நாவற்குழி, சுன்னாகம், சண்டிலிப்பாய் வழியாக களமிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் காலட் படை அணிகள் 11-22

நாவற்குழி, சுன்னாகம், சண்டிலிப்பாய் வழியாக களமிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் காலட் படை அணிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 11) –நிராஜ் டேவிட்யா

ழ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கையின் நகர்வுகள் அனைத்துமே புலிகளின் கடுமையான இடைமறிப்புத் தாக்குதல்களினால் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன.

இந்தியாவினதும் இந்திய இராணுவத்தினதும் இந்திய அரசியல் தலைமைகளினதும் மானமும் மரியாதையும் இந்தியத் துருப்புக்கள் எப்படியாவது யாழ்பாணத்தைக் கைப்பற்றிவிடுவதிலேயே தங்கியிருந்தது. என்ன விலை கொடுத்தாவது எதைச் செய்தாவது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற உத்தரவுகள் களத்தில் இருந்த படை அணிகளுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.

இந்தியப் படையினரின் நகர்வுகள்:

அக்டோபர் 11ம் திகதி நாவற்குழியில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் 18வது காலாட் படைப்பிரிவின்;(18 Infantry Brigade) 4வது மராத்தியப் படையணி கோப்பாய் வடக்கை நோக்கி நகர்வதற்கு முயன்றபோதும் ஏழு தடவைகள் அந்தப் படையணி புலிகளின் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமது நகர்வுகளை தற்காலிகமாக இடை நிறுத்திக் கொண்டு பின்னர் 13ம் திகதியே மீண்டும் முன்னேற ஆரம்பித்திருந்தது.

இந்த அணி 13ம் திகதி கோப்பாய் தெற்கு வழியாக முன்னேற முயன்ற போதும் கடுமையாக எதிர்ப்பைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் முன்னேறிய அணி வெடிமருந்து கையிருப்பு தீர்ந்த நிலையில் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கையில் முன்னேறிய அணியைப் பின்தொடர்ந்த அந்தப் படைப்பிரிவின் நான்காவது ரைபிள் கொம்பணி (fourth rifle company) மிகவும் கஷ்டப்பட்டு முற்றுகைக்குள்ளாகியிருந்த படைப்பிரிவை மீட்டது. அப்படி இருந்தும் அவர்களால் நாவற்குழிக்கு மேற்காக சுமார் மூன்று கி.மீற்றர் மட்டுமே நகர முடிந்தது. தொடர்ந்து சண்டையிட்டபடி நிலை கொண்டிருந்த அந்தப் படைப்பிரிவினரால் 20 திகதி அளவில்தான் யாழ் நகரை நோக்கி மேலும் முன்னேறிச் செல்லக்கூடியதாக இருந்தது.

இதேபோன்று சுன்னாகம் வழியாக முன்னேறிய இந்திய இராணுவத்தின் 91வது காலட் படைப் பிரிவின் (91 Infantry Brigade) 5வது மெட்ராஸ் ரெஜிமென்ட் (Madras Regiment)சுன்னாகம் வழியாகவும் 8வது மராத்திய படைப்பிரிவு நாவாந்துறை வழியாகவும் முன்னேறின. இந்தப் படையணியின்; முதலாவது மராத்திய படைப்பிரிவு கடல் வழியான தரையிறக்க முயற்சிகள் சிலவற்றை மேற்கொண்ட போதும் புலிகளின் கடுமையான எதிர்ப்புக்கள் காரணமாகவும் தரையிறக்கப் பிரதேசங்களில் கன்னிவெடிகள் அதிக அளவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவும் அந்த முயற்சிகள் இடை நடுவே கைவிடப்பட்டன.

யாழ் நகரை நோக்கிய நகர்வின்போது அதிக இழப்புக்களைச் சந்தித்த அணி இது என்றே கூறப்படுகின்றது. இந்த பிரிகேட்டில் அங்கம் வகித்த 5வது மெட்ராஸ் அணியே இறுதியில் சுண்ணாகம் பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. தமிழர்களை அதிகமாகக் கொண்ட இந்தப் படைப்பிரிவு தனது முன்னேற்ற நடவடிக்கைகளின் போது கூடியவரை பொதுமக்கள் இழப்புக்களைக் குறைத்தபடியே முன்;னேறியது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த அணியுடன் இணைந்து கொண்ட 8வது மராத்திய அணி அப்பிரதேசத்தில் பாரிய மனித வேட்டையில் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

இதேபோன்று சண்டிலிப்பாயில் இருந்து இந்திய இராணுவத்தின் 41வது காலட் படைப்பிரிவும்;(41 Infantry Brigade) புதூர் வழியாக 115வது காலாட் படைப் பிரிவும் ( 115 Infantry Brigade) நகர்வினை மேற்கொண்டிருந்தன.

புலிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் மற்றய படைப்பிரிவுகள் முற்றுகைக்குள்ளாகும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து முற்றுகையை உடைப்பதற்குமே இந்த அணிகள் களம் இறக்கப்பட்டிருந்தன.

இந்த இரண்டு படைப்பிரிவுகளும் ஒரு பாதையால் யாழ் நகரை நோக்கி முன்னேறாது பல திசைகளிலும் வழைந்து நெளிந்து தமது நகர்வினை மேற்கொண்டிருந்தன.

களமிறக்கப்பட்ட புதிய படை அணிகள்:

புலிகளுடனான யுத்தம் நினைத்ததைவிட மிகக் கடுமையாக இருந்ததால் இந்தியாவில் இருந்து அவசர அவசரமாக பல படை அணிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

72வது காலாட் படைப்பிரிவு (HQ 72 Infantry Brigade), 4/5 GR (FF) படைப்பிரிவு மற்றும் 13வது சீக்கிய இலகு காலாட் படைப்பிரிலு (13 Sikh Light Infantry) போன்றன பலாலிக்கு கொண்டுவரப்பட்டு களம் இறக்கப்பட்டன.

இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாகவோ அல்லது இந்திய அமைதிகாக்கும் பணி தொடர்பாகவே எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாது ஈழமண்ணில் தரையிறக்கப்பட்ட இந்தப் புதிய படை அணிகள் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து யாழ் நகரை நோக்கி முன்னேற ஆரம்பித்தன. அவர்களது கண்களில் தென்பட்டவர்கள் அனைவருமே புலிகளாகவே அவர்களுக்குத் தெரிந்தார்கள். அவர்கள் சென்ற பிரதேசங்கள் அனைத்துமே எதிரியின் கோட்டைகளாகவே அவர்களுக்கு தென்பட்டன. வசாவிளான் வழியாக முன்னேறிய இந்தப் படைப்பிரிவு நீர்வேலி உரும்பிராய் பிரதேசங்களில் அதிக மனித வேட்டைகளை நடாத்தியபடி நகர்ந்தன.

யுத்தக் கல்லூரிகள்:

இதேவேளை யுத்த நகர்வுகள் பற்றி போதிய அறிவை இந்தியப் படை ஜவான்களுக்கு வழங்கும் முகமாக பலாலி மற்றும் திருகோணமலைத் தளங்களில் அவசர அவசரமாக இரண்டு யுத்தக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு டிவிசன்களான 54வது காலட் படை அணி (54 Infantry Division) மற்றும் 36வது காலட் படை அண(36 Infantry Division) என்பன இந்த யுத்தக் கல்லூரிகளை நிறுவியிருந்தன.

புதிதாக தரையிறக்கப்படும் படை அணிகளுக்கு இலங்கையின் பிரதேசங்கள் தரை அமைப்பு பற்றியும் புலிகள் பற்றியும் அவர்களது போர் நுனுக்கங்கள் நடவடிக்கைகள் பற்றியும் இந்த யுத்தக் கல்லூரிகளில் போதிக்கப்பட்டன. கன்னிவெடிகளை எதிர்கொள்ளுவது எப்படி புலிகள் எப்படியெப்படியெல்லாம் தாக்குதல் நடாத்துவார்கள் எப்படியெப்படியெல்லாம் செயற்படுவார்கள் என்ற நடைமுறை விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதுபோன்ற பயிற்சிகளின் பின்னரே புதிதாக இலங்கை வரும் இந்தியப் படையினர் களம் இறக்கப்படவேண்டும் என்பது இந்தியத் தலைமையின் உத்தரவாக இருந்தது.

அவசரஅவசரமாக இலங்கை வந்திறங்கும் புதிய இந்தியப் படை அணிகள் அடிதடியாக முன்னேறி புலிகளிடம் தொடர்ந்து வாங்கிக்கட்டிக்கொண்டிருந்ததால் இந்தியப் படைத்துறைத் தலைமை இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

புதிய பிரதேசம் ஒன்றினுள் யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்று கல்லூரி அமைத்துப் பாடம் நடாத்தத் தெரிந்த இந்தியத் தலைமைக்கு அந்தப் பிரதேசத்தினுள் காணப்படும் அப்பாவிச் சனங்களை இம்சிக்கக்கூடாது என்ற பாடத்தை தமது ஜவான்களுக்கு போதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை இம்சிக்கக்கூடாது என்றும் அவர்கள் அமைத்த அந்த யுத்தக் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கவில்லை.

அதேவேளை படையினர் தமது உணர்வுகளுக்கு தாமே வடிகால்களைத் தேடிக்கொள்வது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றும் இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது. ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் போது ஆக்கிரமிப்புப் படைகள் கொலைகள் புரிவதும் கொள்ளை அடிப்பதும் பாலியல் வல்லுறவு புரிவது சகஜம் என்றே இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது.

அதனால் இதுபோன்ற தீய செயல்களைச் செய்யக்கூடாது என்று தமது ஜவான்களுக்குப் போதிக்க அவர்கள் நினைக்கவில்லை. அவ்வாறு ஆலோசனை வழங்கி தமது ஜவான்களின் உற்சாகத்திற்கு கடிவாளம் போட அவர்கள் விரும்பவும் இல்லை.

ஈழ மண்ணில் புதிதாக வந்திறங்கிய இந்தியப் படை ஜவான்கள் யுத்தக் கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சியை முடித்துவிட்டு ~~ஜெய்-ஹிந்|| என்ற கோஷத்துடன் உற்சாகமாப் புறப்பட்டார்கள் – பாரிய மனித வேட்டைக்கு.


அகதிமுகாமில் புலிகளின் தலைவர் பிரபாகரன்? (அவலங்களின் அத்தியாயங்கள்- 12) –நிராஜ் டேவிட்

யாழ்நகரை நோக்கி பல முனைகளிலும் நகர்வுகளை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் பலத்த இடைமறிப்புத் தாக்குதல்கள் காரணமாக முன்னேற முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

நான்கு நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடுவோம்|| யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள புலிகளை நாலாபக்கமும் சுற்றிவழைத்து இந்தியப் படை நகர்ந்துகொண்டிருக்கின்றது. அவர்களால் எப்பக்கமும் நகர முடியாதபடிக்கு இந்தியப் படையினர் புலிகளைச் சுற்றி வழைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்|| என்றெல்லாம் இந்தியாவின் தேசிய ஊடகங்களான ஆக்காஷவாணியிலும்| தூரதர்ஷனிலும்| கதைவிட்டபடி நடவடிக்கைகளில் இறங்கியிருந்த இந்தியப் படையினரால் பத்து நாட்கள் கடந்துவிட்டிருந்த போதும் யாழ் நகருக்குள் செல்லமுடியவில்லை என்பது இப்போதைய இந்திய ஆட்சிக்கும் அதன் படைத்துறைக்கும் மிகுந்த அவமானத்தைப் பெற்றுத் தந்திருந்தது.

இந்திய இராணுவம் பல புதிய படைப் பிரிவுகளை இந்தியாவில் இருந்து அவசரஅவசரமாக வரவழைத்து களம் இறக்கியிருந்தது.

தமது போர் உத்திகளை அடிக்கடி மாற்றி அமைத்தது. புலிகளைப் பற்றி இந்திய உளவு அமைப்பான றோ| தந்திருந்த தரவுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு புலிகள் தொடர்பான புதிய தரவுகளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

புலிகளின் தாக்குதல் முறைகள் இந்தியப் படையினருக்கு பெரும் தலையிடியாகவே இருந்தன. 1971ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியப் படையினர் எந்த ஒரு யுத்தத்திலும் பங்கு பற்றவில்லை.

1956ம் ஆண்டு முதல் இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்திலும் 1984 இன் நடுப்பகுதி முதல் காலிஸ்தானிலும் இந்தியப் படையினர் கெரில்லாத் தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தாலும் புலிகளின் தாக்குதல் யுத்திகள் இந்தியப் படையினருக்கு புதியவைகளாகவே இருந்தன. அவர்கள் தமது யுத்தக் கல்லூரிகளிலும் சரி இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளின் போதும் சரி புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல் பாணிகள் தொடர்பான பயிற்சிகள் பற்றிய அறிவைக் பெற்றிருக்;கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் உளவு பிரிவான றோ| பயிற்சிகளை வழங்கியதாகப் பிதற்றிக்கொண்டாலும் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்த முனைகளில் கையாண்ட யுத்த முறைகள் றோ| முதற்கொண்டு இந்தியப் படையினரின் பயிற்சி ஆசிரியர்கள் வரை மிகவும் புதியவைகளாகவே இருந்தன.

அவசர அவசரமான இலங்கையில் இரண்டு யுத்தக் கல்லூரிகளை நிறுவி யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப்படையினருக்கு புலிகளின் சண்டை யுத்திகள் பற்றிய புதிய பயிற்சி நெறியைக் கற்பிக்கவேண்டிய அவசியம் இந்தியப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டதும் இதனால்தான்.

இந்தியா விட்ட கதைகள்:

இதற்கிடையில் இந்தியப் படையினர் யாழ் நகரைக் கைப்பற்றுவதில் ஏற்பட்டிருந்த காலதாமதத்தை நியாயப்படுத்த இந்திய அரசியல் தலைமையும் இராணுத் தலைமையும் சில சப்பைக்கட்டு காரணங்களை தமது பிரச்சார ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் பெண்கள் சிறுவர்களை முன்நிறுத்தி அவர்களின் பின்னால் நின்று சண்டை புரிவதாக|| இந்தியத் தலைமை தொடர்ந்து கூற ஆரம்பித்திருந்தது.

சண்டைகள் உக்கிரம் அடைந்து இந்தியப் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்து இந்தியப் படை வீரர்களின் உடல்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்தியத் தலைமையின் இதுபோன்ற புளுகுகள் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்தியப் படையினரின் முகாம்களை நோக்கி பெரும் திரளான பொதுமக்கள் சிறுவர்கள் வருவார்களாம்@ அவர்களுடன் பேசவென்று இந்தியப் படை அதிகாரிகள் வெளியில் வருவார்களாம்@ திடீரென்று அந்தப் பொதுமக்களும் சிறுவர்களும் நிலத்தில் விழுந்து படுத்து விடுவார்களாம்@ அவர்களின் பின்னால் வரும் விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடுவார்களாம்.| இப்படிப் பல கதைகளை இந்தியப் படை அதிகாரிகள் இந்தியாவின் தூரதர்ஷனிலும் ஆல் இந்தியா ரேடியோவிலும்;; தினசரிகளிலும் அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

இப்படியான கதைகள் இந்தியாவின் தலைமைக்கு இரண்டு வகைகளில் உதவியிருந்தன.

முதலாவது இந்தியப் படையினர் தரப்பில் ஏற்பட ஆரம்பித்திருந்த அளவிற்கதிகமான உயிரிழப்பிற்கு காரணம் கற்பிப்பதற்கு இதுபோன்ற கதைகள் உதவியிருந்தன. அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அப்பாவிப் பொதுமக்களை இந்தியப் படையினர் கொலை செய்வதாக வெளியாக ஆரம்பித்திருந்த செய்திகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கும் இதுபோன்ற கதைகள் இந்தியப் படைத்துறை தலைமைகளுக்கு உதவியிருந்தன.

இந்தியப் படையினர் ஈழத்தில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கிவருவதாகவும் தமிழ் நாட்டில்; செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தியப் படையினரின் அந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிப்பதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை கைவசம் ஒரு கதையை வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இந்தியப் படையினர் தேடுதல்கள் நடாத்தச் செல்லும்போது அங்கு இருக்கும் இளம் பெண்கள் திடீரென்று தமது பாவாடைகளுக்குள் இருந்து துப்பாக்கிகளை எடுத்து இந்தியப் படையினரை நோக்;கிச் சுட்டுவிடுகின்றார்கள்|| என்று இந்தியப் படையினரின் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு இந்தியத் தலைமை நியாயம் கற்பித்திருந்தது.

வெறும் கதைகளினாலேயே கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஈழ மண்ணில் தான் நிகழ்த்திய அனைத்து அட்டூழியங்களுக்கும் ஏதாவது ஒரு கதையைக் கூறி அவற்றை நியாயப்படுத்த முற்பட்டது. யாழ்ப்பாணத்தில் அகதிமுகாமைத் தாக்கிவிட்டு அதற்கொரு கதை@ கோவிலைத் தாக்கிவிட்டு அதற்கொடு கதை@ வைத்தியசாலையில் படுகொலைகள் புரிந்துவிட்டு அதற்கொரு வியாக்கியானம் – என்று ஈழ மண்ணில் இந்தியப் படைகள் ஆடிய கோர தாண்டவங்கள் அனைத்திற்குமே இந்தியா அழகான கட்டுக்கதைகளை அமைத்திருந்தது – அதன் சரித்திரத்தைப் போல.

ஒரு கையை பின்னால் கட்டியபடி …

இவற்றில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வெளிட்ட மற்றொரு கதைதான்.

இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு போராடி வருவதாக| இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்துத்தான் அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையின் ஒவ்வொரு ஜவான்களும் ஈழத்தில் கண்மூடித்தனமான மனித வேட்டைகளில் இறங்கியிருந்தபோது பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொன்டிருந்தபோது தமிழ் மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்துக்கொண்டிருந்தபோது இந்தியப் பிரதமர் இந்த நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தியத் தலைவரின் இந்தக் கூற்றுப் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்:

இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால் இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது||

ஷெல்வந்த நாடு

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பல முனைகளிலும் நகர ஆரம்பித்திருந்த இந்தியப் படையினர் மனித வேட்டைகளை நடாத்தியபடியே தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். படுகொலைகள் கொள்ளைகள் வீடுடைப்புக்கள் பாலியல் வல்லுறவுகள் என்று தமிழ் மக்கள் மீது அட்டூழியங்களைப் புரிந்தபடியே இந்தியப் படையினரின் அந்த நகர்வுகள் இருந்தன.

மக்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கு செல்வது என்றும் புரியவில்லை.

ஸ்ரீலங்காப் படைகளின் தாக்குதல்கள் உக்கிரமடையும் கட்டங்களில் இந்தியா தலையிட்டு எம்மைக் காப்பாற்றும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அந்த இந்தியாவே தம்மீது இப்படியான ஒரு நெருக்குதலை ஏற்படுத்தும்போது என்ன செய்வது என்று எதுவுமே புரியாமல் மக்கள் தடுமாற்றம் அடைந்தார்கள்.

மக்கள் குடியிருப்புக்களில் நிமிடத்திற்கு ஒரு செல் வந்து விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட இடங்களெல்லாமே பிணக் குவியல்களாகவே காட்சி தந்தன. இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளும் மிகவும் உக்கிரமாகவே இருந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களால் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை. போதாததற்கு இந்தியப் படையினரின் விமானங்கள் பறந்து பறந்து மக்களை நோக்கி தாக்குதல்களை நடாத்தியபடி திரிந்தன. மீண்டும் யாழ்ப்பாணம் ஷெல்| வந்த நாடாக மாறியது. பழையபடி யாழ் மக்களை அகதி வாழ்க்கை அழைத்தது.

அகதிமுகாம்களில் அவதி

மக்கள் தமது வீடுகளில் தொடர்ந்து தங்கி இருப்பது தமது உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து என்று உணர்ந்து படிப்படியாக பொது இடங்களை நோக்கி அடைக்கலம்தேடி இடம்பெயர ஆரம்பித்தார்கள். யாழ் குடாவெங்கும் திடீர் அகதி முகாம்கள் பல முளைக்க ஆரம்பித்தன. கோவில்கள் பாடசாலைகள் அகதி முகாம்களாயின.

மக்கள் கைகளில் அகப்பட்ட முக்கியமான பொருட்களையும் மாற்றுத் துணிகளையும் மட்டும் தம்முடன் எடுத்துக்கொண்டு அகதி முகாம்களை நோக்கி அவசரஅவசரமாகப் படையெடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்பாணத்தில் வசிக்கும் அனேகமான குடும்பங்களிடம் குறைந்தது 50 பவுன்களுக்கு அதிகமான எடையுள்ள தங்கநகைகள் இருப்பது வழக்கம். அவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தம்மிடமுள்ள நகைகளில் கைவைப்பது அரிது. இன்னும் அதிகமாக நகைகள் செய்து தம்முடன் வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்களே தவிர இலகுவில் தமது நகைகளை விற்றுவிடமாட்டார்கள். யாழ் நகரை நோக்கிப் படையெடுத்திருந்த இந்தியப்படை ஜவான்களும் இந்த நகைகளை குறிவைத்து தமது வேட்டைகளை ஆரம்பித்திருந்ததால் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்த போது நகைகளை எங்காவது மறைத்துவைத்துவிட்டே வெளியேறவேன்டி இருந்தது.

பெண்கள் தமது தாலிகளைக்கூட கழட்டி ஒளித்துவைக்கவேட்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. நகைகளையும் பண நோட்டுக்களையும் பத்திரமாக நிலத்தின் அடியில் புதைத்துவிட்டு புதைத்த இடத்தின் மீது அடையாளத்திற்கு எதையாவது நட்டு வைத்துவிட்டு கனத்த மனங்களுடன் தமது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

இளைஞர்கள் தங்களது பாடசாலை நற்சான்றுப் பத்திரங்கள் பரிட்சைப் பெறுபேறு ஆவணங்கள் கடவுச் சீட்டுக்கள் அடையாள அட்டைகள் என்பனவற்றை கவனமாக பைகளில் போட்டு தம்முடன் எடுத்துச் சென்றார்கள். ஒருவேளை உயிர் தப்பினால் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு அவைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.

யாழ் குடாவின் கலச்சார மையம் என்று கூறப்படுகின்ற நல்லூர் கந்தசாமி கோயில் யாழ்பாண நகர மக்களின் பிரதான அகதி முகாமாக உருவெடுத்திருந்து.

அயிரக்கணக்கில் அங்கு வந்து தஞ்மடைய அரம்பித்த மக்களின் நெருக்கடி தாங்காது கோயிலே தின்டாடியது. சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் அப்பொழுது தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனை நெருக்கடியிலும் கோயில்களில் திரண்டிருந்த மக்களிடையே யாழ் மக்களுக்கே உரித்தான சாதிப்பிரச்சினைகளும் கிழம்ப ஆரம்பித்தன.

உயர்ந்த சாதியினருக்கு கோயிலில் முக்கிய வசதியான இடத்தில் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கு எழுந்திருந்தன.

அங்கிருந்த மற்றவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இவற்றினால் இடைக்கிடையே வாய்த்தர்க்கமும் கைகலப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தன. சனநெருக்கடிக்கு மத்தியில் சிலர் தமது வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற உபகரணங்களையும் தம்முடன் அகதி முகாமிற்குள் கொண்டுவர முற்பட்டபோதும் பிரச்சினைகள் எழுந்தன.

சமையலும் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருந்தன. சிலர் கைகளில் அகப்பட்ட சில அசைவ உணவு வகைகளை கோயில் வளாகத்திற்குள் சமைக்க முற்பட்ட போது பிரச்சினைகள் ஏற்பட்டன.

மக்கள் தமது கடன்களைக் கழிப்பதிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

பாடசாலைகளின் நிலமையும் இப்படித்தான் இருந்தது.

நான் கல்வி கற்ற பாடசாலை அதனால் எனக்கு முதலிடம் வேண்டும்| என்று ஒரு தரப்பினரும் ஆசிரியர் குடும்பங்களுக்கு தனி இடம் என்று ஒரு பிரிவினரும் அதிபரின் உறவினருக்கு தனி மண்டபம் என்று வேறு சிலரும் கூறிச் செயற்பட்டதால் பல சிக்கல்கள் எழுந்தன.

இதைவிட இந்தியன் கைகளால் சாவது மேல்|| என்று கூறி பலர் பாடசாலைகள் கோவில்களை விட்டு வெளியேறி தமது வீடுகளுக்கு திரும்பவும் சென்ற சந்தர்ப்பங்களும் இருந்தன.

தாக்குதல்களுக்கு உள்ளான அகதி முகாம்கள்:

இத்தனை கஷ்டங்களுடன் மக்கள் அடைக்கலமாகி இருந்த அகதி முகாம்களையும் கூட இந்தியப் படையினர் விட்டுவைக்கவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

20.10.1987 அன்று சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நிறம்பிவழிந்த அகதிகள் மத்தியில் இந்தியப் படையினர் அடித்த ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. பாடசாலை அதிபரும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த இடத்தில்தான் அந்த ஷெல் விருந்து வெடித்தது. பாடசாலை அதிபர் அவரது மகனான ஒரு ஆசிரியர் உட்பட ஆறு பேர் பலியானார்கள். இருபதிற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

அகதிகள் நிறம்பி வழிந்த சென் ஜோன்ஸ் கல்லூரியை நோக்கியும் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அகதி முகாமாக மாறியிருந்த யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் இந்தியப் படையினர் ஏவிய ஷெல் வந்து விழுந்ததில் அங்கு தஞ்சமடைந்திருந்த ஆறுபேர் கொல்லப்பட்டார்கள்.

நாவலர் மண்டப அகதி முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தார்கள்.

சுண்டுக்குழி அகதிமுகாமை நோக்கிச் சென்றுகொடிருந்த அகதிகள் மீதும் இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்தினார்கள். பலர் கொல்லப்பட்டார்கள்.

தமிழ் மக்கள் அபயம் அடைந்திருந்த அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் மனித வேட்டை நடாத்திய சந்தர்ப்பங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரி அகதி முகாமில் இந்தியப் படையினர் மேந்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 24 அகதிகள் துடிதுடித்து இறந்தார்கள்.

(25.10.1987 அன்று நடைபெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்).

பரவிய செய்தி:

இதேவேளை நல்லூர் கந்தசாமி கோயிலில் தஞ்சமடைந்திருந்த மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு செய்தி யாழ் குடாவெங்கும் பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்தது.

அந்தச் செய்தி படிப்படியாக இந்தியப் படையினரையும் வந்தடைந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லூர் கந்தசாமி கோயிலினுள் மக்கள் மத்தியில் மறைந்து தங்கியிருக்கின்றார்| – என்பதே அந்தச் செய்தி.

தொடரும்..


இந்தியாவினால் ஈழத் தமிழர் அனுபவித்த அவலங்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 13) –நிராஜ் டேவிட்

ஈழத்தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் முள்ளிவாய்காலில் புரிந்திருந்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகமே ஒன்று திரண்டு தமிழருக்காக பச்சாத்தாபப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் நடுவண் அரசு மாத்திரம் சிங்களம் மேற்கொண்ட அந்தக் கொலைவெறி ஆட்டத்திற்கு ஆரம்பத்தில் வக்காலத்து வாங்கியிருந்தது.

avalankal13.jpg

இலங்கைப் படைகளின் படுபாதகச் செயல்களைக் கண்டிக்கும் நடவடிக்கையில் மிகுந்த தயக்கத்தையே வெளிப்படுத்தி வந்தது.

தமிழ்நாட்டில் இருந்து எழுந்த மிதமிஞ்சிய அழுத்தங்கள், அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தங்கள் போன்றனவற்றைத் தொடர்ந்து கொஞ்சம் யோசித்து, இழுத்தடித்துதான் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு என்கின்ற ஒரு சம்பிரதாய நகர்வை நோக்கி வேண்டா வெறுப்பாக நகர ஆரம்பித்துள்ளது.

அதற்கு அரசியல்;, இராஜதந்திரம், அயல் நாடு, என்று பல காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் இதேபோன்ற பல கொடுமைகளை ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியாவும் மேற்கொண்டுள்ளது என்பதும் ஒரு முக்கிய காரணம்.

ஆம். முள்ளிவாய்க்காலில் இலங்கை மேற்கொண்டது போன்று மனிதத்திற்கு எதிரான மிகப் பெரிய கொடுமைகளை இந்தியாவும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஈழ மண்ணில் அரங்கேற்றியிருந்தது.

அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழித்தது, தமிழ் பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது, சரணடைந்த போராளிகளைச் சுட்டுக்கொலை செய்தது, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசியது.

இப்படி இந்தியாவினால் ஈழத் தமிழர் அனுபவித்த அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அந்த அவலங்களைத்தான் தற்பொழுது இந்தத் தொடரில் மீட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கோர தாண்டவம்

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் மிகவும் கொடூரமானவை. எழுத்தில் எழுத முடியாதவைகளும் கூட.

ஈழத்தில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோர தாண்டவங்கள் பற்றி பல சம்பவத் தொகுப்புக்கள் வெளியாகியிருந்தன. ‘அம்மானைக் கும்பிடுகிறானுகள்’ என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பொன்று வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோன்று இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான மற்றொரு உண்மைச் சம்பவத் தொகுப்பொன்று, ‘வில்லுக்குளத்துப் பறவை’ என்ற பெயரிலும் வெளியாகி இந்தியாவை தலைகுனிய வைத்திருந்தது.

அந்தத் தொகுப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்ளுவது, ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு சரியான பார்வையைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

உண்மைச் சம்பவம்:

அந்தச் சம்பவம் 06.11.1987 இல் இடம்பெற்றது.

கீரிமலைக் கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமே ‘எங்கள் கடல் செந்நீராகிறது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த உண்மைச் சம்பவம் இதுதான்:

மருமகன் பஞ்சாட்சரத்தின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து இந்திய வெறியர்கள் சுடுவதைப் பார்த்த புவனேசுவரி, கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘அவன் அம்மன் கோயில் குருக்கள் பாருங்கோ… அவனைச் சுடாதேயுங்கோ’  என்று கெஞ்சியும் பலனில்லாமல் போயிற்று. கணவனை இழந்தவளாய், ‘அம்மா’ என்று கதறிக்கொண்டே தனது தோளில் சாய்ந்த மகள் ஜெயந்தியைக் கையால் பற்றிப் பிடித்தபடி வானம் இடியக் கத்தினாள்.

மாரிகாலக் கொடுங்காற்றில் கடலின் அலைகள் வெறிபிடித்துக் கூத்தாடின. அமைதியாக கீரிமலைக் கடற்கரையில் 1987ம் ஆண்டு நவெம்பர் மாதம் 6ம் திகதி காலை 8 மணிக்கெல்லாம் அந்த வெறிக்கும்பலின் மனித வேட்டை தொடங்கிற்று.

ஜெயந்தியின் தங்கச்சி வசந்தி நடுங்கி ஒடுங்கிப் போனாள். சில்லென்ற குளிர் காற்றில் கூட உடல் வியர்த்துக் கொட்டியது. அவர்களை வளைத்து ஐம்பது இந்தியப் படை முரடர்கள்.

தாயையும் அந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் வீட்டுக்குச் செல்லுமாறு ஒரு வெறியன் கொச்சை ஆங்கிலத்தில் கத்தினான். அவர்கள் வீடு நோக்கி நடந்தார்கள். கூடவே அந்த முரட்டுக் கும்பலும்….

அழகான கீரிமலைக் கடற்கரை ஓரத்தில் இருந்த புவனேசுவரியின் வீடு ஓரளவு வசதியானது. அப்பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கான குடும்பம். புவனேசுவரி படித்தவள். விதவை. நாற்பத்தெட்டு வயது ஆகின்றது. இரண்டு பெண் பிள்ளைகள்- மூத்தவள் ஜெயந்திக்கு 22 வயது, வசந்தி இரண்டு வயது இளையவள். ஒரு மகன் இருக்கின்றான் – உடல் ஊனம்… மூளை வளர்ச்சி இல்லை.

ஜெயந்திக்கு அண்மையில்தான் பஞ்சாட்சரத்துடன் திருமணமாகி இருந்தது. பஞ்சாட்சரம் அம்மன் கோயில் பூசாரி. அமைதி காக்கவென வந்த இந்தியப் படையினர் அந்த அப்பாவியை அன்று அநியாயமாகச் சுட்டுக்கொன்றிருந்தார்கள்.

ஜெயந்தி அழுதுகொண்டே அந்த இந்தியப் படைக்கும்பலுக்கு நடுவில் நடந்தாள். புவனேசுவரிக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முந்திய நினைவு.

1958 ஆம் ஆண்டு, சிங்கள இன வெறியர்கள் தமிழ்க் குழந்தைகளை கொதிக்கும் தார்ப் பீப்பாக்களில் போட்டுக் கொன்றதும், வீடு வீடாகத் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்ததும் கொடிய சேதிகளாகிக் கொண்டிருந்தபோது புவனேசுவரிக்குப் பதினெட்டு வயதுதான்.

வரலாற்றில் தமிழீழத்தின் தன்மான உணர்வைத் தூண்டிவிட்ட முதல் நிகழ்வுகள் அவை.

கொடுமைக்கு வேர் முளைக்கத் தொடங்கிய காலம்.

இலங்கையின் தலைநகரான கொழும்பிற்குத் தெற்கே பாணந்துறை என்ற சிங்கள ஊரில், ஒரு பழைய சைவக்கோயிலின் குருக்களைச் சிங்கள வெறியர்கள் மூலஸ்தானத்தில் வைத்தே எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துச் சாம்பலாக்கியபோது, ‘கடவுளே இல்லையா’ என்று அவளது வீட்டில் இருந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டது அவளுக்கு இன்றும் நினைவை விட்டு அகலவில்லை.

அப்பொழுது தீ வைத்தவர்கள் – பௌத்த சிங்கள வெறியர்கள்.

ஆனால் முப்பது ஆண்டுகளின் பின்பு இன்று… இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் அல்லவா அம்மன் கோயில் குருக்களைப் பிணமாக்கிப் போட்டிருக்கின்றார்கள்.

பாணந்துறைக் குருக்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொன்ற சிங்களப் பௌத்த வெறியர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற வந்தவர்களாம் – பஞ்சாட்சரக் குருக்களைக் கொன்ற பாரதத்தின் இந்துமதப் புண்ணியவான்கள்…

புவனேசுவரி பற்களைக் கடித்துக்கொண்டாள்…

இந்தியப் படைவீரர்கள் புடை சூழ புவனேசுவரியும், இரண்டு பெண்பிள்ளைகளும் வீட்டை வந்தடைந்தார்கள்.

புவனேசுவரியின் கூந்தலைப் பிடித்து இழுத்து, வீட்டினுள்ளே முரட்டுத்தனமாகத் தள்ளினான் ஓர் இரக்கமற்ற தடியன்.

இரண்டு பெண் பிள்ளைகளும் நடுங்கிக்கொண்டே பின்னால் போனார்கள். வாசலில் மனவளர்ச்சி குன்றிய அந்த ஊனப்பிள்ளை கைகளைத்தட்டி தன்பாட்டில் சிரித்துக்கொண்டிருந்தது.

அந்த அப்பாவியை ஒரு ‘இந்திய மிருகம்’ சப்பாத்தால் உதைத்து கீழே தள்ளியது.

‘நகைகள் எங்கே வைத்திருக்கின்றாய்? எடு’ அரைகுறை ஆங்கிலத்தில் புவனேசுவரியை நோக்கி ஓர் அதட்டல். நல்ல ஆங்கிலத்திலேயே அவள் பதில் சொன்னாள்: ‘நாங்கள் பெரிய பணக்காரர்கள் அல்ல, எங்களிடம் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை’

அவர்கள் ‘ஓ’ என்று சிரித்தார்கள்.

வீடு அமளிதுமளி ஆயிற்று. அலுமாரி – பெட்டி – மூட்டை முடிச்சுக்களெல்லம் உடைந்து, கிழிந்து சிதறின. புனித இந்தியப் படைகளின் பைகளில் பாதி நிரம்பிற்று…

வெளியே தெருவில் ஜீப் வண்டியில் பறந்த வெள்ளைக்கொடியைக் கழட்டி – உள்ளே எதையோ மூடி மறைத்து முடிச்சுப் போட்டான் ஒருவன்.

ஒரு விதவையின் வீட்டை மொட்டை அடித்து முடித்த திருப்தி.

இனி, கடற்கரைக்குப் போகலாம்.. என்று கொச்சை ஆங்கிலத்தில் கத்திக்கொண்டே புவனேசுவரியின் தோளில் ஓங்கித் துப்பாக்கியால் அடித்தான் ஒரு முரட்டு ஆசாமி.

நடுங்கிக்கொண்டே அவர்கள் கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.

கடற்கரை நெருங்க நெருங்க – பஞ்சாட்சரம் சுருண்டு கிடப்பது தூரத்தில் தெரிய – ஜெயந்தி தாயின் தோள்களை இறுகப் பற்றிக்கொண்டு தேம்பினாள். சற்றுத் தள்ளி வேறு சிலரும் விழுந்து கிடப்பது தெரிந்தது.

பெரும் எண்ணிக்கையில் இந்தியப் படையினர் கடற்கரையில் குவிந்து இருப்பது தெரிந்தது.

அருகில் சென்ற போது புவனேசுவரியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தம்பித்துரை அங்கு இறந்து கிடப்பதையும், அருகில் அவனது மனைவி ஸ்ரீதேவி கைக்குழந்தையோடு வெறி பிடித்தவளாய் கதறிக்கொண்டிருந்ததையும் கண்டாள். அவர்களது பிள்ளைகளான சிவாஜினியும், சுபாஜினியும், ~~அப்பா||, ~~அப்பா|| என்று புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்தார்கள்.

எத்தனை கொடிய உலகம்..

தன் கண்களுக்கு முன்னாலேயே ஜெயந்தியையும், வசந்தியையும் முரட்டுத்தனமாக் சேலை களைந்து வெறியர்கள் நிர்வாணமாக்கிய போதும் – தாயாக அல்ல, ஒரு குழந்தையாக முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் புவனேசுவரி.

ஒரு முரடனின் இரும்புக் கைகள் ஜெயந்தியை ஆவேசமாகப் பற்றி இழுத்து எறிந்தன. ‘போடி உன் புருஷனைப் போய் தழுவு’  என்று கூறி பிணமாகக் கிடந்த பஞ்சாட்சரத்தை நோக்கி அவளைத் தள்ளினான்.

அதற்குள்… ஜெயந்தியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் துப்பாக்கியை வைத்து இன்னொரு பாவி, தமிழனின் மானத்தையே சுடுவது போல…

பிணமாய்ச் சுருண்ட ஜெயந்தியின் மேல், ‘அக்கா’ என்று கத்திக்கொண்டு ஓடிப் போய் விழுந்தாள் வசந்தி.

அவளுக்கும் அதே இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்…

புவனேசுவரி மயங்கி விழுந்தாள்.

கீரிமலைக் கடல் ஆவேசமாக இரைந்து கத்தியது. கரையின் நீள அலைகள் பிணங்களை நனைத்து மீள்கின்றன. தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள்…

கண்களைத் திறந்தபோது அந்த மனித விலங்குகள் ஸ்ரீதேவியைச் சுட்டுப் பிணமாக வீழ்த்துவதையும் – அவள் கையிலிருந்து விழுந்த பிஞ்சுக் குழந்தை அலைகளுக்கு நடுவில் ‘அம்மா’  என்று கத்துவதையும் புவனேசுவரி கண்டாள்.

அடுத்த நொடியில் – ஜெயந்தியும், வசந்தியும் கொல்லப்பட்டது போலவே தம்பித்துரையின் இரண்டு பெண் பிள்ளைகளும் அதேவிதமாக நிர்வாணமாக்கப்பட்டு – அதேவிதமாக… எத்தனை கொடிய நிகழ்வுகள்.

இரண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ந்து கேட்டன. புவனேஸ்வரி நிலத்தில் கிடந்தபடியே ஓரக்கண்ணால் பார்த்தாள்… ஒன்று கோணேஸ் – அடுத்தது தவநேசன் தம்பித்துரையின் இரண்டு ஆண் பிள்ளைகள். அப்பொழுதுதான் சுடப்பட்டு நிலத்தில் வீழ்ந்திருந்தார்கள்.

புவனேசுவரி செத்தவள் போலவே மணலில் படுத்துக்கிடந்ததால் அந்தக் கொலை பாதகர்கள் கண்களில் இருந்து தப்பிக்க முடிந்தது.

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோர தாண்டவங்களுள் மேற்கூறப்பட்ட உண்மைச் சம்பவம் – ஒரு உதாரணம் மட்டும்தான்.

இதுபோன்று ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உண்மைச் சம்பவங்கள், எழுத்து வடிவில் புத்தகங்களிலும், நினைவுகளாக ஈழத்தமிழர் நெஞ்சங்களிலும் அழியாத ரணங்களாகவே பொறிக்கப்பட்டிருக்கின்றன.

அவலங்கள் தொடரும்…


ஆரம்பகட்டத் தாக்குதலில் 154 இந்திய இராணுவத்தினர் பலி (அவலங்களின் அத்தியாயங்கள்- 14)

இரண்டு நாட்களுக்குள் யாழ் நகரைக் கைப்பற்றிவிடுவோம் என்று கூறி இந்தியப் படையினர் ஆரம்பித்திருந்த ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

யாழ் நகரை நெருங்குவதற்கே இந்தியத் துருப்புக்களுக்கு 12 நாட்கள் வரை பிடித்தது.

அதற்கும் அவர்கள் கொடுத்த விலை மிகப் பெரியது என்றே கூறப்படுகின்றது. பலமான உயிர் மற்றும் பொருள் இழப்புக்களைச் சந்தித்தே அவர்களால் யாழ் நகரை ஓரளவிற்கு நெருங்க முடிந்தது.

புலிகளின் எதிர்ப்புக்கள் இந்தியப்படையினர் நினைத்துப் பார்த்ததைவிட மிகவும் கடுமையானதாக இருந்தது. அவர்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் புலிகள் தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தார்கள். புலிகளின் மன உறுதிக்கும் திறமைகளுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் முன்பு உலகின் நான்காவது பெரிய இந்திய இராணுவம் தடுமாறிக்கொண்டிருந்தது.

அதுவரை இடம்பெற்ற தமது நேரடியான தாக்குதல்களில் 154 இந்திய இராணுவத்தினரை தாம் கொன்றுவிட்டதாகவும் 21 இந்திய ஜவான்களை உயிருடன் பிடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

நூற்றுக் கணக்கான இந்தியப் படையினரை காயப்படுத்தி யுத்த களத்தில் இருந்து அகற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருந்தார்கள். இந்தியப் படையினருக்குச் சொந்தமான 52 எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளையும் வௌ;வேறு ரகத்திலான 54 இயந்திரத் துப்பாக்கிகளையும் 4 ரொக்கேட் லோஞ்சர்களையும் ஆயிரக் கணக்கான ரவைகளையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தமது உத்தியோகபூர்வ அறிப்பில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்திய இராணுவத்தினருக்குச் சொந்தமான ஒரு டிரக் வாகனம் இந்தியப் படை பயன்படுத்திய -இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒரு சிறிய பீரங்கி ஒரு கவச வாகனம் போன்றனவும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் மேலும் அறிவித்திருந்தார்கள். இந்தியப் படையினருக்குச் சொந்தமான 14 யுத்த தாங்கிகளும் 5 வேறு வகை வாகனங்களும் தமது தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

புலிகளின் நேரடித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களது தொகையையே புலிகள் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பச் சண்டைகளில் இந்தியப் படையினர் தரப்பில் 319 பேர் கொல்லப்பட்டதாக இந்தியப் படைத்துறை அதிகாரி ஒருவர் பின்னாளில் தெரிவித்திருந்தார். இவர்களில் கேணல் தரத்திலான இரண்டு உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 43 அதிகாரிகளும் கொல்லப்பட்டிருந்தார்கள்.; அதிகாரிகள் உட்பட 1039 இந்தியப் படையினர் காயம் அடைந்திருந்தார்கள்.

இந்தியா வெளியிட்ட கொலைப் பட்டியல்:

இந்தியப் படையினர் தாம் கொலை செய்த அப்பாவித் தமிழ் மக்களையும் சேர்த்து தாம் 1100 புலிகளைக் கொன்றுவிட்டதாக அறிவித்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியத் துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருமே புலிகளாகவே பட்டியலிட்டிருந்தார்கள். 167 துப்பாக்கிகளும் 17 உயர்ரகத் துப்பாக்கிகளும் 8 ரொக்கட் லோஞ்சர்களும் 23 இயந்திரத் துப்பாக்கிகளும் 70 மோட்டார்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் படையினர் சென்னையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்திய ஜனாதிபதியின் சந்தேகம்:

சண்டைகளில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி இந்தியப் படைத்துறை வெளியிட்ட கணக்குகள் தொடர்பாக அக்காலகட்டத்தில் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்ரீலங்க இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் தொடர்பாக வெளியிட்டுவந்த கணக்குகளை நம்பவில்லை.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜி. ஜெயில் சிங் அவர்களும் இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் பற்றி வெளியிட்டு வரும் கணக்குகள் தொடர்பான தனது சந்தேகத்தை இந்தியப்படை உயரதிகாரியான லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம் ஒரு தடவை தெரிவித்திருந்தார்.

இந்திய நாட்டிற்காக யுத்தம் புரியும் வீர அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற சிரோமணி விருதைப் பெறுவதற்கு புதுடில்லி சென்றிருந்த லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம் இலங்கையில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? என்று இந்திய ஜனாதிபதி வினவினார்.

திபீந்தர் சிங் அந்த விபரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினார்.

இந்திய உயரதிகாரி வழங்கியிருந்த இழப்பு விபரங்களை நம்ப மறுத்த இந்திய ஜனாதிபதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனா எனக்குத் தந்த தகவல்களின்படி இந்தியப் படையினரின் இழப்புக்கள் நீங்கள் கூறும் கணக்கை விட அதிகமாக இருக்கின்றதே நான் யாருடைய கணக்கை நம்புவது? உங்களுடையதையா அல்லது ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியினுடையதையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தியப் படை அதிகாரி திகைத்துவிட்டார்.

இந்திய ஜனாதிபதியிடம் இருந்து அப்படியான ஒரு கேள்வி எழுந்து தன்னை இத்தனை தூரத்திற்கு சங்கடப்படவைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. ஜனாதிபதியுடன் இந்தச் சம்பாசனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் அருகே இருந்தார்கள். இது மேலும் அவரைச் சங்கடப்பட வைத்தது.

இழப்புக்களைச் சந்தித்த இந்தியப் படை வீரர்களுக்கு நாங்களே ஓய்வுதியப் பணம் வழங்கவேண்டும் என்பதால் ஸ்ரீலங்கா ஜனாதிபதியினுடையதை விட எனது கணக்கை நம்புவதே நல்லது என்று கூறிச் சமாளித்துவிட்டு வந்தார்.

பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்:

இதேபோன்று இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை ஒரு தடவை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார்.

யாழ்பாணத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த வீர சாகாசங்கள் பற்றியெல்லாம் இந்திய அதிகாரி புழுகிக் கொண்டிருந்தார். இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி திபீந்தர் சிங் தெரிவிக்க ஆரம்பித்த போது அந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளத் தாம் தயங்குவதாக அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் தெரிவித்தார். இராணுவ அதிகாரி தமது தரப்பு இழப்புக்கள் பற்றி தாம் வெளிட்ட தொகை சரியானது என்று தொடர்ந்து வாதாடினார். ஆனால் பீ.பீ.சியின் ஊடகவியலாளர் அதனை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு ஒரு முக்கிய கேள்வியை திபீந்தர் சிங்கிடம் இரகசியமாக வினவினார்.

அதைக்கேட்ட திபீந்தர் சிங் அதிர்ந்து விட்டார்.

அடுத்து என்ன கூறுவது என்று அவருக்கு தெரியவில்லை…

அவலங்கள் தொடரும்…


 

ஈழத் தமிழரைக் கொன்றொழிப்பதற்கு சீக்கியர்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்? (அவலங்களின் அத்தியாயங்கள்- 15) –நிராஜ் டேவிட்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார்.

அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி, அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு, ஒரு முக்கிய கேள்வியை திபீந்தர் சிங்கிடம் தனிப்பட்ட ரீதியில் வினவினார்.

“இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் சண்டைகளில் சீக்கியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவது ஏன்?” என்று அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

திபீந்தர் சிங்கிற்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. திகைத்து விட்டார். தடுமாறியபடி ஒருபதிலைக் கூறிச் சமாளிக்க முயன்றார்.

“உண்மையிலேயே நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் வரைக்கும் இதுபற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்றல்ல. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை அணிகளில் சீக்கியர்கள் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால் இது தற்செயலான ஒன்று…” என்று கூறி அவர் மழுப்பிவிட்டார்.

அவரது பதிலை அந்த ஊடகவியலாளர் நம்பினாரோ தெரியவில்லை, வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. செவ்வியை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

india_seekiyar_001.jpg

காரணம் என்ன?

உண்மையிலேயே இலங்கையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளில் சீக்கியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

“அப்படி எதுவுமே கிடையாது” என்று இந்திய அதிகாரிகள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், காரணத்துடன்தான் சீக்கியர்கள் ஈழ யுத்தத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை உறுதியாகவே நம்பலாம்.

ஈழத்தில் அதிக அளவிலான படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டவர்கள் சீக்கியர்களே என்ற அடிப்படையில், இந்தியப் படை காலத்தில் ஈழ மண்ணில் அதிக அளவிலான சீக்கியர்களின் பிரசன்னம் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.

இந்தியாவில் வீர தீர சாகாசங்களில் சீக்கியர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது பொதுவானதொரு அபிப்பிராயம். சீக்கியர்கள் பௌதீக ரீதியாக மிகுந்த உடல் பலத்தைக் கொண்டவர்கள் என்பது ஓரளவு உண்மையும் கூட.

இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் அதிக பங்களிப்பைச் செய்து, பலத்த இழப்புக்களைச் சந்தித்த சமூகம் என்ற வகையில் சீக்கியச் சமுகம் இந்தியாவில் மதிக்கப்படுகின்ற ஒரு சமூகம்.

இந்திய இராணுவத்திலும், விளையாட்டுக்கள் மற்றும் உடற்பலம் சார்ந்த விடயங்களிலும் சீக்கியர்கள் அதிகம் அங்கம் வகிப்பது வளக்கம். அதேவேளை, இந்தியாவில் உள்ள மற்றயை இனங்களுடன் ஒப்பிடும் பொழுது, சீக்கியர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை என்பது இந்தியாவில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயம். சீக்கியர்கள் முட்டாள்கள், மிகுந்த முட்டாள் தனமான காரியங்களையே செய்பவர்கள் என்பது இந்தியாவில் உள்ள மற்ற இனங்களின் மத்தியில் காணப்படுகின்ற பரவலான நம்பிக்கை.

சீக்கியர்களின் முட்டாள்தனமான காரியங்களை அடிப்படையாக வைத்து, “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்).

வீரம் மிக்க முட்டாள்களான சீக்கியர்கள் இந்தியப் படையில் அதிகம் இடம்பெற்றிருந்ததுடன், ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது ஒன்றும் வியப்பான விடயம் அல்ல.

“இலங்கையில் இந்தியப் படையினர் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் சண்டையிட்டார்கள்| என்பதே, ஈழத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு அடிப்படையான காரணமாக இன்றுவரை அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றர்கள்.

அப்படி எந்தவித அடிப்படை அரசியல் நோக்கமும் இல்லாது, அல்லது தமக்கிருந்த உண்மையான அரசியல் நோக்கத்தை வெளியிடாமல் யுத்தம் ஒன்றைப் புரிவதற்கு, அதுவும் அந்த யுத்தத்தை மிகவும் மூர்க்கமாகப் புரிவதற்கு சீக்கியர்களைப் போன்ற வீரம் நிறைந்த முட்டாள்கள் இந்தியத் தலைமைக்கு பொருத்தமாகப்பட்டார்கள். ஈழ யுத்தத்தில் சீக்கியர்களை அதிக அளவில் இந்தியத் தலைமை ஈடுபடுத்தியதற்கு இதுவும் ஒரு காரணம்.

அக்காலத்தில் இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவிதமான யுத்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. எல்லைப்புறச் சண்டைகளிலும் இந்தியா ஈடுபட்டிருக்கவில்லை. அதனால் மெட்ராஸ் ரெஜிமெட் உட்பட தென் இந்தியப் படையணிகள் பெருமளவில் எந்தவித பணியும் இல்லாது சும்மாவே அப்பொழுது காலம் கடத்தி வந்தன.

இந்தியத் தலைமை நினைத்திருந்தால் தமிழ் பேசும் மெட்ராஸ் ரெஜிமெட் வீரர்களையே முற்று முழுதாக இலங்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருக்க முடியும். தாம் செய்யும் பிழையான காரியங்களை தமிழ் பேசும் இந்தியப் படையினரால் இலகுவாக விளங்கிக்கொண்டுவிட முடியும் என்ற காரணத்தினால், திட்டமிட்டே தமிழ் படையினர் நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்கப்பட்டு, பாஷை புரியாத, உணர்ச்சிகள் புரியாத வெறும் வீரத்தை மட்டுமே வெளிக்காட்டக்கூடிய சீக்கிய முட்டாள்களை இந்தியப் படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது இதனால்தான்.

india_seekiyar_003.jpg

சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:

அதைவிட, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் சீக்கியர்களை நேரடியாக ஈடுபடுத்தியதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன.

ஈழத்தில் இந்தியப்படைகள் பிரசன்னமாவதற்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னதாக, இந்தியாவில் சீக்கிய சமூகத்திற்கு எதிராக பாரிய அடக்குமுறை ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. சீக்கியர்கள் காலிஸ்தான் என்ற தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அப்பொழுது ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள்.

இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நடுவன் அரசு, இரும்புக்கரம் கொண்டு அதனை அடக்கியிருந்தது. சீக்கியர்களின் அதிஉன்னத மதஸ்தலமான பொற்கோவிலினுள் இந்தியப் படை நுழைந்து பாரிய அனர்த்தங்களைப் புரிந்திருந்தது. “புளுஸ்டார் இராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் இந்தியப் படையினர் மேற்கொண்ட மிகப் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கையின்போது, சீக்கியர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சீக்கிய விடுதலைப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய பிரிந்தவால் என்ற தீவிரவாதத் தலைவரை, சீக்கிய பொற்கோயிலில் வைத்தே இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது.

அது சீக்கியர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவரது பிரத்தியோக மெய்ப் பாதுகாவலர்களான இரண்டு சீக்கியர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தியின் கொலையைத் தொடர்ந்தும் சீக்கிய சமூகம் இந்தியாவில் பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்திரா காந்தியின் கொலையால் கோபம் கொண்ட இந்தியர்கள், ஆயிரக்கணக்கில் சீக்கிய மக்களை நாடு முழுவதிலும் கொலை செய்தார்கள். அவர்களது உடமைகளை சூறையாடினார்கள். சீக்கியர்களுக்குச் சொந்தமான வியாபார ஸ்தலங்களை அழித்தார்கள்.

இது போன்று இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீக்கியர்களுக்கு எதிரான தொடர் அசம்பாவிதங்கள், இந்திய இராணுவத்தில் இருந்த சீக்கிய ஜவான்களின் மனங்களிலும் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்திரா காந்தி இந்திய இராணுவத்திலிருந்த சீக்கியர்களினாலேயே கொலை செய்யப்பட்டதானது, இந்திய இராணுவத்தினுள் சீக்கியர்கள் தொடர்பாக அதுவரை இருந்து வந்த நம்பிக்கையை சிதறடித்திருந்தது. இராணுவத்தினுள் நம்பிக்கையான பொறுப்புக்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. இதுவும் சீக்கிய இனத்தவரை இந்தியா என்ற உணர்வில் இருந்து அன்னியப்பட வைப்பதாகவே அமைந்திருந்தது.

இப்படியான நிலையில், இலங்கையில் இராணுவ நடவடிக்கை என்று வந்ததும் இந்தியத் தலைமை அவசர அவசரமாக சீக்கியர்களை அதில் முழுமையாக ஈடுபடுத்தி, சீக்கியப் படைவீரர்களிடையே வேறு சிந்தனைச் சிதரல்கள் ஏற்பட்டுவிடுவதை தவிர்ப்பதற்கு யோசித்தார்கள்.

அவர்களுக்கு தமது நாட்டுப் பற்றை மற்றுமொருமுறை நிரூபிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குவது போன்ற ஒருநிலைமையைத் தோற்றுவித்துவிட்டு, இந்தியப் படையினரை ஏதோ ஒரு காரியத்தில் ஈடுபட வைக்கும் மனோவியல் நடவடிக்கையை இந்தியப் படைத்துறைத் தலைமை மேற்கொண்டிருந்தது. ஈழ யுத்தத்தில் சீக்கியப் படைஅணிகள் அதிக அளவில் ஈடுபட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

india_seekiyar_002.jpg

மறைக்கப்பட்ட உண்மை:

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்தியா- சீக்கியர்கள்- தமிழர்கள் என்ற விடயங்களில் மறைக்கப்பட்ட உண்மை ஒன்றும் உள்ளது.

ஈழயுத்தத்தில் முன்நிலைப்படுத்துப்பட்டு களமிறக்கப்பட்ட சீக்கியப் படையினர் மக்கள் மீது, அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் மீது அளவுக்கதிகமாக காழ்ப்புணர்வு கொண்டு செயற்பட்டதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு.

சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கணக்கில் எடுக்கப்படாததும், அதேவேளை மிகவும் முக்கியத்துவம் பெற்றதுமான அந்தக் காரணம் பற்றி அடுத்த வாரம் சற்று விரிவாகப் பார்ப்போம்.


Operation Blue star இராணுவ நடவடிக்கையும் ஈழத் தமிழர்களும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 16) –நிராஜ் டேவிட்

ஈழத்தில் இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் அதிக அளவில் சீக்கியப் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதற்கான காரணம் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

ஈழ மண்ணில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களில் சீக்கியர்களே அதிக அளவு அங்கம் வகித்திருந்ததாக பாதிக்கப்பட்டு தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக அதிக கொலைகள் பாலியல் வல்லுறவு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் இந்தியப் படையில் இருந்த சீக்கிய ஜவான்களே என்றும் பாதிக்கப்பட்ட பலரும் சாட்சி பகர்கின்றார்கள்.

தலைப்பாகை தாடி சகிதமாக இந்தியப் படையில் வலம்வந்த சீக்கியப் படையினர் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார்கள்.

இதற்கு காரணம் என்ன?

ஈழத்திற்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை அணிகளில் சீக்கியப் படையினர் அதிக அளவு அங்கம் வகித்தது இதற்கான காரணங்களில் ஒன்று என்றாலும் ஈழத்தமிழருக்கு எதிராக அதிக வன்முறைகளில் சீக்கியர்கள் ஈடுபட்டதற்கு அதைவிட மேலும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம்.

சாதாரணமாகவே சீக்கியர்களுக்கு தென் இந்தியரைப் பிடிப்பதில்லை.

இந்தியா சுதந்திரமடைந்து சிறிது காலத்தில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் தனித் தமிழ்நாடு பிரிவினைவாதக் கோரிக்கை திராவிடக்கழத்தினரால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது வடஇந்தியர்கள் பகை பாராட்டியே வந்துள்ளார்கள்.

நாஸ்திகக் கொள்ளைகள் திராவிட அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படைதைத் தொடர்ந்து இந்து மதவாத அடிப்படைவாத அமைப்புக்கள் திராவிடர்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை நாடுமுழுவதும் வெளிப்படுத்தியே வந்திருந்தார்கள்.

ஹிந்தி மொழியைத் தேசிய மொழியாக பிரகடனப்படுத்தி இந்திய நடுவன்அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டில் இருந்து பாரிய எதிப்புக்கள் கிளம்பி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் கூட வட இந்தியர்களை தென் இந்தியத் தமிழர்களிடம் இருந்து பெருமளவில் அன்னியப்படவே வைத்திருந்தது.

பொதுவாகவே வட இந்தியர்களுக்கும் தென்இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் பேதங்கள் தொடர்ந்தவண்ணமே இருந்தன. (திராவிடர்கள் மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பு வரலாறுவேறு பல சந்தர்ப்பங்களிலும் பல அரசியல்வாதிகளால் கிழறப்பட்டு இந்த பேதங்களின் வீச்சை மென்மேலும் அதிகரித்தவண்ணமே இருந்தன.)

இலங்கை வந்திறங்கிய சீக்கியப் படைவீரர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் தென் இந்திய வழித்தோன்றல்களாக இனங்காணப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு செயற்பட்டது ஒன்றும் வியப்பிற்குரிய விடயம் அல்ல.

இரண்டாவது காரணம்

சீக்கியர்கள் ஈழத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதற்கு மிகவும் இயல்பான மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது.

சீக்கியப் படை அணிகளுக்கு விடுதலைப் புலிகளுடனான ஆரம்பச் சண்டைகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான இழப்புக்கள் சீக்கியர்கள் ஈழத்தில் அதிக வஞ்சத்துடன் செயற்பட்டதற்கு மற்றொரு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஓரளவு உண்மையும் இல்லாமல் இல்லை.

1987 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி நள்ளிரவு யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறங்கிய 13வது சீக்கிய மெதுகாலாட் படையின் (13 – Sikh Light Infantry) அங்கம் வகித்த 30 சீக்கியர்களும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விதம்பற்றிப் பல்வேறு அதிர்ச்சிகரமான கதைகள் இந்தியப் படையினர் மத்தியில் பரவியிருந்தன. இது மற்றய சீக்கிய படையினரிடையே அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிக ஆவேசத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் சீக்கியப் படை வீரர்கள் ஈழத்தில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்றும் ஒரு காரணம் கூறப்படுகின்றது.

மூன்றாவது காரணம்

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க ஈழத்தமிழர்கள் மீது சீக்கியர்கள் வெறுப்புடனும் பழிதீர்க்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்வதற்கு மற்றொரு உட்காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

1984ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் சீக்கியர்கள் பெரும்பாண்மையாக வாழும் பஞ்சாபில் இந்திய இராணுவத்தினர் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.

“புளூ ஸ்டார்“ இராணுவ நடவடிக்கை, (Operation Blue star ) என்று அதற்கு பெயரிடப்பட்டிருந்தது.

சீக்கிய வீரர்கள் தமிழர்களுக்கு எதிராக அதிக கோபம் கொண்டு செயற்பட்டதற்கு இந்த இராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து தனி நாடாக பிரிப்பதற்கென்று கூறி சீக்கியர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். அவ்வாறு பஞ்சாப்பைத் தனி நாடாக பிரிப்பதற்கு சீக்கியர்கள் கூறும் காரணங்கள் நியாயமானவைகள்தான் என்றாலும் இந்தியாவின் நடுவன்அரசு அதற்கு இணங்கவில்லை.

இரும்புக்கரம் கொண்டு சீக்கியர்களின் போராட்டத்தை நசுக்க முற்பட்டது.

சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாபிலுள்ள பொற்போவிலினுள் தஞ்சமடைந்திருந்தார்கள். சீக்கியர்களின் அதி உன்னத வணக்கஸ்தலமான பொற்கோவிலினுள் சீக்கியர்களைத் தவிர வேறு மதத்தவர்கள் எவருமே அனுமதிக்கப்படுவதில்லை.

ஒரு நாள் இந்திய இராணுவம் பொற்கோவிலுள் நுழைந்து பொற்கோவிலை இரத்த வெள்ளத்தால் நனைத்தது.

அதுவம் சீக்கியர்கள் ஒரு முக்கிய பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய இராணுவம் சீக்கியர்களின் புனிதமான வணக்கஸ்தலமான பொற்கோவிலினுள் நுழைந்து கோரதாண்டவம் ஆட ஆரம்பித்தது.

1500 இற்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

சீக்கியர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஆண்மீகத் தலைவரும் பெரும்பாண்மையான சீக்கியர்களால் மதிக்கப்பட்டவருமான ஜார்நைல் சிங் பிந்தன்வாலே (Jarnail Singh Bhindranwale) என்ற தலைவர் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்.

சீக்கியர்களின் புனிதம் பேணும் ஸ்தலம் மிகவும் அசிங்கப்படுத்தப்பட்டது.

”புளூ ஸ்டார் (Blue star) என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சீக்கியர்கள் மனங்களில் ஆறாத ரணமாகியது.

சீக்கியர்களால் எந்த ஒரு காலத்திலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத ஒரு நிகழ்வாகவே இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது.

சரி இந்தச் சம்பவத்திற்கும் ஈழத்தமிழர்கள் மீது சீக்கியர்கள் காழ்ப்புணர்வு கொள்ளுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும்.

உண்மையிலேயே சீக்கியர்களுக்கு எதிரான இந்த Operation Blue star இராணுவ நடவடிக்கை தமிழர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்நாளில் இந்தியப் படைகளின் பிரதம தளபதியாக பணியாற்றிய கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி என்ற தமிழரே அந்த பொற்கோவில் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி இருந்தார்.

சீக்கிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்கள் ஒரு வகையில் காரணமாகி விட்டிருந்தார்கள்.

இதுவே தமிழ் மக்கள் மீது சீக்கியர்கள் தீராப்பகை கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது.

சீக்கிய ஆண்மீகத் தலைவர் பிந்தன்வாலே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கும் மெட்ராஸ் ரெஜிமெட்டைச் சேர்ந்த ஒரு சிறப்புப் படைப்பிரிவினரே பொறுப்பாக இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன. பிந்தன்வாலேயைக் கொலை செய்வதற்கென்று தமிழர்களைக் கொண்ட ஒரு சிறப்புப்படை இந்திய இராணுவத்தில் உருவாக்கப்பட்டு புளூ ஸ்டார் இராணுவ நடவடிக்கையின் போது அந்த அணியும் அனுப்பப்பட்டிருந்தது. இராணுவ நடவடிக்கைளின் போது இடம்பெற்ற எந்தவொரு சண்டைகளிலும் அந்தச் சிறப்பு அணி கலந்துகொள்ளவேயில்லை.

பொறுமையுடன் காத்திருந்து பிந்தன்வாலேயின் தலை தெரிந்ததும் அந்தச் சிறப்பு அணி செயற்பட்டது. அவரைப் படுகொலை புரிந்தது. இராணுவ நடவடிக்கை முடிந்ததும் இந்த விடயம் ஊடகங்களில் மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

பஞ்சாபில் இராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டு திரும்பிய இந்தியப் படையினருக்கும் நடவடிக்கையை தலைமை தாங்கி நடாத்திய கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீக்கும் தமிழ்நாட்டில் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியினரே இதனை ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழர்கள் வழங்கிய வரவேற்பாகவே இது நோக்கப்பட்டது. பிரச்சாரமும் செய்யப்பட்டது.

இவை எல்லாமே சீக்கியர்கள் தமிழர்கள் மீது காழ்ப்புணர்வும் தீராப் பகையும் கொண்டு செயற்படுவதற்கு அடிப்படைக்காரணங்களாக அமைந்திருந்தன.

ஈழத்தில் சீக்கியர்கள் மிகக் கொடூரமாகச் செயற்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈழத்தில் இருப்பவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டவர்களின் வழித் தோன்றல்கள். தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பவர்கள்.

சீக்கியர்கள் ஈழத்தமிழர்கள் மீது பழிவாங்குவதற்கு இதை விட வேறு காரணம் வேண்டுமா?

அவலங்கள் தொடரும்…


இந்திய அதிகாரியின் கருணையில் தங்கியிருந்த தமிழ் உயிர்கள் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 17) –நிராஜ் டேவிட்

இந்தியப் படையினர் ஈழமண்ணில் மேற்கொண்ட படுகொலைகளுள், உலகத்தின் பார்வையில் இருந்து கனிசமான அளவிற்கு மறைக்கப்பட்டதும், அதேவேளை ஈழத்தமிழர் நெஞ்சங்களில் இருந்து என்றைக்குமே மறக்க முடியாததுமான ஒரு சம்பவம் உள்ளது.

யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள், இலங்கை வந்திருந்த இந்தியப் படையினரின் ஒட்டுமொத்த நோக்கத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்குள்ளாக்கியிருந்தது.

ஒரு யுத்தகாலத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட நடுநிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படவேண்டும் என்ற சர்வதேச சட்டங்களையும்,, தர்மங்களையும், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தம்மைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் அப்பட்டமாக மீறிய ஒரு சம்பவமாக யாழ் வைத்தியசாலைச் சம்பவம் அமைந்திருந்தது.

1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவத்தில், வைத்தியர்கள், தாதிகள், வைத்தியமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என்று நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

யாழ் வைத்தியசாலையின் வரலாற்றிலும், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றிலும் இலகுவில் மறக்கப்பட முடியாத இந்த நிகழ்வு பற்றிப் பல ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், முறிந்தபனை, அக்கினிக் கரங்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்கள், யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பரிமானத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற ஆவணத்தொகுப்பு, யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகவும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்தி நிற்கின்றது.

வைத்தியசாவையில் நடந்த கோரம்

யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றிவிடும் என்பது சில நாட்களாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்திருந்தது. ஷெல் தாக்குதல்களால் காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மருந்துகளுக்கு அங்கு மிகுந்த பற்றாக்குறை நிலவியதால், அறுவை சிகிச்சைகள் கூடுமானவரை தவிர்க்கப்பட்டே வந்தன. மருத்துவமனை சவக்கிடங்களில் 70 சடலங்கள் குவிந்து கிடந்தன.

அக்டோபர் 21ம் திகதி- தீபாவளி தினம்.

யாழ் கோட்டையில் இருந்து சகட்டுமேனிக்கு ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. வைத்தியசாலைச் சுற்றுவட்டாரத்தினுள்ளும் ஷெல்கள் விழ ஆரம்பித்திருந்தன

காலை 11.30 மணியளவில் யாழ் மருத்துவமனையின் வெளி நோயாளர் சிகிட்சைப் பிரிவுக் கட்டிடத்தின் மீது ஒரு ஷெல் விழுந்து வெடித்தது.

நண்பகல் 1.30 மணியளவில் மற்றொரு ஷெல் யாழ் வைத்தியசாலையில் 8ம் நம்பர் வார்டில் விழுந்து வெடித்தது. அதில் அங்கு தங்கியிருந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த 7 நோயாளர்கள் கொல்லப்பட்டார்கள்.

மாலை நான்கு மணியளவில் இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனைக்குள் நுழைந்தது. இந்திய இராணுவ வீரர்களின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

ஒரு வைத்தியர் கூறுகின்றார்:

அன்று யாழ் மருத்துவமனையினுள் நடைபெற்ற சம்பவம் பற்றி அப்பொழுது அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்த வைத்தியரொருவர் இவ்வாறு கூறுகின்றார்:

நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். 7ம் நம்பர் வார்ட்டை காலி செய்துவிட்டு வந்த நோயாளர்களும் அங்கு இருந்தர்கள்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் படிப்படியாக எங்களுக்கு அருகில் வந்துகொண்டிருப்பதை எங்களால் கேட்க முடிந்தது. இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும், அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எங்களுடன் இருந்த டாக்டர் கணேசரெத்தினம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் வார்டுகளில்தான் தங்கி இருந்தார்கள்.

சூட்டுச் சத்தம் இப்பொழுது மிகவும் அருகில் வந்துவிட்டிருந்தது. எங்களைச் சுற்றியிருந்த அபாயத்தை உணர்ந்து எல்லோரும் அப்படியே தரையில் விழுந்து படுத்துவிட்டோம்.

சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்தது இந்திய இராணுவம். அங்கு நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்தான் அவர்கள் கண்களில் முதலில் பட்டார்கள். மக்களைக் கண்டதும் உடனடியாக அவர்கள் மீது சரமாரியாகச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.

நோயாளிகள் சூடுபட்டு செத்து விழுவதை கண்களால் கண்டோம்.

விரலைக் கூட அசைக்காமல் இறந்துபோனவர்களைப் போல தரையில் விழுந்து கிடந்தோம். இறந்து போனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது, எங்களையும் அவற்றோடு போட்டு எரித்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று முழு நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்கள் கேட்டன.

எங்களது தங்குமிடம் அமைந்திருக்கும் மேல்மாடியில் இந்தியப் படையினர் நடமாடும் சத்தம் கேட்டது. மறுநாட் காலை 11 மணிவரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம்.

சடலங்களின் நடுவில்:

அன்றைய தினத்தில் யாழ் மருத்துவமனையில் இருந்த மற்றொருவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்:

இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளர் அலுவலகத்திற்குள்ளும், வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் கண்டபடி சுட ஆரம்பித்தார்கள்.

என்னோடு பணிபுரிந்த பல ஊழியர்கள் இந்தியப் படையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல்களில் அகப்பட்டு இறப்பதைக் கண்டேன். எனது சக ஊழியர் ஒருவர் என்னிடம் இரகசியமா கூறினார்:

அப்படியே அசையாமல் படுத்துக் கிடவுங்கள்.

அன்று இரவு முழுவதும் இம்மி கூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக் கிடந்தோம்.

ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் இந்தியப் படையினரின் காதுகளில் விழுந்தவிடும். அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார். அவரது மெல்லிய முனகல்கூட ஒரு இந்தியப்படையினனது காதில் விழுந்துவிட்டது. ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான்.

அந்த மேற்பார்வையாளரும், அவரது அருகில் கிடந்தவர்களும் பலியானார்கள். அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.

இன்னொரு இடத்தில் கைகளை உயர்த்தியபடி ஒருவர் எழுந்து உரக்கக் கத்தினார்: நாங்கள் அப்பாவிகள், இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு… அவர் உரத்துச் செல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மீது ஒரு கைக்குண்டை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் உடல் சிதறிப் பலியானார்கள்.

நாங்கள் சரணடைகிறோம்..

இரவு கடந்து போய் காலையாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.

தாங்கள் யார் என்று அடையாளம் காண்பித்துக் கொண்டு இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்துவிடுவது உசிதமானது|| என்று கூடவந்த தாதிமாரிடம் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.

கைகளை மேலே தூக்கிக்கொண்டு “நாங்கள் சரணடைகின்றோம்…. நாங்கள் ஒன்றுமே அறியாத டாக்டர்களும், நார்சுகளும்தான்.. என்று உரத்துக்கூறிபடி அவர்கள் நடந்து வந்தார்கள்.

டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் வரும் வரை இந்தியப் படையினர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியப் படையினரை நோக்கி நம்பிக்கையோடு சென்றார்.

இந்தியப் படையினரை டாக்டர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே டாக்டர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த நார்சுகள் படுகாயமடைந்தார்கள்.

மருத்துவமனையில் சிக்கிவிட்ட குழந்தைகளையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த உன்னதரான மனிதர் டாக்டர் சிவபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார்.

உயிர் பிழைத்தவர்கள் பிணங்களைப் போன்று நடித்து மறுநாள் 11மணிவரை பிணங்களின் நடுவில் கிடந்தார்கள்.

இதேபோன்று மற்றொரு மருத்தவரான டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார். இவ்வாறு அந்த வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தர்.

இந்திய அதிகாரியின் வருகை:

அங்கிருந்த வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்திய படையினருக்கு யார்-எவர் என்ற அக்கறை இல்லை. கண்களில் பட்டவர்களெல்லாம் எதிரிகளாகவே தெரிந்தார்கள். சுட்டுத் தள்ளத் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில் என்ன செய்வது என்று எவருக்குமே புரியவில்லை.

அந்தச் சந்தர்ப்பத்தில் மறுநாள் காலை, அதாவது 22ம் திகதி நன்பகலளவில் ஒரு இந்திய உயரதிகாரி யாழ் வைத்தியசாலையினுள் விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் வந்த தோரணை, மற்றய சிப்பாய்கள் அந்த அதிகாரிக்கு வழங்கிய மரியாதை, ஹிந்தி மொழியில் அவர் மேற்கொண்ட மிரட்டல்கள், இவை அனைத்தையுமே பிணங்கள் போன்று தரையில் கிடந்த வைத்தியர் ஒருவர் அவதாணித்தார்.

நடைபெற்ற சம்பங்கள் பற்றி அங்கு நின்ற சிப்பாய்களிடம் அந்த அதிகாரி கேள்வி கேட்பது புரிந்தது. நடைபெற்ற சம்பவங்களில் அந்த அதிகாரி திருப்தி அடையவில்லை என்பதும் அந்த அதிகாரியின் பேச்சு தொணியில் இருந்து புரிந்தது. அந்த அதிகாரி விரைவில் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார் போன்றே நிலமை காணப்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பாத ஒரு வைத்திய அதிகாரி திடீரென்று எழுந்து அந்த இராணுவ அதிகாரியிடம் தங்களின் நிலை பற்றி அழுதபடி தெரிவித்தார்.  என்ன நினைத்தாரோ அந்த அதிகாரி, அந்த வைத்தியரின் பேச்சை நிதானத்துடன் செவிமடுத்தார்.

எதற்கும் பயப்படவேண்டாம் என்று வைத்தியரை அசுவாசப்படுத்திய அந்த இராணுவ அதிகாரி, வைத்தியசாலையில் இருந்த மற்றவர்களை அழைக்கும்படி கூறினார்.

அந்த வைத்திய அதிகாரியும், வைத்தியசாலையின் பல இடங்களிலும் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு மறைந்திருந்த மற்றவர்களை வெளியில் வரும்படி கூவி அழைத்தார்.

பிணங்களின் மத்தியில் இருந்தும், பூட்டிய அலுமாரிகளின் உள்ளிருந்தும், கூரைகளின் மறைவில் இருந்தும், பழைய பொருட்கள் வைக்கும் இடங்களில் இருந்தும் பலர் அங்குவந்து சேர்ந்தார்கள்.

அதன்பின்னரே அவர்களுக்கு உயிர் வந்தது.  உயிர் வந்தது என்று கூறுவதைவிட உயிர் பிச்சை கிடைத்தது என்று கூறுவது பொறுத்தமாக இருக்கும். அந்த உயிர்ப்பிச்சை இந்தியப் படையினரிடம் இருந்து கிடைக்கவில்லை. முதல் நாள் இரவு முவதும் அவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்துதான் கிடைத்தது.

அங்கு திரண்டுவந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களைப் பார்த்து அந்த இந்திய அதிகாரி ஒரு கேள்வியைக் கேட்டார்: ~~எதற்காக புலிகளை வைத்தியசாலையினுள் மறைத்து வைத்தீர்கள்?

அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

அந்த இராணுவ அதிகாரி அடுத்துக் கூறிய வசனம் அவர்களை மேலும் ஆச்சரியமடைய வைத்தது: ~~இங்கே பாருங்கள் எத்தனை புலிகளை எங்களது படைவீரர்கள் இங்கே சுட்டு வீழ்த்தியிருக்கின்றார்கள்? “மருத்துமனை போன்ற ஒரு இடத்தை யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா? அங்கிருந்த வைத்திய சாலை ஊழியர்களுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. ஆடிப்போய்விட்டார்கள்.

புலிகளை தாங்கள் மருத்துமனைக்குள் ஒளித்து வைத்திருந்தது போலவும், அதனால்தான் இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்து அந்தப் புலிகளை எல்லாம் அழித்துவிட்டது போலவும் அந்த அதிகாரி கூறுவதையும், அதற்கு காரணமாக அங்கிருந்த வைத்தியசாலை அதிகாரிகளையும், ஊழியர்களையும் குற்றம் சுமத்துவதையும் – அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலை.

அங்கு வெள்ளை ஆடைகளுடனும், ஸ்தெதஸ் கோப்புக்களுடனும், வீழ்ந்து கிடக்கும் வைத்தியசேவை ஊழியர்கள் எல்லாம் புலிகளா? அந்த இடம் பூராவும் உடல் சிதறிப் பலியாகியிருந்த தலை நரைத்த வயோதிபர்கள், சேலை அணிந்த பெண்மணிகள், குழந்தைகள் அனைவருமே புலிகளா? கதறி அழவேண்டும் போலிருந்தது.

அந்த இந்தியப் படை அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து, இந்தக் கேள்விகளையெல்லாம் அவரது மண்டையில் உறைப்பது போன்று கேட்கவேண்டும் போல் இருந்தது.  ஆனால் அவர்களது உயிர்கள் அந்தக் கணத்தில் அந்த இந்திய அதிகாரியின் கருனையிலேயே தங்கியிருந்தது.  அவர்கள் எதுவும் பேசவில்லை. தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி மௌனமாக நின்றார்கள்.

தன்னை ஒருவாறு அசுவாசப்படுத்திக் கொண்ட ஒரு வைத்திய அதிகாரி, துணிவை வரவழைத்துக் கொண்டு மிகவும் பணிவான குரலில் கூறினார்: ~~என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்த போது உண்மையிலேயே இங்கு புலிகள் எவரும் இருக்கவில்லை. வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து எங்கள் அறிவுக்கெட்டியவரை புலிகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்ததாகத் தெரியவில்லை.||

அந்த வைத்திய அதிகாரியைத் தொடர்ந்து வேறு சிலரும் ~புலிகள் வைத்திய சாலைக்குள் இருக்கவில்லை என்பதை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தார்கள்.

அமைதியாக அவற்றைச் செவிமடுத்த அந்த இந்தியப் படை அதிகாரி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் : அப்படியென்றால் நான் பொய் கூறுகின்றேனா? நான் என்ன பொய்யனா?||

அந்த இந்தியப்படை அதிகாரியின் கண்கள் சிவந்து காணப்பட்டன.

avalam17.jpg

avalam171.jpg

avalam172.jpg

அவலங்கள் தொடரும்….

http://www.nirajdavid.com/இந்திய-அதிகாரியின்-கருணை/


யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான விபரங்களை கடந்த வாரம் வரிவாகப் பார்த்திருந்தோம். இந்தியப் படையினர் யாழ் வைத்தியசாலையில் மேற்கொண்டிருந்த இந்தப் படுகொலைகள் உலகத்தின் கண்களில் இருந்து பெருமளவு மறைக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 21ம் திகதி தீபாவளி தினத்தன்றே இந்தப் படுகொலைகள் நடைபெற்றன.

அசுரனை அழித்த தினமாகவே இந்துக்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுவது வழக்கம். அப்பாவிகளை அழிக்கும் தினமாக அந்த தீபாவளி தினத்தை இந்தியப்படையினர் அன்று யாழ் வைத்தியசாலையில் கொன்று ஆடி மகிழ்ந்திருந்தார்கள்.

யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் கொலை வெறித் தாண்டவம் ஆடிமுடித்ததும் ஆஜானுபாகுவான ஒரு இந்திய இராணுவ உயரதிகாரி வைத்தியசாலையினுள் நுழைந்தார். உயிர்தப்பி எஞ்சியிருந்த வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் போன்றவர்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தியப் படையினர் எந்தப் பிழையும் அங்கு செய்யவில்லை என்ற தொனியில் அவரது உரையாடல்கள் அமைந்திருந்தன. வைத்தியசாலையில் புலிகள் மறைந்திருந்து தாக்குதல்கள் நடாத்தியதாலேயே இத்தனை அனர்த்தங்களும் நடைபெற்றதாக அவர் அங்கு தெரிவித்திருந்தார். இந்தியப் படையினர் வேறு வழியில்லாமலேயே வைத்தியசாலைக்குள் நுழையவேண்டி ஏற்பட்டதாகவும், புலிகளுடன் சண்டையிட்டு இத்தனை புலிகளைக் கொல்லவேண்டி இருந்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த 16 மணி நேரமாக வைத்தியசாலைக்குள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த நேரடியாகவே கண்டுகொண்டிருந்த மக்களுக்கு அந்த அதிகாரி கூறுவது அப்பட்டமான பொய் என்பது நன்றாகவே தெரியும். அந்த அதிகாரி மீது அவர்களுக்கு கோபம் கோபமாக வந்தது. அவரது முகத்தில் காறி உமிழவேண்டும் போன்று அவர்களுக்குத் தோன்றியது.  ஆனால், அந்த அதிகாரி கூறிய அப்பட்டமான பொய்யைக் கேட்டுக்கொண்டு மௌனமாக இருப்பதைத் தவிர அங்கிருந்தவர்களால் எதுவும் செய்யமுடியாது இருந்தது.

ஏனெனில் அங்கிருந்த அத்தனை பேர்களின் உயிர்களும், அந்த இந்திய அதிகாரி வழங்கும் உயிர் பிச்சையில்தான் தங்கியிருந்தது. எப்படியாவது அன்றைய தினம் அங்கிருந்து தப்பிவிட்டால் போதும் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் நினைத்தார்கள்.

இத்தனைக்கும் அந்த அதிகாரி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது, 21 வைத்தியசாலை ஊழியர்கள் இந்தியப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தர்கள். டாக்டர் ஏ.சிவபாதசுந்தரம், டாக்டர் கே.பரிமேலழகர், டாக்டர் கே. கணேஷரெட்ணம், மற்றும் மூன்று மருத்து தாதிகள் உட்பட 21 வைத்தயசாலை ஊழியர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.  அதைவிட 47 நோயாளர்கள் கண் பிதுங்கிய நிலையிலும், மண்டை சிதறிய நிலையிலும் அங்கு பிணமாகக் கிடந்தார்கள்.

சிலர் நோயாளர் கட்டில்களில் படுத்திருந்தபடியே துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரை விட்டிருந்தார்கள். அப்படியிருக்க அந்த இந்திய அதிகாரியோ தனது தரப்பின் பிழையை மறைக்கும் நோக்குடன் பேசிக்கொண்டே சென்றார்.

தனது பேச்சை முடித்துக்கொண்டு திருப்தியுடன் திரும்பினார் – தனது படையினரை அழைத்துக்கொண்டு. அந்த இந்திய இராணுவ அதிகாரியின் பெயர் கேணல் ப்ரார்.

இந்தியப் படையினர் அவர் தலைமையில்தான் அன்றைய தினம் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். ஆயுதத்தினால் மட்டுமே பேசத்தெரிந்த மனித இயந்திரங்களான சிப்பாய்களை விரும்பியபடி வெறித்தனமாட ஏவிவிட்ட அந்த அதிகாரி, தமது படைவீரர்களின் செயலை நியாயப்படுத்திவிட்டு திருப்தியுடன் திரும்பினார்.

உலகிலேயே மிகச் சிறந்த தத்துவ ஞானிகளையும், அகிம்சா நெறிகளையும், பண்பாடுகளையும், தன்னகத்தே கொண்டுள்ளது என்று பேசிக்கொண்டு பஞ்சமா பாதகங்களின் பாசறையாய்த் திகழும் பாரதத்தின் சுயவடிவம் அந்த அதிகாரியின் உருவில் தோன்றியதாக வைத்தியசாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவர் பின்னர் தெரிவித்திருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அவர்களுள் ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்:

’’அதுவரை நெஞ்சத்தில் அடக்கிவைத்திருந்த துயரமெல்லாம் வெடித்து அழுகையாக வெளிவந்தது. உயிர் பிழைத்து நின்ற டாக்டர்களும், தாதியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாய்விட்டு ஓ…! என்று கதறி அழுதார்கள். நாம் எமது படிப்பு, தகுதி அனைத்தையும் மறந்து அந்தக் கனத்தில் அனைவரும் குழந்தைகளாக இருந்தோம். முதல்நாள்வரை மற்றவர்கள் உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஓடிஓடி ஓயாது உழைத்த எமது வைத்தியசாலையின் எமது குடும்ப ஊழியர்களை, உயிரற்ற சடலங்களாய் சிதைந்து கருகிய அரைகுறை உடல்களாய் அங்கு காணும்போது பொங்கி உடைப்பெடுத்து வந்த அழுகையை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.. யாரை யார் தேற்றுவது???

அப்பொழுதுதான் ஒரு கடமையின் குரல் அங்கு உறுதியுடன் ஒலித்தது.

“அழுதது போதும். இனி இங்கு யாருமே அழ வேண்டாம். அழுவதால் எதுவித பயனும் இல்லை. இனி நாங்கள் செய்யவேண்டியது என்வென்று பார்க்க வேண்டும். இன்னும் இங்கு குற்றுயிராய்க் கிடக்கின்றவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதை உடனடியாகச் செய்வோம்.“ அந்த வைத்தியரின் குரலுக்கு அங்கிருந்த அனைவரும் கட்டுப்பட்டார்கள்.

ஆவேசம் வந்தவர்கள் போன்று அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமையினைத் தொடர ஆரம்பித்தார்கள். குற்றுயிராய் கிடந்தவர்களது உயிரைக் காப்பாற்றும் பணியினை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். பிணமாகக் கிடந்தவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அகற்றினார்கள்.

வைத்தியசாலையினுள் இறந்தவர்கள், மற்றும் வைத்தியசாலைச் சுற்று வட்டத்தில் இறந்தவர்கள் என்று நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் திரட்டப்பட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எந்த உடலையும் மரணச் சடங்கிற்காக வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்று இந்திய இராணுவம் கண்டிப்பாக கட்டளை பிறப்பித்திருந்தது.

இறந்தவர்களை பார்ப்பதற்கென்று வெளியில் இருந்து உறவினர்கள் உள்வருவதற்கும் இந்திய இராணுவம் அனுமதியளிக்கவில்லை.

புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக என்று வைக்கப்பட்டிருந்த மரங்கள் அன்று இறந்தவர்களை தகணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

வைத்தியசாலையில் இந்தியர்கள்:

சம்பவம் நடைபெற்ற தினம் முதல் இந்தியப் படையினரின் பூரன கட்டுப்பாட்டிலேயே யாழ் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது.

வைத்தியசாலையின் செயற்படும் விஸ்தீரணம் இந்தியப் படையினரால் சுருக்கப்பட்டது. இந்தியப் படையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒரு சிறிய பிரதேசத்தில் மட்டுமே நோயாளர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.

புதிதாக இந்திய இராணுவ வைத்தியர்கள் தமது சேவையை யாழ் வைத்தியசாலையில் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க வைத்தியர்களும், தாதிகளும் யாழ் மக்களுக்கு வைத்திய சேவை புரிய வந்ததாகக் கூறிக்கொண்டு, காயமடைந்து வரும் இந்தியப் படை ஜவான்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

பழிவாங்கல் நடவடிக்கை.

இந்தியப் படையினர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய அவலம் பற்றி அடுத்ததாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி யாழ் கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் முகமாக இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு யாழ் கொக்குவில் அகதி முகாமை நோக்கி நகர ஆரம்பித்தது.

அந்தப் படைப்பிரிவுக்கு தலமைதாங்கிய இந்தியப்படை அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.

ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் மற்றொரு அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான இந்திய ஜவான்கள் கம்பீரமாக விரைந்துகொண்டிருந்தார்கள்.

அவலங்கள் தொடரும்….

http://www.nirajdavi…காரியின்-கருணை/


யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 19) நிராஜ் டேவிட்

கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது இந்தியத் துருப்புக்கள் மேற்கொண்ட கொலை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றி அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரில் நிச்சயம் பகிரப்பட்டேயாக வேண்டும்.

கொக்குவில் சம்பவம் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது.

யாழ் கொக்குவில் பகுதிக்குள் கவசவாகனங்கள் சகிதமாக இந்தியத் துருப்புக்கள் உள்நுழைந்தபோது, அங்கிருந்த பெரும்பாண்மையான பொதுமக்கள் கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே தஞ்சமடைந்திருந்தார்கள்.

கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் சுமார் ஏழாயிரம் அகதிகள் வரையில் அப்பொழுது தங்கியிருந்தார்கள். மூன்றுமாடிக் கட்டிடத்தைக் கொண்ட அந்தக் கல்லூரியின் முகப்பில் அகதி முகாம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிப்புப்பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் மற்றய அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் வேண்டும் என்றே செல் தாக்குதல் நடாத்தியிருந்த விடயம் கொக்குவில் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால், அகதி முகாம் என்றமட்டில் அங்கு தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு ஆபத்து எதுவும் இருக்காது என்றே அங்கிருந்த பெரியவர்கள் நினைத்தார்கள்.

இந்த விடயத்தைக் கூறி அங்கிருந்த மற்றவர்களையும் ஆறுதல்படுத்த முற்பட்டார்கள். 25.10.1987 நன்பகல் 2 மணியளவில் இந்தியப் படையின் யுத்தத்தாங்கி ஒன்று அகதிமுகாம் வாசலில் வந்து நின்றது.

சங்கிலிச் சக்கரத்தில் நகர்ந்து வந்த டாங்கி முகாமை நெருங்கும் சத்தம் அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே கேட்டது. தமிழர்களுக்கே உரிய இயல்பான விடுப்புப் பர்க்கும் ஆர்வத்தில், என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கென்று ஒரு தொகுதி மக்கள் முண்டியடித்துக்கொண்டு முகாம் வாசலுக்கு சென்றார்கள்.

கல்லூரிச் சுவர் ஓரமாக நின்று வேறு சிலர் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முன்பாக வந்து நின்ற இந்தியப் படையினரின் யுத்தத்தாங்கி சற்று நேரம் அமைதியான நின்றது.

டாங்கியில் இருந்த இந்தியப் படையினர் தம்மை வேடிக்கை பார்க்கும் மக்களை நிதானமாக அவதானித்தார்கள்.

அந்த டாங்கியில் இந்தியப் படை உயரதிகாரியான கேணல் மிஸ்ரா இருந்தார். அகதிமுகாம் நிலவரத்தை அவர் நிதானமாக அவதானித்தார். அகதி முகாம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்ட பெயர்ப் பலகையையும் அவர் கண்கள் காணத் தவறவில்லை.

தாக்குதல்:

திடீரென்று இந்தியப் படை யுத்தத்தாங்கியின் சுடுகுழல் இந்துக் கல்லூரியை நோக்கி மெதுவாகத் திரும்ப ஆரம்பதித்தது.

ஆர்வக் கோளாறு காரணமாக அகதிமுகாம் வாசலுக்கு வந்தவர்கள், இந்தியப் படையினரைப் பார்த்து கையசைத்தவர்கள், பரிதாபமாக நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் – இவர்களை நோக்கி டாங்கியின் சுடுகுழல் குறிவைத்தது.

அப்பொழுதுகூட எவரும் இந்தியப் படையினர் இப்படியான ஒரு கரியத்தை செய்வதற்குத் துணிவார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. திடீர் என்று தாங்கியில் இருந்து அடுத்து அடுத்து செல்கள் ஏவப்பட்டன.

சற்று முன்னர் அங்கு நிலவிய அசாதாரணமான அமைதியும், இந்தியப் படை டாங்கியின் நகர்வும் ஏதோ அசம்பாவிதம் ஒன்று அங்கு நடைபெறப்போகின்றது என்பதை அங்கிருந்த சில பெரிசுகள் மனங்களில் எச்சரிக்கை செய்திருந்தது. எனினும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்திய டாங்கியில் இருந்து ஏவப்பட்ட செல் ஒன்று கல்லூரி வகுப்பறை சுவரின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வகுப்பறையினுள் விழுந்து வெடித்தது. அந்த வகுப்பறையினுள் அடைக்கலமாகியிருந்த 24 அகதிகள் துடிதுடித்து உயிரிழந்தார்கள். முகாம் அல்லோல்ல கல்லோலப்பட்டது.

உயிர் தப்பியவர்களுக்கு முதலுதவி வழங்கச் சில ஓடித்திரிந்தார்கள். ஆனால் முகாம் மீது தாக்குதல் நடாத்திய அந்த யுத்தத்தாங்கி தாக்குல் நிலையெடுத்து தொடர்ந்து அங்கு தரித்து நின்றது. அதனால் வெளியில் எவராலும் செல்லமுடியவில்லை.

பயம், பதட்டம், பரிதாபம் – அந்த இடமே நடுங்கிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று அங்கிருந்த எவருக்குமே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் முகாமை நோக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கல்லூரி சுவரில் பட்டு செல் வெளியிலேயே வெடித்துவிட்டதால், உள்ளே இருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த அகதிமுகாம் இந்தியப் படையினரின் முற்றுகைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது.

முகாமினுள் இருந்தவர்களுக்கு எந்தவித உணவும் கிடைக்காது மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குலினால் பலியானவர்களை அடக்கம் செய்வதற்கு பாடசாலை வளாகத்தினுள் குழி ஒன்றை வெட்டும் பணியில் அங்கிருந்த சிலர் ஈடுபட்டார்கள்.

உடல் சிதறிப் பலியானவர்களை சனநெருக்கடிமிக்க முகாமினுள் தொடர்ந்து வைத்திருப்பதை அங்கிருந்த பலர் விரும்பவில்லை. வகுப்பறைகளில் இருந்த கரும்பலகைகளில் பலியானவர்களின் உடல்களைக் கிடத்தி, தோண்டப்பட்ட குழியினுள் ஒன்றாகவே போட்டு மூடினார்கள்.

இந்தியப் படையினர் மீண்டும் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற பயத்தில் அங்கிருந்தவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்திருந்தார்கள்.

இந்திய டாங்கிகளின் சுடுகுழல்களால் குறிவைக்கப்பட்ட நிலையில் அன்றைய இரவு கடந்தது. அன்று அங்கு முகாமில் தங்கியிருந்த எவருமே தூங்கவில்லை.

உயிர் தப்பிக்கத் திட்டம்:

மறுநாள் காலை விடிந்தது.

அங்கிருந்த ஏழாயிரம் பேரின் உயிர்களும் ஊசலாடியபடிதான் மறுநாள் காலை விடிந்தது. அந்த முகாமில் தங்கியிருந்த ஒரு பெரியவர் அங்கிருந்த மற்றவர்களிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார்.

அங்கு தங்கியிருந்த அகதிகள் சிலரை அழைத்த அவர், “நாங்கள் அகதிகள் என்று தெரியாமல்தான் இந்தியப் படையினர் எம்மீது தாக்குதல்கள் நடாத்தியிருக்கக்கூடும். முதலில் நாங்கள் அகதிகள்தான் என்கின்ற விடயத்தை எம்மை முற்றுகையிட்டிருக்கும் இந்தியப்படையினருக்குத் தெரியப்படுத்துவோம்” என்று அந்தப் பெரியவர் ஆலோசனை தெரிவித்தார்.

ஏற்கனவே கடுப்புடன் இருந்த சிலர் பெரியவரின் அந்தக் கருத்துக்குச் செவிசாய்க்கவில்லை. “அதுதான் அகதி முகாம் என்று கொட்டை எழுத்தில் எழுதி கல்லூரியின் முன்பு அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருக்கின்றதே” என்று சலித்துக் கொண்டார்கள்.

அதற்கு அந்தப் பெரியவர், “பதட்டத்திலும், கோபத்திலும் காணப்படும் படையினருக்கு அந்தப் பெயர்ப்பலகையை வாசிக்க நேரம் இருந்திருக்காது. ஒருவேனை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பெயர்ப்பலகையை வாசிப்பதற்கு அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். எனவே நாங்கள் அகதிகள்தான் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.

“அப்படியானால் என்ன செய்வது? நாங்கள் அகதிகள் என்று கூறிக்கொண்டு குதிப்பதா?” அங்கிருந்த சில இளைஞர்கள் கோபத்துடன் கேட்டார்கள்.

பெரியவரும் விடுவதாக இல்லை. “தம்பிகள் கூறுவது சரி. நாங்கள் அகதிகள் என்பதை உரக்கக் கூற வேண்டும். குறிப்பாகப் பெண்கள் தாம் அகதிகள் என்று கத்த வேண்டும். அதேவேளை என்னைப் போன்ற வயது முதிந்தவர்கள் கைகளில் வெள்ளைக்கொடிகளை அசைத்து நாங்கள் அப்பாவிகள் என்று காண்பிக்க வேண்டும். பெடியள், தலைக்கு டை அடித்து பெடியள் போன்று நடிப்பவர்கள் அனைவரும் மரியாதையாக வகுப்பறைகளுள் சென்றுவிடவேண்டும்” என்று தனது திட்டத்தை அழுத்தமாகத் தெரிவித்தார்.

வேறு வழி எதுவும் தெரியாமல் தவித்தவர்கள் பலவிதமான விவாதங்களின் பின்னர் அந்தப் பெரியவரின் திட்டப்படி செயற்படுவதற்குச் சம்மதித்தார்கள்.

“நாங்கள் அகதிகள்”

26ஆம் திகதி காலை புலர்ந்து சிறிது நேரத்தில் அந்த அகதி முகாமில் இருந்த பல நுற்றுக் கணக்கான பெண்களும், சிறுவர்களும், “நாங்கள் அகதிகள் என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் கத்தினார்கள்.

பெரியவர்கள் தமது வேஷ்டிகளையும், வெள்ளைச் சட்டைகளையும் கம்புகளில் கட்டி கொடிகளாக்கி இந்திய இராணுவத்தினரை நோக்கி அசைத்துக் காண்பித்தார்கள். நல்ல பலன் கிடைத்தது.

தமது வாகனங்களை விட்டிறங்கிய சில இந்தியப் படையினர் அகதி முகாமிற்குள் வந்தார்கள். மிகவும் எச்சரிக்கையுடன் துப்பாக்கிகளை நீட்டியபடிதான் அவர்கள் உள்ளே வந்தர்கள். அகதி முகாமில் இருந்த எவரும் தாம் இருந்த இடங்களை விட்டு அசையவே இல்லை.

இந்தியப்படையினர் அகதிமுகாமை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அகதி முகாமில் பரவலாக நிலை எடுத்து நின்றார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியப் படை உயரதிகாரி ஒருவர் அகதி முகாமினுள் ஆயுதம் தாங்கிய தனது மெய்பாதுகாவலர்களுடன் நுழைந்தார்.

அந்த அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.

அதிகாரத்துடனும், மிரட்டலுடனும் அங்கிருந்த அகதிகளைப் பார்த்து கர்ஜித்தார்.நீங்கள் உங்கள் கூடவே மறைத்து வைத்திருக்கும் புலிகளை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுவேன். அவர்களிடத்தில் உங்களுக்கு பயம் என்றால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தையாவது எங்களுக்கு காட்டித்தாருங்கள். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்.”

அங்கிருந்த அகதிகள் முகத்தில் ஈ ஆடவில்லை.

”இந்த மனுசனுக்கு என்ன விசர் கிசர் பிடித்துவிட்டதோ?” கோபத்துடன் முனுமுனுத்த ஒரு தாயின் கையை, அருகில் நின்ற அவரது பேத்தி கிள்ளிவிட்டார். பேத்தியைத் திரும்பிப் பார்த்த அந்த அம்மாவை ஒரு முறைப்பு முறைத்து அவளது வாயை அடக்கினாள். அங்கிருந்த பலரது மனநிலையும் அப்படித்தான் இருந்தது.

சிலர் துணிவை வரவளைத்துக் கொண்டு ”இது முழுக்க முழுக்க அதிகள் மட்டுமே தங்கியிருக்கும் இடம். இங்கு புலிகள் எவருமே கிடையாது” என்று கூறினார்கள்.

அதற்கு அந்த அதிகாரி, “அப்படியானால் நேற்று இரவு இந்த இடத்தில் இருந்து எங்களுடன் சண்டையிட்டது யார்? எமது பீரங்கிப் படையினர் தாக்கிப் பல புலிகள் கொல்லப்பட்டிருந்தார்களே. அவர்களின் உடல்களையெல்லாம் புலிகள்தானே சுமந்துகொண்டு தப்பிச் சென்றார்கள்?” என்று தொடர்ந்து கேள்வியெழுப்பினார்.

இறந்தவர்கள் பொதுமக்கள். அவர்களை வேறு வழியில்லாமல் நாங்கள் இங்கேயே புதைத்துள்ளோம். நீங்கள் எங்களைச் சந்தேகித்தால் வாருங்கள் தோண்டிக் காண்பிக்கின்றோம்” என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

அதிகாரிக்கு உண்மை விளங்கியிருந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு தனது பிழையை ஒப்புக்கொள்ள அவர் தயாரில்லை. ”சரி உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட மக்கள், “இங்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் தேவையான உணவு இங்கில்லை. அவசரத்தில் உணவை எடுத்துவரத் தவறிவிட்டோம். நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் சென்று இங்கிருப்பவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுத்து வருவதற்கு எங்களை அனுமதிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்கள்.

வெளியில் போகவே முடியாது என்று ஒரேயடியாக மறுத்த அந்த அதிகாரி உணவு கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் அங்கிருந்த அகதிகளுக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. மிருந்த பசியால் அங்கிருந்தவர்கள் வாடினார்கள்.

அதேவேளை, பசியில் துடிதுடித்த அந்த அகதிகளை வைத்து வேடிக்கை காண்பிக்கவென மற்றெரு இந்தியப்படை அதிகாரி அங்கு வருகை தந்தார்.

அவலங்கள் தொடரும்…

http://www.nirajdavi…காரியின்-கருணை/


 

 

புலிகளின் தாக்குதலை படம்பிடித்த இந்திய ஊடகவியலாளர் (அவலங்களின் அத்தியாயங்கள்- 20) –நிராஜ் டேவிட்

Image-27-189x300.jpg25.10.87 இல், கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் தங்கியிருந்த ஏழாயிரம் அகதிகளைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

அகதிமுகாமின் வாசலில் வந்து நின்ற இந்தியப் படையினரின் யுத்தத்தாங்கி மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டு அகதிமுகாமில் தங்கியிருந்த 24 அகதிகள் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணித்தார்கள்.

கொக்குவில் அகதி முகாமை முற்றுகைக்குள் மூன்று நாட்களாக வைத்திருந்த இந்தியப் படையினர் அங்கிருந்தவர்களுக்கு உணவை வழங்க மறுத்திருந்தார்கள்.

அங்கிருந்தவர்கள் வெளியில் சென்று உணவை எடுத்து வருவதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

அங்கு தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பசியால் துடிதுடித்தார்கள்.

பசிக்கொடுமையால் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் ஓலமிட்டன.

ஆனால் அவை எதைப்பற்றியும் இந்தியப் படையினர் அக்கறை செலுத்தவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகக் கழிந்தது.

மூன்று நாட்களின் பின்னர் ஒரு இந்தியப்படை அதிகாரி அந்த முகாமிற்கு வந்தார். தாங்கள் பசியால் செத்துக்கொண்டிருப்பதை அகதிகள் அந்த இந்திய அதிகாரிக்குத் தெரியப்படுத்தினார்கள்.

அப்படியா? என்று கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி, நாங்களும் பல நாட்களாக ஒன்றும் சாப்பிடவில்லை என்று அசட்டையாகப் பதிலளித்தார்.

பின்னர் பசியால் வாடிய அந்த அகதிகளைப் பார்த்துக் கூறினார்,  உங்களுக்குச் சாப்பாடு வேண்டுமானால், இந்தப் பாடசாலையின் அருகில் இருக்கும் கோயில் தேரின் திரையை அகற்றவேண்டும் என்று இறுமாப்புடன் தெரிவித்தார்.

உடனடியாகவே அங்கிருந்தவர்கள் அந்தத் தேரின் மறைப்பை நீக்கினார்கள்.

பசிக் கொடுமையின் காரணமாக, தமது உத்தரவுகளுக்கெல்லாம் அங்கிருந்த மக்கள் ஆடுவதை புன்சிரிப்புடன் இந்தியப் படையினர் வேடிக்கை பார்த்தபடி நின்றார்கள்.

கொக்குவில் சண்டை:

கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினர் அதிக கடுமையாய் நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது.

கொக்குவில் பிரதேசத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்களில் பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்தியப் படையினர் மக்களுடன் அதிக ஆத்திரத்துடன் நடந்துகொண்டதற்கும், பழிவாங்கும் உணர்வுடன் நடந்துகொண்டதற்கும் அதுவே காரணமாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

sri.jpg

யாழ் நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் காங்கேசன்துறை வீதி வழியாக முன்னேறிய இந்திய இராணுவத்தின் ஒரு படையணி குளப்பிட்டிச் சந்திக்கு அருகில் ஆனைக்கோட்டைக்குச் செல்லும் பாதையில் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது.

கண்ணிவெடித் தாக்குதல் இடம்பெற்று அதில் அகப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக, அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த சில இந்தியப் படைவீரர்கள் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இருபதிற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டார்கள்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் சியாம் தேக்வாணியும் புலிகளின் பாதுகாப்பில் களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் எடுத்திருந்த புகைப்படங்களே பின்னர் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. (இத்துடன் காணப்படும் புகைப்படங்களும் கொக்குவில் சண்டைகளின் போது எடுக்கப்பட்டவைகளே.)

இதேபோன்று கொக்குவில் பூநாறி மரத்தடியிலும் இந்தியப் படையினர் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றிருந்தது.

இந்தத் தாக்குதலிலும் பதினைந்திற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இதுபோன்று கொக்குவில் பிரதேசத்தில் முன்னேறிய இந்தியப் படையினர் மீது பல அதிரடித்தாக்குதல்களைப் புலிகள் தொடுத்திருந்தார்கள்.

வீதிகள் எங்கும் இந்தியப் படையினரின் சடலங்கள் காணப்பட்டன.

இந்த சம்பவங்களினால் ஆத்திரமடைந்த நிலையில் இருந்த இந்தியப் படையினர், தமது இயலாமையின் வெளிப்பாடாகவே கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிமுகாம் மீது தாக்குதல் நடாத்தியிருந்தார்கள். அகதிகளையும் கண்ணியக் குறைவாக நடாத்தத் தலைப்பட்டார்கள்.

இந்தியப் படை எதிர்கொண்ட சிக்கல்கள்

இந்தியப் படையினர் மிகுந்த இழப்புகளுடன் யாழ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும், அவர்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

முதலாவதாக காயமடைந்த இந்தியப் படைவீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஏனெனில் இந்தியப் படையினர் எதிர்பார்த்ததை விட சண்டைகளில் காயமடைந்தவர்களின் தொகை பல மடங்கு அதிகமாக காணப்பட்டது.

யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான முதற்கட்ட சண்டைகளில் இந்தியப் படையினர் தரப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டிருந்தது.

இது இந்தியப் படைத்தரப்பு எதிர்பாராத ஒன்று.

காயமடைந்த இந்தியப் படையினருக்கு சிகிச்சைகள் வழங்குவதில் இந்திய அதிகாரிகள் அதிக சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சைகளையும், முதலுதவிகளையும் யாழ் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ வைத்தியப் பிரிவிலும், பலாலி இராணுவத்தளத்தில் இருந்த இராணுவ வைத்தியசாலையிலும் மேற்கொண்ட போதிலும், மேலதிக சத்திரசிகிச்சைகள் வழங்குவதற்கு அங்கிருந்த வசதிகள் போதுமானதாக இருக்கவில்லை.

குறிப்பாக கைவசம் இருந்த இரத்தச் சேமிப்பு காயமடைந்தவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

அடுத்ததாக, காயமடைந்து சிகிச்சைக்காக வரும் படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே இருந்தன.

அதிலும் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த இந்தியப் படையினரில் அதிகமானவர்கள் புலிகளின் பொறிவெடிகளில் அகப்பட்டுத் தமது கால்களை இழந்து வந்தவர்கள். இதனால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல், வைத்திய நிலையங்களிலேயே அவர்களைத் தங்கவைத்து சிகிட்சை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது இரண்டு வகைகளில் இந்தியப் படையினருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

முதலாவது இடவசதி.

அடுத்தது, அவயவங்களை இழந்து தவித்த படையினரை அடிக்கடி பார்க்கும் மற்றய படையினருக்கு ஏற்படக்கூடியதான உளவியல் தாக்கம்.

இவை இரண்டையும் மனதில் கொண்டு காயமடைந்து வரும் படையினரை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டிருந்தது.

காயமடைந்து வந்தவர்கள் அவசரஅவசரமாகச் சென்னை தாம்பரத்தில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்கள்.

பலாலியில் இருந்து விமனத்தில் சென்னைக்கு அரை மணித்தியாலங்களுக்குள் சென்றுவிடலாம் என்பதாலும், இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டுப்பாட்டு தலைமையகம் சென்னையிலேயே நிறுவப்பட்டிருந்ததாலும், காயமடைந்து வரும் இந்தியப் படையினரைக் கவனிக்கும் ஏற்பாடுகளும் சென்னையிலேயே செய்யப்பட்டிருந்தன.

ஆனால் சென்னையிலும் காமடைந்து வந்த படையினருக்கு சிகிச்சை அளிப்பதில் மற்றொரு பிரச்சனையை இந்தியப் படைத்துறைத் தலைமை எதிர்கொண்டது.

சென்னை தாம்பரத்திலிருந்த இந்திய இராணுவ வைத்தியசாலையில் 100 படுக்கைகள் மட்டுமே இருந்தன. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆரம்பச் சண்டைகளில் 1039 இந்தியப் படைவீரர்கள் காயமடைந்திருந்தார்கள்.

பொறி வெடிகளில் அகப்பட்டவர்களுக்கு மாதக்கணக்கில் சிகிச்சையளிக்கவேண்டி இருந்ததால், மேலதிகமாகக் காயமடைந்து கொண்டுவரப்பட்டவர்களுக்குச் சிகிச்சைகள் அளிப்பதில் பெருத்த சிரமங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது.

ஸ்ரீலங்காப் படையினரைப் போன்று காயமடைந்த இந்தியப் படையினரை பொது மருத்துவமனைகளில் பொதுமக்களுடன் வைத்துச் சிகிச்சை அளிக்கும் வழக்கம் இந்தியாவில் கிடையாது.

அதிக அளவில் இந்தியப் படையினர் காயமடைந்து வர ஆரம்பிக்க அவர்களை கீழே நிலங்களில் கிடத்தி சிகிச்சை அளிக்கவேண்டி ஏற்பட்டது.

காயமடைந்த இந்தியப் படைவீரர்களைப் பார்வையிடவென இந்திய இராணுவ வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த உறவினர்களுக்கும், தொண்டர் அமைப்புக்களுக்கும் இது அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்குக்கூட காய்ச்சல் வரும் போதிலெல்லாம் முதல்தரச் சிகிச்சை வழங்கும் இந்திய அரசு, நாட்டுக்காக சண்டையிட்டு அவயவங்களை இழந்து வரும் படைவீரர்களை நிலத்தில் கிடத்தி கேவலப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து காயமடைந்து வரும் இந்தியப் படையினரை பங்களூர் மற்றும் புனே போன்ற இடங்களில் உள்ள இராணுவ வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்து சிகிச்சை வழங்கினார்கள்.

சென்னையிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கும்; அவசர அவசரமாக மேலதிக படுக்கைகள், உபகரணங்கள் வரவளைக்கப்பட்டு காயமடைந்து வரும் இந்தியப் படை வீரர்களுக்கு நல்ல முறையிலான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியப் படையினர் முகத்தில் பூசப்பட்ட கரி:

இதற்கிடையில் யாழ் நகரை இந்தியப் படையினர் கைப்பற்றிய போதும் இந்தியப் படையினர் முகத்தில் புலிகள் கரியைப் பூசியிருந்தார்கள்.

யாழ் நரில் இருந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை தாம் சுற்றிவளைத்து விட்டதாகவும், பிரபாகரனும் அவரது சாரன் கட்டிய குழுவினரும் தம்மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே சண்டைகள் ஆரம்பமாக காலம் முதற்கொண்டு இந்தியப் படை அதிகாரிகள் தெரிவித்து வந்தார்கள்.

இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அந்தக் காலகட்டங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் கூட, இந்தியப் படையினரின் பூரண முற்றுகைக்குள்ளாகி இருக்கும் விடுதலைப் புலிகள் சரணடைவார்களா அல்லது சயனைட் உட்கொண்டு தமது உயிர்களை மாய்த்துக் கொள்வார்களா என்றுதான் விவாதம் நடைபெற்று வந்தது.

ஏதே ஒரு வகையில் யாழ் நகரை இந்தியப் படையினர் கைப்பற்றும் போது, பெருமளவில் புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைப்பற்றப்படுவார்கள், அல்லது கொல்லப்படுவார்கள் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாழ்நகர் தம்மால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக இந்தியப் படையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்தபோது, அங்கிருந்த புலிகள் பற்றி அவர்கள் எதுவுமே கூறவில்லை.

அங்கிருந்த விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது?|| என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

நாங்கள் சுற்றிவளைக்கும் போது அங்கு நின்று சண்டை பிடித்துக்கொண்டிருந்த புலிகள், நாங்கள் யாழ் நகரைக் கைப்பற்றியபோது திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்கள் என்று இந்திய இராணுவத்தின் அந்த உத்தியோகபூர்வ பேச்சாளர் தடுமாற்றத்தில் வாய் தவறி உளறித்தொலைத்துவிட்டார்.

அந்த இந்திய இராணுவ அதிகாரியின் அறிக்கை ஊடங்களில் மிகுந்து கேலிக்குள்ளாகி வெளியிடப்பட்டது.

யாழ் நகரைக் கைப்பற்றியபோதும், புலிகளையோ அல்லது புலிகளின் தலைவரையோ கைப்பற்றமுடியாமல் போன இந்தியப் படையினரின் கையாலாகத்தனத்தை இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கேலி செய்தன.

புதிய தலைமை:

இது இவ்வாறு இருக்க, யாழ் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அதிக இழப்புக்கள் ஏற்பட்டதற்காக, பவான் இராணுவ நடவடிக்கையை நெறிப்படுத்திய லெப்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கிற்கு எதிராக விசாரணை நடைபெற்றது.

அவர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் மிக முக்கிய அதிகாரிகள் ஐவர் தமது படைஅணிகளுடன் யாழ் குடாவிற்கு அவசரஅவசரமாக அனுப்பிவைக்கப்பட்டர்கள்.

ஈழத் தமிழர்கள் மீது மிக மோசமான கொடுமைகளைப் புரிந்த அந்த ஐந்து அதிகாரிகள் பற்றியும் அவர்கள் தலைமையில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைப் பிரிவுகள் பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.

அந்த ஐந்து அதிகாரிகளுடன் வந்த இந்தியப் படையணிகள் ஈழத்தில் நிகழ்த்திய அவலங்கள் பற்றியும் தொடர்ந்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அவலங்கள் தொடரும்…


 

யாழ்பாணத்தில் களமிறக்கப்பட்ட புதிய இராணுவ அதிகாரிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 21) –நிராஜ் டேவிட்

யாழ் குடாவைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்ததால், இந்திய அமைதிகாக்கும் படையினரின் இராணுவ நடவடிக்கைகளை முன்நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்த லெப்.ஜெனரல் ஹரிகிரத் சிங் அவசர அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியப் படைத்தரப்பில் ஏற்பட்டிருந்த அதிகளவிலான உயிரிழப்பிற்காக அவர் இராணுவ தலைமையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். (அவர் தனது ஆரம்ப கட்டத் தோல்விகளுக்காகத் தெரிவித்த காரணங்கள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.)

கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் மீளவும் அவர் யாழ் குடாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ் குடாவில் இராணுவ நடவடிக்கையை முனைப்புடன் தொடர்வதற்கு இந்திய இராணுத்தில் கடமையாற்றும் முக்கிய படைத்துறை அதிகாரிகளை, அவர்களுடைய படையணிகளுடன் சேர்த்து அனுப்புவதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை தீர்மானம் எடுத்தது.

புலிகளை எப்படியாவது தோற்கடித்து யாழ்பாணத்தை முற்றாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்தியப் படைத்துறை அவசரம் காண்பித்தது.

இந்தியாவின் அரசியல் தலைமை அந்த அளவிற்கு அழுத்தத்தை இந்தியப் படைத்துறை மீது பிரயோகித்திருந்தது.

எந்த அதிகாரிகள் இலங்கைக்கு புதிதாக அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற விவாதம் எழுந்த போது, மிகவும் சிறந்த அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும் என்பது இந்தியப் பிரதமரின் உத்தரவாக இருந்தது.

இராணுவத் தலைமைப்பீடம் தமது தெரிவுகளை முடித்துவிட்டு, தாம் அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்ததற்கான காரணங்களையும் இந்தியப் பிரதமரிடம் அறிவித்திருந்தார்கள்.

இந்திய இராணுவத் தலைமை தெரிவுசெய்த உயரதிகாரிகள் இவர்கள்தான்:

பிரிகேடியர் குல்வந்த் சிங்

மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட்

பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன்

பிரிகேடியர் மஜித் சிங்

பிரிகேடியர் சாமி ராம்

இலங்கையின் வடக்கு-கிழக்கில் புலிகளை முற்றாகத் தோற்கடித்து இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய படைத்துறைத் தலைமையால் தெரிவுசெய்யப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் இவர்கள்தான்.

இதில் பிரிகேடியர் குல்வந்த்சிங் இந்திய இராணுவத்தின் 54வது டிவிசனின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் (Deputy General Officer Commanding 54 division). இவர் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பத்தில் கவசவாகனப் பிரிவில் (Armoured Corps) ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து ராஜ்புத்தான ரைபிள் (Rajputana Rifles) படையணியிலும் நீண்ட காலம் உயரதிகாரியாகக் கடமையாற்றி நீண்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இந்தியப் படைத்துறையில் மிக நீண்ட அனுபவத்தைப் பெற்ற ஒருவர் என்பதுடன் படைத்துறை உயரதிகாரிகளிடையே மிகவும் மதிக்கப்பட்ட ஒருவரும் கூட. எதிர்காலத்தில் இந்திய இராணுவ பிரதம தளபதி பதவி இவருக்கே வழங்கப்படும் என்று அந்தக் காலகட்டத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டவர்.

மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் (Senior Staff Officer) இந்தியாவில் மிகவும் பிரபல்யமான இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய இராணுவத்தின் 8வது கூர்க்கா ரைபிள்ஸ் (Gorgha Rifles) படையணியில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். இங்கிலாந்தில் உள்ள Institute of Strategic Studies என்ற மிகவும் பிரபல்யமான இராணுவக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான். (பின்நாட்களில் ஹரிக்கிரத் சிங் இற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் படையின் பொறுப்புக்களைக் கையேற்ற இராணுவ அதிகாரி இவர்தான்)

பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன் இவரும் இராணுவத் துறையில் நிறையக் கற்ற ஒருவர். அமெரிக்காவிலுள்ள Fort Leavenworth அதிகாரிகள் கல்லூரியில் இராணுவத்துறை தொடர்பான உயர்கற்கையை மேற்கொண்டவர். இந்தியாவின் National Defence College இல் அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோதே, இவர் இலங்கையில் பணியாற்றுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்;தார்.

பிரிகேடியர் மஜித்சிங் மராத்திய ரெஜிமென்டில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்னர் இந்தியாவின் ஜம்மு மற்றும் கஷ்மீரில் அந்த பிரிகேட்டை தலைமைதாங்கி பல களம் கண்டவர். இந்திய இராணுவத்தின் 41வது காலட் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை இவர்; ஏற்று சில மாதங்களே ஆகியிருந்தது. நீண்டகாலமாக பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்துவந்த இவர் இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெண்மணி ஒருவரை மணம் புரிந்திருந்தார்.

பிரிகேடியர் சாமி ராம் -இந்திய இராணுவத்தின் Grenadiers என்ற பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி எதிர்-கெரில்லாப் போரியலில் (Counter Insurgency) நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்.

இந்த ஐந்து இராணுவ உயரதிகாரிகளும் தமது பிரத்தியோப் படையணிகளுடன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

புலிகளது தொடர் தாக்குதல்களை கட்டுப்படுத்தி வடக்கு-கிழக்கை இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களது நோக்கமாக இருந்தது.

புதிய படை அணிகள் AN-32, IL-76, AN-12B ரக விமானங்கள் மூலம் பலாலி இராணுவத்தளத்தில் தரையிறக்கப்பட்டன.  கடல் மூலம் கனரக ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

புதிய படை அணிகளைக் களமிறக்கி விடுதலைப்புலிகளை முற்றாகவே அழித்தொழிக்கும் ஒரு புதிய வியூகத்தை உருவாக்கியது இந்திய இராணுவம். யாழ்குடா மாத்திரமல்ல வடக்கு கிழக்கு முழுவதிலும், அங்கு புலிகள் பதுங்கிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட காடுகளிலும் கூட விடுதலைப் புலிகளை தேடிச் சென்று அழிக்கும் நோக்கத்துடன் இந்தியப் படை புதிய வியூகங்களை வகுத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா போன்றோரை கொலைசெய்யும் திட்டமும் இந்தியப்படையினரின் அந்தப் புதிய வியூகத்தில் அடங்கியிருந்தது.

இந்திய இராணுவம் உருவாக்கிய அந்தப் புதிய வியூகம் பற்றியும், அந்தப் புதிய வியூகத்தில் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்ட சவால்கள் பற்றியும், புதிதாகக் களமிறக்கப்பட்ட இந்தியப் படையணிகளினால் விடுதலைப் புலிகள் சந்தித்த நெருக்கடிகள் பற்றியும் தொடர்ந்துவரும் வாரங்களில் சற்று விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியப் படையினரால் யாழ் நகரம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்திய இராணுவம் மேற்கொண்ட நகர்வுகள், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மேற்கொண்ட புலனாய்வு மற்றும் உளவியல் நடவடிக்கைகள், அந்தக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தின் சில பிரிவுகள் ஈழ மண்ணில் மிக மிக இரகசியமாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பற்றியும்கூட நாம் சற்று ஆழமாகப் பார்க்க இருக்கின்றோம்.

இந்திய இராணுவ நடவடிக்கைகளின் பொழுது ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட சொல்லமுடியாத அவலங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள், இந்தியப் படையினர் தமது கைக்கூலிகளை வைத்து மேற்கொண்ட படுகொலைகள்.. இவைகள் பற்றியும் கூட நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

இன்றைக்குத் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகப் பச்சாத்தாபப்பட்டுக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் பல பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் இந்தியப் படையினரின் கைக்கூலிகளாக எப்படி எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்றும், அவர்கள் என்னென்னவகையிலான அவலங்களையெல்லாம் ஈழத்தமிழருக்கு விளைவித்தார்கள் என்றும் நாம் இந்தத் தொடரில் ஆதாரங்களுடன் ஆராய இருக்கின்றோம்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர் அனுபவித்த சொல்லொனா அவலங்களின் ஒரு தொகுப்பாக வெளிவந்துகொண்டிருக்கும் அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதற்கான திருத்தங்களையும், இந்தத் தொடர் பற்றிய விமர்சனங்களையும் தயவுசெய்து எங்களுக்கு அனுப்பிவைத்தால், இந்தத் தொடரை மேலும் சிறப்பாக்க உதவியாக இருக்கும்.

அவலங்கள் தொடரும்…

http://www.nirajdavid.com/யாழ்பாணத்தில்-களமிறக்கப/


இந்தியப்படை அதிகாரியை ஆச்சரியப்படவைத்த புலிகளின் தொடர்பாடல்முறைகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 22) –நிராஜ் டேவிட்

உலகில் உள்ள நாடுகளிடையே காணப்படுகின்ற இராணுவச் சமநிலை (Military Balance) தொடர்பாக அக்காலகட்டத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. லன்டனில் உள்ள International Institute of Strategic Studies அந்த வெளியீட்டை மேற்கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாட்டினதும் சனத்தொகையும் அந்த நாடுகளின் இராணுவக் கட்டமைப்பையும் ஆளணி வலு மற்றும் சராசரி உள்ளூர் இராணுவ உபகரன உற்பத்திகளையும் (Gross Domestic Product -GDP) ஒப்பிட்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சிறந்த இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படிச் சர்வதேச அரங்கில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியா ஒரு சிறு கெரில்லாக் குழு என்று சர்வதேச சமூகம் நினைத்துக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளிடம் மரண அடி வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பது இந்தியாவின் அரசியல் தலைமையைப் பொறுத்தவரை மிகவும் அவமானகரமான ஒரு விடயமாகவே தோன்றியது. அதனாலேயே இந்திய இராணுவத்திலேயே மிகவும் முக்கிய இராணுவ அதிகாரிகளை அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைக்க இந்தியத் தலைமை தீர்மாணித்தது. அத்தோடு அந்த அதிகாரிகளின் பிரத்தியோகப் படை அணிகளையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

படையினருக்கு ஏற்பட்ட தடுமாற்றம்.

இவ்வாறு அவசரக் கோலத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப் படை அணிகள் ஏற்கனவே இலங்கையில் நிலைகொண்டு செயற்பட்டுக்கொண்டிருந்த படையணிகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள். இது வேறு பல சிக்கல்களை இந்தியப் படையினருக்கு ஏற்படுத்தியிருந்தது.

ஒரு பிரதேசத்தைச் சுற்றிவழைக்க அல்லது ஒரு பிரதேசத்தில் தாக்குதல் நடாத்த இரண்டு வௌ;வேறு அணிகள் செல்லும் ஒரு வித்தியாசமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதுவும் இரண்டு வௌ;வேறு அதிகாரிகளின் தலைமையில் இரண்டு படையணிகள் ஒரே பிரதேசத்தில் நடவடிக்கையில் ஈடுபடுவது வேடிக்கையாக இருந்தது.

இது பல சிக்கல்களை இந்தியப் படையினருக்கு ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் மறுதரப்பைக் குற்றம் சுமத்துவதும் ஒரு தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளும் இடங்களில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படவேண்டும் என்று மற்றய தரப்பினர் விரும்பும் நிலையும் இந்தியப் படையினர் மத்தியில் தவிர்கமுடியாமல் ஏற்பட்டது.

இப்படியான ஒரு சூழலை விடுதலைப் புலிகளும் தமது நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தினரிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும் ஆயுதங்களைக் கைப்பற்றவும் இந்தியப் படைகளிடையே காணப்பட்ட இதுபோன்ற ஓட்டைகளை விடுதலைப் புலிகள் மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கெண்டார்கள்.

ஆனாலும் இந்தியப் படைக் கட்டமைப்பில் காணப்பட்ட இந்த ஓட்டைகள் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வெகு விரைவில் இதுபோன்ற பிரச்சினைகளை நிவர்த்திசெய்துகொண்ட இந்தியப் படையினர் முழு வேகத்தில் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

இருந்தபோதிலும் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கெரில்லா உத்திகள் இந்தியப் படையினருக்கு புதிதான விடயங்களாகவே இருந்தன. இந்தியப் படையினர் பெற்றிருந்த பயிற்சிகளினுள் உள்ளடங்காதவைகளாகவே காணப்பட்டன.

புலிகளின் ஒவ்வொரு தாக்குதலும் இந்தியப் படையினருக்கு ஒவ்வொரு அதிர்ச்சி வைத்தியங்களாகவே இருந்தன. புலிகளின் தாக்குதல் யுக்திகள் அவர்களின் தொடர்பாடல் முறைகள் சகல மட்ட மக்களும் புலிகளுக்கு வழங்கிவந்த ஆதரவுகள் – என்பன இந்தியப் படையினரை ஆச்சரியங்களின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தன.

கேணலின் ஆச்சரியம்:

இந்திய அமைதிகாக்கும் படையில் முதன்முதலில் அனுப்பப்பட்ட முக்கிய அதிகாரிகளுள் ஒருவர்தான் கேணல் ஜோன் டெயிலர்.

இந்தியப் படையினருடனான சண்டைக் காலங்களில் விடுதலைப் புலிகள் கையாண்ட தொடர்பாடல் முறைகள் தன்னை மிகவும் அதிசயிக்க வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

பின்னாளில் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

விடுதலைப் புலிகள் தம்மிடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்கு மேற்கொண்ட தந்திரங்கள் உண்மையிலேயே எங்களை அதிசயிக்க வைத்திருந்தன. இந்தியப் படையினரின் நடமாட்டம் பற்றி மற்றய உறுப்பினர்களை எச்சரிக்கும் நோக்குடன் அவர்கள் செயற்பட்டவிதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்தியப் படையினர் ரோந்து நடவடிக்கைகளுக்காக ஒரு முகாமில் இருந்து புறப்பட ஆரம்பித்ததும் இந்தியப் படையினர் செல்லும் திசையில் இருக்கும் கோயில் அல்லது தேவாலயத்தில் மணி ஒலிக்கும். அதுவும் அந்த ரோந்து அணியில் குறிப்பாக எத்தனை இந்தியப் படை வீரர்கள் செல்லுகின்றார்களோ அத்தனை மணி ஒலிகள் எழுப்பப்படும். உதாரணத்திற்கு ஆறு படைவீரர்கள் சென்றால் ஆறுதடவைகள் மணி ஒலிக்கும். பத்து வீரர்கள் சென்றால் பத்து தடவைகள் மணி ஒலிக்கும். ஆரம்பத்தில் இதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விடயத்தை நாங்கள் புரிந்துகொண்டபோது எங்கள் வீரர்களில் பலரை நாங்கள் இழந்துவிட்டிருந்தோம்.

இதேபோன்று விடுதலைப் புலிகள் தம்மிடையேயான செய்திப் பரிமாற்றத்திற்கு அவர்களது சக்தி வாய்ந்ததும் சிறந்த வலையமைப்பைக் கொண்டதுமான தொலைத்தொடர்பு கருவிகளுக்கு மேலாக பொதுமக்களைப் பயன்படுத்திய விதமும் மிகவும் வியக்கத்தக்கது. இந்தியப் படையினர் ஒரு கிராமம் அல்லது ஒரு நகரத்தினூடாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அந்த விபரங்களை ஒரு சிறு துண்டில் எழுதி ஒரு சிறுவனிடம் அல்லது சிறுமியிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அந்தச் சிறுவனும் ரோந்து சென்றுகொண்டிருக்கும் படையினருக்கு கையசைத்து விட்டு அவர்களைக் கடந்து சென்று அந்த வீதியில் உள்ள மற்றொரு சிறுவனிடம் அல்லது சிறுமியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுவார். பின்னர் அந்த நபர் அந்தக் கடிதத்தை அடுத்த தெருவிலுள்ள இன்னொருவரிடம் ஒப்படைப்பார்.

இவ்வாறு கைமாறும் கடிதம் கடைசியில் உரிய இடத்தை அடைந்துவிடும். ஒவ்வொரு 150 மீற்றருக்கும் ஒவ்வொரு சிறுவன் பணிக்கமர்த்தப்பட்டிருப்பான். ஒருவேளை இந்தச் சிறுவர்களில் ஒருவரை படையினர் கைப்பற்றினால் கூட அந்தச் சிறுவனுக்கு அந்த வீதியின் எல்லையில் உள்ள மற்றச் சிறுவன் பற்றிய விபரம் மட்டுமே தெரிந்திருக்கும். வேறு விடயம் எதுவுமே தெரிந்திருக்கமாட்டாது. அந்த அளவிற்கு புலிகள் திட்டமிட்டு தமது நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதேபோன்று தொலைத்தொடர்புக் கருவிகள் மூலமாகப் புலிகள் செய்திகளைப் பரிமாறும்போது கூட பல புதிய யுக்திகளைக் கையாண்டார்கள்.

தொலைத் தொடர்புக் கருவிகளின் அலைவரிசைகளை அடிக்கடி மாற்றியபடியே அவர்கள் முக்கியமான செய்திகளைப் பரிமாறுவார்கள். ஒருவேளை அந்தத் தொலைத்தொடர்பு சம்பாசனையை நாங்கள் இடைமறித்துக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட சங்கேத பாஷையில் அமைந்த ஒரு வரியை மட்டுமே எங்களால் கேட்கக்கூடியதாக இருக்கும். மிகுதி செய்திகள் வௌ;வேறு அலைவரிசைகளிலேயே பரிமாறப்பட்டிருக்கும்.

புலிகளின் இதுபோன்ற யுக்திகள் எங்களுக்கு புதிதாகவும் புதிராகவுமே இருந்தன|| என்று கேணல் ஜோன் டெயிலர் இணையத்தளத்திற்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

தொடரும்…


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply