நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்!

நக்கீரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள்   தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர். திருப்புகழ், திவ்யபிரபந்தம் பாடுகின்றனர். விக்னேஸ்வரனது தெரிவு தவறான தெரிவு என்று சுமந்திரன் மட்டுமல்ல, ஏனைய கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக சித்தம் சிவன் போக்கு என்றிருந்த விக்னேஸ்வரனை சம்பந்தர் ஐயாதான் அரசியலுக்கு இழுத்து வந்தார். ஒரு முன்னாள் உச்ச  நீதிமன்ற நீதியரசர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தால் அது தமிழ்மக்களுக்கு பலமாக இருக்கும் என அவர் கணித்தார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய  ஒருவரது முகத்தை வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இராசதந்திரிகளுக்குக் காட்டினால் தமிழ்மக்கள் பக்கத்து நியாயத்தையும் நீதியையும் அவர்களுக்குப் புரிய வைப்பது சுலபம் என சம்பந்தன் ஐயா நினைத்தார்.

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மட்டுமல்ல விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை என்கிறார். அவர்கள் பணத்துக்கும் சலுகைகளுக்கும் விலை போய்விட்டார்கள்  என்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரில் மாதம் யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர்  சந்திப்பில்  சுமந்திரன் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியில் நிறுத்தப்படமாட்டார் என்று கூறியிருந்தார்.

“2013 இல் அவரைப் போட்டியிட அழைத்தபோதே, இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரம் பதவியில் இருப்போம் என்றே கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகள் அவர் பதவியில் இருந்து விட்டார். எனவே, அவரை மீண்டும் நாங்கள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவரோ “முன்பு தான் போட்டியிட்ட போது இருந்த கூட்டமைப்பு இப்போது இல்லை என்றும், எனவே, தனக்குப் போட்டியிடும் வாய்ப்பு வராது, வராவிட்டால் தனக்கு முன் நான்கு தெரிவுகள் இருக்கின்றன என்றார்.

        (அ) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது,

        (ஆ) தனிக்கட்சி தொடங்குவது,

        (இ) வேறு கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்பது.

        (ஈ) கட்சி அரசியலை விட்டு தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து எமக்கேற்ற தீர்வு ஒன்றினை  பெற முயற்சிப்பது.

விக்னேஸ்வரன் பணியாரத்தைச் சாப்பிடவும் வேண்டும் அதே சமயம் அதனை வைத்திருக்கவும் வேண்டும் என்று பேராசைப்படுகிறார். வேறு விதமாகச் சொன்னால் மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசைப் படுகிறார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்ச்சித்துக் கொண்டு வரும் விக்னேஸ்வரன் அந்தக் கூட்டமைப்பு அவரை எப்படி வேட்பாளராக நிறுத்தும்?

கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாதித்தது என்ன?

        (1) ஏறிய ஏணியை எட்டி உதைத்தார்.

        (2) அன்னமிட்ட கையைக் கடித்தார்.

        (3) பதவிக்கு வந்த காலம் முதல் தனக்கு மட்டும் எல்லாத் தெரியும். மற்றவர்கள் அரசியலில் கற்றுக் குட்டிகள் அல்லது பால்குடிகள்  என்ற ஆவணத்தோடு நடந்து கொண்டார்.

        (4) இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருப்பேன் அதன்பிறகு வேறு யாராவது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இன்று மேலும் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கப்  படாத பாடு படுகிறார்! ஆசை யாரைத்தான் விட்டது?

       (5) தொடக்கத்தில் தான் அரசியலுக்குப் புதியவன் மாவை சேனாதிராசா போன்ற அனுபவசாலிகள் தன்னை வழிநடத்த வேண்டும் என்று சொன்னவர் இப்போது தனக்கு எல்லாம் தெரியும் தான் சொல்வதே சரியென்று வாதாடுகிறார். ததேகூ தலைவர்கள் அரசோடு இணக்க அரசியல் நடத்தாமல் முட்டி மோதி இணைப்பாட்சியை வென்றெடுக்க வேண்டும் என்கிறார். மோதல் அரசியலும் ஆயுத அரசியலும் தோல்வியில் முடிந்துவிட்ட வரலாற்றை அவர் வசதியாக மறந்து பேசுகிறார்.

      (6) ஐநாமேம்பாட்டு நிறுவனம் வட மாகாண விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள அ.டொலர் 150 மில்லியனைக் (ரூபா 24,000 மில்லியன்) அன்பளிப்பாகக் கொடுக்க 2015 இல் முன்வந்தது. ஆனால் தனது மருமகனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரிப் பதவி கொடுக்க அந்த நிறுவன வதிவிடப் பிரதிநிதி  மறுத்த காரணத்தால் அந்த உதவி நிதியை புறந்தள்ளினார்.

     (7) தமிழ் அரசுக் கட்சி அமைச்சர் குருகலராசா பதவி விலகின இடத்துக்கு ஒருவரைப் பரிந்துரை செய்யுமாறு தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை  முதலமைச்சர்  கேட்டார். அதனை எழுத்தில் தரும்படி கேட்டார். அதை வாங்கி வைத்துக் கொண்டு தனது அடிவருடிகளில் ஒருவரான சர்வேஸ்வரனுக்கு அந்த அமைச்சர் பதவியைக்  கொடுத்து அழகு பார்த்தார். அனந்தியையும்  தமிழ் அரசுக் கட்சியின் விருப்பத்துக்கு மாறாக தன்னிச்சையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.

    (8) ஒரு அமைச்சரை நியமிப்பதற்கு முதலமைச்சரது பரிந்துரை தேவை. அதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறார். தன்னை நீதியரசர் என்று சொல்லிக் கொள்ளும் விக்னேஸ்வரன் தனது விருப்புப் படி டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார். தன்னை விலத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று  சட்டத்தரணி டெனீஸ்வரன் வழக்குப் போட்டார். நீதிமன்றம் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது,  முதலமைச்சர் எழுதிய விலகல் கடிதம் செல்லுபடியாகாது, டெனீஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். முதலமைச்சர் டெனீஸ்வரனிடம் தனது தவறை ஒப்புக் கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார். இதனால் எதிர்வரும் 18 ஆம் நாள் நடைபெறும் வழக்கு விசாரணையில் முதலமைச்சர் சிறை செல்ல வாய்ப்புண்டு.

   (9) முதலமைச்சர்கள்  கூட்டங்களில் விக்னேஸ்வரன் கலந்து கொள்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவரை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

 (10) ததேகூ நா.உறுப்பினர்கள் அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவதாக குற்றம்சாட்டும் முதலமைச்சர் விமானத்தில் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் பயணம் செய்ய முன்னாள் ஆளுநர் சி.ஏ. சந்திரசிறியிடம் கெஞ்சிக் கூத்தாடி சலுகை பெற்றுள்ளார். இது தொடர்பாக உரூபா 22 இலட்சம் செலவழித்துள்ளார்.

(11) விக்னேஸ்வரன் ஆளுநர்களோடு சண்டை, நீதிமன்றத்துக்குப் போகும் அளவுக்கு மாகாண சபை செயலாளரோடு சண்டை. பிரதமரோடு சண்டை, சம்பந்தன், சுமந்திரன் இருவரோடுமு் ஓயாத சண்டை.

(12) முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற மாதிரி ஒரு ஆடைத் தொழிற்சாலை தன்னும் கட்ட முடிந்ததா?

மாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் விக்னேஸ்வரன் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார்.

“நான் யாருடைய தயவிலும் வெற்றிபெறவில்லை. எனக்கு இருக்கிற மக்கள் செல்வாக்கில் தேர்தலில் வென்றேன்” என மார்தட்டத்  தொடங்கினார்!

2013 இல் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் நுழைந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதியப்பட்ட கட்சியல்ல, என்பது அவருக்குத் தெரியாது இருந்தது! அவரது அரசியல் ஞானம் அந்தளவுக்கு சூனியமாக இருந்தது.

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்துக்கு அவர் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பின்னர்தான் மீண்டும் கட்சி அலுவலகத்தில் கால் பதித்தார்!

இப்போது விக்னேஸ்வரனது தன்முனைப்பு (ego) தலைக்கனம், ஆணவம், செருக்கு, பேராசை காரணமாக இக்கட்டில் மாட்டப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் நாள் விக்னேஸ்வரனுக்கு எதிராக அமைச்சர் டெனீஸ்வரன் (?) தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதன் மூலம் விக்னேஸ்வரன் நீதித் துறையில் புதிய சாதனை படைத்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடரலாம், அவர் தனது கடமைகளைச் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்ப்புக் கூறியது. காரணம் விக்னேஸ்வரன், டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாக எழுதிய கடிதம் செல்லுபடியற்றது என நீதியரசர்கள் தீர்ப்பளித்தார்கள்.

ஆனால், விக்னேஸ்வரன், டெனீஸ்வரன் தன் அமைச்சுப்  பணிகளைச் செய்ய விடவில்லை. டெனீஸ்வரனது அமைச்சுப் பணிகளை தொடர்ந்து அனந்தியும் சிவநேசனும் கையாண்டார்கள். இதன் மூலம் இந்த இருவரும் முதலமைச்சர் போலவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். 

தன்னை நீதியரசர் என்று முதலாவதாகவும் முதலமைச்சர் என்று இரண்டாவதாகவும் அடையாளப் படுத்தும் விக்னேஸ்வரனை சட்டத்தரணி டெனீஸ்வரன், ஒரு சட்டப் பொறிக்குள் சிக்காராக சிக்க வைத்துள்ளார்.

விக்னேஸ்வரன் புத்திசாலியாக இருந்தால் முருங்கை மரத்தில் இருந்து இறங்கிக் கீழே வரவேண்டும்! ஆனால் மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பது பழமொழி!

எதிர்வரும் செப்தெம்பர் 18 ஆம் நாள் “வட மாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்குச் செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வட மாகாண சபையின் வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும் ” என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செப்தெம்பர் 11 இல் நடைபெற்றபோது கூறியிருந்தார்.

வடமாகாண சபைக்கு மட்டுமல்ல மொத்த தமிழ்மக்களுக்கும் செப்தெம்பர் 18  கரும்புள்ளி நாள் மட்டுமல்ல செம்புள்ளி நாளும் ஆகும்!

மொத்தத்தில் நீதியரசரை  ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்!

இது முதலமைச்சர் விக்னேஸ்வரன்  தானாக வலியப் போய் வாங்கிக் கொண்ட வினை!


About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply