இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?
இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல கட்சி முக்கயஸ்தர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை ரூபாயில் சராசரியாக நாளொன்றுக்கு 500 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பின்தங்கியுள்ளனர்.
நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இந்த சம்பளத் தொகைத் தீர்மானிக்கப்படுகிறது.
ந்தக் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று, தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகிறது. ஒவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் காலப்பகுதி வரும் போதும் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
யார் இந்த மலையகத் தமிழர்கள்?
1820 – 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.
1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
வரும்வழியும், வந்துகுடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.
இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் – மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
( மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்)
காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை – தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
நாடற்றவர்களான மலையகத் தமிழர்
1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 – 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.இச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா – சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.
போராட்டமும், அரசியல் அங்கீகாரமும்
கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட – தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய “நாடற்றவர்களாக” கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் “நாடற்றவர்” என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.
இந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் – விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுடத்தது.
வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்
1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது, பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேர,காலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.
மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் கரிசணை
மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக்
கொண்டுள்ளது.
மாறிவரும் மலையக சமூகம்
பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும், கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.
https://www.bbc.com/tamil/sri-lanka-45620953
இலங்கையின் பொருளாதாரத்தில், தேயிலை, ரப்பர் தொழில் அதிக வலு சேர்த்துள்ளது. அதிகளவிலான அந்நியச்செலாவணியையும் பெற்றுத் தருகிறது.இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.