திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.

எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது,

இதில் ‘தேவர் குறள்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திரு நான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.

திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராரராலும், அது திருவள்ளுவனின் சுயசிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது. மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது.

முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’  என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும்

பெயர் பெற்றது.


 

 திருவள்ளுவர் ஆண்டு 2049

இன்று திருவள்ளுவர் பிறந்த நாள்.  திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் தை முதல் நாள்.

திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.

திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

திருக்குறளுக்கு பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

திருக்குறளுக்கு 226 ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

திருக்குறளுக்கு 44 வேறு பெயர்கள் உள்ளன.  திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.  திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்
உலகப்பொதுமறை, பொய்யில் புலவன் பொருளுரை. திருக்குறள் 56 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

திருக்குறளை இலத்தீனில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும் மொழிபெயர்த்துள்ளனர்.

கன்னியாகுமரி கடலிலுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. இது குறளில் உள்ள  133 அதிகாரத்தை குறிக்கும்
வகையில்  அமைந்துள்ளது.

திருநெல்வேலியிலுள்ள, ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் மேம்பாலம். சென்னை ங்கம்பாக்கத்தில்
உள்ளது வள்ளுவர் கோட்டம்.

உருசியாவிலுள்ள கிரெம்ளின் மாளிகை சுரங்க அறையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளுக்குதிருக்குறளை அறிமுகம் செய்தவர், உருசிய எழுத்தாளர் டால்ஸ்டாய்.  திருக்குறள் தொடர்பான
தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் கிட்டு சிரோன்மணி.

திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எழுதியவர் அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர்.

வெண்பாபாணியில் பயனுள்ள செய்திகளைத் தருவதால், திருக்குறளை வெள்ளிப் பையில் இட்ட தங்கக்கனி என்பர்.

திருக்குறள் முதன் முதலில் அச்சானது 1812 இல். திருக்குறளை முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று திருவள்ளுவரைப் பாராட்டியவர் பாரதிதாசன்.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்று பால்களும், 133 அதிகாரங்களும் உள்ளன. திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன.

திருக்குறளில் அதிகபட்சமாக நட்பு பற்றி 171 குறள்களும், இதையடுத்து கல்வி பற்றி 51 குறள்களும் உள்ளன.

திருக்குறளில் இல்லாத எழுத்து ஒள.இல்லாத எண் ஒன்பது.

திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்றே குறிப்பிடுகிறார்.

திருக்குறளில் உயிருக்கும் மேலாக குறிப்பிடப்படுவது ஒழுக்கம்.

திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றுகிறார்.  திருக்குறளைப்
புகழ்ந்து பேசும் நூல் திருவள்ளுவ மாலை.

திருவள்ளுவரை பொய்யில் புலவர் எனப் போற்றுவர்.

திருக்குறளை மக்களுக்கு முதலில் கற்றுக்கொடுத்தவர் வள்ளலார்.

உழைப்பால் விதியையே மாற்ற முடியும் என வலியுறுத்துகிறார் வள்ளுவர்!

தன்னை வணங்குபவர், வணங்காதவர் என்ற பாகுபாடு கடவுளுக்குக் கிடையாது. அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் இன்பமே உண்டாகும். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் மனிதன் அடக்கத்துடன் வாழவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் கர்வத்துடன் வாழ்பவன் துன்பம் அடைவது உறுதி.

கற்ற கல்வியை ஒருவன் மறந்து விட்டாலும், மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒழுக்கத்தை மறந்து விட்டால்
அதை ஒருநாளும் திரும்பப் பெற முடியாது.

ஒழுக்கமே மனிதனுக்கு சிறப்பினை அளிப்பதால், அதனை உயிர் போல எண்ண வேண்டும்.

சோர்வில்லாமல் ஆர்வத்துடன் உழைப்பவன் விதியைக் கூட மாற்றி அமைக்கும் வலிமையைப் பெறுவான்.

அடக்கம் என்னும் பண்பு அனைவருக்கும் நன்மை அளிப்பதாகும். அதிலும் பணம் படைத்தவர்கள் அடக்கத்துடன் வாழ்ந்தால்
உலகமே அவர்களைப் போற்றி வணங்கும்.

உயிர்களைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரைக் கண்டால், எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும்.

ஒழுக்கம் கொண்டவன், நல்ல சிந்தனையோடு இனிய சொற்களையே பேசுவான். மறந்தும் அவனால் கொடுஞ்சொற்களைப்
பேச முடியாது.

ஊருணியில் நிறைந்திருக்கும் நீர் மக்களின் தேவைக்கு பயன்படுவது போல, நல்லவர்களிடம் உள்ள பணம் எல்லாருக்குமே பயன்
தரும்.

கைமாறு கருதாமல் உலகம் செழிக்க மழை பெய்வது போல, நல்லவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய
முன் வருவர்.

தீயிலிட்ட பொன் ஒளிவீசிப் பிரகாசிப்பது போல, பொறுமையை கடைபிடிப்பவன் வாழ்வில் பெருமை பெறுவான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதுமே தவ வாழ்விற்குரிய தகுதிகள்.

எந்த நன்றியைமறந்தவருக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், செய்த நன்றியை மறந்தவர்களுக்கு மன்னிப்பே  கிடையாது.

தெய்வத்தை வழிபட்டு கூட, ஒரு செயல் நடக்காமல் போகலாம். ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன் ஒருநாள் கிடைத்தே தீரும்.

தேவையான சமயத்தில் கேட்காமலே செய்யும் உதவிக்கு, வானமும், இந்த பூமியும் கூட ஈடு இணை கிடையாது.

எதை வேண்டுமானாலும் மறந்து விடலாம். ஆனால், வில்லங்கப்பட்ட நேரத்தில்ஒருவர் செய்த உதவியை ஒருபோதும்
மறப்பது கூடாது.

சொல்லில் இனிமையும், செயலில் பணிவும் இருந்து விட்டால், ஒருவனுக்கு வேறு எந்த நகையும் தேவைப்படாது.
அழகு அவனிடம் எப்போதும் குடியிருக்கும்.

வீட்டிற்கு வந்த விருந்தினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் பண்பு வேண்டும். அத்தகைய பண்பு இருப்பவனின் வயலில்
விதை விதைக்காமலே, தானாக நெற்பயிர் செழித்து வளர்ந்தோங்கும்.

பெற்றோருக்கு பிள்ளை செய்யும் கடமை, இவன் தந்தை இவனை பிள்ளையாக பெற முற்பிறவியில் என்ன தவம் செய்தானோ?
என்று பிறர் பேசும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

அன்பு கருணை பணிவு உள்ளவன் மனித வடிவில் தெய்வம்.  ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அன்புதான்.
அன்பு இல்லாதவனின் உடம்பு, எலும்பும் தோலும் போர்த்திய சதைத் தொகுப்பே ஆகும்.

பிறருக்கு நல்ல பயனைக் கொடு. இனியசொல் பேசு. விரும்பத் தகுந்த சிறப்பைக் கொடு. இப்படி செய்தால், நன்மை செய்பவன்,
பெறுபவன் இருவருக்கும் நன்மையாக அமையும்.

ஒருவன் மற்றவரால் பெற்ற எந்த பயனை வேண்டுமானாலும் மறக்கலாம். அதிலிருந்து மீள வழி உண்டு. ஆனால் பிறர் செய்த
நன்றியை மறந்தவர்களுக்கு பரிகாரமே கிடையாது.

ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான். எனவே, ஒழுக்கத்தை உயிரை விடச் சிறந்ததாக போற்ற
வேண்டும்.

பூரண நற்குணம் உள்ளவன் என்ற பெருமை, ஒருவனை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையுடன் நடந்து கொள்ள
வேண்டும்.  பொறாமை என்ற பாவம் செல்வத்தை அழித்து விடும். பல தீமைகளிலும் தள்ளி விடும்.

தர்மத்தை உணர்ந்தவர்களிடமும், பிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லாதவர்களிடமும் திருமகள்  கடாட்சம் தானாகவே வந்து சேரும்.

ஒரு சபையில் உள்ள பலருக்கும் கோபம் உண்டாகும்படி, பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவன், எல்லாராலும்
இகழப்படுவான். அவமானமும் அடைவான்.

மறந்தும், ஒருவருக்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. மீறி நினைத்தால், அப்போதே தர்ம தேவதை, கேடு நினைக்கிறவனுக்கு கேடுண்டாக்க நினைத்து விடுவாள்.

செல்வம் இல்லாதவன் இந்த உலகத்தில் முடியாது. அதுபோல் உயிர்களிடம் இரக்கம் இல்லாதவன்,  மேல் உலகத்தில் வாழ்வு பெற முடியாது.

பிறருக்குச் சொந்தமான பொருளைத் திருட வேண்டுமென, மனதில் நினைப்பது கூட தீமையுண்டாக்கும். உடலின்  வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்தலாம். ஆனால், உடலின் உட்புறமாகிய உள்ளத்தை, உண்மைதான் தூய்மைப்படுத்தும்.

யாரிடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில், தீங்கு செய்யத் தூண்டுகின்ற மனோபாவம் கோபத்தினால்தான்
உண்டாகிறது.

ஒருவர், பிறருக்குச் செய்யும் துன்பங்கள் எல்லாம், செய்தவரையே வந்து சேரும். அதனால், தமக்குத் துன்பம் வரக் கூடாது என்று விரும்புகிறவர்கள், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.

புண்ணிய செயல் எதுவென்றால், உயிர்க்கொலை செய்யாதிருப்பது.
கொலை செய்வது மற்ற எல்லாப் பாவங்களையும் உண்டாக்கும்.

துன்பமற்ற நிலை எதுஎன்றால், இந்த உலகில் பிறக்காமல் இருப்பது தான்.
பிறவா நிலை வேண்டுமானால், ஆசை அழிய வேண்டும்.

அழிவில்லாத செல்வம் கல்வி மட்டும் தான். மற்ற செல்வங்கள் ஒருவரிடம் தங்கியிருப்பதில்லை.
உள்ளத்தை வசப்படுத்தினால் உலகமும் வசமாகும்.


திருக்குறள் கூறும் உயர் அறிவியல் 

அறிவியலுக்கும் உயர் அறிவியலுக்கும் வேறுபாடு இருக்கிறது. கண்ணால் காண்கின்ற செயல்களின் பின்னால் இருக்கும் நுட்பத்தை புரிந்து கொண்டு தொழில் நுட்பத்தை உருவாக்குவது “சாதாரண அறிவியல்”. 

எ.கா பறவையிலிருந்து விமானம் கண்டுபிடித்தது. 

ஆனால் கண்ணிற்கு புலபடாத விடயத்தையோ, அல்லது கண்ணால் காணும் மாயைக்கு பின்னால் இருக்கும் விடயத்தைக் கண்டு பிடிப்பதுதான் “உயர் அறிவியல்” 

எ.கா “பூமி தன்னைத் தானே சுற்றுகிறது என்பதை கண்டுபிடித்தது.

ஒருமுறை  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் உயர் அறிவியலை மூன்றே  சொற்களில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் கூறிய பதில் “time, space, action” அதாவது காலம், இடம், செயல். அவருடைய காலம் கிபி 20 ஆம் நூற்றாண்டு, ஆனால் கிமு 1 ஆம் நுற்றாண்டிலேயே  திருக்குறளில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது  வியப்பாகவே உள்ளது. இதோ அக்குறள்,

“ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் {time) கருதி இடத்தால்(space) செயின்(action)”

செயலை முடிப்பதற்கு ஏற்ற காலம் அறிந்து உரிய இடத்தோடு செய்தால் உலகமே கைகூடும் என்பது அதன் பொருள்.
வாழ்வியல் நூல் என்று கருதப்படும் திருக்குறளில் “உயர் அறிவியல்” பொதிந்து கிடப்பது உண்மையில் எம்மை மலைக்க
வைக்கிறது.


 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply