தமிழ்நாட்டில் புத்தர்  

தமிழ்நாட்டில் புத்தர்
 சத்யபாமா
(இந்திய தொல்வியல் துறை) 

புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று உணரப்படும் தனிப்பட்ட மாந்தரின் வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மனிதநேயத்துடன் கூடிய அணுகுமுறையை போதிப்பது. மத அணுகு முறையில் அது நடுநிலைப் பாதையை உணரக் கோருகிறது. நான்கு மாபெரும் உண்மைகளை, அதனைச் சார்ந்துள்ள பன்னிரண்டு இணைப்புச் சங்கிலிகள் மற்றும் எட்டு முகம் கொண்ட புனிதப் பாதையையும் கொண்ட ‘ஆத்மா என்ற ஒன்று இல்லை’ என்ற ‘அனாத்மன்’ என்ற தத்துவத்தை அது பிரச்சாரம் செய்கிறது. சுருங்கக் கூறின், பார்ப்பனர்களின் மதத்திலிருந்து உருவான பல சமூக அநீதிகளுக்கு எதிராக கவுதம புத்தர் புரட்சி செய்தார் என்றும், சமத்துவ உணர்வையும் மனிதநேய அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்தார் என்றும் கூறலாம்.

ஒரு மனிதனின் தகுதி, அவனது மரபுவழி பண்பாட்டை விட அவனது ஒழுக்கம் நிறைந்த செயல்பாடுகளிலேயே எதிரொளிக்கிறது. இத்தகைய ஒழுக்கநெறிக் கோட்பாடு அசோக மாமன்னரால் மிகச் சிறந்த முறையில் பின்பற்றப்பட்டது. மகத நாட்டில் தோற்றம் பெற்ற புத்தமதத்தின் மிகச் சிறந்த கோட்பாடுகளை பாரதநாடு முழுவதிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் தனது மகன் மகேந்திரன் மூலம் இந்த மாமன்னர் பரப்பினார் என்பது அனைவரும் நன்கறிந்ததே. புத்த மதத்தின் மய்யக் கருவான தம்மத்தின் பெருமையைப் பற்றி தனது குடி மக்கள் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்ட அவர், தனது ராஜ்யம் முழுவதிலும் சாசனங்களையும், பிரகடனங்களையும் வெளியிட்டார் என்பதும் பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

இன்று நாம் அறிந்துள்ள அரசு ஆணைகள் போன்ற முதன் முதலாக பதிவு செய்யப் பட்ட ஆணைகள் இவை. பண்டைய தமிழ் ராஜ்யங்களான சோழர், சேரர், பாண்டியர் மற்றும் சத்யபுத்ரர்களின் எல்லையில் ஆட்சி செய்து வந்த அதியமான் என்பவரைப் பற்றி அண்மையில் உறுதியாக அடையாளம் காணப்பட்டு பதிவுகள் செய்யப்பட்ட ஆவணங்களாக இவற்றைக் கருதலாம். ஆவணப் பதிவுகள் இல்லாத போதும், இவ்வாறு தம்மத்தைப் பரப்பும் அசோகரின் மாபெரும் முயற்சியின் காரணமாக புத்தமதம் தமிழ் நாட்டில் தழைத்திருக்கக்கூடும் எனக் கொள்ளலாம்.

தொடர்ந்த பிற்காலங்களில், புத்தமதம் தமிழ் நாட்டில் தழைத்து விளங்கியது. தம்மத்தின் அசாதாரணமான போதனைகளை எடுத்துக் காட்டும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற காப்பியங்களில் இருந்து இது தெரிய வருகிறது. இந்த இரு காவியங்களின் காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய காவேரிப்பூம்பட்டினத்தில் ஒரு சிறு வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டதிலிருந்து இது உறுதியாகிறது.

இருண்ட காலத்தில் புகழ் பெற்று விளங்கிய மதம் புத்தமதம் என்பதை திருஞானசம்பந்தர் அதைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட பல அற்புதங்களில் இருந்தே தெளிவாக அறிந்து கொள்ளலாம். சுறுசுறுப்பாக இயங்கிய புத்த விஹாரம் ஒன்றையும், அதன் அருகே இடிந்து போயிருந்த தூபிகளையும் தான் கண்டதாகக் குறிப்பிட்டுள்ள சீன யாத்திரிகள் ஹ_வான் சுவாங் கின் குறிப்புகளில் இருந்து தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் புத்த மதம் தழைத் தோங்கி யிருந்தது என்பதையும், பின்னர் நலிவுற்றது என்பதையும் அறிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்திலும் கூட பல மாபெரும் சைவ வைணவ சமயத் தலைவர்களின் பக்தி இயக்கத்தின் பெரும் தாக்குதலுக்கு இலக்கானபோதும் புத்தமதம் அழியாமல் நிலைத்து நின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று மகாபலிபுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, புத்த மதம் சிறிது சிறிதாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்ற உண்மையையும் உணரலாம். பண்டைய காவேரிப்பூம்பட்டினமான மேலையூரில் கண்டெடுக்கப்பட்ட முதல் வெண்கல மாத்ரேயர் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது; அது பொன் முலாம் பூசப்பட்டிருந்தது.

நாகப்பட்டினம் சூளாமணி விஹாரத்தை ராஜராஜ சோழர் புதுப்பித்துக் கட்டித் தந்த செய்தியிலிருந்து தமிழ்நாட்டில் புத்த மதம் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆங்கிலேயர் இந்நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட பெரும் புயலில் இந்த புத்த விஹாரம் கடலில் மூழ்கிப் போகும் வரை, அது புகழ் பெற்று விளங்கியது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வெண்கல புத்தர் சிலைகள் இன்றும் சென்னை அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை நிர்மாணம் செய்யப்பட்ட புத்தரின் கற்சிலைகள் சோழ மண்டலம் மற்றும் தொண்டை மண்டலப் பகுதிகளிலுள்ள 150 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்திற்கு அளவற்ற, தடையற்ற, தீவிர ஆதரவு நிலவிய ஒரு காலத்தில், தமிழ் நாட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்ட புத்த மதச் சின்னங்களில் பெரும்பகுதி இவையே.

கிருஷ்ணா நதிப் பள்ளத் தாக்கில் கிடைத்தது போன்ற பண்டைய காலத்தைச் சேர்ந்த புத்த மதச் சிலைகள் அல்லது புத்த விஹார கட்டடங்கள் கொண்ட தொல் பொருள் ஆய்வுச் சான்றுகள் நமக்கு தமிழகத்தில் பெரும் அளவில் ஏதும் கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் அசோகரின் சில சாசனங்கள் இருந்த போதும், புத்த மதம் தொடர்பான பெரிய தொல்லியல் ஆதாரங்கள் ஏதும் இருக்கவில்லை. ஆனால் சன்னதி என்னுமிடத்திற்கு அருகே ஒரு மாபெரும் புத்த தூபி அண்மையில் இந்தியத் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டதைப் பெருமையுடன் நாம் குறிப்பிடலாம். அத்துடன் அசோக மன்னரின் உருவம் பதித்த கல் ஒன்றும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற புத்த மதச் சான்றுகளைத் தேடும் தொல்லியல் ஆய்வுக்காக பல இடங்களைத் தமிழ் நாட்டில் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். அவ்வாற செய்தால் தமிழ்நாட்டில் புத்த மதம் தழைத்திருந்தது பற்றிய மாபெரும் சான்றுகள் பல கண்டுபிடிக்கப்பட இயலும். நாளுக்கு நாள் கிராமப் பகுதிகள் நகரங்களாக மாறி வரும் நிலையில் இந்த ஆய்வுகளை விரைவில் மேற்கொள்வது நல்லது. தொல் பொருள் சான்றுகளுக்கு விவசாயத் தொழிலால் பெரும் பாதிப்பு ஏதும் நேர்ந்துவிடாது. ஆனால் தொழில் துறை இத்தகைய தொல்லியல் சான்றுகள் என்றுமே வெளிப்பட இயலாதபடி செய்து விடக்கூடும்.

தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல புத்தர் சிலைகள் இருப்பது நமக்கு தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் இவைகளைத் திருடிச் செல்வதற்கான சில முயற்சிகளும் நடந்துள்ளன. மக்களால் இன்றும் அந்த புத்தர் சிலைகள் வழிபடப்பட்டு வருகின்றன. இந்த புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களை ஆவணங்களில் பதிவு செய்து, அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.
செல்வ வளம் மிகுந்த கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அதிக அளவில் நம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காரணமாக இத்தகைய புத்த மத தொடர்பான சுற்றுலாத் தலங்கள் மிகுந்த வருவாய் அளிக்கும் வாய்ப்பு கொண்டவை என்பதை நமது சுற்றுலா அதிகாரிகள் நன்கு அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சுற்றுலாத் தலங்களை உருவாக்கி வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாம் பயன் படுத்திக் கொள்ள இயலாதா?

(11 2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு துவக்க விழாவில் கலந்து கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளர் திருமதி சத்யபாமா அவர்கள் ஆற்றிய உரை.)


புத்தர் தந்த பதில்

புத்தருடைய சுற்றுப் பயணத்தின்போது பிராமணர்களால் ‘பிரம்மா’ என்றும் ‘ஈசன்’ என்றும் ஒருவர் பற்றிச் சொல்லுகிறார்களே? அவர்கள் பற்றித் தங்கள் கருத்தென்ன?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

புத்தரின் பதில்

உலகம் பிரம்மனாலோ, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதைப் போற்றி வணங்க வேண்டுமென்றும் பிராமணர்கள் சொல்லித் திரிகிறார்களே’’ என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது.

‘வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம். பிக்குவே, நீ ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல்களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துப் பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்துக் கரையில் வைத்து விட்டு ‘என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை;. பிறர் நலம் பேணுவதாகும்.’’

நூல்: ‘இவர்தான் புத்தர்’’

உண்மை எதுவென்பதைத் தனக்கு உபதேசிக்கக் கூடிய ஆசிரியர்களைத் தேடி ஊர் ஊராக அலைந்தார். முதலில் அலரகலாமா என்ற ஞானியை அணுகினார். அவர் சித்தார்த்தரை சீடனாக ஏற்றுக் கொண்டு அவரிடம் கற்க வேண்டிய எல்லாவற்றையும் துறையறக் கற்றுத் தேறினார். அதன்பின் தனது குருவிடமே கேட்டார். “நீங்கள் எனக்குப் படிப்பித்தவற்றில் எவ்வளவுதூரம் நீங்களே அனுபவத்தில் கண்டு தேறியிருக்கிறீர்கள்?” அலரகலாமா சொன்னார் “எல்லாம் சூனியம்” என்ற படிக்கு மட்டும் தேறியிருக்கிறேன். உன்னைப் பொறுத்தளவில் எனக்கு எவ்வளவு ஞானமுண்டோ, தேர்ச்சியுண்டோ, சித்தியுண்டோ அந்தளவு உனக்கும் உண்டு. இருவரும் சேர்ந்து எனது சீடர்களை வழிநடத்துவோம்.”

ஆனால் சித்தார்த்தரோ அறுதியான உண்மை, நிர்வாணம் இவற்றைத் தேடிக் கொண்டிருந்தார். எனவே அவரை விட்டு நீங்கி இன்னொரு குருவைத் தேடிப் போனார். இப்படி ஆறு ஆண்டுகள் கடுமையான விரதம், நோன்பு, தபம் இவற்றைக் கடைப்பிடித்தார். அவர் கடைப்பிடித்த கடுமையான விரதம்பற்றி அவரே சொல்லுகிறார்.

அன்புள்ள இளவரசன்

இந்தப் பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் இருக்கிறது. பாடல் எண் 183. பாடியவர் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் என்ற பெயர் தாங்கிய பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். இவனைப் பிரித்துக் காட்ட ‘ஆரியப்படை’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவன் வடநாட்டுக்கு படையெடுத்து அங்குள்ள ஆரிய மன்னர்களை வென்றிருக்க வேண்டும்.

புறநானூற்றுக்கு பலர் உரை எழுதியுள்ளார்கள். இருந்தாலும் மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சித்தாந்த கலாநிதி அவ்வை க. நடராசன் அவர்கள் உரையெழுதி சைவ சித்தாந்த நூற்பதிவுக் கழகம் வெளியிட்ட புறநானுறு சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. இவர் ஓய்வு பெற்ற தமிழ்த் துறை கல்விப் பணிப்பாளர் அவ்வை நடராசனின் தந்தை.

இந்தப் பாடல் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறுகிறது. அதன் உரையைப் பார்ப்போம்.

உற்றுழி உதவியும் – தன் ஆசிரியற்கு ஓர் ஊறு பாடு உள்ளவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்,
உறுபொருள் கொடுத்தும் – மிக்க கொருளைக் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று – வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு அழகிது,
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் – அதற்கு எல்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்,
சிறப்பின் பாலால் – கல்வி சிறப்பால்
தாயும் மனந்திரியும் – தாயும் மனம் வேறுபடும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் – ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே
மூத்தோன் வருக என்னாது – மூத்தவன் வருக என்னாது,
அவருள் அறிவுடை யோன் ஆறு – அவருள் அறிவுடையேன் சென்ற நெறியிலே,
அரசும் செல்லும் – அரசனும் செல்வான்,
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்கின் – கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் கடும் – மேற்குலத்து ஒருவனும் இவன் கீழ்க் குலததானென்று பாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் என்றவாறு.
இங்கே நாற்பால் எதனைக் குறிக்கிறது? வேதம் மற்றும் மனு ஸ்மிருதி சொல்லும் ஆரிய வர்ண வேறுபாடான பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திர பிரிவையா? அல்லது தொல்காப்பியம் கூறும் அந்தணர், அரசர், வைசியர், வெள்ளாளர் பிரிவையா?

சங்க காலம் கிமு 300 – கி.பி. 100 என தோராயமாக கணக்கிடப்படுகிறது. ஆரியர் தென்னாட்டிற்கு கி.மு. 500 ஆண்டு தொடக்கம் வரத் தொடங்கி விட்டார்கள். சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ் அரசர்கள் பார்ப்பனர் சொற்படி யாகங்கள் செய்து, பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுக்க தொடங்கி விட்டார்கள்.
அதனால் தொழில் அடிப்படையில் குடிகள், குலங்கள் என்று இருந்த பிரிவு மறைந்து பிறப்பு அடிப்படையில் வர்ண பிரிவு தமிழ்மக்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது.

சங்க காலத்தின் முற்பகுதியில் எல்லோரும் குடி, குல, ஆண், பெண் வேறுபாடின்றி கல்வி கற்றிருந்தார்கள். அவர்கள் பாடிய சங்கப் பாடல்களே அதற்கு அகச் சான்றாக இருக்கின்றது.
இந்தப் பாடலில் கூட நாலாவது சாதிக்காரன் கல்வி கற்று முன்னுக்கு வருவான் என்றிருக்கிறது. பிற்காலத்தில் வேளாளர் நீங்கலாக மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆறுமுக நாவலர் தொடக்கிய பள்ளிக் கூடங்களில் தீண்டப்படாதார் என்கிற கீழ்ச் சாதியார் சேர்ந்து படிக்க முடியவில்லை!
சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வெவ்வேறு குடிகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இற்றை மேல் நாட்டார் தங்கள் குடும்பப் பெயரை (டீயமநசஇ ஊயசிநவெநசஇ ளுஅiவா) கடைசிப் பெயராக வைப்பது போல சங்கப் புலவர் தங்கள் ஊர்ப்பெயரோடு சில சமயம் குடிப் பெயரை அல்லது தொழில் பெயரை தங்கள் பெயருக்கு முன் வைத்திருந்தார்கள்.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார், சிறுகுடி கிழான் பண்ணன், குறமகள் இளவெயினி (குறத்தி குலம்), தங்காற் பொற்கொல்லனார், வெண்ணிக்; குயத்தியார் (குயவர் குலம்) மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன், மருதனிளநாகனார் நக்கீரனார் …………………….

எனவே ஆரியர்கள்தான் பிறப்பின் அடிப்படையில் வர்ணதர்மத்தை பரப்பினார்கள். பின்னர் இந்த நால்வர்ண அமைப்பு நாலாயிரம் சாதிகளாக பல்கிப் பெருகின.
தொல்காப்பியம்தான் தமிழில் கிடைக்கிற மிகப் பழமையான நூல். அது கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். அதில் எப்படி இந்த நாற்பால் அந்தணர், அரசர், வைசிகர், வெள்ளாளர் (நால் வர்ணத்தில் சூத்திரர்) பிரிவு இடம்பெற்றது?

மேலே குறிப்பிட்டதுபோல ஆரியர் வருகை கிமு 5 ஆம் நூற்றாண்டில் தொடங்கி விட்டது. அவர்களது செல்வாக்கு முதலில் அரண்மனையோடு தொடங்கியது. பின்னர் படித்த புலவர்கள் மத்தியில் அவர்களது செல்வாக்கு இடம்பெற்றது.

தொல்காப்பியத்தில் சொல்லப்படும் நாற்சாதி இடைச் செருக்கல் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மைபோல் தெரிகிறது. மரபியலில் மரம், செடி, கொடி, விலங்குகள் பற்றி சொல்லி வந்து திடீரென அந்தணர், அரசர், வைசிகர், வெள்ளாளர் பற்றி கூறப்படுகிறது.

வைசிகர் என்ற சொல் பிற்காலத்தையது. அதுவும் இது இடைச் செருக்கல் என்பதைக் காட்டுகிறது.

ஆரியக் கருத்துக்கள் இல்லாத சங்க நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன என அவ்வை துரைச்சாமி கூறுகிறார். மூன்று விழுக்காடு தன்னும் ஆரியக் கருத்துக்கள் இருக்கின்ற நூல்களே அழிவுக்குப் தப்பியன.

வள்ளுவர் உழவுத் தொழிலையே மேலான தொழில் என்கிறார். ஆனால் உழவுத் தொழில் செய்யும் வேளாண் மக்கள் நாலாவது சாதியாக தொல்காப்பியர் சொல்வது அது இடைச் செருக்கல் என்பதற்கான இன்னொரு காரணம்.

கையூட்டு என்பது பொருந்தாது. கையூட்டு என்றால் bribe.

புறநானூறு நூலை வாங்கிப் படித்து இந்தப் பாடலுக்குரிய விளக்கத்தைப் படித்துப் பார்க்கவும்.
அன்புடன்

நக்கீரன்


About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply