தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்!

நக்கீரன்

முதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு காட்சி!

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ச்சுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.

துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ச்சுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

“என்ன கிருஷ்ணா…சூரியன் மறையும் நேரமாகிறதே! ஜயத்ரதனை எப்படிக் கொல்வத?”என்றான் அர்ச்சுனன்.

கிருஷ்ணர் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார், இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.

“சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ச்சுனன் தீக்குளித்து விடுவான்”என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.

உடனே அர்ச்சுனனைப் பார்த்து,

”அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் விழும்படி செய்” என்றார் கிருஷ்ணர்.

ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். கடுமையான தவம் செய்த பலனால் ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது ”உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்” என்றது.

இதைக்கேட்ட விருத்தட்சரன் தன் தவ வலிமையால் “யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்” என்று சாபமிட்டிருந்தான்.

இந்த விபரத்தை அர்ச்சுனனுக்கு சொல்லி ”உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால், உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு” என்றார் கிருஷ்ணர்.

அர்ச்சுனனும் அப்படியே செய்தான். அந்தச் சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால் மடியில் தலை விழுந்ததை அவர் கவனிக்கவில்லை.

பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால் விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

யார் என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மம் மீண்டும் வெல்லும்.

இந்தக் காட்சி பாரதக் கதையில் வருகிறது. குருசேத்திர பூமியில் துரியோதனது பக்கத்து சேனையும் பாண்டவர் தரப்புச் சேனையும் பயங்கரமாக – வாழ்வா சாவா என மோதிக் கொள்கிறார்கள். பதினெட்டு நாள் போரின் பின் பாண்டவர்கள் வெல்கிறார்கள்.

இந்தக் காட்சியில் வரும் கிருஷ்னன் இடத்தில் சுமந்திரனை வையுங்கள். அருச்சுனன் இடத்தில் கனகஈஸ்வரனை அமர்த்துங்கள். துரியோதனன் – கர்ணன் இடத்தில் முறையே சிறிசேனா மற்றும் ராஜபக்சாவை வையுங்கள்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து இரணில் விக்ரமசிங்கி நீக்கப்பட்டார். மகிந்த இராஜபக்ச சனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் நாடாளுமன்றத்தை சனாதிபதி 16 நாட்களுக்கு ஒத்திவைத்தார். பிரதமர் பதவிக்கு இரணில் மற்றும் மகிந்த இராஜபக்ச ஆகியோர் உரிமை கோரிவந்த நிலையில், மைத்திரி – மகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. எனினும், நாடாளுமன்றை உடனடியாக கூட்டவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. நாடாளுன்றத்தைக் கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை (நொவெம்பர் 09) ஜனாதிபதி ஒர் அரசாணையை வெளியிட்டிருந்தார்.

இப்போது சிறிசேனா – இராசபக்சா போட்ட சதித் திட்டங்கள் தவிடு பொடியாகியுள்ளன. கட்டக் கோவணமும் இல்லாமல் இருவரும் அம்மணமாகக் காடசியளிக்கிறார்கள். ரணில் மீண்டும் பிரதமராக வந்தால், வந்து 24 மணி நேரத்துக்குள் தனது பதவியை இராசினாமா செய்து விடுவதாக சிறிசேனா சூழ் உரைத்திருந்தது தெரிந்ததே.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக சிறிசேனா நாடாளுமன்றத்தையே கலைத்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தபோது அது ஐக்கிய தேசிய முன்னணியின் விசமத்தனமான பிரசாரம் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்தது. ஆனால் அடுத்த நாள் அதே ஊடகப் பிரிவு அதனைச் செய்தியாக வெளியிட்டது!

நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னரும் ஒரே நாளில் 9 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனங்களும் ஒரு வகை லஞ்சம்தான். தேர்தல் அனுகூலத்துக்காகவே இந்த நியமனங்கள் செய்யப்பட்டன.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்டிருந்த அரசாணையை இரத்து செய்யுமாறு கேட்டு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பொது அமைப்புகள் என உச்ச நீதிமன்றில் 17 மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (செவ்வாய்) காலை மனுக்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்தன. சட்டமாக அதிபர் தனது பக்க நியாயத்தை உச்ச நீதிமன்றில் கூறினார்.

இலங்கையின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவின் முகத்தை ஜனாதிபதிக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, 19 திருத்த சட்டத்திற்கு முரணாக – தனக்கிருக்கும் அதிகார வரம்பை மீறி .அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட முடியுமா? என தமிழ் அரசுக் கட்சிக்கு தோன்றி வாதாடிய சனாதிபதி சட்டத்தரணி ம.ஆ. சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அரசியல் யாப்பு உறுப்புரை 70.1 நாடாளுமன்றத்தை நாலரை ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம் என மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கு முதல் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இரண்டையும் தவிர வேறு எந்தக் காரணத்துக்கும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தங்களது இடைக்காலத் தீர்ப்பில் ஜனாதிபதி சிறிசேன நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த அரசாணை மற்றும் நாடாளுமன்றத்தைக் கலைத்து நவெம்பர் 09 அன்று வெளியிட்ட அரசாணை இரண்டையும் இடைநிறுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பாக சிறிசேனா பிரசுரித்த அரசாணையையும் இடை நிறுத்தியுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தல் மற்றும் தேர்தல் முன்னாயத்தங்கள் போன்றவற்றை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடை நிறுத்தல் டிசெம்பர் 7 மட்டும் நீடிக்கும். டிசெம்பர் 4,5,6 திகதிகளில் விசாரணை நடைபெறும்.

இதற்கிடையில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் நாளை (நொவெம்பர் 14) கூடவுள்ளது எனச் சபாநாயகர் அறிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூடி நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பார்கள். சபாநாயகர் மகிந்த இராசபக்சாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அல்லது ரணில் விக்கிரமசிங்கிக்கு ஆதரவான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க இருக்கிறார்.

இதற்கிடையில் இராசபக்சா தனது பிரதமர் பதவியை இராசினாமா செய்யக் கூடும் என்ற செய்தி உலா வருகிறது. அது உண்மையென்றால் நம்பிக்கையில்லாத தீர்மானத்துக்கு இடம் இல்லாமல் போகும். நாடு ஒக்டோபர் 26 இல் இருந்த நிலைமைக்குத் திரும்பும்.

இந்தத் துன்பியல் நாடகத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்தவர் ஜனாதிபதி சிறிசேனா. இந்தச் சிறி(ரி) சேனாவைப் பார்த்து நாட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஊர்க்குருவி உயர உயரப் பறந்தாலும் பிராந்து ஆக மாட்டாது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிறிசேனா மாறியுள்ளார்.

2015 சனவரி 09 இல் சிறிசேனா சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது நாடே அதனைக் கொண்டாடியது. சர்வாதிகாரிகளின் கைகளில் இருந்து நாடு மீட்கப்பட்டு விட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன் நாட்டின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது ஒரு சமூகப் புரட்சியாகவே பலரால் பார்க்கப்பட்டது. ஒரு ஆட்சித் தலைவருக்கு இருக்க வேண்டிய குணாம்சங்களான காட்சிக்கு எளியவர், நிறை சொல்லர், நீடுதோன்று இனியர் என அவரை எல்லோரும் போற்றினார்கள். எல்லா நாடுகளுமே அவரது தெரிவை வரவேற்றன. சனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றன.

சனாதிபதி சிறிசேனாவின் செல்வாக்கு முதல் இரண்டு ஆண்டுகள் வளர்பிறையாகவே இருந்தது. கடந்த ஓர் ஆண்டுகாலமாகவே அவரது செல்வாக்கு தேய்பிறையாக மாறியது.

ஊழலை ஒழிப்பேன், நாட்டின் வளங்களை கொள்ளையடித்தோரை சிறைக்கு அனுப்புவேன், நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவேன், புதிய உலகம் படைப்பேன் என்று சொன்னதெல்லாம் இன்று கானல் நீராகி விட்டன.

காலம் போகப் போக ஊழல்செய்தோரைப் பாதுகாத்தார், முப்படையினர் போர் வீரர்கள், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய மாவீரர்கள், எந்தவொரு போர் வீரனையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவோ தண்டனை அளிக்கவோ விடமாட்டேன் என்று சபதம் செய்தார். மிக அண்மையில் சமஷ்டி அரசியல் அமைப்பை அனுமதிக்க மாட்டேன், வட – கிழக்கு இணைவதை விட மாட்டேன், அவை நடக்க வேண்டும் என்றால் என்னைக் கொன்றுவிட்டுத்தான் எனது பிணத்தின் மீதுதான் நடக்க முடியும் என அறைகூவல் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்கிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்று தெரிந்தும் அவரை அந்தப் பதவியில் இருந்து சட்டத்துக்கு மாறாக அகற்றினார். தனது பரம அரசியல் எதிரியான மகிந்த இராசபக்சாவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை எனத் தெரிந்தும் அவரைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் இராசபக்சாவை, சீனா, பாகிஸ்தான் நீங்கலாக, எஞ்சிய உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தன. அதோடு நில்லாமல் நாட்டின் அரசியல் யாப்பைக் கடைப்பிடித்து சனநாயக விழுமியங்களை கைக்கொள்ளுமாறு வலியுறுத்தின. எச்சரிக்கை செய்தன. இதில் அமெரிக்கா மிகவும் காட்டமாக இருந்தது.

அமெரிக்கா இலங்கைக்கு வழங்க இருந்த அ.டொலர் 500 மில்லியன் கொடுப்பனவை நிறுத்தியள்ளது. அமெரிக்காவைப் பின்பற்றி யப்பான் நாடும் இலங்கைக்கு கொடுக்க இருந்த அ.டொலர் 1.4 பில்லியன் மென் கடனை உறையுள் போட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீச நாடாளுமன்றத்தை நவெம்பர் 16 மட்டும் ஒத்தி வைத்தார்.

இந்த ஒத்திவைப்பு பேரம் பேசவும் குதிரை வாணிகம் செய்யவே என்பது ஒரு பாமரனுக்கும் தெரியும். பக்கம் மாறுபவர்களுக்கு ரூபா 200 மில்லியன் – ரூபா 500 மில்லியன் விலை பேசப்பட்டதாக சாட்சாத் ஜனாதிபதி சிறிசேனாவே சொன்னார். இலஞ்சம் கொடுத்தவர்களை – வாங்கினவர்களைப் பொலீசைக் கொண்டு பிடிப்பதுதானே? ஏன் அதைச் செய்யவில்லை?

இந்தக் குதிரை வாணிகத்தில் சிறிசேனா – மகிந்தா ஐக்கிய தேசிய முன்னணி தரப்பில் இருந்து 7 பேரைத்தான் வாங்க முடிந்தது. ஆட்சி நீடிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அது இல்லை என்றவுடன் சட்டத்துக்கு முரணாக நாடாளுமன்றத்தையே சிறிசேனா கலைத்தார். அதாவது ஒரு பிழையில் இருந்து தப்ப இன்னொரு பிழை!

பிரதமராகப் பதவியேற்ற இராசபக்சா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி சிறிலங்கா பொதுசன முன்னணியில் சேர்ந்து கொண்டார். அதற்கு முதல் நாமல் விலகியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து மேலும் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுசன முன்னணியில் சேர்ந்து விட்டார்கள். சுதந்திரக் கட்சியின் கூடாரம் முற்றாகக் காலியாகிறது.

இன்று சிறிசேனாவும் அவரது சுதந்திரக் கட்சியும் அணிலை ஏறவிட்ட நாயைப் போல நிற்கின்றது. மொத்தத்தில் சனாதிபதி சிறிசேனாவின் படிமம் மீளவும் பழுதுபார்க்க முடியாத அடியை வாங்கியுள்ளது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி! (கடுவெளிச் சித்தர்)


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்!

 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply