இந்தியாவை நேசித்த(?) பிரபாகரன்! (அவலங்களின் அத்தியாயங்கள் (53-56)

இந்தியாவை நேசித்த(?) பிரபாகரன்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 53)

நிராஜ் டேவிட்

  • January 31, 2013
ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவந்த துரோக நடவடிக்கைகளின் உச்சமாக, ஸ்ரீலங்காவுடன் அது செய்துகொண்ட ஒப்பந்தம் அமைந்திருந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் நலன்களை அடகுவைத்து எழுதப்பட்டிருந்தது என்பதையும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டிய நிர்ப்பந்தம் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்தது என்பதையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், 04.08.1987ம் திகதி மாலை, சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆற்றிய உரையில் தெளிவாக விளக்கியிருந்தார்.“நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்’’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், அன்றைய காலகட்டத்தின் யதார்த்த நிலையை அவர் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களின் பிரசித்திபெற்ற சுதுமலை பேச்சின் சாராம்சம் இதுதான்:

“எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே!

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. எமக்கு அதிர்ச்சி ஊட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களையோ கலந்தாலோசிக்காமல் மிகவும் அவசர அவசரமாக, இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அமுலாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.

ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய அரசிடம் தெள்ளத் தெளிவாக விளக்கினோம்.

ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோம் என்று இந்தியா கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியம் அடையவில்லை.

இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லரசின் வியூகத்தின் கீழ் ஸ்ரீலங்காவைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருந்தன. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதில் அதிக அக்கறை காண்பித்தது.

அதேசமயம், தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியதாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.

ஆனால் எமது ஆட்சேபத்தால் பயன் எதுவும் ஏற்படவில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

15 வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகங்கள் பல புரிந்து, சாதனைகள் செய்து எத்தனையோ உயிர்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால், அதனை எம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இந்தியப் பிரதமரின் உறுதிமொழிகள்:

இந்தியாவின் மான்புமிகு பிரதமர் ராஜீவ் காந்தி என்னைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். நான் அவரிடம் எமது மக்களின் நிலைப்பாட்டையும், எமது பிரச்சனைகளையும் மனம்திறந்து எடுத்துரைத்தேன். இனவாத சிங்கள அரசாங்கத்தின் மீது எனக்கு சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காண்பித்தேன். இந்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒரு போதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று எமது அவநம்பிக்கையையும் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உத்தரவாதத்தையிட்டும் அவருடன் பேசினேன்.

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தகைய மாபெரும் தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் மீண்டும் விபரிக்க வேண்டியதில்லை.

ஆயுத ஒப்படைப்பு

ஆயுதங்களை நாம் ஒப்படைப்பதானது, எம்மிடையேயுள்ள பொறுப்புக்களை கைமாற்றிக் கொடுப்பதையே காட்டுகின்றது. ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தனித் தமிழீழம்

எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டுமென்று நான் கருதவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இவ் ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வு, தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும்.

ஒரு விடயத்தை இங்கு எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ் ஈழம் என்ற குறிக்கோளினை அடையும் வரை நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன்.

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது குறிக்கோளினை அடைவதற்கான போராட்டங்கள் மாறப்போவதேயில்லை.

எமது குறிக்கோளினை ஈடேற்றுவதற்கு எமது மக்களாகிய உங்கள் முழுமனதுடனான, முழுமையான ஒன்றிணைந்த ஆதரவு எப்பொழுதும் எமக்கு இருக்கவேண்டும்.

தமிழீழ மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு, இடைக்கால நிர்வாக அமைப்பில் நாம் இணையக்கூடிய அல்லது தேர்தலில் நிற்கக்கூடிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ அல்லது முதன் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.’’

புலிகளின் தலைவர் வே.பிரபாகன் அவர்களின் சுதுமலைப் பேச்சு வித்தியாசமான பல உணர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.

புலிகள் விரும்பாத ஒரு விடயத்தை இந்திய அரசு தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றதோ என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் முதன்முதலாக ஏற்பட ஆரம்பித்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகமான சில காரியங்கள் நடைபெறக்கூடியதான அபாயநிலை ஏற்பட்டுள்ளதா என்கின்ற அச்சம் தமிழ் மக்கள் மனங்களை படிப்படியாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சரத்துக்கள் பற்றியும், இந்தியப் படைகளின் வருகையைப் பற்றியும் தமிழ் மக்கள் சந்தேகம்கொள்ள ஆரம்பித்தார்கள்.

கொடிய யுத்தம் நின்றுபோயிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஈழத்தமிழர்கள், நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நகர்வுகள் பற்றியும், அது மேற்கொள்ள ஆரம்பித்திருந்த நடவடிக்கைகள் பற்றியும், ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் பற்றியும் மக்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தியாவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் படிப்படியாக மக்கள் மனங்களில் தோன்ற ஆரம்பித்தன.

மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டு, மிகவும் உணர்ச்சிகரமாக  வழங்கப்பட்டிருந்த பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை, இத்தனை காரியங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்த்த ஆரம்பித்திருந்தது.

தொடரும்…


ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 54- நிராஜ் டேவிட்

  • February 6, 2013
தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி:
ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.

இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதல் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள். குறிப்பாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இந்தியா பற்றி அதிக எச்சரிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளவராகவே இருந்து வந்துள்ளார் என்பதற்கு, அந்நாட்களில் வெளியான பல செய்திகள் சாட்சி பகர்வனவாக இருக்கின்றன.தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியா ஈழத்தமிழ் அமைப்புக்களை வளர்க்க முனைந்ததே தவிர, ஈழத்தமிழர்களில் ஒன்றும் அக்கறை கொண்டு அது எந்தக் காரித்தையும் மேற்கொண்டிருக்கவில்லை.

இதனை புலிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தியாவின் இந்த நோக்கத்தை இயன்றவரை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே புலிகளும் எண்ணியிருந்தார்கள்.

இந்திய அரசியலை, அந்த அரசியலில் உள்ள ஓட்டைகளை, தமது இன விடுதலைப் போருக்கான ஒரு தளமாக முடியுமான அளவு பயன்படுத்திக் கொள்ளும் திட்டமே புலிகளின் தலைமையிடம் இருந்து வந்துள்ளது.

ஈழ விடுதலைக்காக போராட முன்வந்த அனைத்து இயக்கங்களும் இந்திய அரசினால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டன என்பதில் எந்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால், புலிகளைப் பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே அவர்கள் இந்தியாவின் விடயத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையின் உண்மையான நோக்கம் பற்றி அவர்கள் அதிகம் சிந்தித்தார்கள். இந்தியாவின் ஒவ்வொரு அசைவினதும் உண்மையான காரணம் பற்றிய தெளிவினை அவர்கள் நன்றாகவே பெற்றிருந்தார்கள்.

மற்றைய இயக்கங்கள் போன்று முற்று முழுதாக இந்தியாவை மட்டுமே நம்பி புலிகள் ஒருபோதும் தமது போராட்டத்தை நடாத்தவில்லை. மற்றைய இயக்கங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்கப்பட்டுவிட, புலிகள் அமைப்பு மட்டும் காலத்தையும் வென்று, இன்றும் நிலைத்து நிற்பதற்கு இதனைத்தான் பிரதான காரணம் என்று நான் கூறுவேன்.

இன்று உலகத் தலைவர்களால் வியப்புடன் நோக்கப்படும் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அக்காலத்திலேயே இந்தியாவிடம் ஏமாறாத ஒரு மனிதனாக, எதிர்காலத்தை கணிப்பிடும் ஒரு அறிஞராக இருந்து வந்திருக்கின்றார் என்பதற்கு அக்காலத்தில் வெளியான பல செய்திகள் சான்று பகர்கின்றன.

கதறி அழுத கிட்டு:

80களின் ஆரம்பத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வைத்து புலிகளின் ஒரு தொகுதி போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்கியது. பொன்னம்மான் (குகன்) என்பவர் தலைமையில், விடுதலைப்  புலிகள் அமைப்பின் ஒருதொகுதிப் போராளிகள் பயிற்சிக்காக சென்றிருந்தார்கள்.

புலிகளின் முன்னாள் யாழ் தளபதி கிட்டு அவர்களும் பயிற்சிக்காகச் சென்றிருந்தார். மிகவும் குளிர் சூழ்ந்த இடத்தில் நடைபெற்ற பயிற்சிகளின் போது, போராளிகள் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

பயிற்சி நெறிகளுக்கு இந்தியப் படையைச் சேர்ந்த கேணல் ஒருவர் பொறுப்பாக இருந்தார். அவர் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி அதிக அனுதாபம் கொண்டவராக இருந்ததுடன், பயிற்சி பெறச் சென்ற போராளிகள் விடயத்திலும் அதிக அக்கறையை வெளிப்படுத்தினார். புலிகளுடன் அதிக பரிவுடனும், பாசத்துடனும் அவர் நடந்துகொண்டார்.

பயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். அந்த இந்திய கேணலின் கண்கள் கலங்கிவிட்டன. போராளிகளும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டு ஓடிச் சென்று அந்த இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டார். பயிற்சியை முடித்துக் கொண்ட புலிகள் கண்ணீரோடு விடைபெற்று சென்னையை வந்தடைந்தார்கள்.

சென்னை அடையாற்றில் தங்கியிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தமது பயிற்சி அனுபவங்களை போராளிகள் பகிர்ந்து கொண்டார்கள். இடைநடுவே, கிட்டு இந்தியப்படை கேணலின் மடியில் புரண்டு விம்மியழுத கதையையும் போராளிகள் பிரபாகரனிடம் கூறிவைத்தார்கள்.

அதனை கேட்டு சிறிது நேரம் மௌனம் சாதித்த பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம். ஆனால் இந்தியாவோ வேறொரு நோக்கத்திற்காக எங்களுக்குப் பயிற்சி தந்திருக்கின்றார்கள்.

எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் இந்திய இராணுவம் திரும்பினால், இதே கேணலுக்கு எதிராக சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாகவேண்டும்.”

கிட்டுவும் மற்றைய போராளிகளும் திகைத்துப் போனார்கள். முழுத் தமிழ் இனமும் இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தன.

புலிகளின் தலைவர் ஆரம்பம் முதலே ஒரு நிதர்சனத் தலைவராக இருந்து வந்துள்ளார் என்பதுடன், அவர் இந்தியாவின் விடயத்தில் மிகவும் அவதானமாகவே சிந்தித்து வந்துள்ளார் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சான்று பகர்கின்றது.

வெளிநாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்:

இந்தியா பற்றி புலிகளின் தலைவர் கொண்டிருந்த எச்சரிக்கை உணர்வுக்கு,  அக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற மற்றொரு நிகழ்வையும் உதாரணமாகக் கூற முடியும். இந்தியா ஈழத் தமிழ் போராளிகளுக்கு பயிற்சியை வழங்கிய பின்னர் ஆயுதங்களையும் கொடுக்க முன்வந்தது.

இந்தியா தமக்கு ஆயுதங்களைத் தர முன்வந்த செய்தியை அறிந்த போராளிகளுக்கும், இயக்கத் தலைவர்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. தமது விடுதலை நோக்கிய பாதையில் இனிமேல் துணிகரமாக பயணிக்கலாம் என்ற எண்ணம் ஒவ்வொரு போராட்ட அமைப்புக்கள் மத்தியிலும் காணப்பட்டது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மத்தியிலும் இந்த மகிழ்ச்சி காணப்படவே செய்தது.

இந்தியா தமக்கு ஆயுதம் வழங்கப் போகின்றது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்கள். கிட்டுவும் அவர்களுடன் சென்றிருந்தார். மிகவும் குதூகலத்துடன் சென்ற அவர்களிடம் தலைவர் பிரபாகரன் தெரிவித்த கருத்து, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்” என்று பிரபாகரன் அவர்களிடம் தெரிவித்தார்.

பிரபாகரனின் கருத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. இந்தியாதான் ஆயுதம் தரப் போகின்றதே…. பின்னர் எதற்காக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்?  அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

அவர்களுடைய மனங்களில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“இந்தியா ஆயுதம் தருகின்றது என்றால், எம்மை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில்தான் அது எமக்கு ஆயுதங்களைத் தருகின்றது. நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால், சொந்தமாகவும் நாம் ஆயுதங்களைத் தேடிக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்பொழுது, பிரபாகரன் அவர்களுக்கு ஒரு புதிராகவே தென்பட்டார். பிரபாகரன் அவர்களின் உள்நோக்கத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு பல வருடங்கள் பிடித்தன. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு, புலிகள் ஒப்படைக்க வேண்டிய ஆயுத விபரங்கள் இந்தியப் படையினரால் வெளியிடப்பட்ட போதுதான், தமது தலைவனின் தீர்க்கதரிசனத்தின் பரிமானத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பலவந்தமாக களைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கிடையேயும் பாரிய யுத்தம் மூண்ட போதுதான், புலிகள் வெளியில் இருந்தும் ஆயுதங்களைத் தருவித்துக்கொண்டதன் அனுகூலத்தை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஒரு தலைவன், எதிர்காலம் பற்றி எந்த அளவிற்கு சிந்திக்கவேண்டும், எப்படியான தொலைநோக்குகளையெல்லாம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவின் ஏஜண்டுகள்:

இந்தியாவின் உள்நோக்கத்தை ஆரம்பம் முதலே புலிகள் அறிந்து செயற்பட்டிருந்தார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறமுடியும்.

1986ம் ஆண்டு மே மதம் 7ம் திகதி புலிகளுக்கும், டெலோ அமைப்பினருக்கும் இடையில் பாரிய மோதல் வெடித்தது. டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அந்த அமைப்பையும் தடைசெய்தார்கள்.

டெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் புலிகளால் கொலை செய்யப்பட்டார். நுற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் இருந்தார்கள்.

டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கும், டெலோ அமைப்பை புலிகள் தடைசெய்ததற்கும், அந்த அமைப்பிற்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை புலிகள் முன்வைத்திருந்தார்கள்.

1) டெலோ உறுப்பினர்கள் மக்களைத் துன்புறுத்தி, கொள்ளையிட்ட குற்றவாளிகள்.

2) டெலோ – இந்திய ஏகாதிபத்தியத்தின் “ஏஜண்டாக” செயற்பட்டுக்கொண்டு இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை திசை திருப்புவதில் இந்தியா காண்பித்து வந்த அக்கறையை ஆரம்பத்திலேயே புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள். இந்தியா தனது திட்டத்திற்கு டெலோ அமைப்பை பயன்படுத்த ஆரம்பித்ததையும் புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள்.

தமிழீழத்திற்கு எதிரான இந்தியாவின் எந்தவொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கும் மாற்றுத் திட்டங்களை வகுப்பதில் புலிகள் ஆரம்பம் முதலே மிகவும் எச்சரிக்கையுடன் செயலாற்றி வந்துள்ளார்கள். டெலோ அமைப்பிற்கு எதிராக 1986ம் ஆண்டு மே மாதத்திலேயே புலிகள் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்து ஈழமண்ணில் இந்தியா புலிகளுக்கு எதிராக மேற்கொள்ள ஆரம்பித்திருந்த ஆயுதக் களைவையும் புலிகள் அணுகினார்கள்.

தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் இவை பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்.

தொடரும்…


புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 55): நிராஜ் டேவிட்

  • by February 26, 2013
ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில், புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப் படைகள் தயாராக இருந்தன.
அதனால் தமது உயிரிலும் மேலாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பு தினம், 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. பாலாலி விமானப் படைத்தளத்தில் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.ஆயுத ஒப்படைப்பு மிகவும் சுமுகமாக ஆரம்பமானது. ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதிகளாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல,  ஸ்ரீலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க, ஸ்ரீலங்கா இராணுவத்தின் வடபிராந்திய தளபதி பிரிகேடியர் ஜெரி.டி.சில்வா போன்றோர் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள்.

இந்திய அமைதிகாக்கும் படைகள் சார்பாக, ஜெனரல் திபீந்தர் சிங் (OFC, IPKF), மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் (GOC, 54 Division, IPKF), பிரிகேடியர் பெர்ணான்டஸ் (Pacification Specialist, IPKF) உட்பட மேலும் பல இராணுவ உயரதிகாரிகளும் சமுகம் அளித்திருந்தார்கள்.

புலிகளின் ஆயுத ஒப்படைப்பை தமது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாற்றிவிடும் ஆர்வத்திலும், வேகத்திலும், உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு திரண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்பட இருந்த ஆயுதங்களை ஏற்றியபடி புலிகளின் ”பிக்கப்” வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி வந்தன.

தமிழீழ இலக்கத் தகடுகளுடனும், புலிக் கொடிகளைப் பறக்கவிட்டபடியும், புலிகளது வாகனங்கள் அணிவகுத்து வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டது.

விடுதலைப் புலிகளின் சார்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி, ஆயுத கையளிப்பின் அடையாளமாக, ஒரு கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமது “பிக்கப்” வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, ஸ்ரீலங்கா சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அறிவித்தலை பகிரங்கமாக வெளியிட்டார்.

சேபால ஆட்டிக்கல கூறும்போது,“ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். இரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை போன்றனவற்றால் எமது ஜனநாயக சமுகம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வந்ததை, இந்த ஆயுத ஒப்படைப்பு இன்று முடிவிற்குக் கொண்டுவந்துள்ளது. இன்றய தினத்தில் இருந்து, இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த நாட்டில் சமாதானமாகவும், நல்லினக்கத்துடனும் வாழுவோம் என்று நான் உண்மையாகவே எண்ணுகின்றேன்…” என்று குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள்:

மிகவும் சுமுகமாக நடைபெற்று முடிந்த இந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வுகளின் போது, ஒருசில சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன:

புலிகள் சார்பாக முதன்முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த யோகி, மிகவும் கவலை அடைந்த மனநிலையுடன், ஏனோதானோ என்று நடந்து கொண்டார். மிகவும் வேகமாக அவர் தனது கைத்துப்பாக்கியை சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்து விட்டதால், அவர் ஆயுதத்தை ஒப்படைக்கும் காட்சியை தமது கமராக்களில் படம் பிடித்துக்கொள்ளுவதற்கு, புகைப்படப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் தவறிவிட்டார்கள்.

எனவே, மீண்டும் ஒரு தடவை ஆயுத கையளிப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் யோகியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் யோகியோ அதற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

மறுபடியும் அடையாள ஆயுதக் கையளிப்புக் காட்சியை நடாத்துவதற்கு சேபால ஆட்டிக்கல தயாராக இருந்த போதிலும், யோகி அதற்கு உடன்பட உறுதியாக மறுத்துவிட்டார். இதனால், ஆயுதக் கையளிப்பை பதிவு செய்வதற்கு படப்பிடிப்பாளர்களால் முடியவில்லை. யோகியால் கையளிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அங்கிருந்த மேசை ஒன்றின் மீது வைக்கப்பட அதன் மீது சேபால ஆட்டிக்கல தனது கைவைத்தபடி புகைப்படங்களுக்கு காட்சி தந்தார்.

இந்தப் படங்களே பின்னர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி இருந்தன. புலிகளின் ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக, யோகியால் ஒப்படைக்கபட்டிருந்த கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆரிடம் கையளிக்க வேண்டும் என்று கூறிய சேபால ஆட்டிக்கல, அதனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ஆயுத ஒப்படைப்பு நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு என்று கூறி, ஒரு தொகுதி இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா தனது விமானங்களின் முலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தது.

கடவுச் சீட்டுக்களோ,விசாக்களோ, ஸ்ரீலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியோகூட இல்லாமல், இவ்வாறு அழைத்துவரைப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஆயுதக் கையளிப்பு நடைபெற்ற கட்டிடத்தில் முன்னுரிமை கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

இலங்கை ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கையில், இந்தியாவின் தூரதர்ஷன் உட்பட, இந்தியாவில் இருந்து விஷேட விமானத்தில் வந்த ஊடகவியலாளர்களுக்கு, நிகழ்வுகளை பதிவு செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விஷேட விமானத்தில் பலாலியில் வந்திறங்கியிருந்த ஊடகவியலாளர்கள், பலாலி விமானத்தளத்தின் அனைத்து இராணுவ நிலைகளையும் பார்வையிடவும், வீடியோ படம் பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள். அது, ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகளின் முணுமுணுப்புக்கு இலக்கானது. ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், இந்திய “றோ” உளவாளிகளும் அங்கு வந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தார்கள்.

இந்திய அதிகாரிகள், புலிகளுடனும், ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளுடனும், ஊடகவியலாளர்களுடனும் புலிகளது ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் போது, ”Surrender” (சரணாகதி) என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவிக்காது தவிர்த்துக்கொண்டார்கள். “ஆயுதக் கையளிப்பு” , ஆயுத ஒப்படைப்பு, (Arms Handing over) என்றுதான் குறிப்பிட்டார்கள்.

புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.

தொடரும்..


மூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்: 56

விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது – புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இரண்டாவது – திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் மாத்தையாவின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் மாத்தையா மேற்கொண்ட அந்த உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.

மிகவும் சுவாரசியமானதும், பரபரப்பானதுமான இந்தச் சம்பவம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது திலீபனின் உண்ணாவிரத மேடைக்குச் செல்லுவோம்.

ஷஷஎன்னை அவமானப் படுத்தவேண்டாம்|| -திலீபன்

திலீபன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மூன்றாவது நாள், அவரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்துவந்ததால், அவரது நாக்கு வரண்டு போயிருந்ததுடன், மாறாட்டமும் மயக்க நிலை கூட அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. வயிற்றினுள் பலவித உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தன. உடற் சூடு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இரத்த அழுத்தம் குறையவும் ஆரம்பித்தது.

சிறிது நீர் அருந்தினால், அவரது உடல்நிலை ஓரளவு தேறிவிடும்; என்று அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா எப்படியாவது மனமிரங்கிவிடும், திலீபன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுவிடலாம் என்றே அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புலிகளுக்கு சாதகமான தனது முடிவை அறிவித்துவிடும், எனவே அதற்குள் திலீபனின் உடல் நிலை மோசமாக அனுமதிக்கக்கூடாது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

இந்தியா, சத்தியத்தின் மீதும், சாத்வீகத்தின் மீதும் மதிப்பு வைத்திருப்பதாக அங்கிருந்த சிலர் அப்பொழுதும் நம்பியதுதான் வேடிக்கை.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் உள்ள மேடையில், திலீபனின் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும்படியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதங்கள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. அந்த மேடையில் பல பிரமுகர்கள், உண்ணாவிரதத்திற்கு சார்பாக உரையாற்றியபடி இருந்தார்கள்.

கருணானந்த சிவம் என்ற ஆசிரியர், திலீபனை மிகவும் நேசித்த ஒருவர். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மேடையில் அவர் உரை நிகழ்த்தும் போது, திலீபனின் உடல்நிலை மோசமடைந்து செல்வது பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின் போது, திலீபனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ஷஷதிலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் முழுத் தமிழினத்திற்கும் சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தனது உடலைக் காப்பாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமல்ல, இங்கு திரண்டு வந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோளும் இதுதான்|| என்று பேசினார்.

அதைக் கேட்ட திலீபனின் முகம் வாடிவிட்டது. ஒலிவாங்கியை தன்னிடம் தருமாறு கேட்ட திலீபன் ஆசிரியர் கருணானந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு பதில் வழங்கிப் பேசினார்:

ஷஷஇந்த மேடையில் பேசிய அன்பர் என்னிடம் நீராகாரம் அருந்தும்படி கேட்டுக்கொண்டது, என்னை அவமானப்படுத்துவது போன்று இருக்கின்றது. நான் இந்த மேடையில் நீராகாரம் அருந்தாமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையானால், எவரும் என்னை நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்தவேண்டாம். என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது இலட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்|| என்று தெரிவித்தார்.

திலீபன் மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பாசம் தமது கண்களை மறைத்துவிட்டிருந்ததை, திலீபனை நீர் அருந்தும்படி கோரியவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் எவருமே திலீபனை நீர் அருந்தும்படி வற்புறுத்த முன்வரவில்லை.

கலவரங்களாக வெளிப்பட்ட ஷமக்களின் எழுச்சி|:

திலீபன் என்ற 23 வயது இளைஞனின் இந்த வித்தியாசமான உண்ணாவிரதம் யாழ்ப்பான தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்வலைகள் ஒரு பாரிய எழுச்சியாகவே மாற ஆரம்பித்திருந்தது. திலீபனின் கோரிக்கைகளுக்கு இந்தியா செவிசாய்க்க தயாரில்லை என்பதான செய்திகள் யாழ் மக்களிடம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும், அதன் அமைதிப்படையினருக்கும் எதிராக மக்கள் பாரிய உணர்வலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஷபுலிகள் எதனைக் கேட்டுவிட்டார்கள்? பெரிதாக ஒன்றும் அவர்கள் கேட்டுவிடவில்லையே. தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களைத்தானே அவர்கள் கேட்டுள்ளார்கள். இதற்காக ஒரு இளைஞனை பலிகொடுக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு இப்படி ஒரு கல்நெஞ்சு இருப்பது அவசியம்தானா? இந்த சிறு விடயத்தைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற விரும்பாத இந்தியாவினால், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்| என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

விளைவு:

இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பினார்கள். ஊர்வலங்களை நடாத்தினார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியப்படையினரை நோக்கி கற்களை வீசவும் செய்தார்கள்.

மன்னார், தலைமன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும், இந்தியப்படைகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப்படையின் முகாமை அடைந்த ஊர்வலத்தின் மக்கள் கூட்டம் முகாமின் வாயிலை அடைத்தபடி நின்று, கோஷம் எழுப்பியது. திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்தியா காண்பிக்கும் மௌனத்திற்கு எதிராக தமது கண்டணங்களை வெளிப்படுத்திய பொது மக்கள், இந்தியா தமிழர் பிரதேசங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

முகாமின் வாயிலில் காவல் கடமையில் இருந்த இந்தியப்படை வீரர் ஒருவர் மிகவும் கோபம் அடைந்தவராக தனது துப்பாக்கியை எடுத்து, ஊர்வலத்தை நோக்கி ஒரு சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார். ஊர்வலத்தின் முன்வரிசையில் நின்ற ஒருவர் சுடப்பட்டுவிழ, ஏனையவர்கள் கலைந்து ஓடினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே தாம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பால் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முகாமுக்குள் பொதுமக்கள் நுழைய முற்பட்டது ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை எதனையும் மேற்கொள்ளாது, எச்சரிக்கை வேட்டுக்கள் கூட தீர்க்காது, நேரடியாகவே பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இந்தியப் படைகளின் செயல், பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இதுபோன்ற இந்தியப்படைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியப் படைகளின் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாத அளவிற்கு நிலமை மோசமாக ஆரம்பித்தது. இந்தியப்படைகளுடன் பேசுவதற்கும் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்தியப் படை அதிகாரிகளுடன் சினேகபூவமான தொடர்புகளை வைத்திருந்த யாழ்வாசிகள் தமது உறவுகளை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூட தயக்கம் காண்பித்தார்கள்.

திலீபனின் உண்ணா விரதம் பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இந்தியப்படை அதிகாரிகள், நிலமையின் விபரீதத்தை படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை விடுதலைப் புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக திருப்பிவிட்டுள்ளதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். நிலமை இந்த அளவிற்கு மோசமாகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை திலீபன் இறந்துவிட்டால் நிலமை இதைவிட மோசமடையலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு மாற்றீடாக இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப்படை உயரதிகாரிகள் தமது மேலிடத்திடம் கேட்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசின் தலைமையோ, புலிகள் ஷபூச்சாண்டி காண்பிக்கின்றார்கள்| என்றே நினைத்தது.

புலிகளை எப்படியும் சமாளித்துவிட முடியும், இதற்கெல்லாம் பயப்பட்டால் தொடர்ந்தும் புலிகள் இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வாழாவிருந்துவிட்டார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான விடயத்தில், திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இந்தியாவின் அரசியல் தலைமை அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

தொடரும்…

 


About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply