திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்?
‘பணக்கார கடவுள்’ பாலாஜியைப் பார்த்துக்கொள்ளும் பட்டாச்சார்யர்கள் பலரும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாநில முதல்வர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர் – நடிகைகள் ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தால், கோயிலில் உள்ள பட்டாச்சார்யர்களுக்கு ஏகக் குஷிதான். இவர்களின் காட்டில் வருடம் முழுவதும் பண மழைதான் பெய்கிறது. இந்த நிலையில்தான், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகமவிதிகள் மீறப்படுகின்றன” என்று அங்கு தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்ப, “தலைமை அர்ச்சகராக இருந்தபோது ஆகம விதிகளை ரமண தீட்சிதர்தான் மீறினார்” என்று கோயில் நிர்வாகத்தினர் பதில் குற்றச்சாட்டை வீச, விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்துவந்த ரமண தீட்சிதருக்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சமீபத்தில் கட்டாயப் பணி ஓய்வை அளித்தது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரமண தீட்சிதர், ‘‘கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுகின்றன. மடப்பள்ளி (கோயில் சமையல் அறை) புனிதமானது. அது 25 நாள்களாக மூடப்பட்டுள்ளது. வேறு இடத்தில் தயாரிக்கப்படும் பிரசாதத்தை சுவாமிக்கு வழங்குகின்றனர். அது மிகப்பெரிய பாவம்’’ என்று அதிரடி குற்றச்சாட்டுகளைக் கிளப்பினார். அது மட்டுமல்ல, ‘‘ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த வைர நகைகளையும் நவரத்தினங்களையும் காணவில்லை. இங்கிருந்து மாயமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனிவாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. லட்டு தயாரிப்புக்கூடம் தோண்டப்பட்டு, அங்கிருந்து பழங்கால ஆபரணங்கள் எடுக்கப்பட்டன. அவை எங்கே?’’ என அதிர்ச்சி தரும் பல கேள்விகளைக் கேட்டார்.
இவரது குற்றச்சாட்டால் அதிருப்தி யடைந்த கோயில் நிர்வாகத்தினர், ரமண தீட்சிதர் வகித்துவந்த தலைமை அர்ச்சகர் பதவியைத் தன் மகனுக்கு வழங்க வேண்டுமென்று அவர் கோரியதாகவும், அது கிடைக்காததால்தான் தேவஸ்தானம்மீது அவர் அவதூறுகளை வீசுகிறார் என்றும் பதிலடி கொடுத்தனர்.
இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய திருப்பதிக்குச் சென்றோம். அங்கு, ஆகம பிரவரா ஆலோசகர் என்.ஏ.கே.சுந்தரவரதன் பட்டாச்சார்யரைச் சந்தித்து, ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டோம்.
‘‘தேவஸ்தானத்தில் காலம் காலமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் மூலவருக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வருகின்றனர். அவை கொல்லப்பள்ளி குடும்பம், பைடப்பள்ளி குடும்பம், பெத்தண்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் ஆகியவை. கொல்லப்பள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமண தீட்சிதர். இவர், கடந்த 30 வருடங்களாக கோயிலில் பணியாற்றி வருகிறார். 10 வருடங்களுக்கு முன்பு தலைமை அர்ச்சகரானார். அப்போது முதல், கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அவர்தான் செயல்பட்டு வந்தார்.
70 வயதான ரமண தீட்சிதர், கர்நாடக மாநிலம் முளபாகலு பகுதியைச் சேர்ந்தவர். மூலவர் சந்நிதிக்குச் சேவை செய்பவர்களைத் தவிர மற்றவர்களை அழைத்துவரக்கூடாது. ஆனால் இவரோ, தன் பேரனை அழைத்து வந்தார். ஆகம விதிப்படி அது தவறு. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்துச்சென்று யாக பூஜை செய்தார். அதுவும் ஆகம விதிகளுக்கு எதிரானது. திருப்பதிக்கு அம்பானி வந்தபோது, அவர் தங்கியிருந்த இடத்துக்கே சென்று பூஜை புனஸ்காரங்களைச் செய்து ஆசீர்வாதம் செய்தார். மேலும், தேவஸ்தானத்துக்குத் தெரியாமல், தேவஸ்தானத்தின் அனுமதி பெறாமல் வெளியூர்களுக்குச் சென்று கல்யாண உற்சவங்களை முன்னின்று நடத்தி, பணம் சம்பாதித்தார். இவற்றையெல்லாம் அவர் தேவஸ்தான அனுமதியுடன்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. அது, மிகப்பெரிய குற்றம். இன்றைக்கு அவரின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும். ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த வைர நகைகள் மற்றும் நவரத்தினங்களைக் காணவில்லை என்பதற்கு தற்போதைய நிர்வாகம் காரணமல்ல. ஆங்கிலேயர் காலத்தில், கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘மகந்து மட’த்தினர்தான். அவர்களிடம்தான், கோயில் நகைகள் இருந்தன. அந்த நகைகளைக் கோயில் நிர்வாகத்திடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை’’ என்றார்.
“அந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?’’ என்று என்.ஏ.கே.சுந்தரவரதனிடம் கேட்டதற்கு, “யாரும் அந்த நகைகளைப் பார்த்ததில்லை” என்றார். ‘கோயில் மடப்பள்ளியை 25 நாள்கள் மூடிவிட்டதாகவும், அங்கிருந்து புதையல் எடுக்கப்பட்டதாகவும், சுவாமிக்கு நைவேத்தியம் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் ரமண தீட்சிதர் கூறுகிறாரே’ என்ற நம்முடைய கேள்விக்கு, ‘‘சாமிக்கு நைவேத்தியம் செய்வதில் எந்தக் குறையும் இல்லை. அந்தக் கட்டடத்தை இடிக்கவும் இல்லை. சமையல் கூடத்தில் புகையும் அழுக்கும் படிந்திருந்தன. அதனால், சமையல் அறையில் உள்ள மேடைகளைப் புதுப்பித்தோம். அவ்வளவுதான். அங்கு எந்தப் புதையலையும் எடுக்கவில்லை. ரமண தீட்சிதர் சொல்வதுபோல ரூ.500 கோடி மதிப்புள்ள வைரம் இங்கு இல்லவே இல்லை.
அதேபோல, நைவேத்தியம் செய்யவில்லை என்று சொல்வது பெரிய பொய். ரமணாவின் மகனுக்கு தலைமை அர்ச்சகர் பதவியைத் தராமல், அவரின் தம்பி வேணுகோபால் தீட்சிதருக்கு அந்தப் பதவியைக் கொடுத்ததால்தான், நிர்வாகம்மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுகிறார். தற்போது நிர்வாகத்திடம் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் நகைகள் 150 கிலோ இருக்கும். அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். அவற்றை வருடத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்து, முறையாகக் கணக்குப் பராமரிக்கிறோம்.
எந்த ஆகம விதியும் இங்கே மீறப்படுவதில்லை. சுப்ரபாதம் இசைக்கப்படுவது பற்றி அவர் குற்றம் சொல்கிறார். இரவு 12 மணி முடிந்ததும் அடுத்த நாள் கணக்குதான். அதனால், 12 மணிக்கோ, 2 மணிக்கோ சுப்ரபாதம் ஒலிப்பதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத்தான் தற்போதும் நியமித்துள்ளோம். கொல்லப்பள்ளி குடும்பத்திலிருந்து வேணுகோபால் (ரமண தீட்சிதரின் தம்பி), பெத்தண்டி குடும்பத்திலிருந்து சீனிவாசன், பைடப்பள்ளி குடும்பத்திலிருந்து கிருஷ்ண சேக்ஷாசலம், திருப்பதி அம்மா குடும்பத்திலிருந்து கோவிந்தராஜ் ஆகியோரைத்தான் நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பற்றி ஊடகங்களுக்கு தவறான செய்தியைக் கொடுத்ததற்காக விளக்கம் கேட்டு ரமண தீட்சிதருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரது வீட்டுச் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ரமண தீட்சிதருக்கு கட்டாய ஓய்வும் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சகர் பணி ஓய்வுக்கான காலத்தை 65 வயதாக நிர்ணயித்து, அதற்கான உத்தரவையும் கோயில் நிர்வாகம் பிறப்பித்துள்ளது” என்றார்.
இந்த சர்ச்சை பெரிதானதால், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைத்து விசாரணை நடத்தினார். திருமலையில் பொக்கிஷதாரர் (கணக்கு) குமாஸ்தா முந்தைய நாள் வருவாய் விவரங்களை, ஸ்ரீநிவாசமூர்த்திக்கு விவரமாகக் கூறி பக்தியோடு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விடைபெறுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வு. திருமலையில் என்ன நடக்கிறதென்பது வேங்கடேசப் பெருமாளுக்கே வெளிச்சம்.
– இரா.தேவேந்திரன், எஸ்.கதிரேசன்
படம்: பிரசன்னா
கிணற்றுக்குள் இருக்கும் தவளையை தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியுமா? எங்கே பணம் இருக்கிறதோ அங்கே ஊழல் இருக்கிறது. எங்கே கோடி கோடியாக பணம் இருக்கிறதோ அங்கே கோடி கோடியாக ஊழல் நடக்கிறது. திருப்பதி உண்டியலில் காணிக்கை போடுபவர்கள் குடிசையில் வாழும் குப்பனும் குப்பியும் அல்ல. தொழில் அதிபர்கள், வணிகர்கள், பங்குச் சந்தையில் பணம் போடுபவர்கள், அரசியல்வாதிகள் இவர்கள்தான் திருமாலுக்கு இலஞ்சம் கொடுக்கிறார்கள். பக்தர்களுக்கு வழங்கும் லட்டில் கூட தில்லு முல்லுகள் செய்கிறார்கள். எடையைக் குறைப்பதன் மூலம் ஒரு நாளைக்கு பல இலட்சம் சம்பாதிக்கிறார்கள். மக்களிடம் மூடபக்தி நிறைந்திருக்கும் போது பட்டாச்சாரிகளர்களது காட்டில் மழை பெய்யவே செய்யும். இந்து மதம் ஒரு விசீத்திரமான மதம். அர்ச்சனை, அபிசேகம், யாகம், மகோற்சவம் போன்றவை மூலம் பாவம் போகும் பணம் குவியும் என மக்களை ஏமாற்றுகிறது.