போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா!
நக்கீரன்
போர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள். கடத்தப்பட்டவர்களிடம் இருந்து பணம் பறிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கமாக இருந்தது. இப்படிக் கடத்தப்பட்டவர்கள் பின்னர் கொல்லப்பட்டனர். கடத்தல்காரர்கள் கேட்ட பிணைப் பணத்தை கொடுத்த பின்னரும் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களை உயிரோடு விட்டால் பின்னால் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியம் சொல்லக் கூடும் என்ற அச்சம் கொலைகாரர்களுக்கு இருந்துள்ளது.
கொழும்பில் 2008 – 2009 இடைப்பட்ட காலத்தில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதியில் இருந்தும் 8 தமிழ் இளைஞர்கள், 3 முஸ்லிம் இளைஞர்கள் என மொத்தம் 11 பேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள். இவர்களில் ஒருவராவது உயிரோடு திரும்பவில்லை.
மகிந்தா இராசபக்சா ஆட்சியில் இந்தக் கடத்தல்கள், கொலைகள் மூடி மறைக்கப்பட்டன. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இது தொடர்பான விசாரணை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் மேற் கொள்ளப்பட்டது.
செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த அப்பாவி இளைஞர்கள் கடற்படையைச் சேர்ந்த ஒரு கும்பலால் பணம் பறிக்கும் நோக்கோடு கடத்திச் செல்லப்பட்டு கொழும்பிலும் திருகோணமலயிலும் உள்ள கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டிகேபி திசநாயக்கா மற்றும் அட்மிரல் சுனித் இரணசிங்கி இருவரது கட்டுப்பாட்டில் இருந்தவையாகும். இந்தத் தகவலும் விசாரணையின் போது தெரியவந்தது. திசநாயக்கா கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வி.புலிகளோடு அல்லது சண்டையில் ஈடுபட்ட வேறு தரப்போடும் கடத்தப்பட்ட 11 இளைஞர்களுக்கு தொடர்பு ஏதும் இருக்கவில்லை என புலனாவுத் துறை சொல்கிறது.
கடற்படையின் கடத்தல் கும்பலுக்கு கடற்படைப் புலனாய்வு அதிகாரி துணைக் கொமான்டர்செடிலிலாகே டொன் சுமேதா சம்பத் தயானந்தா தலைமை தாங்கியிருந்தார். இவர் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் போலி அடையாள அட்டைகள் இருந்திருக்கின்றன. அதில் ஒன்றைப் பயன்படுத்தி கடவுச் சீட்டைப் பெற்று ஒருவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணை கொழும்பு புறக்கோட்டை நீதவான் இலங்கா ஜெயரத்தின முன்னிலையில் நடந்து வருகிறது.
தற்போது புலனாய்வுத்துறை மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தியை வெளியிட்டுள்ளது. கடற்படைத் தளபதி வசந்த கரணகொட என்பவருக்கு இந்தக் கடத்தல் பற்றிய விபரம் எல்லாம் தெரியும் என்றும் அவர் முக்கிய சாட்சியங்களை அமுக்கி வைப்பதாகவும் சாட்சிகளை கண்காணிப்பதாகவும் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
இப்படிக் கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட ஒரு இளைஞனின் பெற்றோர்கள் அப்போது மீன்பிடி அமைச்சராக இருந்த பீலிக்ஸ் பெரேரா அவர்களிடம் தங்கள் மகன் கடத்தப்பட்டதை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்கள். அமைச்சரின் வேண்டு கோளுக்கு இணங்க கரணகொட தனது செயலாளர் துணை அட்மிரல் சேமல் பெர்னாந்து இடம் இந்தக் கடத்தல் தொடர்பாக விசாரணை செய்யுமாறு பணித்தார். விசாரணை நடத்திய பெர்னாந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் கடத்தப்பட்ட இளைஞர்கள் சட்டத்துக்கு மாறாக திருகோணமலையில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அந்த இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றவோ கரணகொட எந்த முயற்சியும் மேற்
கொள்ளவில்லை.
கொன்றவர்கள் சிங்களவர்கள், கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் கரணகொட அதில் அக்கறை காட்டாது இருந்து விட்டார். போர்க்காலத்தில் இந்த அலட்சிய மனப்பான்மை எல்லா மட்டங்களிலும் வேரூன்றி இருந்தது.
வசந்த கரணகொட தன்மீது வீசப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறார். தான்தான் முதலில் சம்பத் தயானந்தா பற்றி முறைப்பாடு செய்ததாகச் சொல்கிறார். தயானந்தாவுக்கும் கரணகொடவுக்கும் இடையில் தனிப்பட்ட குடும்ப உறவு பற்றிய உராய்சல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கொலைகளில் சம்பத் தயானந்தாவே முக்கிய சந்தேக நபராகும். இவர் கெந்தல மற்றும் வத்தளை ஊர்களைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டுள்ளது. இருந்தும் இவரிடம் இருந்து இன்றுவரை எந்தவித சாட்சியமும் பதவி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலனாய்வுத்துறை தயானந்தாவை தப்பவிட முயற்சிக்கிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது. கிடைத்த சாட்சியங்களின் படி தயானந்தா கெந்தல – வத்தளவில் இருந்து கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் அலைபேசியை பல மாதங்கள் பயன்படுத்தியுள்ளார்.
இப்போது பாதுகாப்புத் துறையின் உயர் பதவியில் உள்ள விஜயகுணரத்தின இருக்கு மட்டும் தன்னை யாரும் விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது என்றும் தனது நலங்களை அவர் கவனித்து வருவதாகவும் தனது நெருங்கிய நண்பர்களிடம் புளுகி வருகிறார். இதனைக் கடற்படை வட்டாரங்கள் இரகசியமான முறையில் உறுதி செய்துள்ளன.
சனவரி 11, 2009 அன்று வெல்லம்பிட்டியாவுக்கு போகும் வழியில் வைத்து வடிவேலு பக்கிலிசாமி யோகநாதன் மற்றும் இரத்தினசாமி பரமானந்தன் இருவரும் கடத்தப்பட்டார்கள். அவர்களைக் கடத்தியவர் துணை கொமான்டர் தம்மிக்கா அனில் மாப்பா என்ற கடற்படை புலனாய்வு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
யோகநாதன் மற்றும் பரமானந்தன் இருவரும் இல 73, 7 ஆவது ஒழுங்கை, புளூமந்தல் வீதி, கொட்டாஞ்சேனையில் இருந்து பின்னேரம் வெல்லம்பிட்டியாவிற்குப் போக இல WP PA 6023 இட்ட ரோயட்டா வானில் பயணம் செய்தார்கள். அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் பயணித்த வாகனமும் கண்டு பிடிக்கப்படவில்லை. விசாரணையின் போது இந்த இருவதும் கெந்தல வத்தளையில் வைத்துக் கடத்தப்பட்டது தெரியவந்தது. ரூபா 2.5 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன. சில மாதங்கள் கழித்து, கடத்தப்பட்ட யோகநாதன் மனைவியை சந்தித்த இரு கடற்படை வீரர்கள் குறித்த இருவரையும் விடுதலை செய்யப் பெருந்தொகைப் பணம் கேட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னரே அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என புலனாய்வுத்துறை நம்புகிறது. இதே பாணியில்தான் 11 இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என குற்றவியல் புலனாய்வுத்துறை கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உளவுத்துறைக்கு கஸ்தூரியாராச்சி யோன் றேயிட் என்பவருக்குச் சொந்தமான ஒரு வண்டிபற்றி ஒரு அனாமதேய தகவல் கிடைத்தது. இவர் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் போன 11 பேரில் ஒருவராவர். றேயிட் அவர்களுக்குச் சொந்தமான வாகனம் (இல 56-5536.) சிலங்கா கடற்படையினரால் திருகோணமலையில் போலியாகத் தயாரித்த வேறு இலக்கத் தகட்டில் (Navy 2016) பயன்படுத்திய தகவல் தெரியவந்தது. அது மட்டுமல்ல வாகனத்தின் நிறமும் நீலமாக மாற்றப்பட்டதும் தெரியவந்தது. இந்த வாகனம் வாங்கியதற்கு அத்தாட்சியாக எந்தவொரு ஆவணத்தையும் கடற்படையால் காட்ட முடியவில்லை.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் போது புலனாய்வுத்துறை திருகோணமலை கடற்படை புலனாய்வு விடுதியில் மறைத்து வைக்கப்பட்ட 72 வாகன உதிரிப் பாகங்களை கண்டு பிடித்தது. அது பற்றி விசாரித்த போது போரின் உச்ச கட்டத்தில் வெடிபொருட்கள் நிரப்பி தாக்குதலுக்குப் பயன்படுததிய வாகனத்தின் உதிரிப் பாகங்கள் என விளக்கம் கொடுக்கப்பட்டது.
கடற்படைத் தளபதிகள் கரணகொடவும் இரவீந்திர விஜய குணரத்தினாவும் சனாதிபதி சிறிசேனாவைச் சந்தித்த போது கொல்லப்பட்ட 11 இளைஞர்களும் பயங்கரவாத நடவடிக்கையோடு சம்பந்தப் பட்டவர்கள் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ஏனைய இராணுவ புலனாய்வுப் பிரிவு, கொட்டாஞ்சேனை பொலீஸ், விமானப் படை உளவுப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு என எல்லாப் புலனாய்வுப் பிரிவுகளும் குறித்த 11 இளைஞர்களும் எந்தவிதமான பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள் அல்லர் எனச் சொல்லிவிட்டன.
இந்தக் கடத்தல், கொலைகள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதியும் இன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் முக்கிய தலைவர் அட்மிரல் இரவீந்திரா விஜயகுணரத்தின அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வுத்துறை கொழும்பு புறக்கோட்டை நீதிபதியிடம் தெரிவித்தது. விஜயகுணரத்தினாவே சம்பத் தயானந்தாவுக்கு ரூபா 500,000 பணம் கொடுத்து நாட்டை விட்டுத் தப்பி மலேசியாவுக்குப் போக உதவினார் என புலனாய்வுத்துறை தெரிவித்தது. அதனைக் கேட்ட நீதிபதி இலங்கை வங்கி கடற்படைத் திணைக்களத்தின் வங்கிக் கணக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அந்தக் கணக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு மார்ச் – மே மாதங்களுக்கு இடையில் சம்பத் தயானந்தாவுக்கு ரூபா 500,000 கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரைக் கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இன்றுவரை நீதிபதியின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் செப்தெம்பர் 10 ஆம் திகதி விஜயகுணரத்தின புலனாய்வுத்துறையால் கைது செய்யப்படுவார் என்ற செய்தி பரவியிருந்தது. காரணம் புலனாய்வுத்துறையின் அழைப்புக்கு இணங்க அதே நாள் காலை 10 மணிக்கு அவர்சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
விஜயகுணரத்தின அன்று காலை மெக்சிக்கோ நாட்டின் தேசிய நாள் விழாவில் கலந்து கொள்ள கத்தார் விமானத்தில் அதிகாலை 15.33 மணிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். சனாதிபதி சிறிசேனாதான் அவரது தலைமை அதிகாரி. அவரது அனுமதியில்லாமல் அல்லது அவருக்குத் தெரியாமல் விஜயகுணரத்தினா நாட்டைவிட்டுப் போயிருக்க முடியாது. அவரது ஆசீர்வாதத்தோடுதான் அவர் மெக்சிக்கோ சென்றிருக்க வேண்டும்.
சனாதிபதி சிறிசேனா வி.புலிகளைத் தோற்கடித்த படையினர் போர் வீரர்கள் என வருணித்து வருகிறார். அவர்களை எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளிக் கூண்டில் ஏற அனுமதிக்க மாட்டேன், எந்தத் தண்டனை பெறவும் விட மாட்டேன் என்று சொல்லி வருகிறார். எனவே விஜயகுணரத்தினா கைது செய்யப்படப் போவதாகத் தெரிந்தவுடம் சனாதிபதி சிறிசேனா அவரை மெக்சிக்கோ நாட்டுக்கு அனுப்பியதன் மூலம் அதனைத் தடுத்துவிட்டார். மெக்சிக்கோ போன விஜயகுணரத்தின நாட்டுக்குத் திரும்பி ஒரு மாத காலம் சென்ற நிலையிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது பெரிய சோகம்! அதற்குக் காரணம் சனாதிபதி சிறிசேனா என்பது அதைவிடப் பெரிய சோகம்.
இவ்வளவிற்கும் விஜயகுணரத்தினாவுக்கு எதிரான குற்றச்சாட்டு போர் சம்பந்தப்பட்டதல்ல. போர்க்களத்தில் இழைக்கப்பட்ட குற்றம் அல்ல. போர்க்களத்துக்கு வெளியே இழைக்கப்பட்ட குற்றம். சாதாரண குற்றம் அல்ல. தமிழ் இளைஞர்களை கொலை செய்த ஒரு சந்தேக நபரை நாட்டை விட்டுத் தப்பி ஓடப் படகும் பணமும் கொடுத்து உதவிய குற்றம்!
முன்னைய ஆட்சியின் கீழ் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாயுதீன், ஊடகவியலாளர் ஏக்னேலிகொட போன்றோர் பற்றிய விசாரணைகள் பரணில் தூங்குகின்றன. அல்லது மாதம் காதவழி போகும் தென்னாலி இராமன் குதிரை போல நகருகிறது. அதற்கும் சனாதிபதி சிறிசேனா காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் புலனாய்வுத்துறை நடத்தும் விசாரணையில் தலையீடு செய்வதாகவும் புலனாய்வுத் துறை கேட்கும் எந்தவொரு தகவலையும் கொடுக்க வேண்டாம் என்றும் அதனோடு ஒத்துழைக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன. சனாதிபதி சிறிசேனா வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பது தெரிகிறது.
இதனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு குழிபறிக்கப்படுகிறது. தமிழர்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. வேலியே பயிரை மேய்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.