புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்! நக்கீரன்

புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்!

நக்கீரன்

விடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44 வது நினைவு நாள் (யூன் 5) இன்றாகும். இந்த நாள் ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம்  இன்று   கடைப்பிடிக்கப்படுகிறது.Image result for pon sivakumaran

“எதனை விரும்புகிறோமோ  அது  தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தால் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரியையும் (மனிதநேயர்)  வீரரையும் கொண்டாடாத தேசத்தில்  அறிவும், லோகோபகாரமும் வீரமும் மங்கிப் போகும்” என்கிறார் மகா கவி பாரதியார்.  

தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக் கணக்கான  வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இனிய, இளைய உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையாளன் தியாகி பொன் சிவகுமாரன் ஆவார். விடுதலைப் போராட்ட வரலாற்றில்  சயனைட் குப்பியை அறிமுகம் செய்த முதல் போராளியும் அவனே. 

அடக்குமுறைக்குள்ளான மக்களின் விடுதலைக்கு அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைத்தவன்  சிவகுமாரன்.  அந்த ஆற்றல்  அவனது மாணவப் பராயம் தொடக்கம் அவனிடம்  இருந்தது.

சிங்கள – பவுத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மீது  அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்ட போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியானது. வர்களது வாழ்க்கை குருவிக் கூடு கலைக்கப்பட்டது போல் சிதைக்கப்பட்டது.  அடக்குமுறைக்கு எதிரான அகிம்சைப் போராட்டங்கள் வலுவிழந்து போயின. எதிரியின் அடக்குமுறை மேலும் மேலும் வலுத்தது.  இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

இந்தப் பின்னணியில்தான் அன்று மாணவனாகவிருந்த  சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திரமான வாழ்வை  உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான  வழி என உணர்ந்தான்.   சிங்கள – பவுத்த  பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டான்.

சிவகுமாரன் ஆயுதப் போராட்டத்துக்குப் போட்ட பிள்ளையார் சுழியே பிற்காலத்தில் ஆல மரம் போல் வளர்ச்சி பெற்று ஒரு மரபு வழிப் போராக பரிமாணம் பெற்றது.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன்  சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவராக விளங்கினான். தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆட்சியார்களின் அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக  போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம்  சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டதாக இருந்தது.  தொலைநோக்கு அடிப்படையில் அமைந்திருந்தது.

1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.  சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன. ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பல்கலைக் கழக நுழைவுக்குத் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தல் செய்யப்பட்டார்கள். தேர்வில் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களின் கதவுகள் சாத்தப்பட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் கல்வியை அழித்தல்  போதுமானது. காரணம் கல்விதான் ஒரு இனத்தின் பலமாகும். இது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தது.

1970 ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.Image result for பொன் சிவகுமாரன்

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா பண்டாரநாயக்காவின் அரசில்  துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு தொடங்கியது சிவகுமாரனது ஆயுதப் போராட்ட வரலாறு. இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும் அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்கு  உட்படுத்தப்பட்டான்.

யாழ்ப்பாணப் பிரதான வீதியில்  ஒரு உணவகத்துக்கு முன்னே ரித்து ின்ற யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது,   அமைச்சர்  சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது  போன்ற சம்பவங்கள் காரணமாக  சிவகுமாரனது பெயர்  பத்திரிகைகளில்  அடிபடத் தொடங்கியது.

தரப்படுத்தல், ஒடுக்குமுறை  போன்ற அநீதிகளுக்கு எதிராகப் போராடும் நோக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்து  தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கினார்கள்.  1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன்  சிங்கள – பவுத்த பேரினவாத அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டான்.Image result for பொன் சிவகுமாரன்

1972 மே 22 ல் ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பு ிறைவேற்றப்பட்டது. இந்த யாப்பு  இலங்கைத் தீவின் பெயரை  சிறிலங்கா என மாற்றம் செய்தது.  சிங்கள மொழி மட்டும் சட்டம் யாப்பில் சேர்க்கப்பட்டது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக சோல்பரி அரசியல் யாப்பில் இருந்த  விதி 29 முற்றாக நீக்கப்பட்டது.  இவற்றோடு நின்றுவிடாமல் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதமான பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்  எனப் ுதிய யாப்பு பிரகடனம் செய்தது.  

1974 சனவரி 10 அன்று  தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே போட்டிருந்த பந்தலில்  நடைபெற்றது. அதில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றினார்கள்.  இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக அது நடைபெறும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.  மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே கோபத்தை தோற்றுவித்திருந்தது.  மாநாட்டை எதிர்ப்பதில் இலங்கை முற்போக்குச் சங்கம்  சிறிமாவோ பண்டாரநாயக்கா  அரசோடு சேர்ந்து கொண்டது. அப்போது அதில் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் முக்கிய பங்கு வகித்தனர். அதே போல் யாழ்ப்பாண மாநகர  சபையின் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா மாநாடு நடத்துவதற்கு  இடம் ஒதுக்க மறுத்துவிட்டார்.Image result for பொன் சிவகுமாரன்

திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்த போது பொலிசார் அங்கு ஆயிரக்கணக்கில் அமர்ந்திருந்த மக்களைத் தாக்கிக் கலைக்க முற்பட்டார்கள்.  கூட்டம் குழம்பத் தொடங்கியது.  மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர்.  அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்ட. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கில் அகப்பட்டு 11 பேர்  அலறியபடி செத்து மடிந்தார்கள். 

அவ்வேளையில் மேடை அருகில்   சிவகுமாரன் தொண்டர்களோடு ஒரு தொண்டனாக  நின்றிருந்தான். நடந்த சம்பவங்களை அவனால்  தெளிவாகவே பார்க்க முடிந்தது. இந்த சம்பவந்தான் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவனுள் உருவாக்கியது.  அடுத்த நாள்  விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசினான். பொலிசார் காயமடைந்தார்கள்.  சிவகுமாரன் தேடப்படுபனாக மாறினான்.

சிவகுமாரன் தொடக்கி வைத்த ஆயுதப் போர் மூன்று சகாப்தங்கள்  நீடித்தன. போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன.

இனச்சிக்கலுக்குத் தீர்வாக பிரிக்கப்படாத,  பிரிக்க முடியாத ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களது வரலாற்று வாழ்விடமான  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாகாண அரசு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பணி விட்டு விட்டு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்தபோது அதற்கு சிங்கள – பவுத்த பேரினவாதிகளிடம் இருந்து கடுமையான கண்டனங்கள் வெளிவந்தன. அதில் காணப்பட்ட யோசனைகள் இலங்கையில் ஒரு தமிழீழத்தை உருவாக்கிவிடும் என முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா கூறினார்.  நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தன்னோடு  கைகோர்க்குமாறு அவர் அறைகூவல் விடுகிறார். பவுத்த மத பீடங்கள் புதிய யாப்புத் தேவையில்லை என்றே வாதிட்டன.

இப்போது நிபுணர்கள் இடைக்கால அறிக்கையையும் அதன் பின்னர் இடம்பெற்ற விவாதங்களையும் கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மாதிரி வரைவொன்றைத் தருவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழிகாட்டுக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் ஒரு புதிய யாப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுபவதற்கு நல்லாட்சி அரசிடம் வாக்குப் பலம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிரிந்துள்ளது. சனாதிபதி சிறிசேனா தலைமையில் உள்ள சிறிலங்கா கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 46 இல் இருந்து 25 ஆகக் குறைந்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி (105), மக்கள் விடுதலை முன்னணி (5)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (15)  என மொத்தம் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய யாப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே சனாதிபதி சிறிசேனாவின் தலைமைமயில் உள்ள சிறிலங்கா கட்சியினர் ஆதரித்து வாக்களித்தால் மட்டுமே  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வாயப்புண்டு.

புரையோடிப் போய்விட்ட நாட்டின் இனச் சிக்கலுக்குத் தென்னிலங்கைக் கட்சிகள்  தீர்வு கண்டால் மட்டுமே நாட்டில் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகும். அரசியல் உறுதித்தன்மை இல்லாத ஒரு நாடு பொருளாதாரத்தில்  முன்னேற்றம் காண முடியாது என்பது அரசியல் பால பாடம்.

புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே மீண்டும் தோன்றுவார்கள்.


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply