கிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா?
Published on November 8, 2018
கொழும்பில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வடக்கு மு.முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு பற்றிய பரபரப்பு மங்கிப்போய் விட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு முடிசூடப்பட்டு வடக்கின் முதலமைச்சர் ஆக்கப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதற்கான அறிவிப்பை அவர் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நல்லூரில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்கத்தாம்பாளத்தில் வைத்து வழங்கிய முதலமைச்சர் பதவியை முழுமையாக அனுபவித்து விட்டு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த இறுதி நாளில் தனது புதிய கட்சி பற்றி மு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்து உரையாற்றியிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் தின உரையில் எனதன்பிற்கு இனிய தமிழ் மக்களே என விழித்து உரையாற்றுவதை போல அதேபாணியில் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தவறு செய்து விட்டார்கள், துரோகம் செய்து விட்டார்கள் எனவே எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியை வடக்கு கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் தனது 32 நிமிட உரையில் வரிக்கு வரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதே தனது எறிகணையை வீசியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக இதுகாறும் நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வு பெறப் போயிருப்பேன். ஒரு கட்சியை உருவாக்க என்னை கட்டாயப்படுத்தி விட்டார்கள் கூட்டமைப்பினர்! எனது குறிக்கோள்கள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள். இல்லையேல் என்னை ஒதுக்கி விடுவார்கள். அது மக்களின் விருப்பம் என பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின லெவலுக்கு தனது உரையை நிகழ்த்தியிருந்தார்.
விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும், தமிழ் மக்கள் பேரவையினரும் வடக்கு மு.முதலமைச்சரை தமிழ் மக்களின் தேசியத்தலைவர் விக்னேஸ்வரன் தான் என்ற நிலையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் தேசியத்தலைவராக தன்னை கற்பனை செய்து கொண்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உருவெடுக்க முடியுமா? கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்பதே இன்றைய கேள்வியாக இருக்கிறது.
கிழக்கில் இன்று தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் குறிப்பிட்டளவு மக்கள் ஆதரவை பெற்றவர்களாக பிள்ளையான் குழுவினர் உள்ளனர்.
இந்நிலையில் விக்னேஸ்வரன் ஆரம்பித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சிக்கு கிழக்கு மக்கள் ஆதரவை வழங்குவார்களா? விக்னேஸ்வரனை கிழக்கு மக்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா?
மாவட்ட ரீதியிலான முதலாவது தேர்தல் நடத்தப்பட்ட 1989ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனை தொடர்ந்து 2001ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புமே கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சிகளாக விளங்கி வந்திருக்கின்றன. ( 2008ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது )
கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்ள முடியாது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததன் விளைவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது என்பதை பலரும் இன்று மறந்து விட்டார்கள்.
யாழ். மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் நூறாக பிரிந்து நின்று போட்டியிட்டாலும் அங்கு தெரிவு செய்யப்படுபவர்கள் தமிழராகத்தான் இருப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டால் என்ன ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டால் என்ன அல்லது ஈ.பி.டி.பியிலிருந்து தெரிவு செய்யப்பட்டால் என்ன அவர்கள் அனைவரும் தமிழர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் கிழக்கில் நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டால் தமிழர் அல்லாதவர்தான் தமிழர்களின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த சூத்திரத்தையும் இதனால் ஏற்படும் பாதிப்பையும் உணர்ந்துதான் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து செயற்பட வேண்டும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பலமான அரசியல் தலைமை ஒன்று இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே 2000ஆம் ஆண்டு தேர்தல் படிப்பினைகளை அடுத்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வித்து கிழக்கில் தான் விதைக்கப்பட்டது. எந்த அரசியல் கட்சிகளையும் சாராத நடுநிலையாளர்களாக செயற்பட்ட கிழக்கு பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் என சிலரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் விளைவாக 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி கொழும்பில் பிரபல வர்த்தகர் வடிவேற்கரசன் வீட்டில் நான்கு கட்சிகள் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர்.
கடந்த 17வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில கட்சிகள் பிரிந்து சென்றிருக்கின்றன. புதிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. பிளவுகள், பிரிவுகள் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே விளங்கி வருகிறது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தேவையும் கோரிக்கையும் கிழக்கில் தான் காணப்படுகிறது.
அண்மையில் கூட தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு முயற்சிகளை எடுத்திருந்தது. அந்த அமைப்பில் எந்த அரசியல் கட்சிகளையும் சாராத நடுநிலையாளர்கள் ஏற்பாட்டாளர்களாக இருந்திருந்தால் சில வேளை அது வெற்றியளித்திருக்கலாம்.
கிழக்கில் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் கிழக்கு தேர்தல்களில் விக்னேஸ்வரனின் கட்சியும் களமிறங்குவதற்கு கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதற்கு இல்லை.
விக்னேஸ்வரனின் ஆதரவு தளம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்தவர்களை கொண்ட மக்கள் கூட்டத்தை கொண்டதுதான். கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் அத்தகைய ஒரு தரப்பை இலக்கு வைத்தே செயற்பட்டு வருகிறது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பின் கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8வருடங்களாக கால் ஊன்ற முடியாதவர்களாகவே உள்ளனர்.
தமிழ் வாக்குகளை சிதறடிக்க போகும் விஷச்செடி ஒன்றை கொண்டு வந்து நாட்டுவதற்கு எந்த ஒரு கிழக்கு தமிழரும் தயாராக இருப்பார்கள் என நான் நம்பவில்லை.
எனவே விக்னேஸ்வரன் அவர்களை செங்கம்பளம் விரித்து கிழக்கு மக்கள் வரவேற்கப்போவதில்லை. கிழக்கில் அவருக்கான ஆதரவு தளம் என்பது பூச்சியம் தான்.
Leave a Reply
You must be logged in to post a comment.