மனம் போன போக்கில் மழை

மனம் போன போக்கில்

மழை

  • In: Ilayaraja | Music | Rain | Tamil | Uncategorized
  • சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும்.

போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU). அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் இன்றைக்கு இன்னொரு மூக்கணாங்கயிறு : ‘பூங்கதவே, தாழ் திறவாய்!’.

‘நிழல்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே அற்புதமானவைதாம். ஆனால் இந்தப் பாட்டுக்கு ஒரு விசேஷம், இதில் மெட்டைவிட இசை ஒரு படி மேலே நிற்கும். அதாவது, சுமார் 250 விநாடிகள் ஒலிக்கும் பாடலில் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என பாடகர்கள் பாடுகிற நேரம் பாதிக்கும் குறைவு, அதிலும் சரணம் மிக மிகச் சிறிது, ஐந்தே வரிகள்தாம், மீதி நேரத்தையெல்லாம் வாத்திய இசை நிரப்பியிருக்கிறது.

அதிலும் ராஜா ஒரு விசேஷம் செய்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இரண்டு இசைக் கருவிகள் இணைந்து டூயட் பாடுவதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். வயலின், வீணை, அப்புறம் வீணை, புல்லாங்குழல், அப்புறம் நாதஸ்வரமும் வயலினும், அப்புறம் வயலினும் மணியோசையும் என்று ஜோடி ஜோடியாக ராணுவ அணிவகுப்புபோல் நிறுத்திவைத்திருப்பார். ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது ஏகப்பட்ட கருவிகள் ஒரே நேரத்தில் இணைந்து இசைத்த ஒரு Rich Orchestration தருகிற திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும்.

பாடலின் தொடக்கம் மழை நாளை நினைவுபடுத்துகிறது. பலமான சூறைக் காற்றில் தொடங்கிப் பல திசைகளில் இருந்து மெல்லச் சுழன்று சுழன்று வலுப்பெற்றுக்கொண்டு கடைசியில் மின்னல், இடி, பெரு மழையாகப் பொழியும்.

’ஆல்பம்’ என்ற படத்தில் ‘காதல் வானொலி’ என்று எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு பாடல் உண்டு. அதில் நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வரி:

மழை நின்று போனாலும், மரக்கிளை தூறுதே

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் உணர்வு ‘பூங்கதவே’யின் ஆரம்ப இசையிலும் உண்டு – பிரமாண்டமான பெருமழைக்கான ஒலி முடிந்த மறுவிநாடி, மழை நின்றபின் மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளியின் தூறல்போல மென்மையான ஒரு சின்ன வீணை ஒலி,  அதோடு சேர்ந்து டூயட் பாடும் புல்லாங்குழல், பின்னர் நைஸாகப் புல்லாங்குழலைப் பின்னே தள்ளிவிட்டு வயலினோடு சேர்ந்துகொள்ளும் வீணை… கடைசியாகப் பாடகரின் (தீபன் சக்கரவர்த்தி) குரல் ஒலிக்கும்போது, இதற்கே முக்கால் நிமிஷம் தீர்ந்துவிட்டது!

இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், பாடகர் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன், அதுவரை அதகளம் பண்ணிக்கொண்டிருந்த இசைக் கருவிகள் காணாமல் போய்விடுகின்றன. பின்னணியில் பெரும்பாலும் தாளம்மட்டும்தான். இதை நாம் உணர்வதற்குள் (முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிடுகிறது. மீண்டும் இசையின் ஆட்சி.

இந்த இடையிசையும் சரியாக முக்கால் நிமிடத்துக்கு நீடிக்கிறது. கல்யாண நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து பாரம்பரியமான கெட்டிமேளத்தில் முடிய, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மெட்டில் பெண் குரல் (உமா ரமணன்) அறிமுகமாகிறது.

சாதாரணமாக இதுபோன்ற ஓர் இசையையும் மெட்டையும் வித்தியாசம் தெரியாமல் தைப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் அசந்தாலும் இரண்டும் தனித்தனியே உறுத்திக்கொண்டு நிற்கும்.

ராஜா இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. உதாரணமாக, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலின் முன்னிசையைக் கேளுங்கள், அந்த இசை முடியப்போகும் நேரம், பல்லவியின் முதல் வரி ஒலிக்கவேண்டும், ஆனால் இசைக்கும் அந்த வரிக்கும் பொருந்தாதே என்று நமக்குத் தோன்றும், சரியாகக் கடைசி விநாடிகளில் ஒரு சின்ன மணி ஒலியைச் சேர்த்து அதை அட்டகாசமாகப் பல்லவியில் பொருத்திவிடுவார் ராஜா.

ஆனால் இந்தப் பாடலில் அதுபோன்ற ஜிம்மிக்ஸுக்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. திருமணத்தின் Climax ஆகிய கெட்டிமேள ஒலியை அப்படியே நிறுத்திவிட்டு அரை விநாடி அமைதிக்குப்பிறகுதான் ‘நீரோட்டம்’ என்று சரணத்தைத் தொடங்குகிறார் ராஜா. அடுத்த காட்சி என்ன (முதலிரவு? ஹனிமூன்?) என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

சரணத்தில் இன்னொரு விசேஷம், மெட்டு நின்று திரும்புகிற எல்லா வார்த்தைகளும் ‘ம்’ என முடியும் : நீரோட்டம், போலோடும், ஊர்கோலம், ஆனந்தம், பூவாரம், தெய்வம், வாழ்த்தும், ராகம், திருத்தேகம், எனக்காகும், உள்ளம், பொன்னாரம், பூவாழை (இது ஒன்றுமட்டும் odd man out), ஆடும், தோரணம், எங்கெங்கும், சூடும், அந்நேரம், கீதம், இந்த ஒவ்வொரு ‘ம்’க்கும் மெட்டு எப்படி வளைந்து நெளிந்து குழைந்து ஓடுகிறது என்று கேட்டால்தான் புரியும்.

இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவராக விரும்பி இத்தனை ‘ம்’களைப் போட்டாரா, அல்லது ராஜாவின் ஐடியாவா என்பதும் தெரியவில்லை, ஆனால் பாடல் வரிகளில் இத்தனை ‘ம்’ இருப்பதால் ராஜா அந்த ‘ம்ம்ம்ம்ம்ம்’மையே ஒரு தனித்துவமான கோரஸாக மாற்றிக்கோண்டிருக்கிறார், உண்மையில் இந்தப் பாடலை அழகாக முடித்துவைப்பதும் அந்த ‘ம்ம்ம்ம்ம்’கள்தான்.

‘ம்’களில்மட்டுமில்லை, இந்தப் பாடலின் சரணம்முழுவதுமே ஏகப்பட்ட twists and turns. உதாரணமாக முதல் சரணத்தில் இங்கே ஒற்றை மேற்கோள்குறி உள்ள இடங்களையெல்லாம் கவனித்துக் கேளுங்கள், பாடல் வரிகளையும் தாண்டிய ஒரு நீட்சியும் நடுக்கமும் தெரியும், அது கவனமாக யோசித்துச் செய்யப்பட்டதாகதான் இருக்கவேண்டும்: நீ’ரோட்டம், ஆ’சைக் கனவுகள், ஊ’ர்கோலம், ஆ’னந்தம், பூ’பா’ரம், கா’தல், கா’தலில், ஊ’றிய.

ஐந்தே வரிகளில் (மீண்டும் முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிட, எட்டே விநாடிகளில் பல்லவியைச் சுருக்கமாகத் தொட்டுவிட்டு வாத்திய இசைக்குப் போய்விடுகிறார் ராஜா. மீண்டும் சுமார் முக்கால் நிமிடத்துக்கு இன்னொரு விஸ்தாரமான இடையிசை. அதைத் தொடர்ந்து மழைத் தண்ணீரினால் தோன்றிய சிற்றோடைபோல் வளைந்து நெளிந்து ஓடும் சரணம்.

இந்தப் பாடல் தருகிற அனுபவத்தை எத்தனை விளக்கமாக எழுதினாலும் போதாது, கேட்கத்தான் வேண்டும், இதுமாதிரி நேரங்களில்தான் இசையின்முன்னால் மொழி எப்பேர்ப்பட்ட ஏழை என்பது புரியும்.

இத்தனை அழகான பாட்டுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு இல்லாமல் எப்படி? அதுவும் உண்டு : பாடலின் முதல் வரி ‘பூங்கதவே, தாழ் திறவாய்’. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்.

‘தாழ்’ என்பது ‘தாழ்ப்பாள்’ என்பதன் சுருக்கம். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று திருக்குறளில் வரும்.

‘தாள்’ என்றால் பாதம். நாம் பாதத்தால் தட்டுவதால்தான் ‘தாளம்’ என்று பெயர் வந்தது எனச் சொல்வார்கள். ‘தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்’ என்று குழந்தைக் கண்ணனைப் பாடுவார் பெரியாழ்வார். அதாவது, பாதத்தை நீட்டிச் சக்கரத்தை உதைத்து அசுரர்களைக் கொன்றானாம்!

ஆக, இந்தப் பாடலில் ‘தாழ் திறவாய்’ என்பதுதான் சரி. யாரிடமாவது ‘தாள் திறவாய்’ என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள், அதற்கு விவகாரமான அர்த்தம் Smile

Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/


About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply