வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?
30.8.2018அன்று வடமாகாண நிதி முகாமைத்துவச் செயற்திறன் விருது வழங்கும் நிகழ்வில் வடமாகாண முதல்வர் சி.வி. விக்கி னேஸ்வரன் உரையாற்றுகையில் ‘‘சிங்களவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய தமிழ்த் தலைமை உருவாக வேண்டும்’’ என்றொரு புதிய கருத்தை முன்வைத்திருந்தார். தமது அந்த உரையில் தமிழர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் சிங்களவர்கள்கூடப் பொருளாளர் பதவியைத் தமிழருக்கே கொடுப்பார்கள் எனவும் பெருமையாகக் கூறியிருந்தார்.‘‘அரசியல் ரீதியாகக் கணக்கு வைப்பதில் நாம் சிறந்தவர்களாகவும், கணக்கு விடுவதில் பெரும்பான்மையினர் பெரும் வல்லவர்களாகவும் இருப்பது உணரப்பட்டுள்ளது ’’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அவ்வா றெனில், வடக்கு மாகாண சபையில் கணக்கு வைத்தது யார்? கணக்கு விட்டது யார்?
விக்னேஸ்வரனின் தலைமையிலான வடக்கு மாகாணசபையின் நிலை
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டபோது விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கி, பெரும்பான்மையினரான ஆளும் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமிதம் அடைந்தது. அதில் மக்களின் பங்கு பெரும் பங்காகும். இத்தகைய ஒரு பெரும் பொறுப்பை விக்கினேஸ் வரனை நம்பி வடக்கு மாகாணத் தமிழ் மக்கள் கையளித்தனர் என்பதுதான் சரியானது.
இந்தச் சபையில் பெரும்பான்மையினரான விக்கினேஸ்வரன் தலைமையிலான உறுப்பினர்கள் கணக்கு விட்டதால் தான், முதலாவது வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என முதலமைச்சராகலேயே உறுதிப்படுத்தப்பட்டது. இங்கு கேள்வி என்னவென்றால், தமிழர்கள் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்கள், கணக்கு வைத்தல் விடயத்தில் நேர்மையானவர்கள் என்பது தனது தலைமையிலான வட மாகாணசபையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் விக்கினேஸ்வரன்.
குறித்த ஊழல் விடயத்தில், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இந்தத் தகவல்களை வழங்கி, ஊழல் செய்தவர்களைத் தண்டிக்காது, மக்களின் பணத்தை மீளப்பெறாது, மக்களுக்குக் கணக்கு விட்டவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்தான். அவர் சிங்களவரா?
விக்கினேஸ்வரனின் புதிய ஊடக வடிவம்
ஊடகவியலாளர்கள் இத்தகைய கேள்விகளைக் கேட்டுச் சங்கடப்படுத்தி விடுவார்கள், அல்லது மூக்குடைபட நேரிடும் என்பதால் தான் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற புதிய ஊடக வடிவம் ஒன்றை விக்கினேஸ்வரன் அறிமுகப்படுத்தினார். ஆனால், விக்கினேஸ்வரன் மற்றவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களின் பதில் என்னவென்று அறிவதற்காக ஊடகங்களைப் பயன்படுத்துவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதருக்கு அழகல்ல. ஊடகங்களுக்குச் செய்தி வழங்காமல் ஒரு மூடிய அறைக்குள் இருந்து கதைத்து முடிவெடுக்க வேண்டிய விடயம் இது. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது தெரிகிறது. இந்த இரண்டு மூத்த தலைவர்களது நிலையை நோக்கும்போது ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பதை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சம்பந்தரின் அரசியலில் குறை கண்டுபிடித்த பலர், விக்கினேஸ்வரனின் ஒப்பீட்டுடன் சம்பந்தர் நல்ல தலைவர் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதுபற்றி சாதாரண மக்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து இது. (நேநீர்க் கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க மூவரின் சம்பாசனையிலிருந்து எடுக்கப்பட்டது) “எனக்குச் சம்பந்தரைப் பிடிக்காது. ஆனால், அந்த மனிசன் தமிழரைச் சிங்களவர் அடிக்கும் அளவுக்குச் சிங்களவரைச் சீண்டவில்லை, ஆனால் விக்கினேஸ்வரன் தமிழருக்கு அடிவாங்கித் தரப்போகிறார்’’ என்று கூறினார் அதில் ஒருவர்.
இந்த வகையில் பார்த்தால், ஏனைய தமிழ்த் தலைவர்களோ, முஸ்லிம் தலைவர்களோ, சிங்களத் தலைவர்களோ திராணி உள்ளவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்.
மறைந்து வாழ்ந்த பிரபாகரன்கூட உண்மையைச் சொல்வதற்காக ஊடகங்களுக்கு முகம்கொடுத்திருந்தார்.
ஊடகங்களுக்கு முகம்கொடுக்கப் பயப்படுகின்ற ஒரு கோழை மனிதர் எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும்? புதிய தமிழ்க் கட்சியை உருவாக்க முடியும்? தமிழ் மக்கள் பேரவையை தகுந்த மக்கள் பேரியக்கமாக இவரால் எப்படி மாற்ற முடியும்? விக்கினேஸ்வரன் சிங்களவர் என்பதாலா தமிழ்க் கட்சிகளைப் போட்டிக்கு இழுக்கிறார்? “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகிகளு டன் கூட்டுச் சேரக்கூடாது ’’ எனக் கூறுவதன் மூலம் தமிழ் மக்கள் எப்போதும் பிரிந்திருப்பதையே அவர் விரும்பு கிறார்.
நீண்ட கால ஆயுதப் போராட்டத்தை நடத்தித் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்கூட ஒரு பன்னாட்டுப் பத்திரிகை மாநாட்டை நடத்தியிருந்தார். பல நியாயங்களைக் கருத்தில் எடுத்துப் பல தீர்ப்புக்களை வழங்கிய ஓர் உயர் நீதிமன்ற நீதியரசரால் ஊடகங்களுக்கு முகம்கொடுக்க முடியாதிருப்பது என்பது வேடிக்கையானது. கையில் இருந்த இயன்றளவு அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்குத் தொண்டாற்றாமல், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பியனுப்பி யவர்களும், கோழைகளும் இனிமேலும் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க நினைப்பது தவறு. அந்த அளவுக்குத் தமிழினம் பாதிக்கப்பட்டு விட்டது.
தன்னைக் கெட்டிக்காரனாக காட்டுவதைக் கைவிட வேண்டும்
பட்டி மன்றங்கள், விவாத மேடைகளில் வாய்ப்பேச்சால், வேறு யாரையாவது நக்கலடித்துத் தன்னைக் கெட்டிக்காரனாகக் காட்டிக்கொள்ளும் நிலையைக் கையில் வைத்திருக்கின்ற விக்கினேஸ்வரன் முதலில் அதைக் கைவிட வேண்டும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு அவர் எத்தகைய சேவையை ஆற்றியிருக்கிறார் என்பதை ஒவ்வோர் ஊரவர்களும் நன்கு அறிவர். பல விடயங்களில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதை இனி வருகின்ற தேர்தல்களின்போது முதலமைச்சர் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.
பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் தலைவர்களிடம் மற்றவரை அடிமைப்படுத்தவேண்டும் என்ற மனப்பாங்கு எப்போதும் இருப்பதுண்டு. பிரிட்டன் மீது விசுவாசம் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் அந்த மனநிலை இருப்பதாலேயே சிங்களவரை அடக்கும் அல்லது கட்டுப்படுத்தும் மனநிலை உருவாகியிருக்கிறது.இந்த நாட்டில் சிங்களவர்கள் 80வீதம் எனவும், தமிழர்கள் 12 வீதம் எனவும் எனைய இனங்கள் 8 வீதம் எனவும் சாதாரண தமிழ் மக்களுக்கே நன்கு தெரிந்திருக்கிறது. இந்த விடயம் முதல மைச்சருக்குத் தெரியாதிருப்பது ஆச்சரியம்தான். இந்த நிலையில் 12 வீதமான சிறுபான்மை மக்கள் 80வீதமான பெரும்பான்மையினருக்கு ஒருபோதும் தலைமை தாங்கவோ, அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. சிங்களத் தலைவர்கள் 80 வீதமான பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்படுவதால், அவர்களின் தலைமைத்துவத்தைச் சிங்கள மக்கள் ஏற்பர்.
ஒரு முனிவரின் கதை
மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு முன்னர், அவ்விதம் ஆலோசனை கூறுபவர் அதற்குத் தக செயற்படுபவராக இருப்பது அவசியம். தம்மை ஒரு ஆத்மிக வாதியாகக் கூறிக்கொள்வதால், ஒரு முனிவரின் கதை முதலமைச்சருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
ஒரு தாய் தனது மகனை இனிப்புச் சாப்பிடவேண்டாம் எனப் பலமுறை கேட்டும் அவன் இனிப்பைச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். அந்தத் தாய் தனது மகனை ஒரு முனிவரிடம் கூட்டிச்சென்று, ‘‘இவனை இனிப்புச் சாப்பிடவேண்டாம் என்றுகூறுங்கள் சுவாமி ’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு முனிவர் ஒரு தவணை கொடுத்து அந்த நாளன்று மகனைத் தன்னிடம் அழைத்து வாருங்கள் என்று தாயிடம் கூறி அனுப்பினாராம். அந்தத் தவணைக்குச் சென்றபோது மீண்டும் ஒரு தவணை கொடுத்தாராம். பின் மூன்றாம் தடவையும் தவணை கொடுத்து அனுப்பினாராம். அதன் பின்னர் தான் முனிவர் அந்தப் பையனுக்கு “நீ இனிமேல் இனிப்புச் சாப்பிடக்கூடாது ’’ என்று கட்டளையிட்டிருக்கிறார்.
இதைக்கேட்ட தாய் ‘‘சுவாமி இதை முதல் நாளே நீங்கள் மகனுக்குச் சொல்லியிருக்கலாமே? ’’ என்று கேட்டபோது முனிவர் ‘‘நான் முதலாவது தடவை தவணை கேட்டது ஏன் என்றால், முதலில் நான் இனிப்புச் சாப்பிடுவதை நிறுத்துவதற்காகவே.இப்போதுதான் நான் இனிப்புச் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். அதன் பின்னர்தான் அதற்கு முன்னுதாரணமாக இருக்கும் நான், உங்கள் மகனுக்கு இனிப்புச் சாப்பிடவேண்டாம் என்று பணிப்புரை விடுக்க முடிந்தது’’ என்றாராம்.
முதலமைச்சர் முதலில் தனது தலைமையில் உள்ள வடக்கு மாகாண சபைக்குச் சரியாகக் கணக்குக் காட்டியபின்பே, கணக்கு விடுபவர்கள் பற்றிப் பேச முடியும். வெறும் வாய்ப்பேச்சால் பயனில்லை. முன்னுதாரணமாக அவர் இருக்கவேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதையும் அவர் அறிந்திருப்பார். தமிழரே தமிழருக்குக் கணக்கு விட்டுவிட்டுச் சிங்களவர்களைக் கெட்டவர் களாகக் காட்டுவது நல்லதல்ல.
https://www.tamilwin.com/articles/01/192941?ref=rightsidebar-article
Leave a Reply
You must be logged in to post a comment.