முல்லைத்தீவு பறிபோவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய செயலணி உருவாக்கம் -வரவேற்கிறது கூட்டமைப்பின் கனடா கிளை

முல்லைத்தீவு பறிபோவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய செயலணி உருவாக்கம் -வரவேற்கிறது கூட்டமைப்பின் கனடா கிளை

முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு செயலணியை உருவாக்கி இருப்பதை வரவேற்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையின் தலைவர் வே தங்கவேலு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்

1940 களில் பெரிய சேனநாயக்கா அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய குடித்தொகை 48.75 % (1946) இல் இருந்து 39.79 % குறைந்துள்ளது.

சிங்களக் குடியேற்றங்கள் ஆட்சி மாறினாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களை விட அதிகாரிகள் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். வட – கிழக்கை சிங்கள மயப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்பதை மகாவலி அபிவிருத்தி சபையின் அதிகாரி ஹேமன் குணரத்ன ஒளிவு மறைவின்றிக் கூறியிருக்கிறார்.

“எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான். மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களை குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தைத் தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்” இவ்வாறு மகாவலி அமைச்சின் சிங்கள அதிகாரியான ஹேர்மன் குணரத்ன சண்டே ரைம்ஸ் செய்தித்தாளில் (ஓகஸ்ட் 26,1990 இல்) எழுதியிருந்தார்.

“All wars are fought for land.. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state.” Sinhala Mahaveli Ministry Official, Herman Gunaratne in the Sri Lanka Sunday Times, 26 August 1990. ”

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்துக்கு முன்பதாகவே யான் ஓயா மற்றும் மல்வத்து ஓயா நீர்த்தேக்கங்களில் (சிங்கள) மக்களைக் குடியேற்றும் திட்டத்தைத் தயாரித்துவிட்டோம். உண்மையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்தவர்கள் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த, அவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், கூரிய மூளைசாலிகள் ஆவர். எனது பங்கு நிறைவேற்றாளர் என்ற பாத்திரத்தை வகித்ததே.

சிங்கள – பௌத்த அரசுகள் சிங்களக் குடியேற்றங்களை எப்படியெல்லாம் சிந்தித்துச் செயற்படுத்துகிறது என்பதை ஹேமன் குணரத்னவின் ஒப்புதல் வாக்கு மூலம் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். ஹேமன் குணரத்னவைப் போல் எத்தனை பேர் வெளியில் சொல்லாமல் பூடகமாகச் செயல்படுகிறார்கள் என்பதையும் நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

“எல் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த, அவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், கூரிய மூளைசாலிகள் ஆவர். எனது பங்கு நிறைவேற்றாளர் என்ற பாத்திரத்தை வகித்ததே ………….

அதே சமயம் சிங்களவர்களுடைய குடித்தொகை 8.40 % (1946) இருந்து 23.15 % (2012) அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 3 நிர்வாக மாவட்டங்களில் இரண்டில் தமிழர்கள் இன்று சிறுபான்மை.

1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 இல் கொண்டாடப்பட்ட சுதந்திர நாள் அன்று டி.எஸ். சேனநாயக்கா நாட்டு மக்களுக்கு விடுத்த உரை ஒலிபரப்பப்பட்டது.

அந்த உரையில் அவர் கூறியதாவது “காணி மேம்பாடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் முழு வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன் எப்பொழுதும் யாரும் செய்யாதவாறு நீர்ப்பாசனம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு முழுதாக மேம்படுத்தப்பட்ட காணிகளில் இப்போது அதிகளவு சிங்களக் குடியேற்ற வாசிகளை கொண்டுபோக முடிகிறது.”

( D.S. Senanayake in his independence day anniversary broadcast on February 4, 1951, declared, “Colonization of land development activities are going at full speed and we are now able to bring more [Sinhala] colonists to lands that have been fully developed and provided with irrigation and other facilities than we have ever done before.”)

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த 40 ஆண்டுகள் சென்றது ஆனால் வடக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த 10 ஆண்டுகள் போதும் என்று ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா கூறியிருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

வடக்கில் புற்று நோய்மாதிரி பரவி வரும் சிங்களக் குடியேற்றம்பற்றி அதிக அக்கறை எடுத்து வருபவர் வட மாகாண சபை உறுப்பினர் து. இரவிகரன் ஒருவர் மட்டுமே. அவருக்கு இருக்கிற ஈடுபாடு மற்றவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
செயலணியை உருவாக்கினால் மட்டும் போதாது. செயலணி உருப்படியாக செயல்பட வேண்டும்.

மொழி உரிமையை இழந்தால் அதனைப் பின்னொரு காலத்தில் போராடிப் பெற்றுவிடலாம். பெற்றிருக்கிறோம். ஆனால் குடியேற்றம் அப்படியல்ல. நிலத்தை இழந்தால் இழந்ததுதான்.
தமிழ் அரசுக் கட்சியின் வினைத்திறன் பற்றி எங்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. இதில் ஒன்றிலாவது தமிழ் அரசுக் கட்சியின் வினைத்திறனை எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பறிபோவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய செயலணி உருவாக்கம் -வரவேற்கிறது கூட்டமைப்பின் கனடா கிளை

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply