சாணக்கியன் சுமந்திரனும் தமிழர் அரசியல் அவாவும்!

சாணக்கியன் சுமந்திரனும் தமிழர் அரசியல் அவாவும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பற்றி எனது முகநூல் பத்தி எழுத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் நான் வரைந்த ”சுமந்திரனின் சாணக்கிய காலி உரையும் ஊடகங்களின் தவறான செயற்போக்கும்” என்ற ஆக்கம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், சில உண்மைகளை உள்ளதை உள்ளபடி இப்பத்தியில் மக்கள் நலனுக்காக வெளிப்படுத்தியாகவேண்டும். அந்த ஆக்கத்தில் சுமந்திரனை, சாணக்கியன், மதியுரைஞர், தமிழ்மக்களின் சொத்து என்றவாறான அதிகப்பிரசங்கித்தனமான புகழாரங்கள் பலருக்கு எரிச்சலைக்கூட ஏற்படுத்தியிருக்கும். நான் அவ்வாறு குறிப்பிட்டமைக்கான காரணத்தை இப்பத்தியில் எழுதுவதும் பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

தமிழர் அரசியல் அபிலாஷை

எமது மக்கள் மூன்று தசாப்த கால அஹிம்சைப் போராட்டம் பின் மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் அதன்பின் ஒருதசாப்தகாலம் சென்றுவிட்டது. இந்தக் காலகட்டங்களில் நாம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்கின்ற நிலைமை உருவாகவேண்டும். எமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். சமஷ்டி தமிழ் மக்களுக்கு வேண்டும். தனிநாடு வேண்டும் என்ற கட்டமைப்புக்களை சிங்களத் தலைமைகளிடம் கோரியிருந்தோம். ஒரு தனிநாட்டை நிர்வகிப்பது போன்று விடுதலைப் புலிகள் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளையும் உருவாக்கியதுடன், தமிழீழம் என்ற தனி நாட்டுக்கான கொடி, தேசிய கீதம், தேசிய பறவை, தேசிய மிருகம், நீதித்துறை, வங்கி, நிர்வாகத்துறை, பொருண்மியம், பொலிஸ் பிரிவு என்று தனி அரசு ஒன்றிடம் என்னென்ன இருக்கவேண்டுமோ அத்தனையையும் உருவாக்கி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால், சிங்களத் தலைமையும் அதை விரும்பவில்லை. சர்வதேசமும் அதை அங்கீகரிக்கவில்லை. ஆதலால், ”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாயகக் கனவோடு வாழ்ந்த அந்த உத்தமர்கள் அனைவரையும் சர்வதேசத்தின் உதவியோடு பேரினவாத சிங்கள அரசு கொடூரமாக அழித்தொழித்தது.

இன்றைய தமிழ்த் தலைமை

தமிழ் மக்களாகிய நாங்கள் எமது பிரதிநிதிகள் என்று தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தலைவர்களில் சுமந்திரன் உண்மையில் பெரும் சொத்தாகவே காணப்படுகின்றார். சரி, பிழைகளுக்கு அப்பால் தந்தை செல்வாவுக்கு பின் எமது அரசியல் விடிவுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்தவர் தளபதி அமிர்தலிங்கம். அதன் பின் மாமனிதர் ரவிராஜ் குரல்கொடுத்து, தனது மொழி ஆற்றலால் எமது மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை சிங்கள தொலைக்காட்சிகளில் சிங்களத்தில் விவரித்தார். இனத்துக்காகக் குரல் கொடுத்தமையால் அவர் கொல்லப்பட்டார். தற்போது அதே சாணக்கியத்தை கையிலெடுத்தவர் சுமந்திரன் ஆவார். இவர்கள் மூவரும் சட்ட வல்லுநர்கள். தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளில் சிலர் வியாபாரத்துக்காக, தமது பணபலத்தால் உருவாகியவர்கள். அவர்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. மாவை அண்ணன் போன்ற சிலர் தமது கடந்த கால அரசியல் பட்டறிவால் – அவர்கள் ஆற்றிய தியாகத்தால் – இந்த மண்ணில் சிந்திய இரத்தத்தால் – மக்கள் மனங்களை வென்று நாடாளுமன்றுக்குச் சென்றவர்கள். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சித் தலைமையால் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது சாணக்கிய அறிவைப் புரிந்த மக்கள், தமது எதிர்கால சுபீட்சத்துக்கு – இந்த மண்ணில் தாம் நிம்மதியாக வாழ்வதற்கு – ஓர் அரசமைப்பு – ஒரு தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவேண்டுமானால் அதற்கு சுமந்திரன் போன்ற ஆழ்ந்த புலமையுடைய, அரசியல் நுண்ணறிவுமிக்க, சட்டநுணுக்கம் தெரிந்த சாணக்கியர்கள் தேவை என உணர்ந்த மக்களால் நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டவர் சுமந்திரன்.. இன்றுள்ள மக்கள் பிரதிநிதிகளில் இவர் உண்மையில் தமிழ் மக்களின் சொத்துத்தான்.

தென்னிலங்கையில்
சுமந்திரனின் உரை!

அரசியல் சாணக்கியம் மிக்க சுமந்திரன், எமது மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு முன்னர், எந்தத் தீர்வுத் திட்ட்டத்தை அரசு முன்வைத்தாலும் அதை எரிக்கின்ற – எதிர்க்கின்ற – தென்னிலங்கை பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தவேண்டும். இங்கு மாணவர்கள் எவ்வளவு பலம்மிக்க சக்தியோ அதேபோன்றுதான் தென்னிலங்கையிலும்.

சுமந்திரன் அவர்கள் இங்கு அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகப் பிரசாரங்களை மேற்கொண்டதிலும் பார்க்க, தென்னிலங்கையில் மேற்கொண்டமைதான் அதிகம். மாமனிதர் ரவிராஜ் அந்த நேரத்தில் தனக்கிருந்த சட்ட அறிவையும் சிங்கள மொழி ஆளுமையையும் பயன்படுத்தி, எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை எவ்வாறு தென்னிலங்கையில் தொலைக்காட்சிகள் ஊடாகப் பரப்பினாரோ, அதேபோன்று சுமந்திரன் தனக்கிருந்த சட்ட அறிவையும் சிங்கள மொழி ஆளுமையையும் பயன்படுத்தி தென்னிலங்கைப் பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், பௌத்த மகா பீடங்கள் என அனைத்துக்கும் சென்று, சமஷ்டி என்றாலே குமட்டல் எடுக்கும் பேரினவாதிகளுக்கு சமஷ்டி என்பது தனிநாடல்ல என்று சமஷ்டியின் உள்ளடக்கம் பற்றி விரிவாக – ஆழ்ந்து அகன்ற விளக்கங்களுடன் – புரியவைத்து வருகின்றார். அதாவது, தற்போது நாமும் – எமது தலைமைகளும் – இணைந்து, எமது அபிலாஷைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசமைப்பைக் கொண்டுவந்து, எமது மக்களுக்கு ஒரு நிரந்தர – நீடித்து நிற்கக்கூடிய – தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அது பேரினவாத சக்திகளால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று துடியாய் துடிக்கின்றார் சுமந்திரன்.

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்
நாளை வீரசிங்கத்தில் சுமந்திரன்!

நாளை மாலை(15.09.2019) 3.30 மணிக்கு சி.வை.தாமோதரம்பிள்ளையின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. அதில் நினைவுப் பேருரையாற்றவுள்ள சுமந்திரன், ”இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். நல்ல விடயம். சமஷ்டிக் கோரிக்கை வேண்டாம் என்று காலியில் சுமந்திரன் உரையாற்றினார் என்று அவர்மீது சேறுபூசல்கள் பல நாள்களாக நடைபெறுகின்றன. ”ஜதார்த்தவாதி வெகுஜன விரோதி”தான். உண்மையில் சுமந்திரனுக்கு மற்ற வியாபார நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று நடிக்கத் தெரியாது. தனது மனச்சாட்சிக்கு ஏற்றாற்போல் தனக்கு வாக்களித்த மக்கள் விசுவாசத்துடன் செயற்படுபவர் சுமந்திரன். நிறைவாகக் காய்த்துக் குலுங்குகின்ற மரம்தானே சுமந்திரன். அதனால் கல்லெறி வீழ்வது பற்றி அவர் கிஞ்சித்தும் கவலை கொள்பவர் அல்லர். இந்த தெளிவற்று காழ்ப்புணர்வு கொண்டு சுமந்திரனை வசைபாடும் கூட்டம், நாளை வீரசிங்கத்தில் நடைபெறவுள்ள சுமந்திரனின் ”இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற உரையைக் கேட்டாவது தெளிவுறுவார்களா? இல்லை மீண்டும் ”எமக்கு மெத்தை வேண்டாம் செத்தைதான் சௌகரியம்” என்று செத்தையில் கிடந்து உழல்வார்களா?

தெல்லியூர் சி.ஹரிகரன்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply