எமது துயரில் பங்கொண்டு தேறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி
ஒரு உயிரின் பயணம் கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிகிறது என்கிறார்கள் அறிஞர்கள். எங்கள் மருமகள் துஷ்யந்தியின் பயணம் கருவறையில் இருந்து சுடுகாட்டில் முடிந்துவிட்டது. விம்மல், அழுகை, கண்ணீர் மத்தியில் அவருக்கு இறுதிப் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. விழித்திருக்கும் போதெல்லாம் அவரது சிரித்த முகம் வந்து வந்து மறைக்கிறது.
சாவு இயற்கையானது, அதனை யாராரும் வெல்ல முடியாது. அது இயற்கை கொடுக்கும் நிரந்தரமான விடுதலை. அனைத்து உயிரினங்களும் இயற்கையின் இந்த விதிக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். தப்ப முடியாது. ஆனால் இளமையில் சாவு என்பது கொடுமையானது. பெரும்பாலானவர்களுக்கு மனைவி, கணவன் அல்லது பிள்ளையின் மரணமே தங்கள் வாழ்நாள் காலத்தில் சந்திக்கும் பெரும் அதிர்ச்சிதரும் அனுபவமாக இருக்கும்.
முடிந்த வரை நீண்ட காலம் வாழவே அனைவரும் விரும்புகின்றனர் என்ற பொதுவான நம்பிக்கை இருக்கிறது. பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்பவர்கள் சாவு வேண்டும் என்று யாசிப்பதில்லை. உலகின் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மரணம். பயங்களில் சாவுப் பயம் அதிர்ச்சி தருவது.
இரவு – பகல் வருவதுபோல வாழ்க்கையில் இன்பம் – துன்பம், உயர்வு – தாழ்வு, வந்தே தீரும் இவற்றை சமத்துவ பாவனையோடு பார்க்க வேண்டும்.
கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல் இந்தத் தத்துவத்தை அழகாக விளக்குகிறது.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறநானுாறு 192)
– கணியன் பூங்குன்றனார்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் அதன் தீர்வும் கூட மற்றவர் தருவதில்லை
செத்துப் போவது புதுமை அன்றே; வாழ்தல்
இன்பம் என்று சொல்லி மகிழ்வதும் தவறு
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்குவதும் பிழை
வானம் மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு கீழிறங்கி பெருகி வரும்
பேராற்று நீரில் சிக்கி அதன்வழி ஓடும் மிதவை (சிறுபடகு) போல
அரிய உயிர் முன்னர் இட்ட இயற்கைவழியே (நியதி வழிப்படும்) போகத்தான் செய்யும் என
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை. (அறிவிலோ, செல்வத்திலோ) சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை.
சமயவாதிகள் இந்தப் பாடல் ஊழ்வினை அல்லது விதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனப் பொருள் கொள்வர்.
தீதும், நன்றும் பிறரால் உன்னைத் தேடி வரவில்லை. இந்தப் பிறப்பிலோ முற்பிறப்பிலோ நீ செய்த தீமையும் நன்னையும் இப்போது தொடர்ந்து வந்துள்ளன.
அதற்காக வருந்துவதும் இல்லை, மகிழ்வதும் இல்லை. இரண்டையும் சமமாக எண்ண வேண்டும்.
சாதல் புதியதன்று. பிறப்பெடுத்த எல்லா உயிரும் இறுதியில் பெறும் மிகப்பெரிய தெய்வப் பரிசு அதுவே.
ஆறு கடலை நோக்கி ஓடுகிறது. வாழ்வு சாவை நோக்கி ஓடுகிறது.
பாய்வதில் ஒரு மகிழ்ச்சி. வாழ்வதில் ஒரு இன்பம். அதனோடு நிறுத்திக் கொள்.
வாழ்வைத் இன்பமெனக் கருதிவிடாதே. அப்படியே சாவைத் துன்பமானது என்றும் எண்ண வேண்டாம்.
ஆறு அதன் போக்கில் பாய்கிறது. வாழ்வு அதன் இயல்பில் நகரட்டும்.
எப்போதும் சிரித்த முகம். எல்லோரிடமும் கலகலப்புச் பேச்சு. கர்நாடக இசையில் விருப்பு. இளையராசா வந்தாலும் சரி, உன்னிகிருஷ்ணன் வந்தாலும் அல்லது வேறு வித்துவான் யார் வந்தாலும் தவற விடமாட்டார். விதம் விதமாக சேலைகள் உடுப்பதில் ஆசை. உலகம் சுற்றுவதிலும் பிரியம். இந்தியாவுக்கு சென்று எங்கும் சுற்றிப் பார்த்திருக்கிறார். இராஜஸ்தானில் உள்ள சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம். இராஜ்புத்திர மன்னர்களின் பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்திருக்கிறார். சாஜகான் தனது மனைவி மும்தாஜ் இறந்தபோது அவளது நினைவாகக் கட்டிய தாஜ்மகாலையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மருமகள் மறைந்தாலும் அவரது நினைவுகள் வந்து மனதில் மோதுகின்றன. அவருடைய கடைசி ஆசை தான் மீண்டும் எங்கள் குடும்பத்தில் வந்து பிறக்க வேண்டும் என்பதே!
எமது துயர்வில் மே 31வெள்ளியும் யூன் 01சனியும் நேரில் வந்து பங்கு கொண்டு தேறுதல் சொன்ன உற்றார், உறவினனர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆறுதல் சொன்ன எல்லோர்க்கும் நன்றி. கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களும் நன்றி. அழகான மலர்வளையங்கள் அனுப்பி வைத்த அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கும் நன்றி.
குடும்பத்தினர்
யூன் 04,2017
திருமதி துஷ்யந்தி இளங்கோ
தோற்றம்: 12-சனவரி-1969
மறைவு: 31-05-2018
நிலையாமை என்ற வாழ்க்கை
நினைத்திட வைத்த அன்புச்
சிலையாகி வீற்றி ருக்கும்
துஷ்யந்தி மகளே உங்கள்
குலையாத பற்றும் பாசக்
கோணாத மொழியும் பேச்சும்
அலையாக மோது தம்மா
அற்புதம் கூறு தம்மா!
மலையாக துன்ப மேகம்
மண்ணினைப் பிய்த்த போதும்
கலையாத கொடைவள் ளத்தால்
கருணையைப் பொழிந்த மாதே
விலையாக மீண்டும் இந்த
விருட்சமாம் குடும்பத் தின்பால்
இலையாக வேனும் வேண்டும்
இதுவேஎன் விருப்பம் என்றாய்!
ஏழையாய் இருப்போ ருக்கு
இடம்வீடு மாடு என்கக்
கோழியாய்ப் பலலட் சத்தாற்
குவிகரம் மறப்போம் அல்லோம்!
வாழியாய் நக்கீ ரர்க்கு
மருமக ளாக வந்து
தோழியாய்க் குடும்பத் தார்க்குக்
கொண்டனை துஷியே அம்மா!
உன்னிரு பிள்ளை கட்கும்
உயரிய கணவ னார்க்கும்
சென்னியில் மாமன் மாமி
தெய்வங்கள் போலும் வாழ்வில்
அன்னையாய்ச் சிறந்தாய் சின்ன
ஆயுளில் மறைந்தாய் அம்மா!
மின்னலாய்ப் போன தென்ன?
மீண்டும்வா வரவேற் போமே!
சாந்தியும் அமைதியும் கொள்க!
அமரத்துவமாது துஷ்யந்தி இளங்கோவின் பிரிவில்
துயருறும் நக்கீரன் ஐயா குடும்பத்தினர், நண்பர்கள்
உறவினரோடும் யானும் பங்குகொள்கின்றேன்.
தீவகம் வே. இராசலிங்கம் குடும்பத்தினர்-கனடா
31-05- 2018
Leave a Reply
You must be logged in to post a comment.