யார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ இப்போது இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர்கள், இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்!

யார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ இப்போது இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர்கள், இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்!

நக்கீரன்

இலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018 இல் சனாதிபதி சிறிசேனா மிகவும் இரகசியமாக தனது முன்னாள் அரசியல் எதிரி மகிந்த இராசபக்சாவைப் பிரதமராக அறிவித்து சத்தியப் பிரமாணமும் செய்து வைத்தார்.  பிரதமர் விக்கிரமசிங்கியை அவரது பதவியில் இருந்து நீக்கி விட்டதாக சிறிசேனா கடித மூலம் அறிவித்தார். அரசியல் யாப்பு உறுப்புரை 42(4) இன் கீழ் நாட்டின் பிரதம அமைச்சரை நியமிக்கும் அதே நேரம் நீக்கவும் தனக்கு அதிகாரம் உண்டு என்று சிறிசேனா சொன்னார். அப்படியான அதிகாரம் சனாதிபதிக்கு இல்லையென்று ஐக்கிய தேசிய முன்னணி  (ஐதேமு) உட்பட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

யாப்பு உறுப்புரை 42(4) ஒரு பொதுத் தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரைப் பிரதம அமைச்சராக நியமிக்க வேண்டும் எனச் சொல்கிறது.  பழைய யாப்பில் பிரதமரை சனாதிபதி நீக்கலாம் என்ற அதிகாரம் 19ஏ சட்ட திருத்தத்தின் மூலம் அகற்றப்பட்டுவிட்டது.

யாப்பு உறுப்புரை 46 (2) இன் கீழ்  பிரதம அமைச்சர் (அ) சனாதிபதிக்கு முகவரியிட்டு அனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியைத் துறந்தாலொழிய, அல்லது   (ஆ) பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிந்தாலொழிய, அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளின் கீழ்  அமைச்சரவை தொடர்ந்தும்  பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும்.

யாப்பு உறுப்புரை  48 (2) பாராளுமன்றம், அரசாங்கக் கொள்கைக் கூற்றை அல்லது ஒதுக்கீடு சட்ட மூலத்தை  நிராகரித்தால் அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால்  அமைச்சரவை கலைக்கப்பட்டாதல் வேண்டுமென்பதுடன், சனாதிபதி 70 ஆம் உறுப்புரையின் கீழ் தமது தத்துவங்களை பிரயோகிக்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்தாலொழிய, 42,43,44 மற்றும் 45 ஆம் உறுப்புரைகளின்  நியதிகளின்படி  பிரதம அமைச்சர் ஒருவரையும், அமைச்சரவையின் உறுப்பினர்களல்லாத  அமைச்சர்களையும்  பிரதி அமைச்சர்களையும் நியமித்தல் வேண்டும்.

இந்த யாப்பு உறுப்புரைகள் பற்றி எனது முந்திய கட்டுரையில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்.Image result for Kuveni

இப்போது சிறிசேனா – இராசபக்ச தரப்பு சிங்கள மொழி  யாப்பு உறுப்புரை 42(4) சனாதிபதி பிரதம அமைச்சரை அகற்றலாம் (remove) என எழுதப்பட்டுள்ளது என வாதிடுகிறார்கள்.  ஒரு விவாதத்திற்கு அதனை ஏற்றுக் கொண்டாலும் சனாதிபதி சிறிசேனா பாராளுமன்றத்தின் நம்பிக்கை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரைப் பிரதம அமைச்சராக நியமிக்க வேண்டும் எனச் சொல்கிறது.  இராசபக்சா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஒக்தோபர் 26 இரவு  அவருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. இரணில்  விக்கிரமசிங்கி நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை இழக்கவும் இல்லை. எனவே இராசபக்சாவின் நியமனம் அரசியல் யாப்புக்கு முரணானது. சனநாயகப் படுகொலையாகும்.

இராசபச்சாவை  பிரதம அமைச்சராக  நியமித்த கையோடு சனாதிபதி சிறிசேனா நாடாளுமன்றத்தை  நொவெம்பர் 16 வரை ஒத்தி வைத்துள்ளார். இதன் நோக்கம் குதிரைப் பேரங்கள் மூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து எடுக்கவே என ஐதேமு குற்றம் சாட்டுகிறது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூபா 300 – ருபா 500 மில்லியன் வரை விலை பேசப்படுவது அம்பலமாகியுள்ளது. மேலும் இந்தப் பணம் அமெரிக்க டொலர்களில் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சிறிசேனா சில அதிரடி அறிவிப்புக்களை செய்து வருகிறார்.

    (1) விக்கிரமசிங்கி மீண்டும் பிரதம அமைச்சராக நியமனம் செய்யப்பட்டால்  நான் தனது பதவியில் ஒரு  மணித்தியாலம் கூட நீடிக்க மாட்டேன்.

    (2) சில குழுக்கள் வட கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றும்  இணைப்பாட்சியை உருவாக்க வேண்டும் என்றும் பிடிவாதம் செய்தன.  சமஷ்டி முறை அரசியல் முறைமை  மற்றும் வட கிழக்கு இணைப்பு ஆகிய  இரண்டும்  சாத்தியம் ஆகவேண்டும் என்றால் முதலில் என்னைக் கொல்லவேண்டும்.  நான் உயிரோடு இருக்குமட்டும்  இவை  சாத்தியமில்லை. Image result for Kuveni

President Maithripala Sirisena has said that he would neither let the North and East to be merged nor allow the country to be a federal state. He told the SLFP electoral organizers who met him in Colombo that he would have to be killed to get those two done.The President has told the organizers that some groups had been adamant about the merger of the North and East and the formation of a federal state.He has said he would not remain as President even for an hour if Ranil Wickremesinghe was reappointed the Prime Minister.

 சுதந்திரக் கட்சித் தொகுதி அமைப்பாளர்கள் மத்தியில் உரையாடியபோதே இவற்றை சிறிசேனா திருவாய் மலர்ந்துள்ளார். (http://www.dailymirror.lk/article/I-won-t-stay-even-one-hour-if-Ranil-comes-back-Prez-157733.html)

சனாதிபதி பதவியில் இருந்து  விலகிவிடுவதாகச் சிறிசேனா சொன்னாலும் அவர் உண்மையில் விலகுவாரா என்பது ஐமிச்சமே.  காரணம் அவர் ஒன்றும் அரிச்சந்திரன் இல்லை என்பது இப்போது அம்பலமாகி விட்டது.

அடுத்து  எல்லோரும் கேட்கிற கேள்வி ஒரு கதைக்கு சிறிசேனா பதவி துறந்தால் என்ன நடக்கும்?   சனாதிபதியாக நாடாளுமன்றம் ஒருவரை (அவர் சனாதிபதவிக்கு தெரிவு செய்வதற்கு வேண்டிய தகைமை இருக்க வேண்டும்) இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய வேண்டும். விழுந்த வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை அவர் பெற்றிருக்க வேண்டும்.  அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலம் மட்டுமே இருக்க முடியும். பிரதமராக இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படுவார்.

சளாதிபதி சிறிசேனா அவர்கள் அரசியலமைப்புச் சபையைத் தாபிப்பதற்கான தீர்மானம் பற்றி உரையாற்றுகையில் தெற்கில் உள்ள மக்கள் “பெடரல்” (federal) எனும் பதம் தொடர்பாக  அச்சமடைந்திருக்கும் வேளையில் வடக்கில் மக்கள் “யூனிற்றரி ( unitary ) எனும் பதம் தொடர்பிலும் அச்சமடைந்திருந்தனர். அரசியலமைப்பானது மக்கள் அச்சமடைய வேண்டிய ஆவணமொன்று அல்ல என்றார். (வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கை)

இதுவரை காலமும் “சமஷ்டி என்றால் சிங்களவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் பயப்படுகிறார்கள். ஒரு நாட்டின் யாப்பு மக்கள் கண்டு பயப்படுவதுபோல் இருக்கக் கூடாது” என்று சொன்ன சனாதிபதி சமஷ்டி முறை அரசியல், வட – கிழக்கு இணைப்பு  இரண்டையும் தான் உயிரோடு இருக்குமட்டும் விடப் போவதில்லை எனச் சூளுரைத்திருப்பது அவரது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதைத்தான் ”நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடிப்பார் ஞானத்தங்கமே” என்று கண்ணதாசன் பாடினார். வள்ளலாரும் ”ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”  என்று சொன்னார்.

இதற்கிடையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கி நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா  நொவெம்பர் 05 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சனாதிபி சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமராக இரணில் விக்கிரமசிங்கி நீடிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும்  வரை முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையைத் தாங்கள் கண்டிப்பதாக சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இப்போது நாடாளுமன்றத்தை இரண்டு நாள் முந்தி நொவெம்பர் 14 ஆம் திகதி கூட்டப்படும் என  சனாதிபதி அறிவித்துள்ளார்.  இதனால்  மும்மரமாக நடைபெறும் குதிரை பேரத்துக்கு மேலும் 9 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிசேனாவின் இன்றைய  நிலைப்பாடு  ஏமாற்றம் தருவதாக இருந்தாலும் 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் அவர் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை,   நல்லாட்சி, மனித உரிமைகள் போன்ற விழுமியங்களைத் தான்  கடைப்பிடிக்கப் போவதாகச் சொன்னவர்.  சொன்னபடி இனங்களுக்கு இடையே நல்லிணக்கம்,  தமிழில்  தேசியப் பண், போர் வெற்றி நாள்  கொண்டாடுவதற்குப் பதில் அதனை நினைவு  நாள்  போன்ற சில அரசியல் மாற்றங்களைச் செய்தவர்.

சித்தாந்த அடிப்படையில் சிறிசேனா – இராசபக்சா  இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்த்ததற்கு சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனை,  இந்திய எதிர்ப்புக் கோட்பாடு  போன்றவையே காரணம். மறுபுறம் விக்கிரமசிங்கி ஒப்பீட்டளவில் ஒரு சனநாயகவாதி என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரைப் பார்த்து யாரும் பயப்படுவதில்லை. சனநாயகத்துக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. 

மேலே குறிப்பிட்டவாறு தன்முயற்சியில் சற்றும் சலிப்படையாத விக்கிரமாதித்தன் முருக்க மரத்தில் இருந்த வேதாளத்தை இறக்கியது போல  சிறிசேனா – இராசபக்சா தரப்பு  ஆளும் கட்சியில் இருந்து உறுப்பினர்களை உருவுவதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். ஐதேமு நாடாளுமன்ற உறுப்பினர் பாலித இரங்கே பண்டாரவுக்கு ரூபா 500 மில்லியன் (அ.டொலர் 2.8 மில்லியன்) ஒரு பவுத்த விகாரையில் வைத்துத் தருவதாகப் பேரம் பேசப்பட்டது.  இன்று (நொவம்பர் 02) மாலையே  அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம் என அவருக்குச்  சொல்லப்பட்டது.

 ஐதேமு இல் இருந்து இதுவரை 7 பேர் வேலி பாய்ந்துள்ளார்கள்.  ஒருவர் அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் தாவியுள்ளார். ததேகூ இல் இருந்து வியாழேந்திரன் விலை போய்விட்டார். இதனால் ஐதேக இன் பலம் 101 ஆகவும் சிமசுகூ இன் பலம் 95 இல் இருந்து 101 ஆகவும்  மாறியிருக்கிறது. பதினான்கு உறுப்பினர்களைக் கொண்ட ததேகூ இன் வாக்குகளே ஐதேமு க்கு சாதகமாக இருக்கப் போகிறது.

வியாழேந்திரனது பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் உற்று நோக்கி வந்தவர்களுக்கு அவர் அரசாங்கப் பக்கம் பாய்ந்து அரை அமைச்சரானது  வியப்பாக இருக்காது. அவரோடு  நெருங்கிப் பழகியவர்களுக்கு இந்த உண்மை  தெரியும்.  இன்று வாய்ப்பு வந்ததும் அதைப் பயன்படுத்திவிட்டார்.  சித்தார்த்தனுக்கு இது தெரியாமல் இருந்தது ஆச்சரியமே!  தனது தொகுதியை அபிவிருத்தி செய்ய  அரசாங்கத்தோடு சேருவதே ஒரே வழி என நீண்ட காலமாகச்  சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவர் பரம்பரை ஆண்டியல்ல. பஞ்சத்து ஆண்டி. 2015 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மட்டுமே அவர் புளட் அமைப்பில் சேர்ந்தார்.

அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை.  நேற்று  மச்சான்மார்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாக மாறிவிடுவார்கள்.  இன்று மச்சான்மார்களாக  இருந்தவர்கள் நாளை எதிரிகளாக மாறிவிடுவார்கள். இதற்கு சிறிசேனா – இராசபக்சா சோடி நல்ல எடுத்துக்காட்டு. இவர்கள் நிறம் மாறும் பச்சோந்திகள்.

கொழும்பில் நடந்த ஐமசுகூ இன் கூட்டத்தில்  பேசிய இராசபக்சா தன்னையும் சிறிசேனாவையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது எனச் சொன்னார். அடுத்த சனாதிபதி தேர்தலில் சிறிசேனா ஐமசுகூ இன் சார்பாக நிறுத்தப்படுவார் என்பது தெரிந்ததே. சனாதிபதி பதவியில் ஒருமுறைதான் இருப்பேன் என்று  சிறிசேனா சொன்னது பழங்கதையாகிவிட்டது. அரசியலில், பதவி, அதிகாரம், புகழ் என்பன போதை மருந்து போன்றது. சாப்பிடச் சாப்பிட மேலும் சாப்பிடச் சொல்லும்.

யார் போட்ட சாபமோ,  எவர் செய்த பாவமோ இப்போது இலங்கையில் இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர்கள், இரண்டிரண்டு அமைச்சர்கள்,  இரண்டிரண்டு இராசாங்க அமைச்சர்கள், இரண்டிரண்டு அமைச்சுச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.   எல்லாமே இரண்டு மயம்!


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply