சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

சமகால அரசியல் நிலமைகள் குறித்து சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லையென நான் காலியில் பேசியதாக இன்றைய தினம் பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சில பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் பல ஊடகங்கள் என்னை கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தமிழரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையே சமஸ்டியாகும். இந்நிலையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லையென நான் கூறியதாகச் செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தளவில் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்தாலும் எங்களுடைய கொள்கையின் படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும்.

புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான 2 குணாம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது மாதிரி வரைபிலும் உள்ளது. ஆனால் சமஸ்டி என்ற பெயர்பலகை அல்லது சொல்லாடல் இருக்க கூடாது என்பதுடன், புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவும் இருக்ககூடாது. இது எங்களுடைய நிலைப்பாடு.

புதிய அரசியலமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில், “சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படக்கூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது. எனவே நவீன அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக்கருத்து இடைக்கால வரைபில் அப்படியே கூறப்பட்டுள்ளது. ஆகவே பெயர்பலகையில் அல்லது சொற்களில் தங்கியிருந்து குழப்பங்களை விளைவிக்காமல், புதிய அரசியலமைப்பு முயற்சிகளை தோற்கடிக்காமல் இருப்பதற்கு நாம் பெயர்பலகை அல்லது சொல்லாடலை தவிர்த்து உள்ளடக்கத்தில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே நான் வழக்கமாகக் கூறுவதைபோல் சமஸ்டி பெயர்பலகை அல்லது. சொல்லாடல் எமக்கு தேவையில்லை. என்றே கூறினேன்” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply