உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர் – (அவலங்களின் அத்தியாயங்கள் 23-33

உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 23) –நிராஜ் டேவிட்

 யாழ் குடாவில் இந்திய இராணுவத்தின் படை நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கென்று ஐந்து முக்கிய இராணுவ அதிகாரிகள் தமது படையணிகளுடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி இத்தொடரின் 21வது பாகத்தில் ஆராய்ந்திருந்தோம்.

இதில் பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவிற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவு பற்றியும் அந்தப் படைப்பிரிவு மேற்கொண்ட படுகொலைகள் பற்றியும் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்திய இராணுவத்தில் முன்னணி வகித்த ஐந்து உயரதிகாரிகள் அவசர அவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் அவர்களது பிரத்தியோகப் படை அணிகளும் இலங்கையில் வந்திறங்கின.

பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவும் யாழ் குடாவில் வந்திறங்கியது. இந்தப் படைப்பிரிவு ஏற்கனவே களத்தில் இருந்த இந்தியப் படையின் 72வது காலாட் படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது. யாழ்பாணத்தின் வடகிழக்கு திசையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இந்த படைப்பிரிவுகளுக்கு பிரிகேடியர் மஜித் சிங் நேரடியாகவே தலைமை தாங்கினார்.

கவச வாகனம் ஒன்றினுள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு களமுனைகளில் படை நடவடிக்கைகளை இவர் நெறிப்படுத்தி வந்தார்.

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது போன்று கள முனைகளில் பல்வேறு தர்மசங்கட நிலைகள் இந்தியப் படையினருக்குத் தோன்றியிருந்தன. ஏற்கனவே களத்தில் இருந்த 72வது படைப்பிரிவு புதிதாக வந்திறங்கிய 41வது பிரிவுடன் இணைக்கப்பட்டது மட்டுமல்லாது புதிதாக வந்திறங்கிய 41வது படைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் மஜித் இனது தலைமையின் கீழ் செயற்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது இந்தியப் படையணியினரிடையே பலத்த குழப்ப நிலையைத் தோற்றுவித்திருந்தது.

பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் மட்டத் தளபதிகள் பிரிகேடியர் மஜித்தின் கட்டளைகளை ஏற்பதற்கு நேரடியாகவே எதிர்ப்பைவெளிப்படுத்தியிருந்தார்கள். யாழ் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாது பிரிகேடியர் மஜித் இடும் கட்டளைகள் இந்திய ஜவான்களின் உயிர்களை அநியாயமாகவே காவுகொண்டுவிடும் என்றே அவர்கள் நினைத்தார்கள். பயப்பட்டார்கள்.

புதிதாக களம் இறங்கியிருந்த பிரிகேடியர் மஜித்திற்கு கெரில்லாத் தாக்குதல்களில் புலிகள் எந்த அளவிற்கு முன்னேற்றகரமானவர்கள் என்பது பற்றி எந்தவித அறிவும் இருக்கவில்லை. சகட்டுமேனிக்கு உத்தரவுகளாக இட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தார்.

கடந்த சில நாட்களாக களத்தில் இருந்து புலிகளின் புதிய தாக்குதல் முறைகளினால் திகைப்படைந்திருந்த இந்திய ஜவான்களுக்கு அது முட்டாள்தனமாகவேபட்டது. பிரிகேடியர் உத்தரவுப்படி முன்னேறுவது என்பது நிச்சயம் தம்மை கொலைக்களத்திற்கு கொண்டு செல்லும் ஒரு செயல் என்றே நினைத்தார்கள். உத்தரவிற்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். சில சதி வேலைகளிலும் இறங்கினார்கள். கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு எதிரில் புலிகள் வந்ததாகத் தெரிவித்தார்கள். பொதுமக்கள் மீது தமது இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.

இந்திய ஜவான்களின் உண்மை நிலையைப் புரிந்துகொண்ட இரண்டாம் மட்டத்தளபதிகள் பிரிகேடியரிடம் நிலமையை விளக்க முயன்றார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய களநிலை யதார்த்தத்தை எடுத்துரைத்தார்கள். ஆனால் எதனையும் கேட்கும் நிலையில் பிரிகேடியர் இருக்கவில்லை. இந்தியப் படையினரின் விஷேட நடவடிக்கைக்குத் தலைமைதாங்க இந்திய இராணுவ மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முக்கிய ஐந்து அதிகாரிகளுள் தானும் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதையிட்டு மிகவும் பெருமைப்பட்ட அந்த உயரதிகாரி தன்மீது இந்திய இராணுவத் தலைமையும் இந்திய அரசியல் தலைமையும் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடிக்க விரும்பவில்லை. எப்படியாவது தனது துணிவைக் களமுனையில் நிரூபித்து பெயர்வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே சென்றார். தனது உத்தரவுகளை சரியானமுறையில் கடைப்பிடிக்காத சில இராணுவ உத்தியோகத்தர்களைப் பதவி நீக்கம் செய்துவிடவும் அவர்

தயங்கவில்லை. அவரின் கீழ் பணியாற்றிய பிரிகேட் மேஜர் (Brigade Major), மற்றும் சமிஞைகளுக்குப் பொறுப்பான அதிகாரி (Signals officer) போன்றவர்களும் இவரால் பதிவி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இறுக்கமாக உத்தரவுகளுடன் அவர் படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். பல வெற்றிகளைக் கண்டார். அவரின் கீழ் இருந்த படையணிகள் வேகமான பல முன்னேற்றங்களைக் கண்டன.

யாழ் படைநடிவடிக்கைகளில் இவர் வெளிப்படுத்தியிருந்த வீரத்தையும், திறமையையும் கருத்தில் கொண்டு பின்நாளில் இவருக்கு வெற்றிகரமான இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற உயர் இராணுவ விருதான மகா வீர சக்ரா (Maha Vir Chakra -MVC) விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றியின் பின்னால்:

ஆனாலும் இவரது வெற்றியின் பின்னால் கவனிக்கப்படாத வேறு பல செய்திகளும் காணப்படவே செய்தன.

பிரிகேடியர் மஜித் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவரின் கீழ் செயற்பட்ட படைஅணியைச் சேர்ந்த 272 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டு அல்லது மோசமாகக் காயம் அடைந்து யுத்தக்களத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.

இது அவரின் கீழ் செயற்பட்ட மொத்தப் படையினரில் 17 வீதம் என்று கூறப்படுகின்றது. அடுத்ததாக யாழ்குடாவில் இந்தியப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல மனிதப் படுகொலைகள் உட்பட வேறு பல மனித அழிவுகளிலும் இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட படையினரே சம்பந்தப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

புலிகளின் அறிவிப்பு

இவை ஒரு புறம் இருக்க, அக்டோபர் 24ம் திகதி விடுதலைப் புலிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியப் படையினரின் மோசமான தாக்குதல்களில் 900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 451 பொதுமக்கள் மிக மோசமாக் காயமடைந்துள்ளதாகவும்ää 144 பாலியல் வல்லுறவுச்

சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

இந்தியப் படையினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

பிரச்சார ரீதியாக புலிகளின் குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை ஒரு வகையில் பாதித்திருந்தாலும் தனது நடவடிக்கைகளின் வீச்சைக் குறைப்பதற்கு இந்தியத் தலைமை சிறிதும் விரும்பவில்லை.

இழப்புக்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் புலிகளை அழித்தொழித்து யாழ் குடாவைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள்|| – என்று புதுடில்லியில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் இந்தியக் களமுனைத் தளபதிகளுக்கு பறந்தன.

யாழ் ரயில் நிலைய தாக்குதல்:

இந்தியப் படையினர் யாழ்பாணத்தில் மேற்கொண்ட மனித படுகொலைகளுள் யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.

இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் 22ம் திகதி இடம்பெற்றது.

யாழ்பாணத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்கள் சுற்றிவழைப்புக்கள் என்பனவற்றால் வீடுகள் பாதுகாப்பான ஒரு இடமாக மக்களுக்கு தென்படவில்லை. வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த அநீதிகள் பற்றி யாழ்மக்கள் மத்தியில் செய்திகள் பரவியிருந்தன. அதனால் வீடுகளில் தங்கியிருக்க மக்கள் பெரிதும் பயந்தார்கள்.

அதேவேளை கோயில் மற்றும் பாடசாலை அகதி முகாம்களும் ஜனவெள்ளத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன. பலர் தங்குவதற்கு ஓரளவு வசதியாகத் தென்பட்ட அதேவேளை மறைவாகவும் இல்லாத இடங்களையெல்லாம் பாதுகாப்பு மையங்களாகக் கருதி அங்கு தஞ்சமடைய ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ் புகையிரத நிலையத்திலும் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் புகையிரத குடிமனையில் தங்கியிருந்த புகையிரத நிலைய ஊழியர்களின் குடும்பங்கள்தான் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடித் தங்கியிருந்தார்கள்.

பின்னர் படிப்படியாக பல குடும்பங்கள் சேர்ந்து நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஒரு அகதி முகாமாகவே யாழ் புகையிரத நிலையம் மாறியிருந்தது. அப்பிரதேசத்தில் இருந்த பெரிய கட்டிடம் என்பதாலும் அது மறைப்பில்லாத கட்டிடம் என்பதாலும் முன்னேறி வரும் இந்தியப் படையினருக்கு அது அகதிகள் தங்கியிருக்கும் ஒரு இடம் என்பது இலகுவாக விளங்கிவிடும். எனவே ஆபத்தில்லை என்று அங்கு வந்து தங்கியிருந்த மக்கள் நினைத்திருந்தார்கள்.

அத்தோடு புகையிரத நிலைய மேடைகளின் இடைநடுவே அமைந்திருந்த சுரங்கப் பாதை ஆபத்திற்கு பாதுகாப்புத் தேடிக்கொள்ள சிறந்த இடம் என்பதால் பலர் புகையிரத நிலையத்தை நல்லதொரு பாதுகாப்பு புகழிடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அத்தோடு புகையிரத நிலையம் யாழ் பிரதான பாதைகளில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாகவே இருந்ததால் அந்தப் பக்கம் இந்தியப் படையினர் வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்றே அங்கு தங்கியிருந்த சுமார் 600 இற்கும் மேற்பட்ட அகதிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்தியப் படையினர் இரயில்; தண்டவாளங்கள் வழியாகவே முன்னேறிக்கொண்டிருந்தது பாவம் அவர்களுக்கு தெரியாது. வீதிகளில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்துக்கொண்டு பதுங்கிருப்பதால் வீதிகளைத் தவிர்த்து இந்தியப் படையினர் கூடிய வரையில் புகையிரத பாதைகளையே உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகளுக்குத் தெரியும்:

ஆனால் இந்தியப்; படையினர் இரயில் பாதைவழியாக முன்னேறிக்கொண்டிருந்த விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர்கள் தொலைத்தொடர்புக் கருவிகள் இந்தியப் படையினரின் நகர்வுகள் பற்றிய விபரங்களை ஒலித்தபடியே இருந்தன.

ஏற்கனவே காங்கேசன்துறையில் இருந்து இரயில் பாதை வழியாகப் பயணம் செய்த இந்தியப்படையினர் கொக்குவில் பிரதேசத்தில் புலிகளினால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த பராக் கெமாண்டோக்களை மீட்டுக்கொண்டு சென்றதை அறிந்த புலிகள்  இரயில் பாதைகளிலும் ஒரு கண்ணை வைத்திருந்தார்கள். இந்தியப் படையினர் தமது முன்னேற்றத்திற்கு இரயில் பாதைகளை நிச்சயம் பயன்படுத்தியே தீருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

புலிகளின் தாக்குதல்:

காங்கேசன் துறை பகுதியில் இருந்து முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் யாழ் புகையிரத நிலையத்தை நெருங்கும் போது புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலுக்கு

உள்ளானார்கள். கண்ணிவெடித்தாக்குதலில் அகப்பட்டு தடுமாறிய இந்தியப் படையினர் மீது அங்கு பதுங்கியிருந்த புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார்கள். இந்தச் சம்பவத்தில் பல இந்தியப் படையினர் கொல்லபட்டார்கள்.

சிறிது நேரம் சண்டை செய்து இந்தியப் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு புலிகள் பின்வாங்கிச் சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது இந்தியப் படையினரின் கோபம் பொதுமக்கள் மீது திரும்பியது. சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டு யாழ் புகையிரத நிலையம் இருந்த பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

பெருமளவு மக்கள் தங்கியிருந்த யாழ் புகையிரத நிலையம் அவர்களது கண்களில் பட்டது. அவர்கள் சுமந்து வந்த 2 மி.மீ. மோட்டார்களை நிலத்தில் நிறுத்தி முதலில் செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

அவர்கள் ஏவிய முதலாவது செல் சரியாக புகையிரத நிலையத்திலேயே விழுந்து வெடித்தது. ஒரு தாயும் மகளும் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்கள்.

தொடர்ந்து ஏவப்பட்ட செல்கள் புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த வீடுகள் தெருக்கள் என்று பல இடங்களிலும் விழுந்து வெடித்தன. புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் அல்லோல்ல கல்லோல்லப்பட்டார்கள். என்னசெய்வதென்று புரியாமல் திகைத்தார்கள்.

புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் சிலர் சென்று பதுங்கிக்கொண்டார்கள். சிலர் பாதுகாப்பான வேறு இடங்களுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். யாழ் ரயில் நிலையத்தில் இரண்டாவது புகையிரதம் நிறுத்தும் மேடைக்குச் செல்லுவதற்காக நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்று இருந்தது. பலர் அந்தச் சுரங்கப்பாதையினுள் சென்று தம்மைக் காப்பாற்றிக்கொண்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். இந்தியப் படையினரின் கைகளில் அகப்பட்டு மடிந்தவர்கள் இவர்கள்தான்.

சுட்டுக்கொண்டே புகையிரத நிலையத்திற்குள் வந்த இந்தியப்படையினர் பொதுமக்களைக் கண்டும் கூட சுடுவதை நிறுத்தவில்லை. நின்றவர்கள்  படுத்துக்கிடந்தவர்கள் ஓடியவர்கள் முழங்கால் படியிட்டு இறைவனை வழிபட்டவர்கள் தங்களுக்கு உயிர்ப் பிச்சை வழங்கும்படி இந்திய வீரர்களிடம் மன்றாடியவர்கள்…. – அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

இந்தச் சம்பவத்தில் சுமார் 50 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.


 

இந்தியப் புலனாய்வுப் பலவீனங்களும், அதன் விளைவுகளும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 24) –நிராஜ் டேவிட்

இந்தியாவையும், அதன் தென்பிராந்தியப் பாதுகாப்பையும் பொறுத்தவரையில் இந்து சமுத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இந்தியாவைப் பாதுகாப்பதாக இருந்தால், இந்து சமுத்திரத்தில் பலமான கட்டுப்பாட்டைச் செலுத்த வேண்டும் என்பதை இந்தியா பல தடவைகள் அனுபவரீதியாவே உணர்ந்திருக்கின்றது.

இந்தியாவின் எந்தவொரு மேலாதிக்க நகர்வுகளானாலும் கூட, அது இந்து சமுத்திரக் கடலில் இந்தியா தனது பலத்தைப் பேணுவதன் மூலமும், தென் இந்தியாவில் பலமான ஒரு இராணுவக் கட்டமைப்பை நிறுவுவதன் மூலமுமே சாத்தியமாகும் என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, இந்தியா மீதான ஐரோப்பிய ஆக்கிரமிப்பு இந்தக் கடல் வழியாகவே ஆரம்பமாகி இருந்தது.

ஐரோப்பிய ஆதிக்கம்

இந்து சமுத்திரக் கடல் வழியாக வந்த ஐரோப்பியர்கள்; 1639 ம் ஆண்டில் சென்னையின் கடற்கரையில் ஒரு சிறிய கோட்டையைக் கட்டி நிலைகொண்டதன் மூலம்; தமது இந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு வித்திட்டிருந்தார்கள்.

1750ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ரொபர்ட் கிளைவ் 500 படையினருடன் சென்று ஆர்கொட்டை (Arcot)  கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தியா மீதான வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு முனைப்புப்பெற ஆரம்பித்தது.

இதேபோன்று 1970களின் ஆரம்பத்தில் இந்து சமுத்திரக் கடல் வழியாக அமெரிக்கா ஏற்படுத்தியிருந்த ஒரு அச்சுறுத்தலும் இந்தக் கடற்பிராந்தியத்தை மிகவும் பலமாகக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு உணர்த்தியிருந்தது.

1971ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் (பங்காளதேஷ் விடுவிப்பு நடவடிக்கை)  யுத்த காலத்தில், பாகிஸ்தானுக்கான தனது ஆதரவை அமெரிக்கா இந்த இந்து சமுத்திரத்தின் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தது.

இந்திய – பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அந்த காலப்பகுதியில், அணுசக்தியில் இயங்கும் USS Enterprises  என்ற அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் ஒன்றின் வழிநடத்தலில் அமெரிக்காவின் விஷேட படையணி ஒன்று இந்து சமுத்திரம் வழியாக இந்தியாவிற்கு அருகில் வந்தது.

வங்காள விரிகுடா பகுதிக்குள் பங்காளதேஷிற்கு அருகாக நடமாடிய அந்தப் படையணி, பாகிஸ்தனுக்கான அமெரிக்காவின் ஆதரவையும், இந்தியாவிற்கான அமெரிக்காவின் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தும் முகமாக செயற்பட்டது.

இந்தியாவை எச்சரிக்கும் விதமாக அமைந்திருந்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்து சமுத்திரத்தில் பலத்துடன் திகழவேண்டியதன் அவசியத்தை இந்தியாவிற்கு மற்றொரு தடவை உணர்த்தியிருந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்து சமுத்திரக் கடற்பரப்பில் இந்தியா பலமான கடற்படைக் கட்டமைப்பை கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், தென் இந்தியாவிலும் இந்தியா தனது பலமான ஒரு படைஅணியை நிறுவவேண்டும் என்றும் இந்திய இராணுவ வல்லுனர்கள் இந்தியாவை வலியுறுத்த ஆரம்பித்திருந்தார்கள்.

இந்து சமுத்திரத்திலும், அதேவேளை இந்தியாவின் தென் பிராந்தியத்திலும் பலமான பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கவேண்டும் என்பது நீண்ட காலமாகவே பல அறிஞர்களாலும் வலியுறுத்தப்பட்டே வருகின்றது.

இந்தியாவின் அலட்சியம்

அத்தோடு இப்பிராந்தியத்தில் இந்தியா தொடர்ந்து பலமுடன் பிராந்திய வல்லரசாகத் திகழ வேண்டுமானால், அயல் நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பல விட்டுக்கொடுப்புக்களுடன் பேணவேண்டும் என்று, 1973 முதல் 1976ம் ஆண்டு வரை இந்தியாவின் கடற்படைத் தளபதியாகக் கடமையாற்றிய அட்மிரல் எஸ்.என்.கோலி தெரிவித்திருந்தார்.

தென் இந்தியாவில் தனது கடற்படைப் பலத்தைப் பெருக்கும் அதேவேளை, சகிப்புத் தன்மையுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகளை இந்தியா தன்னுள் வளர்த்துக்கொள்வதன் மூலமுமே இந்தப் பிரதேசத்தின் பிராந்திய வல்லரசாக அதனால் நிலைக்கமுடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு விடயங்களில் ஒரு விடயத்தை மட்டுமே அது ஓரளவு கரிசனையுடன் நிறைவேற்றியிருந்தது.

அதாவது தனது தென் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தனது படைப்பலத்தைப் பெருக்கும் முயற்சியைத்தான் இந்தியா சிரமேற்கொண்டு நிறைவேற்றியிருந்தது. அயல்நாட்டை கவரும் முயற்சி பற்றி இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அந்த விடயத்தில் இந்தியா அலட்சிய மனோபாவத்துடனனேயே நடந்துகொள்ளத் தலைப்பட்டது. அயல்நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது என்பது இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத ஒரு விடயமாகி இருந்தது. இந்தியாவைச் சூழ உள்ள அனைத்து நாடுகளையும் ஏதோ ஒரு காரணத்தில் பகைத்துக்கொண்டே காலம் தள்ளி வந்தது.

இந்தியா மீட்டுக்கொடுத்த பங்காளதேஷ் கூட இந்தியாவை மிகவும் வெறுக்கும் ஒரு நாடாகவே இருக்கின்றது.

தென் பகுதியில் மிகக் கிட்டிய அயல்நாடான ஸ்ரீலங்காவும் கூட, ஏனோ தெரியவில்லை இந்தியாவை அதிகம் வெறுக்கும் ஒரு நாடாகவே இருந்து வந்தது.

1971இல் இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் நடக்கும் காலகட்டத்தில் தேவையில்லாமல் இந்தியாவிற்கு விரோதமான நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா எடுத்திருந்தது. பாகிஸ்தான் விமானங்கள் ஸ்ரீலங்கா வான்பரப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை ஸ்ரீலங்கா வழங்கியிருந்தது.

சரி ஸ்ரீலங்காவில் இருந்து பிளவுபடத் துடித்த தமிழீழத்துடனாவது நட்பைப் பேனுவதற்கு இந்த்pயா முயற்சித்ததா என்றால், அதற்கும் இந்தியா தயாரில்லாததாகவே நடந்துகொண்டது. ஈழத்தமிழர்களை ஒரு நட்பு சக்தியாகக் கருதாமல், தமிழ் மக்கள் விடயத்தில் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை செய்து அவர்களையும் பகைத்துக்கொண்டது.

படைக் கட்டமைப்பு

மறுபக்கம், இந்தியாவின் தென்பகுதியில் ஒரு பலமான படைக்கட்மைப்பை அமைக்கவேண்டிய தேவையை இந்தியா ஓரளவு நிறைவேற்றியிருந்தது என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த இராணுவக் கவனமும் அதன் வட எல்லைப் பகுதிகளிலேயே தங்கியிருந்த அதேவேளை, தென்பகுதியில் ஒரு பலமான படைக்கட்டமைப்பை அமைப்பதற்கு இந்தியா தவறவில்லை.

தென்பகுதியைப் பலப்படுத்தவேண்டும் என்ற யுத்த வல்லுனர்களின் எச்சரிக்கையைக் கணக்கில் எடுத்து இந்தியா தனது நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.

இந்தியாவின் தென்பகுதியைப் பாதுகாக்கவென்று அக்காலகட்டத்தில் இந்தியா அதன் இராணுவத்தின் 54வது காலட்படைப் பிரிவை நிறுத்தி வைத்திருந்தது. தென் இந்தியாவின் கேரள மானிலத்தின் திருவனந்தபுரத்தில் இந்தப் படைப்பிரிவு நிறுத்திவைக்கபட்டிருந்தது.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் மீது ஏதாவது அவசர அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வதற்கென்றே இந்த 54வது காலட் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விஷேட கடல்வழித் தரையிறக்கத்திற்கென்று சிறப்புப் பயிற்சி பெற்ற ஒரு படைப்பிரிவாகவே இந்தப் படைப்பிரிவு திகழ்ந்து வந்தது.

அத்தோடு சர்வதேச ரீதியான சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இந்தியா இராணுவத்தில் உருவாக்கப்பட்டிருந்த முதலாவது படைப்பிரிவும் இது என்றே கூறப்படுகின்றது.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சின் பிரதேசத்தில் உள்ள இந்திய கடற்படைத்தளத்துடன் தொடர்புபடுத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த 54வது காலட் படைப்பிரிவுதான் இலங்கையில் நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் வந்திறங்கி அதிக இழப்புக்களைச் சந்தித்த படைப்பிரிவும் இதுதான்.

புலனாய்வுப் பலவீனம்

விஷேட பயிற்சிபெற்ற இந்தியாவின் 54வது காலட்படைப் பிரிவு என்ன காரணத்தினால் இலங்கையில் இப்படியானதொரு பின்னடைவைச் சந்திக்கின்றது என்று இந்தியப் படைத்துறைத் தலைமைக்கும், இராணுவ ஆய்வாளர்களுக்கும் அக்கால கட்டத்தில் பெரிய அதிசயமாகவே இருந்தது.

இந்தியப் படையினரின் பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகளின் வீரம், தியாகங்கள், சிறந்த வழி நடத்தல்களே பிரதான காரணம் என்பது உண்மை என்றாலும், இலங்கை தொடர்பான இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளில் காணப்பட்ட பலவீனமும் ஒரு காரணம் என்றே இந்திய இலங்கை விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவந்த ஆய்வாளர்களும், இந்திய – புலிகள் யுத்தத்தில் பங்குபற்றிய அதிகாரிகளும் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் பிரபல போரியல் ஆய்வாரள் ராஜேஷ் கார்டியன் இந்திய புலனாய்வுப் பலவீனங்கள் பற்றி ஒரு விரிவான பார்வையை ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

INDIA’S SRI LANKAN FIASCO என்ற தலைப்பில் ராஜேஷ் கார்டியன் எழுதிய ஆய்வு தொகுதியில், தென் இந்தியப் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா கவலையீனமாக இருந்தது பற்றியும், இலங்கை விடயத்தில் இந்தியா மூக்கை நுழைத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்காவில் இந்தியாவின் புலனாய்வுப் பார்வை ஒன்றும் பெரிய அளவில் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சம்பிரதாய புலனாய்வு நடவடிக்கையை மட்டுமே இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்டு வந்தது என்பதுடன், இலங்கையில் இந்தியா இராணுவ நடவடிக்கையில் இறங்கியபோது இலங்கை விவகாரங்கள் தொடர்பான போதியளவு தரவுகள் இந்தியாவிடம் இருக்கவில்லை என்றும் ராஜேஷ் கார்டியன் மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் இந்தியாவினால் பாரிய வெற்றியை ஈட்ட முடியாமல் போனதற்கு இந்தியாவின் மிகவும் பலவீனமான புலனாய்வு நடவடிக்கைகளே காரணம் என்று, இலங்கையின் களமுனைகளில் இருந்த பல்வேறு படை அதிகாரிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்திய அமைதி காக்கும்படையின் ஒரு முன்னணிப் படை உயரதிகாரியான கேணல் ஜோன் டெயிலர் இந்திய இராணுவத்தின் தோல்விகள் பற்றிக் குறிப்பிடும் போது, எங்களுடைய பெரும்பான்மையான தோல்விகளுக்கு இந்தியத் தரப்பின் மிகவும் பலவீனமான புலனாய்வுத்துறையே காரணமாக இருந்தது.

இலங்கையில் மேற்கொள்ளப்ட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுப் பிரிவினரின் ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டு வந்ததால், மிகவும் பலவீனமாக இருந்த அந்தப் பிரிவே எமது பின்னடைவிற்கான காரணமாகவும் அமைந்திருந்தது.

இலங்கையின் தமிழ் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் பற்றிய சரியானதும், துல்லியமானதுமான தகவல்கள் எங்களிடம் இருக்கவில்லை. வடக்கு, கிழக்கில் இருந்த மற்றைய போராட்ட அமைப்புக்களை விட புலிகள் பலம் மிக்கவர்கள் என்ற தகவல் மாத்திரமே எங்களிடம் இருந்தது.

புலிகளின் தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றியோ, அவர்களிடம் இருந்த வளங்கள் பற்றியோ, அவர்களுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட அமோகமான ஆதரவு பற்றியோ, முக்கியமாக அவர்கள் வசமிருந்த மிகவும் திறமையான புலனாய்வுக் கட்டமைப்பு பற்றியோ எங்களுக்குச் சரியாக எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இதுபோன்ற தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எங்களுக்குத் தந்திருக்கவும் இல்லை என்று அந்த அதிகாரி பின்நாளில் ஒரு இணையத்தளச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனை பிடித்துவிடுவோம்

இதேபோன்று இந்தியப் படை நடவடிக்கையில் பங்குபற்றியிருந்த மற்றொரு முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவுகூர்ந்திருந்தார்: ~~ஐPமுகு ஐ இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ வினது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ‘றோ’ உயரதிகாரி ஒருவர், நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்  என்று அடித்துக் கூறியிருந்தார், என்று அவர் பின்னாட்களில் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், இந்தியப்படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துப்படி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள் என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில் ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்திய இராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, ஒரு இரவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை முடித்துவிடுவோம் என்று தெரிவித்தார்.

இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆனந்த் வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

றோ மேற்கொண்ட சதி

இதேபோன்று இலங்கையில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு இந்திய அதிகாரிகளும், ஈழத்தில் விடுதலைப் புலிகளை இந்தியப் படையினரால் வெற்றிகொள்ள முடியாமல் போனதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவினரையே குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

பல்வேறு விமர்சனங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினரான ‘றோ’, புலிகளை வெற்றி கொள்வதற்கு என்று மற்றொரு நகர்வை எடுக்கத் தீர்மானித்தது.

இந்தியாவிற்கு மேலும் மோசமான அவப்பெயரைத் தேடித்தருவதற்குக் காரணமாக இருந்த இந்தத் தீர்மானத்தை ‘றோ’ துணிச்சலுடன் மேற்கொண்டது.

விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு, மக்களில் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த மாற்றுக் குழுக்களை ஈழ யுத்தத்தில் இந்தியப் படைகளுடன் இணைத்துக் களமிறக்கும் திட்டத்தை இந்திய உளவுப் பிரிவான ‘றோ’ தீட்டியிருந்தது.

ஏற்கனவே இந்தியாவின் ஒரு கூலிப்படையாகவே இருந்து வந்த சில தமிழ் இயக்கங்கள் ஈழயுத்தத்தில் களம் இறக்கப்பட்டன – கூலிக் குழுக்களாக.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் விட்ட மகா பிழைகளுள் மாற்றுத் தமிழ் குழுக்களை களம் இறக்கியதும் ஒன்று என்றே இந்தியப் படை அதிகாரிகள் பலர் பின்நாட்டகளில் விமர்சித்திருந்தார்கள்.

இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வினால் ஈழமண்ணில் களமிறக்கப்பட்ட ஈபிஆர்எல்எப், டெலோ, ஈஎன்டீஎல்எப் போன்ற தமிழ் குழுக்கள் ஈழத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் சமூகவிரோத நடவடிக்கைகள் பற்றியும் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்பதாக இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி அடுத்தவாரம் முதல் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அவலங்கள் தொடரும்…


 

இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 25) –நிராஜ் டேவிட்

  • November 19, 2012
இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு தர்மசங்கடமான நிலை எனக்கு. ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி விரிவாக எழுதுவதா அல்லது….

மேலோட்டமாக ”ஈழத்தில் இந்தியப் படையினர் பாலியல் வன்முறைகள் புரிந்தார்கள்” என்று மட்டும் எழுதிவிட்டு நிறுத்திக்கொள்வதா என்று பலத்த போராட்டமே எனக்குள் ஏற்பட்டது.

ஏனெனில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட பாலியல் கொடூரங்கள் பற்றிய உண்மைகளை எழுதப் போகும் போது, எமது மானத்தமிழ் பெண்கள் பலர் அசௌகரியப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படும். இதனால் இந்த விடயம் பற்றி எந்த அளவிற்கு விபரிப்பது என்று பலத்த தடுமாற்றம் எனக்கு ஏற்பட்டது.

ஈழப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தொடர்பாக பிற்காலத்தில் எந்த ஒரு சமாதானத்திற்கும், அல்லது எந்த ஒரு உடன்பாட்டிற்கும்கூட ஈழத் தமிழர்களால் வரமுடியாமல் போனதற்கு, இந்தியப் படைகள் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

எனவே இந்த விடயம் பற்றி ஓரளவாவது விபரித்தே ஆகவேண்டிய தேவையும் இந்தத் தொடருக்கு இருக்கின்றது.

ஆதலால் ஈழத்தில் இந்தியப் படையினரின் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி அக்காலத்தில் “முறிந்த பனை“ உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியான ஒரு சில விடயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

என்னைப் பாதித்த சம்பவம்

இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், இந்தியப் படையினர் மீது மிகவும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியதான அனுபவம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது.

குறிப்பிடத்தக்க ஒரு பாரிய சம்பவமாக அது இல்லாவிட்டாலும் கூட, எனது அடி மனதில் இந்தியப் படையினர் மீது முதன்முதலில் ஒரு வெறுப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக அது அமைந்திருந்தது. இந்தியாவே எமது தாய்நாடு, இந்தியத் தலைவர்களே எமது தலைவர்கள், இந்திய

ஹீரோக்களே எமக்கும் ஹீரோக்கள், இந்தியக் கிறிக்கெட் அணியே எமது அபிமான கிறிக்கட் அணி, இந்திய அமைதிகாக்கும் படையினரே ஈழத்தின் அசைக்க முடியாத மீட்பர்கள் என்று பெரும்பாண்மையான ஈழத் தமிழர்களைப்போன்று நானும் நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், முதன்முதலில் எனது மனதில் எதிர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பம் அன்று எனது கண் முன் நிகழ்ந்தது.

அன்றைய தினம் எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தைத் தொடர்ந்துதான் நான் இந்தியப் படையினரையும், ரஜீவ்காந்தி தலைமையிலான இந்திய அரசையும் மிகவும் அதிமாக வெறுக்க ஆரம்பித்திருந்தேன்.

“செக் பொயின்ட்“ இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டிருந்த நான் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்தேன்.

1988ம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து செங்கலடி-பதுளை வீதி வழியாக கொழும்புக்குப் பயணம் செய்யவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

பேரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது இந்தியப் படையினரின் கொடுவாமடு சோதனைச் சாவடியில் பஸ்வண்டி பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் இறங்கிச் செல்லவேண்டும் என்று இந்தியப் படையினர் உத்தரவிட்டார்கள். பெண்கள் மாத்திரம் இறங்கவேண்டியதில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள். (அக்காலத்தில் பெண்களை மதிக்கும் ஒரு நாடாக இந்தியா தன்னை வெளிக்காண்பித்துக்கொண்டிருந்த வேடிக்கையும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வினோதமும் இலங்கையிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சோதனைச் சாவடிகளில் பெண்கள் வாகனத்தை விட்டு இறங்கவேண்டியதில்லை என்ற சலுகைள் சில சோதனைச் சாவடிகளில் வழங்கப்பட்டிருந்தது.)

அனைத்து ஆண்களும் பஸ்வண்டியை விட்டு இறங்கி சோதனைக்காக கொட்டும் வெயிலில் காத்திருக்க ஆரம்பித்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் மனமகிழ்ந்து பஸ் வண்டியை விட்டு இறங்கவில்லை.

இந்தியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எனக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். பிரபல்யமான இந்திய கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவ அடையாள அட்டையும், இந்தியப் போக்குவரத்து “பாஸ்“ உம் என்வசம் இருந்ததால், அவற்றை வைத்துக்கொண்டு இந்தியப் படையினரின் சோதனைச் சாவடிக் கொடுமைகளில் இருந்து அனேகமாக நான் தப்பித்து விடுவேன்.

விதியாசமான “செக்கிங்“ பஸ்வண்டியைப் பரிசோதிப்பதற்கென்று இரண்டு இந்தியச் சிப்பாய்கள் நான் அமர்ந்திருந்த பஸ்ஸினுள் ஏறினார்கள். முதலில் அவர்கள் என்னைப் பார்த்து

முறைக்க ஆரம்பிக்க நான் எனக்குத்தெரிந்த ஹிந்தியில் என்னை அடையாளம் காண்பித்து இந்தியாவில் நான் கல்வி கற்பது பற்றி தெரிவித்து சமாளித்து விட்டேன்.

தொடர்ந்து அந்தச் சிப்பாய்கள் பஸ் வண்டியில் அமர்ந்திருந்த பெண்களைப் பரிசோதிக்கச் சென்றார்கள்.

அவர்கள் அந்தப் பெண்கள் கொண்டு வந்திருந்த பொதிகளைப் பற்றி அக்கறை காண்பிக்கவில்லை. “உங்களிடம் பொம் இருக்கின்றதா?“ என்று கேட்டு அந்தப் பெண் பிள்ளைகளின் ஆடைகளுக்குள் கைகளை விட்டு சோதனை செய்தார்கள்.

“இங்கும் குண்டுகள் ஏதாவது மறைத்து வைத்திருக்கின்றீhகளா?“ என்று கேட்டபடி அந்தப் பெண்களின் கால்களுக்கிடையேயும் சோதனை செய்து வேதனை கொடுத்தார்கள்.

இந்திய இராணுவத்தின் கைகளைத் தட்டிவிட முயன்ற ஒரு இளம் பெண்ணுக்கு கன்னத்தில் “பளார்“ என்று பலமான அடி விழுந்தது. இதனால் மற்றவர்கள் எதுவும் முரண்டு

பிடிக்கவில்லை.

இதில் வேதனை என்னவென்றால் பஸ்ஸினுள் ஏறிய இரண்டு சிப்பாய்கள் இதபோன்ற சேஷ்டைகளைப் புரிவதை வெளியில் காவலுக்கு நின்ற மற்றைய சில சிப்பாய்களும், ஒரு அதிகாரியும் வேடிக்கை பார்த்து சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். சோதனை முடிந்து பஸ்வண்டியை விட்டு இறங்கிய இந்தியச் சிப்பாய்கள் அடுத்த வண்டியைச் சோதனை இடுவதற்காகச் சென்றார்கள்.

அவர்கள் அவ்வாறு செல்லும் போது, பஸ்ஸினுள் இடம்பெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாகவும், பஸ்ஸில் இருந்த பெண்கள் சங்கோஜப்பட்டது தொடர்பாகவும் நடித்துக் காண்பித்து கேலிசெய்து கொண்டு சென்றார்கள். பின்னர் பஸ்சை விட்டு இறங்கியும் யன்னல் வழியாக அந்தப் பெண்களை எட்டிப்பார்த்து. அவர்கள் அங்கங்கள் பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து, கைகளால் சைகை காண்பித்து கேலி செய்தார்கள்.

இவர்களது சோதனைகளின் போது அந்தப் பெண்கள் நெளிந்து சங்கடப்பட்ட விதங்களை வெளியில் நின்ற மற்றச் சிப்பாய்களிடம் நடித்துக் காண்பித்து மகிழ்ந்தார்கள். எனக்கு ஹிந்தி ஓரளவு தெரிந்திருந்தால் அவர்கள் பேசிய அநாகரீமான வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருந்தது. கோபம் கோபமாக வந்தது. எதுவும் செய்யமுடியாத எனது இயலாமையை நினைத்து வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது.

யாரிடமும் சொல்லவேண்டாம்:

பஸ் வண்டியில் இந்தியப் படையினரின் தொல்லைகளுக்கு உள்ளாகி இருந்த பெண்களின் கண்களில் கண்ணீர் மல்கியது. ஒரு இளம் பெண்னுடன் வந்திருந்த தாய் என்னருகில் வந்து, “தம்பி, இங்கு இந்தப் பெண் பிள்ளைகளுக்கு நடந்த அவமரியாதையை தயவுசெய்து ஊரில் எவரிடமும் சொல்லிவிட வேண்டாம்.. எனது பிள்ளையின் வாழ்க்கை பாதித்துவிடும்..“ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

அதேபோன்று எனக்கு தெரிந்த அக்கா ஒருவரும் அந்த பஸ்ஸில் வந்திருந்தார்.

அவருடன் வந்த அவருடைய கணவன் சோதனைக்காக பஸ்சைவிட்டு இறங்கிச் சென்றிருந்தார். அந்த அக்கா என்னிடம், “நிராஜ்.., அண்ணணிடம் மட்டும் இது பற்றி ஒன்றும் சொல்லிவிடவேண்டாம். அவர் மிகவும் கோபக்காரர். அவர் ஏதாவது செய்யவெளிக்கிட்டு, அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடலாம். தயவு செய்து அவருக்கு இதுபற்றி ஒன்றும் கூறவேண்டாம்“ என்று என்னிடம் இரந்து கேட்டுக்கொண்டார்.

பஸ்ஸில் இருந்து இறங்கிய ஆண்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்று சோதனையை முடித்துக்கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது. அதுவரை பஸ் வண்டியில் எவருமே பேசவில்லை. பயங்கர அமைதி நிலவியது. வெளியில் நின்ற இந்திய ஜவான்களினது கேலிப் பேச்சுக்களை விட வேறு எதுவுமே எங்களுக்கு கேட்கவில்லை.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இந்தியப் படையினரின் மிகக் கொடுரமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, இங்கு நடந்தது ஒன்றும் பாரதூரமான விடயம் இல்லைதான் என்றாலும், அந்தச் சிறிய சம்பவம் என்னில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கண்முன்னால் நடந்த அந்த அநீதியை எதிர்ப்பதற்கோ, அல்லது தட்டிக் கேட்பதற்கோ எனது வயதும், சந்தர்ப்ப சூழ்நிலையும் என்னை அன்று அனுமதிக்கவில்லை.

கையாலாகாதவர்களாக இதுபோன்ற கொடுமைகளை வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு நிலைதான் என்னைப் போன்ற சாதாரண ஆண்களுக்கு அன்று ஏற்பட்டிருந்தது.

ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றி இத் தொடரில் எழுதியேயாகவேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்கு ஏற்படுத்தியதும், இந்தச் சம்பவம் பற்றி என் மனதில் பதிந்திருந்த நினைவுகள்தான்.

கற்பிற்கு இலக்கணம் வகுத்த எமது தமிழ் பெண்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த கொடுமைகள் பற்றி அடுத்த வாரம் முதல் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 


 

செக்கிங்’ என்ற பெரில் இந்தியப் படையினர் செய்த கொடுமைகள்-அவலங்களின் அத்தியாயங்கள்- 26: நிராஜ் டேவிட்

  • November 19, 2012
ஈழத்தில் இந்தியப் படையினர் சிறுமிகள், வயது வந்த மூதாட்டிகள் என்று எவரையுமே விட்டு வைக்கவில்லை. பெண் என்ற மானுடப் பிறப்பு முழுவதுமே பாலியல் வல்லுறவிற்கான இயந்திரங்களாகவே அவர்களுடைய கண்களுக்குத் தென்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர், யாழ்ப்பாணத்தில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இது காம வெறி பிடித்தலைந்த இந்தியப் படை ஜவான்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவே அமைந்து விட்டது.

தேடுதல், “செக்கிங்” என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட பாலியல் வேட்டைகள் எழுத்தில் எழுத முடியாதவை.

“ஆச்சி” க்கு நேர்ந்த கொடுமை:

1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி நிகழ்ந்த ஒரு கொடுமை இது. யாழ்ப்பாணத்தில் வறிய றோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதியில், ஒரு 55 வயது மூதாட்டியையும், 22 வயதுடைய மற்றொரு பெண்ணையும் இரண்டு இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு புரிந்த கொடுமை பற்றிய பதிவு இது.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்தியப் படையினர் முகாம் அமைத்து நிலைகொண்டிருந்தார்கள். அங்கு நடமாடிய அந்த 55 வயது பெண்மணிதான் முதலில் இந்தியப் படையினரின் கண்களில் தென்பட்டிருக்கின்றார்.

அந்தப் பெண்மணி ஏதோ ஒரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு தனது குடிசைக்குத் திரும்பியபோது, அவளைப் பின்தொடர்ந்து குடிசைக்குள் புகுந்த இந்தியப் படைவீரர்கள் இருவர் தமது வீரத்தை அந்தப் பெண்மணியிடம் காட்டினார்கள். அந்தப் பெண்மணியை, அவரது வயதையும் பொருட்படுத்தாது பாலியல் வல்லுறவு புரிந்தார்கள்.

அந்தப் பெண்மணி கத்த முற்பட்ட போது, அவரது வாயைப் பொத்திப்பிடித்தபடி அந்த அட்டூழியத்தை மேற்கொண்டார்கள். அந்த நேரத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காக வெளியில் சென்ற 22 வயது இளம் பெண் வீடு திரும்பியிருந்தாள். வீட்டின் பின்வாசலை அடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்பதை உணர்ந்து, “ஆச்சி….” “ஆச்சி..” என்று அழைத்திருக்கின்றாள்.

பின் கதவு மெதுவாகத் திறக்கட்டது. கதவில் இருந்து நீண்ட கரங்கள் அந்தப் பெண்ணையும் உள்ளே இழுத்தது. அங்கு இருந்த இரண்டு சிப்பாய்களில் ஒருவனால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்து “காப்பாற்றுங்கள்…” “காப்பாற்றுங்கள்..” என்று கத்தினாள். தேம்பித்தேம்பி அழுதாள்.

வீதியில் அவள் வந்து நின்ற கோலமும், அவளது நிர்கதி நிலையும் அயலில் இருந்தவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆத்திரத்துடன் திரண்ட சுமார் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் கோபாவேசத்துடன் இந்தியப் படை முகாமிற்குள் புக ஆரம்பித்தார்கள்.

இந்தியப் படையினர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதட்டத்துடன் இருந்த இந்தியப் படைவீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடுவதற்குத் தயாராக வைக்க ஆரம்பித்தார்கள்.

அடையாள அணிவகுப்பு:

தமது முகாமை நோக்கித் திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை சுட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை வழங்குவதற்குத் தயாரான அந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி, திடீரென்று “சுடவேண்டாம்” என்ற உத்தரவை தனது ஜவான்களுக்குப் பிறப்பித்தார்.

திரண்டு வந்த கூட்டத்தின் மத்தியில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வருவதை அவதானித்ததைத் தொடர்ந்தே, அந்த அதிகாரி அப்படியான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆம், அருகில் இருந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையான அந்தப் பாதிரியார் தலைமையில்தான் அந்தக் கூட்டம் அங்கு வந்திருந்தது.

சந்தர்ப்பவசமாக அந்த அதிகாரி ஒரு கிறிஸ்தவராக இருந்து விட்டதால், ஒரு பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது. கூட்டத்தை நோக்கித் தனியாகச் சென்ற அந்த அதிகாரி, பாதிரியாரிடம் தன்னை அறிமுகம் செய்துவிட்டு, என்ன விடயம் என்று விசாரித்தார். அந்த முகாமைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மேற்கொண்ட அந்தத் துர்நடத்தை பற்றி பாதிரியார் விளக்கிக் கூறினார்.

அந்தப் பெண்ணையும் அழைத்து அந்த அதிகாரி முன்னர் நிறுத்தி, அவளுக்கு நேர்ந்த கொடுமைக்காக அந்தப் பாதிரியார் நியாயம் கேட்டார். குடிசையில் இருந்த அந்த வயதான பெண்மணியையும் அங்கு அழைத்துப் போனார்கள்.

அங்கிருந்த இந்தியப் படையினரிடையே ஒரு அடையாள அணிவகுப்பை நடாத்துவதற்கு அந்த அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார். அடையாள அணிவகுப்பில் அந்தப் பாதகர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டார்கள். அவர்களிருவருக்கும் தண்டணை வழங்கப்படும் என்ற அந்த அதிகாரியின் உறுதிமொழியை நம்பி கூட்டம் கலைந்தது.

ஆனால் உண்மையிலேயே அந்தப் பாதகர்கள் தண்டிக்கப்பட்டார்களா, அல்லது அது வெறும் கண்துடைப்பா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

வரலாற்றுப் பெண்கள்:

ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணிற்கு நடந்த கொடுமை மிகவும் கொடூரமானது.

ஒரு காலத்தில் அவளது வீடு விடுதலைப் புலிகளின் முகாமாக இருந்தது. இந்தியப் படையினருடன் துணை வந்த தமிழ் குழு உறுப்பினர் இதனை இந்தியப் படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்கள்.

“செக்கிங்” என்று கூறிக்கொண்டு, அந்த வீட்டை முற்றுகையிட்ட இந்தியப் படையினரின் கண்களில் அந்த 13 வயதுச் சிறுமி தென்பட்டுவிட்டாள். வீட்டிலிருந்த மற்றவர்களை மிரட்டிவிட்டு, அந்தச் சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று அவளைப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கினார்கள். அந்தச் சிறுமியின் கதறல் அருகில் இருந்தவர்களின் காதைச் செவிடாக்கின.

பின்னர் அந்தச் சிறுமியின் குடும்பம் முழுவதும் கொழும்பிற்கு இடம்பெயர்ந்துவிட்டன. இந்தியப் படையினர் தமக்கு இழைத்த கொடுமைகளை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு,தமது அன்றாட வேலைகளைக் கவனிக்க அரம்பித்த புத்திசாலித்தனமான எத்தனையோ பெண்கள் இன்னமும் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

தம்மீது தமது விருப்பதையும் மீறி பட்ட கொடிய கரங்களின் அடையாளத்தை “தூசி” தட்டிவிட்டு, தமது வரலாற்றுக் கடமைகளை மேற்கொள்ள ஆரம்பித்த எத்தனையோ வீரப் பெண்களும் எமது சமூகத்தில் காணப்படவே செய்கின்றார்கள்.

அதேவேளை தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி வேண்டிப் போராடிய வீரப் பெண்கள் பலரது கதைகளும் பரவலாகக் காணப்படவே செய்கின்றன. அவை பற்றி அவகாசம் கிடைத்தால் இந்தத் தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

அவலங்கள் தொடரும்…


 

தாயின் முன்நிலையில் மகளைக் குதறினார்கள் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 27) –நிராஜ் டேவிட்

  • November 19, 2012
ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி எழுதப் புற்பட்டால் நூற்றுக்கும் அதிகமான அத்தியாயங்கள் எழுத முடியும். அத்தனை அட்டூழியங்களை அவர்கள் அங்கு நிகழ்த்திச் சென்றிருக்கின்றார்கள்.

தேவை கருதி ஏற்கனவே வெளிவந்துள்ள ஒரு சில சம்பங்களை மட்டும் இத்தொடரில் மிகவும் சுருக்கமாகப் பார்த்து வருகின்றோம்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஒரு நீண்ட ஆய்வை பதிவு செய்திருந்தார்கள். அந்த ஆய்வில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியவை. காந்தியின் தேசத்தையும்ää ரஜீவ்காந்தியின் புதல்வர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கக்கூடிய  பதிவுகள் அவை.

தாயின் முன்னிலையில்…

ஒரு சுருட்டுச் சுத்தும் தொழிலாழியின் மகளுக்கு நேர்ந்த கொடூரம் இது. அவளுக்கு 18 வயது. கா.பொ.த. உயர் தரம் வரை அவள் படித்திருந்தாள்.

கோழி பிடிப்பதற்காக அந்த வளவிற்குள் வந்த இரண்டு இந்தியப் படையினர் அந்த மாணவியைக் கண்டுவிட்டனர். தந்தை ஏதோ காரியமாக வெளியில் சென்றுவிட தாயும் மகளும் மட்டுமே அன்றையதினம் வீட்டில் இருந்தார்கள். துப்பாக்கியை நீட்டியபடி தாயை அழைத்துச் சென்ற ஒரு கயவன் அந்த தாயை துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்தான்.

மற்றவன் மகளை இழுத்துச் சென்று ’’கூச்சலிட்டால் தாயைச் சுட்டுக் கொன்றுவிடுவோம்’’ என்று மிரட்டினான். தாய் கொல்லப்பட்டுவிடுவாள் என்ற பயத்தில் மகள் வாய் திறக்கவில்லை. தாயின் முன்னிலையிலேயே மகள் கொடூரமாகக் குதறப்பட்டாள்.

அமைதியாக அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்த அந்த மாணவி அந்த விடயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை. ஒரு சில ஊரவர்களின் துணையுடன் மறுநாள் இந்திய இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துரைத்ததுடன் தனக்கு கொடுமை இழைத்த இந்தியப் படை வீரர்களையும் சரியாக அடையாளம் காண்பித்து அவர்களுக்கு தண்டணையும் பெற்றுக் கொடுத்தாள்.

கப்டனின் மிரட்டல்

1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதி இடம்பெற்ற மற்றொரு சம்பவம் இது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாடசாலை மாணவி ஒருவரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள். ஒரு புகைப்படம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கென்று கூறியே அவளை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள்.

இந்தியப் படையினர் தம்முடன் ஒரு புகைப்படத்தை வைத்திருந்தார்கள். அந்தப் புகைப்படத்தில் அந்த மாணவியும் அவளது பாடசாலைச் சினேகிதியும் காணப்பட்டார்கள். அந்தச் சினேகிதியின் சகோதரன் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்பதே இந்தியப் படையினரை உறுத்தியிருந்த விடயம்.

குறிப்பிட்ட அந்த இளைஞன் தற்பொழுது எங்கே என்று விசாரிப்பதற்காகவே அந்த மாணவியை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள்.

விசாரணைக்கென்று அவளை அழைத்துச் சென்ற இந்தியப் படையினர்,  ‘’குறிப்பிட்ட அந்த வாலிபன் உண்னுடைய காதலனா?‘’ என்று கேள்வியை எழுப்பி விசாரித்தார்கள்.

குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட இந்தியப் படைக் கப்டன், அந்த வாலிபன் எங்கிருக்கின்றான் என்ற உண்மையைக் கூற மறுத்தால் அந்த மாணவியை பாலியல் வல்லுறவு செய்யப்போவதாக மிரட்டினான். உண்மையக் கூறத்தவறும் பட்சத்தில் அவளை எப்படி எப்படியெல்லாம் துன்புறுத்துவார்கள் என்றும் அவன் விபரித்தான்.

பின்னர் அந்தச் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அந்தக் காலக்கெடுவிற்குள் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று எச்சரித்துவிட்டும் சென்றுவிட்டான்

சிறிது நேரத்தின் பின்னர் இரண்டு சிப்பாய்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் முன்னர் அந்த இந்தியப் படைக் கப்டனுடன் உடன் வந்திருந்தவர்கள். கப்டன் அந்தச் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றபோது கப்டனுடன் கூடவே சென்று விட்டு பின்னர் அந்தக் கப்படனுக்குத் தெரியாமல் தனியாகத் திரும்பி வந்திருந்தார்கள்.

பெற்றோரை ஒரு பக்கத்தில் நிறுத்திவிட்டு அந்தச் சிறுமியை மட்டும் விசாரணைக்கு என்று கூறி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். கொடூரமாகப் பாலியல் வல்லுறவு புரிந்தனர். வேதனையில் துடிதுடித்த அந்தச் சிறுமியிடம், நாங்கள் நாளையும் வருவோம். நடந்ததை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து விட்டுச் சென்றார்கள்.

அச்சமடைந்த அந்தப் பெண் கிணற்றிற்குள் குதித்துவிட்டாள். தெய்வாதினமாக அயலவர்கள் அவளைக் காப்பாற்றியிருந்தார்கள்.

அங்கு நடந்த அல்லோல்லகல்லோல்லத்தை முகாமில் இருந்து அவதானித்த இந்தியப் படை இராணுவக் கப்டன் அங்கு வந்தான். அவனுடன் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த இரண்டு சிப்பாய்களும் அங்கு வந்திருந்தார்கள். தான் பயமுறுத்தியதால்தான் அந்தப் பெண் கிணற்றில் குதித்திருக்கவேண்டும் என்று நினைத்த அந்தக் கப்டன் அந்தச் சிறுமியின் தலையைத் தடவி தான் பயமுறுத்தியது போன்று எதுவும் செய்யப்போவதில்லை என்றும் ஏதாவது பிரச்சினை இருந்தால் தன்னிடம் கூறும்படியும் கேட்டான். அந்தச் சிறுமியைப் பாலியல்வல்லுறவு புரிந்த இரண்டு சிப்பாய்களும் கப்டனுடன் இருந்ததால் கப்டனிடம் அவள் உண்மையைச் சொல்லவில்லை.

பின்னர் அந்தப் பெண்ணை பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவளைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு நடந்த கொடுமைகளை கண்டறிந்து, குறிப்பிட்ட கப்டனிடம் முறையிட்டு, அந்தச் சிப்பாய்களுக்குத் தண்டணை வாங்கிக் கொடுத்தார்.

ஆண்களுக்கும் தொல்லை.

ஈழத்தில் இந்தியப் படையினரின் பாலியல் சேஷ்டைகள் பெண்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் தமது காமப் பசிக்கு ஆண்களையும் சிறுவர்களையும் இரையாக்கிக் கொண்ட பல சம்பவங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன.

பெண்கள் தொடர்பாக இடம்பெற்றிருந்த துன்புறுத்தல்கள் அளவிற்கு இந்த விடயம் தீவிரமாக வெளிவந்து வெளியாரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் சிறுவர்கள் மீதும் ஆண்கள் மீதும் மேற்கொண்ட பாலியல் துர்நடத்தைகள் பற்றியும் நாம் இத்தொடரில் மேலோட்டமாகப் பார்த்தேயாகவேண்டும்.

ஈழத்தில் இந்தியப் படையினர் பாலியல் ரீதியாகப் புரிந்த கொடுமைகள் வரிசையில் பல விடயங்கள் வெளியில் சொல்ல முடியாதவை.

எழுத்தில் எழுத முடியாத, விபரிக்க முடியாத பல பாலியல் கொடுமைகள் சேஷ்டைகள் ஈழத்தில் இந்தியப் படையினர் வசம் இருந்த சிறைகளில் நடந்திருந்தன.

குறிப்பாக இந்தியப் படையினரின் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆண் கைதிகள் கூட சிறைக் காவல் கடமைகளில் ஈடுபடும் இந்தியப் படையினரின் பாலியல் அசிங்கங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாக இந்தியப் படையினரின் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பலர் சாட்சி பகர்கின்றார்கள்.

மனைவியாக…

இந்தியப் படையின் ஈழத்தில் அமைத்திருந்த சிறை ஒன்றில் ஒரு சில நாட்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் இவ்வாறு தெரிவிக்கின்றார்:

சிறைச்சாலையில் எனது அறைக்கு அடுத்து இருந்த அறையில் ஒரு இளம் பெடியனும் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். பெடியன் கொஞ்சம் வெள்ளை. அழகாக துருதுருவென்று இருப்பான். இந்தியப் படையினர் இரவில் அந்தப் பெடியனை அறையில் இருந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஆரம்பத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. விசாரணைக்காகவே அவனை அழைத்துச் செல்வதாகவே நினைத்து பரிதாபப்படுவேன். பின்னரே அங்கிருந்த மற்றவர்கள் மூலம் எனக்கு உண்மை தெரியவந்தது. அந்தச் சிறைச்சாலையில் உள்ள ஒரு அதிகாரிக்கு இரவு முழுவதும் மனைவியாகச் செயற்படுவதற்காகவே அந்தப் பெடியனை இந்தியப் படையினர் அழைத்துச் செல்வதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அவனுக்கு சிறையில் நல்ல செல்வாக்கு. பல விஷேட சலுகைகள். சிறைக் கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் விரைவில் விடுதலை பெற்றுச் செல்வதற்காகவும் அதுவரை அங்கு கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவும் அவன் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமைகளுக்கு இணங்கிப் போவதாக அங்கிருந்த அவனது வயதை ஒத்த பெடியன்களிடம் தெரிவித்திருந்தான்.

சப்பாத்திக் குருமா…

இந்தியச் சிறைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு இளைஞன் புலிகளுடன் தொடர்பு இருந்ததற்காக கைதுசெய்யப்பட்ட தான் பல தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தான்.

மட்டக்களப்பு ஊறணியில் இருந்த மன்றேசா இந்தியப் படை முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவமே மிகவும் கொடுமையானது என்று அவன் தெரிவித்திருந்தான்.

விசாரணைக்கென்று தம்மை அழைக்கும் இந்தியப் படைச் சிப்பாய்கள் அவர்களது ஆண் உறுப்புக்களில் பழச்சாற்றைத் தடவி விட்டுää அதனைச் சுவைக்கும்படி கூறி தொந்தரவு செய்ததாகவும் சில விசாரணைகளின் போது தங்களுடைய ஆண் உறுப்புக்களில் காரம் மிகுந்த சப்பாத்திக் குருமாவைத் தடவி விட்டு அவர்கள் வளர்க்கும் நாய்களை அருகில் அழைத்து வந்து தமது உறுப்புக்களைக் கடித்துக் குதற வைக்கப்போவதாக மிரட்டி உண்மைகளை வரவழைத்ததாகவும் அவன் தெரிவித்திருந்தான்.

மற்றொரு இளைஞன் கூறுகையில்,  சில சந்தர்ப்பங்களில் மது போதையில் இருக்கும் இந்தியச் சிப்பாய்கள் சிறையில் இருந்த தங்களில் சிலரை அழைத்து முழு நிர்வாணமாக்கி ஒருவருடன் ஒருவர் மிகக் கேவலமாக நடந்துகொள்ளும்படி நிர்பந்தித்து அதனைப் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அந்த இளைஞன் தெரிவித்திருந்தான்.

முகாம்களின் அருகில்..

இந்தியப் படையினரின் முகாம்களின் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த சிறுவர்களையும் சில இந்தியப் படையினர் விட்டுவைக்கவில்லை. மாலை நேரங்களில் கிறிக்கட்,  கரப்பத்து என்று அங்கு விளையாடச் செல்லும் சிறுவர்களில் சிலரை சில இந்தியப் படை ஜவான்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் ஆண்களுக்கு எதிராக இந்தியப் படையினர் புரிந்த பாலியல் சேஷ்டைகளை ஒரு அளவிற்கு அதிகமாக விபரிப்பது அத்தனை நாகரீகமாக இருக்காது. அதனால் ஓரிரு சம்பவங்களை மட்டும் உதாரணத்திற்கு இங்கு பார்த்திருந்தோம்.

இனி, இந்தியப் படையினர் ஈழமண்ணில் எமது சகோதரிகள்; மீது மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றிய மேலும் ஓரிரு பதிவுகளை மட்டும் பார்ப்போம்.

கிணற்றில் மிதந்த சடலம்

அவளுக்கு வயது முப்பது. திருமணம் ஆகியிருக்கவில்லை. 1987ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா இரணுவத்தின் ஷெல் தாக்குதலுக்கு அவளது தாயும் தந்தையும்  பலியாகியிருந்தார்கள். அவளும் வேறு இரண்டு பெண்களும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள்.

இந்தியப் படைவீரர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறப்பதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கதவை உடைத்துக்கொடு இந்தியப் படை வீரர்கள் பலர் உள்ளே நுழைந்தார்கள்..

அந்த வீட்டில் இருந்த மற்றய இரண்டு பெண்கள் எங்கோ ஓடித்தப்பிவிட்டார்கள். சற்றுப் பெரிய பழங்காலத்து வீடு. தட்டுமுட்டுச் சாமான்களும் அங்கு அதிகம். கருமையான இருள் வேறு. அந்தப் பெண்களால் ஓடி மறைந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. ஆனால் அந்த 30 வயதுப் பெண் மட்டும் இந்தியப் படையினரிடம் அகப்பட்டுக்கொண்டாள்.

பின்னர் அந்தப் பெண்ணின் சடலம் அந்த வீட்டுக் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி அந்தப் பெண் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கொடுமைகள் தொடரும்


 பாலியல் வல்லுறவை நியாயப்படுத்திய இந்திய அதிகாரிகள்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 28): நிராஜ் டேவிட்

 காலங்காலமாகவே யுத்தத்தில் தோற்கடிக்கப்படும் எதிரியின் உடமைகளைச் சீரழிப்பதை ஒரு வெற்றியின் சின்னமாகக் கொண்டாடும் மரபு உலகெங்கிலும் இருந்து வந்திருக்கின்றது.

அதிலும் குறிப்பாக தோல்வியடைந்த எதிரியின் தேசத்தில் வாழும் பெண்களை மானபங்கப்படுத்தி, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துவதென்பது, வெற்றி பெற்ற தரப்பு தனது வெற்றியை களிப்புடன் கொண்டாடும் ஒரு நடைமுறையாகவே புராதன காலங்களில் இருந்து வந்தது.

ஆனாலும் இந்தியா போன்ற – தன்னை ஒரு புனிதமான தேசமாகக் கூறிக்கொண்டு திரியும் புதினமான ஒரு நாடு, அதிலும் குறிப்பாக இந்த இருபதாம் நூற்றாண்டில், தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த ஒரு இனத்தின் மீதே இதுபோன்ற பாலியல் கொடுமைகளை இந்தியப் படையினர் செய்ததும், அதனை இந்திய ஆட்சி அனுமதித்ததும் உண்மையிலேயே மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என்றே கூறவேண்டும்.

வடக்கு கிழக்கில் களம் இறக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர், “செக்கிங்”, “தேடுதல் நடவடிக்கைகள்” என்ற பெயர்களில் ஏராளமான பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சம்பவங்களில் ஒரு சில மட்டுமே அதில் சம்பந்தப்பட்ட ஜவான்களுக்கு எதிராகத் தண்டணையைப் பெற்றுத்தந்தனவாக இருந்தன. ஆனால் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் யுத்த சூழ்நிலையில் தவிர்க்க முடியாதவை என்பதே அனேகமான இந்தியப் படை அதிகாரிகளின் நிலைப்பாடாக இருந்தது.

ஈழத்தில் இந்தியப் படை ஜவான்கள் மிகவும் மோசமாகப் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுத் திரிவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த காலப்பகுதியில், இந்தியப் படை உயரதிகாரி ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்:

“பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்றம் என்பது உண்மைதான். அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் இது எல்லா யுத்தங்களின் போதும் சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு விடயம். யுத்தத்தின் போது படையினருக்கு ஏற்படுகின்ற களைப்பு, மன உளைச்சல் போன்ற உளவியல் விளைவால் இது ஏற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்று என்றே கூறவேண்டும்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இது விடயமாகக் கருத்து வெளியிட்ட மற்றுமொரு அதிகாரி, “இத்தகைய கதைகள் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பாலியல் வல்லுறவுச் சம்பவம் பற்றிய குற்றச்சாட்டு ஒன்றை நேற்றைய தினம் நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால் விவாசணையின்போதுதான் தெரிந்தது அது பாலியல் வன்முறை அல்ல. வெறும் மானபங்கப்படுத்தல் மட்டுமே என்று.

கற்பிற்கு இலக்கணம் வகுத்ததாக தம்மைப்பற்றி பெருமைப்பட்டுக் கூறிக்கொள்ளும் இந்தியா போன்ற ஒரு தேசத்தின் புதல்வர்கள், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதை வெறும் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அவற்றை நியாயப்படுத்தியதும் உண்மையிலேயே கொடூரமானதுதான்.

மற்றொரு இந்தியப்படை அதிகாரி இந்த விடயம் பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“நாங்கள் வேண்டுமென்றே பெண்களை இவ்வாறு சோதனையிடுவதில்லை. இதோ பாருங்கள்… எங்கள் அதிகாரி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது வீதியில் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஒரு பெண் கையசைக்க மற்றப் பெண் ஸ்கேர்ட்டை உயர்த்தி தானியங்கித் துப்பாக்கியை எடுத்து எங்கள் அதிகாரி மற்றும் ஜவான்கள் மீது சுட ஆரம்பிக்கின்றாள்.

பெண்களையும் நாங்கள் சோதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? தொடைகளுக்கு இடையேயும், ஜாக்கட்டுக்குள்ளும் ஆயுதங்களை மறைந்து வைத்திருப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றார்கள்“ என்று அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்தியப் படை அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகள் பெண்களை பெரும்பாலும் மானபங்கப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. தமது சோதனை நடவடிக்கைகளின் போது பெண்கள் துன்பப்படுவதையும், வேதனையில் துடிதுடிப்பதையும், அவமானத்தால் புரள்வதையும் கண்டு இந்தியப் படை ஜவான்கள் களிப்புற்றார்கள்.

தமிழ்ப் பெண்களைப் பாலியல் இம்சைக்கு உள்ளாக்கும் போது தமது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் அதேவேளை, தமது கண்களுக்குத் தெரியாமல் தம்மைச் தோல்வியடையச் செய்துகொண்டிருக்கும் எதிகளான விடுதலைப் புலிகளின் உறவுகளை ஒருவகையில் பழிவாங்கிவிட்டோம் என்கின்ற திருப்தி இந்தியப்படையினருக்கு ஏற்பட்டது.

சோதனை நடவடிக்கைகள்:

ஈழத்தில் இந்தியப் படையினர் அமைத்திருந்த சோதனைச் சாவடிகளில் பெண்களைச் சோதனையிடுவதை ஆண் இந்தியச் சிப்பாய்களே செய்துவந்தார்கள். “ஆயுதங்களைத் தேடுதல்” என்பது- சகல பெண்களின் உடல்களிலும் கைவைத்தல் என்பதற்கான அனுமதியாகி விட்டிருந்தது.

இந்தியப் படையினரின் சோதனைச் சாவடியை தனது சிறு தங்கையுடன் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண், இந்தியப்படையினரின் அத்துமீறல்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பதிவினை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களிடம்  இவ்வாறு தெரிவிக்கின்றார்: “எங்களுடைய அந்தரங்கப் பகுதிகளை எல்லாம் எவ்வாறு இந்த இந்தியப் படையினர் நகங்களால் கீறியும், தடவியும், அநாகரிகமாக நடந்துகொள்ள முடியும்?” என்று அந்தப் பெண் குமுறியிருக்கின்றார்.

மற்றொரு இந்தியப் படைச் சோதனைச் சாவடியில் ஒரு சிறு பெண் அழுதுகொண்டு நின்றிருக்கின்றார். அந்தச் சிறுமியின் மாதவிலக்குக்குப் பயன்படுத்தப்படும் உள்துணியைக்கூட காட்டச்சொல்லிக் கேட்டார்களாம்.

இதேபோன்று தனிமையாக உள்ள இந்தியப் படையினரின் காவல் அரணில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரர்கள் தெருவில் செல்லும் பெண்களுக்கு தமது ஆடைகளைக் களைந்து எதுவோ அசிங்கமாகச் செய்து காண்பிப்பார்களாம். இந்த அசிங்கங்களைக் கண்டு சங்கடப்படும் பெண்களைப் பார்த்து சிரித்து கேலி செய்வார்களாம்.

இந்தியப் படையினருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் பெண்களைச் சேதனையிடுவதற்கென்று இந்தியப் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் பெண்கள் பிரிவு வெகு அமர்க்களமாகக் கொண்டுவரப்பட்டது.

தொலைக்காட்சிகளிலெல்லாம் இந்தப் பெண் படையினரே ஈழத்தில் பெண்களைச் சேதானையிடுவதுபோன்று காண்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் தொடர்ந்தும் ஆண் சிப்பாய்களே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.

ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்து சில சோதனைச் சாவடிகளில் மட்டுமே இந்திய ரிசர்வ் பொலிசின் பெண் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெண் பொலிசார் பெண்களைச் சோதனையிடும்பொது ஆண் சிப்பாய்கள் அந்தக் கூண்டுக்குள் நின்று பார்த்துக்கொண்டிருப்பார்கள். சோதனை நடவடிக்கைகளை பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏதாவது மாற்றுக் கருத்துக்கொண்டிருக்கும் எவராவது தனது மனைவி, சகோதரி அல்லது மகளுடன் ஒருதடவை இந்தியப் படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைக் கடந்து சென்றிருந்தால், நிச்சயம் அவர்கள் “புலிகள் செய்வது சரி” என்ற முடிவிற்கே வருவார்கள். அந்த அளவிற்கு இந்தியப் படையினரின் சோதனைக் கொடூரங்கள் அமைந்திருந்தன.

அம்மாவின் அச்சம்

இந்தியப் படைகள் ஈழத்தை ஆக்கிரமித்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்பொழுது இலங்கையில் இருந்து எனது அம்மா கடிதம் எழுதும் போது, இந்தியப் படைகள் பற்றி மக்கள் மத்தியில் பரவியிருந்த அச்சம் கலந்த வதந்திகள் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்தியப் படைகள் வீட்டுச் சோதனை என்று வீடுகளுக்குள் நுழைந்தால், அம்மா எனது சகோதரனை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் முற்றத்திற்கு வந்து நின்றுவிடுவதாக அந்தக் கடிதத்தில் எமுதியிருந்தார். இதேபோன்றுதான் அங்கு வீடுகளில் உள்ள அனைவருமே நடந்துகொள்வதாக அவர் எழுதியிருந்தார்.

அப்பொழுது எனது தம்பிக்கு மிகவும் குறைந்த வயது. அதேவேளை எனது அம்மாவிற்கோ 54 வயது. இவர்கள் வீட்டிற்குள் இருப்பதற்கு எதற்காகப் பயப்பட வேண்டும் என்று எனது மனதினுள் கேள்வி எழுந்தது.

அக்காலகட்டத்தில் இந்தியப் படையினர் வயது முதிர்ந்த பெண்களைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது எனக்குப் பின்னரே தெரியவந்தது.

எமது பிரதேசத்தில் வயது வந்த பெண்கள் மீது இந்தியப் படையினர் புரிந்திருந்த பாலியல் கொடூரங்கள் பற்றி மக்கள் மத்தியில் உலாவியிருந்த செய்திகளே இதுபோன்ற அச்சத்தை எனது தாய் உட்பட பல மூதாட்டிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தது.

வீடுகளைச் சோதனையிட வரும் இந்தியப் படையினர் உள்ளே அழைத்தால்கூட எவருமே உள்ளே போவது கிடையாது. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் களவாடிச் சென்றாலும் பறவாயில்லை என்று தங்கள் மானத்தைக் காப்பதிலேயே அவர்கள் கரிசனை செலுத்துவது வளக்கம்.

வித்தியாசமான ரசனைகள்

இந்தியப் படையினரில் சிலருக்கு வித்தியாசமான ரசனைகள் இருந்தன. குறிப்பாக வயது முதிர்ந்த சில அதிகாரிகளுக்கு இளம் பெண்களில் நட்டம் இல்லை. அவர்கள் முதிய பெண்களைக் குறிவைத்துத்தான் சேஷ்டைகளை விடுவது வளக்கம்.

அதேபோன்று வேறு சில இந்தியப் படையினருக்கு பராயமடையாத சிறுமிகளை குதறுவதில் அலாதி பிரியம். எனவே அக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் என்றால் பராயமடையாத சிறுமிகள் முதல் 50 வயதைக் கடந்த முதிய பெண்கள்வரை அச்சத்துடன் நடுங்கினார்கள்.

இந்தியப் படைகளை மிகவும் வெறுத்தார்கள். இன்றுவரை இந்தியர்களையும், இந்தியாவையும் அவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள், கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

38 வயதுப் பெண்மணியின் வாக்குமூலம்:

இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றி 38 வயதுப் பெண்மணி ஒருவர் “முறிந்த பனை” ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்வாறு விபரித்திருந்தார்:

“1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி காலை 8 மணியளவில் மூன்று இந்திய இராணுவத்தினர் எங்களுடைய வீட்டிற்குள் வந்தார்கள். அப்பொழுது எனது அம்மா சமையல் அறையில் இருந்தார். நானும் எனது மகளுமே அவர்களைப் பார்த்தோம்.

“செக்கிங்” என்று மட்டுமே சொல்லிவிட்டு எனது மகளை ஒரு அறைக்குள் தள்ளினார்கள். நான் அவளைப் பற்றி இழுத்துக்கொண்டு கத்தினேன். “அம்மா..அம்மா.. தேடுகிறார்கள்..” என்று உரக்கக் கத்தினேன்.

உடனே அருகில் இருந்த இந்திய இராணுவத்தின் காவல் அரணில் இருந்து வேறு சில படையினர் எமது வீட்டுக்குள் ஓடி வர ஆரம்பித்தார்கள்.

எனது வீட்டிற்குள் இருந்த மூன்று படையினரும், “தாங்கள் சோதனையிட மட்டுமே வந்திருந்ததாகவும், உடனடியாகப் போய்விடுவதாகவும்” கூறினார்கள். அவர்கள் கூறியபடியே “சோதனையை” முடித்துக் கொண்டு அவர்கள் சென்றும் விட்டார்கள். ஆனால் அவர்கள் “சோதனை” முடித்துக் கொண்டு செல்லும் போது எனது தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

நாங்கள் நன்றாகப் பயந்து போயிருந்தோம். பின்னர் எனது மகளை பெட்டி போன்றிருந்த பின்பக்க சிறிய அறை ஒன்றினுள் ஒழித்து வைத்துக்கொண்டேன். அன்று இரவு 9.30 மணியளவில் அதே மூன்று இராணுவத்தினரும் மீண்டும் எனது வீட்டை நோக்கி வருவதைக் கண்டேன். ஆனால் அவர்கள் இம்முறை இராணுவக் காவல் அரணி இருந்த பகுதி வழியாக வராமல், மற்றொரு பக்கத்தில் காலியாக இருந்த வீட்டின் வழியாக, சுவரைத் தாண்டிக் குதித்து வந்தார்கள்.

ஆயுதங்களுடன் வந்த அவர்கள் எனது பெற்றோரை ஒரு அறையிலுள் தள்ளிப் பூட்டினார்கள். என்னை ஒரு அறைக்குள் இழுத்துக்கொண்டு போய், என்மீது பாலியல் வல்லுறவு புரிந்தார்கள். துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த என்னை ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் வார்த்தையால் விபரிக்க முடியாத அளவிற்குத் துன்புறுத்தினார்கள்.

நான் கூச்சல் போடவில்லை. நான் கூச்சல் போட்டு அதனால் அவர்கள் எனது பெற்றோரைச் சுட்டுவிட்டால் என்ன செய்வது? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பஸ் ஓட ஆரம்பித்த முதல் நாளே நான் எனது கிரமத்தை விட்டுப் போய்விட்டேன்.

பயங்கரக் கனவுகள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அந்த இந்தியப் பாதகர்களின் முகங்கள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அவர்களுடைய குரல்கள் அடிக்கடி கேட்பது போல் தோன்றின.

எங்கள் ஆண்களைப் பற்றி..

பின்னர் எனது மகளைக் கூட்டிக்கொண்டு வெளிநாடு போனேன். ஒரு மனநிலை வைத்திய நிபுணரைச் சந்தித்தேன். அவர் ஒரு அந்நியராக இருந்ததால் அவரிடம் என்னால் அனைத்தையும் கூற முடிந்தது. அவர் எனக்கு மருந்துகளைத் தந்தார்.

அவை ஓரளவு என்னைச் சாந்தப்படுத்தினாலும், என்னுடைய மனநிலைப் பாதிப்பை முற்றாக நீக்கிவிடவில்லை. என் நிலமையோ இன்னும் மோசமாகிக்கொண்டே போகின்றது. எனது மகளையாவது காப்பாற்ற முடிந்ததே புண்ணியம்.

என்னுடைய கணவருக்கு இதுபற்றி எழுதியபோது, “ஒன்றுக்கும் கவலைப்படாதே” என்று எழுதியிருந்தார். உங்களுக்குத் தெரியுத்தானே எங்களுடைய ஆண்களைப் பற்றி? அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்த உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவள் மாதிரி உணர்கின்றேன்.எனக்கு என்னவோ மாதிரி இருக்கின்றது” என்று அந்தப் பெண்மணி தெரிவித்திருந்தார்.

தொடரும்…


இந்தியப்படையினரிடம் கெஞ்சிக் கதறிய தமிழ் பெண் (அவலங்களின் அத்தியாயங்கள்- 29) நிராஜ் டேவிட்

தமிழ் மக்களின் கலாச்சாரச் சூழலைப் பொறுத்தவரையில், பாலியல் வல்லுறவு என்பது தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

எந்த ஒரு பெண்ணினதும் வாழ்க்கையில், அல்லது எந்த ஒரு குடும்பத்தினதும் சரித்திரத்தில் என்றுமே நடந்துவிடக்கூடாத ஒரு சம்பவமாகவே இந்தப் பாலியல் வல்லுறவு என்ற விடயம் நோக்கப்பட்டுவருகின்றது.

‘பாலியல் வல்லுறவு’ என்கின்ற இந்த கொடூரத்திற்கு உள்ளாகும் ஒரு பெண்ணுக்கும், அவரது கணவன் அல்லது பெற்றார் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளுக்கும் மனரீதியாக அதிர்ச்சி தரும் ஒரு விடயமாகவே இது இருந்துவிடுகின்றது.

நமது சமூகத்தில், ஒரு இளம் பெண்ணுடைய கன்னித்தன்மை, அவளுடைய விருப்பத்திற்கு எதிராகத்தான் என்றாலும், அழிக்கப்பட்டு விடுமேயானால் அவள் திருமணம் செய்வதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

ஒருவேளை அவள் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்தால் விலக்கி ஒதுக்கப்படுவதற்கு நிறையவே சந்தர்ப்பம் உள்ளது. (ஆனால் தற்பொழுது நிலைமை சற்று முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.

வெவ்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் எம்மவர்கள் புலம்பெயர ஆரம்பித்ததைத் தொடர்ந்து நிறைய மாற்றங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. ~கலாச்சாரம்| என்கின்ற போர்வையில் ஒரு வரம்பிற்கு மீறி எமது சமூகத்தில் இருந்துவந்த பாரம்பரிய அடக்குமுறைகளை எமது இளைஞர்கள் படிப்படியாக உடைத்தெறிய ஆரம்பித்து வருகின்றார்கள்.

ஒரு பெண்ணிண் விருப்பதை மீறி அவளது உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை, வெறும் காய்ச்சல், தடிமன் போன்ற ஒரு சிறு நோயாகவே நினைத்து மறந்துவிடும் உயரிய பண்பை அவர்கள் தற்பொழுது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.)

ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டத்தில் நிலைமை அவ்வளவு சுமுகமானதாக இருக்கவில்லை.

பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் பலர் அவர்களது குடும்பங்களினாலும், சமூகத்தினாலும் புறந்தள்ளி வைக்கப்படும் ஒரு அபாயச் சூழ்நிலை காணப்படவே செய்தது.

பாலியல்வதைக்கு உட்பட்டவர், மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் போன்றோருக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பு மிகவும் பாரதூரமானதாகவே இருந்தது. ஆரம்பத்தில் சில மணி நேரமாகவோ அல்லது ஓரிரு நாட்களாகவோ பாதிக்கப்பட்டவர் பேச முடியாமல் பிரம்மை பிடித்தவர் போன்று காணப்படுவார்.

தொண்டை அடைத்த நிலையில் பேச முடியாமல் திணறுவார். படிப்படியாக பிறரிடம் இருந்து ஒதுங்க ஆரம்பிப்பார். மிகவும் மௌனமாக நடமாட ஆரம்பிப்பார். நிறைய அழுவார். அவற்றுடன் அதிக மனச் சோர்வு ஆரம்பித்துவிடும்.

சாதாரணமாகவே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிரந்தரமான ஒரு வடுவை ஏற்படுத்துவதாக கருதப்படுவதால், சமூக வாழ்க்கை ஓட்டத்தில் அவரால் வழமை போலவே மீண்டும் பங்குபற்றமுடியாமல் போய்விடும்.

கர்ப்பம்

இதுபோன்ற கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், சமுதாயப் பயம் என்பனவற்றிற்கு அப்பால், அவர்களை மற்றொரு பயமும் பிடுத்துவிடுகின்றது. அதுதான் தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் தான் கர்ப்பம் தரித்துவிடுவோமோ என்கின்ற பயம்.

தனக்கு இடம்பெற்ற கொடுமையின் விளைவு கர்ப்பம் தரித்தல் என்கின்ற இயற்கையின் மூலம் தொடர்ந்து விடுமோ என்கின்ற பயம் அந்தப் பெண்ணையும், அவள் சார்ந்த குடும்பத்தையும் அதிகமாகப் பீடித்துக் கொள்கின்றது. இதுகூட அவர்களுக்கு வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வந்தது.

கர்ப்பமாயுள்ளாரா என்று பரிசோதிப்பதற்கு, அல்லது ஒருவேளை கர்ப்பமடைந்தால் அதனைக் கலைத்து விடுவதற்கு என்று வைத்தியரை அல்லது வைத்தியம் தெரிந்த ஒருவரை நாடுவதை பலர் அதிமுக்கியமாக் கருதி செயற்படுவார்கள். இதுகூட நடைமுறையில் அவர்களுக்கு பல பிரதிகூலங்களைப் பெற்றுத் தரக்கூடியதாகவே அமைந்திருக்கும்.

அலைக்கழித்த அதிகாரிகள்

இந்தியப் படையினரின் பாலியல் வன்முறைகள் என்ற கொடுமைக்கு தண்டணை பெற்றுக் கொடுப்பது அத்தனை இலகுவானதொன்றல்ல என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்:

இந்தச் சம்பவம் 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

அவளுக்கு 22 வயது. மாணவி. அவளுடைய தந்தை பாதி கண் தெரியாதவர். குடும்பம் முழுவதும் சிலாபத்தில் கடைவைத்திருக்கும் அவளது அண்ணனிலேயே தங்கியிருந்தது.

அவளது தாய் 24.01.1988 முதல் கோயில் பிரார்த்தனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் தினமும் அவள் தாய்க்கு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

கோயில் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அமைந்திருந்தது. விரதம் முடிப்பதற்காக நள்ளிரவே அவ்வாறு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

சம்பவ தினம், அதாவது 29ம் திகதி அந்த மாணவி தனது தந்தையுடன் கோயிலுக்கு உணவு எடுத்துச் சென்றுகொண்டிருந்தாள். வழியில் நான்கு இந்திய இராணுவத்தினர் தந்தையிடமும், மகளிடமும் அடையாள அட்டையை கேட்டார்கள். அவளை நீண்ட நேரமாகச் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள்.

தற்பொழுது நேரம் என்ன? எதற்காகத் தனியே சென்றுகொண்டிருக்கின்றீர்கள்? என்றெல்லாம் கேட்டபடி சோதனை செய்திருக்கின்றார்கள்.

தகப்பனை அங்கு உட்காரச் சொன்ன அவர்கள் அந்தப் பெண்ணை மாத்திரம் கோயிலுக்கு எதிரே இருந்த ஒழுங்கையை நோக்கி நடக்கும்படி உத்தரவிட்டார்கள்.

ஆபத்தான நிலையைப் புரிந்துகொண்ட அவள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனியாக மேலும் நடக்கும்படி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டாள்.

ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியை நீட்டியபடி அவளது தந்தையின் அருகில் சென்று நின்றுகொண்டான். மற்றைய மூவரும் அவளை அந்த ஒழுங்கை வழியாக அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

தான் ஏதாவது முரண்டு பிடித்தால் தனது தந்தையையும், தன்னையும் சுட்டுத் தெருவில் போட்டுவிட்டு, தங்கள் இருவரையும் மறுநாள் புலிகள் என்று அடையாளப்படுத்த அந்தப் பாதகர்கள் தயங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

ஒருவருமில்லாத ஒரு குடிசையை அண்மித்ததும், அருகிலிருந்த ஒரு புதருக்குள் அவளை இழுத்துச் சென்று அவளைக் கீழே கிடத்தினார்கள். ஒருவன் காவலுக்கு நிற்க மற்றைய இருவரும் அவளைக் குதறினார்கள். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.

மறுநாள் இயலாத தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த இந்தியப்படை இராணுவ முகாமிற்குப் போய் தனக்கு இடம்பெற்ற அநீதி பற்றி முறையிட்டாள். பெரிய முகாமிற்குப் போய் முறையிடும்படி அங்கு கூறப்பட்டது.

பெரிய முகாமிற்குச் சென்று முறையிட்டார்கள். அடையாள அணிவகுப்பு நடாத்தி சம்பந்தப்பட்ட நான்கு படை வீரர்களும் அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக, அவளை ஒரு மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டது. இந்த இழுபறியில் களைப்படைந்த அவர்கள் அத்துடன் அந்த விடயத்தை விட்டுவிட்டார்கள்.

அனேகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவது குறைவு. ஒருவேளை அவர்கள் உயரதிகாரிகளிடம் முறையிடும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் கூட, அவர்களை முறையீடுசெய்தவர்களை அலைக்கழித்து களைப்படைய வைத்துவிடுவார்கள்.

கற்பு

காலங்காலமாகவே ~கற்பு என்பது தமிழ் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உன்னத உயர் பண்பாகவும் உயிரைப் போலவே கவனத்துடன் காக்கப்படவேண்டிய ஒன்றாகவுமே கருதப்பட்டு வருகின்றது.

ஈழப்பெண்கள் வாழ்விலும் இந்த விடயம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஈழத்தில் இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவுகள் புரிந்த காலப்பகுதிகளில், அவர்களிடம் இரையாகிப்போன எத்தனையோ பெண்கள் தங்கள் உயிரை மாய்த்து தம்மீது ஏற்படுத்தப்பட்ட களங்கத்தைப் போக்கிக்கொண்ட வரைலாறு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் கலாச்சார மரபுப்படி, இந்தியப் படைகளினால் சீரழிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் இன்றுவரை திருமணம் முடித்துக்கொள்ளாமல், தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருப்பதையும் இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியப் படையினரிடம் ஒரு இளம் பெண் தன்னை விடுவிக்கும்படி கெஞ்சி கதறியது பற்றி அதனை நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

துப்பாக்கி முனையில் மூன்று இந்திய இராணுவ வீரர்கள் ஒரு இளம் பெண்ணை பலத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவள் கெஞ்சி மன்றாடிய ஒலி இப்பொழுதும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

அண்ணே என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். ஆனால் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள். அதிஷ்டவசமாக ஒரு இராணுவ அதிகாரிக்கு அவள் மீது இரக்கம் ஏற்பட்டுவிட்டது. எட்டி அவளை ஒரு அறை அறைந்துவிட்டு அவளைப் போக அனுமதித்தார்- இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அலைக்கழிப்பு:

இந்தியப் படையினர் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பாக உலகத்தின் கவனம் பெருமளவில் ஈர்க்கப்படவில்லை என்றாலும், உலகத்தின் மத்தியிலும், தமிழ் நாட்டின் மத்தியிலும் இந்தியாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பாலியல் வன்முறைகள் தொடர்பான செய்திகள் பெருமளவில் பரவ ஆரம்பித்திருந்தன.

அவசர அவசரமாக இந்த வன்முறைக் கலாச்சாரத்தை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரவேண்டும், அல்லது இந்த விடயங்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது தடுக்கப்படவேண்டும் என்ற உத்தரவு இந்தியப் படையின் உயர் தலைமையால் விடுக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை ஏற்கும் மனநிலையில் களமுனை அதிகாரிகள் இருக்கவில்லை.

எதிரி யார்? எங்கிருக்கின்றான்? எப்பொழுது தம்மீது தாக்குதல் நடத்துவான் என்று அறியாமல் ஒரு வித்தியாசமான கெரில்லா யுத்தத்தை ஈழமண்ணில் எதிர்கொண்டு வரும் ஜவான்களை ஒரு அளவிற்கு மேல் கட்டுப்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது களமுனையில் உள்ள இந்தியப் படை அதிகாரிகளின் கருத்தாக இருந்தது.

பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இந்திய உயரதிகாரிகளிடம் துணிந்து முறையிட்டவர்களை அலைக்கழித்து அல்லது சோர்வடைய வைத்து தமது ஜவான்களின் நடத்தைகளை நியாயப்படுத்திய மேலதிகாரிகளும் இருக்கவே செய்தார்கள்.

ஒரு மாணவி மீது இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு மேற்கொண்டதற்கு எதிராக அருகில் உள்ள முகாமில் முறைப்பாடு செய்யப்பட்டது. முகாமில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகள் அந்த மாணவியால் சரியாக அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள்.

சரி, நாளை வாருங்கள் என்று கூறி மாணவியையும் பெற்றோரையும் இந்திய இராணுவத்தினர் அனுப்பிவிட்டார்கள். தனது தாய் தந்தையுடன் அந்த மாணவி மறுநாள் அந்த முகாமிற்குச் சென்றாள்.

பெரிய முகாமிலுள்ள உயரதிகாரிகளைச் சென்று சந்தியுங்கள் என்று கூறி அவர்களை அரியாலை இராணுவ முகாமிற்கு இராணுவ ட்ரக் வண்டியொன்றில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.

அரியாலை இராணுவ முகாமிற்குச் சென்ற அவர்களை எந்த உயரதிகாரியும் வந்து சந்திக்கவில்லை. முழு நாளும் அவர்கள் அங்கு காத்திருந்ததுதான் மிச்சம். இரவு நெருங்க ஆரம்பித்ததும் அவர்களை அச்சம், கோபம் என்பன பீடிக்க ஆரம்பித்தன. இரவுச் சாப்பாட்டை அவர்கள் வேண்டாம் என்று கூறி ஒதுக்கிவிட்டார்கள்.

நடு ,ராத்திரியில் ஒரு சிப்பாய் அவர்களிடம் வந்து கமாண்டர் அந்தப் பெண்ணை மாத்திரம் தனியே பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்திருக்கின்றான். கோபமுற்ற தாய் மகளுடன் சேர்ந்து குரலெழுப்பியிருக்கின்றாள். உடனே வாயில் கையை வைத்து ~~உஷ்.. என்று கூறியபடி அந்தச் சிப்பாய் வெளியே போய்விட்டான்.

இதைவிட பலமான அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த தாய் அன்று இரவு முழுவதும் அந்த அறையில் வாசலிலேயே காவல் இருந்திருக்கின்றாள். மறுநாள் காலை வீட்டுக்குத் திரும்பிச் செல்ல இருந்தவர்களிடம், தொடர்ந்து அங்கு காத்திருக்கும்படி கூறப்பட்டது.

காத்திருப்பதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை என்பதுடன், தொடர்ந்து அங்கு தங்கியிருப்பது மேலும் மோசமான அனுபவத்தையே பெற்றுத்தரும் என்பதையும் புரிந்துகொண்ட அந்த மாணவி, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றாள்.

உடனே அவரை இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், தகப்பனை முகாமில் விட்டுவிட்டு தாயையும், மகளையும் வெளியில் செல்வதற்கு அனுமதித்தார்கள்.

தாயை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு மகளை மீண்டும் முகாமில் ஆஜராகும்படி கூறப்பட்டது. கடைசியில் அந்த மகளும் தன்னை வைத்தியசாலையில் அனுமதித்துக்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

அடி உதை..:

கிராமங்களில் பரவலாக இடம்பெற்றுவந்த பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு கிராம மட்டத்தில் இயங்கிவந்த மக்கள் பிரதிநிதிகள் உதவவேண்டும் என்று இந்திய இராணுவ உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.

இதனடிப்படையில், நவம்பர் 18ம் திகதி ஒரு முறைப்பாட்டை மக்கள் பிரதிநிதிகள் குழு (citizen commitee – பிரஜைகள் குழு)  ஒரு இந்திய இராணுவ முகாமில் முறையிட்டது.

அந்த முகாம் பொறுப்பதிகாரி மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். அடையாள அணிவகுப்பை உடனடியாக நடாத்தி சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு கொண்டார்.

அதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் குழுவில் சென்ற துடிப்பான ஒரு இளம் வயதினன் பற்றிய விபரங்களையும் அந்தப் பொறுப்பதிகாரி சாதாரணமாகக் கேட்டு வைத்துக்கொண்டார்.

ஒரு சில நாட்களின் பின்னர் அந்த இளைஞன் வசித்துவந்த வீட்டிற்கு அருகில் ஒரு சுற்றிவளைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்த அந்த இளைஞனை சந்தேகத்தில் பெயரில் கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். இரண்டு நாட்கள் முகாமில் வைத்து நல்ல அடி. உதடு கிழிந்து, தலை உடைந்த நிலையில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

முகாமில் விசாரணைகளில் போது அவரிடம் கேட்கப்பட்ட பிரதான கேள்வி இதுதான்: புலிகள் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகளை ஏன் இந்தியப் படையினர் செய்ததாகக் கூறுகின்றீர்கள்..?-என்று கேட்டுத்தான் இந்தியப் படையினர் அந்த மக்கள் பிரதிநிதிகள் குழு இளைஞனை அடித்திருக்கின்றார்கள்.

நியாயப்படுத்தும் அதிகாரிகள்:

இந்திய ஜவான்கள் ஈழத்தில் மேற்கொண்ட வரையறையற்ற பாலியல் வல்லுறவுகள், இந்தியப் படைகளின் தலைமையினால் ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததுதான் பெரிய கொடுமை.

யுத்தத்தில் ஈடுபட்டுவரும் படையினர் தமது களைப்பை போக்கிக்கொள்ள அவ்வாறு செய்வது ஒரு வகையில் நியாயமே என்பதுதான் அவர்களது வாதம்.

ஆனால் ஈழத்தின் தமிழ் பெண்களின் நியாயமோ வேறாக இருந்தது. எமது உடல் எமக்குரியது, உங்களுடைய களைப்பைத் தீர்ப்பதற்கு இது உரியதொன்றல்ல என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.

அந்த வாதம் நீதியாகவும் ஒலித்தது.

தமிழ்நாட்டு வீரர்கள்?

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயம் பற்றி சில வரிகள் கூறியேயாகவேண்டும்.

இந்தியப் படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் கொடுரங்கள் விடயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப்படை வீரர்களின் பங்கு என்ன என்பது பற்றி இந்தத் தொடரில் நிச்சயம் நாம் பதிவு செய்தேயாகவேண்டும்.

அது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.


 

ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியப்படையினரால் களமிறக்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள்!- அவலங்களின் அத்தியாயங்கள்- 30: நிராஜ் டேவிட்

  • November 19, 2012
ஈழ மண்ணில் தமிழ் பெண்களுக்கு எதிராக இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி இத்தொடரில் நிறையவே பார்த்திருந்தோம்.

இன்னும் ஒரு சில சம்பவங்களையும் தொடர்ந்து பார்க்க உள்ளோம். ஆனால் அதற்கிடையில், இது தொடர்பான முக்கியமான ஒரு விடயத்தையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

ஈழத்தில் தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட விடயங்களிலும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட விடயங்களிலும் இந்தியப் படையில் இணைந்து வந்திருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பெருமளவில் சம்பந்தப்படவில்லை என்ற உண்மையையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியேயாக வேண்டும்.

அவர்கள் தமிழ் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் பெருமளவில் ஈடுபடவில்லை என்பதுடன், பல தமிழ் பெண்களை தமது தகுதிக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்ட வகையில் காப்பாற்றி உதவி புரிந்திருந்தார்கள் என்ற உண்மையையும் நன்றியுடன் இந்த இடத்தில் சுட்டிக்காண்பித்தேயாக வேண்டும்.

இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆரம்பத்தில் களமிறக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் பெருமளவு தமிழ் வீரர்களைக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களே தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

புலிகளுடனான சந்திப்புக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, இந்தியப் படை தங்கியுள்ள முகாம்களுக்கு வெளியே பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவது, உணவு வாங்கச் செல்வது, நிவாரணம் வழங்குவது என்று பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளைச் சந்திக்க வேண்டிய இடங்களில் அனேகமாக தமிழ் பேசத் தெரிந்த ஜவான்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியப் படையினர் வந்துள்ளார்கள் என்ற உணர்வு தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தன. இந்தியப் படையினரை தமிழ் மக்கள் அன்னியமாக நினைத்துவிடக்கூடாது என்பதும் இந்தியத் தலைமையின் நோக்கமாக இருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியப் படையினர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சண்டை நடவடிக்கைகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்தியப் படையினர் ஈடுபடுத்தப்படுவதை இந்தியப் படைத்துறைத் தலைமை தவிர்க்க ஆரம்பித்தது.

இந்தியப் படையில் உள்ள தமிழ் நாட்டு வீரர்கள் புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் அனுதாபம் கொண்டு செயற்பட்டு விடுவார்களோ என்கின்ற ஒருவித அச்சமும், சந்தேகமும் இந்தியப் படைத்துறைத் தலைமையிடம் ஏற்பட்டிருந்தது. எனவே புலிகளுடனான சண்டை நடவடிக்கைகளில் இந்தியப் படையில் தமிழ் வீரர்களைக் கொண்ட பிரிவுகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படவில்லை.

ஆனால் பிரதான யுத்தம் முடிவடைந்து தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிளைப்புக்கள் என்று இந்தியப் படையினர் இறங்கியபோது மறுபடியும் தமிழ் வீரர்கள் துணைக்கழைக்கப்பட்டிருந்தார்கள். மொழி பெயர்பு சேவையே அனேகமான தமிழ் படை வீரர்களின் பிரதான கடமையாக இருந்தது.

சண்டைகளிலும், சுற்றிவளைப்புக்களிலும் இந்தியப்படைகளில் அங்கம் வகித்த தமிழ்நாட்டுப் படைவீரர்கள் கடமையுணச்சியுடன் ஈடுபட்டார்கள் என்றாலும், ஈழத்தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு செயல்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்கள்.

பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தமிழ் பெண்களைக் காப்பாற்றியிருந்தார்கள். இந்தியப் படையினரிடம் இருந்து பெண்களை விடுவித்து, அவர்களின் மானத்தைக் காப்பாற்றிய தமிழ் வீரர்கள் இன்றும் பல பெண்களால் நினைவு கூறப்படுகின்றார்கள்.

நீளப் பாவாடையே அணிய வேண்டும்

ஈழத்தில் பெண்கள் அணிவதுபோன்ற மிடி ஸ்கேட்ஸ் போன்ற ஆடைகளை அக்காலத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டுப் பெண்கள் அணிவது குறைவு. பாவாடை தாவணி, சுடிதார், சேலை என்பனதான் தமிழ் பெண்கள் அதிகம் அணியும் ஆடைகளாக இருந்தன.

ஆனால் இலங்கையில் சிறிது நாகரீகமாக பெண்கள் ஆடை அணிவதே இந்தியப் படையினரை பாலியல் இச்சைக்குத் தூண்டுவதாக நினைத்த பல தமிழ் இந்தியப் படையினர், இங்கு பெண்கள்

சேலை அல்லது நீளப் பாவாடை அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். சிறிது கவர்ச்சியாக ஆடைஅணிந்து சென்ற சில இளம் பெண்களை அவர்கள கண்டிக்கவும் செய்தார்கள்.

பெண்கள் பொட்டு வைத்தே வெளியில் வரவேண்டும் என்றும் அவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.

ஹிந்திச் சிப்பாய்களுடன் தமிழ் பெண்கள் சிரித்துப் பேசினால் அவர்களுக்கு நல்ல திட்டுக் கிடைத்தது தமிழ் சிப்பாய்களால்.

பல சந்தர்ப்பங்களில் ஈழத்திலுள்ள தமிழ் பெண்களுக்கு இந்தியப் படையிலிருந்த தமிழ் நாட்டு வீரர்கள், அண்ணன்களாகவும், தந்தைகளாகவும் இருந்து பல சிக்கல்களில் இருந்த அவர்களைக் காப்பாறிய கதைகள் நிறைவே கூறப்படுகின்றன.

மலையாள அதிகாரிகளின் நடத்தை

இந்த விடயத்தில் கேரளாவைச் சேர்ந்த மலையாளிகளையும் சேர்த்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்தியப் படையில் மலையாளப் படை அதிகாரிகள் பலர் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் விடயத்தில் அவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டாலும்கூட தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு விடயத்தில் அவர்கள் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டதுடன், தமிழ் பெண்களுக்கு பலவழிகளிலும் பாதுகாப்பாகவும் அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

தென் இந்தியப் படை வீரர்கள் என்று பார்க்கும் போது கர்னாடக வீரர்கள் தமிழ் பெண்கள் விடயத்தில் ஓரளவு கடுமையாகவும், பழிவாங்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது. வட இந்தியப் படைவீரர்களுக்கு சற்றும் சளைக்காமல் அவர்கள் ஈழத்தில் கொடூரமாக நடந்து கொண்டதாகவே கூறப்படுகின்றது.

அதேவேளை, ஈழத்தில் தமிழ் பெண்கள் இந்தியப் படையினரால் கொடுமைகளை அனுபவித்த காலங்களில், அதனை உணர்வு பூர்வமாக வெளிக்கொணர்ந்த சில தமிழ்நாட்டுப் பத்திரிகைகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தேயாக வேண்டும். ஜூனியர் விகடன், நக்கீரன் என்ற பெயர்கள் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாலும், பல ஊடகங்கள் இந்த விடயத்தில் தமது நாட்டுப் பற்றையும் மீறி இன உணர்வுடன் செயற்பட்டிருந்தன.

ஈழத்தில் இந்தியப் படையினரின் அட்டூழியங்கள் என்று இந்தத் தொடர் முழுவதும் குறிப்பிடப்படும் போது தமிழ் நாட்டில் வசிக்கும் எமது சகோதரத் தமிழர்கள் நிச்சயம் அசொகரியப்படுவார்கள் என்று எனக்குப் புரிகின்றது. இந்த விடயம் பற்றி பலரும் தமது ஆதங்கத்தை எனக்கு வெளிப்படுத்தியும் இருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் என்ற இந்தத் தொடரின் நிறைவின் போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆற்றியிருந்த வரலாற்றுக் கடமைகள் பற்றிய பல அத்தியாயங்களும் நிச்சயம் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

தமிழ் ஆயுதக் குழுக்கள்

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, அவற்றில் இந்தியப் படையினருடன் கைகோர்த்தபடி தமிழ் குழுக்கள் நடத்தியிருந்த மனித வேட்டைகள், தமிழ் விரோத செயற்பாடுகள் மிக முக்கியமாக வெளிப்படுத்தப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டீ.எல்.எப்., டெலோ போன்ற தமிழ் இயக்கங்கள் இந்தியப் படையினருடன் தம்மை முழுவதுமாக இணைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக முழு அளவில் களமிறங்கி இருந்தார்கள்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவின் வழி நடத்தலின் கீழ் இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட இந்த தமிழ் ஆயுதக்குழுக்கள், இயக்கங்கள் ஈழத்தில் புரிந்திருந்த அட்டுழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்து மக்களுக்கு எதிராகவும் அக்காலகட்டத்தில் மேற்கொண்ட பலவிதமான நடவடிக்கைகளுக்கு, இந்த தமிழ் அமைப்புக்கள் பல வழிகளிலும் துணைபோயிருந்தன.

இந்தியப் படையினரின் ஒரு படைப்பிரிவைப் போலவே இயங்கிவந்த இந்த தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தியப் படையினரை விடவும் அதிகமாக தமிழ் விரோத நடவடிக்கைகளிலும், அட்டூழியங்களிலும்; ஈடுபட்டிருந்தன. கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு என்று, எந்த ஆக்கிரமிப்புப் படையினருக்கும் சளைக்காத வகையில் இந்த தமிழ் இயக்கங்கள் அக்காலகட்டத்தில் அட்டகாசங்கள் புரிந்திருந்தன.

றோவும் தமிழ் இயக்கங்களும்:

அக்காலகட்டங்களில் இந்த தமிழ் இயக்கங்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய உளவுப் பிரிவான றோவின் பூரண கட்டுப்பாட்டின் கீழே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் கால்வைக்க முடியாதிருந்த இந்த அமைப்புக்களை இணைத்து திறீ ஸ்டார் (Three Star) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவற்றிற்கு பயிற்சிகள் வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய றோ களமிறக்கியிருந்தது.

இந்த திறி ஸ்டார் தொடர்பான விடயங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்திய உளவு அமைப்பான ஆய்வு பகுப்பாய்வு பிரிவு (Research and Analyse Wing -RAW) றோ இனது கட்டமைப்பு (structure) பற்றி ஓரளவு தெளிவைப் பெற்றுக்கொள்வது, மாற்றுத் தமிழ் இயக்கங்கள் றோவின் கீழ் செயற்பட்ட விதம் பற்றிய அடிப்படைத் தெளிவைப்; பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இந்திய பிரதமரின் அலுவலகத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சு செயலகத்தில் பிரத்தியோகமாக உள்ள தலைமைச் செயலாளரின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படும் றோவின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற இரண்டு நாடுகளையும் கவனிக்கும்படியான ஒரு பிரிவின் (Subject area) கீழ்தான் செயற்பட்டது. பின்னர் அவசியம் கருதி இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று தனி பிரிவு (Subject area) உருவாக்கப்பட்டது.

இலங்கையில் றோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கென்று பல பிரத்தியோகப் பிரிவுகள் இருந்தன. தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கென்று இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு (Electronic Technical Section -ETC) என்றொரு பிரிவும், விஷேட நடவடிக்கைகளுக்காக (Office of Special Operations- OSO) என்றொரு பிரிவும் செயற்பட்டன.

இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென்று (Field Intelligence Bureau- FIB) என்றொரு பிரிவும் செயற்பட்டு வந்தது. ஈழத்தில் களமிறக்கப்பட்ட தமிழ் இயக்கங்கள் றோவின் OSO (Office of Special Operations) பிரிவின் கீழ் நேரடியாகவே செயற்பட்டு வந்தன. இந்த இயக்கங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சில உறுப்பினர்கள், விஷேட பயிற்சி அளிக்கப்பட்டு, FIB (Field Intelligence Bureau)என்ற இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரிவின் கீழ் செயலாற்றி வந்தார்கள்.

முக்கிய சவால்கள்:

வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் எதிர்கொண்ட மூன்று முக்கிய சவால்களை நிவர்த்திசெய்வதற்கு என்றே இந்த தமிழ் இயக்கங்கள் களமிறக்கப்பட்டிருந்தன.

1. இந்தியப் படையினருக்கு வடக்கு கிழக்கு மக்களால் பேசப்பட்ட மொழி அதாவது தமிழ் தொழி போதிய அளவிற்கு தெரிந்திருக்கவில்லை.

2. வடக்கு கிழக்கு பிரதேச நிலம் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருக்கவில்லை.

3. வடக்கு கிழக்கு மக்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு அந்த மக்களில் இருந்து ஒரு தரப்பினர் இந்தியப் படையினருக்கு தேவைப்பட்டார்கள்.

இதுபோன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காகவே தமிழ் இயக்கங்கள் இந்திய றோவினால் களமிறக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு மேலாக இந்தியாவிற்குச் சாதகமான சில சதி நடவடிக்கைகயில் ஈடுபடவும், றோவிற்கு நம்பகமான சிலர் தேவைப்பட்டார்கள். இலங்கையில் இந்தியப் படையினர் எதிர் கெரில்லாப் போரியல் (Counter Insurgency) நடவடக்கைகளுக்கு உதவவும், அவர்களின் உளவியல் நடவடிக்கைகளுக்கு (Psychological Operation) உதவவும் இந்த தமிழ் இயக்கங்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகவே இருந்தார்கள்.

பயன்படாத இந்தியப் பிரிவுகள்

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்டதும், இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பில் உளவு நடவடிக்கைகளுக்கென்று பொதுவாக இயங்கிவிரும் வேறு சில பிரிவுகளிடம் இருந்து, இலங்கைக்காவென்று பிரத்தியோமாக இயங்கிய றோவின் பிரிவுகள் தகவல் உதவிகளைக் கோரிப் பெற ஆரம்பித்தன.

இலங்கையின் நிலமைகள், குறிப்பாக விடுதலைப் புலகளின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள், வெளித்தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த பிரிவுகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

உதாரணமாக இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளுக்காகச் செயற்படும் (Aviation Research Centre-ARC) மற்றும் (Special Bureau Centre- SBC) போன்ற பிரிவுகளிடமும், இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் இந்தியப் படையினர் மற்றும் றோ பிரிவினருக்கு தேவையான போதிய தகவல்களை இந்தப் பிரிவினரால் வழங்க முடியாமல் போயிருந்தது.

விடுதலைப் புலிகள் தமக்கிடையேயாக தொடர்புகளைப் பேணுவதற்கு கையாண்ட முறைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்பட்ட தொழில்நுட்ப பிரிவினரால் அறிந்து கொள்ளமுடியாமலேயே இருந்தது.

விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பதில் பலத்த பின்னடைவே இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள் முழுக்க முழுக்க இதுபோன்ற மாற்று தமிழ் அமைப்புக்களிலேயே அனைத்திற்கும் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இந்திய உளவுப் பிரிவினரால் ஈழ மண்ணில் களமிறக்கப்பட்ட மூன்று முக்கிய தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் இந்தியாவின் கபட நாடகங்களுக்கு எப்படித் துணை போயின என்பது பற்றியும், அவர்கள் தமது சொந்த இனத்தை அழிப்பதற்கு எவ்வாறு துனை போயிருந்தார்கள் என்பது பற்றியும், இந்தத் தமிழ் இயக்கங்களின் கரங்களில் அகப்பட்ட ஈழத்தமிழ் இனம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டது என்பதையும் இனி வரும் அதிதியாயங்களில் சற்று விபரமாகப் பார்ப்போம்.

இன்று தமிழர்களின் உரிமைகள் பற்றி வாய்கிழியக் கத்திக்கொண்டு ஈழ மண்ணில் அரசியல் நடாத்திக்கொண்டு இருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் அந்தக் காலங்களில் இந்த தமிழ் ஆயுதக் குழுகளில் அங்கம் வகித்தபடி எப்படியெப்படியெல்லாம் தமது உறவுகளுக்கு இன்னல் விளைவித்தார்கள் என்பது பற்றியும் ஆதாரங்களுடன் நாம் இந்தத் தொடரில் ஆராய இருக்கின்றோம்.


 நன்றி தமிழ் வருகைக்கும் கருத்திடலுக்கும்  இந்த கட்டுரை வரையபட்ட காலபகுதிய விட தற்போதைய காலபகுதியில் மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாய் உள்ளது மீள நினைவிடுவதால் பாதகம் ஒன்றுமில்லையே.

புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.

பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல்களை அங்காங்கு மேற்கொண்டபடி இருந்தார்கள். அந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்குடன் தமிழ் இயக்கங்கள் களமிறக்கப்பட்டிருந்தன.

வடக்கு கிழக்கில் முக்கிய இடங்களில் முகாம் மற்றும் அலுவலகங்கள் அமைத்து இந்தத் தமிழ் இயக்கங்கள் நிலைகொண்டிருந்தன. இவ்வாறு நிலைகொண்டிருந்த தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் பாதுகாப்பில்..

வவுனியாவில் நிலைகொண்டிருந்த டெலோ அமைப்பினர் தமது அலுவலகத்தின் உள்ளே பிரதான நுழைவாயிலுக்கு அருகே இவ்வாறு பொறித்திருந்தார்கள்: “ஈழத்தின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது”.

அந்த அலுவலகத்திற்கு இந்தியப் படையினரின் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தில் வந்திறங்கிய இந்தியப் படை இடை நிலை அதிகாரி ஒருவர் அலுவலகத்தினுள் சென்று அலுவலகத்தில் இருந்த டெலோவின் வவுனியா பொறுப்பாளரிடம் இந்தியப் படை உயரதிகாரி சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்தியப் படையின் ஜீப்பிலேயே இந்த டெலோ முக்கியஸ்தரும் இந்தியப் படைத் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்றார். அங்கு புதிதாக ஒரு இந்தியப் படை உயரதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்று இருந்தார். அவருக்கு அருகில் தமிழ் இயக்கங்களுக்கு பொறுப்பான றோ அதிகாரியும் இருந்தார்.

டெலோ முக்கியஸ்தரை புதிய அதிகாரிக்கு அறிமுகம் செய்த அந்த றோ அதிகாரி,சிறிது நேரம் கலந்துரையாடிய பின்னர் ஒரு பணியை அந்த டெலோ முக்கியத்தரிடம் ஒப்படைத்தார்.

வவுனியாவில் கடமையாற்றும் ஒரு அரச உயர் அதிகாரி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் அவரைக் கடத்தவேண்டும் என்பதே அவர் இட்ட பணியாக இருந்தது. “அந்த அதிகாரியை இரகசியமாகக் கடத்தி மறைத்து வைத்திருக்கும் அதேவேளை, அவரது இளம் மனைவியையும் மகளையும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்” என்று புன்முறவலுடன் அந்த றோ அதிகாரி தெரிவித்தார்.

புகைப்படம் எடுங்கள்

அந்த அதிகாரி இறுதியாகக் கூறியதை அந்த டெலோ பொறுப்பாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பேச்சுக்குக் கூறுகின்றார் என்று நினைத்திருந்தார். ஆனால் அந்த அதிகாரி தொடர்ந்து கூறியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“அவரது மனைவியையும், மகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அவர்களை நிர்வாணமாகவும், அவர்களுடன் நீங்கள் ஒன்றாக இருப்பது போன்றும் புகைப்படம் எடுத்து அவருக்கு காண்பித்து அவரை மிரட்டி அவரை உங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அவருக்கு விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் அறிமுகம் இருக்கின்றது. அவரை வைத்து அவருக்கு அறிமுகமான புலி முக்கியஸ்தர்களை வரவழைத்து பிடிக்கமுடியும். அதவேளை அவரையும் எமக்குச் சாதகமாகச் செயற்படவைக்க முடியும்.” என்று கூறியிருந்தார்.

அந்த டெலோ பொறுப்பாளருக்கு திகைப்பாக இருந்தது. ஒரு உயரிய நோக்கத்திற்காகவே அந்த பொறுப்பாளர் தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். தனது இனம், தனது தேசம் விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர் போராட முன்வந்திருந்தார். அசந்தர்ப்பவசமாக அவர் தன்னை இணைத்து கொண்டிருந்த அமைப்பு பிழையான வழிநடத்தல்களால் திசைமாறிச் சென்றுவிட்டிருந்தது.

தனது அமைப்பைத் தடைசெய்த, தனது சக போராளிகளைக் கொலை செய்த விடுதலைப் புலிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் கோபமும் அவரிடம் காணப்பட்டது உண்மைதான். அதற்காக அந்த அன்னிய அதிகாரி கூறியது போன்று தனது இனத்திற்கு எதிராக இதுபோன்ற ஒரு கொடுமையை செய்வதற்கு அவர் தயாராக இருக்கவில்லை.

குறிப்பாக அந்த இந்திய அதிகாரி குறிப்பிட்ட அந்த தமிழ் அரசாங்க உயரதிகாரி உண்மையிலேயே ஒரு கண்ணியவான். கடமை உணர்ச்சி கொண்டவர். நேர்மையான அதிகாரி. இனப்பற்று கொண்டவர். அவரை துன்பப்படுவத்துவது தனது இனத்திற்குச் செய்யும் துரோகம் என்பது அந்த டெலோ போராளிக்கு நன்கு புரிந்தது.

ஆனாலும் அவர் அன்றிருந்த நிலையில், இந்தியப் படையினரை எதிர்த்து அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதிலும் குறிப்பாக அவர் சார்ந்த டெலோ அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களின் இருப்பு, பாதுகாப்பு, எதிர்காலம் அனைத்துமே இந்தியப்படையினரிலேயே தங்கியிருந்தது.

அதிகாரி கடத்தப்பட்டார்

அந்த இந்திய அதிகாரி இட்ட பணியை செய்வதாகக் கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார். அவர் மனதில் பெரிய போராட்டம். கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார். அந்த அதிகாரி கூறியபடி செய்வதில்லை என்று தீர்மாணித்தார். என்ன நடந்தாலும் பறவாயில்லை என்று முடிவெடுத்தார்.

மறுபடியும் இந்திய அதிகாரி தன்னை அழைத்துக் கேட்டால் என்ன பதில் கூறுவது என்று தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். இந்திய அதிகாரியை எதிர்க்காமலும், அதேவேளை தனது அமைப்பையும் விட்டுக்கொடுக்காமல் எவ்வாறு பதில் அளிப்பது என்றும் யோசித்து வைத்திருந்தார்.

அதேவேளை அந்த தமிழ் அரசாங்க அதிகாரியை எச்சரித்து வேறெங்காவது அனுப்பிவைக்கவேண்டு; என்றும் அவர் யோசித்திருந்தார். இந்திய அதிகாரி தன்னைத் தொடர்புகொள்ளட்டும் என்று காத்திருந்தார். ஆனால் இந்திய அதிகாரி அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ளவேயில்லை.

சிறிது நாட்டகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட அந்த தமிழ் அதிகாரியை விடுதலைப் புலிகள் கடத்திவிட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஓரிரு நாட்களின் பின்னர் மீண்டும் தனது கடமைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்த அந்த அதிகாரி முற்றிலும் இந்தியப் படையினருக்குச் சாதகமாக செயற்பட ஆரம்பத்திருந்தார்.

அந்த டெலோ பொறுப்பாளருக்கு உண்மை விளங்கிவிட்டது.

தான் செய்யத்தயங்கிய பணியை வேறு ஒருவர் செய்திருக்கவேண்டும் என்று அவருக்கு புரிந்தது. ஈ.என்.டீ.எல்.எப். அமைப்சேர்ந்தவர்கள் அந்த தமிழ் அரசாங்க அதிகாரியைக் கடத்திவத்து மிரட்டி பின்னர் அவரைப் பயன்படுத்தியதாக பின்னர் தெரியவந்தது.

பன்றியுடன் சேர்ந்து இயக்கங்கள்..

இதுபோன்று பல சம்பவங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றன. தமிழ் அமைப்புக்களைப் பயன்படுத்தி இந்தியப் படையினர் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டார்கள்.

ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிரான ஒரு வேகத்தில் களம் இறங்கியிருந்த தமிழ் அமைப்புக்கள் காலஓட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புப் படைகளாகத் தம்மை மாற்றிக்கொண்டு, இந்தியப் படையின் அனைத்து அட்டூழியங்களுக்கும் துணைபோக ஆரம்பித்தார்கள்.

பன்றியுடன் கூடிய பசுவும் “எதுவுவோ” தின்னும் என்கின்றதைப் போன்று, இந்தியப் படையினருடன் சேர்ந்து திரிய ஆரம்பித்த தமிழ் அமைப்பு உறுப்பினர்களும், ஹிந்தியுடன் சேர்ந்து இந்தியப் படையினரின் மற்றய அடாவடித்தனங்களையும் பழக ஆரம்பித்தார்கள்.


 ஈழத் தமிழருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 32) –நிராஜ் டேவிட்

  • November 19, 2012
இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவியது. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈஎன்.டீ.எல்.எப்., டெலோ போன்ற இயக்கங்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சந்தேகம் இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணி வகித்தது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே அதிக ஒத்துழைப்பு வழங்கியிருந்தர்கள்.

யாழ்ப்பாணத்தை இந்தியப் படையினர் கைப்பற்றி, ஒவ்வொரு சந்தியிலும் முகாம் அமைத்து நிலைகொண்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.ப். உறுப்பினர்கள் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டார்கள். யாழ் நகரில் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார்கள். மட்டக்களப்பில் கொண்டிறக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் சாம் தம்பிமுத்துவின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பல்பொடிக் கம்பெனியிலும் தங்கியிருந்தார்கள்.

ஆட்சேர்ப்பில் பத்மநாபா

யாழ்நகர் அசோகா ஹோட்டலில் தங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுடன் அந்த அமைப்பின் தலைவர் பத்மநாபாவும் தங்கியிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் இந்தியப் படையினருடன்  காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேநேரம், பத்மநாபாவோ தமது அமைப்பிற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். தாம் ஒரு பெரிய அமைப்பு என்பதை இந்தியப் படையினருக்கு நீரூபித்துக்காட்டி அதிக சலுகைகள் பெறுவது அவரது நோக்கமாக இருந்தது.

அக்காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு சற்றுப் பலவீனமடைந்திருந்தது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து டக்ளஸ் தலைமையிலான ஒரு முக்கிய அணி பிரிந்து சென்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். இனது இராணுவப் பொறுப்பாளராக டக்ளஸே இருந்த காரணத்தினால் அந்த அமைப்பின் இராணுவப் பயிற்சிபெற்ற பலரும் அந்த அமைப்பை விட்டு டக்ளஸ் உடன் வெளியேறியிருந்தார்கள். மற்றொரு தொகுதியினர் பிரிந்து சென்று ஈ.என்.டீ.எல்.எப். உடன் இனைந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைத் தடைசெய்த காரணத்தினாலும், புலிளுடன் சில இடங்களில் மேதவேண்டி இருந்ததாலும் மேலும் பல உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை விட்டு விலகியிருந்தார்கள். எனவே அமைப்பைப் பலப்படுத்த வேண்டுமானால் மீண்டும் ஆட்சேர்ப்பில் ஈடுபடவேண்டிய தேவை ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு இருந்தது.

இந்தியா வடக்கு கிழக்கு மாகான சபை ஒன்றை அமைத்து தமிழ் அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்போவதாக உறுதியளித்திருந்தது. எனவே அந்த மாகான சபையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமானால் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று பத்மநாபா நினைத்தார். முதலாவது அதிக உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பைப் பலப்படுத்துவது. இரண்டாவது இந்தியப் படையினருக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது.

இதற்கும் அவர்களுக்கு அதிகம் போராளிகள் தேவைப்பட்டார்கள். அதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சேர்ப்பில் தாராளமாக ஈடுபட்டது.

சமூகவிரேதிகளும்..

முன்னர் அமைப்பில் இருந்து விலகியவர்கள், அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், என்று பலரையும் ஈ.பி.ஆர்.எல்.எப். தம்முடைன் இணைத்துக்கொள்வதில் பின்நிற்கவில்லை.

விளைவு- பல சமுக விரோதிகளும் அந்த அமைப்பினுள் தம்மை இணைத்துக்கொண்டு அட்டகாசங்களில் இறங்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். இனுள் இணைத்துக்கொள்ளப்பட்டவர்தான் சுதாகர் என்கின்ற தங்கன். இவரது உண்மையான பெயர் பொண்ணுத்துரை கந்தையா. யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்தவர். முன்னர் இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். இனது ஆதரவாளராக இருந்தவர். இந்தியப் படையினருடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்ப்பாணம் வந்தபோது இந்தச் சுதாகரும் அந்த அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக பொறுப்பேற்றிருந்தார்.

இந்தியப் படையினரை விடவும் சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். இனர் அதிக அட்டகாசங்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று இவர்கள் எந்தவிதத்திலும் இந்தியப் படையினருக்கு சளைக்காமல் கோரதாண்டவம் அடியிருந்தார்கள். இவர்கள் நடத்திய அட்டூழியத்திற்கு உதாரணமாக பின்நாட்களில் ஊடகங்களில் வெளியான ஒரிரு சம்பவங்களைக் கூறமுடியும்.

புலிவேட்டை:

யாழ்பாணம் வட்டுக்கோட்டைக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர் பாரத். சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். குழு ஒன்று பாரத்தைச் தேடி அவரது விட்டிற்குச் சென்றது. வீட்டை உடைத்துச்கொண்டு உள்ளே புகுந்தார்கள். அங்கு பாரத் இல்லை. பாரத் இல்லாவிட்டால் என்ன? பாரத்தின் தங்கை ரஞ்சி அழகாக இருந்தாள்.

இந்த அப்பாவிப் பெண் மீது பாய்ந்தார் சுதாகர். அந்தப் பெண் அழுதாள். துடித்தாள். மன்றாடினாள். பாய்ந்தவர்கள் மனமிரங்கவில்லை. தமது வக்கிரத்தை கொடூரமாகத் தீர்த்துக்கொண்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டுச் சென்றான்றார்கள்.

நண்பருக்காக

சுதாகரின் குழுவில் இருந்த ஒருவரின் பெயர் ராஜா.  அவருக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தனது சகாவின் காதலுக்காக, ஆயுதம் ஏந்திக் களம் புகுந்தார் சுதாகர். சாதாரண களம் அல்ல. ஒரு முகாமைத் தாக்கும் திவிரத்துடன் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன.

துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து வெற்றிகரமாக அந்தப் பெண்ணை மீட்டு தனது சகாவிடம் ஒப்படைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வயோதிபர். அந்தப் பெண்ணுக்கு சகோதரர்களும் கிடையாது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளாகள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீதும், அவர்களின் வீடுகளின் மிதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும், கொள்ளை அடிப்பதும், பணம் கறப்பதும் இவரின் முக்கிய பணியாக இருந்தது.

இராணுவப் பொறுப்பாளர்:

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாணிப்பாய் பகுதிக்கு இராணுவப் பொறுப்பாளராக நியமிக்ப்பட்டிருந்தவர் நிசாம். அவரின் சொந்தப் பெயர் பிரபா. இணுவிலைச் சேர்ந்தவர்.

சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் பேர்போனவர். விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும், விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதில் இவர் மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு மனிதராகவே இருந்தார்.

அதுவும் கலை நயத்துடன் விதம் விதமாக மிகவும் கொரூரமாகக் கொலைகள் செய்வதில் மிகவும் வல்லவராக இவர் நோக்கப்பட்டு வந்தார்.

இந்தியப் படையினரின் காலத்தில் மட்டு;ம் இவர் 87 விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொலை செய்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்வார். மண்வெட்டியால் தலையை வெட்டிக் கொலை செய்வதில் இவர் மிகவும் பிரபல்யமானவர். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதையும் பார்த்து ரசிப்பாராம். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதை இவரது கோஷ்டியில் இருப்பவர்கள் மற்றய ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் விபரிப்பதில் அலாதி குஷி அடைவார்களாம்.

இவரது கொலைகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகச் செய்திகள், இவரால் கொலை செய்யப்பட்ட 87 நபர்களுள், சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் என்பவர் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், மற்றய 86 பேரும் அப்பாவிகள் என்றே குறிப்பிடுகின்றன.

தனது சகோதரியின் கணவனையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தி இவர் சுட்டுக்கொன்றது பற்றி இவரது தோழர்கள் பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.

இதுபோன்று இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினர் திருப்திப்படும்படி நடந்து வடக்கு கிழக்கில் முடிசூடா மண்ணர்களாக வலம்வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

ஈ.பி.ஆர் எல்.எப் அமைப்பின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ், மட்டக்களப்பின் முக்கிய புள்ளியாக இருந்த கிருபா, ராசிக், மதன், நிவாஸ், 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்  தெமட்டக்கொடவில் வைத்துக் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ரங்கப்பா, காளிதாஸ், கிருஷணமூர்த்தி, முறளி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இவர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஒருவர் விடுதலைப் புலி உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. விடுதலைப் புலிகளின் ஒரு ஆதரவாளனாக, புலி உறுப்பினரொருவரின் தூரத்து உறவினனாக, அல்லது இந்த மாற்றுக்குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவராக இருந்தாலே போதும். அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து கட்டி இழுத்துச் சென்று சித்திரவதை செய்துவிடுவார்கள். அவர்களின் சித்திரவதை பெரும்பாலும் கொலையில்தான் முடியும். சிலவேளைகளில் அடித்து நொறுக்கிவிட்டு பரிதாபப் பட்டு விட்டுவிடவும் செய்துவிடுவார்கள்- உங்களிடம் ஓரளவு பணவசதி இருந்தால்.

ஒரு நபருக்கு வேறு சில தகுதிகள் இருந்தாலும், இந்த தேசத் துரோகிகளின் கொடும்பார்வையில் பட்டுவிடும் அபாயம்; இருந்தது. அதாவது ஒரு நபர் அழகான சகோதரியை அல்லது அழகான மனைவியை கொண்டிருந்தலும் அவர் இந்த நபர்களுக்கு ஒரு புலியாகத் தென்பட்டு விடுவார். அவரை பிடித்துச் சென்று நையப்புடைத்து அடைத்துவைத்துவிட்டு, அவரை மீட்க வரும் அவரது சகோதரியை அல்லது மனைவியை தமது கோராப் பசிக்கும் பலியாக்கிய பல சம்பவங்களும் இருக்கின்றன. இவற்றில் சில உலகின் பார்வைக்கு தெரியவந்திருந்தன. பல சம்பவங்கள் வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.

மட்டக்களப்பு புது நகரைச் சேர்ந்த ஒருவர் பாலா. இவரது திருமணம் நடைபெற்ற விதம் பற்றி இப்பொழுதும் அந்தப் பிரதேசத்து மக்கள் பேசிக்கொள்வார்கள். அப்பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பை வைத்திருந்தார். திருமண விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பிரதேசத்தில் இதுவரை நடைபெறாத அளவிற்கு விமரிசையாக நடைபெற்றது. கட்டிட கொந்திராத்துக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒருவர் உணவுப் பொறுப்பு, மற்றொருவர் தோரணப் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு வருகை தந்த பிரமுகர்கள் நகைகள்தாம் பரிசு தரவேண்டும் என்பது போன்று பாலாவின் கூட்டாளிமாரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவில் நடைபெறுவதைப் போன்று அந்த திருமணம் கெடுபிடியுடன் அட்டகாசமாக நடைபெற்றது. (1989இல் இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் இவரைப் பிடித்து இவரிடமிருந்த நகைகளையெல்லாம் இவருக்கு அணிவித்து ஊர்வலம் கொண்டு சென்றது வேறு கதை..)

இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் குழு உறுப்பினர்கள் ஆடிய கோர தாண்டவங்கள் பற்றி எழுத முனைந்தால் அதற்கென்று பல அத்தியாயங்களை ஒதுக்கவேடி வரும்.

ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா இழைத்த துரோகங்களின் பட்டியலில், ஈழத் தமிழருக்கு எதிராக ஈழ விடுதலை இயக்கங்களையே களம் இறக்கியிருந்ததும் ஒன்று என்ற வகையில் இந்த விடயம் பற்றி மேலோட்டமாகப் பார்த்திருந்தோம்.

இனி ஈழமண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அந்த நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினம் அனுபவித்த அவலங்கள் பற்றியும் தொடர்ந்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அவ்வப்பொழுது தமிழ் இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றியும் பார்ப்போம்.

தொடரும்

 


மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்கள்-(அவலங்களின் அத்தியாயங்கள்- 33) –நிராஜ் டேவிட்

இந்திய -புலிகள் யுத்தத்தின் பல விடயங்களை நாங்கள் ஏற்கனவே விரிவாக பார்த்திருந்தோம். யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ்க் குழு உறுப்பினர்களாலும்; தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் ஓரளவு பார்த்திருந்தோம்.

இனி இந்தியப்படையினரின் தமிழ் மண் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் மற்றைய சில பக்கங்கள் பற்றித்தொடர்ந்து பார்க்க இருக்கின்றோம்.

கனரகப் பிரிவுகள்:

பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள்.

புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள். யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது. இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்கபட்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் இந்தியப் படை அதிகாரிகளாகக் கடமையாற்றிய முக்கிய அதிகாரிகள் மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம். இவர்கள் பின்நாட்களில் இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்:

நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள். கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோணமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன. இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.

இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகனங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நாற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள், பீ-40 ரக ஏவுகணைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன.

இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.

மட்டக்களப்பில் இந்தியப்படை

இந்தியப்படையினர் ஈழ மண்ணை ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பற்றி இந்தத் தொடரில் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கின்றோம்.

இந்தியப்படையினரின் காலத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், இந்தியப்படையினரின் பதில் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள், குறிப்பாக கிழக்கில் இருந்த முஸ்லீம்கள் மீது இந்தியப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்கள் போன்றனவற்றை தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பால் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கெரில்லாப்பாணியிலான தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு நகருக்கு வடக்காக மட்டக்களப்பு கொழும்பு ஏ-11 வீதியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள நாவலடிச் சந்தியில் வைத்து இந்தியப்படையினரின் வாகனத் தொடர் அணிக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் பாணியிலான தாக்குதல் மட்டக்களப்பில் இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்ககுதல் நடவடிக்கைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை அந்த நேரத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவின் நேரடி வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் குடும்பிமலைப் பிரதேசப் பொறுப்பாளராகச் செயற்பட்ட தளபதி ரூபன் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட் 4-6 (code four – six) என்று புலிகளால் சங்கேத பாசையில் குறிப்பிடப்படுகின்ற வந்தாறுமூலைப் பிரதேசம் மற்றும் கோர்ட் 4-9 என்று குறிப்பிடப்படுகின்ற வாகரைப் பிரதேசம் மற்றும் தொப்பிக்கலை என்று அழைக்கப்படுகின்ற குடும்பிமலைப் பிரதேசப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 போராளிகள் வரையில் இந்தத் தாக்குதலில் கலந்துகொண்டார்கள்.

ஓட்டமாவடியை அண்டிய மையிலங்கரச்சி, காவத்தை முனை மற்றும் தியாகவட்டவான் பகுதிகளில் மறைந்திருந்த விடுதலைப் புலிகள், இந்தியப் படையின் நீண்ட வாகனத்தொடரணி மீது அதிரடித்தாக்குதல் ஒன்றை நடாத்தியிருந்தார்கள். இந்தத் திடீர் தாக்குதலில் 60 இற்கும் அதிகமான இந்தியப் படையினர் கொல்லப்பட்டார்கள்.

ஓட்டைமாவடிப் பிரதேசம் ஒரு முஸ்லிம் பிரதேசம் என்பதால், இந்தியப் படையினர் சற்று கவலையீனமானவே வந்திருந்தார்கள். இங்கு புலிகள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று கூடவந்த தமிழ் இயக்க உறுப்பினர்களால் அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. இதைக் கணிப்பிட்டே விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு அந்த இடத்தைத் தெரிவுசெய்தார்கள்.

இந்தியப் படையினருக்குப் பாரிய இழப்பு.

தமது இயலாமையை அவர்கள் அப்பகுதி மக்கள் மீது வெளிப்படுத்தினார்கள். நூற்றிற்கும் அதிகமானவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஓட்டைமாவடி முஸ்லிம் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுகள் மிகப் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஓட்டைமாவடி என்கின்ற பெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி பொல்லனருவை மாவட்டத்திற்கு இடம்பெயரும் அளவிற்கு பாரிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

விடுதலைப் புலிகள் தரப்பில் வந்தாறுமூலையைச் சேர்ந்த ராஜு (2ம் லெப்) மரணமடைந்தார்.

வெற்றிகரமான அந்தத் தாக்குதலை முடித்துக்கொண்ட புலிகளின் அணிகள் வாகைநேரிப் பிரதேசத்திற்கு பின்நகர்ந்து வாகநேரிப்பிப் பம்பிமனையில் தளம் அமைத்து தங்கியிருந்துவிட்டு பின்னர் தமது பின்தளங்களை நோக்கிச் சென்றிருந்தார்கள்.

சிறப்புப் படைப்பிரிவு

அந்த நேரத்தில் மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைத் தலைமைக்கு மிகுந்த அதிர்சியினை ஏற்படுத்தியிருந்த தாக்குதல் என்று இந்தத் தாக்குதலைக் குறிப்பிட முடியும்.

மட்டக்களப்பில் புலிகள் தரப்பில் ஒரு சில பயிற்றப்பட்ட போராளிகள் மாத்திரமே செயற்படுவதாகத்தான் அவர்களுக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. சிறிய அளவிலான கண்ணிவெடித் தாக்குதல்கள், கிறனைட் வீச்சுக்கள் இவற்றினைத் தவிர மட்டக்களப்பில் புலிகளால் பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்றே அவர்கள் கணிப்பிட்டும் இருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான போராளிகளை ஒருங்கிணைத்து, கச்சிதமாகத் திட்டமிட்டு இத்தனை நேர்த்தியாக மட்டக்களப்பில் ஒரு தாக்குதலைப் புலிகளால் மேற்கொள்ளமுடியும் என்கின்றதான செய்தி இந்தியப்படைத் தலைமைக்கு பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

உடனடியாக ஒரு சிறப்புப் படைப்பிரிவு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் இந்திய இராணுவத் தலைமைக் காரியாலயத்திற்குப் பறந்தது.

கிழக்கில் புலிகளின் தாக்குதல்களில் இருந்த இந்தியப் படையினரின் உயிர்களைக் காப்பாற்றவேண்டுமானால், கிழக்கில் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் எதிர் கெரில்லாப் போரியலில்(Counter Insurgency) சிறப்புப் பயிச்சி பெற்ற இராணுவப் பிரிவு மட்டக்களப்பிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் கிழக்கின் இராணுவத் தலைமையினால் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் 57வது மவுன்டன் டிவிசனின்(Mountain Division) மூன்று பிரிகேட்டுக்கள் மட்டக்களப்பிற்குக் அவரச அவரசமாக அனுப்பப்பட்டன.

அப்பொழுது கிழக்குப் பிராந்தியத்தின் நடவடிக்கைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மேஜர் ஜெனரல் டீ. சிங், அசாமிலுள்ள தனது தலைமைக் காரியாலயத்தில் இருந்து நேரடியாக இந்தப் படையணிகளை வருவித்திருந்தார்.

இந்தப் படைப் பிரிவின் முதலாவது பிரிகேட் 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி மட்டக்களப்பு ஆலையடிச் சோலையில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்தப் படையணிகள் ஏறத்தாழ இருபது வருடங்களாக இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பிரதேசங்களில் எதிர்கெரில்லாப் போரியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

மட்டக்களப்பில் புலிகளின் தாக்குதல் வீச்சுக்கள் அதிகரிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த விஷேட படையணியினர் வருவிக்கப்பட்டிருந்தார்கள். பெரும்பாலும் சீக்கியர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த விஷேட படையணியினர் வழமைக்கு மாறாக ஏ.கே.-47 ரகத் துப்பாக்கிகளை சுமந்து வந்திருந்தார்கள்.

சாதாரணமாக இந்தியப் படையினர் எல்.எல்.ஆர்.(SLR- Self Load Rifle), எல்.எம்.ஜீ. (LMG- Light Machine Guns), மற்றும் எஸ்.எம்.ஜீ.(SMG- Sub Machine Gun)- ரக துப்பாக்கிகளையே வைத்திருப்பது வழக்கம். அந்தத் துப்பாக்கிகளைச் சங்கிலியில் பிணைத்து தமது இடுப்புப் பட்டிகளில் இணைத்திருப்பார்கள். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்.

புலிகள் துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றுவிடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடாம்.

ஆனால் 1988 பெப்ரவரியில் மட்டக்களப்பில் வந்திறங்கிய சீக்கியப் படைப்பிரிவினர் நவீன ஏ.கே.-47 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். மிகவும் வாட்டசாட்டமான உடற் கட்டமைப்புடன், மீசை தாடி, தலைப்பாகை என்று பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் தோற்றத்துடன் வலம் வந்தார்கள்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழகத்திலும், வாழைச்சேனைக் காகித ஆலையிலும், மட்டக்களப்பு மென்றேசா முகாமிலும் இந்த பிரிகேட்டைச் சேர்ந்த படைவீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

புளூமிங் டுளிப் இராணுவ நடவடிக்கை

இந்த விஷேட பயிற்சி பெற்ற படையினர் மட்டக்களப்பிற்குக் கொண்டுவரப்பட்டு சில நாட்களாக அவர்கள் களமிறக்கப்படவில்லை. முகாம்களிலேயே வைக்கப்பட்டு தீனி போடப்பட்டு பயிற்சி நடவடிக்கைகளல் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள்.

அடிக்கடி இடம்பெறுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் இந்த விஷேட படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படவில்லை. வீதி ரோந்து நடவடிக்கைகளிலும் இந்தப் பிரிவினர் ஈடுபடுத்தப்படவில்லை. பகல் நேரங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது. மாலையானதும் விளையாடுவது. இரவு வேளைகளில் நன்றாகத் தூங்குவது என்று உடலை வளர்த்து வந்தார்கள்.

ஒரு நாள் திடீரென்று இவர்கள் அணிவகுத்து நின்றார்கள். புலிகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை ஒன்றிற்காக அவர்கள் களம் இறக்கப்பட்டார்கள்.

குறிப்பிட்ட அந்த நடவடிக்கைக்குப் பெயர் “புளூமிங் டுளிப்“ இராணுவ நடவடிக்கை (Operation Blooming Tulip). மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிப்பதே அந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

அப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது.

அந்தத் தளத்தின் பெயர் “பெய்ரூட் பேஸ்“ என்று இந்தியப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த பெய்ரூட் பேசிலேயே அமைந்திருந்ததாக இந்தியப்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கருணா, அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரான்சிஸ், தளபதி ரூபன், தளபதி காந்தன், கரிகாலன்,  போன்றவர்களும் இந்த பெய்ரூட் முகாமிலேயே தங்கியிருப்பதாகவே இந்தியப் படையனருக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

அசாமில் இருந்து தருவிக்கப்பட்ட தமது சிறப்புப் படைப்பிரிவைக் கொண்டு இந்த முகாமைத் திடீரென்று சுற்றிவவைத்து, அங்கிருப்பவர்களைத் தாக்கியழித்து, அங்கிருந்தவர்களைக் கொலை செய்து, அந்த இடத்தில் நிலைகொள்வதே இந்தியப் படையினரின் நோக்கமாக இருந்தது.

கச்சிதமாகத் திட்டம் தீட்டினார்கள். ஒரு நாள் அதிகாலை இந்தியப்படையின்  57வது மவுன்டன் டிவிசனின்(Mountain Division) படையினர் மெதுவாக நகர ஆரம்பித்தார்கள் -புலி வேட்டைக்கு.

தொடரும்


About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply