பாரதிய வித்யாபவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் வசந்தம் – பாகம் 15 நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசனுடன், சிறப்பாக நடைபெற்றது.
உற்சாகமான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. வியாசர்பாடி, சிட்லபாக்கம், அரும்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் வந்திருந்தனர். பெங்களூரிலிருந்து இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கென்றே ஒரு தம்பதி வந்திருந்தனர்.
கவிஞரின் தலைமகன் காந்தி, சரளமாகத் தன் புகழ்பெற்ற தந்தையைப் பற்றிய ருசிகரமான தகவல்களை அவையோர் ரசிக்க ரசிக்க அள்ளி வழங்கினார். “உடம்பு வலித்தால் ஆத்தா என்பார். உள்ளம் வலித்தால் க்ருஷ்ண ப்ரபோ என்பார்,” என்று அவர் சொன்ன போது அரங்கமே நெகிழ்ந்தது.
நிகழ்ச்சிக்கு முன்பு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திரு காந்தி கண்ணதாசனுக்கு ‘’தேர்ந்த ரசிகர்” விருதை வழங்கிச் சிறப்பித்தது. அதனை, பாரதிய வித்யா பவன் இயக்குநர் திரு ராமசாமி அவர்கள் வழங்கி அவருக்குச் சிறப்புச் செய்தார்.
நான் ஆன்மிக மலரில் “தெய்வப் பிறவிகள்” என்னும் தலைப்பில் எழுதிய 27 கட்டுரைகளை தினமலர் நிறுவனத்தார் ஓர் அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். திரு ராமசாமி அவர்கள் அதை வெளியிட, பழம்பெரும் எழுத்தாளரும் என்னுடைய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருகை புரிபவருமான, 83 வயது திரு சங்கரி புத்திரனும், திரு காந்தி கண்ணதாசனும் பெற்றுக்கொண்டார்கள்.
பாரதிய வித்யா பவனின் ஒலி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பாடுவதற்கு மிகவும் தோதாக இருந்தது. அந்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சியை முடிக்க விடாமல் இன்னும் இன்னும் என்று கேட்ட இந்த ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
Leave a Reply
You must be logged in to post a comment.