சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்!

சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்!

நக்கீரன்

அவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து சலுகைகளைக் கையேந்திப் பெற்றிருக்கிறார் என்ற சங்கதி அம்பலமாகியுள்ளது!

மாகாண முதலமைச்சர் பதவியில் இருக்கும் எவரும் விமானத்தில் பயணம் செய்ய பணம் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர் சாட்சாத் விக்னேஸ்வரன்..

முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே விமானத்தில் பயணம் செய்ய உரூபா 22 இலட்சம் செலவழித்திருக்கிறார்.

இந்தச் சலுகை யாரால் கொடுக்கப்பட்டது? யாரிடம் விக்னேஸ்வரன் கையேந்தினார்?

வேறு யாருமில்லை. வட மாகாண சபையின் ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ தளபதி சி.ஏ. சந்திரசிறியிடம் இருந்துதான் இந்தச் சலுகையைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

இந்தச் சலுகை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே கிடையாது. அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதென்றால் சொந்தப் பணத்தில்தான் செல்ல வேண்டும். யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என இருவழிப் பயணம் செய்ய உரூபா 28,000 செலவாகும்.

விக்னேஸ்வரன் கொழும்புக்குப் போகும் போதெல்லாம் தனது உதவியாளரையும் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

விக்னேஸ்வரனுக்கு அப்படி என்ன கொழும்பிலே தலைபோகிற வேலை? சனாதிபதியுடன் சந்திப்பா? அது அத்தி பூத்தாப் போல ஆண்டில் இரண்டொரு முறைதான் சனாதிபதியை சந்தித்திருப்பார். பிரதமர் அவர்களோடு அல்லது அமைச்சர்களோடு வட மாகாண சபை நிருவாகம் பற்றி அவர் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வரவேயில்லை. மேலும் பிரதமர் ரணிலோடு நல்ல உறவு இல்லை. “உன்னை எனக்குத் தெரியாதா? நாற்பந்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமராக இருக்கிறாய். உனது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று பெயரெடுத்த கட்சி” என்று தேவையில்லாமல் பிரதமரோடு மல்லுக்குப் போனவர் விக்னேஸ்வரன். பதிலுக்கு விக்கிரமசிங்க, “விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்” என்று கூறி அத்தோடு நிறுத்திவிட்டார்.

மாகாண முதலமைச்சர் மாநாடுகளில் விக்னேஸ்வரன் கலந்து கொள்வதில்லை. தனக்குப் பதில் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்களையே அப்படியான மாநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.

உண்மை என்ன வென்றால் விக்னேஸ்வரன் வார இறுதியில் கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு ஓய்வெடுக்கப் போகிறார். மீண்டும் வாரத் தொடக்கத்தில் (திங்கள்) யாழ்ப்பாணம் திரும்புகிறார். இதற்கு எந்தக் கொடுப்பனவும் மாகாண சபையின் நிதியில் இருந்து கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பது அரசாங்க விதிகளை மீறிய செயலாகும்.

அரச சேவையில் ஒருவர் பணியிடத்தில் இருந்து வீட்டுக்குப் போக எந்தக் கொடுப்பனவும் இல்லை. அதே போல் வீட்டில் இருந்து பணியிடத்துக்கு வரவும் எந்தக் கொடுப்பனவும் இல்லை.

ஆளுநர் சந்திரசிறி எப்படி விக்னேஸ்வரனது பயணச் செலவை மாகாண சபை நிதியிலிருந்து கொடுக்க அனுமதி வழங்கினார் என்பது தெரியவில்லை.

விக்னேஸ்வரனின் பயணச் செலவு கொஞ்ச நஞ்சமல்ல. மொத்தம் உரூபா 22 இலட்சம்! வேறு என்னென்ன சலுகைகளை மனிதர் அனுபவிக்கிறார் என்பது தெரியாமல் இருக்கிறது.

தொகுதி அபிவிருத்திக்கு அரசாங்கம் ஒவ்வொரு நா.உறுப்பினர்களுக்கும் இரண்டு கோடி உரூபா கடந்த ஆண்டு ஒதுக்கியது. இதனை விக்னேஸ்வரனின் பக்தர்கள் ததேகூ நா.உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு கோடி உரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என உள்ளுராட்சி தேர்தலின் போது பரப்புரை செய்தார்கள்.

அரசாங்கம் ஒதுக்கும் பணம் அந்தந்த மாவட்டச் செயலாளருக்குத்தான் அனுப்பப்படும். நா.உறுப்பினர்கள் அந்தப் பணத்தை யார், யாருக்கு, என்னென்ன திட்டங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறார்களோ அந்தத் திட்டங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு திட்டத்துக்கு 15 இலட்சத்துக்கு மேல் கொடுக்கப்படக் கூடாது என்பது ஒரு நிபந்தனை.

விக்னேஸ்வரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் எதையாவது பரபரப்புக்குச் சொல்லிக் கொள்கிறார். அதனை ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என அண்மையில் விக்னேஸ்வரன் திருவாய் மலர்ந்திருந்தார். இதனை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் கட்சி தொடங்கிய காலம் தொட்டு சொல்லி வருகிறார்கள்.அதனை அவர் படித்திருக்க மாட்டார். அரசியலுக்கு அவர் புதிது என்பது முக்கிய காரணம்.

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதை எண்பிக்க விக்னேஸ்வரன் பேராசிரியர் பத்மநாதனை மேற்கோள் காட்டியிருந்தார்.

“பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,

“இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. (“இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,)

தமிழர்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்பதை மகாநாம தேரர் எழுதிய மகாவம்சமே ஒப்புக் கொள்கிறது. விஜயன் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் அதனை விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.

கைமுனுவின் தந்தை பவுத்தபிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து மூன்று உருண்டையாக்கி துட்டன் கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று கேட்கிறார். அந்த உணவில் இரண்டைச் சாப்பிட்டு மூன்றாவது உருண்டையை தூக்கி வீசி விட்டு துட்ட கைமுனு வேகமாகப் போய்ப் படுக்கையில் குறண்டிக்கொண்டு படுக்கிறான்.

துட்ட கைமுனுவின் தாயார் விகாரமாதேவி அவனிடத்தில் கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே மகனே என்கிறாள். அதற்கு துட்டகைமுனு பின்வருமாறு கூறுகிறான்:

“மகா (வலி) கங்கைக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?”

வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறும் வரலாறு இன்றுவரை பாடப் புத்ததங்களில் எழுதியிருப்பதன் நோக்கம் தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை சிங்கள மாணவர்களது மனதில் விதைக்கவே!

துட்டகைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் “மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்” (“Let Tamils rule that side of the Maha Ganga (now Mahaweli Ganga) and the districts this side of the Maha Ganga are more than enough for us to rule.”) எனப் பதில் இறுத்தது கவனிக்கத்தக்கது.

அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்டகைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை ஆறு மாத காலம் போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர்.

இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை.

இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே!

சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். இதனை செய்து முடித்தவர் பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர். அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். (This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese -https://en.wikipedia.org/wiki/Negombo_Tamils.)

தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பவுத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்தல்தான் காரணம். இன்றும் மலையகத்தில் தமிழர்கள் சிங்களக் கிராமப் பெண்களை மணந்து சிங்களவர்களாக மாறிவருகிறார்கள். விக்னேஸ்வரனின் பேரப் பிள்ளைகள் சைவத் தமிழர்கள் அல்லர். பவுத்த சிங்களவர்கள்!

பட்டிக் காட்டான் பட்டணத்தைப் பார்த்துத் திகைத்தது போல விக்னேஸ்வரன் அவர்களுக்கு எல்லாமே வியப்பாக இருக்கிறது. அதனால் மனம் போன போக்கில் உளறிவருகிறார்.

அவரது அண்மைய கண்டுபிடிப்பு தமிழர்களுக்கு பொருளாதாரம் முக்கியமல்ல, அரசியல் தீர்வுதான் முக்கியம் என்பதாகும். அதாவது தமிழ்மக்கள் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வீடுவாசல் இல்லாது, வேலைவெட்டி இல்லாது, உண்ண உணவின்றி பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பது அவரது வாதமாகும். பொருளாதார அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் சமாந்திரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே இன்றைய பொருளாதார நிபுணர்களின் கோட்பாடாகும். இதையே போர்க்காலத்தில் வி.புலிகளும் செய்தார்கள். தளபதி கரிகாலன் தலைமையில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இயங்கியது.

பொருளாதாரம் அல்ல அரசியல் தீர்வுதான் முக்கியம் எனப் பிதற்றும் விக்னேஸ்வரன் அண்டை நாடான இந்தியாவிடம் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய பல திட்டங்களை முன்வைத்துள்ளார்.ஏற்கனவே யாழ். கலாசார மண்டபத்தை அமைத்தல், வடக்கு, கிழக்கில் ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற பாரிய நன்கொடைத் திட் டங்களை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. அதற்கு மேலாக பல புதிய உதவித் திட்டங்களை விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரியிருக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால் விக்னேஸ்வரன் நகைச் சுவையில் வைகை புயல் வடிவேலுவை திரைப்படத் தொழிலில் இருந்து துரத்திவிடுவார் போலிருக்கிறது.

விக்னேஸ்வரன் சொல்கிறார், வயது போனோர் அரசியலில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டுமாம். இப்படிச் சொல்கிற விக்னேஸ்வரனிடம் இளமை என்ன ஊஞ்சல் ஆடுகிறதா? மாவை சேனாதிராசா முதலமைச்சர் விக்னேஸ்வரனை விட 3 அகவை இளையவர்!

 

 


சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்!


 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply