வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும்- ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் சம்பந்தன் வலியுறுத்து
August 28, 2018
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கௌரவ மாவை சேனாதிராஜா தலைவர் இலங்கை தமிழ் அரசு கட்சி, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தலைவர் டெலோ, மற்றும் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைவர் புளொட் உள்ளடங்கலான அனைத்து மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்பதோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை இக்கூட்டத்திற்கு அழைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இரா அவர்கள் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும், வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதனையும் சுட்டிக்காட்டிய அதேவேளை, வடக்கு கிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மேலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் அழிவுகளால் மிகவும் பாதகமான விளைவுகளை சந்தித்துள்ளார்கள் என்பதனையும் எடுத்துக் கூறினார்.
இதன்போது ஜனாதிபதி அவர்கள் தனது அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இராணுவத்தின் வசமிருந்த 88சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு, இங்கே, பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த 75 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சுட்டிக்காட்டினார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இராணுவ தலைமைபீடங்களுடனும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளமையையும் இரா சம்பந்தன் அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயாகில் இராணுவத்தின் வசமுள்ள அணைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ் மக்கள் வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், யுத்தத்தின் நிமித்தம் பல தசாப்தங்களுக்கு மேலாக தமது இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், தற்போது இந்த காணிகள் காடுகளாக வளர்ந்துள்ளன, இந்த சந்தர்ப்பத்தில் வன பாதுகாப்பு மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களங்கள் எல்லைக்கற்களை பதித்து இக்காணிகளை கைவசப்படுத்துகின்றமையையையும் கவனத்திற்கு கொண்டு வந்தார். மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் அமைவதனையும் இரா சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கு பல தசாப்தங்களாக அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையையை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் மேற்குறித்த பிரச்சினையை கையாண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று திணைக்களங்களின் பிரதானிகள், காணி ஆணையாளர் மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு அமர்வொன்றை மிக விரைவாக ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமது காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தமது காணிகளை அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் கிடைக்கப்பெறும் எந்தவொரு சலுகைகளையும் பெற முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் இந்த பிரச்சினை விரைவாக தீர்க்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
காணி விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் பாரிய பிரச்சினை தொடர்பில் பேசிய இரா. சம்பந்தன் அவர்கள் 1980களில் மஹாவலி சட்டத்தின் கீழ் மஹாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட L திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இத்திட்டமானது வேறு மாவட்டங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து குடியமர்த்திய வெலி ஓயா அல்லது மணலாறு திட்டம் எனவும் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டங்களால் இத்திட்டம் நிறுத்தப்பட்டதனையும் சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளி இடங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து இந்த பிரதேசங்களில் குடியமர்த்திய திட்டங்களையும் எடுத்துக்கூறினார். தற்போது இந்த திட்டத்திற்கு மீள உயிரூட்டம் கொடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தும் திட்டங்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்ற சாட்டுக்கள் உள்ளதனை இரா சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள் வெளியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நீர் கொண்டுவரப்படும் பட்சத்தில், நீர்ப்பாசன வசதியற்ற முல்லைத்தீவு மாவட்டம் நீர்ப்பாசன வசதிகளை பெறுவது மட்டுமல்லாது காணிகளை உடைய பயிர்செய்கையில் ஈடுபடும் அம்மாவட்ட மக்கள் அத்தகைய திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டும் என்பதோடு, காணி இல்லாத அரச காணிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடைய முல்லைத்தீவு மாவட்ட மக்களும் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடனடியாக அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள் அத்தகைய திட்டங்கள் இடம்பெறாது என்றும் தாம் நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்று சரியான நிலைமையை உறுதிப்படுத்துவேன் எனவும் உறுதியளித்தார்.
அரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்பில் தமிழ் இளைஞர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், சிங்கள அமைச்சர்கள் சிங்கள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதனையும் முஸ்லீம் அமைச்சர்கள் முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதனையும் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களே சில அமைச்சுக்களின் ஊடாக வேலை வாய்ப்பு பெறுவதனையும் எடுத்துரைத்த இரா. சம்பந்தன் அவர்கள் இதனால் தமிழ் வாலிபர்களுக்கு யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்டுகின்றமையானது நல்லிணக்கத்தையோ ஒருமைப்பாட்டினையோ ஏற்படுத்த முடியாத ஒரு நிலைக்கு நாட்டினை நகர்த்தும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் நல்லிணக்கத்தினையோ தேசிய ஒருமைப்பாட்டினையோ ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் யாப்பில் 13 வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து நியாயமான தீர்வொன்றினை அடைவதற்கு பகல்வேறு முயற்சிகள் கடந்த அரசாங்கங்களினாலும் ஜனாதிபதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க தீர்வுத்திட்டம், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆகஸ்ட் 2000 தீர்வுத்திட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன் மொழிந்த தீர்வு திட்டம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இந்த திட்டங்கள் தொடர்பில் பாரிய அளவில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன, ஆகவே தேசிய பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வொன்று பிரிக்கப்படாத பிளவுபடாத இலங்கைக்குள் எட்டப்படுவதன்மூலமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.
வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன் அவர்கள் பின்வரும் துறைகள் முக்கியமான துறைகளாக கருதப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
- விவசாயம்
2. தொழிற்துறை
3. மீன்பிடி
4. கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி
5. வீட்டு கட்டுமானம்
6. முக்கியமான வீதிகள்
7. பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தி
8. சுகாதாரம்
9. கல்வி
10. தொழில் வாய்ப்பு
மேற்குறித்த அபிவிருத்திகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முகமான தனியார் துறையினரின் பங்களிப்பு அவசியம் என்பதனையும் இரா. சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை தெரிவித்ததோடு கூட்டத்தில் பங்கெடுத்தும் இருந்தார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.