விதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்!

விதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்!

உலகின் ஒப்பற்ற கருத்துச் செல்வமான திருக்குறள், விதி என்ற ஒன்று ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுவதை ஒப்புக் கொள்கிறது. நமது தமிழின் சங்கப் பாடல், சிலம்பு, கம்பராமாயணம் உள்ளிட்ட எல்லா இலக்கியங்களும், மனித வாழ்வில் விதி இயங்குகிறது என்பதை ஏற்கின்றன.

`ஊழ் நம் வாழ்வில் செலுத்தும் அதிகாரத்தை யாராலும் மாற்ற இயலாது’ என்ற கருத்தை விளக்கி ஊழ் என்ற தலைப்பிலேயே முப்பத்தெட்டாம் அதிகாரத்தை எழுதுகிறார் வள்ளுவர்.

ஆகூழ், போகூழ் என இருவகைப்பட்ட ஊழ்வினை உண்டு. நம் வாழ்வில் ஆகூழ் செயல்படும் காலத்தில் பொருள் சேர்ப்பதற்குத் தேவையான முயற்சி நம்மிடம் தானே தோன்றும். போகூழ் செயல்படுமானால் பொருள் அழிவதற்குக் காரணமான சோம்பல் தோன்றிவிடும். `ஆகூழால் தோன்றும் அசைவின்மை,கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.’

சிலர் இயற்கையிலேயே பெரும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். வேறுசிலர் எத்தனை நூல்கள் படித்தாலும் சராசரி மட்டத்தைத் தாண்டுவதே இல்லை. ஏன் இப்படி? எல்லாம் விதிதான். இயற்கை அறிவு அமைவதென்பது விதியல்லாமல் வேறென்ன?  `நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.’கணிதமேதை ராமானுஜன் அற்புதமான கணித அறிவு படைத்தவராக இளம் வயதிலேயே திகழ்ந்தார்.
தன் கணித அறிவு நாமக்கல் நாமகிரித் தாயாரின் அருள் என உணர்ந்தார். அந்த மாபெரும் கணித மேதைமையை வெறும் உழைப்பால் கிடைத்த ஞானம் என்று கொள்ள முடியுமா? கடின உழைப்பிற்கும் அந்த ஞானம் அடைவதில் பங்கிருந்தாலும், சின்னஞ்சிறு வயதில் பெற்ற அபார ஞானம் உழைப்பின் பயனா, ஆகூழ் தந்த அருளா? சந்தேகமில்லாமல் இதுபோன்ற அபார அறிவு இயற்கை தந்த கொடைதான், விதியின் பயன்தான் என்கிறது வள்ளுவம்.

சிறிதுகாலம் முன்னால் காலமான மாண்டலின்  சீனிவாஸ் இளம் வயதிலேயே மாண்டலின் இசைக் கருவியில் சங்கீத மேதைகள் கேட்டுப் பிரமிக்கும் அளவு ஞானத்தைக் காட்டினாரே! அது சீனிவாசின் முற்பிறவி நல்வினை தந்த பரிசல்லாமல் வேறென்ன? மேதைகள்  (prodigy) என  நாம் குறிப்பிட்டு வியக்கும் இளம் மேதைகள் அனைவரும் `தன் உண்மை அறிவே மிகும்!’ என்ற வள்ளுவக் கோட்பாட்டின் ஆதாரங்கள்தானே? மாபெரும் அறிவாளிகளான சிலரிடம் செல்வம் சேர்வதில்லை. சராசரி அறிவு படைத்த சிலர் பெரும் செல்வந்தர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும், அவரவரின் விதி அது என்பதைத் தவிர?

`இருவேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.’

மகாகவி பாரதியாரை மிஞ்சிய அறிவாளியா? நவீனத் தமிழின் சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திற்கும் அவரே முன்னோடி. பெண்கல்வி, ஜாதி ஏற்றத் தாழ்வின்மை, மத நல்லிணக்கம், அறிவியல் முன்னேற்றம் என அவர் தொட்டு வழிகாட்டாத சிந்தனைத் துறை என்னதான் இல்லை? ஆனால், அப்பேர்ப்பட்ட அறிவாளி தாம் வாழ்ந்த காலத்தில் வறுமையில் வாடினாரே? இன்று அவரை வானளாவக் கொண்டாடிப் போற்றும் தமிழ்ச் சமுதாயம், காலம் தாண்டிச் சிந்தித்த அவரைச் சமகாலத்தில் ஏன் பொருளாதார ரீதியாக ஆதரிக்கவில்லை? பரலி சு. நெல்லையப்பர் போன்ற மிகச் சில நண்பர்கள் மட்டும்தானே அவருக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள்?

கண்ணனைத் தோழனாகக் கண்டு பாடிய பாரதி, தனக்குப் பொருளுதவி செய்த நண்பர்களிடமெல்லாம் கண்ணனைக் காண்கிறார். அதனால் அல்லவா `கேட்ட பொழுது பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான்!’ என்ற வரியை எழுதுகிறார்? அபாரமான சரஸ்வதி கடாட்சம் பெற்ற பாரதிக்கு லட்சுமி கடாட்சம் இல்லாமல் போன நிலையைத்தான் `திரு வேறு தெள்ளியராதலும் வேறு!’ என்கிறது வள்ளுவம்.

விதியால் நமக்கு உரியது என்றுள்ள பொருளை எவ்வளவு தள்ளிவிட்டாலும் நம்மிடமிருந்து போகாது. அந்தப் பொருள் நம்முடையதல்ல என்பது விதியானால் தானாகவே அது நம்மைவிட்டுப் போய்விடும். `பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.’அச்சுக் கோப்பாளராக வாழ்வைத் துவங்கி, கல்கியால் படைப்பாளி எனக் கண்டறியப்பட்டு, இலக்கியவாதியாக மாறியவர் விந்தன் என்ற அபாரமான படைப்பாளி. `பாலும் பாவையும்’ என்ற தம் புரட்சிகரமான சமூக நாவல் மூலம் தமிழின் தற்கால இலக்கியத்தில் தடம் பதித்தவர். நடிகர் திலகமும் மக்கள் திலகமும் சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி திரைப்படத்தின் கதை அவர் எழுதியதுதான்.

அவர் `மாடும் மனிதனும்’ என்றொரு குட்டிக் கதை எழுதியிருக்கிறார். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனம் அந்தக் கதையில் சுட்டிக் காட்டப் படுகிறது. ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. விற்றவனுக்கு ஆத்திரம்; “இனி மேல் இங்கு வருவாயா, இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு, வாங்கு’ என்று வாங்கிவிட்டான். அலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

“விற்றவன் உன்னை அன்றே மறந்து விட்டான். நீயும் அவனை மறக்க வேண்டியது தானே?”

மாடு சொல்லிற்று: “என்ன செய்ய? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்!” தன்னிடம் பாசம் செலுத்தும் உயிரை விடப் பணமே மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. மாட்டுக்கோ எத்தனை அடி வாங்கினாலும் பாசமே பெரிதாகத் தெரிகிறது. விதியால் நமக்கு உரியது என்றுள்ளவை, எவ்வளவு தள்ளிவிட்டாலும் நம்மை விட்டுப் போகாது என்ற வள்ளுவர் கருத்தின் உளவியல் ரீதியிலான விளக்கம்தானே விந்தன் கதை?

`நான் விரும்பியவாறெல்லாம் வாழ்வேன்!’ எனக் கோடிகோடியாகப் பொருள் சேர்க்கிறான் ஒருவன். ஆனால், உடல் நலம் கெட்டதால் அவனால் எதையும் அனுபவிக்க முடியாமலே போய்விடுகிறது. அதுவும் விதிதான். இறைவன் வகுத்த விதிப்படித் தான் எதையும் அனுபவிக்க இயலும்.

`வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

’பாய்ந்து பாய்ந்து பிறர் வாய்ப்புகளைப் பறித்துச் சொத்து சேர்த்த மன அழுத்தத்தால் ஏற்பட்ட ரத்த அழுத்தம் – எண்ணெய்ப் பண்டம் எதையும் சாப்பிடக் கூடாது என்கிறார் மருத்துவர். இரவைப் பகலாக்கிப் பகலை இரவாக்கி இயற்கை விதிகளை மீறிப் பணியாற்றியதால் விளைந்த நீரிழிவு நோய் – சர்க்கரை இருக்கும் பக்கம் தலைவைத்தும் படுக்கக் கூடாத நிலை.

கோடி தொகுத்தார்க்கும் பணமிருந்தாலும் எதையும் துய்ப்பது அரிது என வள்ளுவர் சொல்வது சரிதானே?

நல்லது நடக்கிறபோது சந்தோஷப் படுகிறோம். அது நல்வினை காரணமாக வந்தது. அப்படியானால் கெட்டது நடக்கிற போது அது தீவினை காரணமாக நேர்ந்தது என்று அமைதியாக இருக்கலாமே? நினைத்து நினைத்துத் துன்பப்பட வேண்டிய அவசியம் என்ன?

`நன்றாங்கால் நல்லவாக் காண்பர் 
அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்’

நன்மை வரும்போது அமைதி காப்பதையும் தீமை வரும்போதும் அமைதியாகவே இருப்பதையும் வலியுறுத்துகிறது கண்ணன் சொன்ன கீதை. வள்ளுவத்தின் விளக்கம் தானே கீதை? கர்ம யோகத்தில் `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’ என்கிறான் கண்ணன்.  பலன் கிடைக்காது என்று அவன் சொல்லவில்லை. கட்டாயம் அது கிடைக்கும். ஆனால், அதை எதிர்பாராதே என்கிறான். மனம் எதிர்பார்ப்பு  இல்லாதிருந்தால் சலனமில்லாதிருக்கும். அப்போது இரத்த அழுத்தம் தோன்ற வாய்ப்பே இல்லை. நல்லது நல்வினையால் வருகிறது என்றும் தீயது தீவினையால் வருகிறது என்றும் வள்ளுவர் வழியில் அமைதி கண்டால் வாழ்க்கை இனிக்கும்.

யார் யார் எப்படிப்பட்ட மனப்போக்கு உடையவர்களாய் வாழ்வார்கள் என்பதைக் கூட விதி கட்டமைத்து விடுகிறது. மனித எத்தனத்திற்கு வாழ்வில் இடம் உண்டு. ஆனால், அதற்கு எவ்வளவு இடம் என்பதையும் அவரவரின் விதிதான் முடிவு செய்கிறது!கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்கப் பாடலின் முதலடியான `யாதும் ஊரே யாவரும் கேளிர்,’  செம்மொழி மாநாடு காரணமாகப் பெரும்புகழ் பெற்றுவிட்டது.

உலக இலக்கியங்கள் அனைத்திலும் தேடினாலும் இதற்கு இணையான இன்னோர் அடியைக் காண இயலாது. `யாவரும் கேளிர்’ என்கிறபோது எல்லா மக்களும் சொந்தமாகி விடுகின்றனர். மத நல்லிணக்கம்,  சாதி நல்லிணக்கம், தேச நல்லிணக்கம் எல்லாவற்றையும் வலியுறுத்தும் அடி இது. (ஆனால், யாதும் ஊரே என எல்லா ஊரையும் தன் ஊராக பாவித்த கணியன் பூங்குன்றனாரை அவரது ஊரான பூங்குன்றத்தை வைத்துத்தான் பெயரிட்டு அழைக்கிறோம்! அவர் இயற்பெயர் தெரியவில்லை.) இந்தப் புகழ்பெற்ற ‘யாதும் ஊரே’ பாடலின் புகழ்பெறாத இறுதி அடிகள் மிக முக்கியமானவை. வள்ளுவம் சொல்லும் ஊழைத் திட்டவட்டமாக வலியுறுத்தும் அடிகள் அவை.

`யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே பின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின்  மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (கணியன் பூங்குன்றனார், புறநானூறு, 192.)

பெரும் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தெப்பம்போல் நம் வாழ்க்கை விதிவழியே நடக்கிறது என்கிற தத்துவத்தை உணர்ந்துகொண்டால், எதுபற்றியும் மகிழ்ச்சி ஏன், எரிச்சல் ஏன்? பெரியோரை வியப்பானேன்? சிறியோரை இகழ்வானேன்? இதை உணர்ந்த இராமபிரான், கானகம் செல்லும் தருணத்தில் கைகேயியைக் கடிந்து பேசிய இலட்சுமணனிடம் அமைதியாக விதி என்கிற தத்துவத்தை அறிவுறுத்துகிறான். `மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும் இத்திருத் துறந்து ஏகென்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’
போன்ற முகத்தோடு மலர்ச்சியாக இரு நிலைகளையும் ஏற்றவன் அல்லவா ராமன்?

`இலட்சுமணா! நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் பிழையா? மலையில் மழை பெய்யவில்லை என்றல்லவா
அறிய வேண்டும்? நமக்கு நேர்ந்துள்ளவை கைகேயியால் வந்தவை அல்ல. பரதனாலும் வந்தவை அல்ல. விதியால் வந்ததென்று அறிக!’

`நதியின் பிழையன்று நறும்புனல்  இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தாள் 
மதியின் பிழையன்று மகன் பிழையன்று
விதியின் பிழை இதற்கு என்னை  நீ வெகுண்டதென்றான்!’

கம்பர் இராமபிரான் மூலம் சொன்ன விதித் தத்துவத்தை அதற்கும் முன்பாகவே சிலம்பில் இளங்கோ சொல்லிவிட்டார். அவர் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரத்தை எழுதியதற்கான மூன்று நோக்கங்களில் ஒன்று விதியின் வலிமையை உணர்த்துவதுதான்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் 
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் 
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் 

-என்கிறார் அவர்.

ஊழ்வினையை எதிர்த்தும் வள்ளுவத்தில் ஒரு குறள் இருக்கிறது. ஆள்வினையுடைமை என்ற 62 ஆம் அதிகாரத்தின் கடைசிக் குறள் அது.

‘ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலை வின்றித்தாழாது உஞற்று பவர்.’

– என்கிறது அக்குறள். மனத்தில் சோர்வில்லாது கடினமாய் உழைப்பவர்கள் விதியைக் கூடப் புறமுதுகிடச் செய்வர் என்கிறார் வள்ளுவர். ஊழை ஒப்புக்கொண்ட வள்ளுவர், ஊழை வெல்லலாம் எனப் பேசுகிறாரே என சந்தேகம் தோன்றலாம். யோசித்தால் இதுவும் ஊழை வலியுறுத்தி எழுதப்பட்ட குறளே என்பது புரியும். ஊழை வெல்ல முடியும் என்ற விதி இருந்தால்தானே ஊழையே வெல்ல முடியும்!

வள்ளுவர் வகுத்த விதி என்னும் ஊழ் எல்லோர் வாழ்விலும் செயல்படுகிறது என்பதை ஆழ்மனதில் உணர்ந்து கொண்டால், துயரங்கள் நம்மை பாதிக்காது. நாமும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தோடு என்றும் மலர்ச்சியாக வாழலாம்.

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2702&id1=53&id2=0&issue=20150616


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply