கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே!

கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே!

ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது

1. கந்தபுராணமும் – இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும்.
2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட் டவையேயாகும்.
3. இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுத்துவதைக் கருத்தாய்க் கொண்டு ஆரியக் கடவுள் களைப் பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
4. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்து கற்பிக்கப்பட்டவையாகும்.
5. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும், அசுரர்கள் இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த் தியும், இழித்தும் காட்டப்பட்டவைகளாகும் என்பதோடு, இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.
6. இரண்டு கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோவில் அர்ச்சகர்களால், அதாவது கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளால் பாடப்பட்டவை யாகும். கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரி என்னும் அர்ச்சக ராலும், இராமாயணம் கம்பன் என்னும் பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7. இரண்டு கதை உற்பத்திக்கும் காட்டப்பட்டக் காரணங் கள் – அசுரர்களின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்களின் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்  கொண்டவைகளாகும்.
8. இராமாயணக் கதைக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்தபுராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்ரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
9. இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவெருக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கவுசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப்ரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும்,
கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங் கையில் சேர்ந்து அங்கு பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதை பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான்; கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
10. இவ்விரண்டு கதாநாயகர்களின் (இராமன் – கந்தன்) மனைவிமார்களும் தங்கள் பிறப்பை அறிய முடியாதவர்கள்.
அதாவது, இராமனின் மனைவி சீதை யாரோ பெற்று பூமியில் போடப்பட்டு, புழுதியில் மறைந்துகிடந்து ஓர் அன்னிய அரசனால் கண்டெடுத்து வந்து வளர்க்கப்பட்டவள்.
கந்தன் மனைவி வள்ளியும் யாராலோ ஒரு மானிடம் ஒரு ரிஷியால் சினை ஆகி பெறப்பட்டு, காட்டில் ஒரு குழியில் கிடக்கப்பட்டு, ஒரு வேட அரசனால் கண்டெடுத்துக் கொண்டு போய் வளர்க்கப்பட்டவள்.
11. இராமனுக்கு சீதை (விஸ்வாமித்திரன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள். கந்தனுக்கு வள்ளி  (நாரதன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள்.
12. இராமனுக்கு எதிரி (இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி; தேவர்களை அடக்கி ஆண்டவன். கந்தனுக்கு எதிரி (சூரபத்மன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன்.
13. இராமனுக்கு ஆயுதம் வில். கந்தனுக்கு ஆயுதம் வேல்.
14. இராவணனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன். மாபெரும் வரப்பிரசாதி.
சூரபத்மனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன், மாபெரும் வரப்பிரசாதி.
15. இராமனுக்கு லட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி வீரவாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்கள்.
16. இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபத்மனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
17. இராவணனுக்கு இந்திர சித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்; இவன் மகாபலசாலி. வீரன்.
சூரபத்மனுக்கு பானுகோபன் என்கின்ற ஒரு மகன். இவன் மகா பலசாலி.
18. இராவணனுக்கு விரோதமாக இராவணன் தம்பி விபீஷணன் என்பவன் இருந்து கொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை விடும் படிக்கூறி, எதிரிக்குக் காட்டிக் கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
சூரபத்மனுக்கு விரோதமாக சூரபத்மன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரியைப் புகழ்ந்து பேசி சயந்தனை சிறை விடும்படிக் கூறி, எதிரிக்கு அனுகூலமாக நாட்டை விட்டுப் போய் விடுகிறான்.
19. இராவணன் மகன் இந்திர சித்து இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன் கந்தனைப் புகழ்கிறான்.
20. இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை அழித்துவிட்டு வருகிறான்.
சூரபத்மனிடம் தூதுவனாக வீரவாகு சென்று வீர மகேந்திரத்தைஅழித்து விட்டு வருகிறான்.
21. இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழேபோட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
22. சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்க்க முயற்சிக்கிறாள்.
அசுமுகி இந்திராணியை சூரபத்மனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
23. சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
அசுமுகி கை அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
24. அதற்கு ஆக கோபப்பட்டு இராவணன், இராமனுடன் சண்டைக்குப் போகிறான்.
அதற்கு ஆக வேண்டியே சூரபத்மன் ஆத்திரப்பட்டு, கந்தனுடன் சண்டைக்குப் போகிறான்.
25. இராமனுக்கு சுக்கிரீவன் அனுமார், அங்கதன், நீலன், சாம்புவந்தன் முதலியவர்கள் உதவி செய்கிறார்கள்.
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
இராமனை மூலபலம் எதிர்க்கிறது என்றும், சூரனுக்கு ஓர் அரக்கி வயிற்றில் வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
26. சூர்ப்பனகை உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தாள். அசுமுகி உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
27. சூர்ப்பனகை, வெள்ளிமாமலையை அசைத்த மன்னவா! என் மூக்கறுத்தப் பகைவனை நோக்காயா? என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
அசுமுகி, கதிரவனை சிறை செய்த மன்னாவோ! யான் பட்ட குறையினை அறியாயோ? என்று சூரனிடம் அழுதாள்.
28. சூர்ப்பனகை, யான் அடைந்த அவமானத்திற்குப் பழி வாங்க வாராயா?, என்று அழுதாள்.
அசுமுகிசூரனிடம், பழி பூண்டு நின்றாயே, என்று அழுதாள்.
29. சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணன் சபை புகுந்தாள்.
அசுமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள்.
30. இராவணன் கோபம் கொண்டு வருந்தி சீதையை அடையக் கருதினான், அடைய துணிந்து விட்டான்.
சூரன் கோபம் கொண்டு மனம் கொதித்து, இந்திராணியை அடையக் கருதினான்.
31. இராவணன் சீதையைத் தூக்கி வந்து சிறை வைத்தான்.
சூரபத்மன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும், சுற்றத்தார்களையும் சிறை செய்தான்.
32. சீதை சிறையில் வாடி வதங்கி அழுதாள். சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
33. சீதை சிறையில், இராமன் வந்து விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.
சயந்தன் கடவுள் வந்து தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
34. சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேந்திரத்திற்கு வேற்படை வந்தது.
35. இராம தூதனாக அனுமான் இலங்கை வந்தான்.
முருக தூதனாக வீரவாகு வீரமகேந்திரம் வந்தான்.
36. இலங்கை வீரர்களாலும், சூரர்களாலும் கனல் கக்கும் கண்ணர்களாலும் நிறைந்திருந்தது. இலங்கையில் பசி இல்லை. ஏழை இல்லை. பிணி இல்லை. கவலை இல்லை.
வீரமகேந்திரத்தில் உள்ளவர் வரத்தினில் பெரியர். வன்மையில் பெரியர். உரத்தினில் பெரியர். அங்கு, வீரமகேந்திரத்தில் நலிந்து, மெலிந்து, நரை, திரை கொண்டு, பசி கொண்டவர் இல்லை.
37. இலங்கையில் வானவர் பணிந்து பணி செய்தனர். காவல் காத்தனர். பணியாளாய் நின்றனர். இதை அனுமான் பார்த்தான்.
வீரமகேந்திரத்தில் வானவன் வணங்கி ஏவல் புரிந்தனர். மீன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
38. இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து போற்றினான்.
சூரனின் தவத்தின் பெருமையை வீரவாகு வியந்து புகழ்ந்தான்.
39. அனுமான், சீதை சிறை இருந்த அசோகவனம் சென்று சீதையைக் கண்டு அவள் சோகத்தைத் தேற்றினான்.
வீரவாகு, சயந்தன் சிறை இருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
40. அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட் டான்.
வீரவாகு சூரன் முன் சென்றான்.
41. இங்கே இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
42. அனுமான், இராவணனிடம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளே
இராமனாய்த் தோன்றினான் என்கிறான்.
வீரவாகு தன்னிகரில்லா இறைவனே முருகனாகத் தோன்றினான் என்று சொல்லுகிறான்.
43. அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரவாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
44. அனுமான், உன் செல்வம் சிதையாமல், உன் வாழ்வு குலையாமல் இருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிடு என்று இராவணனுக்குச் சொன்னான்.
வீரவாகு, நின் சேனையோடு நீ நெடிது வாழ வேண்டு மானால் வானவரைச்
சிறையினின்று விடுக, ஆறுமுகன் அடிபணிக என்று சூரனுக்குச் சொன்னான்.
45. அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரவாகு மகேந்திர நகரை அழித்தான்.
46. அனுமான் அரக்க வீரரை அழித்த பின் இராமனிடம் சென்றான்.
வீரவாகு அசுரன் சேனையைச் சிதைத்த பின் அதைவிட்டுச் சென்றான்.
47. இராவணன் மந்திரிசபை கூட்டினான். அனுமான் செய்ததை எடுத்துரைத்து வருந்தினான்.
சூரன் மந்திரிசபை கூட்டினான். வீரவாகுவின் ஜெயத்தை மந்திரிகளுக்குச் சொல்லி வருந்தினான்.
48. இராவணன் சேனைக் காவலன் மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான கால சித்தனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம் பேசினார்கள்.
49. இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்ந்து ஊக்கம் கொள்கிறான்.
50. இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து இராவணனுக்குப் புத்தி கூறுகிறான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புத்தி கூறுகிறான்.
51. இராமன் கடவுள் என்றும், நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு, என்றும் விபீஷணன் கூறுகிறான்.
சிங்கமுகன், முருகன் ஆதிபரம் பொருளென்றும், நீ வாழ வேண்டுமாயின் வானவரை விட்டு விடு, என்றும் சொல்லுகிறான்.
52. இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கடிகிறான்.
சூரன், எதிரியைப் புகழ்ந்த சிங்கமுகனை வெறுக்கிறான்.
53. இராவணன், இராமனை ஏளனம் பேசி இழிவுபடுத்திச் சொல்லுகிறான்.
சூரன், சுப்ரமணியனை ஏளனம் பேசி அலட்சியமாய்க் கருதிச் சொல்லுகிறான்.
54. இராவணன், விபீஷணன்மீது குற்றம்சாட்டித் திட்டு கிறான்.
சூரன், வீரவாகுவின் மீது குற்றம் சாட்டித் திட்டுகிறான்.
55. விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
56. போர் நடக்கிறது. முதல் நாள் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
போர் நடக்கிறது. முதல் நாள் போரில் சூரன் மகன் பானுகோபன் தோற்று மீளுகிறான்.
57. இராமன் இராவணனை, இன்று போய் நாளை வா, என்கிறான்.
முருகன் பானுகோபனை, இன்று உன்னைப் போக விடுகிறேன் என்கிறான்.
58. இராமன் இராவணனை, இப்பொழுதாவது சீதையை விடுத்துப் பிழைத்துப் போக, என்று எச்சரிக்கிறான்.
முருகன் இரண்டாம் நாள் போரில் சூரனை, இப்பொழுதாவது வானவரை விடுத்தால், உயிர் வாழ்வாய்; இல்லையெனில் மடிவாய் என்று எச்சரிக்கிறான்.
59. இராவணன், மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
60. இந்திரசித்தன் போருக்குச் சென்று தோல்வி அடைந்து  தந்தையிடம் வந்து, இராமனை வெல்ல முடியாது. சீதையை விட்டுவிடு; உயிர் வாழ்வோம் என்கிறான்.
பானுகோபன் போரில் தோற்று, தந்தை இடம் வந்து, வானவரை விட்டு விட; உயிர் வாழலாம் என்கிறான்.
61. இராவணன் மகன்மீது கோபம் கொண்டு, உயிரை விடுவேனே ஒழிய சீதையை விட முடியாது. மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதல்ல, என்கிறான்.
சூரன் மகன்மீது கோபித்து, உயிர் விட்டாலும் விடுவேன்; வானவரை விட்டு வசைக்காளாகி வாழமாட்டேன், என்கிறான்.
62. இராவணன் மகன் இந்திரசித்தன் கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று கருதி, இலக்குவனோடு போர் தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
63. இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
64. அவன் மனைவி மண்டோதரி புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இவன் மனைவி பதுமை புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இப்படியாக இன்னும் பல பொருத்தங்கள் காணலாகுகின் றன. ஆகவே, கந்தபுராணத்தைப் பார்த்து நகல்படுத்திய கதையே இராமாயணம்.
About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply