வரலாற்றில் வாழும் கருணாநிதி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்ற ஐம்பதாம் ஆண்டு இது.
இத்தனை ஆண்டுகளில் கருணாநிதியும் தி.மு.க-வும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம். அண்ணா இறந்த பிறகு தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி வருவதற்குத் துணைநின்றவர் எம்.ஜி.ஆர். ஆனால், அடுத்த மூன்றாண்டுகளில் அவரை விட்டுப் பிரிந்துபோய் அ.தி.மு.க-வைத் தொடங்கினார், அதே எம்.ஜி.ஆர். 13 ஆண்டுக்காலம்வரை முதல்வர் நாற்காலியைக் கருணாநிதி நெருங்க முடியாதபடி, நாற்பதாண்டுக்கால நண்பர் எம்.ஜி.ஆர் செல்வாக்கு பெற்று விளங்கினார். ஆனால், அந்த 13 ஆண்டுகளிலும் இடைவிடாத பிரசாரம், போராட்டங்கள் என்று தி.மு.க-வை உயிர்ப்புடன் வைத்திருந்தார் கருணாநிதி.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையாய் விளங்கினார் கருணாநிதி. அதற்காக அவரும் அவருடைய கழகமும் தந்த விலை ஏராளம். மிசா கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட மகன் மு.க. ஸ்டாலின், சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்தார். மேயர் சிட்டிபாபுவோ… சிறையிலேயே மரணமடைந்தார். ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை கருணாநிதி.
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இரண்டாவதாக ஒரு பிளவு. கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வைகோ பின்னால் சென்றார்கள். ஆனாலும் இழப்புகளைச் சரிக்கட்டி, பழையபடி தி.மு.க-வைக் கட்டமைத்து, தேர்தலில் வென்று முதல்வராகவும் ஆனார். எத்தனையோ நெருக்கடிகள், ஏராளமான போராட்டங்கள், இரண்டுமுறை ஆட்சிக் கலைப்பு, நள்ளிரவுக் கைது, வழக்குகள் என எல்லாவற்றையும் சந்தித்து, தன் கழகத்தைக் காப்பாற்றினார்.
கருணாநிதியின் அரசியல் பயணம் நெடியது என்பதால், அவர்மீதான விமர்சனங்களும் நீளமானவை. தனிநபர் வழிபாடு, குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் எனப் பல விமர்சனங்கள் அவர்மீது உண்டு. ஆனால், எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டு, எதிரிகளும் விமர்சகர்களும் ரசிக்கும்படி பதில் சொன்னவர் அவர். பத்திரிகையாளர் சந்திப்பில் வீசப்படும் கடுமையான கேள்விக்கணைகளோ, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளோ எதையும் எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை.
கலை, இலக்கியம், அரசியல் என்று சகல களங்களிலும் கால்பதித்தவர்கள் சர்வதேச அரசியல் வரலாற்றில் குறைவுதான். ஆனால், கட்சித் தலைவர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், எழுத்தாளர், கவிஞர், திரை வசனகர்த்தா, நாடகக்கலைஞர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகம் கொண்டவர் கருணாநிதி.
அவர் தலைவராகி 50 ஆண்டுகள் ஆகின்றன. சட்டமன்றத்தில் நுழைந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல், இலக்கியம், பொருளாதாரம் என எதுவானாலும், கருணாநிதியைக் கழித்துவிட்டுத் தமிழக வரலாற்றை எழுத முடியாது.
https://www.vikatan.com/anandavikatan/2018-aug-08/editorial/143104-editor-opinion.html
கலைஞர் ஒரு சாதனையாளர் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழி இனிமையான மொழி என்பதை அவரது திரைக்கதை உரையாடல் மூலம் எண்பித்தவர். சட்டசபைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்றது கிடையாது. 1957 தொடக்கம் 13 முறை வென்று 61 ஆண்டுகள் சட்டசபையில் வீற்றிருந்திருக்கிறார். ஐந்துமுறை முதலமைச்சராக இருந்திக்கிறார். இட ஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது அரவரது சாதனைகளில் இரண்டு. அதே நேரம் திமுக வை தனது வீட்டுச் சொத்தாகவே வைத்துக் கொண்டார். எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் கலைஞர் ஆயுட்கால முதலமைச்சராக இருந்திருப்பார். வைகோ மீது பொய்யான பழி சுமத்தி அவரை கட்சியில் இருந்து நீக்கினார். ஸ்டாலின் தனது வாரிசாக வர வைகோ தடைக்கல்லாக இருப்பார் என்பதற்காகவே அவரை அகற்றினார். எம்ஜிஆர் 13 ஆண்டுகள் கருணாநிதி முதலமைச்சராக வர வழி விடவில்லை. எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக கட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா கூட 2011, 2016 தேர்தல்களில் கருணாநிதியைத் தோற்கடித்தார்!