ஐப்பசி மாசம், தற்கால விழாவினை ஒட்டி, இன்று “கல்வி” பற்றிய பாட்டைப் பார்க்கலாமா?
எழுதியது = ஒரு நல்ல மன்னவன்!
தெரியாமல் செய்த பிழை; பிழை என்று தெரிந்ததுமே உயிரும் விடுகின்றான்!
பிற்பாடு, அந்தப் பெண்ணே “தென்னவன் தீதிலன்” என்று வாழ்த்துகிறாள்! யாரு?
= பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
கோவலனுக்கு எழுதிய தீர்ப்பால், கண்ணகியின் சினத்தை = வணங்கி மாண்ட வழுதி!
அவனே இன்றைய Dosa பாட்டின் கவிஞன்!
பாடல்: புறநானூறு
கவிஞர்: ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல்
துறை: பொருண் மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே;
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே!
காபி உறிஞ்சல்:
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே;
உற்று உழி உதவியும் = ஆசிரியருக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அது தீர்வதற்கு உதவியும்
உறு பொருள் கொடுத்தும் = சேர்ந்த பொருளைக் கொடுத்துமாச்சும்
பிற்றை நிலை முனியாது = இப்படி உதவியதால், அவர் கீழோர் – நான் மேலோர் என்ற எண்ணம் தலை தூக்காமல், உன் பணிவான நிலைக்கு மனசிலே கோபம் கொள்ளாது…
கற்றல் நன்றே = கல்வி கற்பது தான் நன்று! = வணங்கிக் கற்றல்!
நீ குடுத்த செல்வச் செல்வத்தை விட, அவர் குடுக்கும் கல்விச் செல்வமே, உயர் செல்வம்; எனவே பணிவு உனதே!
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒரே வயிற்றில் பிறந்தாலும், தாய் கூட மனம் மாறுவாள் = கல்லாமல் இருப்பவனிடம்!
கற்ற மகனிடம் அவளுக்கு ஏற்படும் மதிப்பு, கல்லாத மகனிடம் ஏற்படாது!
தாயே இப்படீன்னா, மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்? ஆதலால், கற்கை நன்றே!
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
ஒரு நல்ல சமூகம்/குடியில் தோன்றிய பலர் இருக்கலாம்!
அவர்களில், “வயதில் மூத்தவர்களே வருக” என்று வயதினாலோ/ குடியினாலோ வணக்கம் இராது!
அவர்களில், அறிவு உடையார்க்கே, மதிப்பு; அவர்கள் வழியில் தான் அரசியலும் செல்லும்!
(இங்கே, குடி என்பது சாதி அன்று; குடி என்றால் சமூகம்;
ஒவ்வொரு ஊரிலும் சான்றோர் சமூகம் = தூத்துக்குடி, காரைக்குடி, எட்டிக்குடி, குன்றக்குடி…)
வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே!
ஆனா, வேற்றுமை தெரிய ஆரம்பித்து விட்டது! நான்கு பாலாக மக்களைப் பிரிக்கும் பழக்கம்!
(இங்கே நான்கு பால் = நான்கு வருணமே;
ஆனால் அதில், இம் மன்னவனுக்கு உடன்பாடு இல்லை)
“கீழ்” என்று சொல்லப்படும் ஒருவன் கீழ் அல்ல! அவன் கல்வி கற்க வேண்டும்! கற்று விட்டால், அவனே மேல்!
“மேல்” என்று சொல்லப்படும் சிலரும், “கீழ் என்று சொல்லப்படும் இவனை, வணங்கியே ஆக வேண்டும்!
குறிப்பு:
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சங்கத்தமிழ் நெறி போய், வேற்று நெறி வந்து விட்டதோ தமிழ் நிலத்தில்? = ஆமாம்! இந்தப் பாடலே சாட்சி!
இதைத் தான் கடைச் சங்க காலக் கலப்புகள் என்பது; இவை முதல்-இடைச் சங்கத்தில் இல்லை!
சிலப்பதிகாரக் காலத்தில் இவை நன்கு தெரிய ஆரம்பித்து விட்டன; இந்த மன்னன் அந்தக் காலம் தானே! சமண – பெளத்தமும் தெற்கே வந்து, இந்தப் புது நெறியை எதிர்க்கத் துவங்கி விட்டன!
சோம குண்டம்-பரிகாரம் -ன்னு எல்லாம் ஒரு தோழி சொல்ல, அதைக் கண்ணகி செய்ய மறுக்கின்றாள்! கண்ணகியைப் போலவே, இந்த மன்னவனும் மறுக்கின்றான், பாருங்கள்!
கல்வி/பண்பை வைத்தே மேல்-கீழ்! பால் (சாதியை) வைத்து அல்ல…
இந்தக் “கல்விக் கவிதையில்” அழுத்தமாகப் பதிவு செய்கின்றான் பாண்டியன் – ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்!
எல்லார்க்கும் பொதுவாம் “கல்வி” வாழ்க!
Leave a Reply
You must be logged in to post a comment.