும் பார்க்கும் போது அவரை அழிக்க கடவுள் சித்தமாகி விட்டார் போல் தெரிகிறது.

சிறிலங்காவை  ஆண்ட மன்னர்கள் காலத்திலும் இப்படிப் பயித்தியக்காரத்தனமாக நடந்து கொண்ட அரசர்கள் இருந்திருக்கிறார்கள். 

இலங்கையின் வரலாற்றில் பொற்காலம் என மகாவம்சம் வருணிக்கும்   மகா வம்சமன்னர்களது (கிமு 543 -கிபி 275)  ஆட்சியில் இரண்டொருவர் நீங்கலாக பெரும்பான்மையினர் பலவீனமான,  மடத்தனமான அரசர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தக் காலப் பகுதியில் ஆண்ட 54 அரசர்களில் 15 பேர் ஓர் ஆண்டுக்குக் குறைவாகவே ஆண்டிருக்கிறார்கள். முப்பது அரசர்கள் 4 ஆண்டுக்குக் குறைவாக ஆண்டிருக்கிறார்கள். பதினொரு அரசர்கள் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டுள்ளார்கள். ஆறு அரசர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பதின்மூன்று அரசர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இரபத்திரண்டு அரசர்கள் ஆட்சியைப் பிடித்த அரசர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த இருண்ட கால வரலாற்றில் சிங்கள அரசர்கள் (பெரும்பாலும் நாக வம்சத்தினர்) ஆட்சியைப் பிடிக்கவும் பின்னர் அதனைத் தக்க வைக்கவும் இடைவிடாது மேற்கொண்ட போர் வரலாறாகவே காணப்படுகிறது.

சனாதிபதி சிறிசேனாவும் பண்டைய சிங்கள அரசர்கள் போலவே நடந்து கொள்கிறார்.

ஒக்தோபர் 26 (வெள்ளிக்கிழமை)  –  பிரதமர் இரணில் விக்கிரமசிங்க உயிரோடு இருக்க தனது பரம வைரியான இம்சை அரசர் மகிந்த இராசபக்சாவை இரவு 8.30 மணிக்கு இரகசியமாக பிரதமராக முடிசூட்டல்.

ஒக்தோபர் 26 (சனிக்கிழமை) – பிரதமர் இரணில் விக்கிரமங்காவை அரசியல் யாப்பு உறுப்புரை 42 (4) இன் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிப்பு. அதே நாள் நாடாளுமன்றம்  நொவெம்பர் 16 வரை ஒத்திவைக்கப்பட்டதாக அரசிதழ்  மூலம்  அறிவித்தல்.

ஒக்தோபர் 27 நாடாளுமன்றம் நொவெம்பர் 16 வரை ஒத்திவைப்பு

ஒக்தோபர் 28 – தொடர்ந்து பிரதமராக இரணில் விக்கிரமசிங்கா நீடிக்கிறார் என சபாநாயகர் சனாதிபதி சிறிசேனாவுக்குக் கடித மூலம் அறிவிப்பு.

நொவெம்பர் 09 (வெள்ளிக்கிழமை) – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் சனவரி 05 அன்று நடைபெறும் என அரசிதழ் மூலம் அறிவிப்பு.

நொவெம்பர் 12 – சிறிலங்கா உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இடைக்கால உத்தரவு. தேர்தல் வைக்கவும் தடையுத்தரவு.

நொவெம்பர் 14 – பிரதமர் மகிந்த இராசபக்சாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். சனாதிபதி நிராகரிப்பு.

நொவெம்பர் 16 – பிரதமர் மகிந்த இராசபக்சாவுக்கு எதிராக  இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். சனாதிபதி மீண்டும் நிராகரிப்பு. இராசபக்ச தரப்பு நாடாளுமன்றத்தில் அமளிதுமளியில் ஈடுபட்டது. காவல்துறை மீது நாற்காலித் தாக்குதல்.

நொவெம்பர் 23  – நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத்  தீர்மானமா? இராசபக்சாஅரசுக்கு எதிராக எத்தனை வாட்டி நம்பிக்கையல்லாத் தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும்? ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நாடாளுமன்றக் குறிப்பு ஏட்டில் (Hansard) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொட்டையில் மயிர் புடுங்கும் சனாதிபதி சிறிசேனா எத்தனை தடவை இராசபக்சாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை ஏதாவது ஒரு காரணம் காட்டி நிராகரிக்கக் கூடும். நாடாளுமன்றத்தில் இராசபக்சாவின் அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சனாதிபதி சிறிசேனாவுக்கும் தெரியும். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள அவர்  அணியமாக இல்லை.

இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றால் மட்டுமே நீதியைப் பெறமுடியும்.  இரணிலுக்கு கல்தா கொடுத்துவிட்டு இராசபக்சாவை இரகசியமாக  பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்த அடுத்த நாளே இரணில் உச்ச நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். சென்றிருந்தால் இந்த இழுபறி நீடித்திருக்காது. “நாடாளுமன்றத்தில் எனக்குப் பெரும்பான்மை இருக்கிறது அதனை எண்பித்துக் காட்டுவேன்” என விக்கிரமசிங்க சபதம் செய்வது தவறு எனப் பலர் நினைக்கிறார்கள்.

இப்போது தமிழ் அரசுக் கட்சியும் ஏனைய அமைப்புக்களும் தொடுத்த 17 மனுக்கள்  தொடர்பான வழக்கு டிசெம்பர் 4,5,6 தேதிகளில் விசாரணைக்கு வர இருக்கிறது.  அடுத்த நாள் தீர்ப்பு வழங்கப்படும். இந்த 17 மனுதாரர்களில் விக்கிரமசிங்க சார்பாக வழக்கு வைக்கவில்லை.  நீதித்துறையைவிட சட்டங்களை இயற்றுகிற  நாடாளுமன்றம் அதிக அதிகாரம் கொண்ட சபை என்பது விக்கிரமசிங்காவின் கோட்பாடு! 

மேலும் ஒரு தகவல். முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்த போது அதற்கு எதிராக வாக்களிக்க விக்கிரமசிங்க மறுத்துவிட்டார்!

இதற்கிடையில்  சிறிசேனாவின் பணிப்புரை காரணமாக சட்டமா அதிபர் குறித்த விசாரணையை 5 அல்லது 9 பேர்கொண்ட நீதியரசர்கள் விசாரிக்க வேண்டும் என மனுச் செய்துள்ளார்.

இப்போது உச்ச நீதிமன்றத்தில் இரண்டு இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.  சனாதிபதி சிறிசேனா தீபாலி விஜயசுந்தர அவர்களது பெயரை அரசியலமைப்புச்சபைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அதனை அந்த சபை நிராகரித்துவிட்டது. அவர் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கில் குற்றவாளி எனக் கண்டு அவருக்கு தண்டனை அளித்த நீதிபதி  தீபலி விஜயசுந்தர.

இன்னொருவர் ஈவா வனசுந்தரா என்ற நீதியரசர் இராசபக்சாவுக்கு  சட்டக் கல்லூரி நாட்களில் நெருக்கமாக இருந்தவர். அதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இராசபக்சாவின் குடும்பத்துவர்கள் தொடர்பான (கோத்தபாய இராசபக்சா…..) வழக்குகளில்  பாரபட்சமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது. 

இப்போது  அரசியலமைப்பு சபை  இப்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடமையாற்றும் நீதிபதி எஸ்.துரைராசா மற்றும் காமினி அமரசேகராஆகிய இருவரையும்  பரிந்துரை செய்துள்ளது.ஆனால் அவர்களை நியமிக்க சனாதிபதி காலத்தைக் கடத்துகிறார். இதனால் உச்ச நீதிமன்றத்தை தங்களுக்குப் பிடித்த நீதியரசர்களால் நிரப்ப சனாதிபதி முயற்சிக்கிறாரா? என்ற ஐயம்  சட்டவாதிகளது வட்டாரத்தில் எழுந்துள்ளது.  இராசபக்சா காலத்தில் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் உச்சநீதி மன்றத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.

இப்போது எதிர்க்கட்சிகள, சிவில் அமைப்புக்கள்  நாட்டில் எழுந்துள்ள  அசாதாரண அரசியல் யாப்பு நெருக்கடியில் வெளிநாட்டுத் தூதுவர்கள் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டும் எனக் கேட்கின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல வெளிநாடுகள் சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என வெளியில் ஆளும் கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டாலும் உள்ளூர  மிக இரகசியமாக வெளிநாட்டுத் தூதுவர்களோடு பேசி வருகிறார்கள். வெளிநாட்டுத் தூதுவர்களும் இராசபக்ச தரப்போடும் இரணில் தரப்போடும் பேசிவருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற பல வெளிநாட்டு  இராசதந்திரிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்பு தொடர்பாக நொவெம்பர் 20 அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சம்பந்தன் விபரங்களை வெளியிட்டார்.

    (1) பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி முறைமை இருக்கின்றபோது அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை, படுமோசமானவை.

    (2) இலங்கையின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கருத்துக்களுக்குப் பின்னாலுள்ள கரிசனைகளை நன்கு அறிவர். பெரும்பான்மையினர் தமக்குள்ளே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அதனைத் திசைதிருப்பும் வகையில் சிறுபான்மையினர் மீது குறிப்பாக தமிழர்கள் மீது வன்முறைகளையும் கலவரங்களையும் அராஜகத்தையும் அரங்கேற்றியமைக்கு பலஏடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன.

    (3) தற்போது நாட்டில் நடக்கும் அதிகார மோதல் பெரும்பான்மையினருக்கு இடையிலானது தானே நாம் எதற்கு அதற்குள் போய் சிக்கிக்கொள்ள வேண்டும். கண்டும் காணாமல் இருந்துவிடுவோம். இந்த விடயத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் போன்ற குரல்களும் ஆங்காங்கே எமது சமூகத்தின் மத்தியில் இருந்து எழுகின்ற நிலையில் தமிழர்களாகிய நாம் இந்த விடயத்தை மிகவும் கரிசனைக்குரிய வகையில் அணுகவேண்டும்.

    (3) ஜனநாயகம் என்பது பட்டப்பகலில் படுகொலைசெய்யப்படுகின்றது என்பதை ஆளுங்கட்சியாகச் சொல்லிக்கொள்ளும் தரப்பினரைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வதேச சமூகமும் சிவில் சமூகமும் சுட்டிக்காட்டிவருகின்ற போது தமிழ்த் தரப்பு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு திசைநோக்கிப் பார்க்க முடியுமா?

    (4) தமிழர்களுக்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கையில் எவ்வாறு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சனநாயகத்தினைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கைகட்டிக்கொண்டு இருக்க முடியும்?

    (5) சனநாயகத்தை மீள் நிறுத்தும் இன்றைய போராட்டத்தில் தமிழர் ஒதுங்கியிருப்பதன் மூலமாக தமிழர்கள் மீது கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான போராட்டம் முன்னேற்றம் காணுமா ?

    (6) தமிழர்களாகிய நாம் பெரும்பான்மையின அரசியல் தலைவர்களின் முகங்களைப் பார்த்தோ அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் பார்த்தோ அன்றி வரலாறு எமக்கு கற்பித்துள்ள பாடங்களை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்தவகையில் எம்முடைய அண்மைக்கால வரலாறு என்ன? 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு  சனவரி வரை என்ன நடந்தது? 2015 சனவரி 8 ஆம்திகதி முதல் என்ன நடந்தது?

    (7) முற்று முழுதாக எமது பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்னமும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் எமது மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஜனநாயக இடைவெளியேனும் இருந்ததென்பதை மறுக்கமுடியுமா?

    (8) ஜனநாயகத்திற்கு முரணாக அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சிக்கு வந்துள்ள தரப்பினர் தமது ஆட்சியை இந்த வடிவத்திலேயே நிலைப்படுத்தும் இடத்து எவ்வாறான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை அனைவரும் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

    (9) தற்போதே கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் சமஷ்டி கேட்கின்றனர் நாட்டைப் பிரிக்கப்பார்க்கின்றனர் இதற்கு ரணில் இணங்கிவிட்டார் போன்ற சுவரொட்டிகளைப் பார்க்க முடிவதுடன் ஊடகங்களிலும் தமிழர் தரப்பை இந்த அரசியல் நெருக்கடிக்கான மூலகாரணமாக குற்றம்சாட்டிப் பழிபோடும் படலம் முன்னெடுக்கப்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது

 (10) தமிழர் தரப்பு இந்த வேளையில் எமது மக்கள் தொடர்ந்தும் வாழ வழிசெய்துகொண்டு அவர்களது உரிமைகளையும் கடந்த கால அநீதிகளுக்கான நீதியையும் வென்றெடுப்பதற்கு வழிவகைசெய்யவேண்டும்.

இவை ஒரு புறம் இருக்க சிறிலங்காவின் பொருளாதாரம் தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால்,  ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி  இலங்கை உரூபாயில் 178.99 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

சர்வதேச நிதியம் சிறிலங்காவுக்குக் கொடுக்க இருந்த அ.டொலர் 1.8 பில்லியன் கடனை உறைய வைத்துள்ளது. யப்பான் நாடு கொடுக்க இருந்த குறைந்த வட்டிக் கடன் அ.டொலர் 1.4 பில்லியன் கடனை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா அ.டொலர் 500 மில்லியன் பெறுமதியான உதவி நிதியை நிறத்தியுள்ளது.

சிறிசேனா – இராசபக்ச அரசு மேற்குல நாடுகளின் கடும் அழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறது. வெளிநாடுகளது இராசதந்திரிகள் பிரதமர் இராசபக்சாவை சந்திக்க மறுத்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் நாடாளுமன்றம் நாளை கூட இருக்கிறது. அதற்கு முதல்  கட்சித் தலைவர்களை சபாநாயகர் சந்திக்க இருக்கிறார்.

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply