என்னவொரு நெஞ்சழுத்தம்!!
வடக்கு மாகாணசபையின் 130ஆவது அமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்றது. வடக்கில் சர்ச்சையுடன் தொடரும் அமைச்சரவைப் பிரச்சினை பற்றியும், பளைக் காற்றாலை விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட இருந்ததாக மாகாணசபையின் நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருந்தது. இதைவிட, அரசியல் ரீதியான மிக முக்கிய நகர்வான தீர்மான வரைவும் சபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மிக முக்கியமான இந்தச் சபை அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. தவிர்க்க முடியாத ‘மிக முக்கியமான’ வேறு ஒரு நிகழ்வு இருப்பதால் இதில் தன்னால் பங்கேற்க முடியாது என்று சபைக்கு விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.
அன்றைய தினம் அவரது அமைச்சில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் திருமணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றிருந்தது. முதலமைச்சர் அதில் பங்கேற்றிருந்தார். மணமக்களை ஆசீர்வதித்திருந்தார். இந்த விடயம் மறு நாள் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
கேள்வி– பதிலில் காரணம்
பாட்டும் நானே பாவமும் நானே என்பதைப்போல கேள்வியும் நானே பதிலும் நானே என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தயாரித்து அனுப்பும் கேள்வி– பதில் அறிக்கையில் மேற்படி விடயத்தை ஒட்டி அவர் தயாரித்த கேள்விக்கு அவரே பதிலளித்திருந்தார். அந்தப் பதிலில், ‘‘தமிழர்கள் வாழ்வில் பொதுவாகத் திருமணம் ஒரு தடவைதான் வரும். மாகாணசபை அமர்வுகள் மாதத்தில் இரண்டு தடவைகள் வரும்’’ என்று கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்தப் பதில் சிறு பிள்ளைத்தனமா னது என்பதையும் தாண்டி, ஒரு மக்கள் பிரதிநிதி தன்னைத் தேர்வு செய்த மக்களுக்கு, அதுவும் கொஞ்ச நஞ்ச மல்ல ஒரு லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளை வழங்கிய மக்களுக்குக் கூறும் பதிலாக இல்லை?
மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 130ஆவது அமர்வு வரையிலான பல அமர்வுகளில் முதலமைச்சர் பங்கேற்காமல் ‘கட்’ அடித்திருக்கின்றார். இதனை யும் தாண்டி அவர் பங்கேற்ற அமர்வுகளில்கூட தேநீர் இடைவேளை முடிந்து சிறிது நேரத்தில் பறந்து விடுவார். முதலமைச்சர், தான் பங்கேற்ற ஓர் அமர்வில்கூட இதுவரை முழுமையாக இருந்தது கிடையாது. விதிவிலக்காக முதலாவது அமர்வை மாத்திரமே கூற முடியும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அசண்டையீனமாக அமர்வுகளில் பங்கேற்காமல் விடுவதும், பங்கேற்ற அமர்வுகளிலும் அரை நேரத்துடனும் ஓடுவதுமாக இருந்ததால்தான் அமைச்சரவை பிரச்சினை இன்று பூதாகாரமாகியி ருக்கின்றது.
ஊழல், மோசடி விவகாரம்
வடக்கு மாகாண சபையின் அப்போதைய அமைச்சராக இருந்த ஐங்கரநேசனுக்கு எதிராக, மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்க ளைச் சுமத்தித் தீர்மான வரைவைச் சபையில் முன்வைத்திருந்தார். தீர்மான வரைவு முன்வைக்கப்படுவதற்குச் சில நிமிட நேரங்களுக்கு முன்னதாக மாகாணசபை அமர்வி லிருந்து முதலமைச்சர் வழமைபோன்று வெளியேறியிருந்தார்.
சபையின் அன்றைய அமர்வில் முதலமைச்சர் பங்கேற்று, அந்தத் தீர்மான வரைவுக்குத் தீர்க்கமாகப் பதிலளித்திருந்தால், அந்தப் பிரச்சினை இன்றைய வடக்கு அமைச்சரவை முடக்கம் வரைக்கும் வராமல் போயிருக்கலாம்.அதைவிடுத்து சபை அமர்விலிருந்து ஓடி விட்டு, மறு நாள் பொது நிகழ்வில் வைத்து, குற்றம் சுமத்தப்பட்ட ஐங்கரநேசனுக்கான வக்கீலாகக் கறுப்புக் கோர்ட்டை எப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணிந்தாரோ, அப்போதே அவரது நடுநிலமை, நீதி தவறாமை மீது கரும் புள்ளி விழுந்துவிட்டது.
முதலமைச்சரின் முறைதவறிய செயற்பாட்டால் நடந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் மக்கள் நன்றாக நினைவில் வைத்திருப்பார்கள்.
இப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பான சர்ச்சையை எதிர்கொள்ள முடியாமலேயே முதலமைச்சர் ஒளித்து ஓடிக் கொண்டிருக்கின்றார். வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் ஜூன் மாதம் 29ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னரான ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் ஏதோவொரு வடிவத்தில் அமைச்சரவைச் சர்ச்சை கிளப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
130ஆவது அமர்விலும் அது எழுப்பப்படும் என்பது முதலமைச்சருக்கு நன்கு தெரியும். அதையும் தாண்டி, பளைக் காற்றாலை தொடர்பான விவாதச் சூறாவளி வீசும் என்பதையும் அறிந்தே, முதலமைச்சர் அன்றைய அமர்வில் பங்கேற்காமல் தவிர்த்திருந்தார். அன்றைய சபை அமர்விலிருந்து ஓடி ஒளித்துத் திருமண நிகழ்வுக்குச் சென்றமை அம்பலமானது, சபை அமர்வைவிட திருமண நிகழ்வுதான் முக்கியம் என்ற அவரது பதில்தான் இங்கே விவாதத்துக்குரியது.
மாகாணசபையின் ஒவ்வொரு அமர்வையும் நடத்துவதற்கு 3 லட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. இவை மக்களின் வரிப் பணம். சபை அமர்வுகளிலேயே மக்களின் பிரச்சினைகளை உறுப்பினர்கள் எழுப்புகின்றார்கள். அவற்றுக்குப் பதிலளித்துத் தீர்த்து வைக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. அமைச்சரவையின் தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாணசபைக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர். இப்படிப்பட்ட ஒருவர் சபை அமர்வை விடத் திருமணம்தான் முக்கியம் என்று கூறுவது பொருத்தமாகுமா?
பொறுப்புக்கூறுவதைப் பற்றியும், மக்கள் பிரதிநிதியொரு வர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், 2013ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மாகாணசபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் உரையாற்றியிருந்தார். மற்றவர்களுக்கு வழங்கிய அறிவுரையை முதலில் தான் பின்பற்றினாரா? என்பதை முதலமைச்சர் தனது மனச்சாட்சியிடம் கேள்வி எழுப்பிப் பதிலைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
முதலமைச்சரின் சொல்லும் செயலும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்பது மீண்டும் நிரூபணமாகின்றது. தனக்கு வாக்களித்து மாகாண சபைக்கு அனுப்பிய மக்கள் முட்டாள்கள் என்றும், தான் அதிமேதாவி என்றும் அல்லது தான் எது சொன்னாலும் கேட்டுக்கேள்வி இன்றி, மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அகங்காரமுமே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடத்தையில் தெரிகின்றது.
2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது. அங்கு வந்திருந்த மக்கள் முன்பாக முதலமைச்சர் உரையாற்றினார். ‘‘அதாவது இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதாலோ, மாகாணசபைகளுக்குத் தெரிவு செய்யப்பவதாலோ, எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம்’’ என்று கூறியிருந்தார்.
ஏன் பாடாய்ப்படுத்துகிறார்?
மாகாணசபையால் சாதிக்க முடியாது என்று கூறிய ஒருவர், மாகாணசபை அமர்வுகளை விடத் திருமணமே அதி முக்கியம் என்று கூறிய ஒருவர், மீண்டும் ஏன் முதலமைச்சராக வருவதற்குத் துடியாய் துடிக்கின்றார்? அந்தப் பதவியை அடைவதற்கு ஏன் பாடாய்படுகின்றார்? இயல்பாக எழும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் என்ன? தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு முதலமைச்சர் முயல்கின்றாரா? அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளிலிருந்து தான் தப்பித்துக் கொள்ள அந்தச் சந்தர்ப்பங்களில் பேசிய பேச்சுக்களைக் கவனத்தில் எடுக்கவேண்டாம் என்கிறாரா?
வடக்கு மாகாண முதலமைச்சர் மிக அண்மைக் காலத்தில் உரையாற்றும்போது, தனக்கு முன்னால் நான்கு தெரிவுகள் இருப்பதாகக் கூறினார். அரசியலிருந்து ஒதுங்குவதை முதலாவது தெரிவாக முன்வைத்தார். புதிய கட்சி ஆரம்பிப்பது அல்லது ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதை இரண்டாவது மூன்றாவது தெரிவுகளாக முன்வைத்தார். நான்காவது தெரிவாகக் கட்சி அரசியலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்துவதைக் கூறியிருந்தார்.
மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமற்றவர். மாகாணசபை அமர்வை விடத் திருமணம் முக்கியம் என்ற பதிலும், மாகாணசபையால் எதுவும் சாதிக்க முடியாது என்ற எழுக தமிழ் உரையும் முதலமைச்சர் மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆக, இப்போது அவர் முன்பாக இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. அரசியலிருந்து ஒதுங்குவது. அல்லது கட்சி அரசியலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்துவது. அவர் இதில் எதைத் தெரிந்தெடுத்தாலும் தமிழ் மக்களின் ஒற்றுமை குலையாமல் காக்கப்படும்.
https://newuthayan.com/story/18/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html
Leave a Reply
You must be logged in to post a comment.