“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்

நக்கீரன்

(திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீடு கடந்த ஒக்தோபர் 9 ஆம் நாள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த நூலுக்கு நக்கீரன் எழுதிய ஆய்வுரையை கீழே படிக்கலாம்.)

தமிழர்கள் தங்கள் வரலாற்றை முறையாக, கோர்வையாக, ஆண்டு வாரியாக எழுதி வைக்கவில்லை. கிரேக்க இலக்கியங்களுக்குச் சமமாக அல்லது அதனைவிடச் சிறந்த இலக்கியங்களைத் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ளார்கள். அதனால் தமிழ்மொழி செம்மொழி என்ற தகைமையையும் பெற்றுள்ளது. ஆனால் கிரேக்கர், உரோமர் போல் யாரும் தமிழர் வரலாற்றை எழுதி வைக்கவில்லை. புலவர்களும் நினைக்கவில்லை. பாராண்ட அரசர்களும் முயற்சிக்கவில்லை. இந்தக் குறைபாடு தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் பொருந்தும்.

இலங்கைத் தீவின் வரலாறு கிமு 483 இல் லாலா நாட்டிலிருந்து (கலிங்கம் அல்லது வங்காளம்) வந்து குடியேறிய விஜயனும் அவனது 700 தோழர்களோடு தொடங்குகிறது என்பது இன்றைய சிங்கள – பவத்த தேசியவாதிகளது நிலைப்பாடாகும். இதனால் தமிழர்களை வந்தேறு குடிகள், படையெடுப்பாளர்கள் (invadors) புன்னெறியாளர்கள் (false believers) சிங்களவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் எனச் சித்திரிக்கிறார்கள். இலங்கைத்தீவு விஜயனின் பரம்பரையினரான சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்கிறார்கள்.

ஆனால் மகாவம்சம் சொல்லுகிற கதையின் படி விஜயனது பரம்பரை 5 தலைமுறையோடு மறைந்து போகிறது. அதன் பின்னர் நாக வம்சத்தை சேர்ந்த அரசர்களே கிபி 9 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.

அதுமட்டும் அல்ல. மகாவம்சம் சொல்லுகிற கதையின் படியே விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கைத் தீவில் இயக்கர், நாகர் கொற்றமும் கொடியும் முடியும் வைத்து ஆட்சி செலுத்தியுள்ளார்கள்.

நாகராசன் என்னும் மன்னன் விஜயன் என்பவனுக்கு முன்பே நாகநாடான நாகதீபத்தை ஆள்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர். தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு மணமுடித்து அவளுக்குச் சீதனமாகத் தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்குக் குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான். நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்குப் பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான். இப்போது நாகதீபத்தின் அரசனான மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தைப் பெறப் பெரும் போர் தொடுக்கிறான். இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கிப் போருக்குக் காரணமான மணியாசனத்தில் புத்தரையே அமரச்செய்தனர். இதே கதையை பவுத்த மத காப்பியமான மணிமேகலையும் கூறுகிறது.

ஆனால் புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. மகாவம்சம் சைவ – வைணவ புராணங்கள் போல் பவுத்த மக்களின் மன எழுச்சிக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்துக்கும் எழுதப்பட்டதாக அதன் ஆசிரியர் மகாநாம தேரர் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சொல்கிறார். (Here ends the sixth chapter, called The Coming of Vijay of the Mahavamsa, compiled for the serene joy and emotion of the pious.” )

மகாவம்சம் இயக்கர், நாகர்களை நாகரிகமற்றவர்களாக – அரை மனிதர்களாகச் – சித்திரித்த போதும் அவர்களுக்கு நெல் விளைவிக்கவும் பருத்தியில் ஆடை நெய்யவும் தெரிந்திருந்தது.

விஜயன் குவேனியை முதல் முறை சந்தித்த போது அவள் ஒரு மரத்தடியில் நூல் நூர்த்தபடி அமர்ந்திருக்கிறாள். மகாவம்சம் குவேனியை இயக்கர் குல அரசி என அழைக்கிறது. இலங்கை வேந்தன் இராவணனனும் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என்பது நினைவு கூரத்தக்கது.

விஜயன் தனது 700 தோழர்களும் பசியாக இருக்கிறார்கள் என்றான். அவள் வணிகர்களின் கப்பலில் இருந்த அரிசி மற்றும் உணவுப் பொருள்களைக் காட்டினாள். விஜயனின் தோழர்கள் சோறு மற்றும் சுவையான மணமிக்க பதார்த்தங்களை செய்து முதலில் விஜயனுக்குக் கொடுத்துவிட்டு மிகுதியைத் தாங்களும் உண்டு பசியாறினர். (மகாவம்சம் – அத்தியாயம் 7)

முன்னாள் சனாதிபதி டி.பி. விஜயதுங்க தமிழர்களையும் சிங்களவர்களையும் மரத்தில் (சிங்களவர்கள்) படரும் கொடிக்கு (தமிழர்கள்) ஒப்பிட்டார். ஒரு வெளிநாட்டு செய்தியாளருக்கு செவ்வி கொடுத்த சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் அல்லர் என்றார்.(http://www.sangam.org/taraki/articles/2006/11-29_Kumaratunge.php?uid=2092) இந்த (ஸ்ரீலங்கா) நாட்டைச் சேராதவர்கள் எப்படித் தனிநாடு கேட்க முடியும்? என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் (செப்தெம்பர், 1998) கூறியிருந்தார். இந்தச் செவ்வி ரூபவாகினி தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பப் பட்டது. மேலும் சிறீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் ஒன்று மக்களும் ஒன்று என அனுராதபுரத்தில் நடந்த ஒரு வைபவத்தில் பேசியிருந்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கனடாவில் இருந்து வெளிவரும் National Post என்ற நாளேட்டுக்குச் செவ்வி கொடுத்த போது “சிறீலங்கா சிங்களவர்களுக்குச் சொந்தம் என நான் மனதார நம்புகிறேன். நாங்கள் 75 விழுக்காட்டினர். சிறுபான்மையினர் சிறீலங்காவில் சிங்களவர்களோடு வாழலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையர் என்ற போர்வையில் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. (I strongly believe that this country belongs to Sinhalese…We, who comprise 75% of the population ………. Minorities can live here. But they cannot make unjustifiable demands using the cover of being a minority.” – Lt. General Sarath Fonseka, Commander of the Sri Lankan Armed Forces. (23 September 2008 – National Post, Canada)

யாழ்ப்பாண இராச்சியம் (கிபி 1215 – 1619) அதன் எல்லைகள் வன்னி உட்பட புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறு வரை விரிந்திருந்தது. இதனை சிங்கள – பவுத்த தேசியவாதிகள் ஏற்க மறுக்கிறாகள். மிஞ்சிப் போனால் யாழ்ப்பாணக் குடாநாட்டை மட்டும் யாழ்ப்பாண சிற்றரசர்கள் ஆண்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் சிங்கள – பவுத்த தேசியவாதிகளால் வேதம் போல் போற்றப்படும் மகாவம்சம் தமிழர்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டில் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள பிரதேசத்தை ஆண்டார்கள் எனக் கூறுகிறது.

“தமிழர்களுடன் எப்போதும் போரிட மாட்டோம்” என்று சத்தியம் செய்து மூன்றாவது பகுதி உணவை உண்ணுமாறு காகவண்ண தீசன் தனது இரண்டு பிள்ளைகளிடம் (திஸ்சா மற்றும் காமினியை) கேட்ட போது திஸ்சா உணவுத் தட்டை அப்பால் தள்ளினான். காமினியும் உணவை அவ்வாறே ஒதுக்கிவிட்டுப் படுக்கச் சென்றான். கை கால்களை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான். அங்கே வந்த அரசி விகாரமாதேவி பரிவோடு அவனிடம் ‘கை கால்களை நன்றாக நீட்டிப் படுக்கக் கூடாதா?’ என்று கேட்டாள்.

“கங்கா (மகாவலி கங்கை) வுக்கு அப்பால் தமிழர்களும் இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது நான் எப்படிக் கை கால்களை நீட்டிச் சுகமாகப் படுக்க முடியும்?” என்று கேட்டான். ( மகாவம்சம் – அத்தியாயம் 22)

துட்டகாமினி அநுராதபுரத்தை அடைவதற்கு முன் 32 சிற்றரசுகளைத் தோற்கடித்து முன்னேறினான் என மகாவம்சம் சொல்கிறது. துட்டகாமினியின் படை வலுவான கோட்டைகளில் இருந்த 32 தமிழ் சிற்றரசர்களை தோற்கடிக்கடிக்க ஓர் ஆண்டுக்கு மேலாகப் போராட வேண்டியிருந்தது. தோற்கடிக்கப்பட்ட சிற்றரசர்களின் பெயர்களையும் அவர்கள் ஆண்ட சிற்றரசுகளின் பெயர்களையும் மகாவம்சம் விரிவாகக் குறிப்பிடுகிறது. (மகாவம்சம் – அத்தியாயம் 25)

மகாவம்சம் எல்லாளன் – துட்ட கைமுனு யுத்தத்தைத் தமிழருக்கு எதிரான போர் என்று சித்திரித்தாலும் உண்மையில் அது பவுத்தனான துட்டகாமினிக்கும் சைவனான எல்லாளனுக்கும் இடையிலான போர் என்றே சொல்ல வேண்டும். துட்டகைமுனு படையில் பவுத்த மதத்தை தழுவிய தமிழர்களும் எல்லாளன் படையில் பவுத்த மதத்தைத் தழுவிய தமிழர்களும் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்தப் போரின் மூலம் தனது மூதாதையர் இழந்த அனுராதபுர இராட்சியத்தைப் பிடித்து அரசாள துட்டகாமினி நினைத்தான். எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோல் செலுத்தினாலும் அவன் “புன்னெறி” (false beliefs ) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது.

“நான் அரசைப் பேரரசாக்க வேண்டும் என்பதற்காகப் படையெடுக்கவில்லை. என் வினைத்திட்பம் யாவும் ஒப்புயர்வற்ற சம்புத்தரின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவதற்காகவே! இது உண்மையெனில் என் படைவீரர்கள் அணிந்துள்ள கவசம் ஞாயிற்றின் கதிர்கள் போல் ஒளி வீசட்டும்” என்று துட்டகாமினி சூளுரைக்கிறான். (This enterprise of mine is not for the purpose of acquiring the pomp and advantage of royalty. This undertaking has always had for its object the re-establishment of the religion of the supreme Buddha. By the truth of this declaration may the arms and equipments of my army (in the hour of battle, as a mark of distinction) flash, as if emitting the rays of sun. It came to pass accordingly. (Mahavamsa – Chapter 24)

அதுமட்டுமல்லாது எல்லாளன் – கைமுனு யுத்தத்தைத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களவர் நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் – துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது மேலே கூறியவாறு உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்குப் படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் – தமிழர்கள் உட்பட – துட்டகாமினியை சிங்கள அரசன் என்று சித்திரிக்கிறார்கள். இது தவறானது. மகாவம்சம்தைப் பாடிய மகாநாம தேரர் எந்த இடத்திலும் துட்டகாமினியையோ அவனது தாய், தந்தை அல்லது மூதாதையரையோ சிங்களவர்கள் எனச் சித்திரிக்கவில்லை. சிங்களம் பேசினார்கள் என்று சொல்லவில்லை. அதற்குத் தக்க காரணம் உண்டு. துட்டகாமினி (கிபி 101 – 77) காலத்தில் மட்டுமல்ல மகாநாம தேரர் காலத்திலும் (கிபி 5 ஆம் நூற்றாண்டு) சிங்கள இனம் என்றொரு இனம் தோற்றம் பெறவில்லை. மகாவம்சம் சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல்லை இரண்டு தடவையே குறித்துள்ளது.

அப்படியென்றால் துட்டகாமினி யார் என்ற கேள்வி பிறக்கிறது. எந்த அய்யத்துக்கும் இடம் இல்லாமல் அவன் தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாகவம்சத்தைச் சேர்ந்தவன். இந்த உண்மையை மிக அண்மையில் ஒரு சிங்கள எழுத்தாளரே (J.L.Devananda) சுட்டிக் காட்டியுள்ளார்.

The kings belonging to the Tissa and Lambakarana dynasties that ruled the ancient Buddhist kingdom of Anuradhapura were Prakrit speaking Nagas. Dutugemunu, the national hero of Sri Lanka, was a Naga king belonging to the Tissa dynasty. His mother Vihara Maha Devi was the daughter of the Naga king of Keleniya, and his father Kavan Tissa was the great grandson of Maha Naga, who established a kingdom in Mahagama in Rohana. Maha Naga’s older brother, Devanampiya Tissa, a contemporary of Emperor Asoka, was the first king of the Tissa dynasty. Some of the Tissa kings who proudly bore Naga clan names were Khallata Naga (Dutugemunu’s nephew), Cora Naga, who was one of the many victims poisoned to death by the amorous Queen Anula, Mahadathika Maha Naga and Ila Naga. (http://transcurrents.com/tc/2010/12/the_mahavamsa_mindset_revisiti.html )

பண்டைய பவுத்த இராச்சியமான அனுராதபுரத்தை ஆண்ட திஸ்சா மற்றும் இலம்பக்கரன வம்சத்தை சேர்ந்த அரசர்கள் பிராக்கிரதம் பேசிய நாகர்கள் ஆவர். சிறீலங்காவின் தேசிய வீரனான துட்டகாமினி திஸ்சா வம்சத்தை சேர்ந்த நாக அரசன். அவனது தாய் களனியை (கல்யாணி) ஆண்ட நாக அரசனின் மகள் ஆவாள். அவனது தந்தை காவன் தீசன், உருகுணவில் உள்ள மகாகாம இராச்சியத்தை ஆண்ட மகா நாகன் என்பவனது பூட்டன் ஆவான். மகா நாகனது தமையன் அசோக மன்னது காலத்தில் வாழ்ந்த தேவநம்பிய தீசன் ஆவான். இவன்தான் திஸ்சா வம்சத்தின் முதல் அரசனாவான். நாக வம்சம் என்பதைக் காட்ட நாக என்ற பெயர்களை பெருமையோடு வைத்துக் கொண்டார்கள். கல்லத நாகன் (துட்டகாமினியின் மருமகன்) கோர நாகன் – காமவல்லி அனுலா என்ற அரசியால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் – மகாதீத்த நாகன் மற்றும் இள நாகன்.

விஜயன் நீங்கலாக ஒன்பதாம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட எல்லா அரசர்களுமே திஸ்ச அல்லது நாக என்ற அடைமொழியோடு ஆண்ட நாக வம்சத்தவரே!

தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகள் மகாவம்சம் என்ற புனித இதிகாசத்தை மேற்கோள் காட்டி சிங்கள – பவுத்த மேலாண்மையை நியாயப்படுத்துகிறார்கள். சிங்கள மக்களின் இந்தக் கருத்தை முதல் முறை பகிரங்கமாக எதிர்த்தவர் திரு ஜி.ஜி.பொன்னம்பலம் ஆவர். 1939 ஆம் ஆண்டு நாவலப்பிட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பொன்னம்பலம் இலங்கை ஒரு சிங்கள – பவுத்த நாடு என்ற கருத்தைக் கண்டித்துப் பேசினார். விஜயன், காசியப்பன் மற்றும் முதலாவது பராக்கிரமபாகு ஆகியோர் தமிழர்கள் என்றார். இதனை எதிர்த்து சிங்கள – பவுத்தர்கள கலவரம் செய்தார்கள். கலவரம் நாவலப்பிட்டி, பசற, மஸ்கேலியா, யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. (http://en.wikipedia.org/wiki/Mahavamsa)

Sinhala Nationalists quote the hegemonic epic (Mahavamsa) of the Sinhala people. This view was attacked by G. G. Ponnambalam, the leader of the Nationalist Tamils in the 1930s. He claimed that most of the Sinhala kings, including Vijaya, Kasyapa, and Parakramabahu were Tamils. Ponnambalam’s 1939 speech in Navalpitiya, attacking the claim that Sri Lanka is a Sinhalese, Buddhist nation was seen as an act against the notion of creating a Buddhist only nation. The Sinhala majority responded with a mob riot, which engulfed Navalapitiya, Passara, Maskeliya, and even Jaffna ( (http://en.wikipedia.org/wiki/Mahavamsa)

சிங்கள – பவுத்த பேரினவாதம் என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு இன்றளவும் கொழுந்து விட்டெரியும் இனச்சிக்கலின் வேர் மகா வம்சத்திலிருந்துதான் தொடங்குகிறது. மகாவம்சம் “சிங்களவரை” தேரவாத பவுத்தத்தின் பாதுகாவலர்களாகப் (chosen people) புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறது. மகாவம்சம் பவுத்த பள்ளிகளில் இளவயது முதலே சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. “நீ உண்மையான சிங்களவனாக இருந்தால் சிங்களவர்கள் சிங்கத்தின் பரம்பரை என்று மகாவம்சம் சொல்வதை நம்ப வேண்டும். அல்லது நீ ஒரு துரோகி – தீண்டப்படாதவன் ஆவாய்” என்று சிங்களச் சிறார்களுக்குப் பவுத்த தம்ம பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. (If you are a Sinhala speaking Sri Lankan, you either have to believe in the mythical Leonine ancestry -your ‘blood relation’ to a lion as depicted in the Mahavamsa – or consider yourself a traitor – an ‘outcast’!)

மகாவம்சத்தின் முதல் பதிப்பு விஜயனது வருகையில் தொடங்கி (கிமு 543) மகாசேனன் ஆட்சியோடு (கிபி 334 – 361) முடிகிறது. பின்னர் தர்மகீர்த்தி மகா தேரரால் (கிபி 1220-1293) திப்பொத்துவாவே சிறீ சித்தார்த்த மகா தேரலால் (இவர் கீர்த்தி சிறீ இராசசிங்கன் காலத்தில் (1747 -1780) வாழ்ந்தவர்) புதிக்கப்பட்டது. மகாவம்சம் தொடர்ந்து புதிக்கப்பட்டு வருகிறது. மகாவம்சம் பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு 1877 இல் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் அதன் மறுபதிப்பு 1935 லும் 1978 லும் வெளிவந்தது.

மகாவம்சத்தின் கதாநாயகன் நீதி வழுவாது ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை யுத்தத்தில் தோற்கடித்த துட்டகாமினியே! தீபவம்சம் துட்டகாமினிக்கு 10 பாடல்களை மட்டும் ஒதுக்க மகாவம்சம் 10 அதிகாரங்களை துட்டகாமினியின் அருமை பெருமைகளை விளக்க ஒதுக்கியுள்ளது.

விஜயன் சந்ததி இல்லது இறந்து போக சிஹபுரத்தை ஆண்ட அவனது தம்பி சுமிதா தனது மகன் பாண்டு வாசுதேவனை சிறீலங்காவுக்கு அனுப்பி வைக்கிறான். புத்தருக்கும் சிறீலங்காவுக்கும் முடிச்சுப் போட நினைத்த மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் பாண்டு வாசுதேவன் தாய் புத்தரது அரச வம்சத்தைச் சேர்ந்தவள் எனச் சொல்கிறார். ஆனால் பாண்டு என்ற பெயர் பாண்டியனையே குறிக்கும். எனவே பாண்டு வாசுதேவன் தமிழன் ஆக இருக்க வேண்டும். அருகில் தனக்குப் பெண் கொடுத்த பாண்டிய நாட்டை விட்டு கலிங்கம் அல்லது வங்காளத்தில் வாழ்ந்த தனது சகோதரனுக்கு விஜயன் கடிதம் அனுப்பி இருக்க முடியாது.

நாகர் இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்திரிப்பதன் நோக்கம் விஜயன் பரம்பரையே ஆதிக்குடியென்ற மாயயை தோற்றுவிப்பதற்கேயாகும். குவேனிக்குப் பிறந்த பிள்ளைகளை புலிந்தர் (வேடர்) என அழைப்பதன் நோக்கம் சிங்களவர் வேடருக்கு முந்தியவர்கள் என்று காட்டவே.

விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள 5 ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம் மாமாங்கேசுவரம் மற்றும் முன்னேசுவரம் போன்ற சிவாலயங்கள் அப்போதும் இருந்திருக்கின்றன. இவற்றில் திருக்கேதீசுவரமும் கோணேசுவரமும் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோவில்களாகும்.

விஜயனுடன் கரை ஒதுங்கிய 700 எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீசுவரத்திற்குச் சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது. இது இலங்கை ஒரு பூர்வீக இந்து நாடென்பதைக் காட்டுகிறது.

மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய ஆலயங்களும் மத்தியில் சிவனொளிபாத மலையும் இருந்திருக்கின்றன. இதனை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

ஈழத்தமிழர் வரலாறும் வாழ்வியலும் என்ற இந்த நூல் தமிழர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே இலங்கைத் தீவில் வாழ்ந்து வந்தவர்கள் என்பதை நிலை நிறுத்துகிறது. வட இலங்கையில் காணப்படும் பவுத்த தொல்லிய எச்சங்கள் சிங்களவர்களுக்கு உரியதல்ல. அது பவுத்த தமிழர்களது தொல்லியல் எச்சங்களாகும். தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பவுத்த சமயத்தை தழுவி வாழ்ந்திருக்கிறார்கள்.

சோழப் பேரரசர் இராச இராச சோழன் (கிபி 985 – 1014) காலத்தில் நாகபட்டினத்தில் (நாகையில்) ஸ்ரீசைலேந்திர சூடாமணி விகாரை என்னும் பவுத்தப்பள்ளி கட்டப்பட்டது. ஸ்ரீவிஜய என்னும் அரசையும் கடாரம் என்னும் அரசையும் ஆண்ட சிறீமாற விஜயதுங்கவர்மன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விகாரையைக் கட்ட இராச இராச சோழன் அனுமதி அளித்தான். இந்த விகாரை சிறீமாற விஜயதுங்கவர்மனின் தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் நினைவாகக் கட்டப்பட்டதாகலின் இதற்குச் ‘சூடாமணி விகாரை’ எனப் பெயர் சூட்டப்பட்டது. (இரா இராசசோழன் வழங்கிய ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்கள்)

பொதிகை மலை பவுத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும் அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பவுத்தர்களின் நம்பிக்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பவுத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கிபி. 661 – 730) என்பவர் பிறந்தார். இவரே சீன நாட்டிலும் யப்பான் நாட்டிலும் சென் பவுத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் ஆவர்.

பாளி மொழியில் பதினான்கு பவுத்த நூல்களை இயற்றிய பேர்பெற்ற பவுத்த தேரர் ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தவர்.

பக்தி இயக்கம் (7 – 9 ஆம் நூற்றாண்டு) தலை தூக்கி பவுத்தத்தை ஒழிக்கும் வரை பவுத்தம் தமிழ்நாட்டில் செல்வாக்கோடு விளங்கியது.

சங்ககாலப் புலவர்களில் புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகனார், வெள்ளைக்குடி நாகனார், இளம் போதியார், சீத்தலைச் சாத்தனார் போன்றவர்கள் பவுத்தர்களாவர்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி ஆகியவை பவுத்த மத காப்பியங்களாகும். தமிழிலக்கணமான வீரசோழியம் பவுத்த நன்கொடையே.

புத்த தம்மம் நான்கு முக்கிய வாய்மைகளைக் கொண்டது. துக்கம் உள்ளதை அறிதல், துக்கத்திற்குக் காரணம் அறிதல், துக்கம் நீக்கப்படக்கூடியது என்பதை அறிதல், துக்கம் நீக்க எட்டு வழிகளை அறிதல்.

அந்த எட்டு வழிகள் ஆவன:

(1) நற்காட்சி – மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது.
(2) நல்லொழுக்கம் – தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல்.
(3) நல்வாய்மை – பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல் அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4) நற்செய்கை – களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் இருத்தல்.
(5) நல்வாழ்க்கை – அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காக விலங்குகளை விற்பது, மயக்கம் தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது ஆகிய செயல்களைச் செய்யாமல் அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6) நன் முயற்சி – தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன் முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
(7) நற்கடைப்பிடி – உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து அய்ம்பொறி அய்ம்புலன் இவைகளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8) நற்றியானம் – மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.

பவுத்த மதம் அய்ந்தொழுக்க அறத்தை அடிப்படையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றது. கொல்லாமை, பிறர் பொருள் கவராமை, பிழையுறு காமத்தில் ஈடுபடாமை, பொய்யுரை புகலாமை, மது அருந்தாமை ஆகியவையே அந்த அய்ந்து ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே புத்தரின் அறிவுரை.

தமிழர்களும் பவுத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள். பவுத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:

சங்கமித்திரர் – 4 ஆம் நூற்றாண்டு
புத்தமித்திரர் – 5 ஆம் நூற்றாண்டு
போதிதருமர் – 6 ஆம் நூற்றாண்டு
தருமபாலர் – 6 ஆம் நூற்றாண்டு
வச்சிரபோதி – 7 – 8 ஆம் நூற்றாண்டு
அனுராதா – 12 ஆம் நூற்றாண்டு
தர்மகீர்த்தி – 12 ஆம் நூற்றாண்டு
குபலன்கா – 13 ஆம் நூற்றாண்டு

மேலும் திக்கநாகர் (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் பவுத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள்.

சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள இனத்தின் வரலாறு சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

சிறீலங்கா அரசியலில் மகாவம்சத்தையும் பவுத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் பின் வரும் நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

(1) சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள்.
(2) விஜயன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து சிங்கள ஆட்சியை நிலைநாட்டுவதற்குக் காரணமானவன்.
(3) தம்மதீவு – புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு.

இலங்கையில் நிலவும் பவுத்தம் தேரவாத பவுத்தம் என்று சொல்லப்பட்டாலும் அதில் மகாயன பவுத்த அம்சங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் பவுத்தத்துக்கும் புத்தர் போதித்த பவுத்தத்துக்கும் தொடர்பே இல்லை.

ஸ்ரீலங்காவில் பவுத்தம் அரசியல் மயப் படுத்தப்பட்டு அதன் உள்ளுறை சிதைக்கப் பட்டுவிட்டது. இதனைத் தொடக்கி வைத்தவர் அநகாரிக தர்மபாலர் ஆவார். இந்த அநகாரிக தர்மபாலரே சிங்கள – பவுத்தாய என்ற சொற்றொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியவர். ‘சிங்கள – பவுத்த தேசியத்தின்’ பிதாமகன் எனப் போற்றப்படுபவர் இவரே. தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியர் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர். ‘இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு ஏனையோர் வந்தேறு குடிகள்’ எனும் கொள்கையைப் பரப்பியவர்.

1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் பவுத்தம் (Political Buddhism) சிங்கள பவுத்தம் (Sinhala Buddhism) என்ற புது சொல்லாட்சிகள் அகராதியில் வந்துள்ளன.

நூலாசிரியர் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவியிருக்கும் சாதி பற்றி நாவலர் கண்ணேட்டத்தில் அல்லாது சமூகக் கண்ணோடு அணுகியுள்ளார். மட்டக்களப்பில் நிலவிய சாதி அடுக்குமுறை பற்றியும் குடிகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

சங்ககாலத் தமிழனுக்கு சாதி இருக்கவில்லை. செய்தொழில் அடிப்படையான குலங்கள் குடிகள் மட்டுமே இருந்தன. சங்ககாலப் புலவர்கள் எல்லாக் குடிகளிலிருந்தும் தோன்றியிருக்கிறார்கள். தங்கள் பெயரோடு தங்கள் குடிப்பெயரையும் பெருமையோடு இணைத்து வைத்திருந்தார்கள். சங்கப் புலவர் மாங்குடிகிழார் என்பவர் புறநானூற்று 335 ஆம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

அடலருந் துப்பின் ………………
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு

இந்நான் கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை…………..

பூக்களில் சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு பூக்களே.

உணவுப் பொருள்களில் சிறந்தவை வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே.

குடிகளில் சிறந்த குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே.

துடி என்னும் தோற்கருவியை இசைப்போர் துடியர். பண் என்னும் இனிய இசை பாடுவோர் பாணர். பறை என்னும் தோற்கருவியை இசைப்போர் பறையர். கடம்பர் யார் என்பது தெரியவில்லை. அவர்களும் இசைக் கருவியை மீட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

வரலாறு பற்றி எழுதும் போது வரலாறு எது, புனைவு எது என்பதை தீர்மானிக்க வேண்டும். குறிப்பாகச் சம்பவங்கள் நடந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரலாறு எழுதப்படும் போது இந்த வேறுபாடு கவனிக்கப்பட வேண்டும்.

“திராவிடருக்குரிய சிந்து வெளி நாகரிகத்தில் காணப்பட்ட சித்திர வடிவெழுத்து வடிவம் திராவிடரின் மூல மொழியான தமிழாக பின்பு பிராமி வடிவத்தின் பரிணாம வளர்ச்சியுடன் தோற்றம் பெற்றது” என்ற கூற்று எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை. இந்த சித்திர வடிவெழுத்து யாராலும் இன்னும் படிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவை எழுத்தல்ல வெறும் குறியீடுகள் (symbols) என்பதே.

இதே போல் Father Heras அவர்களின் கூற்றுப்படி சிந்து மக்களின் மொழி தமிழின் பண்டைய வடிவமே என்ற முடிவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு முக்கிய உருவச் சிலை ‘கொம்புடைத் தெய்வமாக’ விளங்கிய சிவன் என John Marshall கூறியிருப்பதும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது. சிவனுக்கு கொம்பு இருக்கிறது என்பது எந்தப் புராணத்திலும் குறிப்பிடாத செய்தியாகும். மேலும் சிவன் என்ற சொல் தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு சங்க நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நூலாசிரியர் குறிப்பிடுவது போல் சிவன் வேறு பெயர்களால் சுட்டப்படுகிறான். எடுத்துக்காட்டு முக்கண்ணான் (கலித்தொகை 2) ஈர்ஞ்சடை யந்தணன் (கலித்தொகை 38) நீலமணிமிடற் றொருவன் (புறம் 91) மணிமிடற்றோனும் (புறம் 56) ஆலமர் செல்வன் (சிறுபாணாற்றுப்படை 96-97).

கண்ணகியின் காற்சிலம்புக்கு நாகமணியே பொருத்தமெனத் தெரிந்து அதனைப் பெற்றுவர கடற்படைத் தலைவனான மீகாமனை படைகளுடன் அனுப்பியிருந்தான். ஆனால் அதனைப் பெறும் முயற்சியில் முக்குவத் தலைவனான வெடியரசனின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி நேரிட்டது. இருவருக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் வெடியரசன் நிறைப்பிடிக்கப்பட்டான். பின்னர் நாகமணியைக் கொடுத்து மீகாமனுடன் சமரசம் செய்து கொண்டான். இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குரியது. காரணம் சிலப்பதிகாரத்தின் படி கண்ணகி சிலம்பு மாணிக்கப்பரலால் செய்யப்பட்டது. பாண்டியன் மனைவியின் காற்சிலம்பு முத்துப் பரல்களால் ஆனது.

ஈழத்தமிழர் வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள பல நூல்களைப் படித்து அவற்றை பலவிடங்களில் மேற்கோள் காட்டி இந்த நூலை தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் ஆசிரியர் எழுதியுள்ளார். தமிழர் வரலாற்றில் காணப்பட்ட பல இடைவெளிகளை வரலாற்று ஆசிரியர்கள் பலரது கருத்துக்களை மேற்கோள் காட்டி நிரவியுள்ளார். நூலாசிரியரது உழைப்பு, தேடுதல், தமிழ் – ஆங்கில இருமொழிப் புலமை இந்த நூலை எழுதுவதற்கு கை கொடுத்துள்ளன. ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் தமிழர்களது பண்டைய சமய, சமூக, பொருண்மிய வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு நிச்சயம் உதவும்.

சிங்கள – பவுத்தர்கள் தங்கள் வரலாற்றை அரசின் ஆதரவோடு தொடர்ந்து எழுதி வருகிறார்கள். மகாவம்சம் தொடக்கத்தில் பாளி மொழியில் செய்யுள் நடையில் எழுதப்பட்டது. இப்போது அரசே உரைநடையில் சிங்களத்தில் எழுத வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழர்கள் தரப்பில் இல்லை. மனிதவளம், பொருள் வளம் இல்லாதது முக்கிய காரணம். யாழ்ப்பாண இராச்சியம் முடிவுற்றதற்குப் பிந்திய வரலாறு (1619 – 1948) பின்னர் 1948 – 1978 மற்றும் 1978 – 2009 வரையான வரலாறு ஆகியவற்றை விரிவாக எழுதுவது நல்லது. இல்லாவிட்டால் எமது மூதாதையர் முறையான வரலாற்றை எழுதி வைக்கவில்லை என்று நாம் குறைபடுவதுபோல் இனி வரும் தலைமுறை குறைபட நேரிடும்.

பசி நோக்காது, கண் துஞ்சாது கருமமே கண்ணாய் இருந்து இந்த நூலை எழுதிய எனது நண்பரும் ஊரவருமான திரு தம்பு கனகசபைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply