வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

க. அகரன்   

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது.

அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும்.

எனினும் வடக்கு, கிழக்கு என்பதைத் தமிழர்களின் தாயகமாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டமைந்த சமூகமாக அல்லது இனக்குழுமமாக காட்ட முடியாத போக்கு, அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடனும் மறைமுக சர்வாதிகாரப் போக்குடனும் குடியேற்றங்கள் இடம்பெற்றதோ, அதே போன்றதான குடியேற்றங்கள், தற்போது மௌனமாக இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரையுமாக இடம்பெற்று வரும் இவ்வாறான குடியேற்றங்களால் இன விகிதாசாரத்தில் ஏற்படப்போகும் தாக்கம், எதிர்வரும் காலங்களில் எண்ணிப்பார்க்க முடியாதளவாக இருக்கும் என்பது யதார்த்தம்.

வெறுமனே அரசமைப்பு என்ற விடயதானத்துக்குள்  மூழ்கிக் கிடக்கும் தமிழ் தலைமைகள், தமக்குள்ளேயே போட்டிபோட்டு அரசியல் நடத்தும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைப்பாடானது, ஆக்கபூர்வமானதன்று என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் உணரத்தலைப்பட மறுப்பதானது, வடக்கு, கிழக்கில் தமிழர் இருப்புக்கு பாரிய சவால் நிறைந்த சூழலுக்கு வழிசமைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

இச்சூழலிலேயே யுத்தகாலத்திலும் யுத்தத்துக்குப் பின்னரான காலத்திலும், வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலானது மாற்றமடைந்து வருகின்றது.

இந்த நடவடிக்கை தொடருமானால், திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தின் நிலை வவுனியாவுக்கும்  ஏற்படும் என, வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, இவ்வாறான பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றங்கள் இடம்பெறும் பிரதேசத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட இவர், பல தகவல்களைத் திரட்டி, அதைத் தடுப்பதற்கு முயன்றிருந்தமையும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையுள்ளது.

இதற்குமப்பால் 2015 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற ஈழமக்கள் புரடட்சிகர விடுதலை முன்னிணியின் மாநாட்டில், வடக்கு, கிழக்கில்

வவுனியா வடக்கு பிரதேச செயலகம்:    

இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குடியேற்றங்கள் தொடர்பாகவும் அதைத் தடுப்பதற்கு ஏதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் அது அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

image_40c04bfe58.jpg

எனினும், அவ்வித செயற்பாடுகளுக்கும் செவிசாயக்காத அரசாங்கம், தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் குடியேற்றங்கள், வவுனியா மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதைக் காணமுடிகின்றது.

குறிப்பாக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மகாவலி ‘எல்’ வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், கடந்த ஆட்சியில் நன்கு திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள நடந்தேறியுள்ளன.

வவுனியா வடக்கில் மொத்தமாக, இதுவரையில்  4,083 வாக்காளர்களை உள்ளடக்கியதாகக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு உள்ளன.

அத்துடன், நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள கச்சல்மகிளங்குளம் எனப்படும் கைவிடப்பட்ட குளம், கடந்த வருடம் அநுராதபுர மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைப்புச் செய்யப்பட்டு, குளத்துக்குக் கீழ் காணப்படும் நீர்ப்பாசனக் காணிகள், குடியேற்றவாசிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இக் குளத்துக்கு மிகவும் அண்மையிலுள்ள கொக்கச்சாங்குளம் என அழைக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீகக் காணிகள், கலாபோகஸ்வ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவு    

வவுனியா பிரதேச செயலகப் பிரிவிலும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிராமங்களில் 1,005 வாக்காளர் உள்ளடங்கலாகக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக இதுவரையில் 1,005 வாக்காளர்களை உள்ளடக்கியதாக, குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவு

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளம் கிராம அலுவலர் பிரிவில், 151 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. செட்டிகுளம் பி.செ பிரிவுக்குட்பட்ட கிராமமாக இருந்த போதும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு, அவர்களால் 151 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்காக உறுதி தயாரிக்கப்பட்டது. அத்துடன் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் அநுராதபுரம் மாவட்டத்தில் வதியும் இராணுவக் குடும்பங்களாகும்.

இதே போன்று மாணிக்கம் பண்ணை (மெனிக்பாம்) பகுதியில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களைத் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இடைத்தங்கல் முகாம் அமைந்த 1,089 ஏக்கர் காணியும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணி, அரச காணியென்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீண்ட காலமாகச் செட்டிகுளம் பிரதேச மக்களால் பருவகாலப்பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டதாகும்.

எனினும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.

இடைத்தங்கல் முகாமாகப் பயன்படுத்தப்பட்டபோது, அனைத்து உட்கட்டுமான வசதிகளும் இப்பகுதியில் செய்யப்பட்டிருந்தன. (உள்ளக வீதிகள், மின்னினைப்பு, கிணறுகள்).

தற்போது, இக்காணியின் ஒருபகுதியில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தால் விலங்குப்பண்ணை, விவசாயப்பண்ணைகள் நடாத்தப்பட்டு வருவதுடன், இராணுவத்தால் உல்லாசவிடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்காணியில் பெருந்தொகையாகப் பெரும்பான்மையினத்தவர்களைக் குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றது. இதற்கு மேலதிகமாக, 146 ஏக்கர் பொதுமக்களுடைய காணிகள், அரச படைகளின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மல்வத்து ஓயா (கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்க திட்டம்)

இத்திட்டமானது அநுராதபுரம்-வவுனியா மாவட்டங்களினூடாக ஊடறுத்து பாயும் அருவியாற்றை மறித்து, தந்திரிமலைப் பிரதேசத்தில் அணைக்கட்டொன்றை அமைப்பதினூடாக உருவாக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அநுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒரு பகுதி காணிகளும், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னசிப்பிக்குளம் கி.சே. பிரிவிலுள்ள 1,430 ஹெக்டேயர் காணியும் சுவீகரிக்கப்பட்டவுள்ளன. அத்துடன் ஐந்து சிறிய குளங்களும் மேட்டுக்காணி 11 ஏக்கர், வயற்காணி 625.75 ஏக்கரும் உள்ளடக்கப்படுகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்றுக் காணியாக முதலியார்குளம் கி.சே.பிரிவில் கப்பாச்சி கிராமத்தில் 1,000 ஏக்கர் காணி ஒதுக்கித் தருமாறு, கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிப்பாளரால் பிரதேச செயலாளருக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 11 ஏக்கர் மேட்டுக்காணியும் 625.75 ஏக்கர் வயற்காணியுமாக மொத்தமாக 636.75 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், மாற்றுக் காணி வழங்குவதற்காக 1,000 ஏக்கர் காணி, பிரதேச செயலாளரிடம் கோருவதன் நோக்கம் என்ன என்பதனை ஆராயத்தலைப்பட வேண்டிய தேவையுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான தகவல்களை உள்ளடக்கி, வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இவ்வாறான குடியேற்றங்கள் தொடர்பில், தனித்துத் தமிழ்த் தரப்புச் செயற்படுமாக இருந்தால், அது சாதிப்பதற்கு முடியாத காரியமாகவே போகும்.

வெறுமனே, தமிழ் அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் தமது இருப்புக்காக மாத்திரம் அறிக்கைகளையும் மக்கள் மத்தியில் கொதி நிலையை உருவாக்கும் பேச்சுகளையும் நடாத்திவிட்டுப் போவதால், எல்லாம் நடந்து விடும் என எண்ணுவது நகைப்புக்குரியதாக இருந்தாலும் கூட, அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை, மக்கள் மத்தியில் இருந்து செல்லும் அழுத்தங்கள் உணர வைக்க வேண்டும்.

இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம், முதலாவது பெரும்பான்மையினக் குடியேற்றமாகப் பதிவுகளில் சான்றாகின்றது.  கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை மய்யப்படுத்தி, அதிகளவாகக் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1949இல் அல்லைத்திட்டம், 1950இல் கந்தளாய்த் திட்டம், 1954 இல் பதவியாத்திட்டம் (முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில்), 1954 இல் மொறவேவாத்திட்டம் (பெரியவிளாங்குளம் என்ற தமிழ் இடத்தில்), 1979 இல் மகாதிவூல்வௌ திட்டம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களின் நிலத்தொடர்பையும் இனப்பரம்பலையும் சீர்குலைக்கவல்லனவாக அமைந்தன.

இதன் தாக்கம், தற்போது அங்கு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையே உருவாக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதற்குமப்பால், வவுனியா பிரதேசத்தில், தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த ‘மடுக்கந்தை’யில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, இன்று முற்றுமுழுதான பெரும்பான்மையின மக்களின் பிரதேசமாக மாறியிருக்கின்றது.

குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவது கடினம் என்ற நிலையை மாற்றிய குடியேற்றங்கள், இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நிச்சயம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

இதற்குமப்பால் கலாபோகஸ்வௌவை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்ட குடியேற்றங்களில் வாழும் மக்கள், மூன்று நிர்வாகப் பிரிவுகளுக்குள் ஆட்படுத்தி வைக்கக்பட்டுள்னர்.

குறிப்பாக, பிரதேச சபையானது வவுனியா வடக்கு பிரதேசசபையாகவும், நீதிப் பிரிவுக்கு அநுராதபுரம் மாவட்டத்திலும் நிர்வாகப் பிரிவாக வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவின் முல்லைத்தீவு மாவட்டமாகவும் காணப்படுகின்றது.

இது ஒரு குழப்பகரமான நிலையாகக் காணப்பட்டபோதிலும் கூட, அம் மக்கள் அதிகளவில் தென் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தமது அன்றாட வாழ்வைத் தமது பூர்வீக பிரதேசத்திலும் வாக்கு பதிவுகளைத் வவுனியா மாவட்டத்திலும் கொண்டுள்ளமையே உண்மை.

இந்நிலையில், வெறுமனே காகிதங்களை நிரப்பும் அறிக்கைகளாக அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இல்லாமல், ஒன்றுபட்ட அரசியல் தளத்தில் நின்று குடியெற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வல்லமையை உருவாக்க, தமிழ்த் தலைமைகள் சிந்திக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இச் சூழலிலேயே பௌத்த சின்னங்களைத் தமிழர் பிரதேசங்களில் பிரதிஷ்டை செய்வது மாத்திரமின்றி, தொல்லியல் பிரதேசங்களில் பௌத்த சின்னங்களைக் காண்பித்து, அதைச் சிங்கள மயமாக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

எனினும், அவ்வாறான பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் பிரதேசங்கள் எங்கும், அகழ்வுகளை மேற்கொள்ளும் போது, சிவலிங்க வழிபாடுகளுக்காக அடையாளங்களும் நாக வழிபாட்டுக்கான அடையாளங்களும் வௌிப்படுவதாகத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், நாக மன்னர்களது பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் பௌத்த சின்னங்களில் பொறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகின்றனர்.

எனவே, பெரும்பன்மையினத்தைச் சார்ந்த அரசாங்கங்கள், வடக்கில் பௌத்தம் பரவியிருந்தது என்பதனை காண்பிக்க முனையுமாக இருந்தால், அந்த பௌத்த மதத்தை அனுஷ்டித்தவர்கள் நாகர்களாகவும் தமிழர்களாகவுமே இருக்க வேண்டும் என்பதே உண்மை.

ஆனால், தற்போது அனைத்துக்கும் மாறாக பௌத்தம் காணப்பட்ட இடங்களில் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களே வாழ்ந்தார்கள் என்ற கருத்தியலையும் வரலாற்றுத் திரிபுகளையும் உருவாக்குவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எனவே, சிங்கள மயமாக்கலுக்கு ஏதுவாக இடம்பெற்று வரும் திட்டமிட்ட பெரும்பான்மைக் குடியேற்றத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை, திட்டமிட்ட, ஒருங்கணைக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதே காலம் உணர்த்தி நிற்கும் பாடமாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வவுனியா-இன-விகிதாசாரத்தைத்-தாக்கும்-திட்டமிட்ட-குடியேற்றங்கள்/91-219732


About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply