குழப்ப மனநிலையில் உள்ளார் விக்கி அதற்குக் கூட்டமைப்பு பொறுப்பல்ல

குழப்ப மனநிலையில் உள்ளார் விக்கி அதற்குக் கூட்டமைப்பு பொறுப்பல்ல

முதல்வரின் கூற்றுக்கு சுமந்திரன் பதிலடி

(எஸ். நிதர்­சன்)

முதலமைச்சர் விக்கி தனது நேற்றைய (நேற்று முன்தினம்) உரையில் தனக்கு முன்பாக நான்குதெரிவுகள்உள்ளன எனச் சொல்லியிருக்கிறார். ஆனால்
அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தனக்கு மூன்று தெரிவு கள் உள்ளன எனக் கூறியிருந்தார்.இப்போது நான்கு தெரிவுகள் உண்டு என்கிறார். நாளைக்கு
ஐந்து தெரிவுகள் உண்டு எனவும், பத்துநாள்களின் பின்னர் பத்து தெரிவுகள் உண்டு எனவும் அவர் சொல்வார்.

ஆகவே அவரின் குழப்ப மனநிலைக்கு நாங்கள் பொறுப்பாளிகள்அல்லர். அவர் தனது மனநிலைக் குழப்பத்தைச் சீர்செய்துதெளிவானவிளக்கத்தைச் சொன்ன பிறகு நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வது நல்லது – இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் பருத்தித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைத்தோ அல்லது வேறு கட்சியில் இணைந்தோ அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு அது தாக்கத்தை ஏற்படுத்துமா? என ஊடகவியலாளர் ஒருவர் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இன்றைய பத்திரிகைகள் சிலவற்றில் சமஷ்டி அரசமைப்பு எங்களுக்கு தேவையில்லை என்று நான் காலியில் சொன்னேன் எனத் தலைப்புச் செய்திகள் பிரசுரமாகியிருக்கின்றன.

ஓரிருபத்திரிகைகள் செய்தியை வெளியிட முன்னர் என்னோடு பேசியிருந்தார்கள். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அடிப்படைக் கொள்கைசமஷ்டிக்கொள்கை. சமஷ்டி குறித்து நாங்கள் ஒரு நிலைப்பாட்டைத்தொடர்ச்சியாக-கிரமமாக – எடுத்திருக்கிறோம். ஆகையால்சமஷ்டி வேண்டாம் என்றுநான்சொன்னேன் எனச்
செய்தி வந்திருந்தாலும் அது குறித்து என்னிடத்தே கேட்டுப் பிரசுரித்திருப்பது நன்றாக இருந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாகச் சில ஊடகங்கள்என்னிடம்
அது தொடர்பில் கேட்காமல் அப்படியே பிரசுரித்திருக்கின்றார்கள். ஆகையால்இதைத் தெளிவாக விளக்கவேண்டியதொருதேவை ஏற்பட்டிருக்கின்றது.

புதிய அரசமைப்பின் வெற்றிக்குப் பிரச்சாரம் 

புதிய அரசமைப்பு உருவாக்கம்சம்பந்தமாகவும்,புதியதொரு அரசமைப்பு நாட்டுக்கு அத்தியாவசியம் என்று மக்கள்மத்தியிலே ஒரு பிரசாரமாகவும் தென்பகுதியில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடந்து வருவது தமிழ்மக்களுக்குத் தெரியாத அல்லது அவ்வளவு பரிச்சயமில்லாத விடயமாக இருந்துவருகிறது. இதற்கு அடிப்படையான காரணம் தமிழ்ஊடகங்கள் இதனை இதுவரைபெரிதாகப் பிரசுரித்திருக்கவில்லை.

இன்று வந்த செய்தியில் இருந்தாவது இப்படி  யொன்று தொடர்ச்சியாக நடந்து வருகின்ற தென்பதை முதற் பக்கத்தில் போடுவதற்கு உதவியாக இருக்கிறது. அந்தவகையில் அது நல்ல விடயம்.

காலியில் இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தக் கூட்டம் அரசமைப்பு முன்னெடுப்பின் ஏழாவது கூட்டமாகும். அதற்கு முன்னர் சம்மாந்துறையில்நடந்திருக்கிறது.

அது ஒன்றுதான் தமிழ்ப் பிரதேசத்தில் நடந்த கூட்டம். மிகுதி ஆறு கூட்டங்களும் சிங்களப் பிரதேசங்களிலே நடைபெற்றிருக்கின்றன. இதைப் பழைமையான இடதுசாரிக் கட்சிகள் சில முன்னெடுத்துச் செய்கின்றன. இந்தக் கூட்டங்களில் அரசியல்கட்சிகள் என்ற ரீதியில் எல்லாக் கூட்டங்களிலும் பங்குபற்றுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும்தான்.

அதேநேரம்ஓரிரு கூட்டங்களிலே ஐக்கியதேசியக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து பேசியிருக்கின்றார்கள். இதனுடைய கருப்பொருள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிவெற்றி பெறவேண்டும் என்பதே. இந்தஅரசமைப்பு தொடர்பில் குறிப்பாகச் சிங்கள்மக்கள் மத்தியிலே விளக்கங்களை எடுத்துச் சொல்லி இதில் உள்ள முக்கிய பிரச்சினைகளான தேசியஇனப் பிரச்சினைக்கான தீர்வு,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் ஆகிய இரண்டுவிடயங்களையும் கூடுதலாகமுன்னிறுத்தி இந்த அரசமைப்பு மாற்றம் வெற்றிபெற வேண்டுமென்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

ஜே.வி.பி. 20 ஆவது திருத்தத்தை முன்வைத்திருந்தாலும் கூடஎல்லாக் கூட்டங்களிலும் முதலாவது தெரிவு புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதே என்றும், அந்தப்புதிய அரசமைப்பு உருவாக்கப்படுமாக இருந்தால்தாங்கள் 20ஆவது திருத்தத்தைக் கைவிடுவோம் என்றும் தெளிவாகச் சொல்லி வருகின்றார்கள்.
நாங்களும் எங்கள் நிலைப்பாடாக 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவு என்று கூறியிருக்கிறோம்.

ஏனென்றால் எங்கள் கொள்கையின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும். ஆனால் அதுமட்டும் செய்வதனால் இந்தநாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. ஆகவே அடிப்படையான தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒரு புதிய அரசமைப்பினூடாக இடம் பெறவேண்டும். ஆகையினால் புதிய அரசமைப்பு உருவாகவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி வருகின்றோம்.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் குணாதிசயம்

இதனை நாங்கள் சொல்லும் போது இடைக்கால வரைவில் உள்ள விடயங்களையும் இப்பொழுது இடைக்காலவரைவில் இருப்பது ஒரு மாதிரி வரைவாக நிபுணர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் விடயங்களையும் சொல்லி வருகின்றோம். அதில் சமஷ்டி என்றவார்த்தை உபயோகப்படுத்தப்படவில்லை. அதே போன்று ஒற்றையாட்சி என்ற சொல்லும் உபயோகப்படுத்தப் படவில்லை. இவை,எல்லோருக்கும் தெரிந்த விடயம். இவை குறித்து பலதடவைகளில் அதாவது நூற்றுக்கணக்கான தடவைகளில் நானே தமிழ்ப் பிரதேசங்களில் தமிழில் விளக்ககங்களை சொல்லியிருக்கிறேன். அதற்கமைய சமஷ்டியின் அடிப்படைக் குணாதிசயங்கள் இரண்டைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். அது இடைக்கால அறிக்கையிலேஉள்ளது. இப்பொழுது மாதிரி வரைவிலும் இருக்கிறது.

