வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா!

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா!

நக்கீரன்

இந்த உலகில் பிறந்தவர்  கோடி. இறந்தவர் கோடி. பிறந்தவர் இறத்தலும்  இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற பவுத்த மதக் கருத்தை வலியுறுத்துகிறார். தோற்றம் உண்டேல் மறைவது  உண்டு.  பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதியான ஒன்றாகும்.

மகாகவி பாரதியார் பாரில் பிறந்த ஞானிகளும் யோகிகளும் முனிவர்களும் அவதாரங்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்து போனார்கள் எனச் சொல்கிறார். எமது சித்தர்களும் முத்தர்களும்  வாழ்க்கை நிலையாமை பற்றி நிறைய எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். சித்தர்களில் முதன்மைச் சித்தர் எனப் போற்றப்படும் திருமூலர் தாம் எழுதிய திருமந்திரம் என்ற நுாலின் முதல் மந்திரத்தில் யாக்கை  நிலையாமை பற்றிப்  பேசுகிறார். போன உயிர் மீளாது என்கிறார்.

காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்றுஉள,
பாலுள் பருங்கழி முப்பத்திரண்டு உள,
மேல்உள கூரை பிரியும் , பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புகஅறி யாதே.             (திருமந்திரம் – 146)

இரண்டு கால்கள் உள்ளன வீடாகிய உடலுக்கு. உச்சி உத்தரமாக உள்ளது ஒரு முதுகுத்தண்டு. இரு பக்கங்களிலும் உள்ளன முப்பது இரண்டு விலா எலும்புகள் ஆகிய பருத்த சாற்றுக்கழிகள். இவை அனைத்தையும் மூடியுள்ளது தசை என்னும் கூரை. ஒரு நாள் கூரை பிரிந்துவிடும். அப்போது உயிர் நீங்கிவிடும். மீண்டும் உயிர் அந்த வீட்டுக்குள் புகுவதை அறியாது.

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். இறைவன் ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே, சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும்.

இது போன்ற கருத்தை திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார். உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது என்கிறார். மேலும் சாவு தூக்கத்தையும் பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றது என்கிறார்.

தத்துவங்கள் எல்லாம் மெத்த நன்றாக இருக்கின்றன. பாடல் மட்டுமல்ல பாடலின் பொருளும் மிக நன்றாகவே இரூக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் புலவர்களது சிந்தனை இவ்வாறெல்லாம் அமைந்திருந்தது வியப்பாக இருக்கிறது.

ஆனால் தனது சோடியை இழந்த அன்றில் பறவை தவிப்பது போன்று தனது துணையை இழந்து அழும் கமலாதேவி அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? அவரது உற்றார், உறவினர், பெறா மக்களுக்கு எப்படித் தேறுதல் சொல்வது?

அமரர் துரைராசா உடல் நலக் குறைவு காரணமாக சிறிது காலம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரே அலைபேசியில் என்னை அழைத்துப் பேசினார். மருத்தவமனையில் இருந்து பேசுகிறேன் என்றார். அதுவே என்னோடான அவரது கடைசி உரையாடல் ஆக இருக்கப்போகிறது என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

சென்ற ஆண்டு அமரர் துரைராசா அவர்களது 75 ஆவது பிறந்தநாளை அவரது பெறாமக்கள், உற்றார், உறவினர் எளிமையாக  ஆனால் சிறப்பாகக் கொண்டாடினார்கள். அவரோடு நெருங்கிப் பழகினாலும் அவரது சரியான அகவை தெரியாதிருந்த எனக்கு அவரது இளமைத் தோற்றம் மலைப்பாக இருந்தது! அவரது இளைமையின் இரகசியம் அவரது உணவுக் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு மட்டும் அல்ல அவருக்கு வாய்த்த மனைவி கமலாதேவியும்தான். கண்ணை இமை காப்பதுபோல அவரைக் காத்துவந்தார்.

சென்ற சனிக்கிழமை (யூலை 07) காலை வரை இயல்பாகவே இருந்தார். காலை உணவை உட்கொண்ட பின்னர் உடம்பு குளிருது என்றார். அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்த மட்டும் போராடினார்கள். ஆனால் யமன் வென்று விட்டான். எங்களை மட்டுமல்ல அவரது அன்பு மனைவி, உற்றார் உறவினர் என எல்லோரையும் ஏமாற்றி விட்டுப் போய்விட்டார்.

அமரர் துரைராசா மற்றும் அவரது துணைவியார் கமலாதேவி இருவரையும் 1981 முற்பகுதியில் நைசீரியாவின் மாநிலங்களில் ஒன்றான பவுச்சியில் ஒரு நண்பர் வீட்டில்த்தான் முதன்முறையாகச் சந்தித்தோம். இருவரும் ஆசிரியர்களாக நியமனம் பெற்று பவுச்சி மாநிலத்தில் கோம்பே என்ற ஊரில் பணியாற்றினார்கள். அந்தச் சந்திப்பில் ஏற்பட்ட உறவு இன்றுவரை நீடிக்கிறது. நைசீரியாவில் கழிந்த நாட்கள் எங்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பொற்காலம். வார இறுதியில் யாரோ ஒருவரது வீட்டில் பொழுதைக் கழிப்போம். அங்கு வாழ்ந்த பல குடும்பங்கள் பவுச்சி மாநிலத்தின் பல ஊர்களில் பணியாற்றினாலும் மாதம் ஒருமுறையாவது சந்திப்போம்.

1986 ம் ஆண்டளவில் நைசீரியாவில் இருந்து  பலர் கனடாவுக்குக்  குடிபெயரத் தொடங்கி  விட்டார்கள். அவர்களைப் போலவே அமரர் துரைராசா – கமலாதேவி இருவரும் கனடாவுக்குக் குடிபெயர லாவோசில் உள்ள அமெரிக்க தூதுவர் அலுவலகத்துக்கு  விண்ணப்பித்தார்கள். ‘தர முடியாது’ எனக் கடவுச் சீட்டில் முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்கு பெரிய ஏமாற்றம். நைசீரியாவின் இன்னொரு மாநிலமான கடுனாவில் அமெரிக்க துணைத் தூதுவர் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்த போது உடனே விசா கொடுத்துவிட்டார்கள்.

கனடா  வந்த அமரர் துரைராசா மற்றும் கமலாதேவி எங்களையும் வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதினார்கள்.. எல்லையில் எந்தச் சிக்கலும் இல்லை என்றார்கள். அவர்கள் கொடுத்த தைரியத்தில் நாங்களும் 1987 இல் கனடா வந்து சேர்ந்தோம். அல்லது இலங்கை திரும்பியிருப்போம்.

சிறிது காலத்தில் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டுக்கு அண்மையில் ஒரு நகர வீடு வாங்கி குடியேறினோம். அப்போது எமக்கு வண்டி வசதி கிடையாது. அமரர் துரைராசா மற்றும் கமலாதேவி இருவரும்தான் கடைத்தெருக்களுக்கு கூட்டிச் சென்று பனியிலும்  காய், கறி மற்றும் பொருட்கள்  வாங்க உதவினார்கள்.

எங்கள் வீட்டில் நடந்த மங்கள நிகழ்ச்சிகள் அனைத்திலும்  ஏதோ தங்கள் வீட்டுக் காரியம் போல வந்து இருந்து உதவி செய்தார்கள்.

நைசீரியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த பல குடும்பங்களுக்கு இடையே இவர்கள் இருவரும் ஒரு உறவுப் பாலமாக விளங்கினார்கள்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கிய காலம் (2010) முதல் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். கூட்டமைப்பு  நடத்திய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மிக அர்ப்பணிப்போடு பங்கு கொண்டார்.  கடந்த 7 ஆண்டுகளாக அவர் பொருளாளராகப் பணியாற்றினார். தேர்தல் நிதி சேகரிப்பு ஆகட்டும்  எமது தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த நிதிதிரட்ட ஆகட்டும்  அப்போதெல்லாம் முதல் ஆளாக வந்து நிற்பார்.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் எமது மாதாந்த செயல்குழுக் கூட்டத்தில் நிதி அறிக்கையைச் சமற்பிற்பார். கடந்த மே 6 ஆம் நாள் நடந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மட்டும் அவரால் கலந்து கொள்ள  முடியவில்லை. அவரது உடல் நலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கூட்டத்தில் யாராவது உரத்துக் கதைத்தால் மெல்லக் கதைக்கச் சொல்வார். கோபப்படாமல் பேசச் சொல்வார். எல்லோரிடத்தும் அன்பாகப் பேசுவார். அவரது வாழ்க்கையில் அவருக்கு எதிரிகள் கிடையாது. அரசியல் எதிரிகளையும் அணைத்துப் போக வேண்டும் என்பார்.

2012 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் Selected Speeches and Reports by Tamil National Alliance (TNA) என்ற நூலை வெளியிட்டோம். அதனைச் செம்மைப்படுத்தி அச்சேற்றி வெளியிடும் பொறுப்பை அமரர் துரைராசா அவர்களே ஏற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு இலங்கை சென்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவை நேரில் சந்தித்து உரையாடினார். உச்சி வெய்யிலிலும் முள்ளிவாய்க்காலையும் தரிசித்து வந்தார்.

சித்தர்களும் முக்தர்களும் மரணம் இயற்கை என்றார்கள். பிறப்பு எப்படி இயற்கையோ அதே போல் பிறந்தவை யாவும் இறப்பதும் இயற்கை என்றார்கள் ஞானிகளும் யோகிகளும்.

உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள்.  மரணத்தை வெல்ல எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மோனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முடியவில்லை.

“புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமநுசர் எல்லோருமே மாண்டு போனார்கள். நான் மட்டும் பார் மீது சாகாதிருப்பேன்”என்று பாரதி முழங்கினார்.

நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பார் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்!                            (பாரதியார் சுயசரிதை)

இப்படி மார் தட்டிய பாரதியார் தனது 39 ஆவது அகவையில் இறந்து போனார்!

ஒவ்வொரு மதமும் பிறப்புப் பற்றியும் இறப்புப் பற்றியும் ஆன்மா பற்றியும் ஒரேமாதிரிச் சொல்லவில்லை. இவை பற்றிய கோட்பாடு மதத்துக்கு மதம் வேறுபாடு காணப்படுகிறது.

உலகின் பழமையான மதமான இந்து மதம் இறைவனைப் போலவே ஆன்மாவும் அநாதி என்கிறது. இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவது எதுவோ அதுவே ஆன்மா அல்லது ஆத்மா எனப்படுகிறது

மரணம் என்பது இயற்கையானது. அது முற்பிறப்பிலே செய்த இருவினைப்படி (நல்வினை, தீவினை) தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புகள்,மறுபிறப்புகள் எடுக்கின்றன. மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா. அது நிரந்தரமானது. ஆன்மா இனி அந்த உடலினின்று செயற்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து சென்றுவிடும். சட்டையை மாற்றுவது போல் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் பிறப்பு எடுக்கிறது. இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை அடைகிறது என்கிறது இந்து சமயம்.

பவுத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்த நெறி. அது கடவுளின் இடத்தில் அறத்தை வைத்தது. அதேநேரம் பவுத்தம் பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டது.

பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆன்மாவே இல்லையென்னும்போது மறுபிறவி மட்டும் எப்படிச் சாத்தியம்? மனித உடலில் உள்ள பௌதீகப்பொருட்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிரபஞ்சத்தில் மறுசுழற்சிக்கு உள்ளாவதையே பவுத்தம் மறுபிறவி என்கிறது.

சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள், இன்ப – துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள்.

சமண மதம் கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்; யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும் அழிப்பவரும் அல்லர்.

சமணத்தைப் பொறுத்தவரை முக்தி என்பதே பிறப்பின் சங்கிலியை அறுப்பது. அதுவே பரிநிர்வாணம். சமணம் கடவுள் ஒருவர் இருப்பதை மறுத்தாலும் ஆன்மா இருப்பதை மறுக்கவில்லை.

கிறித்தவம் இஸ்லாம் இரண்டிலும் மறுபிறப்புக் கோட்பாடு இல்லை. மனிதப் பிறவி ஒருமுறைதான் இறைவனால் கொடுக்கப்படுகிறது. இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் ஒருவர் செய்த புண்ணிய பாவத்துக்கு ஏற்ப ஒன்றில் சொர்க்கம் போகிறார் அல்லது நிரந்தரமாக நரகத்துக்குப் போகிறார்.

இவற்றைப் படிக்கும் போது மனிதன் காலத்துக்குக் காலம் தனது அறிவு வளர்ச்சிக்கு ஒப்ப கடவுள், ஆன்மா, மறு பிறப்பு, சொர்க்கம் நரகம் பற்றி எழுதிவைத்துள்ளார்கள் போல் தெரிகிறது.

பொதுவாக எமது மண்ணில் தோன்றிய சித்தர்களும் முத்தர்களும் வாழ்க்கை நிலையாமை பற்றி நிறையப் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

காயமே இது பொய்யடா, காற்றடைந்த பையடா என்றும் வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் எனப் பாடிப் போயிருக்கிறார்கள். திருமூலர் என்ற சித்தர் மட்டும் இந்தக் கோட்பாட்டில் இருந்து மாறுபடுகிறார். நிலையாமை பற்றிப் பேசும் திருமூலர் உடலும் உயிரும் பிரிக்க முடியாதவை உடல் இல்லாவிட்டால் உயிர் அழிந்துவிடும் என அறுதியிட்டுச் சொல்கிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.              (திருமூலர் திருமந்திரம் – 725

உடம்பினை வீண் பொருள் என நினைத்தேன், அந்த உடம்பினுக்குள் ஒரு பொருளைக் கண்டேன், அவனே இறைவன் என்று உணர்ந்தேன். எனவே இறைவன் இருக்கும் இந்த உடம்பை பாதுகாத்து வருகிறேன். மேலும்,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.             (திருமந்திரம் – 1823)

சைவக் கோயில்களை சைவ சமயத்தோர் மனித உடம்பு வடிவத்தில் எழுப்பி வைத்திருக்கிறார்கள்.

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். இறைவன் ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே, சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்று குறிப்பிடுகிறார்.

எமது ஆன்னோர்கள் பிறப்பு – இறப்பு, இன்பம் – துன்பம், நல்லவை – தீயவை போன்றவற்றை சமமாகக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். இதனை சமத்துவ பாவனை என்பர் நுாலோர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்.192, கணியன் பூங்குன்றன்)

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதும் இல்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

தத்துவங்கள் எல்லாம் மெத்த நன்றாக இருக்கின்றன. பாடல் மட்டுமல்ல பாடலின் பொருளும் மிக நன்றாகவே இரூக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் புலவர்களது சிந்தனை இவ்வாறெல்லாம் அமைந்திருந்தது வியப்பாக இருக்கிறது.

ஆனால் தனது சோடியை இழந்த அன்றில் பறவை தவிப்பது போன்று தனது துணையை இழந்து அழும் கமலாதேவி அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? அவரது உற்றார், உறவினர், பெறா மக்களுக்கு எப்படித் தேறுதல் சொல்வது?திருந்த எனக்கு அவரது இளமைத் தோற்றம் மலைப்பாக இருந்தது! அவரது இளைமையின் இரகசியம் அவரது உணவுக் கட்டுப்பாடு மல்ல அவருக்கு வாய்த்த மனைவியும்தான். கண்ணை இமை காப்பதுபோல அவரைக் காத்துவந்தார்.

அமரர் துரைராசா உடல் நலக் குறைவு காரணமாக சிறிது காலமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்துதான் என்னோடு அலைபேசியில் பேசினார்.

சென்ற சனிக்கிழமை (யூலை 07) காலை வரை இயல்பாகவே இருந்தார். பின்னர் உடம்பு குளிருது என்றார். அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்த மட்டும் போராடினார்கள். ஆனால் இறுதியில் யமன் வென்று விட்டான். எங்களை மட்டுமல்ல அவரது அன்பு மனைவி, உற்றார் உறவினர் என எல்லோரையும் ஏமாற்றி விட்டுப் போய்விட்டார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.                                      (அதிகாரம் 22 ஒப்புரவு, குறள் 217)

பிறருக்கு உதவிடும் இனிய ஒழுக்கம் உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

தான் கற்ற கல்வியையும் தான் பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்வரை மற்றவர்களுக்காகச் செலவிட்டவர்.

அமரர் துரைராசா மற்றும் அவரது துணைவியார் கமலாதேவி இருவரையும் 1981 முற்பகுதியில் நைசீரியாவில் ஒரு நண்பர் வீட்டில்த்தான் முதன்முறை சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ஏற்பட்ட உறவு இன்றுவரை நீடிக்கிறது. நைசீரியாவில் கழிந்த நாட்கள் எங்களில் பலருக்கு வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பொற்காலம்.

அவரது மறைவு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய இழப்பு. ஒரு செயல் வீரனை இழந்து விட்டோம். தாயகத்தில் அல்லல்படும் எமது உறவுகளின் துயர் துடைக்க அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு சமூக சிந்தனையாளனை இழந்துவிட்டோம்.

அமரர் துரைராசாவின் அன்பு மனைவி கமலாதேவி, அவரது உற்றார் உறவினர் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்கிறார் வள்ளுவர். குறள் கூறும் இந்தத் தத்துவத்துக்கு அமைய வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் அமரர் துரைராசா. அவர் நினைவு காலமெல்லாம் நிலைத்து நிற்கும்.

 

 

 

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply