பெரியார் தமிழ் விரோதியா?
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழிலிலேயே சிந்தித்து, தமிழிலேயே எழுதி, தமிழிலேயே பேசி, சாக்கடைப் புழுக்களாய் ஒடுக்கப்பட்டு கிடந்த தமிழர்களின் மான உணர்ச்சியை தட்டி எழுப்பி மனிதர்களாக மாற்ற பாடுபட்டவர் தந்தை பெரியார்.
பார்ப்பனர்கள் எதையெல்லாம் நீதியென்று சொல்லி, மனிதர்களை ஒடுக்கி ஆண்டார்களோ, அதையெல்லாம் உடைத்து நொறுக்க தமிழையே பயன்படுத்தினார் பெரியார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட தமிழ்மொழி, அதன் தொன்மைக்கு ஏற்றபடி தன்னை எளிமைப்படுத்தியதா என்ற கேள்வியைத்தான் பெரியார் முன்வைத்தார். குறிப்பாக தமிழ்மொழியின் அதிகப்படியான எழுத்துக்களையும், பயனற்ற எழுத்துக்களையும் அவர் விமர்சனம் செய்தார்.
ஒரு மொழி கற்பதற்கு எளிதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள மற்ற மொழிகளில் இருந்து புதிய வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பெரியார் விரும்பினார். எந்த ஒரு புரட்சிகர சிந்தனையாளரும் இதைத்தான் செய்வார்கள். பழமை விரும்பிகள்தான் மொழியை புனிதம் என்ற சிமிழுக்குள் அடைத்துவைக்க விரும்புவார்கள்.
ஆங்கிலம் இன்றுவரை 26 எழுத்துக்களில் இயங்குகிறது. கணக்கற்ற உலக மொழிகளில் இருந்து புதிய வார்த்தைகளை தனக்குள் வாங்கிக் கொள்கிறது. பெரியாரும் இத்தகைய சீர்திருத்தங்களைத்தான் விரும்பினார்.
அவரளவில், மிகத் துணிச்சலாக தமிழ்மொழியின் எழுத்துக்களை தனது வசதிக்காக மாற்றி அமைத்தார். அன்றைக்கு அவர் மாற்றி அமைத்த எழுத்துச் சீர்திருத்தத்தை அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டில் அரசாங்கமே ஏற்கும் நிலை உருவானது.
பெரியாரை தமிழ்மொழிக்கு எதிரியாக சித்தரிக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரியார் தமிழில் 120 புத்தகங்களை எழுதியிருக்கிறார். அந்த புத்தகங்களில் அவர் வெளிப்படுத்திய புரட்சிகர சிந்தனைகளைப் போல அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் யாரேனும் வெளிப்படுத்தி இருக்கிறார்களா?
மனிதகுலத்தின் அத்தனை பிரச்சனைகளையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சனையின் மூலத்தையும் அவர் கண்டறிந்து தனது தீர்வைச் சொல்லியிருக்கிறார்.
விதவை மணம் குறித்து யாரும் யோசிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தில் அவர் விதவைத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். வேத மந்திரங்களின் அர்த்தத்தை அறிந்துகொள்ளக்கூட விரும்பாத காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் வேத மந்திரங்களின் அசிங்கமான ஆபாசமான அர்த்தங்களை தமிழர்களுக்கு அம்பலப்படுத்தியவர் தந்தை பெரியார்.
பெண்களை அடிமைகளாக கருதிய காலகட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியவர் பெரியார். அவர் அளவுக்கு பெண்களுக்காக சிந்தித்த தலைவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்று கூறலாம். பெண்கள் தங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக கூந்தலை கிராப் வெட்டிக் கொள்ளலாம் என்பதுமுதல், அளவாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவரை அவர்களுடைய உடல்நலத்தில் அக்கறை செலுத்தினார்.
படிப்பிலும், உத்தியோகத்திலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று துணிச்சலாக சொன்னவர் பெரியார். ஒவ்வொருவரும் தனது தாய், சகோதரி, மகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, மனைவிக்கும் கொடுக்க வேண்டும் என்றார். வரதட்சனைக் கொடுமை குறித்து தீர்க்கமான கருத்துகளை சொல்லி, அதை தீர்க்க, பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்தால் போதும் என்றார்.
1938 ஆம் ஆண்டிலேயே மகளிர் மாநாட்டை கூட்டி, தொடக்கப்பள்ளி வகுப்புகள் அனைத்திற்கும் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.
அந்தத் தீர்மானத்தை 1989 ஆம் ஆண்டு சட்டமாக்கியவர் கலைஞர். அதே ஆண்டு, பெண்களுக்கும் பெற்றோர் சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர்.
தமிழும், தமிழர்களும் புரட்சிகர மாற்றங்களுக்கு உட்பட வேண்டும் என்று பெரியார் பாடுபட்டிருக்கிறார். ஆனால், பழைய பஞ்சாங்கங்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அவரை அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை.
பெரியார் தமிழுக்கு எதிரி என்று கட்டமைக்க விரும்புகிறவர்கள், கோவில்களில் தமிழை அர்ச்சனை மொழியாக்க வேண்டும் என்று போராடியதையும், தமிழர்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஆலயங்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் உரிமை வேண்டும் என்று வலியுறுத்தியதையும் வசதியாக மறைத்துவிடுவார்கள். அங்குதான் பார்ப்பனர்களின் தந்திரம் அடங்கியிருக்கிறது.
பெரியார் தமிழுக்கு விரோதி என்றால் அவர் வேறு எந்த மொழிக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்ல வேண்டும் அல்லவா? அதைச் சொல்ல மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ராஜாஜி மேற்கொண்ட முதல் முயற்சியை 1935களிலேயே எதிர்த்து போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். அதாவது, தமிழுக்கு ஆதரவாகவும் இந்திக்கு எதிராகவும் நடந்த முதல் போராட்டத்தை நடத்தியவர் பெரியார். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களிடம் தமிழ்மொழிப் பற்றை பற்ற வைத்தவர் தந்தை பெரியார்.
Leave a Reply
You must be logged in to post a comment.