தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது.
முதலாவது உலகத் தமிழாராச்சி மாநாடு மலேசியாவிலும் இராண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு தமிழகத்திலும் மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது. பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு தொடங்கப்பட்டது.
சைவமும் தமிழழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறீஸ்வதத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழராயச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது. யாழ் நகரமே பாரம்பரிய பண்பாட்டின் கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கிள் மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு.
ஈழத் தீவில் தமிழ் மக்களின் அறிவையும் மொழியையும் ஒடுக்கவே தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. உலகத் தமிழராயச்சி மாநாடு என்பது உலகளவில் தமிழ் மொழி குறித்த ஆராயச்சி தொடர்பானது. ஆனால் அம் மாநாட்டை கண்ணுற்ற அன்றைய அரசு, ஈழத் தமிழ் இனத்தின்மீது இனவெறி வன்முறை கொண்டு தாக்கியது. அதுவரை காலமும் ஈழத்தில் தமிழ் மக்கள் தமது அடையாளத்தின் பொருட்டு, எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்களோ, அப்படியே இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் படுகொலை செய்து உலகத் தமிழாராச்சி போன்ற பண்பாட்டு செயல்களுக்கு ஈழ மக்களுக்கு உரிமையில்லை என்று காட்ட முற்பட்டது.
இந்தப் படுகொலையின் பின்னணியில் ஆக்கிரமிப்பு அரசியலே இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் தலையீடுகள், நோக்கங்கள் அற்ற வகையிலேயே இடம்பெற்று வந்தது. யாழில் இடம்பெறும் மாநாட்டிற்கு அன்றைய பிரதமர் சிறிவோ பண்டார நாயக்காவை அழைக்க வேண்டும் என்று தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளையில் உள்ள சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதை மறுத்துள்ளனர். இதனால் சிறிமாவுக்கு ஆதரவானவர்கள் கிளையிலிருந்து விலகி மாநாட்டை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
தமிழாராய்ச்சி மன்றத்தின் அகிலத் தலைவர் மாநாட்டை நடத்துதலே மரபாக இருந்தது. இந்த நிலையில் கிளையை விட்டு சிறிமா ஆதரவாளர்கள் விலகினர். இதையடுத்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைாஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். தன்னை விருந்தினராக அழைக்காமை காரணமாக சிறிமாவோ அரசு மாநாட்டை குழப்பத் தொடங்கியது. இதனையடுத்து அரச பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அத்துடன் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தர மறுத்தார்.
இந்த மாநாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று நினைத்த சிறிமா அரசு, மாநாடு தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்தது. ஆனால் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் திரைமாளிகளில் மாநாடு குறித்த செய்திகள் திரையிடப்பட்டன. இதனால் செய்தி பரவலை அரசால் தடுக்க முடியவில்லை. அத்துடன் உலக நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியது அரசு. சர்வதேச தமிழ் அறிஞர்கள் திருப்பி அனுப்பட்ட செய்திகள் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக் கோர முகத்தை உலகிற்கு அம்பலம் செய்தது.
இலங்கை அரசின் அடக்குமுறைகளைத் தாண்டி, மாநாடு தனியாகம் அடிகளாரால் வைபவ ரீதியாக தொடங்கப்பட்டது. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டார். மாநாட்டு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், றிமர் மண்டத்திலும் நடக்க, கலை நிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன. யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி இடம்பெற்றது. ஆறு நாட்களாக யாழ்ப்பாணமே தமிழ் மொழிப் பண்பாட்டுக் கோலத்தில் மிளிர்ந்தது. மக்கள் எழுச்சியாய் திரண்டனர். இதனை கண்ணுற்ற சிங்கள அரசுக்கு பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
தமிழ் கிராமங்கள் எங்கும் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் அலங்கார ஊர்திப் பவனிகள் இடம்பெற்றன. இறுதிநாளன்று முத்திரைச் சந்தியை கடந்து வந்த ஊர்தி பவனியை இலங்கை காவல்துறையினர் மறித்தபோது அந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ணுற்ற பொலிஸார் போராட்டத்திற்குப் பணிந்தனர். தம்மால் தடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் அலங்கார ஊர்திப் பவனியை செல்ல அனுமதித்தனர். எனினும் அதற்கான பலி வாழங்கலுக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வசேத அறிஞர்களை வழி அனுப்பும் நிகழ்வு ஜனவரி 10 அன்று யாழ் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை நடத்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா மறுத்தமை காரணமாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.வழியனுப்ப சுமார் 50ஆயிரம் பேர் வந்திருந்தனர். மண்டபம் நிரம்பிய நிலையில் வெளியிலும் மக்கள் திரண்டு இருந்தனர். பாதையை விட்டு வெளியில் புல் தரையிலிருந்து மக்கள் நிகழ்வை பார்வையிட்டனர். பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இந்த நேரத்தில்தான் அங்கு வந்த ஸ்ரீலங்காப் பொலிஸார் ஏற்கனவே திட்டமிட்டபடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். தம்மை புறக்கணித்தமை மற்றும் தமிழ் நிலத்தின் பண்பாட்டு எழுச்சி கண்டு சிங்கள அரசு பெரும் இனவெறியில் இருந்தது. இதனால் இந்த நிகழ்வில் எப்படியாவது வன்முறையை தோற்றுவிப்பதற்காகவே அனுராதபுரத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிஸார் என்ற வன்முறைக் குழு கொண்டுவரப்ட்டது. இந்த நிலையில்தான் யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் மாநாட்டிற்கு வந்திருந்த அப்பாவிப் பொதுமக்களை பொலிஸார் கடுமையாக தாக்கினர்.
குண்டாந்தடியடிப் பிரயோகம், அளவற்ற கண்ணீர் குண்டுப் புகைப்பிரயோகம் என்பன நிகழ்த்தப்பட்டதுடன், துப்பாக்கிப் பிரயோகங்களும் நிகழ்த்தப்பட்டன. துப்பாக்கிப் பிரயோகங்களால் மின்கம்பிகள் அறுந்து வீழந்தன. குறி பார்த்துச் சுட்ட மின் கம்பிகள் வீழ்ந்ததில் ஒன்பதுபேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் வயது முதிர்ந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றனர். அலை கடலென மக்கள் திரண்டு மாநாட்டிற்காக விழாக்கோலம் பூண்ட யாழ் நகரம் அழுகுரலும் கண்ணீருமாய் காட்சி அளித்தது.
இந்த வன்முறைகள் உலக அளவில் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்கல் முகத்தை அம்பலம் செய்தது. இதனால் விசாரணை குழு ஒன்றை அரசு அமைத்தது. ஆனால் ஸ்ரீலங்கா பொலிஸார் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு சம்பிரதாயபூர்வ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீதி மறுக்கப்பவடுதுபோல தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கும் நீதி மறுக்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மனதில் ஆறாத வடுவாக இந்தப் படுகொலை நிலைத்தது.
1974ஆம் ஆண்டு தைமாசம் ஒரு கறுப்பு மாதமானது. அந்த வருடம் எவருடைய வீட்டிலும் பொங்கல் இடம்பெறவில்லையாம். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் மூலம், சிங்கள இன வெறி அரசு தமிழ் மக்களை அவர்களின் மொழி சார்ந்த ஒரு பாரம்பரிய நிகழ்வொன்றை நடத்த அனுமதியாது என்ற கோர ஒடுக்குமுறை குணாம்சத்தை உலகிற்கு எடுத்துக் கூறியது. இலங்கை அரசு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கும் அப்பால், மொழி, பண்பாட்டு ரீதியாகவும் தீவிரமாக ஒடுக்குகிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. பிற்காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னணிக் காரணங்களில் ஒன்றாக இப் படுகொலை குறித்த வடுவும் இடம்பெற்றது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
- திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்!!
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்!!
ஒன்பது தமிழர்களது உயிர்களைக் காவு கொண்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துன்பியல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 44 ஆண்டுகள் கழிந்து போய்விட்டுள்ளன. 1974ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் முடிவடையும் வரையில், எதிர்காலத்தில் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கான திட்டமிட்டதொரு படுகொலைக்கு ஆரம்பக் குறியீட்டை ஆரம்பித்து வைத்து காலஞ்சென்ற தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு உறுதியெடுத்த நாள்தான் அந்தத் துன்பியல் சம்பவம் இடம்பெற்ற ஜனவரி பத்தாம் நாளாகும்.
யாழ்ப்பாணம் முதன்மை வீதி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள யாழ் முற்றவௌி யில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட வேளை உயிரிழந்த ஒன்பது தமிழர்களின் நினைவுச் சின்னம், அதன் அடையாளமாக இன்றும் எழுந்து நிற்பது, இன்னமும் அந்த கொடிய இரவைத் தமிழர்கள் தம் மனதுகளில் எக்காலமும் நினைவு படுத்திக்கொள்வதற்காகவேயாகும்.
44 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த மாநாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை நிகழ்வானது தமிழர்கள் மத்தியில் பல உண்மைகளை உணர்த்தியிருக்கின்றது. தமிழர்கள் தமிழர்களாக வாழவே கூடாது. மாநாடு நடத்துவதற்கும், தமி்ழை ஆய்வு செய்வதற்கும் தமிழர்களுக்கு உரிமையில்லை என்ற அந்தப் பேரினவாதச் சிந்தனையுடன் தமிழ்மக்களுக்கெதிரான ஒடுக்கு முறை நடவடிக்கைகள் இன்னமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்டு செல்கின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுச்சம்பவங்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. அவர்கள் அது குறித்துக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ள முயலாததும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னர் அத்தகையதோர் மாநாடு இலங்கையில் இடம்பெறாமலிருப்பதும் தமிழ்மக்களுக்கு ஒரு தலைக்குனிவு போன்றே உள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பு நிறுவனத்தினரும் இது குறித்து கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஈழத்தமிழினம் தனது மொழியுரிமை, ஆட்சியுரிமை, நிலவுரிமை போன்றவற்றை அடையவே கடந்த 70 ஆண்டுகளாக போராடிவருகின்றது. தமிழ்மக்கள் சம அந்தஸ்தோடும், சுயமதிப்போடும் வாழக்கூடாது. தமிழ் மொழியை வளர்க்கக்கூடாது என்பவை மட்டுமன்றி, தமிழ்மொழியை ஆய்வுக்குடபடுத்துவது, தமிழர்கள் தங்களைத்தாங்களே ஆண்ட வரலாறுகளையும், கலை பண்பாடுகளையும் எடுத்துச் சொல்லுகி்ன்ற விடயங்கள் சிங்கள அரசுகளுக்கு இன்றுவரை வேப்பங்காயாகக் கசக்குமொன்று,
சிங்களவர்களாகப் பரிணாமம் செய்யப்பட்ட கரையோரப் பிரதேச தமிழர்கள்
தமிழ் தமிழராக இருக்கக் கூடாது. தமிழன் தமிழோடு உறவாடக் கூடாது என்ற நிலைப்பாடும் ஆரம்பகாலத்திலேயே இருந்தமையினால் தான், நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சிங்களவர்களாக மாற்றி அவர்களின் பேச்சு வழுக்கிலிருந்த தமிழ்மொழியைச்சிதைத்து, அம்மொழியை மறக்க வைத்து, அந்த இடங்களெல்லாம் சிங்களப் பிரதேசங்களாக மாற்றி சிங்கள மொழிக்குச் சொந்தக்காரர்களாகவே வாழுகின்ற நிலையை நாட்டை ஆண்ட ஐக்கிய தேசியக்கட்சி அரசும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசும், திட்டமிட்டு உருவாக்கி வைத்தன. இவை வரலாற்றுப்பதிவுகளாகும். மூன்று மாவட்டங்களும் முழுமையாகவே சிங்கள மயப்படுத்தப்பட்டுள் ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழிக்கு மாநாடு நடத்தப்படல்வேண்டும். தமிழ்மொழியின் பெருமைகளை உலகறியச் செய்தல் வேண்டும். தமிழன் தமிழனாக வாழ்வதற்கு தமிழ் மாநாடு வழி சமைக்கவேண்டும் என்ற எண்ணங்கள், சிந்தனைகள் கொண்ட தமிழறிஞர்கள், புலவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அமைப்பான உலகத்தமிழாராய்ச்சி மன்றம், தனது நான்காவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்திருந்தது. இதற்கான அனுமதியை சிறிமாவோ அரசு முதலில் மறுத்திருந்தது. கொழும்பில் நடத்துவதையே அரசு விரும்பியிருந்தாலும், மன்றத்தினர் மறுத்துவிடவே, அதற்கான காரணங்களை அரசுக்கு விளக்கியிருந்தாலும், விருப்பமில்லாத நிலையில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அனுமதியை வழங்கியிருந்தது.
திட்டமிட்டபடி நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 4ஆம் திகதி காலை வேளையில் கோலாகலமாக ஆரம்பமாகி, யாழ் மாநகரம்களை கட்டி நிற்க, வீரசிங்கம் மண்டபத்தில் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிசெய்வோம் என்ற பலத்த கோஷம் எட்டுத்திக்கிலும் ஒலிக்க, மங்கள இசைமுழங்க, தமிழன்னை ஆசி வழங்க ஆரம்பமாகியமாநாடு, ஜனவரி மாதம் 10 ஆம் திகதிவரை இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் முழுவதும், தமிழர்கள் இலங்கையை ஆட்சி செய்த தமிழ்மன் னர்களது உருவங்களை உணர்வு பூர்வமாகக் காட்சிப்படுத்தி தமிழர்கள் ஆண்ட இனம், தமிழர்களுக்கான அரசுகள் கொடியோடும், முடியோடும், ஆண்ட வரலாறுகளையும் எடுத்தியம்பியமாநாடாக மேலும் மேலும் எழுச்சியாக நடந்து கொண்டிருக்க, யாழ். மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமளவில் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கித் திரண்டபடி இருந்தனர்.
தமிழாராய்ச்சி மாநாடு குறித்து இறும்பூது எய்திய ஈழத் தமிழர்கள்
தமிழர்களால் பெருமைப்பட்ட தமிழாராய்ச்சி மாநாடு, அறிஞர்களின் பேச்சுக்கள், புலவர்களின் கவிதைகள், பட்டிமன்றங்கள், ஆய்வுகள், பரதநாட்டியம் என இயல், இசை, நாடகங்கள் என்ற வரிசையில் ஏழு நாள்வரையில் நடந்து கொண்டிருந்தமை கண்டு உலகத்தமிழர்களே உலகத்தில் செம்மை மொழி, முதன்மொழியாம் எம் தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் மூத்தமொழி என்ற பெருமையும் இறும் பூதும் எய்தினர்.
ஏழு நாள்களாக யாழ் மாநகரம் இந்திர லோகமாகவே காட்சியளித்துக்கொண்டிருந்தது. தமிழை வளர்த்த தமிழ்ப்புலவர்கள், பெரியோர்களின் திருவுருவச் சிலைகள் மேலும் நகரைச் செழுமைப்படுத்தியிருந்தன. இடையிடையே பொலிசாரின் இடையூறுகள், நெருக்கடிகளும் தலைதூக்கியிருந்த நிலையிலும், மக்களோ எவற்றையும் பொருட்படுத்தாமல் தமிழ் மக்கள் மண்ணில் தமிழராய் நடக்கின்றோம், மொழியின் மூச்சாய் இருக்கின்றோம் என்ற நிமிர்வுடன் மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி பத்தாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிடவேண்டும். தமிழகத்தின் தமிழறிஞரான முகமதுவின் தேனினும் இனிமையான பேச்சைக் கேட்டுவிட வேண்டுமென்ற பேராவலோடு 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீரசிங்கம் மண்டபம் முன் ஆறுமணியிலிருந்து திரண்டிருக்க இறுதிநாள் நிகழ்வுகள் இரவு ஏழுமணியளவில் ஆரம்பமாகின.
நைனாமுகம்மதுவின் பேச்சு ஆரம்பமானது. கூடியிருந்த மக்கள் அவரதுபேச்சில் மயங்கிக் கட்டுண்டனர். அந்தவேளையில் எவருமே எதிர்பாராதவிதத்தில் திடீரென பொலிஸார் தங்களது ஜீப் வண்டிகளில் மக்களை ஊடறுத்து வர முயன்ற வேளை, மக்களோ அதற்கு இடம் கொடுக்கவிரும்பாதுஅப்படியே வீதியின் நடுவிலும், வீதி ஓரங்களிலும்அமர்ந்திருக்க பொலிசார் அந்த அவமதிப்பால் தங்களது ஆத்திர உணர்வையும், மூர்க்கத்தனத்தை யும் காட்ட முனைந்தனர்.
அரசினது அடிவருடியாகச்செயற்பட்ட அப்போதைய யாழ்ப்பாண நகரபிதா, அல்பிரட்துரையப்பாவும் பின்புலத்திலிருந்து செயற்பட, பொலிசாரின் அராஜக நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
பொலிஸாரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட குழப்பம்
மாநாட்டைக் குழப்புவது, மக்களைத்தாக்குவது, உயிரி।ழப்பை ஏற்படுத்துவது, யாழ்.மாநகரத்தை இருளில் மூழ்க விட்டு மக்களைத் தவிக்க வைப்பது போன்ற திட்டமிட்ட சதிச்செயல்களோடு பொலிசாரின் அத்துமீறல்கள் ஆரம்பமாகின. கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் தமிழ்மக்களின் அவலக்குரல்களே அவ்விடமெங்கும் ஓங்கி ஒலித்தன.
புல்லுக்குளம் பகுதியில் உயர் அழுத்தம் கொண்ட மின்கம்பிகளை நோக்கி பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மின்சாரக்கம்பிகள் அறுந்து நிலத்தில் வீழ்ந்ததில் அவ்விடத்தில் ஒன்பது தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது. பொலிசாரின் அட்டூழியங்கள் தொடருகின்றன. யாழ்மாநகர பகுதிகளில் பொலிசார் குவிக்கப்படு கின்றனர். தொடர்ந்து அச்சம் நிலவு கின்றது. தமிழர்களின் உயிர்களைப் பறிக்கவேண்டும், தமிழுக்கும் , தமிழர்களின் உணர்வுகளுக்கும் சாவு மணி அடிக்கவேண்டும் என்ற இனவாதம், தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளின் போது வெளிப்பட்டது .
அது அன்றிரவு நிரூபணமாகியது. நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் ஊடாக தமிழினம் ஒன்றுபட்டுவிட்டது. விடுதலைவேட்கையும் பீறிட்டெ ழுகின்ற வேளையில் 42 தமிழ் இளைஞர்கள் அரசினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை குறித்த சம்பவம் அரசினால் தமிழர்களது தலைநிமிர்வைப் பொறுக்க முடியாது கட்டவிழ்த்து விடப்பட்டதொரு சதி யாகும் என்பதை நிரூபித்தது.
போராட்ட உணர்வுகளை இப்படியான அட்டூழியச் சம்பவங்களுடாக ஆரம்பத்திலேயே முற்றாக அழித்து விட வேண்டும் என்ற நயவஞ்சக நோக்கில்தான், ஒன்பது தமிழர்களைக் காவு கொண்டதன் மூலம் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள் திட்டமிட்டு க் குழப்பப்பட்டன.
தமிழர் இளைஞர்களிடையே சிங்கள ஆட்சியாளர்கள் குறித்த வெறுப்பு தலைதூக்கக் காரணமாய் அமைந்த சம்பவம்
இறுதி நாளில் இடம் பெற்ற பொலிசாரின் அராஜகச் சம்பவங்கள் இளைஞர்களின் விடுதலைவேட்கையை அதிகரிக்கச்செய்தன. 44 ஆண்டுகள் கால வரலாற்றில், ஈழத்தமிழினம் பட்ட அவலங்களும், சொத்தழிவுகளும், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளும், இடப்பெயர்வுகளும், இடம்பெறுவதற்கு நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட வன்முறைகளும், படுகொலைகளும் தான் காரணமாகின. தமிழர்களை அழிப்பதற்கும், தமிழ் உணர்வுகளை இல்லாதொழிப்பதற்கும் பிள்ளையார் சுழிபோட்டு வைத்தது அந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைச்சம்பவமே.
மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வெனத் திரண்டிருந்த தமிழ் உணர்வு கொண்ட ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் வரையிலான தமிழ் மக்களில் ஒன்பது உயிர்கள் திட்டமிட்டுக்காவு கொள்ளப்பட்டமையே, தாம் தனித்தவமானதொரு தேசிய இனமாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தைத் தமிழ் மக்களிடையே உருவாக்கி வைக்கக் காரணமாகியது.
பொலிசாரினது அந்தத்திட்டமிட்ட செயற்பாடு தொடர்பாக விசாரணை கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வேளைய சிறிமாவோ அம்மையாரின் தலைமையிலான அரசு அதற்கு இனங்கவில்லை. ஆயினும் சுதந்திரமான விதத்தில் நிறுவப்பட்ட விசாரணைக்குழு, சம்பவத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிசார் மீது சுமத்தித் தனது அறிக்கையை வௌியிட்டிருந்தது.
குறித்த அந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது உயிர்நீத்த ஒன்பது தமிழர்களது நினைவாக யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக நிறுவப்பட்ட நினைவுத் தூண்கள் கூட அசாதாரணமான சூழல் நிலவிய கால கட்டமொன்றில் இடித்தழிக்கப்பட்டன, ஆயினும் மீண்டும் அதே இடத்தில் அத்தகைய நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டு, தமிழ் உணர்வாளர்களால் வருடாவருடம் ஜனவரி பத்தாம் நாளில் உயிரிழந்தவர்கள் தொடர்பான நினைவு கூரல் இடம் பெற்று வருகின்றது.
ஈழத்தமிழர்களின் பல துயரச்சம்பவங் களில் வரலாற்று ரீதியில் முக்கியத்து வம் பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளும் ஒன்றாகும்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம் இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி, கஜதீபன், நாடாளுமன்ற உறுப்பினா் சித்தாா்தன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில்
ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.
மொழியோடு புரிந்த போர்!