புலம்பெயர்  தமிழர் அமைப்புக்கள் இரண்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகள் விரும்பங்களிலிருந்து அந்நியப்பட்டே

  • புலம்பெயர்  தமிழர் அமைப்புக்கள் இரண்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகள் விரும்பங்களிலிருந்து அந்நியப்பட்டே நிற்கின்றன.

  • இரா.துரைரத்தினம்

  • தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் பெரும் பங்களிப்பை செய்து வந்தனர். விடுதலைப்புலிகளுக்கான நிதியில் பெரும்பகுதி புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழர்களிடமிருந்தே சென்றது. அதற்கான வலுவான கட்டமைப்பு ஐரோப்பா, கனடா  என அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.விடுதலைப்புலிகளுக்கான நிதி மட்டுமல்ல நிபுணத்துவ உதவிகள் ஆலோசனைகள் என மிகப்பெரிய வலையமைப்பு விடுதலைப்புலிகளிடம் இருந்தது. தனி நபர்களிடமிருந்து பெறும் நிதிகள் மட்டுமன்றி விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட வருமானம் தரும் பல வழிகள் இருந்தன.
  • 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்கு பின் புலம்பெயர் தேசங்களிலிருந்து தாயகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கான நிதி உதவிகள் செல்வது நிறுத்தப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் இன்றும் இயங்கி வருகின்றன.2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்த பின் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு இரண்டாக பிளவு பட்டது.

    ஓன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று இயங்கி வருகிறது.

    இரண்டாவது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கி வருகிறது.

    இந்த அமைப்புக்களின் பிரதான நோக்கம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான விடுதலையாகும்.

    ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விடுதலையை நோக்கமாக கொண்டு இந்த அமைப்புக்கள் செயற்பட்டாலும் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் கொள்கைகளுடன் இணைந்து செயற்படுகின்றனவா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.

    இந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதானமான இந்த இரு தமிழ் அமைப்புக்களும் தமிழீழம் ஒன்றே முடிந்த முடிவு, தமிழீழத்திற்கு குறைவான எந்த தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளன.

    ஆனால் இலங்கையில் தற்போது உள்ள தமிழ் கட்சிகள் எவையும் இப்போது தமிழீழ கோரிக்கையை முன்வைப்பதில்லை, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தமிழீழம் என்ற கொள்கையை அக்கட்சிகள் நிராகரித்து விட்டன.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஷ்டி தீர்வை முன்வைத்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை முன்வைத்திருந்தது. எனவே இலங்கையில் இருக்கும் தமிழ் கட்சிகள் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு இலங்கையில் உள்ள சூழலுக்கு ஏற்ப ஒரு நாட்டிற்குள் தீர்வை கோரி நிற்கின்றன.

    புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதான இரு தமிழ் அமைப்புக்களுனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பை பேணி வருகின்ற போதிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஒத்த கொள்கையை கொண்டிருக்கவில்லை.

    தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டம் 2009 மே மாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தாய்லாந்தில் இருந்த கே.பி என்று அழைக்கப்படும் கே.பத்மநாதன் தலைமையில் ஒரு அணியாகவும், நோர்வேயில் இருந்த நெடியவன் தலைமையில் இன்னொரு அணியாகவும் பிரிந்து செயற்பட ஆரம்பித்தனர்.

    கே.பி.தலைமையிலான அணி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டார் என்றும் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் இனி இராஜதந்திர ரீதியில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதே தமது நோக்கம் என அறிவித்தனர்.

    ஆனால் நெடியவன் தலைமையிலான அணி ( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார், உரிய வேளையில் வந்து மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார் என அறிவித்தனர். 8ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் தமது தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்புக்கு அமெரிக்காவில் இருந்த சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திர குமாரன் தலைமை தாங்கினார்.
    ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்து சரியாக ஒரு வருடத்தில் 2010 மே மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

    இது தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு என்றும் இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

    அமெரிக்கா, கனடா, ஒஸ்ரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

    இந்த அமைப்பை தாம் கைப்பற்றும் நோக்குடன் நெடியவன் தலைமையிலான அணி தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களை தெரிவு செய்த போதிலும் பின்னர் அதிலிருந்து அவர்கள் பின்வாங்கி விட்டனர்.

    1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், தமிழீழத்தை பெறுவதற்காக செயற்படுதலே தமது நோக்கம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கொள்கைப்பிரகடனத்தில் தெரிவித்திருந்தது.

    2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்திருந்தது.

    ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

    அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
    உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.
    தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

    வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல் என தமது கொள்கைப்பிரகடனத்தை அறிவித்திருந்தனர்.

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு 2010, மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின், பிலடெல்பியா நகரில் கூடியது.
    இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர்.

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்ட போது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இதனை நம்பிக்கையுடன் எதிர்பார்த்தனர். இலங்கையில் உள்ள தமிழர்களும் இதன் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. ஏன் சிறிலங்கா அரசாங்கம் கூட இந்த அமைப்பின் செயற்பாடுகளின் மூலம் தமக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிக்குமோ என அச்சம் கொண்டிருந்தனர்.

    ஆனால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஆக்கபூர்வமான எந்த செயல்பாடுகளையும் காணமுடியவில்லை.

    இலங்கையில் களயதார்த்தின் அடிப்படையில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதை இலங்கையில் உள்ள பிரதான தமிழ் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொண்டு ஒரு நாட்டிற்குள் தீர்வை கோரி நிற்கின்றன. இலங்கையின் தமிழர் பிரதேசம் என அழைக்கப்படும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் இன்று தமிழீழம் தான் தமக்கான தீர்வு என கோரவில்லை.

    ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்படுவதாக கூறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழமே தமது முடிந்த முடிவு என அறிவித்திருக்கி;றார்கள். இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கட்சிகளிடமிருந்து நாடு கடந்த அரசாங்கம் அந்நியப்பட்டு நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    அது போல புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றொரு அமைப்புத்தான் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு. இந்த அமைப்பும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை போல ஈழத்தமிழர் அவை என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் போராளிகளுடன் மறைந்திருக்கிறார். மீண்டும் வந்து ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார் என்ற நம்பிக்கையோடு உள்ளனர். தமிழீழம் தான் முடிந்த முடிவு என்ற கொள்கையில் இவர்கள் உறுதியாக உள்ளனர்.

    மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் என்ற இவர்களின் நம்பிக்கை சாத்தியமாகுமா என்பதை இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும்.

    புலம்பெயர் தேசங்களில் உள்ள பிரதான தமிழர் அமைப்புக்கள் இரண்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகள் விரும்பங்களிலிருந்து அந்நியப்பட்டே நிற்கின்றன. இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளிடமிருந்தும் அந்நியப்பட்டே நிற்கின்றன.

    தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரளவுக்கு உறவுகளை கொண்டிருந்தாலும் கொள்கையில் வேறுபட்டே நிற்கின்றன. ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என்ற இரு தேசங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்திருக்கிறார்கள். இது தமிழீழக் கோரிக்கைக்கு ஒத்ததல்ல.

    இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு இருந்தால் அங்குள்ள மக்களின் விரும்பங்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் கொள்கைகளுடன் இணங்கி செல்ல வேண்டும்.

    தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணங்கி செல்ல முடியாவிட்டாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கையுடனாவது இணங்கி செல்ல வேண்டும்.

    தமிழீழம் என்பது இனிமேல் அது சாத்தியமில்லை என வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் உணர்ந்த நிலையில் சாத்தியமான கோரிக்கைகளை இப்போது முன்வைத்து போராடி வருகின்றனர்.

    அந்த மக்களின் விரும்பங்கள், கோரிக்கைகளை உணர்ந்து அவர்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே ஒழிய ஆயுதப்போராட்டம் என்றும் தமிழீழம் என்றும் கூறி வருவது இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ள வைத்து விடும்.

  • http://www.worldtamilswin.com/read-tamil-news/19079/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-

     

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply