பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது! 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது! 

யாழன்பன்    

இன்றைய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், 2013 ஆவணிவரை அரசியல் பக்கம் திரும்பிப் பார்த்ததே கிடையாது.  நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிவனே என்று இருந்தவர். அரசியலில் அவர் எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை. தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டார்.

இருந்தும் விக்னேஸ்வரன் மீது  தான் கொண்டிருந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக  சம்பந்தன் ஐயா நிறுத்தினார்.  தொடக்கத்தில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளாரக நிறுத்துவதற்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எதிர்ப்பு இருந்தது.  அதே சமயம் தமிழ் அரசுக்  கட்சி சார்பாக அதன் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பலத்த ஆதரவு இருந்தது.  இருந்தும் சம்பந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவை சேனாதிராசா போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  ஆக  விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சி வேட்பாளாராக  நிறுத்தி அமோக வாக்குகளால்  வெற்றிபெற வழி வகுத்தவர்  சம்பந்தன் ஐயா அவர்களே!

முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட காலப் பபுதியில், தான் அரசியலுக்கு புதியவன் என்றும் மாவை சேனாதிராசா அவர்கள் அரசியலில் நீண்ட அனுபவம் உடையவர் என்றும் அவரது அறிவுரையும் வழிகாட்டலும் தனக்கு இன்றியமையாதது எனவும் வெளிப்படையாகக் கூறியவர் தான்  வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

இன்று  அவரது ஐந்து ஆண்டுப் பதவிக்காலம் முடிவடைய சொற்ப நாட்களே எஞ்சி இருக்கின்றன.

காலம் மாறிவிட்டது.  கோலங்களும் மாறி விட்டன. வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் கடந்த அக்டோபர் 04 ஆம் நாள்  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பின்வரும்  நான்கு  விடயங்களைக் குறிப்பிட்டார்.   அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(1) தலைவர் சம்பந்தனை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை.

பதில்:  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது,  செய்வது அறியாது திகைத்து பல நாட்கள் பேச்சு மூச்சின்றி வீட்டுக்குள் முடங்கியிருந்து விட்டு மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்துக்கு அவசரமாக ஓடோடிப்போய்  மாவை சேனாதிராசா அவர்களை சந்தித்து பரிகாரம் கண்டது வசதியாக மறந்து போயிற்றோ?

சம்பந்தன் ஐயாவை சந்திக்க வேண்டும் என்று துடித்தது தாங்கள்,  ஊடகங்களுக்கு அறிவித்ததும் தாங்களே!  செய்தி இதழ்களில் இருந்து மட்டுமே கடந்த செப்டெம்பர் 7 ஆம் நாள் சந்திப்பு என தான் அறிந்து கொண்டதாக சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.   பொய்களை எழுதுவதற்கு சில ஊடகங்களை உங்கள் வசம் வைத்துக்கொண்டு இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக பேசுவது முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு ஏற்புடையதா?  மேலும், தங்களை ஒரு “பொய்யர்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது சரியானது என்பதை தங்கள் கூற்றுகளில் இருந்து பலதடவை தாங்களே நிரூபித்து வருகிறீர்கள்.

(2) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதில்:  இந்தக் கேள்வி பரமசிவன் தலையில் இருந்த பாம்பு  கருடனைப் பார்த்துக் கேட்ட கதையாக இருக்கிறது.  உள்ள ஓர் அரசியல் கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டிய சிறப்புத் தகுதிகள் இரண்டு.  முதலாவது, தன் கட்சியை பலப்படுத்தும் ஆற்றல் பெற்றவராக இருத்தல்.  அடுத்தது, தனக்கு பின்னர் அடுத்த தலைவரை இனம் காணவும் தயார் படுத்தவும் ஆற்றல் பெற்றவராக இருத்தல்.   இவற்றை ஆராயும் போது தந்தை செல்வா,  தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் சிறந்த தலைவர்களாகவே திகழ்ந்தார்கள்.  இன்று தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சிறந்த தலைவராகவே திகழ்கிறார்.  இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தலைமைத்துவக் கனவில் மிதக்கும்  தங்களுக்கு மேலே கூறப்பட்ட தகுதிகளில் எதுவுமே இல்லை.  தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த தாங்கள் இதுவரை முயலவில்லை.  மாறாக அதனைப் பலவீனப்படுத்தவே மெத்தப் பாடுபட்டு வந்துள்ளீர்கள்.  எனவே, தங்களைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நன்கு அறிவர்.   தமிழ் மக்களும்  அறிவர்.  எனவே, எந்த ஓர் உண்மையான இலக்குமின்றி, முதலமைச்சர் பதவி மீதான பேராசையினால், பிறரைத்  தாழ்த்துவதன் மூலம் தாங்கள் உயர எத்தனிக்கும் உத்தியானது நீதித்துறையில் உயர் பதவி வகித்த தங்களுக்கு அழகல்ல.  மாறாக, மிகவும் கேவலமானது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 30 மாகாணசபை உறுப்பினர்களில், சரிபாதி உறுப்பினர்களின் ஆதரவை  தாங்கள் இழந்து விட்டமையானது,  ஒரு கட்சியை வழிநடத்தும்  ஆற்றல் தங்களுக்கு அறவே இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

(3) தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால்  நன்மைகள் ஏற்படும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பதில்:  நன்மைகள் ஏற்படும் என்று தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சம்பந்தன் ஐயா தங்கள் தனிப்பட்ட வீண் சிக்கல்கள் தொடர்பாக தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?  கடந்த மூன்றரை ஆண்டு காலத்துக்கு மேலாக எப்பொழுதும் சர்ச்சைக்கு உரிய அறிக்கைகளை தயார் செய்வது, அவற்றை வாசிப்பது, ஊடகங்களுக்கு செவ்வி வழங்குவது ஆகியனவே நாள்தோறும் தாங்கள் செய்யும் திருப்பணி.  இதற்குத் தலைவர் என்ற ரீதியில் செய்வதற்கு எதுவும் இல்லை.  2015 முடிவதற்கு முன் தங்களை வெளியேற்றாமல் விட்டதே தலைவர் சம்பந்தன் செய்த பெரும் தவறு.  

(4) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், தலைவர் சம்பந்தன் நடவடிக்கை எடுத்தார்.

பதில் மக்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்ற கருத்து தவறானது.  அப்படி ஒரு நிர்ப்பந்தம் இருக்கவும் இல்லை.  அந்த மக்கள் கூட்டம் தாங்களாக சேரவில்லை.   தங்களுக்காக சேரவும் இல்லை.  கஜேந்திரகுமார், சுரேஷ், மற்றும் சிலரால் சேர்க்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் என்பதே உண்மை.  தங்களுடன் இருப்போர் ஒவ்வொருவரும் எப்படிப் பட்டவர்கள் என்பதை புரிந்து கொண்டால், தாங்கள் செல்லும் பாதை தவறானது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எவராவது தங்களுக்கு ஆதரவு அளித்தால், அவர்களும் தங்களோடு சேர்ந்து அடுத்த தேர்தலில் கூண்டோடு கைலாயம் போவார்கள் என்பது உறுதி!

முதலில் தங்களிடம் உள்ள சின்னத் தனங்களையும், அற்பத்தனங்களையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.  அவற்றை களைந்து கொள்வதே தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வதற்கான வழியாகும்.

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் 

என்குற்றம் ஆகும் இறைக்கு”         – குறள் இலக்கம் 436

பொருள்:  தன்னிடமுள்ள குற்றங்களையும் நீக்கிப் பிறர்பாலுள்ள குற்றங்களையும் கண்டு நீக்கக் கூடியவனாயின், ஒரு தலைவனுக்கு எந்தக் குறையுமே வராது.


 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply