முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

தாயக மடல்

முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

ஆதித்தன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்னேஸ்வரனுடன் அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. 

இந்த வழக்கு கடந்த 7 ஆம்  நாள்  விசாரணைக்கு வந்தது. மூவரும் பெயர் கூறி அழைக்கப்பட்ட போது அனந்தியும், சிவனேசனும் எழுந்து நின்றனர். ஆனால் விக்னேஸ்வரன் எழுந்து நிற்கவில்லை. இதனை அவதானித்த நீதியரசர் ஜனாக டி சில்வா “யாராக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் மமானவர்கள்”  என்று கூறினார்.  இதiனையடுத்து மீண்டும் மூவரது பெயர்களும் அழைக்கப்பட்டபோது விக்னேஸ்வரன் எழுந்து நின்றார்.

இந்த சம்பவம் விக்னேஸ்வரனின் ஆணவத்தன்மையினையே வெளிக்காட்டியுள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். இச்சம்பவத்தினால் நீதிமன்றில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் அவரது நீதியரசர் என்ற பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இடம்பெற்ற மற்றுமொருவழக்கையும் இங்கு குறிப்பிடலாம்.

அதிகார வரைமுறை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து வடமாகாண பிரதம செயலாளராகவிருந்த விஜயலட்சுமி ரமேஸ் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

முதல் இவ்வழக்கு விசாரணையின் முடிவில் மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு எனவும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும் விக்னேஸ்வரனின் சட்ட அறிவின் ஒரு சரிவாகவே பார்க்கப்பட்டது.

தான் சார்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தான் முதலமைச்சராகவுள்ள வட மாகாண சபைக்குள்ளும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர் சரியாக கையாள முடியாமல் விட்டதாலேயே இன்று அவர் மீதான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. பெரிய விடயங்களைக் கூட தங்கள் ஆளுமையினால் சிறியதொன்றாக மாற்றி தீர்வு காண்கின்ற சிறந்த நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆனால் விக்னேஸ்வரன் சிறிய விடயங்கள் கூட பூதாகரமாக வளர்வதற்கு வழியேற்படுத்தியுள்ளார்.

வயதிலும் அறிவிலும் மூத்தவரான ஒரு நீதியரசரான முதலமைச்சர் அவரை விடவும் வயதில் மூத்தவரும், நீண்ட கால அரசியல் வாதியுமான இரா.சம்பந்தனுடன் நேரடியாகக் கலந்துரையாடி கட்சிக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தேடியிருக்கலாம்.

வட மாகாணசபையில் ஆளும் கட்சியினரே அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நிலை ஏற்பட்ட

மைக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். என்னதான் அவர் தனது தரப்பு நியாயங்களைக் கூறினாலும் வட மாகாண அமைச்சர்களை பதவி நீக்கிய விடயத்தில் அவர் நடந்து கொண்ட முறையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்றுள்ள இக்கட்டான நிலையில் தனது எதிர்காலம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள நான்கு தெரிவுகளில் முதலாவது அல்லது நான்காவது தெரிவையே அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்து பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அவர் வெளியிட்டுள்ள முதலாவது தெரிவு அரசியலில் இருந்து விலகி மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது, இரண்டாவது, புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது, மூன்றாவது, மற்றுமொரு கட்சியில் இணைந்து போட்டியிடுவது,  நான்காவதுகட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ்மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது என்பனவாகும்.

இதில் இரண்டாவது தெரிவான புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தற்போதைக்கு உசிதமானதல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருக்கின்றார். வட மாகாணசபை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கலைக்கப்படவுள்ளது. அடுத்து வரும் ஒரிரு மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம். அதற்குள் புதிய கட்சியொன்றை பதிவு செய்து கட்சிக்கான சின்னத்தைப் பெற்றுக்கொள்வது சிரமமானது.

மூன்றாவது தெரிவான மற்றொரு கட்சியுடன் இணைந்து தேர்தலில் முகம் கொடுப்பதென்பதும் சாத்தியப்படாத ஒன்றாகவே தெரிகின்றது. அவருக்கு நெருக்கமானவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது கட்சிகளில்தான் அவர் இணைந்து கொள்ள வேண்டியிருக்கும்.

கஜேந்திரகுமாரின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, ஓரணியாக்கி அதில் அவர் களமிறங்கலாம். ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கஜேந்திரகுமார் உறுதியாகத் தெரிவித்து வருகின்றார். அதுமட்டுமன்றி, புளொட், ரெலோ போன்ற கட்சியினரையும் அவர் துரோகக் குழுக்கள் என வர்ணிக்கின்றார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாகப் புதிய கூட்டணி ஒன்று அமைவதென்பது சரிவரப்போவதில்லை.

நான்காவது தெரிவான கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது – உள்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் உணர்வாளர்களை இணைத்து தமிழ் மக்களின் தீர்விற்காக உழைப்பது என்பது பொதுவான பார்வையில் சரியானதாகவும், சாத்தியமானதானதாகவும் தோன்றினாலும், அங்கும் சிக்கல்கள் உள்ளன.

கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் மக்கள் பேரவையில் உள்ளனர். இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்கள், இவர்களுடன் இணைந்து விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலையே அங்கும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை ஓர் எதிர்ப்பரசியல் களமாகவே அமையும். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமுறாது என அது ஆரம்பித்த காலத்திலிருந்தே விக்னேஸ்வரன் தெரிவித்து வந்துள்ளார். ஆனாலும் அங்கும் அரசியலே நடைபெறுகின்றது.

கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தங்களுக்கான ஆள் சேர்ப்பு அரசியலையே அங்கிருந்து செய்கின்றனர் என்ற விமர்சனம் உள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கஜேந்திரகுமார் சிறு கூட்டணியொன்றை அமைத்து அதற்கு தமிழ் தேசிய மக்கள் பேரவை என்ற பெயரைச் சூட்டியிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையி விக்னேஸ்வரன் முதலாவது தெரிவை நாடுவதே பொருத்த மானதாக இருக்கும். அவருக்கு எதிரான அரசியல்வாதிகளின் கருத்துக்களை விடவும் பொதுமக்களின் கருத்து இதுவாகவே இருக்கின்றது.

“ஐயா விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தவர். அவர் தனது சட்டத்திறமையை தமிழ் மக்களுக்காக முழுமையாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம்,  எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, அவர் தலைமையிலான வட மாகாணசபை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான பணிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை” – சாதாரண பொது மக்கள் இவ்வாறுதான் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இன்று பொதுவான ஊடகங்களில் வெளியாகும் பத்திகளில் கூட விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சிக்கப்பட்டே வருகின்றார். இந்த நிலையில் தனது தலைமையை தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்று அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் எவ்வகையில் உண்மை யானவை என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணிகளில் கலந்து கொண்டவர்களை மனதில் வைத்தே அவர் தனக்குப் பின்னால் தமிழ் மக்கள் உள்ளனர் என்று எண்ணுவதாகவே தெரிகின்றது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட விக்னேஸ்வரனின் போக்குகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

இதேவேளை, வட மாகாண சபையின் ஆயுள் காலம் ஒக்ரோபர் 25 ஆம் நாளுடன் நிறைவடைகின்றது. சபையின் இறுதி அமர்வு ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிறந்த நாள் அன்று நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது என்றும், அது அனைவரும் கண்ணதாசனின் பாடலில் வருவதைப் போல கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்ற பாடலைத்தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், வட மாகாணசபை பசுமையான நினைவுகளுடனா கலையப்  போகின்றது? (நன்றி – விளம்பரம், செப்தெம்பர் 15, 2018)


 

 

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply