அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை

 அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை

1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.

ஜயோ பிள்ளையாரப்பா!
குறுக்கால போவார், தொலைவார்
இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே

இந்நேரம் என்ர மனுசனும் இல்லையே
யாரைத்தான் இப்ப அனுப்ப முடியும்
உடனே அவரைக் கூட்டி வா என்று

வழக்கமாக மதவடியில் இருக்கும்
பொடியன்களையும் காணவில்லையே
பாவம், அவங்களும் எத்தனை தரம்தான்
பூவரசம் கதியால அடி வாங்குவது?

சப்பாத்தி வாசம் வரும் முன்னே
இந்தியன் ஆர்மி வரும் பின்னே

ஒழுங்கையால யார் போனாலும்
வீரமாக குரைக்கும் நாயும்கூட
இந்தியன் ஆர்மி என்றவுடன்
குண்டிக்குள் வாலைச் செருகிக்கொண்டு
ஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே.

வீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க
தலையிலே துண்டு கட்டியிருக்கிறாங்க
இவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு
முன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு
பின்னால வேலியில் கண்டாயம் வைச்சு வந்திட்டாங்களே

அத்துளு அம்மாளாத்தையே
இந்த சண்டாளப் பயலுகளிடமிருந்து
நீதான் என்னைக் காப்பாத்தனும்
அடுத்த திங்கட்கிழமை கட்டாயம்
உனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா!

ஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில்
தேங்காய் பறித்து தின்கிறான்
இன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில்
மாங்காய் ஆய்ஞ்சு தின்கிறான்
வேறு ஒருத்தன் பேப்பரால் சுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை
பறித்து பாக்கெட்டுக்குள் செருகுகிறான்
கடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே?
ஜயோ! உள்ளே வந்துவிடுவானா?

பொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே
வெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே
ஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே
காத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே
என் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே!

பள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே
அப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே
ஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில்
துப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே!

கொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான்
நீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு
பொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால
பூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே
ஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே
இவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா?

பல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச
“மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு
புலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள்
என்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ?
சீ, இருக்காது.

என்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று
கொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்?

எட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான்
பூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது
மாங்காய் தேங்காய் திருடி தின்னவும்
பூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும்
நன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள்
இதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம்
“அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா?

நான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா
கடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா
புதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட
அப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன்
கதவு ஜன்னல் போடுவதற்கு
அத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன்
பிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி
வீட்டைச் சுற்றி வேலி போட்டேன்
அத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ
நாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ?

வீட்டுக்குள் வந்தவன்
சுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை
எடுத்து தன் தோளில் தொங்க விட்டான்
கீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு
ஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது
பள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று
என் மகன் கேட்டால் என்ன சொல்வேன்?

பிறந்து மூனு நாளே ஆன குழந்தை
அருகில் படுத்து இருக்கு
பச்சை உடம்புக்காரி என்று
பக்கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த
சரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு
இவனுகளைக் கண்டதும் பயத்தில
பசியும் மறந்து போயிடுச்சே!

ரேடியோவை திருடியவன்
அறைக்குள் வருகிறானே
ஜயோ என்ன செய்வேன்?

அறைக்குள் வந்தவன் காலைப்பிடித்து
விட்டுடுங்கய்யா, என்னை விட்டுடுங்கய்யா
என்று கெஞ்சியதுமட்டும் நினைவிருக்கு

அழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது
அருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது
கண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல்
எல்லாத்தையும் சிதைச்சிட்டு போயிட்டாங்களே

கடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன்
அத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான்
அவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்!

குறிப்பு-

கொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப்
About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply