படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்!

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்!

வன்னியில் எமது உறவுகள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுத்துறங்க உறைவிடமின்றி வானவே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுளிருக்கும் பாம்பென உயிர்க்கும் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள். இல்லை, தவணமுறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவப் புலம்பெயர்ந்த உறவுகளில் சிலர் தங்களாலான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
மறுபுறம் எந்தச் சிக்கல் கிடைத்தாலும் அதற்குள் மூக்கை நுழைத்துத் தங்கள் சுரண்டல் தொழிலை நடத்தும் ஒரு கொள்ளைக்காரக் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து அறிவியல் கண்டுபிடித்த வானூர்தியில் பறந்து வந்து இங்கு கடை விரித்துள்ளார்கள்.

இவர்கள் கனடிய தமிழர்களின் பலவீனங்களைப் பணமாக்கும் நோக்கில் தங்களைத் தாங்களே சாத்திரிகள், பண்டிதர்கள், சாமியார்கள், ரிஷிகள் எனச் சொல்லிக் கொண்டு தங்களின் பித்தலாட்டத்தைப் பணமாக்க கனடாவில்தான் அதிகளவு இளித்தவாயர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்குப் போட்டு இங்கு படையெடுக்கிறார்கள்.Image result for Solar system

ஏமாளித் தமிழர்களிடம் இருந்து தோஷ பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் டொலர்களைக் கறந்து விடுகிறார்கள். இவர்கள் கிழமை தோறும் இந்திய ரூபாயில் பல இலட்சங்களை உண்டியல் மூலம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் முகநாடி, கைரேகை, சாதகம், எண்சாத்திரம், மூலிகை வைத்தியம், நாடி சோதிடம் என்ற மோசடிகளுக்கு இங்குள்ள அங்காடி உரிமையாளர்கள் அறைகளைக் கொடுத்து உதவுகிறார்கள். சோதிடர்களின் வருவாயில் இவர்களுக்கும் ஒரு பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

மனிதன் திங்களில் கால் பதித்து 50 ஆண்டுகள் கழிந்து விட்டன. செவ்வாய், புதன், வியாழன், சனி போன்ற கோள்களை ஆராய விண்கலங்கள் ஏவப்பட்டு வருகின்றன. செவ்வாயில் மனிதனை இறக்க நாசா திட்டமிட்டு வருகிறது. புவியில் உள்ள மக்கள் தொகைச் சிக்கலைச் சமாளிக்க திங்களில் மனிதர்களைக் குடியேற்றும் திட்டம் கூட ஆராயப்பட்டு வருகிறது.

ஆனால் கனடிய தமிழர்கள் இன்னும் முகநாடி, கைரேகை, சோதிடம், காண்டம், அருள்வாக்குச் சொல்லி ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இந்த அறிவிலிகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் 9 கோள்கள், 12 இராசிகள், 27 நட்சத்திர்ங்கள் 12 வீடுகளில் எந்தெந்த வீடுகளில் நிற்கிறது எனக் கணக்கிட்டு சோதிடர்கள் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இந்தக் கோள்களில் இராகு, சேது கற்பனைக் கோள்கள். சந்திரன் துணைக் கோள். சூரியன் கோளல்ல அது ஒரு நட்சத்திரம். இவை உயிரற்ற சடப் பொருட்கள். செவ்வாய், வியாழன், சனி, இராகு, கேது கோள்கள் பாப கோள்கள் என்றும் சந்திரன், கூரியன், புதன், வெள்ளி ஆகிய கோள்கள் சுப கோள்கள் என்றும் சொல்வதற்கு அறிவியல் அடிப்படை இல்லை. இது எந்த விதிக்கட்டின்றி (Arbitrary) அனுமானத்தில் சொல்லப்படுவது ஆகும்.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கோடிக்கணக்கான கற்கள் தொலைவில் உள்ள கோள்கள், பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் சஞ்சரிக்கும் இராசி வீடுகளைப் பொறுத்து அக்குழந்தையின் எதிர்காலமும் குணநலமும் கல்வி மற்றும் தொழில், மனைவி, மக்கள் எல்லாம் அமைகிறது என்பது வெறும் கட்டுக் கதை. இன்றைய அறிவியல் உலகம் அதனை ஏற்றுக்கொள்ளாது.

சிலரது சாதகத்தையும் அந்த சாதகத்திற்குரியவர்களின் குணநலன்கள், ஆளுமை மற்றும் இயல்புகள் பற்றிய விபரங்களைக் கொடுத்து எந்தச் சாதகம் யாருடையது என்று கண்டு பிடிக்கச் சொன்னபோது சோதிடர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

திருமணப் பொருத்தம், வணிக முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, கணவன் – மனைவி ஒற்றுமை, மனைப் பொருத்தம், தோச நீக்கம், சாதக பலன், கைரேகை பார்த்தல், காண்டம் வாசித்தல், நினைத்த காரியம் சொல்லல், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் பலன் சொல்லல் போன்றவற்றுக்குப் பரிகாரம் கண்டு அவற்றைத் தீர்த்து வைக்கத் தங்களால் முடியுமென்று இந்தச் சோதிடர்கள் முழுப் பக்க விளம்பரம் செய்கிறார்கள்.

இவற்றை எல்லாம் இவர்களால் தீர்த்து வைக்க முடியுமென்பது உண்மையானால் ஏன் முதலில் இவர்கள் தங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்காமல் இங்கு வருகிறார்கள்?

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால் தெய்வத்திற்கு அர்ச்சனை, பூசை, அபிசேகம், தேர், தீர்த்தம் செய்து என்ன பலன்?
ஒரு காலத்தில் பார்ப்பன வீடுகளில் மட்டும் இருந்து வந்த சோதிடம் இன்று தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது. குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டுவது, பூப்பு நீராட்டுவது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது, குடி புகுவது, வேலை தேடுவது, மருத்துவம் பார்ப்பது வரை சோதிடர்களைத் தேடித் தமிழர்கள் அலைகிறார்கள்.

புவி உருண்டை என்றோ அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிறையும் சுற்றி வருகிறது என்றோ, ஞாயிறு ஒரு கோள் அல்ல அது கோடான கோடி பால் மண்டலங்களில் காணப்படும் கோடான கோடி நட்சத்திரங்களில் ஒன்று என்று தெரியாதவர்களால்தான் சோதிட சாத்திரம் இயற்றப்பட்டது. இன்றும் ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்ற பிழையான அடிப்படையில்தான் சாதகம் கணிக்கப்படுகிறது.

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஏதோ குருட்டாம் போக்கில் சொன்ன பலன்கள் அல்லது எதிர்கூறல்கள் சரிவருவதை வைத்துக் கொண்டு முகநாடி, கைரேகை, சாதகம், எண்சாத்திரம் உண்மை என மூடர்கள் நம்பிவிடுகிறார்கள்.

இதனால் தொடர்ந்து சோதிடர்களின் காட்டில் பணமழை பெய்கிறது. இந்த மூடத்தனத்தைக் கண்டிக்கவோ அதன் பொய்மையை அம்பலப்படுத்தவோ இங்குள்ள ஊடகங்கள், படித்தோர் முன்வருவதில்லை. மாறாக சோதிடரத்தினங்களின் விளம்பரங்களை வெளியிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே கண்ணாக இருக்கிறார்கள்.

விதிவிலக்காக கனடா உலகத் தமிழர், கனடிய தமிழ் வானொலி, தமிழ்த்தொலைக் காட்சி போன்றவை இருப்பது உண்மைதான். ஆனால் இவை கூட இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிய முன்வருவதில்லை. பாராமுகமாக இருந்துவிடுகிறார்கள்.

சோசியம் பார்ப்பவனையும் கைரேகை பார்ப்பவனையும் சாதக பலன் சொல்பவனையும் பாமர மக்கள் நம்புகிறார்கள் என்றால் படித்தவர்களும் நம்புகிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்! இதனால் சோதிடம், கைரேகை, சாதகம், பஞ்சாங்கம், மதச் சடங்குகள் போன்ற மூடத்தனங்களால் தமிழினம் சீரழிகிறது.

தமிழ்மக்கள் சோதிடம், கைரேக, முடபக்தி போன்ற மூடநம்பிக்களில் இருந்து விடுபட வேண்டும். உங்கள் எதிர்காலத்தைத் நீங்களே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்.

 


 

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply