ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன்

ஒதிய மலை தமிழ் மக்கள் படுகொலையை பற்றி தகவல் சொன்ன சி.வி.விக்னேஸ்வரன்

சிறப்பு செய்தி:ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி- மணலாற்றில் தொடங்கியசிங்களக் குடியேற்றம் மகாவலி அதிகாரசபையால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எமது வாசகர்கள் பலருக்கு முல்லைத்தீவு, வவுனியாப் பகுதிகளில் என்ன நடக்கின்றதென்றே தெரியாமல் இருக்கின்றது. அதுபற்றி விளக்க முடியுமா?

பதில் – தாராளமாக! ஆனால் விளக்கம் பல பக்கங்களைப் பிடிக்கும். இவ்வாரம் ஒரு பகுதியைத் தந்து மற்றுமொருவாரம் மிகுதியைத் தர எத்தனிக்கின்றேன்.

உயர் நிலத்தில் இருந்து மணலை பதிவான நிலங்களுக்கு வாய்க்கால் ஒன்று கொண்டு செல்லும் போது அதனை மணல் ஆறு என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைத்தீவில் உள்ள மணலாறு என்ற கிராமம் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அது முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை மேலும் வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமமாக விளங்கியதே.

அண்மையில் தான் அதன் பெயர் வெலி ஓயா என்று மாற்றஞ் செய்யப்பட்டது. இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது வெலிஓயா. தற்போது 11,189 பேர்களை உள்ளடக்கிய 3336 குடும்பங்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் சிங்கள மக்கள்.

முன்னர் தற்போதைய வெலிஓயாவை உள்ளடக்கிய 42 கிராமங்களில் காலாதிகாலமாக தமிழ் குடும்பங்களே அங்கு வாழ்ந்து வந்துள்ளன. கடைசியாக எடுத்த விபரங்களின் படிஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் குறித்த 42 கிராமங்களில் வசித்துவந்துள்ளனர். மேற்படி கிராமங்கள் காலாதிகாலமாக விவசாயம் செய்துவந்த தமிழ்க் குடும்பங்கள் ஆவன.

1965ம் ஆண்டில் தொண்ணூற்றி ஒன்பது வருடக் குத்தகையில் இக் குடியிருப்புக்களைச் சுற்றியஅரச நிலங்கள் தமிழ் வணிகப் பெரு மக்கள் சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

மேலும் 10 தொடக்கம் 50 ஏக்கர் வரை தனி நபர்கள் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். பாரிய வணிக நிறுவனங்கள் பல ஏக்கர் காணிகளை குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள்.

16 நிறுவனங்கள் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். நாவலர் பண்ணை,சிலோன் தியேற்றர்ஸ் பண்ணை,கென்ட் பண்ணை,புகையிரதக் குழுப் பண்ணை,தபால் அதிபர்கள் குழுப் பண்ணை,டொலர் பண்ணைபோன்றவை இவற்றுள் அடங்கின.

அரசாங்கம் தமிழ் முதலீட்டாளர்கள் பதினான்கு பேருக்குக் கொடுத்த மேற்படி 99 வருட குத்தகைகளை 1984 ம் ஆண்டில் இரத்துச் செய்து 42 கிராமங்களிலும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை இராணுவம் கொண்டு விரட்டி அடித்தது.

இராணுவத்தினர் மேற்படி கிராமங்கள் தோறும் பாரிய கவச வாகனங்களில் சென்று 48 மணித்தியாலங்களுக்குள் தமிழ் குடும்பங்கள் தமது வீடு, காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை இட்டது.

அவ்வாறு வெளி யேறாதோர் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து மக்களை அகற்றினர்.

இந்த இடங்களில் சிங்களவரை இராணுவம் குடியேற்றப் போக விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் போர் மூண்டது.

இக்காலப்பகுதியில் தான் வரலாற்றுத் தடம் பதித்த ஒதிய மலைப் படுகொலைகள் இராணுவத்தால் அரங்கேற்றப் பட்டது. ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தனர்.

வடக்கையும் கிழக்கையும் தொடர் தமிழர் வாழ் இடங்களாக தொடர்ந்திருக்க விட அரசாங்கம் விரும்பாததாலேயே இன்று மகாவெலியைக் காரணம் காட்டி சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசாங்கம் வித்திட்டுள்ளது.

மணலாற்றுடன் அரசாங்கத்தின் கபடத் திட்டம் முடிவடையவில்லை. தற்போதைய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வட முனையில் (மதுறு ஓயாவின் நதிப்படுக்கை நிலத்தில்) சட்டத்திற்கு மாறாகக் குடியிருந்த சிங்களக் குடும்பங்களை (அவர்கள் அங்கு தொடர்ந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால்) பதவிய எல்லைப் புறங்களில் கொண்டு வந்து குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது] அங்கிருந்து நெடுங்கேணி வரை சிங்களத் தொடர் குடியேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகத் தெரிகின்றது.

வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் ஒரு சிங்களவர் வாழ் இடை நிலத்தை உண்டாக்கி வட கிழக்கு இணைப்பை ஏற்படாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.

ஆரிய குண்டம், டொலர் பண்ணை போன்ற இடங்களில் காடு பற்றிப் போய் இருக்கும் நிலங்கள் துப்புரவாக்கப்படுகின்றன. நான்கு தெருக்கள் பதவியாவில் இருந்து டொலர் பண்ணை, கும்பகர்ணன் மலை, ஆரியகுண்டம், கொக்குச்சான் குளம், கொக்குத் தொடுவாய், வெடுக்கன் மலைபோன்ற இடங்களுக்கு திறந்தாகிவிட்டது. தற்போது இராணுவம், விவசாய சேவைகள் அமைச்சு, இல்மினைட் கூட்டுத்தாபனம், புகையிலை கூட்டுத்தாபனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் இந்த அரசதிட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் பாவிக்கப்பட்டுவருகின்றன. டொலர் பண்ணை அருகே ஏற்கனவே சிங்களக் குடியேற்றம் நடந்தாகிவிட்டது.

தமிழ் பேசும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கோ, பிரதேச செயலாளர்களுக்கோ, காணி அலுவலர்களுக்கோ அங்கு நடை பெற்று வருவதன் சூட்சுமம் தெரிந்துள்ளதாகத் தெரியவில்லை.

அவர்களும் அரசுக்குப் பயந்து தெரிந்து கொள்ள முனைய வில்லையோ அல்லது தெரிந்தும் மௌனம் காத்து வருகின்றார்களோ தெரியவில்லை. அந்தப் பிரதேசம் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு அங்கு நடப்பவை அனைத்தும் அந்தரங்கமாகவே நடை பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் புல்டோசர்கள் எனப்படும் நிலச்சமன் பொறிகள் அங்கு இரவில் வேலை செய்யும் சத்தத்தைக் கேட்டு வருகின்றார்கள்.

பாரிய நீர் தாங்கிச் செல்லும் குழாய்கள் அல்லது பைப்புக்கள் அங்குகொண்டு செல்வது காணப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ந் திகதிய வர்த்தமானி அது காறும் மணல் ஆறு என்றழைக்கப்பட்ட இடத்தை வெலிஓயா என்று குறிப்பிட்டுள்ளது.

அதற்கு முன்னர் அங்கு வெலி ஓயா என்றொரு இடம் இருக்கவில்லை. அதன் பின்னர் வெலி ஓயா இலங்கையின் ஒரு தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பதவியவிற்கு வடக்கில் இருந்த மணல் ஆறு பதவியவுடன் சேர்த்து வெலி ஓயா என்ற நாமத்துடன் 1987ல் அனுராதபுர நிர்வாக மாவட்டத்தினுள் உள்ளேற்கப் பட்டது.

முதலில் 1984ம் ஆண்டில் காணி ஆணைக்குலுவின் கீழ் உலர்ந்த வலய விவசாய குடியிருப்பாகத் தொடங்கிய மணல் ஆறு பின்னர் 1988ம் ஆண்டில் மகாவெலி பொருளாதார முகவாண்மையத்தினால் கையேற்கப்பட்டது.

அதன் பின்னர் அது மகாவலி ‘எல்’ வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டு ஏப்ரல் 16ந் திகதி மணல் ஆறு உத்தியோகபூர்வமாக வெலிஓயாவாகப் பெயர் மாற்றப்படடது.

இங்குதான் மணலாறில் தொடங்கிய பெரும்பான்மையினரின் பெருந்திட்டம் மகாவலியூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரியவருகிறது. மகாவலிநீர் வரப்போகின்றதுஎன்று கூறியேஅதன் நீர் கொண்டு செல்லப்போகும் இடங்கள் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

இன்றுவரை மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடமாகாணத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. தற்போதைய நிலையில் வரப்போவதுமில்லை. ஆனால் அதனைச் சாட்டாக வைத்து சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியேற்றங்களில் மக்களை இருத்தும் போதுஅவ்வூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவ்வாறு எவரும் முன்வராத நிலையில் முதலில் அப் பிரதேசத்திற்கும் பின்னர் மாவட்டத்திற்கும் அதன் பின் மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதுவே சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்டுள்ளநடைமுறை. தமிழ் மக்கட் தலைவர்களுடன் அரசாங்கம் முன்னர் செய்து கொண்ட (பின்னர் கைவிடப்பட்ட) உடன்பாடுகளில் மாகாணத்தில் தமிழ் மக்கள் முன்வராவிடில் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும் என்றுகூட கூறப்பட்டிருந்தது.

இவற்றை எல்லாம் புறந்தள்ளியே சிறைசென்று வந்த சிங்களக் குற்றவாளிகளை இவ் விடங்களில் குடியேற்றியது அப்போதையஅரசாங்கம். அதாவது வடகிழக்கு மாகாணங்களைப் பிரிக்க நடுவில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கபடநோக்குடனேயே சிங்களத் தலைவர்கள் இது காறும் காய் நகர்த்தி வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளால் மேற்படி சிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டனர். போர் முடிந்த பின்னர் மகாவலி அதிகாரசபை வெலிஓயா செயற்றிட்டத்தின் கீழ் மணல் ஆறு இருந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியது.

அவர்களின் திட்டம் முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா,அனுராதபுர மாவட்டங்களை இணைப்பதாய் அமைந்தது. முன்னர் தமிழ் மக்கள் இருந்த இடங்களில் பலவந்தமாகச் சிங்களமக்கள் அரசாங்கத்தால் போருக்கு முன்னர் குடியேற்றப்பட்டார்கள். போர் வரக் காரணங்களில் ஒன்று இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களே.

போரின் போது சிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டார்கள். போர் முடிந்ததும் முன்னர் சிங்களவர் வசித்த இடங்களில் நாம் அவர்களைக் குடியிருத்துகின்றோம் என்று கூறி பாரம்பரியமாக அங்குகுடியிருந்த சிங்களவரை விடுதலைப் புலிகள் விரட்டியதாகவும் அவர்களை அரசாங்கம் போர் முடிந்தபின் குடியேற்றுவதாகவும் ஊர் உலகத்திற்கு அறிவித்தே மேற்படி சிங்கள குடியேற்றத்தை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றார்கள் அரசாங்கத்தினர்.

தமிழர் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்தி, காணி கொடுத்து, வீடுகட்டப் பணம் கொடுத்து, விசேட அதிரடிப்படையைக் கொண்டு பாதுகாப்பும் கொடுத்துவருகின்றது அரசாங்கம்.

நான்குமாவட்டங்களுக்குஉட்பட்டமகாவெலிசெயற்றிட்டத்தின் நிர்வாகம் அனுராதபுரத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால்த்தான் மற்றைய மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கோ அலுவலர்களுக்கோ அங்கு என்ன நடைபெறுகின்றது என்று தெரிவதில்லை போலும்.

இத் தருணத்தில் மகாவலி அதிகாரசபை பற்றிய சில விளக்கங்களைத் தருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

1979ம் ஆண்டில் 23வது சட்ட மூலமாகவே மகாவலி அதிகாரசபை உருவானது. அதன் மூன்றாம் ஷரத்து முக்கியமானது. ஜனாதிபதியின் ஒப்புதலோடு உரிய அமைச்சரின் கருத்துப்படி மகாவலி கங்கையின் நீரை அல்லது வேறேதேனும் முக்கிய நதியின் நீரை எங்கெல்லாம் பாவித்து அங்கு முன்னேற்றம் காண முடியுமோ அந்த இடத்தை அவர் வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் ‘விசேட நிலப்பகுதி’என்று அதனைப் பிரகடனப்படுத்தலாம்.

இவ்வாறானபிரகடனம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். சகல சிங்கள மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சரின் இவ்வாறான கருத்தை ஏற்கத் தவறமாட்டார்கள். அதன் அடிப்படையில்த்தான் 1988ம் ஆண்டில் ஒரு விசேட வர்த்தமானி மூலம் மகாவலி ‘டு’ வலயம் தாபிக்கப்பட்டது.

அதன் பின் 2007ம் ஆண்டில் இன்னொரு வர்த்தமானியில் அது மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாக வே மகாவலி நீரைச் சாட்டி மகாவலி அதிகார சபை வடமாகாணக் காணிகளைக் கையேற்றுள்ளது.

மணலாறில் தொடங்கி தற்போது மகாவலி மூலம் சிங்கள பேராதிக்கம் வடமாகாணத்தில் தொடர்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply