பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

Gotabhaya_1.jpg

இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன.

இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா அவர்களின் உடன்பிறப்புமான கோத்தபாய இராசபக்சாவும் களம் இறங்கியுள்ளார்.

கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெரிய தடைக் கல்லாக இருப்பது அவரது இரட்டைக் குடியுரிமை. 1992 இல் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கோத்தபாய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். 2005 இல் நாடு திரும்பிய கோத்தபாய இலங்கைக் குடியுரிமையைப் பெற்றார்.

“நான் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானால் அமெரிக்க குடியுரிமையை இரண்டு மாதத்தில் துறந்துவிடுவேன்” எனக் கூறுகிறார். ஆனால் அவர் நினைப்பது போல அது எளிதாக இருக்க மாட்டாது என அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கோத்தபாயாவுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள், இலஞ்சம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் நாட்டைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்சா குடும்பத்தைச் சார்ந்த ஒருவரே தேர்தலில் பேட்டியிட்டு அடுத்த சனாதிபதியாக வர முயற்சிக்கிறார்.

கோத்தபாய தான் போட்டியிடுவதற்கு ஒரேயொரு தக்கு மட்டும் வைத்திருக்கிறார். அது தனது அண்ணன் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சாவின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்.

கோத்தபாய தனது அரசியல் படிமத்தைத் துலக்குவதற்கு இரண்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். ஒன்று எலியா (வெளிச்சம்) மற்றது விஜயத் மகா (அறிவாளிகளின் பாதை) என்பதே அந்த இரண்டு அமைப்புகளாகும். இதில் விஜயத் மகா கடந்த மே 13,Shangri-La Hotel, கொழும்பு என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்திய அதன் முதலாவது ஆண்டு மாநாட்டில் கோத்தபாயா அறிவால் மிகுந்த இலங்கைக்குத் தேவையான இலட்சிய நோக்கின் அவசியம் (THE NEED FOR AN ACTIONABLE VISION FOR SRI LANKA) என்ற தலைப்பில் முக்கிய உரையாற்றினார். இந்த மாநாட்டில் மகிந்த இராசபக்சா உட்படச் சுமார் 2,000 பேர் கலந்து கெண்டார்கள். மாநாட்டின் முடிவில் எல்லோருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. கொழுப்பில் நடந்த மாநாட்டை அடுத்துப் பதுளை போன்ற நகரங்களிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன.

Gotabhayaandmok.jpg

இதனை எழுதும்வரை கோத்தபாயாவை சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்தா இன்னமும் பச்சைக் கொடி காட்டவில்லை. சனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யக் காலம் இருக்கிறது. அப்பேது பார்க்கலாம் என மகிந்தா இராசபக்சா சொல்லி வருகிறார். கோத்தபாயாவை சனாதிபதி வேட்பாளராக நிறுத்த மகிந்தாவுக்கு உள்ளுர விருப்பமில்லை எனச் சிலர் நினைக்கிறார்கள். ஒருவேளை தனது வாரிசான இளவரசர் நாமலுக்கு முடி சூட்ட மகிந்தா விரும்பலாம். எது எப்படியிருப்பினும் இராசபக்சா குடும்பத்தில் சனாதிபதி வேட்பாளரைச் தெரிவு செய்வதில் கருத்து வேற்றுமை நிலவுவதாகத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில் அஸ்கிரிய பவுத்தமத பீடத்தின் துணைத் தலைவர் வண. வெந்தருவ உபாலி தேரர் பேசிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. கோத்தபாயாவின் 69 தாவது பிறந்த நாளைக் கொண்டாடும் முகமாக மிரிகானாவில் உள்ள அவரது வீட்டில் தேரர்களுக்குத் தானம் கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மதச் சடங்கை நடத்த வண. வெந்துருவ உபாலி தேரர் அழைக்கப்பட்டிருந்தார். அதில் உரையாற்றிய உபாலி தேரர்,

“சிறிலங்கா நாட்டுக்கு ஒரு சிங்கள பவுத்த தலைவர் தேவைப்படுகிறார். சிலர் உங்களை (கோத்தபாய) இட்லர் என வருணிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் இட்லராகவே இருந்துவிட்டுப் போங்கள். இராணுவத்தின் துணையுடன் நாட்டின் தலைமைப் பொறுப்பை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமானவர் நீங்கள்தான்” எனக் குறிப்பிட்டார்.

இட்லர் ஜெர்மானியர்கள் ஆரியர்கள் என்றும் யுாதர்கள் தாழந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லி 5 மில்லியன் யுாதர்களை வாயுக் கூடங்களுக்கு அனுப்பிக் கொலை செய்தவர்.

இட்லரைப் போலவே பெரும்பான்மை சிங்கள – பவுத்தர்களும் தாங்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள் இழிவான இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற மகாவம்ச மனப்பான்மையில் தோய்ந்து போய் இருக்கிறார்கள்.

மேலே கூறியவாறு சில ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் மட்டும் அல்லாமல் பெரும் சிங்கள வணிகர்கள், செல்வந்தர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்கள்தான் வெளிச்சம், அறிவாளிகளின் பாதை என்ற அமைப்புகளை இயக்கும் சூத்திரதாரிகள்.

இந்த சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின. புதிய யாப்பை ஆதரிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மேடைகளில் பகிரங்கமாகப் பேசி வருகிறார். கடந்த ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் கம்பகாவில் நடந்த கூட்டத்தில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்தக் கூட்டம் கோத்தபாய தலைமையில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை மட்டுமல்ல புதிய யாப்பை ஆதரிப்பவர்கள் இரண்டகர்களாக நடத்தப்பட வேண்டும் அவர்களுக்கு இறுதி மரணச் சடங்கு நடத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் கமல் குணரத்தின மேடைகளில் கூறிவருகிறார்.

கோத்தபாயாவை ஆதரிக்கும் இன்னொரு ஓய்பு பெற்ற இராணுவ தளபதி வலிந்து காணாமல் போனோரைக் கண்டு பிடிக்கும் சட்டத்தை ஆதரிப்போரை அடுத்து வரும் ஆட்சியில் துக்கில் போட வேண்டும் என்று பேசி வருகிறார்.

ஏற்கனவே கோத்தபாய ஒரு சர்வாதிகாரி என்ற பெயரை எடுத்திருக்கிறார். அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றினாலும் பாதுகாப்பு சம்பந்தமான எல்லா உத்தரவுகளையும் அவரே பிறப்பித்தார். சரண் அடைந்த வி.புலிப் போராளிகளைச் சுட்டுக் கொல்லுமாறு கட்டளை பிறப்பித்தவரும் கோத்தபாயாதான். இராணுவ புலனாய்வுத்துறை அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியது என சரத் பொன்சேகா சொல்கிறார்.

சண்டே லீடர் விக்கிரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் போன்றவர்களது கொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயாவின் கைகள் இருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். கோத்தபாயாவின் காலத்தில்தான் வெள்ளை வான்களில் ஆள் கடத்தல், கப்பம் வாங்குதல், வலிந்து காணாமல் செய்தல், கிறீஸ் புாதம் போன்ற மனிதவுரிமை மீறல்கள் தாராளமாகவும் ஏராளமாகவும் நடந்தேறியது. சனாதிபதி தேர்தலில் மகிந்த இராசபக்சா தோற்றதற்கு கோத்தபாயவே காரணம் எனப் பலர் நம்புகிறார்கள்.

Gotabhaya_1.jpg

13 ஏ சட்ட திருத்தத்தை யாப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோத்தபாயா பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

வட – கிழக்கு மாகாணங்களின் குடிப்பரம்பல் தேசிய அளவில் உள்ள குடிப்பரம்பல் போல் இருக்க வேண்டும் என்றார். அதாவது வட – கிழக்கு மாகாணங்களில் சிங்களவர் தொகை 74 விழுக்காடு இருக்க வேண்டும் என்றார்.

முஸ்லிம் மக்களையும் வணிக நிறுவனங்களையும் இலக்கு வைத்துத் தாக்கிய பொதுபல சேனாவின் தொட்டப்பனாக (godfather) கோத்தபாயாவே இயங்கினார்.

அஸ்கிரிய பவுத்த மத பீடத்தின் துணைத் தலைவர் வண. உபாலி அவர்களின் உரைக்குப் பலத்த எதிர்ப்புக்கள் எழாமல் இல்லை. “கோத்தபாயாவின் குறிக்கோள்களை ஆதரிக்கும் அயோக்கிய பவுத்த தேரர்கள் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்” என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கிராம விமலஜோதி என்ற தேரர் உபாலி தேரரை கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளார். இவர் கோத்தபாயாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது,

இரண்டு நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் The New York Times நாளேடு How China Got Sri Lanka to Cough Up a Port (ஒரு துறைமுகத்தை சிறிலங்காவிடம் இருந்து சீனா எப்படி வளைத்துக் கொண்டது) என்ற தலைப்பில் இலங்கையைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது. (https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html)

New York Times எழுதிய கட்டுரையில் 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மகிந்த இராசபக்சாவின் தேர்தல் செலவுக்கு அ.டொலர் 7.6 மில்லியன் பணத்தை Standard Chartered Bank மூலம் China Harbour என்ற சீன நிறுவனம் வழங்கியது என்ற குண்டைத் துக்கிப் போட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்னால் அ.டெலர் 3.7 மில்லியன் செலவில் ரி சேட் அச்சடிக்க பயன்படுத்தப்பட்டதாக அந்த ஏடு குற்றம் சாட்டுகிறது. மேலும் அ.டெலர் 38,000 மகிந்தாவின் ஆதரவாளரான ஒரு தேரருக்கு வழங்கப்பட்டதாகச் சொல்லுகிறது. இதற்கும் மேலாக அ.டெலர் 1.7 மில்லியன் பெறுமதியான காசோலைகள் அலரி மாளிகையில் (இராசபக்சாவின் உத்தியோக இல்லம்) இருப்பவர்களிடம் கொடுக்கப்பட்டதாக அந்த ஏடு எழுதியுள்ளது.

New York Times குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் பற்றி மகிந்த இராசபக்சா இதுவரை மூச்சே காட்டவில்லை. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று கொள்ளலாமா?

நாமல் இராசபக்சா மட்டும் New York Times இல் வெளிவந்த கட்டுரையில் சில வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் மொத்தம் ஒன்பது ஆண்டுகள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கப்பம், ஊழல், இலஞ்சம், ஊதாரித்தனம் எனக் காட்டாச்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடப் பேகிறார் என்ற செய்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்துள்ளது!

http://www.newsuthanthiran.com/2018/07/04/பத்து-ஆண்டுகள்-காட்டாட்ச/

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply