பகுத்தறிவு பற்றிய விளக்கம்
நக்கீரன்
பகுத்தறிவு என்ற சொல்லுக்கு பகுத்தறிதல் பகுத்துணர்தல் (To distinguish, discriminate) என தமிழ் அகரமுதலிகள் பொருள் சொல்கின்றன. பகுத்தறிவுள்ளவன் என்பதற்குப் பகுத்துப் பார்ப்பவன் (A judicious person) என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. பகுத்துப் பார்க்க (To survey every part) என்றும் பகுப்பு (division, classification) எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
பகுத்தறிவு என்றால் விவேகம் (Cleverness, ingenuity, discrimination, penetration, judgment) வியாசம் எனவும் பொருள் கூறப்படுகிறது. இந்த இரண்டும் வட சொற்களாகும்.
எனவே பகுத்தறிவு என்றால் ஒரு பொருளைப் பகுத்து வகைப்படுத்தி (To distinguish, discriminate, reason analytically) அறிதல் என்பது பொருள் ஆகும்.
ஆங்கிலத்தில் பகுத்தறிவு rationality என்று அழைக்கப்படுகிறது. அதன் வரைவிலக்கணம் ” Rationality is the exercise of reason. It is the manner in which people derive conclusions when considering things deliberately. It also refers to the conformity of one’s beliefs with one’s reasons for belief, or with one’s actions with one’s reasons for action. A rational decision is one that is not just reasoned, but is also optimal for achieving a goal or solving a problem.”
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து சான்றுகளோடு புறவய நோக்கில் எண்பிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே.
· கூறு – தன்மை, properties, nature
· அவதானித்து – observe, புலன்களின் தன்மையைப் புரிந்து புலன்கள் ஊடாக அவதானித்தல்
· சான்றுகளோடு – evidence, repeatable, testable, empirical or experience
· புறவய நோக்கில் – objective
· முடிவுகள் – explanation, facts
· வழிமுறை – method
· ஆற்றல் – capacity
பகுத்தறிவு பற்றிய இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்.
தொல்காப்பியர் புல் பூண்டு முதல் மனிதன் ஈறாக உயிர் இருப்பதாகச் சொல்கிறார். இந்தக் கோட்பாடு சமணர்களுக்கு உரியது. தொல்காப்பியர் சமணர்.
புல், பூண்டு – ஓரறிவு (தொடு உணர்ச்சி)
நத்தை, சங்கு – ஈரறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி)
எறும்பு, கறையான் – மூவறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல்)
ஈ, வண்டு – நான்கறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை)
விலங்குகள், பறவைகள் – அய்ந்தறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல்)
மனிதன் மட்டுமே – ஆறறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல், பகுத்தறிவு)
“மாவும் மாக்களும் அய்யறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல்காப்பியம்)
சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் உண்டு. அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய உயிர்கள் உண்டு. மனிதன் செய்ய முடியாத செயல்களை ஓர் உயிர் முதல் அய்யறிவு உள்ள உயிர்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால் நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால் மனிதனால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் மனிதன் தாவமுடியாத அளவுக்குத் தாவும். நாய்க்கு மோப்ப ஆற்றல் மனிதனை விட அதிகம். மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில செயல்கள் மற்ற அறிவுள்ள உயிர்களுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனிதனுக்குத்தான் உண்டு. வேறு உயிர்களுக்கு இல்லை. பசி, பருவம், முதுமை, மரணம் என்ற நான்கும் மனித இனத்துக்குப் பொதுவானவை.
மனிதர்கள் சிந்திக்கிறார்கள்! மற்ற உயிரினங்கள் சிந்திப்பதில்லை! மனிதர்களுக்கு மட்டுமே பகுத்தறிவு உண்டு! மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி கிடையாது! பகுத்தறிவைப் யாரும் போதிப்பதில்லை. காரணம் அது மதம் அல்ல. பகுத்தறிவைப் பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். அதில் உண்மை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தள்ளிவிட வேண்டும். மதவாதிகள் போல ஏற்றுக்கொண்டால் சுவர்க்கம் தள்ளிவிட்டால் நரகம் என்று பகுத்தறிவுவாதிகள் யாரையும் பயமுறுத்துவதில்லை.
மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி. மனிதன் எதையும் தீர ஆராயும் இயல்பினால் மற்ற விலங்குகளிருந்து வேறுபடுகின்றான். சிந்தனையாற்றலின் பயனாக அவன் மற்றெல்லா உயிரினங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான். சிந்தனை ஒன்றைத் தவிர வேறு வகைகளில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடில்லை. அவற்றைப் போலவே அவனும் உண்பதுவும் உறங்குவதும் சூழல் நிலைகளால் பாதிக்கப்படுவதுமாக இருக்கின்றான். விலங்குகள் வெறும் இச்சையினால் மட்டும் உந்தப்பட்டுச் செயல் படுகின்றன. ஆனால் மனிதன் எண்ணித் துணிந்து செயல்படுகின்றான். தன் நடைத்தையின் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றான். அவனுடைய ஆற்றலெல்லாம் இந்தச் சிந்தனையில் தான் அடங்கியுள்ளது. அதன் மூலமாகத் தான் அவன் தன்னைக்காட்டிலும் உடல் வலுவுடையப் பிராணிகளையும் இயற்கையையும் வெற்றி கொள்ள முடிந்தது. சிந்தனைதான் பல கலைகளாகவும் அறிவியலாகவும் தத்துவமாகவும் பரிணமித்துள்ளது. (குடியரசு – மனிதனும் மிருகமும்)
உலக வரலாற்றில் முதல்முறையாக – 2550 ஆண்டுகளுக்கு முன்னர் – மக்களைப் பார்த்துச் சிந்திக்கச் சொன்ன பகுத்தறிவுவாதி புத்தர் ஆவார். பிற்காலத்தில் அவரைப்பற்றிப் புனைகதைகள், இதிகாசங்கள் இயற்றி அவைரைக் கடவுளாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.
“மகானால் உபதேசிக்கப்பட்டது என்பதற்காகவோ, பழைய சாத்திரங்களில் எழுதப்பட்டது என்பதற்காகவோ, பழங்காலம் முதல் பலராலும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது என்பதற்காகவோ எதையும் நம்ப வேண்டியதில்லை. நாமே நேரில் பலவிதமாய்ச் சோதனை செய்து அய்யங்கள் தீர்ந்த பிறகே எந்த தர்ம மார்க்கத்தையும் நம்பிப் பின்பற்ற வேண்டும்” என்று சொன்னவர் புத்தர்.
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும் புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின்ற்குக் காரணம் எனக் கூறினார்.
”மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதைப் போற்றி வணங்க வேண்டுமென்றும் பிராமணர்கள் சொல்லித் திரிகிறார்களே’’ என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது,
‘வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம். பிக்குவே, நீ ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல்களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துப் பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்துக் கரையில் வைத்து விட்டு ‘என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை;. பிறர் நலம் பேணுவதாகும்.’’
புத்தருக்குப் பின்னர் தமிழ்நாடு கண்ட ஒரு பகுத்தறிவுவாதி திருவள்ளுவர்.
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. (அதிகாரம் 43- அறிவுடமை, குறள் 428)
எப் பொருள் எத்தன்மைத்தாயினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. (அதிகாரம் 36 மெய் உணர்தல், குறள் 355)
என்று மெய்யறிவுக்கு இலக்கணம் சொன்னார். அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார். அவரே,
இரந்தும் உயிர் வாழவேண்டின்
பரந்து கெடுக இவ்வுலகியற்றியான். (அதிகாரம் 107 இரவு அச்சம் குறள் 1062)
“இந்த உலகத்தைப் படைத்தவன் உலக மக்கள் இரந்து உயிர் வாழ வேண்டும் என்று விதித்திருந்தால் அந்தக் கொடியவன் இரப்பவரைப் போலவே எங்கும் அலைந்து கெட வேண்டும்” எனத் திட்டியவர் வள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இருந்த துணிவு இன்று இல்லை.
நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ?
என்று காட்டமாகக் கேட்ட சிவவாக்கியர் ஒரு தலைசிறந்த சித்தர் மட்டுமல்ல பகுத்தறிவுவாதியும் ஆவார்.
பகுத்தறிவு பற்றிப் பெரியாரே தெளிவு படுத்தியுள்ளார். “இராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே” என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னைத் தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார் ஒருவரே!
பகுத்தறிவுவாதிகள் காது குத்தல், மொட்டையடித்தல், பச்சை குத்துதல், சுன்னத் செய்தல், அரைஞான் கயிறு கட்டுதல், தாலி, மெட்டி, மோதிரம், தலைக்கட்டு, நாமம், விபூதிப்பட்டை, உருத்திராட்சக் கொட்டை போன்ற எல்லா குறிகளும் மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட குழுக்குறிகள். சில சிறுபான்மையினரிடமும் சில பொதுவாக பெரும்பான்மையினரிடமும் காணப்படலாம். இவற்றை செய்யாமல் விட்டுவிடுவதால் மருத்துவ அடிப்படையில் எந்தக் குறையும் இல்லை. செய்து கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. இதே போல் அருச்சனை, அபிசேகம், தேர், தீா்த்தம், திருவிழா, கிரக பரிகாரம், சாந்தி, விளக்குப் பூசை, படையல் போன்றவற்றாலும் எள்முனைப் பலனும் இல்லை.
”கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக” என்றெல்லாம் இராமலிங்க அடிகளார் முழங்கினார்.
“புராண இதிகாசங்களின் மூலம் தரப்படும் கருத்துக்களும் சமூகத்தின் பொதுத் தரத்தை உயர்த்த வில்லை என்பதாற்றான் நாம் அவைகளைக் குறை கூறுகிறோம்” என்றார் அறிஞர் அண்ணா.
எனவே மூடநம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிவோடு சிந்தித்து தன்னம்பிக்கையோடு இந்த உலகிலேயே வாழ்வாங்கு வாழப் பழகுவோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.