ஆனால் சமஷ்டி என்ற வார்த்தையைக் குறிக்கும் பெயர்ப்பலகை தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. இதற்கான பலசர்வதேச முன்னுதாரணங்களையும் நாங்கள் சொல்லியிருக்கின்றோம். ஆனால் ஒற்றையாட்சி முறையாக இது இருக்கமுடியாது என்பது எங்கள் திடமான நம்பிக்கை. இந்தவேளையில் சற்று சரித்திரத்தையும் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

தந்தைசெல்வா கைச்சாத்திட்ட  பண்டா- செல்வா ஒப்பந்தத்திலும், சமஷ்டி என்ற வார்த்தை இருக்கவில்லை. தந்தை செல்வா கைச்சாத்திட்ட  டட்லி-செல்வா ஒப்பந்தத்திலும் சமஷ்டி என்றவார்த்தை இருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த புதிய அரசியல் நகலிலும் சமஷ்டி என்ற வார்த்தை இருக்கவில்லை.ஆனால்ஒற்றையாட்சி என்ற வார்த்தை விலக்கப்பட்டிருந்தது. அப்படியான ஒழுங்கு முறைகளுக்குள்ளால்தான் நாங்கள் கடந்து வருகின்றோம்.

அரசமைப்பைப் பார்த்து மக்கள் பயப்படக்கூடாது. இந்த அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமான நாடாளுமன்றில் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது,2016ஆம்ஆண்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்ஆற்றிய உரையில், சமஷ்டி என்று சொன்னால் தெற்கிலுள்ளவர்கள் பயப்பிடுகின்றார்கள், ஒற்றையாட்சி என்றுசொன்னால் வடக்கில் இருப்பவர்கள்  பயப்பிடுகின்றார்கள்.

ஆகவே ஒருநாட்டின் அரசமைப்பானது மக்கள் பார்த்துப் பயப்படுகின்ற ஆவணமாக இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். ஆகவே நாங்கள் ஒரு நவீன அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொல்லியிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கூற்று எங்கள் இடைக்கால அறிக்கையில் அப்படியே கொடுக்கப் பட்டிருக்கின்றது.

ஆகவே தான் சொற்களில் தங்கியிருந்து குழப்பத்தைவிளை விக்காமல்-பெயர்ப்பலகைகளைப் போட்டு அதனாலே இந்த முயற்சி தோற்கடிக்கப் படாமல் இருப்பதற்காக நாங்கள் சொற்களைத் தவிர்த்து உள்ளடக்கத்தில் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுமுறையைஉருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். இது தெளிவாகப் பல தடவைகள்சொல்லப்பட்டவிடயம்.

இதனைக் கூட்டங்களில் பேசுகின்ற போது சிங்கள மொழியில் மூன்று கூட்டங்களில்உரையாற்றியிருக்கின்றேன்.

இதில் இரத்னபுரியில் உரையாற்றும்போது இந்த நாடு ஒரு நாடாக இருக்க வேண்டுமாக இருந்தால் புதிய அரசமைப்பு தேவை என்றும், தமிழ் மக்கள் ஒரே நாட்டில்வாழ்வதற்கான தங்களுடைய இணக்கப்பாட்டை இதுவரை கொடுத்திருக்கவில்லை என்றும் கூறியிருந்தேன். இதனைக் காலியில் நடந்த கூட்டத்திலும் சொன்னேன்.ஆனபடியால்தான் சமூக ஒப்பந்தம் அவசிய மானது, நாங்கள் ஒரே நாட்டில் வாழ்வதற்குத் தயார் என்று எங்கள் இணக்கப்பாட்டைக் கொடுப்பதற்கு நிபந்தனையாகச் சொல்வது என்னவெனில்,ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே என்றார்.

பெயர்ப்பலகை வேண்டாம்

காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டியைப் பற்றிப் பல விடயங்களை நான் சொல்லியிருந்தேன்.என்னுடைய பேச்சுக் குப் பிறகு சிங்களத்தில் ஒரு
கேள்விகேட்கப்பட்டது.

அப்படியானால் சமஷ்டி அரசமைப்பை மட்டும்தானா நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று சிங்களமொழியில்கேட்கப்பட்டது.அது என்னுடைய பேச்சின் வெளிப்பாட்டில் இருந்துகேட்கப்பட்ட கேள்வியாகும். நான்வழமையாகச்சொல்லும் பதிலைத்தான் அதிலும் சொல்லியிருந்தேன். அதாவது சமஷ்டி என்ற பெயர்ப்பலகை எங்களுக்குத் தேவையில்லை. அதைத்தான்சொன்னேன்.அவ்வாறு சொன்னதை இன்று எல்லா ஊடகங்களும் சமஷ்டி எங்களுக்குத் தேவையில்லை என்று நான் சொன்னேன் எனத் தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.

ஆகையால்தான் இந்த ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி எப்பொழுதுமே தொடர்ச்சியாகத் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழிலேயும் சிங்களப் பிரதேசங்களில் சிங்களத்திலும் ஒரே செய்தியைத்தான் நான் சொல்லி வந்திருக்கின்றேன் என்பதை தெளிவு படுத்துகின்றேன். அதாவது பெயர்ப்பலகை எங்களுக்கு அவசியமில்லை.ஆனால் முன்மொழிந்திருக்கும் வரைவிலே சமஷ்டிக்கான அடிப்படைக் குணாதிசயங்கள் உண்டு.அவை என்ன என்பதைப் பலதடவைகள் நாங்கள் விளக்கியும்இருக்கின்றோம். ஆகவே இந்த விளக்கத்தை ஊடகங்கள் பிரசுரிக்க வேண்டுமென்று தாழ்மையோடு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

நாடாளுமன்றக் குழு குறித்தும் கூறவேண்டும்

அடுத்ததாக நாடாளுமன்றக் குழு தொடர்பிலும் தெரிவிக்க வேண்டியிருக்கின்றது. அதாவது நாடாளுமன்றநிதிக்குழுவென்று ஒன்றுதற்போதையநாடாளுமன்றத்திலே புதிதாக உருவாக்கப் பட்டிருக்கிறது.பொதுக்கணக்குகள் குழு என்றும் கோப்புகள் கணக்கு குழு என்று இரண்டு குழுக்கள் இருக்கின்றன.அவைஇரண்டும் நடந்து முடிந்த கணக்குகளை ஆய்வு செய்யும் குழுக்கள்.

ஆனால் இந்தநிதிக்கு ழுஎன்பது இப்பொழுது வரவு-செலவுத் திட்டத்தை மேற்பார்வை செய்யும் குழு. அது புதிதாக உருவாக்கப் பட்டகுழு. வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னரும் அதன்பின்னரும் நிதிமுன்மொழிவுகளைஅமுலாக்கம் செய்வதை மேற்பார்வை செய்கின்ற நாடாளுமன்றக்குழு. இந்தக் குழுவின் தலைவராக நான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்தக்குழு நாடாளுமன்றத்துக்கு வெளியே வேறு மாகாணங்களில் தன்னுடைய அமர்வை வைப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. முதலாவது அமர்வு நாளைக்கு ( இன்று) கண்டியிலே இடம்பெறுகிறது. வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடும் கூட்டம்தான் நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின்கூட்டம். அதே நேரத்தில் நாளை 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இரண்டாவது பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. (மிகுதி நாளை)


யாழ்ப்பாணம்,செப்.05

சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.. ஆகவே சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து, புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம்.

சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத்தேவையில்லை. இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.திங்களன்று யாழ்ப்பாணத்தில் ஊடக வியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமஷ்டி தேவையில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என வெளியாகியிருக்கும் கருத்துக்கள் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவா? அவ்வாறு நீங்கள் கூறிய கருத்து உங்களது தனிப்பட்ட கருத்து என்று பங்காளிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனரே? – என ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

இது சம்பந்தமாகத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகம், எங்கள் பங்காளிக் கட்சித் தவைர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் என்னிடம் இது குறித்து கேட்கவில்லை. நான் மறுப்பறிக்கை வெளியிட்ட பின்னர் கூட என்னிடம் கேட்கவில்லை. இது மிகவும் துரதிஷ்டவசமான விடயம். அதனைத் தெரிந்துகொண்டுதான் என்னிடம் கேட்
வில்லை. ஏனெனில் அதனை என்னிடம் கேட்டால் அதற்கான சரியான விளக்கத்தை நான் கொடுத்து விடுவேன் என்ற காரணத்தால் குழப்பகரமான செய்தி களைப் பிரசுரிப்பதற்காகவே அப்படிச்
செய்தார்கள்.
ஆனாலும் இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக எமது கட்சி அலுவலகத்தில் நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். தெளிவுபடுத்தலை தவறாகப் பிரசுரித்த பத்திரிகைகள் அந்த தெளிவு படுத்தலை இன்னும் பிரசுரிக்கவில்ல. மாறாக அந்தத் தவறான கருத்தை இன்னமும் வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்துக்  கொண்டிருக்கின்றார்கள். சுமஷ்டி என்றால் என்னவென்று தெரியாத பலர் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது விளக்கத்தில் தெட்டத்தெளிவாகப் பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். சமஷ்டிக் குணாதிசயங்கள் அடங்கிய அரசமைப்புச் சட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்பது எங்கள் நிலையான கொள்கை. சமஷ்டிக் கட்டமைப்பிலான
என்று எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கின்றோம். சமஷ்டிப் பெயருள்ள அரசமைப்பு என்று நாங்கள் எங்கேயும் சொன்னது கிடையாது. சமஷ்டி பெயர் இருக்கவேண்டுமா இல்லையா என்பது பற்றித் தெட்டத் தெளிவாக எங்கள் மக்களுக்குப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களும் இருந்த பல கூட்டங்களிலேயே நாங்கள் இதைச் சொல்லியிருக்கின்றோம்.

முதற்தடவையாக சமஷ்டியைப் பற்றி நான் சொன்ன விடயமல்ல இது. நான் நூறு தடவை பல இடங்களில் பெயர்ப் பலகை தேவையில்லை, உள்ளடகக்கம் தேவை என்றும், சமஷ்டிக் குணாதிசயம் என்ன என்றும் சொல்லயிருக்கின்றேன்.அப்படியிருக்கையில் பங்காளிக் கட்சித் தலைவர்களோ அல்லது வேறு எவரோ இதை விமர்சிக்கின்றவர்களுக்கு சமஷ்டி குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உண்டா என்பது எனக்குத் தெரியாது. இடைக்கால அறிக்கையிலே எந்தெந்தப் பக்ககங்களில் அவை முன்மொழியப்பட்டிருக்கின்றன என்று பார்க்க வேண்டும்.

அந்த இடைக்கால அறிக்கையில் இருக்கிற விடயங்கள் தான் இன்றைக்கு ஒரு வரைவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு குணாம்சங்கள் அந்த வரைவில் இருக்கின்றன.

சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து, புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது சொன்னால் அதற்குப் பதிலை நான் சொல்லாம். ஆனால் சந்தர்ப்பவாதிகளாகத் திடீரென்று யாரோ ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார்கள் என்பதற்காகச் சுமந்திரன் சொன்னால் அது நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுபவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை  என்றார்.

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சுமந்திரன் இப்படிச் சொன்னது எழுபது ஆண்டுகாலப் போராட்டத்துக்குச் செய்யுயும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்சி வீதி வீதியாக இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர் கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொடுத்துக் கொலை செய்த காலங்களில் அப்படிப் பிடிபடாமல் கொழும்புக்கு வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பராமரித்து வந்த வர்களில் நானும் ஒருவன்.

நான் எந்த வேளையிலும் எந்தச் சந்தியிலும் முகமூடி அணிந்து கொண்டு எவரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் இப்போது எனக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவதற்குத் துணிந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் நான் எவரையும் துரோகி என்ற வார்த்தையால் இதுவரை வர்ணித்தவன் இல்லை. ஆகையால் அவர் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார். (காலைக்கதிர் 05-09-2018)

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply