புதிய சுதந்திரனை இருட்டடிப்பு செய்ய நினைப்போர் சூரியனைக் கையால் மறைக்கப் பார்க்கிறார்கள்!

புதிய சுதந்திரனை இருட்டடிப்பு செய்ய நினைப்போர் சூரியனைக் கையால் மறைக்கப் பார்க்கிறார்கள்!

நக்கீரன்

      உண்மை – நேர்மை – பக்கம் சாராமை!

இதுதான் மூத்த ஊடகவியலாளர்  ந. வித்தியாதரனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து  வெளிவரும் ‘காலைக்கதிர்’ நாளேட்டின் இலட்சியம், கொள்கை, கோட்பாடு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு  சென்ற மார்ச் 14 ஆம் நாள் (புதன்கிழமை)  நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் அகிலன் முத்துக்குமாரசாமியிடம் இருந்து பத்திரிகையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப்  படிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், உலகத் தமிழர் பேரவையின் தவைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ப பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தலைநகரில் மிகவும் கோலாகலமாக நடந்த இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியை பல ஏடுகள், இணைய தளங்கள் படங்களோடு வெளியிட்டன. குறிப்பாக தமிழ்சிஎன்என் இணையதளம்  50 க்கும் அதிகமான படங்களுடன் அந்தச் செய்தியை பிரசுரித்திருந்தது.

அந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம்.ஏ. சுமந்திரன்,  சுதந்திரன்  ஏட்டை தமிழரசுக் கட்சி சார்பில் வெளியிட வேண்டிய காரணங்களைக் குறிப்பிட்டார்.

        (1) இலங்கைத் தமிழரசுக்கட்சி கட்சியினுடைய உத்தியோகபூர்வ வெளியீடான புதிய சுதந்திரன் பத்திரிகையின் வெளியீடு காலத்தின் தேவையாகும். இதன் தேவையை மற்றைய ஊடகங்கள் கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. சுதந்திரன் பத்திரிகையின் காலத்தில் எப்படியாகக் கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. அதனை மீளவும் வெளியிடுவதற்கான தேவையாகவுள்ளது எனப் பலர் கூறியுள்ளார்கள்.

        (2) கட்சியினுடைய உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன என்பதை பல வருடங்களாக அறிவிக்க நாங்கள் தவறியிருக்கின்றோம். 1983 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகை முடக்கப்பட்ட பின்னர்  கட்சியிடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்பதில் இத்தனை காலம் பின்நிற்கின்றோம். நீண்ட இடைவெளியின் பின்னர்                  வெளியிடப்படும் பத்திரிகையாக இப்பத்திரிகை உள்ளது.

     (3) இப்பத்திரிகை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ வெளியீடாகத்தான் வெளிவரும். உத்தியோகபூர்வ அறிவிப்பு என்னவென்று சொல்லத் தவறிய காரணத்தினால் தான் பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

        (4) இப்பத்திரிகையின் முதலாவது வெளியீட்டிலேயே சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்பு நாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன. இதில் தமிழ்தேசியகூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு அறிந்துள்ளார்கள். எத்தகைய அழுத்தங்கள்(இலங்கைக்குக்)  கொடுக்கப்படவேண்டும் என நாங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளோம்.

   (5) தற்போது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் பக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இம்முறை இலங்கை தொடர்பாக 32 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இவற்றை யார் நடத்துகிறார்கள் ஏன் நடத்துகிறார்கள் என்று தெளிவில்லை

        (6) உறுப்பு நாடுகளும் தமிழ் மக்கள்  சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கேட்கின்றார்கள்.

       (7) சிலர் ஜெனிவா சென்று தீர்மானங்களை எரிக்கிறார்கள். நாங்கள் தீர்மானம் வேண்டும் என்கின்றோம். 

   (8) ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் எவற்றைச் செய்யமுடியும் எவற்றைச் செய்ய முடியாது என்பது எமது மக்களுக்கு சரியாகப் போய் சென்றடையவில்லை. அங்கு சென்றால் எல்லாம் கிடைத்து விடும் என்று எமது மக்களுக்குச் சொல்லி அவர்களை ஊக்குவித்துள்ளார்கள். ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 36 விடயங்கள் இருக்கின்றன. இதில் மூன்று விடயங்கள் பொறுப்புக்கூறல் சம்பந்தமானது,  இறுதியாக போர்க்குற்றம் சம்பந்தப்பட்டது. ஏனைய 33  விடயங்களும் மிக முக்கியமானவை. குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை,  பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம்,  நட்டஈடு அரசியல் தீர்வு தொடர்பானவை. இவ்வாறான பலவற்றை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    (9) தற்போதுநடைபெற்றுவரும் பிரச்சாரம் என்னவெனில் இந்தத் தீர்மானத்தினால் பயனில்லை இதைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும். இதனைத்தான் தற்போது கூறிவருகிறார்கள். இது மக்களுக்குத் தேவையானதா யாராவது பகிரங்க வெளியில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியும் எனக் கூறமுடியுமா?  இது எவராலும் முடியாது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் பாதுகாப்புச் சபை இந்த விடயத்தை குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்தாது. இந்த விடயத்தை முன்னின்று நடத்துகின்ற அமெரிக்காவே இதனைச் செய்யாது.

    (10) அமெரிக்காவே இந்த (சர்வதேச குற்றவியல்) நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தகைய தீர்மானத்தை கொண்டு வந்து (ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்) நிறைவேற்றிய  அமெரிக்காவே இதனைச் செய்யாத போது இதனைத் தெரிந்து கொண்டு மக்களுக்கு   இதைச் செய்வோம்  அதைச் செய்வோம் என்ற பொய்யான பரப்புரை   நடத்தப்படுகின்றது. இதற்கு மாற்றுப்பிரச்சாரம் கிடையாது. இதை நான் சொன்னால் ஊடகங்கள் சுமந்திரன் சொல்கின்றார் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது,  இலங்கையை அவ்வாறு அனுப்பமுடியாது,  இலங்கையைப் பாதுகாக்கிறார் என ஊடகங்கள் கூறும்.  அவ்வாறு ஊடகங்கள் கூறும்போது எங்களுடைய உத்தியோகபூர்வமான காரணம் என்ன என்பதை எங்களுடைய பத்திரிகைகளில் வெளியிடுவதற்காகத்தான் புதிய சுதந்திரனை வெளியீடு செய்கின்றோம்.

   (11) நாங்கள் பொறுப்பான பயணத்திலே எதைச் செய்யமுடியும் எதற்கு ஆதரவைத் திரட்டியிருக்கின்றோம்,  எத்தகைய ஆதரவை சர்வதேசத்தில் தக்கவைக்கமுடியும் என்ற போக்கிலே தான் நாங்கள் பயணிக்கமுடியும். இருக்கிற ஒரே ஆதரவையும் நாங்கள் புறம்தள்ளிவிட்டு நாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று வீரப்பேச்சு பேசுவது மக்களை வெகுவாகப் பாதிக்கும். மக்களுக்கு உண்மை தெரியும் தானே என இவ்வளவு காலமும் நாங்கள் நினைத்தோம். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள்  அப்படி இல்லை என்பது வெளிவந்துள்ளது.

  (12) எங்களுடைய கட்சி எதைச் செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்ற நிலைப்பாட்டை அறிவிப்பது அத்தியாவசிய தேவையாகவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்பினால் அதற்கான இணையத்தளம் இருக்கின்றது. அதற்கான பத்திரிகை இருக்கின்றது. இதன்மூலம்   உத்தியோகபூர்வமாக வெளிவரும் என்றார்.

ஆனால், உண்மை – நேர்மை – பக்கம் சாராமை பற்றிப் பறைசாற்றும் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் சுமந்திரனது பேச்சை மட்டுமல்ல முழு நிகழ்சியையுமே இருட்டடிப்புச் செய்து விட்டார்.  இதுவே  தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோக பூர்வ செய்தி ஏட்டின் வெளியீடாக இருந்திருந்தால் மனிதர் பக்கம் பக்கமாக வெளியிட்டிருப்பார்.  இதில் சோகம் என்னவென்றால் வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளராக இரண்டு ஆண்டுகள்  இருந்தவர்.  இது அவரே என்னிடம் சொன்ன செய்தி ஆகும். 

‘ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கல்லடி என் கண்ணே’ என்று சொன்ன பாதிரியார் மாதிரி வித்தியாதரன்  நடந்து கொண்டுள்ளார்.  புதிய சுதந்திரனில்  முதலமைச்சர் விக்னேஸ்வரன்  பற்றி வந்துள்ள ஒரு கட்டுரை,

‘தலைனும் நானே, பேரவையும் நானே!’ ‘பொதுக் குழுவும் நானே மத்திய செயற்குழுவும் நானே!’  ‘கேள்வியும் நானே, பதிலும் நானே!’ என்று தலைப்பும், காட்டூன் படங்களும் போட்டு ஒரு அடி அடிச்சிருக்கினம். அதுவும் முதலாவது இதழிலையே முதலமைச்சர் விக்கியைப் போட்டுத் தாக்கு தாக்கு எண்டு போட்டடித்திருக்கினம்… அடித்துப் பினாத்துகினம்… அப்ப முதலமைச்சரைக் குறி வைச்சுத் தாக்குகிறதுதான் தமிழரசுக் கட்சியின்ரை நிலைப்பாடோ…?” என வித்தியாதரன் ஒப்பாரி வைக்கிறார். (காலைக்கதிர்  மார்ச் 18, 2018)

முதலமைச்சரைத் தலை முழுகி  பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது வித்தியாதரனுக்கு தெரியாததல்ல. “நான் தமிழரசுக் கட்சியில் கேட்டு அதனுடைய செல்வாக்கால் தேர்தலில்  வெல்லவில்லை. மக்களிடம் உள்ள எனது சொந்த செல்வாக்குக் காரணமாகத்தான் தேர்தலில் வென்றேன்” என விக்னேஸ்வரன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தது முதல் கட்சிக்கும் அவருக்கும் எட்டாப் பொருத்தம்தான். என்னால் ஆயுதக் குழுக்களுடன் ஒத்துப் போக முடியாது. நான் தமிழ் அரசுக் கட்சி சொல்வதைக் கேட்டுத்தான் நடப்பேன் என்று  சொன்ன விக்னேஸ்வரன்  முதலமைச்சர் ஆன பின்னர் அவர் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்துக்கே போகவில்லை. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பின்னர்தான் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்துக்குப் போனார்.

2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘வீட்டை விட்டு வெளிவந்து மாற்றத்துக்கு வாக்களியுங்கள்’ என  இரட்டை அர்த்தத்தில் அறிக்கைகள் விட்டார். ‘தமிழ் மக்களை ஒன்று திரட்ட வேண்டும்  ஒற்றுமைப் படுத்த வேண்டும்’ என்பதற்காகவே  தமிழ் மக்கள்   பேரவையை உருவாக்கினோம் என விக்கினேஸ்வரன் விளக்கம் அளித்தாலும்  தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பில்லை! இன்று முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிட்டது. இன்று தமிழ் மக்கள் பேரவையில் யார் இருக்கிறார்கள், யார் உள்ளே, யார் வெளியே என்பது தெரியவில்லை. இணைத்தலைவர் ரீ.வசந்தராசா என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.  பொதுக் குழுவைக் கூட்டாமல் தானே ஒரு செயல் குழுவை உருவாக்கி அதன் தலைவர்தானே என அறிவித்துப் போட்டார்! இனி எல்லாமே இந்தச் செயல்குழுதான். இனி எல்லாமே – அடியும் முடியும்,  ஆதியும் – அந்தமும் அவரேதான்!

தந்தை செல்வநாயம் அவர்களால் தொடக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சிக்கு  சுதந்திரன் ஒரு கேடயமாக விளங்கியது. அதே போல் புதிய சுதந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் கேடயமாக விளங்கும். தமிழ் மக்களுக்கு  எது உண்மை எது பொய்? எது சாத்தியம் எது சாத்தியமில்லை? எது சரி எது பிழை? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லும்.

புதிய சுதந்திரனை இருட்டடிப்பு செய்ய நினைப்போர் சூரியனை கையால் மறைக்கப் பார்க்கிறார்கள்! அல்லாவிட்டால் பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைக்கிறார்கள்! அது நடக்ககாது!


இனி இது இரகசியம் அல்ல

நேற்றுக்காலை நேரத்துடன் அலுவலகத்துக்கு வந்து பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். நானும் அலுவலக உதவியாளர் ஒருவரும் மட்டுமே அச்சமயம் இருந்தோம். வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு வயோதிபர் கைகளில் பல தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளுடன் திடீரென வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு வயோதிபர் கைகளில் பல தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளுடன் திடீரென நுழைந்தார். பெருத்த குரலில் தான் பேசினார்.
நீர்தானா இன்ன பத்திரிகையாளர் என்று கேட்டார். “ஆம்’ என்றேன்.

“உமக்குச் சம்பந்தனைத் தெரியுமோ? பத்திரிகையாளர் என்ற முறையில் இதையயல்லாம் கேட்கமாட்டீர்களோ?” – என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.
இன்று காலையில் நேரத்து டனேயே செய்திச் சிக்கல் வந்து தோளில் தொற்றிக் கொள்ளப் போகின்றது எனப் புரிந்து கொண்டேன்.

“சொல்லுங்கோ ஐயா… என்ன பிரச்சினை? சம்பந்தன் ஐயாவிடம் என்ன கேட்கவேணும்?” – என்றேன்.

“உவர் சுமந்திரனார் “சுதந்திரன்’ எண்ட பேப்பர் அடிக்கிறார் பார்த்தனீரோ” ?- என்றார்.

“ஓம், உங்கள் பத்திரிகையிலை செய்தி எல்லாம் போட்டனீங்கள்… கட்டாயம் தெரிஞ்சிருக்கும்” – என்று தாமே கேள்வியும் தாமே பதிலுமாக உரைத்தார்.

“அது “சுதந்திரன்’ இல்லை ஐயா… “புதிய சுதந்திரன்’ எண்டுதான் அதற்குப் பெயர்” – என்று நான் விளக்கமளித்தேன். என் மேசையில் இருந்த அந்த இதழையும் தூக்கிப் போட்டேன்.

“புதிய சுதந்திரனோ, பழைய சுதந்திரனோ, இன்ன இழவோ…!”  என்று சலித்துக் கொண்டார்.

“என்னட்டையும் அது இருக்குது” – என்று கூறியபடி தனது கைகளில் இருந்த பத்திரிகைக் கட்டுக்குள்ளே இருந்து அதனை உருவி எடுத்தார்.

“இஞ்ச பாருங்கோ… உது தமிழரசுக் கட்சியின்ரை உத்தியோக பூர்வ பேப்பர் இதுதான் என்று சுமந்திரன் பிள்ளை அறிவிச்சுப் போட்டார்… கட்சியின்ரை உத்தியோகபூர்வ நிலைப்பாடு இந்தப் பத்திரிகையிலைதான் வரும் எண்டும் சொல்லிப் போட்டார்… உங்கடை பேப்பர் அதைப் போடேல… வேறு பேப்பர்கள் போட்டவை… உங்களுக்கு ஏதும் சுமந்திரனோடை பிரச்சினையோ…?” என்று கேட்டார்.

நான் அப்படி ஒன்றும் இல்லை என்றாற் போல தலையாட்டினேன்.

“இஞ்சை பாருங்கோ… இந்தப் பேப்பரிலை – அதுவும் முதலாவது இதழிலையே முதலமைச்சர் விக்கியைப் போட்டுத் தாக்க தாக்கு எண்டு போட்டடித்திருக்கினம்…

“தலைனும் நானே, பேர வையும் நானே!’ “பொதுக் குழுவும் நானே; மத்திய செயற்குழுவும் நானே!’ “கேள்வியும் நானே, பதிலும் நானே!’ என்று தலைப்பும், காட்டூன் படங்களும் போட்டு
ஒரு அடி அடிச்சிருக்கினம்” என்றார்.

அந்தக் கட்டுரைப் பக்கங்களைத் திறந்து எனக்குக் காட்டினார். பார்த்தேன், வாசித்தேன் என்று சொன்னேன்…

“இதை நீங்கள் சம்பந்தனிட்டைக் கேட்கக்கூடாதா?” என்று விநயமாக வேண்டினார்.

“எதை?” என்று திரும்பிக் கேட்டேன்.

“உது… உந்தச் சுதந்திரன் தமிழரசுக் கட்சியின்ரை உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைச் சொல்லும் எண்டு அதன் பேச்சாளர் சொல்லுகிறார். அதன் முதல் இதழிலையே முதலமைச்சர் விக்கியரைப் போட்டு அடி, அடி எண்டு அடித்துப் பினாத்துகினம்… அப்ப முதலமைச்சரைக் குறி வைச்சுத் தாக்குகிறதுதான் தமிழரசுக் கட்சியின்ரை நிலைப்பாடோ…? சம்பந்தன் ஐயா, முதலமைச்சர் குறித்து வேறு விதமாய் எல்லோ கருத்துச் சொல்லுகிறார்… ஆனால் அவரின்ரை கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வேறு விதமாய்க் கிடக்கு. அமிர்தலிங்கத்தின்ரை சிலை திறப்புக்காக சம்பந்தன் நாளைக்கு யாழ்ப்பாணம் வாறாராம்.. அப்ப அவரைச் சந்தித்து, உதைக் கேட்டு ஒருக்கா பதில் எழுத மாட்டியளோ…?” – என்று
நோண்டினார் அந்த வெள்ளை டிரவுஸர், சேர்ட் வயோதிபர்.

“வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் கேட்பேன்…!” என்று கூறி அவரைச் சமாளித்து அனுப்பி வைத்தேன்.

சம்பந்தன் ஐயாவின் பதிலைக் கேட்டு பெற ஆசை…! வாய்ப்புக் கிடைத்தால் பார்ப்போமே…!
– மின்னல் – 


விரக்தியின் உச்சத்தில் நடேசபிள்ளை வித்தியாதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டின் ஆசிரியர் ந.வித்தியாதாரன். மூத்த ஊடகவியலாளரான இவருக்கு அரசியல் பின்புலமும் உண்டு. 2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சனநாயக போராளிகள் குழு ஒன்றைத் தொடக்கினார். அதன் முதன்மை வேட்பாளராக அவரே இருந்தார். அந்தக் குழு சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு வார்த்தை நடத்திய வித்தியாதரன் தொகுதிக்க இரண்டு என்ற விழுக்காட்டில்  ஒன்பது போராளிகளுக்கு  நியமனம் கேட்டார். அவரது கோரிக்கை மறுக்கப்பட்ட போது தேர்தலில் சனநாயக போராளிகள் குழு தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டதாக அறிவித்தார்.

வடக்கில் முன்னாள் போராளிகளை களம் இறக்கினால் அது தெற்கில் மகிந்த இராசபக்சாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்பது பாதுகாப்பு அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய  இராணுவப் புலனாய்வுப் பிரிவு நம்பியது. மகிந்த இராசபக்சா முன்னாள் வி.புலி போராளிகளை தனது ஆட்சியில் அடக்கி வைத்திருந்தார். ஆனால்   சனவரி 08, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால  சிறிசேனா வெற்றி பெற்றார். அவரது ஆட்சீயல் சனநாயகத்துக்கான இடைவெளி உருவாக்கப்பட்டது. இதனால் முன்னாள் வி.புலிப் போராளிகளும் பலன் அடைந்தார்கள். அவர்கள் மீதான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது. இதனை இராணுவ புலனாய்வுப் பிரிவு விரும்பவில்லை. இந்தச் சுதந்திரம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தைத்  தோற்றம் பெறச் செய்யும் தெற்கில் குண்டுகள் வெடிக்கும் என சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்து அவர்களது வாக்குகளை அபகரித்து மீண்டும் மகிந்த இராசபக்சாவை பிரதமராக அமர்த்த இராணுவ உளவுப் பிரிவு திட்டமிட்டது. தெற்கில் பரப்புரையும் செய்யப்பட்டது.

வடக்கில் சனநாயகப் போராளிகள் குழு வி.புலிகளின் அரசியல் பிரிவு செய்த அதே பரப்புரைப் பாணியில் செயற்பட்டது. துண்டுப் பிரசுரங்களில் தங்களது சொந்தப் பெயர்களோடு இயக்கப் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டார்கள். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நா.உறுப்பினரைத் தெரிவு செய்ய 30,000 – 35,000 வரையிலான வாக்குகள் தேவைப்படும் என்பதால் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (இதில் கிளிநொச்சி நிருவாக மாவட்டமும் அடக்கம்) முன்னாள் போராளிகளின் குடும்பங்களை இலக்கு வைத்து சனாநாயகப் போராளிகள் குழு பரப்புரை செய்தது.

அப்போது வித்தியாதரனுடைய கையில் நாளேடு எதுவும் இருக்கவில்லை. மலரும் என்ற இணையதளம்தான் இருந்தது.  பொதுவெளியில் காணப்பட்ட செய்தி ஏடுகள் அந்தக் குழுவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. பலாலி இராணுவ தளம் நடத்தும்  நியூயவ்னா என்ற இணைய தளம் மட்டும் அந்தக் குழு தொடர்பான பரப்புரைக்கு பெருமளவு உதவி செய்தது. அதே போல் இராணுவம் நடத்தி வந்த தொலைக்காட்சியும் உதவி செய்தது. 

தேர்தல் முடிவுகள் வந்த போது சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சனநாயகப் போராளிகள் குழு 1,979 வாக்குகளை மட்டும் பெற்று படு தோல்வி அடைந்தது. வித்தியாதரனின் நாடாளுமன்றக் கனவும் காற்றில் கரைந்து போனது.

இதே போலத்தான் வட மாகாண சைபயின் முதலமைச்சர் கனவும் வித்தியாதரனுக்கு கிட்டாமல் போய்விட்டது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளாராக தன்னை நிறுத்துமாறு வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியிடம் கேட்டார். அவரது வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

இப்படி ஐந்து இராச்சியம் கேட்டு, ஐந்து ஊர் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட நிலையில் ஐந்து வீடு கேட்ட பாண்டவர் போல முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, யாழ்ப்பாண மாநகர சபை பதவி கேட்டு ஒன்றுமே கிடைக்காது போகவே விரக்தியின் உச்சத்துக்கு வித்தியாதரன் போய்விட்டார்.

அதனால் தமிழ் அரசுக் கட்சி பற்றியும் அதன் தலைமை பற்றியும்  அவர் தொடக்கிய காலைக்கதிர் நாளேட்டில்  கன்னா பின்னா என எழுதிவருகிறார். இலவச ஆலோசனைகளை எடுத்து விடுகிறார்.  இனி இது இரகசியம் அல்ல என்ற ஒரு கிசு கிசு பகுதியையும் எழுதுகிறார். அதில் கனடாவில் இருந்து வந்து நிற்கும் பிரமுகர் பற்றி எழுதுகிறார். அவர் குதிரை பேரத்தில் இறங்கி இருப்பதாகவும் அதில் பல லகரங்கள் கை மாறுவதாகவும் எழுதுகிறார். இன்னொரு பஞ்சமா பாதகத்தையும் அவர் செய்து விட்டாராம். தமிழ் அரசுக் கட்சிக்கு என புதிய சுதந்திரன் என்ற ஒரு செய்தித் தாளை வெளியிடுகிறாராம். அதற்கு வேண்டிய பல இலட்சங்களை அவரது முயற்சியால் கனடா கொடுத்து உதவியதாம். மேற்கொண்டு அந்த செய்தி ஏட்டை நடத்த தமிழ் அரசுக் கட்சி தனது மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மாதா மாதம் பணத்தைக் ‘கறக்க’ இருக்கிறதாம்…………………… இப்படி வித்தியாதரன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுக் கனவுலகில் பறக்கிறார்.

கொழும்பில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுவில் நடந்தவற்றை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு தொலை நோக்கி மூலம் பார்த்து “‘அந்தக் கூட்டத்தின் போது யாழ் மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்னோல்ட் அவர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார்’ என்று வித்தியாதரன் எழுதினார். உண்மை அதற்கு முற்றிலும் எதிர்மாறானது!

பதவி கிடைக்கவில்லை என்பதற்காக  தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேறி உதயசூரியன், தமிழ் மக்கள் பேரவை என அலையும் பேராசிரியர் சிற்றப்பலத்துக்கும் ஓசியில் வக்காலத்து வாங்குகிறார்.  ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பின்னர் வெளியேற்றப்பட்ட அனந்தி சசிகரன், சிவகரன் இருவரையும்  மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அதே போல் தமிழ் அரசுக் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கிவிட்டதாம். தமிழ் அரசுக் கட்சி திருந்த வேண்டுமாம். இல்லாவிட்டால் அது இல்லாது போய்விடுமாம்!

இன்று தமிழினத்தில் காணப்படும் பெரிய குறைபாடு படித்த, வினைத்திறம் வாய்ந்த, நேர்மையான வினையாளர்கள் போதியளவு இல்லாததே. இருந்த திறமைசாலிகள் வெளிநாட்டுக்குக் குடியெர்ந்து விட்டார்கள். இந்தப் பின்னணியில் தனது தொழிலை விட்டு, வசதிகளைத் துறந்து,  பிறந்த மண்ணில் போரினால் நொந்து நுலாகிப் போய்விட்ட எமது உறவுகளுக்குத் தொண்டாற்ற வந்திருக்கும் ஒருவரைப் பாராட்ட வேண்டாம் கொஞ்சம் நாகரிகமாக ஏனும் எழுத வேண்டாமா?

கனடாக்காரர் இதுபற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். அவர் தமிழ் ஆசிரியர். சங்க இலக்கியம் படித்தவர். படிப்பிப்பவர். குறிப்பாக திருக்குறளில் தேர்ச்சி பெற்றவர். குறள் வழி வாழ்பவர். தன் குடியினை உயரச் செய்ய வேண்டும் என்பவனுக்கு காலம் இல்லை. காலத்தை நோக்கி சோம்பேறியாக இருக்க மாட்டான். மானத்தையும் கருத மாட்டான். அப்படிக் கருதினால் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் காலம் இல்லை.  குடிக்குச் சொல்லியது இனத்துக்கும் பொருந்தும்.

கனடாக்காரர் மீது சுமத்தப்படும் பழிகள் பற்றியும் கிசு கிசு செய்திகளில் உள்ள உண்மைத்தன்மை பற்றியும்  இனி விரிவாகப் பார்ப்போம். (வளரும்)


வைக்கல் பட்டடை நாய் தானும் தின்னாது தின்ன வருகிற மாட்டையும் தின்ன விடாது

வைக்கல் பட்டடை நாய் தானும் தின்னாது தின்ன வருகிற மாட்டையும் தின்ன விடாது. அதுபோல சில மனிதர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.

சம்மாவே வாய் சப்புகிற வித்தியாதரனுக்கு கனடாக்காரர் என்ற அவல் கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றிய அவதூறுகளை தான் சொல்வதாக இல்லாமல் அனாமதேய பேர்வழிகள் ஊடாகச் சொல்கிறார்.

திருகோணமலை நகர சபைக்கும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கும் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் அதிக ஆசனங்களைத் தமிழரசுக் கட்சி பிடித்தது. ஆனால் அங்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டவில்லை என்று சொல்வது சரி. ஆனால் “அந்தோ பரிதாபம், அந்த இரண்டு பிரமுகர்களையும் சம்பந்தப்பட்ட சபைகளுக்கு நியமிக்கக்கூடிய தாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ இடம் தமிழரசுக் கட்சிக்குக் கிட்டவில்லை” என எழுதுவது முட்டாள்த்தனமானது. வித்தியாதரன் புதிய தேர்தல் சட்டத்தை சரியாகப் படிக்கவில்லை. வட்டாரத் தேர்தலில் அதிக வட்டாரங்களில்  ஒரு கட்சி வென்றால்   பெற்றவாக்குகளின் விகிதாசார அடிப்படையில்   அந்தக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடையாது. இதுதான் திருகோணமலை மாநகரத் தேர்தலில் நடந்தது. திருகோணமலை நகரசபை தேர்தலில் விழுந்த வாக்குகள் 23,567. இதில் தஅக க்கு விழுந்த வாக்குகள் 8,832 (37.46 விழுக்காடு) ஆகும். எனவே மொத்த உறுப்பினர்கள் 24 இல் தஅக க்கு 9 இருக்கைகள் (37.46 விழுக்காடு)  ஒதுக்கப்பட்டன. ஆனால் தஅக வட்டாரத் தேர்தலில் 9 இருக்கைகளை வென்றதால் வீதாசார ஒதுக்கீட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை. இது தெரியாமல் வித்தியாதரன் “அந்தோ பரிதாபம்” என உச்சுக் கொட்டுகிறார்.

தனிப்பெரும்பான்மை கிடைக்காத சபைகளில் (267 சபைகளில்) அதிக இருக்கைகளைப் பெற்ற கட்சி ஏனைய கட்சிகள் அல்லது சுயேட்ச்சைகள் ஓடு பேசித்தான் பெரும்பான்மையை எட்ட முடியும். அதையே தஅக செய்தது. அதனைக் குதிரைப் பேரம் பேசப்பட்டது என்றும் பல இலட்சங்கள் கைமாறப்பட்டது என்றும்  வித்தியாதரன் குறிப்பிடுவது அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.

கனடாக்காரர் திருகோணமலையில் அரசியல் செய்யக் கண் வைத்துவிட்டார் என்பது பிழை. அவர் ஏற்கனவே அரசியலில் ஈடுபாடுடையவர்தான். ததேகூ (கனடா) அவர்தான் தலைவர். இன்னும் ஒரு செய்தி, திருகோணமலை,  திரியாய் கிராமம்தான் அவரது பிறப்பிடம். எனவே அவருக்கும் திருகோணமலை “அத்துப்படி”தான்!

திருகோணமலையில் முதலீடு செய்ய அவரிடம் முதல் இல்லை.  கனடா தமிழர் பேரவை தென்னமரவடியில் தொடக்க இருக்கும் ஒரு பால்பண்ணைக்கு வேண்டிய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. அது தொடர்பாக  பேரவைக்கு  கனடாக்காரர் உதவி செய்கிறார். அவ்வளவுதான். அதே போல் கனடா தமிழர் பேரவை மட்டக்களப்பில் தொடக்க இருக்கும் பால்பண்ணைக்கு வேண்டிய நிலத்தை வாங்குவதிலும்  கனடாக்காரர் சரீர உதவி செய்கிறார். அவ்வளவதான்.

திருகோணமலை தனக்கு அத்துப்படி என்று சொல்லும் வித்தியாதரனுக்கு எப்படி இவையெல்லாம் தெரியாமல் இருக்கிறது? கனடாவில் இருக்கும் அவரது உடன்பிறப்போடு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தால் எல்லா விபரத்தையும் அவர் சொல்லியிருப்பார். இந்தத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்தவர்களில் அவரும் ஒருவர்!

கனடாவில் நடை பவனி நடத்தியது கனடாக்காரர் அல்ல. நடை பவனியை நடத்தியது கனடா தமிழர் பேரவை. அதற்கு ஒத்தாசை வழங்கியது ததேகூ(கனடா), திருகோணமலை நலன்புரிச் சங்கம். தென்னமரவடியில் போருக்கு முன்னர் 284 குடும்பங்கள் வாழ்ந்தன. 1984 இல் அந்தக் குடும்பங்கள்  சிங்களவர்களால் அடித்துத் துரத்தப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இன்று 80-90 குடும்பங்கள்தான் அங்கு வாழ்கின்றன. துரத்தப்பட்டவர்களில் ஒரு பகுதி முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைக் கிராமத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தென்னமரவடியில் வீட்டு வசதி, பள்ளிக்கூடங்கள், மருத்தவ வசதி, போக்கு வரத்து வசதி, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால்தான் மீள் குடியேறுவார்கள்.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது. வித்தியாதரனுக்கு இதெல்லாம் விளையாட்டாகத் தெரிகிறது. கிசு கிசு எழுத உதவுகிறது.

கையில் ஒரு செய்தித்தாள் இருக்கிறது என்பதால் இப்படியா கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பாட்டி வடை சுட்ட கதை சொல்வது? (வளரும்)

நக்கீரன்


புதிய சுதந்திரனை இருட்டடிப்பு செய்ய நினைப்போர் சூரியனைக் கையால் மறைக்கப் பார்க்கிறார்கள்!

 


About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply