தேசிய பிரச்சினைக்கு இரு கட்சிகளும் தீர்வுகாண வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது!

தேசிய பிரச்சினைக்கு இரு கட்சிகளும் தீர்வுகாண வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது!

தேசிய பிரச்சினை தொடர்பாக மனம் திறக்கிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

வாசுகி சிவகுமார்

புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தவிர்க்கமுடியாததொன்றெனக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளின் தேக்க நிலைக்கான காரணங்களை தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்…

பிரதி சபாநாயகரின் நியமனத்துக்கு அங்கஜனின் பெயர் பிரேரிக்கப்படுவதை தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க்கின்றதா?

பிரதி சபாநாயகராக அங்கஜன் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதென்பது எவரதும் தனிப்பட்ட கருத்தல்ல. சபாநாயகரின் தலைமையிலான கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எழுந்த கருத்து இது. அக்கூட்டத்தில் நிறையப் பேர் அவரது பெயர் பிரேரிக்கப்படுவதை எதிர்த்தனர். சிலர் கேள்வி கேட்டனர். கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை வெளியே சொல்லக்கூடாதென்பது மரபு. அதனை மீறுவோர் இருக்கின்றார்கள். ஆனால் என்னால் அதனைப்பற்றி விளக்க இயலாது. அங்கஜன் நியமிக்கப்படுவதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அரச தரப்பில் அங்கீகாரம் அளிக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அவ்வாறான மேடைகளில் அதிகளவில் காண முடியவில்லையே ஏன்?

அதிகளவில் பங்கேற்க முடியவில்லையே தவிர எங்கள் எம்பிக்கள் அதில் கலந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். கடந்த மூன்று வருடங்களாக, முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் அனுமதிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டின் பின்னர், அதாவது ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் நடைபெற்ற மூன்று நினைவேந்தல்களையும் வடக்கு மாகாண சபைதான் பொறுப்பேற்று நடத்தியது. இம்முறையும் பல்கலைக்கழக மாணவர்களுடனான முரண்பாடுகளுக்குப் பின்னர், வடக்கு மாகாண சபை தான்தான் அதனை நடத்துவதாக அறிவித்தது. முதலமைச்சர் அதற்கான நிகழ்ச்சி நிரலையும் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். கூட்டமைப்பின் எம்.பீ க்கள் பலர் அதில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி வடக்கு மாகாண சபை அதனை நடத்தியாக தெரியவில்லை. முதலமைச்சர் அதில் பங்குபற்றியிருந்தாரே தவிர வடக்கு மாகாண சபை அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் அனுப்பிய நிகழ்ச்சி நிரலுக்கமையவும் அங்கு எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சியாக நாங்கள் எங்கள் நினைவேந்தல்களை தனித் தனியாகவும் நடத்தியிருக்கின்றோம்.

நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து வடக்கில் மற்றுமொரு ஆயுதப் போராட்டத்துக்கான முஸ்தீபுகள் நடப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய குற்றம் சாட்டியிருப்பது பற்றி…..

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் விதத்தில் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சி, அதனை நடத்தவேண்டியவர்களின் கட்டுப்பாட்டை மீறிப்போனது துரதிஷ்டவசமானதே. அதனை நடத்துவதாகக் கூறிய வடக்கு மாகாண சபை அதனை முழுமையாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அந்த நிகழ்வு எவ்வாறு நடந்தது என்பது குறித்து தமிழர் தரப்பிலேயே பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. இதனை சாட்டாக வைத்து கோத்தபாய ராஜபக்ச வடக்கில் மீண்டும் ஆயுதப்போராட்டம் தொடங்கப்போவதாக பிரசாரம் செய்கின்றார். அது தவறானது. அவ்வாறு போராட்டங்கள் எவையும் ஆரம்பிக்கவும் இல்லை. ஆரம்பிக்கப்போவதும் இல்லை. அவ்வாறு தெற்கில் பொய்ப் பிரசாரம் செய்வதற்கேற்ற விதத்தில் நாங்களே எங்களது செயற்பாடுகளை வகுத்துக்கொள்வதுதான் கவலைக்குரியது என்றுதான் நான் சொல்வேன்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறும் இராணுவம், புலிகளையோ, அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரனையோ நினைவு கூரக்கூடாதென வலியுறுத்தி வருகின்றதே?

அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். புலிகளும் வெவ்வேறுபட்ட மக்களின் பிள்ளைகள்தான். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அது பிரபாகரனாக இருந்தால் கூட, மரணத்தை அவ்வாறு வேறுபடுத்த முடியாது. நான் இராணுவத்தின் கருத்துடன் உடன்பட மாட்டேன்.

கடந்த வியாழனன்னு புதிய அரசியலமைப்பு வரைவு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படுவதாக சொல்லப்பட்டதே?

வரைவு சமர்ப்பிக்கப்படுவதாக இருக்கவில்லை. இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், மாதிரி வரைவொன்று சமர்ப்பிக்கப்பட்டால்தான் அதுகுறித்து எங்களால் தொடர்ந்து செயலாற்ற, விவாதிக்க முடியும். யார்யாரெல்லாம் இணங்குகின்றார்கள், யார் இணங்கவில்லை என்பது அப்போதுதான் தெரியும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையொன்றுக்கான இணக்கப்பாடு ஏற்பட முடியும். இதனை நோக்காகக் கொண்டே, இறுதி வரைவொன்று தயாரிக்கப்படுவதற்கேற்ற விதமாக ஒரு மாதிரி வரைவொன்றை தயாரிக்குமாறு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற கடைசி வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் நிபுணர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவே கடந்த வியாழனன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் நிபுணர்கள் மேலும் இருவாரகால அவகாசம் கோரியிருக்கின்றார்கள். அதனை வரைவென்று அழைத்ததாலேயே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதி வரைவைச் செய்வது வழிநடத்தல் குழுவா அல்லது நிபுணர்கள் குழுவா என்று சந்தேகங்கள் எழுந்தன. வழிநடத்தல் குழுதான் வரைவைச் செய்யவேண்டும் என்பது வியாழனன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. நிபுணர்கள் இடைக்கால அறிக்கையையும் அதன் பின்னர் இடம்பெற்ற விவாதங்களையும் அவதானித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மாதிரி வரைவொன்றைத் தருவார்கள்

இத்தனை இழுபறிகளுக்கும் பின்னர் புதிய அரசியலமைப்புப் பணிகள் நல்லாட்சி அரசாங்கததின் இந்தப் பதவிக் காலத்துக்குள் பூர்த்தியடையும் என்று நம்புகின்றீர்களா?

அரசியலமைப்புச் சபையில், புதிய அரசியலமைப்புக்கான வரைவு இம்மாத இறுதிக்குள் கொண்டுவரப்பட்டால், இவ்வருடத்துக்குள் அரசியலமைப்புப் பணிகள் பூர்த்தியடையும் என்று நம்பலாம். தமிழ்த் தேசிக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை, புதிய அரசியலமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் என்ற நம்பிக்கையில்தான் அது இருக்கின்றது.

அது நம்பிக்கை மாத்திரமல்ல. தவிர்க்கமுடியாத ஒன்றும் கூட. இந்நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் இந்தச் சந்தர்ப்பத்தை எல்லா அரசியல் கட்சிகளும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சகல கட்சிகளுமே அரசியலமைப்புப் பணிகளில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியுள்ளன. இடைநடுவில் அதனைக் கைவிட இயலாது.

புதிய அரசியலமைப்புப் பணிகளுக்கான பாரிய தடையாக எதனைக் கருதுகின்றீர்கள்?

அரசியல் ரீதியாக துணிவான முடிவுகளை எடுக்க இரண்டு பிரதான கட்சிகளுமே தயங்குவதே இதற்கான பிரதான முட்டுக் கட்டையாக நான் கருதுவேன். மூன்று வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஆணையை மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் வழங்கியிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இரண்டு கட்சிகளுமாக 52 சதவிகிதம் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தன. அரசு இதயசுத்தியோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டிருந்தால் தடைகளைத் தகர்த்திருக்கலாம். அரசியலமைப்புக்கு அத்தியாவசியமான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில் தயக்கம் காட்டப்படுகின்றது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு வெல்லப் படக்கூடியதென நாங்கள் நினைக்கின்றோம்.

ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை,தேர்தல் முறைமை என்பன தொடர்பான சர்ச்சைகளில் சமரசம் என்பது எளிதானதாக இல்லையே?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்பது எல்லோருக்கும் ஏதோவொரு காலகட்டத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கின்றது. அதனை ஒழிக்கவேண்டும் என உறுதியளித்தவர்களில் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க மாத்திரமல்ல மஹிந்த ராஜபக்சவும் அடங்குவார். பொது எதிரணி வேட்பாளரால் வழங்கப்பட்ட முதலாவது உறுதிமொழியும் அதுதான். எல்லோரும் இதனை தேர்தல்களில் வெல்வதற்கான கோஷமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் அதுதான் அவர்களது வெற்றிக்கான சூத்திரமாகவும் இருந்திருக்கின்றது.

ஜனாதிபதி தான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கியதேசியக் கட்சி, அதனை ஒழிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இன்றிய அதிகாரப் பகிர்வின் சாத்தியங்கள் குறித்து நாங்கள் வழி நடத்தல் குழுவில் விவாதித்திருக்கின்றோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்காமல், மாகாண சபைகள் தொடர்பில் சில அதிகாரங்களை ஜனாதிபதி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது பரிந்துரையாக இருந்தது. ஏனெனில் அதிகாரங்கள்; மாகாணங்களுக்கு பரவலாகப் பகிரப்படும்போது, மத்தி வலுவற்றதாகிவிடும் என்ற அச்சம் இருக்கவே செய்கின்றது.

எனவே, அதனைத் தீர்ப்பதற்காக, புதிய அரசியலமப்பில், இந்தியாவைப்போல மாகாணங்கள் தொடர்பிலான சில அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசம் கொண்டவராக இருப்பார். இந்தியாவில் மாகாணங்கள் தொடர்பான அதிகாரங்களை பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி பயன்படுத்துவார்.

ஆனால் ஆளுனரின் பரிந்துரையின் பிரகாரம், சில வரையறுக்கப்பட்ட நிலைமைகளில், ஜனாதிபதி மாகாண அதிகாரங்களை கைப்பற்றலாம். அவ்வாறானதொரு முடிவும் கூட அரசியலமைப்பு நீதிமன்றினால் மீளாய்வுசெய்யப்படக் கூடியதே.

ஆனால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அதீத அவசர நிலைமைகளில், ஜனாதிபதி சுயமாக முடிவெடுக்க இயலும்.

அவ்வாறானதொரு இணக்கப்பாடே ஏற்பட்டிருக்கின்றது. உண்மையில் கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டதாக அமையாது. சீரமைப்புக்களுக்கு இன்னமும் இடமுண்டு. இதில் இன்னொரு சர்ச்சைக்குரிய விடயமும் உண்டு.

ஜனாதிபதி, மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி கூறுகின்றது. சில சிறிய கட்சிகளும் இதனை அங்கீகரிக்கின்றன.

ஆனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சொல்கின்றது. மக்களால் தேர்வுசெய்யப்பட்டால் அவர் மக்களின் ஆணையைப் பெற்றவராக இருப்பார். மக்களால் தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதி என்பவர் நாங்கள் கொண்டுவர நினைக்கும் புதிய ஜனாதிபதி முறைமைக்கு எதிரானவராகவே இருப்பார். ஆனால் இதுவும் பேசித் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன. அரசு அவற்றால் அதிர்ச்சியடைந்துள்ளதா?

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் எழுந்த எதிர்ப்பலைகளை பாரியவையாகச் சித்தரிப்பது பொருத்தமானாக எனக்குப்படவில்லை. அதனை ஒழிப்பதற்கான மக்களின் ஆணையை அரசுபெற்றிருக்கின்றது. இந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அதற்காக வாக்களித்திருக்கின்றார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் மோசமான விளைவுகள் குறித்து மக்கள் சரிவர அறிவுறுத்தப்படவில்லை. பதிவியேற்றபின் நிறைவேற்றதிகாரங்களை ஒழிப்பது தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எல்லா ஜனாதிபதிகளுமே மறந்து விடுகின்றனர்.

தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அரசுக்கெதிராக வன்முறையற்ற போராட்டமொன்றினை தமிழர்கள் முன்னெடுப்பார்கள் என்று அண்மையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். 1961 ஆம் ஆண்டினைப் போன்றதொரு சத்தியாக்கிரகத்தையே நீங்கள் குறிப்பிட்டதாகக் கொள்ளலாமா?

ஆமாம். உண்மையில் அதுதான். காந்தீய கோட்பாடுகளோடு, வன்முறையற்ற, அமைதியான வழிமுறைகளில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தல். பிரிவுபடாத நாடொன்றினுள் எங்கள் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டோம். தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு இடமளிக்க அரசும் ஏனையோரும் தயாராக இல்லாத நிலையில், எங்களுக்கான மாற்றீட்டு வழிமுறையாக அதுவொன்றே அமைய முடியும். எங்கள் இளைஞர்கள் மீண்டும் வன்முறை வழிக்குத் திரும்புவதைத் தடுப்பதிலும் நாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

அதனால் அவர்களையும் இணைத்துக் கொள்வதற்காக வன்முறையற்ற போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவிருக்கின்றோம்.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், வடக்கிலும் கிழக்கிலும் சில இடங்களை தமிழ்த்தேசியக் கட்டமைப்பு தீவிர தேசிய கட்சிகளிடம் இழந்திருந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதில் அரசு காட்டிவரும் அசமந்தப் போக்குத்தான் உங்களைப் போன்ற மிதவாதிகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழக்கக் காரணமாய் அமைந்ததா? இது உங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதிப்பதாகக் கருதுகிறீர்களா?

சில இடங்களையல்ல, பல இடங்களை நாங்கள் இழந்திருக்கின்றோம்.. 2015 முதல் தற்போதுவரை எங்கள் வாக்குப் பலம் அரைவாசியாகக் குறைந்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தல்களின்போது மொத்த வாக்குகளில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, 80 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை அது 35 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இது பாரியதொரு பின்னடைவுதான். கடந்த மூன்றாண்டுகளாக இந்த அரசின் ஓரங்கமாகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடே அது. இந்தக் காலப்பகுதிகளில் எதுவுமே நடக்கவில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம். எல்லாமே மந்தகதியில் நடப்பதால் எதுவுமே நடக்காததுபோன்ற தோற்றப்பாடே எழுகின்றது. அது மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. அரசியலமைப்புருவாக்க முயற்சிகளில் ஏற்படும் காலதாமதங்கள் முன்னைய பொய்த்துப்போன வாக்குறுதிகளையே நினைவூட்டுகின்றன. இப்போது ஏதாவது மாற்றம் வரும் என ஏன் நினைக்கின்றீர்கள் என மக்கள் கேட்கின்றார்கள்.

தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் எதிர்க்கட்சியினர் அதனை எதிர்த்ததே வரலாறு. ஆனால் எதிரெதிரான இரண்டு கட்சிகள் இணைந்து நடத்தும் நல்லாட்சி அரசிலும் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு சாத்தியப்படாமைக்கான காரணம் என்ன?

நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு பாராளுமன்றத் தேர்தல்களும் முடிவடைந்த பின்னர் மக்கள் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டது. 2016 ஜனவரி மாதம் அரசியலமைப்பு பேரவைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களின் பின்னர் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் ஆறுமாதகாலத்துக்குள்ளேயே ஆறு உப குழுக்களின் அறிக்கையும் வெளியிடப்பட்டன. இடைக்கால அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது.

இடைக்கால அறிக்கை தயாரிகப்பட்டதன் பின்னர் தான் ஒரு வருடம் வீணடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அரசில் இருக்கும் லங்கா சுதந்திரக்கட்சி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தாங்கள் ஏற்கனவே இணங்கிய விடயங்களில் பின்னடிப்புச் செய்ததுதான். ஆனால் இறுதியில் கடந்த செப்டம்பர் மாதமளவில் இடைக்கால அறிக்கையும் வெளிவந்தது. உள்ளூராட்சி சபைதேர்தல்களின் பின்னர், அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்ட பின்னடைவு, இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையிலான முரண்பாடு, பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அமைச்சரவை மாற்றம் என்பனவற்றாலும் மேலும் ஒரு ஆறுமாதகால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது.

(22 ஆம் பக்கம் பார்க்க)

http://www.vaaramanjari.lk/2018/05/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-


 

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply