போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!
ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை!
“யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாச்சார தலைநகராக இருந்து வருகிறது. அந்த நகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழைய முன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும் மனதில் கொண்டு உள்நுழையுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டேன்.
யாழ்ப்பாண நகரை ஒரு தூய்மையான, அழகான, பொலிவான நகராக மாற்றி அமைக்க நான் உறுதி பூண்டுள்ளேன். அதற்குப் புலம்பெயர் தமிழரின் உதவியும் தேவை. போரினால் அழிவுண்ட மாநகர சபைக் கட்டிடத்தை ஐக்கியநாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு மீளக் கட்டி எழுப்ப இருக்கிறோம்” இவ்வாறு கனடாவுக்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாண நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த பொதுவரவேற்பில் கலந்து கொண்டு பேசியபோது குறிப்பிட்டார்.
இந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி கடந்த செப்தெம்பர் 08 ஆம் நாள் மாலை ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர முதல்வருக்கு ரோசா மாலை, பட்டுச் சால்வை, பொன்னாடை போர்த்தப்பட்டன.
கனடா தேசியப் பண், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்களை கனடா தமிழ்க் கல்லூரி மாணவிகள் பாடினார்கள். அகவணக்கத்தின் பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை அனுசா திருமாறன் ஆசிரியையின் மாணவி துளசி சபேசன் அழகாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வி.எஸ். துரைராசா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரை தலைவர் வேலுப்பிள்ளை தங்கவேலு ஆற்றினார்.
தொடர்ந்து பேசிய மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பின்வரம் விடயங்களைத் தனது உரையில் குறிப்பிட்டார்.
1.யுத்த காலத்தில் நாம் தனி நாடு கேட்டோம். இப்போது அதைக் கேட்கவில்லை. இப்போது கேட்பது ஒருமித்த நாட்டில் சுயநிர்ணய அடிப்படையில் எங்களை நாங்களே ஆளக்கூடிய அதிகாரப் பகிர்வு.
2. தேர்தல் பரப்புரையில் அரசியல் தீர்வையும், மீள்கட்டுமானம், மறுவாழ்வு, வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என்பவற்றையே வலியுறுத்தினோம்.
3.தமிழ் மக்களின் ஒற்றுபட்ட பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைபைச் சிதைப்பதன் மூலம் தமிழ்மக்களைக் கூறுபோட நினைப்பவர்களின் உள்நோக்கம் என்ன?. புலம் பெயர்ந்தோர் ஏன் அவர்களுக்குத் துணை போகிறார்கள்?
4. மாகாண முதலமைச்சர் தன் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைச் சிதைத்து மிக மோசமான நிருவாகச்சீர்கேடுகளை அனுமதித்த காரணத்தாலேயே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ததேகூ இன் செல்வாக்கு சரிந்து காணபட்டது.
5. யாழ் மாநகர சபையில் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு அனைவரையயும் அரவணைத்து சிறப்பாகப் பணியாற்றுகின்றேன்.
6. யாழ் மாநகர சபைக்கு வந்து திரும்பிய நிதி, கிடப்பில் போடப்பட்ட நிதி புதிதாகக் கிடைக்கும் நிதி அனைத்தையும் முடியுமான வரை மீளப் பெற்று நகரை அபிவிருத்தி செய்ய இருக்கின்றேன்.
7. குரைப்பவர்களைப் பற்றிப் பொருட்படுத்தாமல், விமர்சனங்களைக் கவனிக்காமல் எது சரியோ அதனைச் செய்து கொண்டு எனது இலக்கை நோக்கிச் செல்கின்றேன்.
8. போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும்நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும். இதனால் யார் நன்மை பெற விரும்புகிறார்கள்?
9. ததேகூ கேட்டுக்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் சேர்க்கப் பட்டிருந்ததாலும் புதிய அரசியல் யாப்பு நிறைவேற 2/3 பெரும்பான்மையைக் காட்டவேண்டி இருப்பதால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தோம். அது தவிர அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை.
10. புதிய அரசியல் திட்ட வரைவில் இருக்கும் முற்போக்கு அம்சங்கள் பற்றி யாரும் சொல்வதில்லை, ஊடகங்கள் எழுத்துவதே இல்லை. இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகவும் வெறும் பொய்களை ஏன் திரும்பத் திரும்பக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
நன்றியுரையை திரு நாதன் வீரசிங்கம் நல்கினார். பொது வரவேற்பு நிகழ்ச்சியை நல்லமுறையில் பரப்புரை செய்த தங்கதீபம், ஈழநாடு, செந்தாமரை, ஈழமுரசு, லங்காவண், ஈஸ்ட் எவ்எம் வானொலி, கீதவாணி, நேரடி ஒளிபரப்புச் செய்த கணபதி ரவீந்திரன், நடராசா முரளீதரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.
Leave a Reply
You must be logged in to post a comment.